Thursday, 18 February 2016

21.கோழியழைப்பதன் முன்னம்

21. கன்னியரோடு கண்ணன் விளையாடல் 

நாச்சியார் திருமொழி மூன்றாம் பத்து ஆரம்பம் !

இந்தப் பத்துப் பாடல்களும் கண்ணன் ஆயர் குலப் பெண்களின் துணிகளைத் திருடி அவர்களிடம் குறும்பு  செய்யும் பாவனைகள் கொண்டவை..அதிகாலையில் குளிக்கச் சென்ற பெண்கள் அறியாமல் , அவர்கள் குளிக்கின்ற நேரம் அவர்கள் துணியைத் திருடி வைத்துக் கொண்டு , குறும்பு செய்யும் கண்ணனிடம் பெண்கள் தங்கள் உடைகளை வேண்டிக் கேட்கின்றார்கள் .
பாடல் :21
கோழி யழைப்பதன் முன்னம்
குடைந்துநீ ராடுவான் போந்தோம்
ஆழியஞ் செல்வ னெழுந்தான்
அரவணை மேல்பள்ளி கொண்டாய்
ஏழைமை யாற்றவும் பட்டோம்
இனியென்றும் பொய்கைக்கு வாரோம்
தோழியும் நானும் தொழுதோம்
துகிலைப் பணித்தரு ளாயே

விளக்கம் : 

கோழி அழைப்பதன் முன்னம் - கோழி கூவி விடிந்து விட்டது என அழைக்கும் முன்பே
குடைந்து நீராடுவான் போந்தோம் - வெள்ளென எழுந்து குளத்தில் குடைஞ்சு குடைஞ்சு நீராடலாம் என்று எண்ணி வந்தோம்
ஆழியஞ் செல்வன் எழுந்தான் - கதிரவன் எழுந்தான்
அரவணை மேல் பள்ளி கொண்டாய் - பாம்பின் மீது படுத்திருப்பவனே
ஏழைமை ஆற்றவும் பட்டோம் - இல்லாமையை ஆற்ற கடமைப் பட்டோம் 
இனி என்றும் பொய்கைக்கு வாரோம் - இனி எப்போதும் பொய்கைக்கு (குளத்துக்கு ) வரமாட்டோம்
தோழியும் நானும் தொழுதோம் - ஐயா சாமி நானும் என் தோழியும் உன்னை வேண்டிக் கும்பிட்டு கேட்டுக்கறோம்
துகிலைப் பணித்தருளாயே ! - எங்கள் துணியைத் தந்து விடு

கோழி   கூவினாலே அதிகாலை எனப் பொருள். விடியும் முன்னரே கோழி (சேவல் ) கூவி விடும்.அது கூவுவதற்கு முன்னமே குளத்துக்கு குளிக்க வந்தோம். குளித்தல் என்றால் வெறுமனே அல்ல குடைஞ்சு குடைஞ்சு..நீர்ல அந்தக் குளிரிலும் நன்றாக முங்கி முங்கி குளிக்கலாம்னு வந்தோம். கதிரவனே எழுந்துட்டான் .நீ பாம்பு (அரவணை ) மேல படுத்துக்கிட்ட



எதுவும் இல்ல இப்ப எங்ககிட்ட. துணிகள் இல்லாத ஏழைமை ஆகிடுச்சு. அதைச் சரி செய்ய விரும்பறோம். ஐயா , சாமி நானும் என் தோழிகளும் உன்னைக் கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டுக்கறோம் .தயவுசெய்து எங்கள் துணிகளைத் தந்து விடு 


ஏதாவது சேட்டை செய்பவரிடம் நைச்சியமாகப் பேசி காரியம் சாதித்தல்.  அது போல இங்கயும் கெஞ்சுறாங்க கோதையும் அவள் தோழிகளும் :) ஆழியஞ் செல்வன் என்றால் கதிரவன். ஆழி என்றால் கடல். கடல் மேல் பிறந்தவன் போலக் காட்சி அளிக்கும் சூரியன். ஆமா ஆண்டாள் இருந்த ஊரில்தான் கடலே இல்லையே அப்புறம் எப்படி சூரியன் கடல் மீது பிறந்தவன் போன்ற காட்சியைப் பார்த்திருப்பாள் ? 

இலக்கிய வாசிப்பு. அறிவான தகப்பனால் வளர்க்கப்பட்டவள் எவ்வளவு தூரம் பிற பாடல்களைப் பயின்று இருக்கக்கூடும் ?அதை எங்க பயன்படுத்துகிறாள் பாருங்கள் :) 

No comments:

Post a Comment

மறுமொழி இடுக!