29.கஞ்சன் வலைவைத்த வன்று
பாடல் :29கஞ்சன் வலைவைத்த வன்று
காரிரு ளெல்லில் பிழைத்து
நெஞ்சுதுக் கம்செய்யப் போந்தாய்
நின்றஇக் கன்னிய ரோமை
அஞ்ச உரப்பாள் அசோதை
ஆணாட விட்டிட் டிருக்கும்
வஞ்சகப் பேய்ச்சிபா லுண்ட
மசிமையி லீ!கூறை தாராய்
விளக்கம் :
கஞ்சன் வலை வைத்த அன்று - கஞ்சன் என்ற உன் மாமன் வைத்த வலையில் அன்று
கார் இருள் எல்லில் பிழைத்து - அடர்ந்த கருமையான இருளில் தப்பித்து
நின்ற இக்கன்னியரோமை -நீரில் நின்ற இந்தக் கன்னியர்களை
நெஞ்சம் துக்கம் செய்யப் போந்தாய் - எங்கள் நெஞ்சம் துக்கம் கொள்ளச் செய்யவா வந்தாய்
ஆணாட விட்டிட்டு இருக்கும் - ஆண் பிள்ளை தானே என விட்டுவிட்டு
அஞ்ச உரப்பாள் அசோதை - உன்னை பயப்படும்படி அதட்ட மாட்டாள் உன் தாய் அசோதை
வஞ்சகப் பேய்ச்சி பால் உண்ட - உன்னை வஞ்சகமாகக் கொல்ல வந்த அரக்கியிடம் பால் உண்ட
மசிமைஇலீ !கூறை தாராய் - பெருமை இல்லாதவனே எங்கள் உடையைத் தா
உன் மாமன் கஞ்சன் உன்னைக் கொல்வதற்காக வைத்த வலையில் இருந்து , அடர்ந்த கார் இருளில் நள்ளிரவில் தப்பித்து வந்தியே , அது இப்படி நீரில் நின்ற இந்தக் கன்னியர்களின் நெஞ்சம் துக்கம் கொள்ளச் செய்வதற்காகவா வந்தாய்?
கார் இருள் எல் - எல் என்பது கதிரவன் /கதிரவன் மறைவு /இருள் இரண்டையும் குறிக்கும் எதிர்மறை ஒரு மொழி #தமிழ்டா ன்னு காலரைத் தூக்கி விட்டுக்குவோம்
உன்னை வஞ்சகமாகக் கொல்ல வந்த அரக்கியை இனம் கண்டுகொண்டு அவளிடம் பால் குடித்தே அவளைக் கொன்றவனே !
கோதையின் பாடல்களில் எல்லாம் ஓர் யதார்த்தம் இருக்கும்.நம்மைப் போன்ற மனிதர்களின் பேச்சுமொழி இருக்கும்.அதனால் அதீத இலக்கியம் என்று அந்நியப்பட்டுப் போகாம இந்தப் பாடல்கள் மனதிற்கு நெருக்கமாகின்றன :)
No comments:
Post a Comment
மறுமொழி இடுக!