Monday, 1 February 2016

5. வானிடை வாழுமவ் வானவர்க்கு

5. வானிடை வாழுமவ் வானவர்க்கு 
பாடல் :5
வானிடை வாழுமவ் வானவர்க்கு
மறையவர் வேள்வியில் வகுத்த அவி,
கானிடைத் திரிவதோர் நரி புகுந்து
கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப,
ஊனிடை யாழி சங் குத்தமர்க்கென்று
உன்னித் தெழுந்தவென் தடமுலைகள்,
மானிட வர்க்கென்று பேச்சுப்படில்
வாழகில் லேன்கண்டாய் மன்மதனே
விளக்கம் : 
வானிடை வாழும் அவ்   வானவர்க்கு - வானத்தில் வசிக்கும் தேவர்கள் உள்ளிட்ட தெய்வங்களுக்கு
மறையவர் வேள்வியில் வகுத்த அவி - வேதம் ஓதுபவர்கள் வேள்வியில் இட்ட வேள்விப் பொருட்களை )
கானிடைத் திரிவதோர் நரி புகுந்து - காட்டில் திரியும் நரி புகுந்து
கடப்பதும் மோப்பதும் செய்வது  ஒப்ப - அதைக் கடந்து செல்வதோ அல்லது முகர்ந்து பார்ப்பதோ செய்வதைப்போல
ஊனிடை யாழி சங்கு உத்தமர்க்கு என்று - என் உடம்பும் சங்கு சக்கரம் கொண்ட உத்தமனுக்கென்றே
உன்னித்து  எழுந்த என் தட முலைகள் - விம்மி எழுந்த என் பெரிய முலைகள்
மானிடவர்க்கு  என்று பேச்சுப் படில் - சாதாரண மனிதர்களுக்கு என்ற பேச்சு வந்தால்
வாழகில்லேன் கண்டாய் மன்மதனே - வாழவே மாட்டேன்  பார்மன்மதனே

நன்றி :கூகிள் 
வேதம் ஓதுபவர்களால் வானுலகத்தில் வாழும் வானவர்க்கு என்று  செய்த வேள்வியில் போடப்பட்ட பொருட்களை  (அக்காலத்தில் பசு,ஆடு போன்றவை  வேள்வியில் இடப்பட்டன என்பது மணிமேகலை நூலில் உள்ள வரலாற்றுத் தகவல்), கான் (காட்டில் ) திரியும் நரி வந்து முகர்ந்து பார்ப்பது எவ்வளவு தகாத ஒன்றோ அதைப் போல சங்கும் சக்கரமும் ஏந்திய உத்தமனுக்கென்றே படைக்கப்பட்ட என் ஊனும் உயிரும் (ஊன் -உயிர் ) பிறிதொரு மானிடனுக்கு இல்லை என்று ஆவேசமாகச் சொல்றாங்க.. உலகளந்த உத்தமனுக்கே என் உடம்பு அவனுக்கென்றே ஆனவை விம்மி எழுந்த என் பருத்த முலைகள்..என் உடல் சாதாரண மனிதனுக்கென்று பேச்சு வந்தால் வாழவே மாட்டேன் மன்மதனே என்று கோபமும் வீராவேசமுமாகச் சொல்கிறாள் ஆண்டாள்..



என்ன ஒரு கோபம் என்ன ஒரு வேகம்.. !! வாழ்ந்தால் மகா தேவனோடு வீழ்ந்தால் மரண தேவனோடு ன்னு படார்னு சொல்லிட்டாளே :(
பாவம் பெரியாழ்வார்..  கல்யாணப் பேச்சு எடுக்கவும் ஒரே போடா போட்டுட்டாங்க இப்படிச் சொல்லி.. :)
இதாங்க நம்ம பொண்ணுங்க கலாச்சாரம் பண்பாடு.. :) ஒருவனை உயிருக்குயிராக நினைச்சுட்டா உலகமே எதிர்த்தாலும் அசர மாட்டாங்க அப்படி வாழ்ந்திருக்காங்க..கலாச்சாரம் பண்பாடு என்பவை உடைகளில் அல்ல..மனத்தில்..எந்த இடத்தில் தன் உடல்,  தான் விரும்பும் ஒருவனுக்கே /ஒருத்திக்கே என்று நாம் நினைக்கின்றோமோ அந்த இடத்தில் வாழ்கின்றது காமம் தாண்டிய காதல்.. இது மணமுறிவு, காதல் முறிவுகள் அதிகம் நிறைந்த காலம்..மறுக்கல ..ஆனால் மனம் கொண்டவளை/வனை அதிகமா நேசித்தவங்ககிட்ட கேளுங்க அந்த வலி புரியும்..எல்லாம் ஆண்டாள் போல மனத்திண்மை உடையவர்கள் இல்லை எனினும் அவ்வலியைச் சகிச்சு வாழப் பழகி இருப்பாங்க..
காமம் பொதுவானது..ஆனால் அதை எவருடன் மட்டும் பகிர விரும்புகிறோமோ அதுவே காதல்.  அது அந்தரங்கமானது..
ஆண்டாளின் காமம் அவளின் காதல் சார்ந்தது..அவளைக் கண்ணன் அல்லாத  பிறிதொருவன் தொடுவது கடவுளின் உணவை எச்சில் படுத்துவது போல என்கிறாள்..இதிலே ஆபாசம் இல்லை..பெண்மை மட்டுமே இருக்கிறது..இனி வரும் பாடல்களை இந்த மனநிலையோடு மட்டுமே அணுகுங்கள்..அவள் வேதனை புரியும் காதல் புரியும் தவிப்பு புரியும்..அவள் நியாயம் புரியும்..

"பெண்ணோடு தோன்றி பெண்ணோடு பெண்ணோடு வாழ்ந்தும் பெண் மனது என்னவென்று புரியவில்லையோ .."- கண்ணதாசன்

2 comments:

  1. பெண்ணோடு தோன்றி பெண்ணோடு வாழ்ந்தும் என்பதே சரி.கூடுதலாக /"பெண்ணோடு"/ என்பது உறுத்துகிறது.

    கிருவை.

    ReplyDelete

மறுமொழி இடுக!