Monday, 29 February 2016

26.தடத்தவிழ் தாமரைப் பொய்கை

26. தடத்தவிழ் தாமரைப் பொய்கை
பாடல் :26
தடத்தவிழ் தாமரைப் பொய்கைத்
தாள்களெங் காலைக் கதுவ
விடத்தே ளெறிந்தாலே போல
வேதனை யாற்றவும் பட்டோம்
குடத்தை யெடுத்தேற விட்டுக்
கூத்தாட வல்லஎங் கோவே
படிற்றையெல் லாம்தவிர்ந்
தெங்கள் பட்டைப் பணித்தரு ளாயே

விளக்கம் :
தடத்து அவிழ் தாமரைப் பொய்கைத் தாள்கள் -  பொய்கையில் மலர்ந்த பெரிய  தாமரையின் தண்டுகளானது
எங்கள் காலைக் கதுவ - எங்கள் கால்களைப் பற்ற
விடத்தேள் எறிந்தாலே போல - விஷம் கொண்ட தேள் கொட்டினாற் போல
வேதனை ஆற்றவும் பட்டோம் - மிகுந்த வேதனை அடைந்தோம்
குடத்தை எடுத்தேற விட்டு - குடத்தில் தலையில் எடுத்து ஏற விட்டு (கரகம்)
கூத்தாட வல்ல எங்கள் கோவே - கூத்தாட வல்ல எங்கள் அரசனே
படிற்றை எல்லாம் தவிர்ந்து - உன் குற்றங்கள் எல்லாம் நீ தவிர்த்து
எங்கள் பட்டைப் பணித் தருளாயே - எங்கள் பட்டு ஆடையை கொடுத்தருள் !

பொய்கையில் மலர்ந்திருக்கும் பெரிய தாமரையின் தண்டுகளானது ,வெகு நேரம் நிற்பதால் கோதையின் கால்களைப் பற்றுவது எப்படி இருக்கிறது என்றால், விஷம் கொண்ட தேள் கொட்டினாற்போல மிகவும் வேதனையாக இருக்கின்றதாம்..பொதுவாக தாமரை மலர்ந்த குளத்துக்குள் இறங்கவே கூடாது என்று  சொல்வார்கள் . பார்க்க குளம் ஆழம் இல்லை எனினும் உள்ளிருக்கும் இடியாப்பச் சிக்கல் போன்ற தண்டுகளின் ஊடே கால்கள் சுற்றி விட்டால் வெளியே எடுப்பது கடினம்..

பொய்கைக்கும் குளத்திற்கும் என்ன வித்தியாசம்.பொய்கை, சுனை என்பது தானே இயற்கையாக உருவான நீர்நிலைகள்.எங்கேனும் ஊற்று இருக்கும் அதிலிருந்து நீர் வந்து கொண்டே இருக்கும்.(மதுரை அழகர் கோவிலின் உச்சியில் அப்படி வற்றாத சுனை இருக்கின்றது எங்கிருந்து வருகின்றது என்றே தெரியாது ) குளம் என்பது செயற்கையாக வெட்டி வைத்த பள்ளத்தில் மழை பெய்து நிறைவது. பரக்க விழித்து நோக்கி பாடலில் சுனை என்கிறாள் கோதை.

கண்ணன் உடைகளைத் திருடி எடுத்து வச்சுகிட்டதால நீண்ட நேரம் பொய்கையில் நிற்க நேரிட்டது பெண்களுக்கு.  குடத்தை எடுத்து ஏற விட்டு கூத்தாட வல்ல கோவே என்கிறாள்..கூத்தாடுதல் என்றால் ஆடுதல் என்ன கூத்து ஆடுறாங்க..குடத்தை தலையில் தூக்கி வச்சுட்டு ஆடுறாங்க.
நம் பண்டைய தமிழகத்தில் பல "கூத்துகள்" மக்களை மகிழ்விக்க நடந்திருக்கின்றன .கூத்து,கூத்தாடி  என்பது இப்ப கேலிக்குரிய பொருளில் பயன்படுத்தறாங்க. முன்பு அப்படி அல்ல. கோதை இறைவனையே கூத்தாடி என்கிறாள். கரகம் எடுத்து ஆட வல்ல அரசனே என்கிறாள். அரிமேய விண்ணகரம் கோவிலில் மூலவர் பெயர் குடமாடு கூத்தன் தான்.

படிற்றை..படிறு..வஞ்சகம் ,திருட்டு, பொய் ,அடங்காத்தனம் ,குறும்பு என்ற பொருட்களை அகராதி தருகின்றது. இவ்விடத்தில் வஞ்சகமா திருடிக் குறும்பு செய்தவனா நான் பொருள் எடுத்துக்கறேன். அது குற்றம் தானே. அதனால் அவற்றைத் தவிர் . இதெல்லாம் நல்ல பிள்ளைக்கு அழகல்ல எங்கள், பட்டு உடைகளைக் கொடுத்துடு




No comments:

Post a Comment

மறுமொழி இடுக!