Saturday, 30 January 2016

3. மத்தநன் னறுமலர் முருக்கமலர்

3.மத்தநன் னறுமலர் முருக்கமலர் 

பாடல் :3

மத்தநன் னறுமலர் முருக்கமலர் 
கொண்டுமுப் போதுமுன் னடிவணங்கித் 
தத்துவ மிலியென்று நெஞ்செரிந்து 
வாசகத் தழித்துன்னை வைதிடாமே, 
கொத்தலர் பூங்கணை தொடுத்துக்கொண்டு, 
கோவிந்தா னென்பதோர் பேரெழுதி 
வித்தகன் வேங்கட வாணனென்னும் 
விளக்கினிற் புகவென்னை விதிக்கிற்றியே..!

விளக்கம் :மத்த நன்னறு மலர் - நறுமணம் கொண்ட ஊமத்த மலர்
முருக்க மலர் கொண்டு - முருங்கை மலர் கொண்டு (கல்யாண முருங்கைப் பூ )
முப்போதும் முன்னடி வணங்கித் - மூன்று பொழுதுகளும் உன் அடி தொழுது
தத்துவம் இலி என்று - உண்மை இல்லாதவன் என்று
நெஞ்சு எரிந்து - மனம் வெந்து
வாசகத்தழித்து உன்னை - நீ சொன்ன சொல் காப்பாற்றுபவன் என்ற எண்ணத்தை நெஞ்சத்தில் இருந்து அகற்றி
வைதிடாமே - உன்னை திட்டிவிடுவதற்குள்
கொத்து அலர் பூங்கணை - மலர்க்கொத்து கொண்டுஅம்புகள் தொடுத்து
கோவிந்தன்  என்பதோர் பேர் எழுதி - கோவிந்தன் என அதிலே பெயரெழுதி
வித்தகன் - பல வித்தைகள் கற்றவன்
வேங்கட வாணன் என்னும்- வேங்கடவன் என்னும் பெயர் பெற்ற
விளக்கினிற் புக என்னை - விளக்கினில் (என் வாழ்வுக்கு வெளிச்சம் தரும் விளக்கானவனிடம் புக என்னை
விதிக்கிற்றியே - எய்து விடேன்..

ஹா ஹா என்னவொரு அதிரடி மிரட்டல்..:)  முதல் இரண்டு பாட்டிலும் ரொம்ப பணிந்து , எங்களைச் சேர்த்திடு எனக் கெஞ்சும் பெண் இதிலே காமனை மிஞ்சி மிரட்டுகிறாள்..பொதுவாக நான் அறிந்தவரையில் ஊமத்த மலர்கள் பூஜைக்குப் பயன்படுவதில்லை..ஆனா ஆண்டாள்தான் கிராமத்துப் பெண்ணாச்சே..அங்கே எளிதாகக் கிடைப்பது இந்த ஊமத்த மலர்கள் தாம்..(சிறுவயதில் ஊமத்தங்காய் அரைச்சுக் கரும்பலகைக்கு இன்னும் கருப்பு சேர்க்கப் பயன்படுத்தியது நினைவுக்கு வருகிறது :) )

"கோவிலில் தேவிக்குப் பூசை 
அதில் ஊமத்தம்பூவுக்கேன் ஆசை " என்று திரைப்பாடல் வரி நினைவுக்கு வருகிறது .
எங்கயோ ஆத்து,  குளத்து மேட்டுல இருக்கிற பூவு ,  சாமி பூசைக்கு ஆசைப் படலாமா..படலாம் செய்பவள் ஆண்டாளாக இருந்தால்..அவள் பேதம் பார்ப்பதில்லை.. :)

ஊமத்தம்பூ 

ஆனா ஆண்டாள் இந்த ஊமத்த மலர் நல்ல வாசனையானதுங்கறாங்க..அந்த ஊமத்த மலரையும்  , கல்யாண முருங்கைப் பூவையும் காமனுக்குப் படைக்கிறாங்களாம்

கல்யாண முருங்கை 

எங்கயாவது இது நடக்குமா அடுக்குமா? ..நடக்கும்.. மகா பாரதத்திலேயே ஒரு கதை கேள்விப்பட்டிருக்கிறேன்.  கண்ணனுக்கு அவரைப் பார்த்த மகிழ்விலும் நெகிழ்விலும் பழத்தை உரிச்சுக் கொடுக்கும் அவரது பக்தை ,பழத்தைத் தருவதற்குப் பதில் தோலைக் கொடுத்திட்டு இருந்தாங்களாம்..இவரும் எதுவும் சொல்லாமல் வாங்கி உள்ளே அமுக்கிக் கொண்டிருந்திருக்கிறார்..சிறிது நேரம் கழித்தே சுயநினைவு வந்து பதறி எப்பேர்ப்பட்ட தவறு இழைத்து விட்டோம் என வருந்தியபோது, கடவுள் அவங்களை ஆசுவாசப்படுத்தி உமது பக்தியே பிரதானம் , இப்பற்றோடு உன் கையால் எது கொடுத்தாலும் அதை நான் உண்பேன் என்றாராம் கண்ணன்.. தன் கண்ணைத் தர,  சிவனின் மீது கால் வைத்து கண்ணைப் பிடுங்கி வைத்த கண்ணப்ப நாயனார் கதையும் படித்திருக்கிறோம் தானே.. ஆண்டாள் செய்தால் மட்டும் பிழையாகி விடுமா என்ன.. ?:) பழையதைக் கூட படைக்கலாம் பக்தியோடு..ஆண்டவன் மறுப்பதில்லை..

அப்படித் தனக்குக் கிடைத்த மலர்களைக் கொண்டு, மூன்று பொழுதுகளும் அவன் திருவடி வணங்கித் தொழுவதவளையே  , இவன் பொய்யானவன் சொன்ன சொல் தவறியவன் ,நாம் நினைத்ததை நடத்திக் கொடுப்பான் என்ற நம்பிக்கையைச் சிதைத்தவன் என்றெல்லாம் நான் நெஞ்செரிந்து (என் வயிறெரிஞ்சு சொல்றேன் நீ விளங்க மாட்டே என்பதன் நாகரிக வடிவம் தான்  ஆண்டாள் சொல்வது :)) ) நான் உன்னை திட்டி விடும் முன்னம் என் நம்பிக்கையை நிறைவேற்றி விடு என்று மிரட்டுறாங்க..என்னடா மூனாவது பாட்டிலேயேவா என மிரளாதீங்க இது வெறும் trailer தான் main picture லாம் இனிமேல் தான் இருக்கு..:))


மலர்க்கணைகள் தொடுக்கச் சொல்றாங்க..பின்ன வேற ஏதாவது கடினமா செஞ்சு அது அவள் நாயகனுக்குப் பாதகம் ஆகி விடக்கூடாது இல்லையா..
மலரம்புகள் செய்து அதிலே கோவிந்தன் பெயரெழுதி , பல வித்தைகள் கற்றவன் ,வேங்கடவன் என்பவனின் என் வாழ்வுக்கு வெளிச்சம் தரும் விளக்கானவனிடம் தஞ்சம் புக என்னைச் சேர்த்து விடேன்..

பாருங்களேன்..ஆண்டாள் பூஜைகள் எவ்வளவு எளிதாக இருக்கு.. கோலம் போடுறாங்க ,   சுள்ளி பொறுக்கித் தீ வளர்க்கிறாங்க ,  இப்ப ஊமத்தம் மலர் , கல்யாண முருங்கை மலர் பூ போடுறாங்க..

தன்னிடம் என்ன இருக்கோ ,தன் சக்திக்கு எது முடியுமோ அதைக் கொண்டே செய்வதே தெய்வ வழிபாடு.. என்ன.. தெளிந்ததா ?:)


5 comments:

  1. இப்போதுதான் உங்கள் நாச்சியார் திருமொழிப் பதிவுகளைப் பார்த்தேன். மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள்.நன்றி.

    ReplyDelete
  2. ஊமத்தம் பூவை பூஜைக்கு பயன்படுத்த வைத்து விடாதே, என்று மிரட்டுவதாய் எனக்குத் தோன்றுகிறது. தவறெனில் திருத்துங்கள்!

    ReplyDelete
  3. பாடலைத் திரும்ப வாசியுங்கள் அவள் அப்படிச் சொல்லவே இல்லை. தானே வேள்வி செய்கிறாள்..தானே பூஜை செய்கிறாள்..அன்புக்கு வரைமுறை இல்லை. ஆகாவே பதட்டம் வேண்டாம்.. :)

    ReplyDelete
  4. ஊமத்தம்பூ சிவனுக்கு பிரியமானது.உன்மத்தசேகரன் என பெயருமுண்டு.சிவன்மேல் அப்பைய்ய தீட்சிதர் "பஞ்சாசத்"
    50 ஸ்லோகம் பாடியுள்ளார்.
    ஆதாரம் சிவபூசைககேற்ற ஊமத்தம்பூ 24/01/2015.

    ReplyDelete

மறுமொழி இடுக!