Friday, 4 March 2016

28.மாமிமார் மக்களே யல்லோம்

28.மாமிமார் மக்களே யல்லோம் 
பாடல் :28
மாமிமார் மக்களே யல்லோம்
மற்றுமிங் கெல்லாரும் போந்தார்
தூமலர்க் கண்கள் வளரத்
தொல்லையி ராத்துயில் வானே
சேமமே லன்றிது சாலச்
சிக்கென நாமிது சொன்னோம்
கோமள ஆயர்கொ ழுந்தே
குருந்திடைக் கூறை பணியாய்

விளக்கம் :

மாமிமார் மக்களே யல்லோம் - உனது முறைப்பெண்களான அத்தை பிள்ளைங்க மட்டுமல்ல
மற்றும் இங்கு எல்லாரும் போந்தார் - மற்றும் இங்க எல்லாருமே வந்தாங்க
தூமலர்க் கண்கள் வளர - வண்டு கூட வந்தமராத தூய்மையானமலர்  போன்ற கண்கள் வளர
தொல்லையில் ராத்துயில்வானே - பகல் முழுக்க குறும்புத்தனங்களால் தொல்லை செய்துட்டு இரவில் தூங்குபவனே
சேமம்  மேல்அன்றி இது  -இது உனக்கு சேமம் (நலன்,பாதுகாப்பு ) தருகின்ற செயல் அன்று
சாலச் சிக்கென நாமிது சொன்னோம் -  உன் நலனுக்காக  மிக உறுதியாக நாம் இது சொன்னோம்
கோமள ஆயர் கொழுந்தே - மென்மையான ஆயர் கொழுந்தே
குருந்திடைக் கூறை பணியாய் - குருந்த மரத்தின் இடையே உள்ள , எம் துணிகளைத் தந்தருள்

மாமிமார் - மாமியார் - அத்தையார் பிள்ளைகள் ..உனது முறைப்பெண்களான நாங்கள் மட்டுமல்ல மற்ற பெண்களும் வந்திருக்காங்க. இப்படிச் சொல்வதால் கோதைக்கு மற்ற பெண்களிடமும் விளையாடும் கண்ணனைக் கண்டித்த மாதிரியும் ஆச்சு..என்ன இருந்தாலும் தன்னிடம் விளையாடுவது போல் பிறிதொரு பெண்ணிடம் விளையாடுவதை அறவே விரும்பவில்லை எனப் பொறாமை மேலிட கண்ணனிடம் சூசகமாகச் சொன்னது போலுமாச்சு :எப்பூடி :))


தூமலர் - தூய்மையான மலர்..மலர் எப்பத் தூய்மையானதா இருக்கும்..வண்டு வந்து எச்சில் படுத்தாமல் கன்னியாக இருக்கும் :) அவ்வளவு பரிசுத்தமான மலர் போன்று இருக்காம் கண்ணனின் கண்கள்..தன்னைத் தவிர பிறிதொரு பெண்ணை ரசித்து இராது என்று கண்ணனை நம்புகிறாள் கோதை எனும் பேதை :) கண்கள் வளர -கண் மூடுதல் என்று சொல்லாமல் கண் வளருதல் என்பது மங்கலச் சொற்கள்..மூடுதல் என்றால் நிரந்தரமாக மூடுதல் என்று பொருள் வந்து விடும் என்பதால் உறங்குவதைக் கண் வளருதல் என்கிறாள் கோதை..

பகல் முழுக்க குறும்புகளும் சேட்டைகளும் செய்து பிறருக்குத் தொல்லை கொடுத்துவிட்டு இரவில் கண் வளரத் தூங்குவோனே ,
இப்படிச் செய்வது உனக்கு நல்ல செயல் அன்று. மிகவும் சிக்கலானது..இதை உன் நலத்திற்காக மிக உறுதியாகச் சொன்னோம் நாங்கள் .மென்மையான ஆயர் கொழுந்தே ! குருந்த மரத்தின் இடையே இருக்கும் துணிகளைத் தருவாயாக !

No comments:

Post a Comment

மறுமொழி இடுக!