Saturday 30 January 2016

3. மத்தநன் னறுமலர் முருக்கமலர்

3.மத்தநன் னறுமலர் முருக்கமலர் 

பாடல் :3

மத்தநன் னறுமலர் முருக்கமலர் 
கொண்டுமுப் போதுமுன் னடிவணங்கித் 
தத்துவ மிலியென்று நெஞ்செரிந்து 
வாசகத் தழித்துன்னை வைதிடாமே, 
கொத்தலர் பூங்கணை தொடுத்துக்கொண்டு, 
கோவிந்தா னென்பதோர் பேரெழுதி 
வித்தகன் வேங்கட வாணனென்னும் 
விளக்கினிற் புகவென்னை விதிக்கிற்றியே..!

விளக்கம் :மத்த நன்னறு மலர் - நறுமணம் கொண்ட ஊமத்த மலர்
முருக்க மலர் கொண்டு - முருங்கை மலர் கொண்டு (கல்யாண முருங்கைப் பூ )
முப்போதும் முன்னடி வணங்கித் - மூன்று பொழுதுகளும் உன் அடி தொழுது
தத்துவம் இலி என்று - உண்மை இல்லாதவன் என்று
நெஞ்சு எரிந்து - மனம் வெந்து
வாசகத்தழித்து உன்னை - நீ சொன்ன சொல் காப்பாற்றுபவன் என்ற எண்ணத்தை நெஞ்சத்தில் இருந்து அகற்றி
வைதிடாமே - உன்னை திட்டிவிடுவதற்குள்
கொத்து அலர் பூங்கணை - மலர்க்கொத்து கொண்டுஅம்புகள் தொடுத்து
கோவிந்தன்  என்பதோர் பேர் எழுதி - கோவிந்தன் என அதிலே பெயரெழுதி
வித்தகன் - பல வித்தைகள் கற்றவன்
வேங்கட வாணன் என்னும்- வேங்கடவன் என்னும் பெயர் பெற்ற
விளக்கினிற் புக என்னை - விளக்கினில் (என் வாழ்வுக்கு வெளிச்சம் தரும் விளக்கானவனிடம் புக என்னை
விதிக்கிற்றியே - எய்து விடேன்..

ஹா ஹா என்னவொரு அதிரடி மிரட்டல்..:)  முதல் இரண்டு பாட்டிலும் ரொம்ப பணிந்து , எங்களைச் சேர்த்திடு எனக் கெஞ்சும் பெண் இதிலே காமனை மிஞ்சி மிரட்டுகிறாள்..பொதுவாக நான் அறிந்தவரையில் ஊமத்த மலர்கள் பூஜைக்குப் பயன்படுவதில்லை..ஆனா ஆண்டாள்தான் கிராமத்துப் பெண்ணாச்சே..அங்கே எளிதாகக் கிடைப்பது இந்த ஊமத்த மலர்கள் தாம்..(சிறுவயதில் ஊமத்தங்காய் அரைச்சுக் கரும்பலகைக்கு இன்னும் கருப்பு சேர்க்கப் பயன்படுத்தியது நினைவுக்கு வருகிறது :) )

"கோவிலில் தேவிக்குப் பூசை 
அதில் ஊமத்தம்பூவுக்கேன் ஆசை " என்று திரைப்பாடல் வரி நினைவுக்கு வருகிறது .
எங்கயோ ஆத்து,  குளத்து மேட்டுல இருக்கிற பூவு ,  சாமி பூசைக்கு ஆசைப் படலாமா..படலாம் செய்பவள் ஆண்டாளாக இருந்தால்..அவள் பேதம் பார்ப்பதில்லை.. :)

ஊமத்தம்பூ 

ஆனா ஆண்டாள் இந்த ஊமத்த மலர் நல்ல வாசனையானதுங்கறாங்க..அந்த ஊமத்த மலரையும்  , கல்யாண முருங்கைப் பூவையும் காமனுக்குப் படைக்கிறாங்களாம்

கல்யாண முருங்கை 

எங்கயாவது இது நடக்குமா அடுக்குமா? ..நடக்கும்.. மகா பாரதத்திலேயே ஒரு கதை கேள்விப்பட்டிருக்கிறேன்.  கண்ணனுக்கு அவரைப் பார்த்த மகிழ்விலும் நெகிழ்விலும் பழத்தை உரிச்சுக் கொடுக்கும் அவரது பக்தை ,பழத்தைத் தருவதற்குப் பதில் தோலைக் கொடுத்திட்டு இருந்தாங்களாம்..இவரும் எதுவும் சொல்லாமல் வாங்கி உள்ளே அமுக்கிக் கொண்டிருந்திருக்கிறார்..சிறிது நேரம் கழித்தே சுயநினைவு வந்து பதறி எப்பேர்ப்பட்ட தவறு இழைத்து விட்டோம் என வருந்தியபோது, கடவுள் அவங்களை ஆசுவாசப்படுத்தி உமது பக்தியே பிரதானம் , இப்பற்றோடு உன் கையால் எது கொடுத்தாலும் அதை நான் உண்பேன் என்றாராம் கண்ணன்.. தன் கண்ணைத் தர,  சிவனின் மீது கால் வைத்து கண்ணைப் பிடுங்கி வைத்த கண்ணப்ப நாயனார் கதையும் படித்திருக்கிறோம் தானே.. ஆண்டாள் செய்தால் மட்டும் பிழையாகி விடுமா என்ன.. ?:) பழையதைக் கூட படைக்கலாம் பக்தியோடு..ஆண்டவன் மறுப்பதில்லை..

அப்படித் தனக்குக் கிடைத்த மலர்களைக் கொண்டு, மூன்று பொழுதுகளும் அவன் திருவடி வணங்கித் தொழுவதவளையே  , இவன் பொய்யானவன் சொன்ன சொல் தவறியவன் ,நாம் நினைத்ததை நடத்திக் கொடுப்பான் என்ற நம்பிக்கையைச் சிதைத்தவன் என்றெல்லாம் நான் நெஞ்செரிந்து (என் வயிறெரிஞ்சு சொல்றேன் நீ விளங்க மாட்டே என்பதன் நாகரிக வடிவம் தான்  ஆண்டாள் சொல்வது :)) ) நான் உன்னை திட்டி விடும் முன்னம் என் நம்பிக்கையை நிறைவேற்றி விடு என்று மிரட்டுறாங்க..என்னடா மூனாவது பாட்டிலேயேவா என மிரளாதீங்க இது வெறும் trailer தான் main picture லாம் இனிமேல் தான் இருக்கு..:))


மலர்க்கணைகள் தொடுக்கச் சொல்றாங்க..பின்ன வேற ஏதாவது கடினமா செஞ்சு அது அவள் நாயகனுக்குப் பாதகம் ஆகி விடக்கூடாது இல்லையா..
மலரம்புகள் செய்து அதிலே கோவிந்தன் பெயரெழுதி , பல வித்தைகள் கற்றவன் ,வேங்கடவன் என்பவனின் என் வாழ்வுக்கு வெளிச்சம் தரும் விளக்கானவனிடம் தஞ்சம் புக என்னைச் சேர்த்து விடேன்..

பாருங்களேன்..ஆண்டாள் பூஜைகள் எவ்வளவு எளிதாக இருக்கு.. கோலம் போடுறாங்க ,   சுள்ளி பொறுக்கித் தீ வளர்க்கிறாங்க ,  இப்ப ஊமத்தம் மலர் , கல்யாண முருங்கை மலர் பூ போடுறாங்க..

தன்னிடம் என்ன இருக்கோ ,தன் சக்திக்கு எது முடியுமோ அதைக் கொண்டே செய்வதே தெய்வ வழிபாடு.. என்ன.. தெளிந்ததா ?:)


2.வெள்ளை நுண் மணற்கொண்டு...

2. வெள்ளை நுண் மணற்கொண்டு...

பாடல் :2
வெள்ளை நுண் மணற்கொண்டு தெருவணிந்து
வெள்வரைப் பதன்முன்னம் துறைபடிந்து
முள்ளுமில் லாச்சுள்ளி யெரிமடுத்து
முயன்றுன்னை நோற்கின்றேன் காமதேவா,
கள்ளவிழ் பூங்கணை தொடுத்துக்கொண்டு
கடல்வண்ண னென்பதோர் பேரெழுதி,
புள்ளினை வாய்பிளந் தானென்பதோர்
இலக்கினிற் புகவென்னை யெய்கிற்றியே.

விளக்கம் :
வெள்ளை நுண் மணல் கொண்டு  - வெள்ளை நிறக் கோலப்பொடி கொண்டு
வெள்வரைப் பதன் முன்னம் - வெள்ளென வெளிச்சம் வருவதற்கு முன்பே
துறைபடிந்து - குளத்தில் இருக்கும் படித்துறை சென்று
முள்ளுமில்லாச் சுள்ளி எரிமடுத்து -- முட்களற்ற மரக் குச்சிகள் எடுத்து
முயன்று உன்னை - முயன்று உன்னை
நோற்கின்றேன் காம தேவா - நோன்பு இருக்கிறேன் காமதேவா
கள் அவிழ் - தேன் வடியும்
பூங்கணை - பூக்களால் செய்யப்பட்ட  அம்பு தொடுத்துக் கொண்டு
கடல்வண்ணன் என்பதோர் பேரெழுதி -  கடலின் நிறம் கொண்ட நீல வண்ணன் பெயரெழுதி
புள்ளினை வாய் பிளந்தான் என்பதோர் -பகாசுரன் என்ற அரக்கன் கொக்கு (புள் ) வடிவம் எடுத்து வந்தபோது அவ்வரக்கன் வாய் பிளந்தவன் மீது
இலக்கினிற் புகவென்னை - இலக்கு வைத்து என்னை அவன் மேல்
யெய்கிற்றியே. - எய்து  விடேன்
Add caption
வெள்ளை நுண்மணல் கொண்டு என்பது வேறொன்றும் இல்லை வெள்ளைக் கோலப்பொடி தான்..எவ்வளவுக்கு எவ்வளவு அது நுண்ணிய மணலாக இருக்கோ அவ்வளவுக்கு அவ்வளவு கோலம் போட இலகுவாக இருக்கும்..கோலமும் அழகா வரும்.. அது வச்சு அழகா கோலம் போடுறப்ப தெருவுக்கே ஓர் அழகு வந்துடும்.
நன்றி :கூகுல் 

அதைத் தான் தெருவணிந்து என்கிறார் முதலிரண்டு பாடல்களிலும்.. தெருவுக்கு அழகான கோலத்தை அணிவித்தல்..வெளிச்சம்  வரும் முன்னம் வெள்ளெனக் குளிச்சு அதுவும் எங்க..? அக்காலத்தில் குளத்தில் குளிப்பது வழக்கம்..குளத்தின் படிகளை படித்துறை என்பது வழக்கம்..அங்கே சென்று குளிச்சுட்டு , முட்களற்ற சுள்ளி ... இன்னமும் சுள்ளி பொறுக்குதல் கிராமத்தில் வழக்கில் உள்ள பேச்சு..அப்படியான சுள்ளிகள் (மரத்தில் இருந்து விழுந்து இருக்கும் சின்னச் சின்ன உடைந்த  குச்சிகள் எடுத்து எரிச்சு தீ வளர்த்து வேள்வி செய்து,  காமதேவா உன்னை நோற்கின்றேன்..(நோன்பு இருத்தல் ) வேள்விகள் எப்பெண்ணாவது செய்வாளா..ஆனால் கோதை செய்கிறாள்..கண்ணனைச் சேர எதையும் செய்யத் துணிகிறாள்.. )
தேன் வடியும் பூக்களால் செய்யப்பட்ட கணைகள் கொண்டு ,தொடுத்து ,அதில் கடல் வண்ணம் கொண்ட நீல வண்ணனின் பெயர் எழுதி ,

கொக்கு வடிவில் வந்த அரக்கனின் வாய் பிளந்தவன் மார்பினை,  இலக்காகக் கொண்டு அடையுமாறு அதிலே என்னையும் வைத்து எய்து விடேன்..
எப்ப்ப்ப்பூடி ...ஆண்டாள் ஆசைப்பட்ட மாதிரி பேர் எழுதியாச்சு :))
இதை படிக்கும் போதே ஒரு சன்னமான குரல் கொண்டு படிச்சுப் பாருங்களேன்..
இப்படி ஓர் ஏக்கமான பாவனை கண் முன் எழும் :) இந்தப் பாடல் படிக்கிறப்ப
காதல் ஓவியம் என்ற திரைப்பாட்டில் ,
"தாங்குமோ என் தேகமே..
மன்மதனின் மலர்க்கணைகள் தோள்களிலே..வரிகள் நினைவுக்கு வந்தது..காமன் அம்புகள் அவ்வளவு சக்தி வாய்ந்தவை என்பதால்தான் கோதை காமனிடம் முறையிடுகிறாள் :) 

Thursday 28 January 2016

1. தையொரு திங்களும் !


ஆண்டாள் திருவடிகளே போற்றி !!!
வணக்கம்..எனக்கு இது புது களம்.. இது போன்றவற்றிற்கு உரை எழுதுவது கத்தி மேல் நடப்பது போல. மிகப்பெரிய சவாலும் கூட..ஓர் ஆண்டு காலமாக ஆண்டாளுக்கும் எனக்குமான மானசீக பந்தம் , என்னைப் போன்றவள் என்ற உரிமை , பெண் மீதான இன்றைய கட்டமைப்புகளில் வாழாத , பெண்ணுக்குரிய உண்மையான உணர்வோடு வாழ்ந்தவள் என்ற மதிப்பு இவற்றால் ஆனது.. அவள் சார்ந்த கேள்விகள் எழ எழ,  எனக்கு ஏதேனும் ஒரு வடிவில் பதில் கிடைக்கும் ..அது இன்னும் ஆர்வத்தைத் தூண்டியது..ஓங்கி உயர்ந்த செந்நெல் ஊடு கயலுகள எனப் படித்த பொழுது, அது எப்படி நெற்பயிரின் ஊடே எங்கோ ஆற்றிலோ,குளத்திலோ உள்ள மீன்கள் இங்கே வந்து புகும் என்ற கேள்வி வந்தது..பிறகு ஒரு மாதம் கழித்து ,இணையத்தில் இந்தோனேசியாவில் இப்படி விவசாயம் செய்கிறார்கள் என்பது படத்தோடு கிடைத்த பொழுது மலைத்து விட்டேன். :))ஆண்டாள் வேளாண் விஞ்ஞானி


இது போலவே வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று என்ற வரிகள் படிக்கவும் வாரத்தில் வியாழனுக்கு அடுத்து தானே வெள்ளி வரும் அதைச் சொல்றாங்க போல என்றே நினைத்திருந்தேன் ..பிறகு தான் அறிந்தேன்..அவள் வானில் உள்ள கோள்களில் நிகழ்ந்த மாற்றத்தைக் குறித்து இருக்கிறாள் என்று..ஆண்டாள் வானியல் அறிந்தவள்..இவ்வளவு அறிவான பெண்ணின் துறுதுறுப்பு ஈர்த்தே பெரியாழ்வார் அவளைத் தத்து எடுத்து வளர்த்திருக்க வேண்டும் . இப்படி அறிவான மானிடர்களை எல்லாம் அவதாரம் ஆக்கி,  தங்கள் சாதி எனக் காட்டிச் சொன்ன கதைகளை எல்லாம் இனியும் நான் நம்பப் போவதில்லை..புராணங்களைப் பேசுபவர்களிடம் குறுக்குக் கேள்வி கேட்டுப்பாருங்கள் சரியான பதில் வராது .வேண்டுமெனில் நம்மைப் பற்றிய குற்றச்சாட்டு வரக் கூடும் :) 

அறிவான பெண் எனினும் மனம் குழந்தைத்தனமானது..  கண்ணன் (மாயோன் என்ற முல்லை நிலத்துத் தமிழ்க் கடவுளே கண்ணன். ஆனால் அது இன்று கிருஷ்ணனுக்கே என்றாகி விட்டதால் கண்ணன் என்றே சொல்லுவோம் )   மீது அவளது தீராக் காதலைப் படிக்கும் போதே உணர முடியும்..இராமானுசரே ,சற்றேனும் பெண் தன்மை கொண்டவனே ஆண்டாளை முழுமையாகப் புரிய முடியும் என்றாராம்.. ஆண்டாள் என்றாலே திருப்பாவை என்றதோடு பலரும் நின்று விடுகிறார்கள்..முப்பது பாடல்கள் முடிந்ததும் , ஆண்டாள் அரங்கனோடு கலந்து விட்டதாக நம்புகிறார்கள்..
இல்லை அதன் பின்பும் வராத கண்ணனைச் சேர , காமனிடம் வேண்டுதல் ,  கண்ணனுக்கு அவள் விடும் மேக தூது, குயில் தூது , அழகருக்குப் பாடிய பாடல்கள் பிரிவாற்றாமை, திருமணக் கனவு , சேர முடியாத வேட்கை , வேதனை, பிருந்தாவனம் சென்று அங்கே கண்ணனைத் தேடி அடியவர்கள் சொல்லும் பதிலிலியே ,  இறுதியில் அப்படியே அமைந்து  போய்  முடிப்பதே நாச்சியார் திருமொழி.. ஒரு பெண்ணின் மனவுணர்வுகளை அப்பட்டமாக வெளிப்படுத்தியதை ஏற்றுக்கொள்ள  முடியாமல் இது மறைக்கப்பட்டதோ என்னவோ..:( ..

நாச்சியார் திருமொழி தனிப் புத்தகமாகக் கிடைக்கும் என மதுரையில் தேடினேன்.. வில்லிபுத்தூரிலும் கூட திருப்பாவை கிடைத்ததே அன்றி நாச்சியார் திருமொழி என்றால் என்னவெனத் தெரியாமல் ,  திருதிருவென விழிக்கிறார்கள்.. அவள் வாழ்ந்த இடத்திலேயே அவள் வரலாறு இல்லை..:((  பின்னர் இது பிரபந்தத்தில் ஊடேயே இருக்குமே என்றார் நண்பர்.
ஏதோ ஓர் நாள் கனவில் அப்பா வாங்கி வைத்திருக்கும் பிரபந்தத்தைப் பார் என்று எவரோ நினைவூட்டுவது போல இருக்க  , அப்பா வாங்கி வைத்திருந்த பிரபந்தத்தில் ,இதை மட்டும் ஒரே மூச்சில் படித்து முடித்தேன்.. பின்னரே இதற்கு உரை எழுத வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது.  இயன்றவரை, இணையத்தில் தேடியும், தமிழறிந்த நண்பர்களிடம் ஐயம் தெளிந்தும் இங்கே பதிவு செய்கின்றேன்..எத்தனை நாளில் முடிப்பேன் என்ற கணக்கு எடுத்துக் கொள்ள வில்லை..எப்பப்ப முடியுதோ அப்பப்ப எழுதுவோம் :) இதை ஏதோ ஒரு மதம் சார்ந்த பாடல்கள் என்று புறக்கணிக்காமல் ,தலைவி , தலைவன் மீது கொண்ட காதல்,பிரிவாற்றாமை கொண்டு அரற்றுவதாக எண்ணிப் படியுங்கள் அந்தப் பார்வையில்  மட்டுமே இதை முழுக்க முழுக்க எழுதவிருக்கிறேன் .
குறிப்பு : இவ்விளக்கவுரைகளில் பயன்படுத்தப்பட்டுள்ள படங்கள் யாவும், இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை. அவை அவற்றை வரைந்த,புகைப்படம் எடுத்தவரையே சாரும்..

1: தையொரு திங்கள்
பாடல் :1
தையொரு திங்களும் தரைவிளக்கித் 
தண்மண் டலமிட்டு மாசிமுன்னாள்,
ஐயநுண் மணற்கொண்டு தெருவணிந்து 
அழகினுக் கலங்கரித் தனங்கதேவா,
உய்யவு மாங்கொலோ வென்றுசொல்லி 
உன்னையு மும்பியை யும்தொழுதேன்,
வெய்யதோர் தழலுமிழ் சக்கரக்கை 
வேங்கட வற்கென்னை விதிக்கிற்றியே..

தையொரு திங்களும்  -   தை மாதம் முழுவதும்
தரை விளக்கித் - தரையைத் தூய்மைப்படுத்தி
தண் மண் தலம் இட்டு - குளிர்ந்த நீர் தெளித்த மண் தரையில் இட்டு
மாசி முன்னாள் - மாசி முதல் நாள்
ஐய நுண் மணற்கொண்டு - அழகிய நுண்ணிய மணல் கொண்டு (கோலம் )
தெரு அணிந்து அழகினுக்கு அலங்கரித்து -  தெருவில் இட்டு அழகாய் அலங்கரித்து
அனங்க தேவா - காம தேவா
உய்யவு மாங்கொலோ என்று சொல்லி  - உன்னைத் தொழுவதால்
உய்யலாமோஎன்று எண்ணி - இந்த துன்பத்திலிருந்து தப்பிக்கலாமோ என்று எண்ணி
உன்னையும் உம்பியையும்  தொழுதேன் -உன்னையும் உன் தம்பியான சாமனையும் தொழுதேன்
வெய்யதோர் தழலுமிழ் - வெப்பமுடைய தழலை (நெருப்பை ) உமிழும்
சக்கரக்கை வேங்கடவற்கு என்னை  - சக்கரத்தைக் கையில் கொண்ட வேங்கடவனுக்கே என்னை
விதிக்கற்றியே -  விதித்து விடேன்..(அவனுக்கே உரியவள் என்றாக்கி விடேன் )

விளக்கம் : 
மார்கழி முழுக்க நோன்பு இருந்தும், இந்தக் கண்ணன் அவளை வந்து சேரல..ஒருவேளை காமனைத் தொழுதா வந்து சேருவாரோன்னு ஒரு நப்பாசை..(இன்றும் , தாடிக்கொம்பு என்ற ஊரில் உள்ள சௌந்தரராஜ பெருமாள் கோவில் வாரா வாரம் வியாழன் ரதி-மன்மதன் பூஜையே நடக்குது கல்யாணம் ஆகாதவங்களுக்கு ஆக ) அதனால் காமனைத் தொழ முடிவெடுத்துப் பாடல் பாடுகிறாள்..(அனங்க தேவா என்றால் உடல் அற்றவன் என்று பொருளாம்..ஒருமுறை சிவனால் எரிக்கப்பட்ட காமன் உடம்பு அற்றுப் போனதாக புராணம் .  )
தை மாதம் ..(திங்கள் என்பது அருமையான சொல்..ஆனா அதைக் கிழமைக்கு மட்டுமே பயன்படுத்துகிறோம்..) முழுவதும் தரையைத் தூய்மைப்படுத்தி , குளிர்ந்த நீர் தெளித்த மண் தரையில் (இதிலே மண்டலம் என்பது மண்டல பூஜையாக இருக்குமோ என்ற ஐயம் இருந்தது..ஆனால் ஒரு மண்டலம் என்பது 48 நாள் ..தை மாதம் 48 நாள் இல்ல ..மாசி முதல் நாளே நோன்பு முடிக்கிறாங்க எனவே இது அந்த மண்டலமாக இருக்க வாய்ப்பிராது என அப்பொருளை ஒதுக்குகிறேன்..மண் தலம் (தலம் என்பது இடம் ,கோவில் ,வீடு என்ற பொருள்படும்  ..அக்காலத்தில் எல்லாம் மண் தரை தான் ) அழகிய நுண்ணிய மணல் கொண்டு (கோலப்பொடி ) தெருவில் இட்டு அலங்கரித்து வைக்கிறாங்களாம்.. (கோலம் வரையப்பட்ட தெருக்களின் அழகே தனி! )
நன்றி :சொரூபா 

அந்தக் காம தேவனிடம் இதைச் சொல்லி ,இப்படி உன்னைத் தொழுதலாவது நான் உய்ய (இந்த மோசமான நிலையில் இருந்து நன்னிலை அடைய ) வழி கிடைக்குமோ என்றெண்ணி உன்னையும் உன் தம்பி சாமனையும் தொழுதேன். வெப்பம் கொண்ட தழல் (நெருப்பு ) உமிழும் சக்கரத்தைக் கொண்டவனாகிய வேங்கடவனுக்கே என்னை விதித்து விடச் செய்யேன் (அவனுக்கே உரியவள் என்றாக்கி விடேன் ) என்று இறைஞ்சுகிறாள் கோதை.