23.எல்லே யீதென்ன இளமை
எல்லே யீதென்ன இளமை
பாடல் : 23
எம்மனை மார்காணி லொட்டார்
பொல்லாங்கீ தென்று கருதாய்
பூங்குருந் தேறி யிருத்தி
வில்லாலி லங்கை யழித்தாய்நீ
வேண்டிய தெல்லாம் தருவோம்
பல்லாரும் காணாமே போவோம்
பட்டைப் பணித்தரு ளாயே
விளக்கம் :
எல்லே !இது என்ன இளமை- ஏலே ! இது என்ன சிறுபிள்ளைத் தனம்
எம் மனைமார் காணில் ஒட்டார் - எங்கள் வீட்டு மக்கள் இதைப் பார்த்தா இனி இங்க விட மாட்டாங்க
பொல்லாங்கு இதுவென்று கருதாய் - இது போக்கிரித்தனம் என்று ஏன் கருத மறுக்கிறாய்
பூங்குருந்து ஏறி இருத்தி - குருந்த மரம் ஏறி உட்கார்ந்து இருப்பவனே
வில்லால் இலங்கை அழித்தாய் - வில்லால் இலங்கையை அழித்தாய்
நீ வேண்டியது எல்லாம் தருவோம் - நீ கேட்டது எல்லாம் தருவோம்
பல்லாரும் காணாமே போவோம் - யாரும் பார்க்கும் முன்னம் வீட்டுக்குப் போவோம்
பட்டைப் பணித்தருளாயே ! - எங்கள் பட்டாடையைத் தந்தருளாயே !
ஏலே!அழகான நெல்லைத் தமிழ் (வில்லிபுத்தூர் அதை ஒட்டியது தானே ) இதே மாதிரி திருப்பாவையிலும் எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோன்னுவரும் :) ஏலே இதென்ன சின்னப்புள்ளத்தனம் !
எம் மனை மார் - மனை = வீடு எங்க வீட்டில் உள்ளவங்க மட்டும் இதைப் பார்த்தா எங்கள இங்கிட்டு விடவே மாட்டாங்க.. எங்கள வீட்ல சேர்க்கவே மாட்டாங்க (அம்மா திட்டும் வீட்டுக்குப் போகணும் உடைகளைக் கொடுடா ) இது போக்கிரித்தனம் என்று கருது .. குருந்த மரத்தில் ஏறி அமர்ந்து இருப்பவனே !
நீ கேட்டது எல்லாமே தருகிறோம் .யாரும் பார்க்கும் முன்னம் நாங்க போயிடறோம். எங்கள் பட்டாடையைக் கொடுத்துவிடு !
கோதைத் தமிழ் பார்த்தீர்களா? வெகு கடினமாக வலிந்து திணித்த மேதைத்தனம் எல்லாம் இல்லை. வெகு எளிமையாக ஒரு கிராமத்துப் பெண்ணின் பேச்சைப் போன்றே தான் இருக்கின்றது . இதனாலேயே இதை வாசிக்க ஆசையாய் இருக்கின்றது :)
No comments:
Post a Comment
மறுமொழி இடுக!