20.சீதைவாயமுதமுண்டாய்!
பாடல் :20சீதைவாயமுதமுண்டாய்! எங்கள்
சிற்றில்நீ சிதை யேல்! என்று
வீதிவாய்விளையாடுமாயர்
சிறுமியர்மழலைச்சொல்லை
வேதவாய்த்தொழிலாளர்கள்வாழ் வில்லி
புத்தூர் மன்விட்டுசித்தன்றன்
கோதைவாய்த்தமிழ்வல்லவர் குறை
வின்றிவைகுந்தம் சேர்வரே.
விளக்கம் :
சீதை வாய் அமுதம் உண்டாய் - சீதை வாய் முத்தம் எச்சில் உண்டவனே !
எங்கள் சிற்றில் நீ சிதையேல் என்று - எங்கள் சிறு மணல் வீட்டை நீ சிதைக்காதே என்று
வீதி வாய் விளையாடும் ஆயர் - வீதியில் விளையாடும் ஆயர்
சிறுமியர் மழலைச் சொல்லை - சிறுமியர் மழலைச் சொல்லை
வேத வாய்த் தொழிலாளர்கள் வாழ் - வேதம் ஓதும் தொழில் கொண்டவர்கள் வாழும்
வில்லிபுத்தூர் மன் விட்டுச் சித்தன் தன் - வில்லிபுத்தூர் விஷ்ணு சித்தனின்
கோதை வாய்த் தமிழ் வல்லவர் - கோதை சொன்ன தமிழ் பாடுபவர்கள்
குறைவின்றி வைகுந்தம் சேர்வரே - - ஒரு குறையுமின்றி வைகுந்தம் சேர்வார்கள்
சீதையின் வாய் அமுதம்.. இந்தக் கோதை காதல் ரசமிக்கவள் :)
சாப்பிடுவதை அக்காலத்தில் அமுது உண்ணல் என்பார்கள்..சீதையின் வாய் அமுதம் உண்டவன் என்கிறாள்..முத்தம் ஏதோ சும்மா வெறும் ஒற்றுதல் அல்ல..:) இதழ் முத்தம் கொடுத்து அதன் எச்சிலை இங்கே அமுதம் என்கிறாள்:) அதை உண்டவனாம் இவள் மனம் கொண்ட காதலன் :)
தமிழ்ப் பாக்களைப் பாடுபவர்கள் , எந்தக் குறையுமின்றி வாழ்ந்து , வைகுந்தத்தில் உள்ள வைகுந்த வாசன் அடி சேர்வார்கள்
இறைவன் மிகப் பெரியவன் என்பதை உணர்ந்து தன்னைச் சாதாரண மாடு மேய்க்கும் சிறுமியாகக் கருதி , அந்த பால்ய பருவத்தில் மணல் வீடு கட்டி விளையாடும்போது அதிலே கண்ணனையும் சேர்த்துக் கொண்டு கண்ணன் செய்யும் குறும்புத் தனங்களுக்காக இந்தப் பத்துப் பாடல் :) அடுக்குமாடி வீடுகள் வந்த பிறகு இது போன்ற மணல் வீடு கட்டி விளையாடுதல் எல்லாம் இப்படிப் படித்து அறிந்தால்தான் தெரியும் நம் சந்ததிகளுக்கு.. தான் கடவுளைக் காதலிப்பதும் அவனை அடைய நினைப்பதும் மணல் வீடு போல நிலையில்லாத ஆசைதான் எனத் தெரியும் அவளுக்கு..இருப்பினும் அந்தக் கற்பனை உலகமே அவளுக்குப் போதுமானதாக இருந்திருக்கிறது ..யதார்த்தம் மூச்சை அடைக்கும் போதெல்லாம் கற்பனை உலகில் தான் தஞ்சம் புக வேண்டி இருக்கிறது.. அந்த ஆசை நிராசை என்றே அவளுக்கும் தெரிந்து இருக்கக்கூடும் . இருந்தாலும் அதைக் கலைச்சுடாதே என்கிறாள் . பிள்ளை மனம் கொண்டவள். கண்ணனைத் தன் சக தோழனாக நினைத்து , அவனோடு உருண்டு புரண்டு விளையாடுவது போன்ற பாவனையே இந்தப் பத்துப் பாடல்கள்.
ஆண்டாள் அடி போற்றி !
நாச்சியார் திருமொழி இரண்டாம் பத்து நிறைவுற்றது:)
No comments:
Post a Comment
மறுமொழி இடுக!