ஆண்டாள் திருவடிகளே போற்றி !!!
வணக்கம்..எனக்கு இது புது களம்.. இது போன்றவற்றிற்கு உரை எழுதுவது கத்தி மேல் நடப்பது போல. மிகப்பெரிய சவாலும் கூட..ஓர் ஆண்டு காலமாக ஆண்டாளுக்கும் எனக்குமான மானசீக பந்தம் , என்னைப் போன்றவள் என்ற உரிமை , பெண் மீதான இன்றைய கட்டமைப்புகளில் வாழாத , பெண்ணுக்குரிய உண்மையான உணர்வோடு வாழ்ந்தவள் என்ற மதிப்பு இவற்றால் ஆனது.. அவள் சார்ந்த கேள்விகள் எழ எழ, எனக்கு ஏதேனும் ஒரு வடிவில் பதில் கிடைக்கும் ..அது இன்னும் ஆர்வத்தைத் தூண்டியது..ஓங்கி உயர்ந்த செந்நெல் ஊடு கயலுகள எனப் படித்த பொழுது, அது எப்படி நெற்பயிரின் ஊடே எங்கோ ஆற்றிலோ,குளத்திலோ உள்ள மீன்கள் இங்கே வந்து புகும் என்ற கேள்வி வந்தது..பிறகு ஒரு மாதம் கழித்து ,இணையத்தில் இந்தோனேசியாவில் இப்படி விவசாயம் செய்கிறார்கள் என்பது படத்தோடு கிடைத்த பொழுது மலைத்து விட்டேன். :))ஆண்டாள் வேளாண் விஞ்ஞானி
இது போலவே வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று என்ற வரிகள் படிக்கவும் வாரத்தில் வியாழனுக்கு அடுத்து தானே வெள்ளி வரும் அதைச் சொல்றாங்க போல என்றே நினைத்திருந்தேன் ..பிறகு தான் அறிந்தேன்..அவள் வானில் உள்ள கோள்களில் நிகழ்ந்த மாற்றத்தைக் குறித்து இருக்கிறாள் என்று..ஆண்டாள் வானியல் அறிந்தவள்..இவ்வளவு அறிவான பெண்ணின் துறுதுறுப்பு ஈர்த்தே பெரியாழ்வார் அவளைத் தத்து எடுத்து வளர்த்திருக்க வேண்டும் . இப்படி அறிவான மானிடர்களை எல்லாம் அவதாரம் ஆக்கி, தங்கள் சாதி எனக் காட்டிச் சொன்ன கதைகளை எல்லாம் இனியும் நான் நம்பப் போவதில்லை..புராணங்களைப் பேசுபவர்களிடம் குறுக்குக் கேள்வி கேட்டுப்பாருங்கள் சரியான பதில் வராது .வேண்டுமெனில் நம்மைப் பற்றிய குற்றச்சாட்டு வரக் கூடும் :)
அறிவான பெண் எனினும் மனம் குழந்தைத்தனமானது.. கண்ணன் (மாயோன் என்ற முல்லை நிலத்துத் தமிழ்க் கடவுளே கண்ணன். ஆனால் அது இன்று கிருஷ்ணனுக்கே என்றாகி விட்டதால் கண்ணன் என்றே சொல்லுவோம் ) மீது அவளது தீராக் காதலைப் படிக்கும் போதே உணர முடியும்..இராமானுசரே ,சற்றேனும் பெண் தன்மை கொண்டவனே ஆண்டாளை முழுமையாகப் புரிய முடியும் என்றாராம்.. ஆண்டாள் என்றாலே திருப்பாவை என்றதோடு பலரும் நின்று விடுகிறார்கள்..முப்பது பாடல்கள் முடிந்ததும் , ஆண்டாள் அரங்கனோடு கலந்து விட்டதாக நம்புகிறார்கள்..
இல்லை அதன் பின்பும் வராத கண்ணனைச் சேர , காமனிடம் வேண்டுதல் , கண்ணனுக்கு அவள் விடும் மேக தூது, குயில் தூது , அழகருக்குப் பாடிய பாடல்கள் பிரிவாற்றாமை, திருமணக் கனவு , சேர முடியாத வேட்கை , வேதனை, பிருந்தாவனம் சென்று அங்கே கண்ணனைத் தேடி அடியவர்கள் சொல்லும் பதிலிலியே , இறுதியில் அப்படியே அமைந்து போய் முடிப்பதே நாச்சியார் திருமொழி.. ஒரு பெண்ணின் மனவுணர்வுகளை அப்பட்டமாக வெளிப்படுத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாமல் இது மறைக்கப்பட்டதோ என்னவோ..:( ..
நாச்சியார் திருமொழி தனிப் புத்தகமாகக் கிடைக்கும் என மதுரையில் தேடினேன்.. வில்லிபுத்தூரிலும் கூட திருப்பாவை கிடைத்ததே அன்றி நாச்சியார் திருமொழி என்றால் என்னவெனத் தெரியாமல் , திருதிருவென விழிக்கிறார்கள்.. அவள் வாழ்ந்த இடத்திலேயே அவள் வரலாறு இல்லை..:(( பின்னர் இது பிரபந்தத்தில் ஊடேயே இருக்குமே என்றார் நண்பர்.
ஏதோ ஓர் நாள் கனவில் அப்பா வாங்கி வைத்திருக்கும் பிரபந்தத்தைப் பார் என்று எவரோ நினைவூட்டுவது போல இருக்க , அப்பா வாங்கி வைத்திருந்த பிரபந்தத்தில் ,இதை மட்டும் ஒரே மூச்சில் படித்து முடித்தேன்.. பின்னரே இதற்கு உரை எழுத வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. இயன்றவரை, இணையத்தில் தேடியும், தமிழறிந்த நண்பர்களிடம் ஐயம் தெளிந்தும் இங்கே பதிவு செய்கின்றேன்..எத்தனை நாளில் முடிப்பேன் என்ற கணக்கு எடுத்துக் கொள்ள வில்லை..எப்பப்ப முடியுதோ அப்பப்ப எழுதுவோம் :) இதை ஏதோ ஒரு மதம் சார்ந்த பாடல்கள் என்று புறக்கணிக்காமல் ,தலைவி , தலைவன் மீது கொண்ட காதல்,பிரிவாற்றாமை கொண்டு அரற்றுவதாக எண்ணிப் படியுங்கள் அந்தப் பார்வையில் மட்டுமே இதை முழுக்க முழுக்க எழுதவிருக்கிறேன் .
குறிப்பு : இவ்விளக்கவுரைகளில் பயன்படுத்தப்பட்டுள்ள படங்கள் யாவும், இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை. அவை அவற்றை வரைந்த,புகைப்படம் எடுத்தவரையே சாரும்..
1: தையொரு திங்கள்
பாடல் :1தையொரு திங்களும் தரைவிளக்கித்
தண்மண் டலமிட்டு மாசிமுன்னாள்,
ஐயநுண் மணற்கொண்டு தெருவணிந்து
அழகினுக் கலங்கரித் தனங்கதேவா,
உய்யவு மாங்கொலோ வென்றுசொல்லி
உன்னையு மும்பியை யும்தொழுதேன்,
வெய்யதோர் தழலுமிழ் சக்கரக்கை
வேங்கட வற்கென்னை விதிக்கிற்றியே..
தையொரு திங்களும் - தை மாதம் முழுவதும்
தரை விளக்கித் - தரையைத் தூய்மைப்படுத்தி
தண் மண் தலம் இட்டு - குளிர்ந்த நீர் தெளித்த மண் தரையில் இட்டு
மாசி முன்னாள் - மாசி முதல் நாள்
ஐய நுண் மணற்கொண்டு - அழகிய நுண்ணிய மணல் கொண்டு (கோலம் )
தெரு அணிந்து அழகினுக்கு அலங்கரித்து - தெருவில் இட்டு அழகாய் அலங்கரித்து
அனங்க தேவா - காம தேவா
உய்யவு மாங்கொலோ என்று சொல்லி - உன்னைத் தொழுவதால்
உய்யலாமோஎன்று எண்ணி - இந்த துன்பத்திலிருந்து தப்பிக்கலாமோ என்று எண்ணி
உன்னையும் உம்பியையும் தொழுதேன் -உன்னையும் உன் தம்பியான சாமனையும் தொழுதேன்
வெய்யதோர் தழலுமிழ் - வெப்பமுடைய தழலை (நெருப்பை ) உமிழும்
சக்கரக்கை வேங்கடவற்கு என்னை - சக்கரத்தைக் கையில் கொண்ட வேங்கடவனுக்கே என்னை
விதிக்கற்றியே - விதித்து விடேன்..(அவனுக்கே உரியவள் என்றாக்கி விடேன் )
விளக்கம் :
மார்கழி முழுக்க நோன்பு இருந்தும், இந்தக் கண்ணன் அவளை வந்து சேரல..ஒருவேளை காமனைத் தொழுதா வந்து சேருவாரோன்னு ஒரு நப்பாசை..(இன்றும் , தாடிக்கொம்பு என்ற ஊரில் உள்ள சௌந்தரராஜ பெருமாள் கோவில் வாரா வாரம் வியாழன் ரதி-மன்மதன் பூஜையே நடக்குது கல்யாணம் ஆகாதவங்களுக்கு ஆக ) அதனால் காமனைத் தொழ முடிவெடுத்துப் பாடல் பாடுகிறாள்..(அனங்க தேவா என்றால் உடல் அற்றவன் என்று பொருளாம்..ஒருமுறை சிவனால் எரிக்கப்பட்ட காமன் உடம்பு அற்றுப் போனதாக புராணம் . )
தை மாதம் ..(திங்கள் என்பது அருமையான சொல்..ஆனா அதைக் கிழமைக்கு மட்டுமே பயன்படுத்துகிறோம்..) முழுவதும் தரையைத் தூய்மைப்படுத்தி , குளிர்ந்த நீர் தெளித்த மண் தரையில் (இதிலே மண்டலம் என்பது மண்டல பூஜையாக இருக்குமோ என்ற ஐயம் இருந்தது..ஆனால் ஒரு மண்டலம் என்பது 48 நாள் ..தை மாதம் 48 நாள் இல்ல ..மாசி முதல் நாளே நோன்பு முடிக்கிறாங்க எனவே இது அந்த மண்டலமாக இருக்க வாய்ப்பிராது என அப்பொருளை ஒதுக்குகிறேன்..மண் தலம் (தலம் என்பது இடம் ,கோவில் ,வீடு என்ற பொருள்படும் ..அக்காலத்தில் எல்லாம் மண் தரை தான் ) அழகிய நுண்ணிய மணல் கொண்டு (கோலப்பொடி ) தெருவில் இட்டு அலங்கரித்து வைக்கிறாங்களாம்.. (கோலம் வரையப்பட்ட தெருக்களின் அழகே தனி! )
நன்றி :சொரூபா
அந்தக் காம தேவனிடம் இதைச் சொல்லி ,இப்படி உன்னைத் தொழுதலாவது நான் உய்ய (இந்த மோசமான நிலையில் இருந்து நன்னிலை அடைய ) வழி கிடைக்குமோ என்றெண்ணி உன்னையும் உன் தம்பி சாமனையும் தொழுதேன். வெப்பம் கொண்ட தழல் (நெருப்பு ) உமிழும் சக்கரத்தைக் கொண்டவனாகிய வேங்கடவனுக்கே என்னை விதித்து விடச் செய்யேன் (அவனுக்கே உரியவள் என்றாக்கி விடேன் ) என்று இறைஞ்சுகிறாள் கோதை.
சிறப்பான தொடக்கம்...
ReplyDeleteதொடக்கத்தை விட தொடர்ச்சி முக்கியம்..
சிறப்பாக தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்
நன்றி கதிர்!இயன்றவரை எழுதுவேன் :)
Deleteவணக்கம்!
ReplyDeleteஒரு-நூற்று நாற்-பத்து மூன்று-உரைகள் வாழியே!:)
முன்னுரையில், தங்கள் "நோக்கம்" என்ன? என்பதைத் தெளிவுறச் சொல்லி விட்டீர்கள்! போதும்!
சமயம் சார்ந்து சொல்லிச் சொல்லியே, ஒரு பெண்ணின் மன உணர்ச்சிகளை, தலைமுறை தலைமுறையாகப் புதைத்து விடாமல், கொஞ்சம் கீறி, மணற்கேணி ஊறிப் பெருகல் நன்று!
பலரும், திருப்பாவை உரைகளோடு நின்று விடுவது வழமை!
ஆனால், அதையும் தாண்டிச் செல்லும் உங்களின் இக் கோதை முயற்சி, வெற்றி பெற வாழ்த்துக்கள்!:)
என்ன, பாவை = 30 நாளில் நிறைஞ்சீரும்!
உங்களின் திருமொழி உரை= 143 நாள் ஓடும்!:)
5 மாதம், உங்கள் உழைப்பு!:))
உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?
ஒரு-நூற்று நாற்-பத்து மூன்று-உரைத்தாள் வாழியே!:)
நன்றி முருகா!உங்கள் ஊக்கத்திற்கு நனி மிகு நன்றி! மெள்ள மெள்ளவேனும் எழுதி விட வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்..ஆண்டாள் துணை புரியட்டும் :)
Deleteசிறப்பு, பெரிய பணி இது, வெற்றி பெற வாழ்த்துக்கள்,
ReplyDeleteநன்றி :)
Deleteஅழகான உரை, வாழ்த்துக்கள்! இன்று தான் அறிந்தேன் மன்மதனுக்கு தம்பி இருப்பது.
ReplyDeleteதிங்கள் = கிழமை, மாதம் சந்திரன்
சபா
நன்றி :)
Delete/வெய்யதோர் தழல்/
ReplyDeleteஓர்= உயிரெழுத்துக்கு முன் வர வேண்டும் என்று இலக்கணம் பேசுவார்கள்!:)
ஓர் தழலா? ஒரு தழலா?
என் தோழி கோதை, ஏன் ஆரம்பமே.. இப்படி Non Conformist ஆகின்றாள்?:)
*தை-ஒரு திங்களும் என்று தொடங்குபவள்..
*வெய்யது-ஒரு தழல் என்று முடிக்க மாட்டேங்குறா!
---
ஆண்டாளுக்கு, சங்கின் மீது தான் பெரும் ஆசை, சக்கரத்தை விட!
அவன் வாயெச்சில் அமுதம் உள்ள ஊற்று அல்லவா சங்கு?
ஆனாலும், சக்கரத்தை முன்னிட்டுத் தான் துவங்குகிறாள்! அதுவும் திருப்பதிச் சக்கரம்:)
இளங்கோ அடிகளும், இத் திருப்பதிச் சக்கரத்தைக் காட்டுவாரு! பகை அணங்கு ஆழி.. தகைபெறு தாமரைக் கையில் ஏந்திய, வீங்கு நீர் அருவி வேங்கடம் உடையான்!
இதில் ஒரு சூழ்க்குமம் உள்ளது!
பொதுவா, நாம் உதவி நாடிச் செல்லும் ஒருவர்.. நம்மை போலவே முன்பு துன்பப்பட்டிருந்தா, நம் நிலை அவருக்கு இன்னும் நல்லாப் புரியும்!
ஒரு பொண்ணு மனசு இன்னொரு பொண்ணுக்குத் தானே தெரியும் என்றெல்லாம் சொல்லுவார்கள்!
அதே தான், தோழி கோதையும் செய்கிறாள்! ஏ மன்மதனே..
*அன்று நீ சிவபெருமானால் எரிக்கப் பட்டாய்! = கண் அழல்
*இன்று நான் திருமாலால் எரிக்கப் பட்டேன்! = காம அழல்
உன்னை, வெய்யதோர் ஈசனார் நெற்றிக் கண் எரித்தது!
என்னை, வெய்யதோர் தழல் உமிழ், சக்கரம் எரிக்கின்றதே!
உனக்காவது, அதன் பின்னர், உடம்பு இல்லாமல் போனது!
எனக்கோ, உடம்பு இன்னும் இருந்து வாட்டுதே!
என் துன்பம் நீ அறிய மாட்டாயா? நீயும் என் போல், அழல் பட்டவன் தானே? என்று "சொந்தம் கொண்டாடி" வேண்டும் அழகு!
----
அதான்.. காமனை மட்டுமல்லாது, அவன் தம்பி சாமனையும், உடன் சேர்த்துச் சொல்லுதல்!
எப்படி, பலராமன் - கண்ணன் ஒற்றுமையோ
அப்படி, காமன் - சாமன் ஒற்றுமை!
ஒருவரை முன்னிட்டே, இன்னொருவரிடம் உதவி பெறல்!
முன்பு திருப்பாவையிலும் இதையே செய்வாள்.. செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா, உம்பியும் நீயும்!
பலதேவன் என்று, இன்று நாம் அறிந்தாலும்.. அவன் தமிழ்ப் பெயர் வாலியோன்! "நம்பி மூத்த பிரான்" என்பார்கள்!
வாலியோன் - கண்ணன் - நப்பின்னை!
இந்த மூவரின் தமிழ் சார்ந்த தொன்மங்கள் மறைக்கப்பட்டு, பல நம்பவியலாப் புராணக் கதைகளும் ஏறி பலராமன் - கிருஷ்ணன் - ருக்மிணி என்ற வடக்கத்திச் சாயலே, இன்று நின்று போனது! அதே ஆயர் குலம், முல்லை நிலம், கறவைகள் என்பதால், கதையை இணைச்சி "ஒட்டவும்" எளிதாயிற்று:(
---
மார்கழித் திங்கள் என்று பாவை துவங்குதல் போல்
தையொரு திங்கள் என்று திருமொழி துவங்கலும் தை அழகு!
விரிவான பதிலுக்கு நன்றி :)
Deleteஅருமையாக உள்ளது, நல்ல முயற்சி; உங்கள் மூலம் நானும் 'நாச்சியார் திருமொழி' அறிந்து கொள்வேன் :)
ReplyDeleteமிக்க நன்றி !
Deleteவணக்கம் ! இப்போதுதான் படித்தேன். சிறப்பான, தெளிவானத் தொடக்கம். 5 மாதம் தொடர்ந்து எழுதவது என்பது சாதாரண வேலை இல்லை. எனவே காலக் கெடு வைத்துக் கொள்ளாமால் எழுதவது சரியே :). தனி வலைப்பதிவாய் இடுவது தேடித் படிக்க எளிதாக இருக்கிறது என்னைப் போன்றோர்க்கு. நாச்சியார் திருமொழி முழுவதும் எழுதி முடிக்க வாழ்த்துக்கள். !
ReplyDeleteநன்றி!தினம் ஒன்று என்றால் முடிப்பது கடினம்..ஆகவே நேரம் கிடைக்கும்போது லாம் எழுதி போஸ்ட் பண்ணனும்னு முடிவு பண்ணிருக்கேன் :)
Deleteநல்லா இருக்கு..��
ReplyDeleteமிக்க நன்றி :)
Deleteவாழ்த்துக்கள். வரவேற்புகள். ஆண்டாளின் துணை கொண்டு சீரிய பணியை செவ்வனே முடிக்க வேண்டுகிறேன். இதில் இளவல் @kryes அவர்களின் பின்னூட்டம் மார்கழி நீராடியபின், வணங்கி முடித்து தரப்படும் சூடான சர்க்கரைப்பொங்கலே போன்றது.
ReplyDeleteமிக்க நன்றி:)
Deleteஅருமையான ஆய்வு! தொடரட்டும் தங்கள் பணி! தமிழுலகுக்கு மிக்க பயனளிக்கும் செய்கை. ஆசிகள்!!
ReplyDeleteஅருமையான ஆய்வு! தங்கள் தொண்டு தொடர்ந்து,தமிழை வளர்க்கப் பயன்படட்டும்! ஆசிகள்!
ReplyDeleteஅம்மா, என் மனம் நிறைந்தது
ReplyDeleteநல் வாழ்த்துக்கள்
ReplyDelete