6.உருவுடை யாரிளை யார்கள்நல்லார்
பாடல் :6
உருவுடை யாரிளை யார்கள்நல்லார்
ஓத்துவல் லார்களைக் கொண்டு வைகல்
தெருவிடை யெதிர்கொண்டு பங்குனிநாள்
திருந்தவே நோற்கின்றேன் காமதேவா
கருவுடை முகில்வண்ணன் காயாவண்ணன்
கருவிளை போல்வண்ணன் கமலவண்ணத்
திருவுடை முகத்தினில் திருக்கண்களால்
திருந்தவே நோக்கெனக் கருளுகண்டாய்
விளக்கம் :
உருவுடையார் இளையார்கள்- உருவில் இளமையானவர்கள் ,
நல்லார் ஓத்துவல் லார்களைக் கொண்டு- மறை ஓதும் நல்லார்களைக் கொண்டு
வைகல்- அதிகாலையில்
தெருவிடை எதிர்கொண்டு- உன்னை தெருவினுக்கே வந்து எதிர்கொண்டு வரவேற்று
பங்குனிநாள் திருந்தவே - பங்குனி நாள் முழுவதுமே
நோற்கின்றேன் காமதேவா- நோன்பு நோற்கின்றேன் காமதேவா
கருவுடை முகில்வண்ணன்- மேகத்தின் நிறம் கொண்டவன்
காயாவண்ணன் - காயாம்பூ நிற வண்ணன்
கருவிளை போல்வண்ணன் -கருவிளம் பூ போன்ற நிறத்தான்
கமலவண்ணத் -தாமரை போன்ற முகத்தான்
திருவுடை முகத்தினில் - அவன் முகத்தினில் உள்ள
திருக்கண்களால் திருந்தவே -திருக்கண்களால் தெளிவாக
நோக்கெனக் கருளுகண்டாய் -என்னைப் பார்க்கவே அருள் செய்வாய் !
உருவிலே இளமையானவர்கள் வேதம் ஓதுபவர்களைக் கொண்டு , அதிகாலையில் (வைகறை -இரவு 2-6 சூரியோதயத்துக்கு முன் ) தெருவினுக்கே வந்து எதிர் கொண்டு வரவேற்று , பங்குனி நாள் நோன்பு நோற்கின்றேன் காமதேவா !
கருப்பு நிறம் கொண்ட மேகத்தின் நிறத்தான் ,காயாம் பூ வண்ணன் நிறத்தான்(காயாம்பூ என்பது முல்லை நிலத்து மலராம்..முல்லை நிலத் தெய்வமும் மாலே..)
காயாம்பூ |
கருவிளம்பூ (சங்குப்பூ ) நிறம் கொண்டான் , தாமரை வண்ணம் கொண்டவன் அந்த அழகிய முகத்தினில் உள்ள திருக்கண்களால் என்னை நோக்கும் பேறு எனக்குக் கிடைக்க அருள் செய்வாய்..
கருவிளை -சங்குப்பூ |
நான் ஒன்றும் சிறுபிள்ளை இல்லை..முன்னப்பின்ன சரியா கவனிக்காவிடிலும் இப்ப நல்லா கவனிச்சுப்பாரு வளர்ந்துட்டேன் என்கிறாள் ஆண்டாள்..கடைக்கண் பார்வை இல்ல..நின்னு நேரா நிமிர்ந்து பாரு முழுதாக ஆட்கொள் உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை அணு அணுவாக உன் மீது காதல் கொண்டவளை, நன்கு கண்டுணர்ந்து கொள்ள வேண்டுகிறாள் கோதை :)
No comments:
Post a Comment
மறுமொழி இடுக!