Friday 29 July 2016

64.கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ

64.கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ

நாச்சியார் திருமொழி ஏழாம்பத்து ஆரம்பம்..கடலில் பிறந்து கண்ணனின் கைகளிலே தவழும் வெண்சங்கைப் பார்த்துப் பொறாமையோடு ஆண்டாள் பாடும் பத்துப் பாடல்கள்..கண்ணனின் திருவாய் முத்தம் வேண்டி , அவன் வாயமுதம் எப்படி இருக்கும் என்று வெண் சங்கினைப் பார்த்துக் கேட்கின்றாள் .  தான் அனுபவிக்க வேண்டிய இன்பத்தை , அனுபவிக்கும் வெண் சங்கினைப் பார்க்கப் பார்க்க ஆற்றாமையாக இருக்கிறது ஆண்டாளுக்கு.. இனி அந்தப் பத்துப் பாடல்கள் :)

பாடல் :64
கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்தி ருக்கும்மோ
மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே

விளக்கம் :
கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ - பச்சைக் கருப்பூரம் மணக்குமோ அல்லது தாமரைப்பூ மணம் வருமோ
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்து இருக்குமோ - கண்ணனின் பவளம் போன்ற சிவந்த வாய் மிக இனித்துக் கிடக்குமோ
மருப்பு ஒசித்த மாதவன்தன் வாய்ச்சுவையும் நாற்றமும் - குவலய பீடம் என்னும் யானையின் கொம்பை உடைத்த மாதவனின் வாயின் சுவையும் அதன் மணமும் எப்படி இருக்கும் என
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல் ஆழி  வெண்சங்கே - வேண்டி விரும்பிக் கேட்கின்றேன் அதைச் சொல்லேன் கடல் வெண்சங்கே

கருப்பூரம் என்பது இப்பொழுது கோவிலில் ஏற்றும் கற்பூரம் (சூடம் ) அல்ல . ஆண்டாள் சொல்வது பச்சைக் கருப்பூரம் இன்று விலை அதிகம்.. ஒருகாலத்தில் தமிழகத்தில் இருந்த மரம் இன்று வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது..இதனாலேயே விலை அதிகம்..நம்ம பணக்காரக் கடவுளான திருப்பதி ஏழுமலையான் மட்டும் இப்ப இந்தக் கருப்பூர மணத்தை அனுபவிக்கிறார்..


ஆண்டாள் கடலில் பிறந்து கண்ணனின் கையில் உள்ள வெண் சங்கினைப் பார்த்துக் கேட்கின்றாள்..கண்ணனின் பவளம் போன்ற சிவந்த வாய் தொட்டு ரசிக்கும் பாக்கியம் பெற்றது வெண் சங்கு ஆதலால் அதனிடம் தானே கண்ணனின் திருவாயமுதம் எப்படி இருக்கும் என்று கேட்டு அறிந்து கொள்ள முடியும்..


 கண்ணனின் பவள வாய் எப்படி மணக்கும் ? பச்சைக் கருப்பூர மணம் போல மணக்குமா ?தாமரைப் பூவின் மணம் மணக்குமோ ?பவளம் போன்ற அந்த செவ்வாய் மிக இனிப்பாக இருக்குமோ ? குவலய பீடம் என்னும் யானையின் தந்தத்தை முறித்த மாதவனின் வாயின் சுவையும் அதன் மணமும் எப்படி இருக்கும் என்று விருப்பம் உற்றுக் கேட்கின்றேன்  என்னிடம் சொல்லேன் கடல் வெண் சங்கே !
வாவ்! வெறுமனே முத்தம் அல்ல வாயின் சுவை என்கிறாள்..இதழ்களைச் சுவைத்திருப்பாய் தானே வெண் சங்கே என்று ஆசையுடன் கேட்கிறாள்..


கண்ணன் மீதான மோகம் ஆண்டாளை எப்படி எல்லாம் யோசிக்க வைத்திருக்கிறது.. கண்ணன் இதழ் எப்படி மணக்கும் அதன் சுவை எப்படி இருக்கும் என்று சங்கிடம் குசலம் விசாரிக்கிறாள் :)

Sunday 24 July 2016

63.ஆயனுக் காகத்தான் கண்டக னாவினை

63.ஆயனுக் காகத்தான் கண்டக னாவினை
பாடல் :63
ஆயனுக் காகத்தான் கண்டக னாவினை
வேயர்பு கழ்வில்லி புத்தூர்க்கோன் கோதைசொல்
தூயத மிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்
வாயுநன் மக்களைப் பெற்றும கிழ்வரே

விளக்கம் : 
ஆயனுக்காகத் தான் கண்ட கனாவினை -கண்ணனுடன் தனக்குத் திருமணம் நிகழ்வதாக கண்ட கனவினை
வேயர்புகழ் வில்லிபுத்தூர்க் கோன்  கோதைசொல் - வேயர்குலப் புகழ்பெற்ற வில்லிபுத்தூர் தலைவர் பெரியாழ்வார் மகள் கோதை சொன்ன
தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர் - இந்த பத்துப்பாடல்கள்அடங்கிய தூய  தமிழ்ப் பாமாலையைப் பாட வல்லவர்
வாயு நன்மக்களைப் பெற்று மகிழ்வரே - திருமணமாகி அருமையான,  நல்ல குழந்தைகளைப் பெற்று மகிழ்வார்கள்


வேயர் குலப் புகழ் வில்லிபுத்தூர் தலைவர் பெரியாழ்வார் மகள் கோதை   தனக்குத் திருமணம் நிகழ்வதாகத்  தோழியிடம் தன் கனவினைச் சொல்வதாக வந்த இந்தப் பத்துப் பாடல்கள் அடங்கிய தூய தமிழ்ப்பாமாலையைப் பாடுபவர்கள் திருமணமாகி, அருமையான நல்ல குழந்தைகளைப் பெற்று மகிழ்வார்கள்


143 நாச்சியார் திருமொழியில் இந்தப் பத்துப் பாடல்களைத்தான் வைணவர்கள் கொண்டாடுகிறார்கள்..திருமணங்களில் இதைப் பாடி இன்புறுகின்றனர் . இந்துத் திருமணச் சடங்குகளை அழகாகச் சொல்கின்றன இந்தப் பாடல்கள்.. 
இந்தப் பாடல்களில் சிலவற்றை மட்டும் கேளடி கண்மணி என்ற படத்தில் இளையராஜா இசையமைத்து ஜானகி பாடி இருப்பார்.. முழுமையாகப் பாடி இருக்கலாம் என்ற மனக்குறை தவிர ,பாடலும்  படமாக்கப்பட்ட விதமும் ஜானகி பாடிய விதமும் மனத்திற்கு நிறைவு :) 





Saturday 23 July 2016

62 குங்கும மப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து

62.குங்கும மப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து
பாடல் 62 :
குங்கும மப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து
மங்கல வீதிவ லம்செய்து மணநீர்
அங்கவ னோடுமு டஞ்சென்றங் கானைமேல்
மஞ்சன மாட்டக்க னாக்கண்டேன் தோழீநான்.

விளக்கம் : 
குங்குமம் அப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து - உடல் முழுவதும் குங்குமம் அப்பிக் குளிர்ச்சியான சந்தனமும் பூசி
மங்கல வீதி வலம் செய்து மணநீர் - தோரணம் கட்டப்பட்ட மங்கலகரமான வீதிகளில் வலம் செய்து,  நறுமணம் கொண்ட வாசனைத் திரவியங்கள் கொண்ட நீரினைக் கொண்டு
அங்கு அவனோடு உடன் சென்று அங்கு ஆனை மேல் - கண்ணனோடு ஆனையின் மீது அமர்ந்து செல்லும்போது
மஞ்சனம் ஆட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்  - எங்களுக்கு மஞ்சனம் ஆட்டக் கனவு கண்டேன் தோழீ நான்

திருமணத்திற்காக அலங்காரமாக தோரணம் கட்டப்பட்ட வீதிகளில் ,கண்ணனோடு ஆனை மீதேறி (பாருங்க பெண் தனியா ஊர்வலம் வரல..கணவனோடு வருகிறாள்..இவர் தாம் என் கணவர் இவள் தாம் என் மனைவி என்று ஊருக்குப் பறை சாற்ற வலம் வருகின்றனர்.)
தீக்குண்டத்தில் தீ வளர்த்து வலம் செய்து பொரிமுகம் தட்டி முடிச்ச களைப்பு இருக்குமல்லவா..ஆதலால்உடல் முழுவதும் குங்குமம் அப்பி, குளிர்ச்சியான சந்தனமும் பூசி நறுமணம் மிக்க நீரினைக் கொண்டு ,அவள் தன் கணவன் கண்ணனோடு வருகின்ற வேளையிலே ,திருமஞ்சனம் செய்யக் கனவு கண்டாளாம் ஆண்டாள்..


அபிஷேகம் என்பதற்கு சுத்தமான தமிழ்ச் சொல் திருமஞ்சனம்..இச்சொல்லை வைணவத் தலங்களில் மட்டுமே சொல்கின்றனர்..கடவுளுக்கு மட்டுமே செய்யப்படும் திருமஞ்சனத்தை இங்கே கடவுளின் மனைவியாகி விட்டபடியால் ஆண்டாளுக்கும் சேர்த்தே செய்வது போலக் கனவு கண்டதாக சொல்கிறாள் ஆண்டாள் ..இனி அவருக்கு என்ன கௌரவம் கிடைக்கின்றதோ அது அவளுக்கும் கிடைப்பதே முறையானது..அவரின் பாதி அவளானாள் :)
ஒரு சினிமாப் படத்தில் இந்த வரிகளை அழகாகப் பாடலாக்கி இருந்தனர்..














Tuesday 12 July 2016

61.வரிசிலை வாள்முகத் தென்னைமார் தாம்வந்திட்டு

61.வரிசிலை வாள்முகத் தென்னைமார் தாம்வந்திட்டு
பாடல் :61
வரிசிலை வாள்முகத் தென்னைமார் தாம்வந்திட்டு
எரிமுகம் பாரித்தென் னைமுன்னே நிறுத்தி
அரிமுக னச்சுதன் கைம்மேலென் கைவைத்து
பொரிமுகந் தட்டக்க னாக்கண்டேன் தோழீநான்

விளக்கம் :
வரி சிலை வாள் முகத்து என் ஐ மார்தாம் வந்திட்டு - அழகிய வில் போன்ற புருவமும் ஒளிமிகுந்த முகத்தையும் கொண்ட என் தந்தை/அண்ணன் மார்கள் வந்து
எரிமுகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி - தீக்குண்டத்தை நன்றாக வளர்த்து அதன் முன்னே என்னை நிறுத்தி
அரிமுகன் அச்சுதன் கைம்மேல் என் கை வைத்து - சிங்கமுகன் கொண்டவன் அச்சுதன் கையின் மேல் என் கையையும் வைத்து
பொரி முகம் தட்டக் கனாக் கண்டேன் தோழீ நான் - அந்தத் தீயில் பொரியைத் தூவுவதாகக் கனவு கண்டேன் தோழீ நான்

அழகிய வில் போன்ற புருவமும் , ஒளிமிகுந்த முகத்தையும் கொண்ட என் தந்தை /அண்ணன்மார்கள் வந்து  அமர்ந்து , தீக்குண்டத்தை நன்கு வளர்த்து , அதன் முன்னே என்னை நிறுத்தி , சிங்க முகன் அச்சுதன் கையின்மேல் என் கை வைத்து அந்தத் தீயில் பொரியைத் தூவுவதாகக் கனவு கண்டேன் தோழீ .




அப்பா கைப்பிடிச்சு தாரை வார்த்துக் கொடுத்தார்..அடுத்து அண்ணன்கள் எங்கள் வீட்டில் நாங்கள் இதுவரை நெல்லில் உள்ள அரிசியைப் போன்று காத்த பெண்ணை ,அவள் பொரிந்து திருமணத்திற்குத்  தயாராகி விட்டாள் இனி அவளை உங்களுக்குக் கட்டிக் கொடுக்கறோம்  என்கிறார்கள்..என் ஐ மார்..ஐ என்றால் தலைவன், தகப்பன் ,தகப்பனுக்கு அடுத்தவனான தமையன் . கோதையின் உடன்பிறந்தோர் இருந்தார்களா அல்லது பெரியப்பா/சித்தப்பா மக்களோ.. தெரியல.. ஆனால் முறைமை செய்கிறார்கள்..:)
சிங்க முகன் அச்சுதன் கையின் மேல் கை வைத்து பொரியைத்  தீயில் தட்டி முறைமை செய்கின்றனர் :) 

வெளி நாடுகளில் எல்லாம் திருமணம் என்பது இருவர் ஒன்று சேர்வது..நம் நாட்டில் மட்டும்தான் திருமணம் என்பது இரு குடும்பம் ஒன்று சேர்வதற்கான விழா..உறவுகள் பலப்படுத்தப்படுகிறது..மச்சினன் (பெண்ணுக்கு அண்ணன்/தம்பி ) இல்லாத வீட்டில் பெண் எடுக்காதே என்று கூட ஒரு சொலவடை உண்டு..அண்ணனோ தம்பியோ இருந்தால்தான் பெண்ணுக்குத் தேவையானதை தகப்பனுக்குப் பிறகு செய்வானாம்..(நான் அறிய இந்த நடைமுறை இன்னமும் மதுரைப்பக்கம் உண்டு..)

60. இம்மைக்கு மேழேழ்பி றவிக்கும் பற்றாவான்

60.இம்மைக்கு மேழேழ்பி றவிக்கும் பற்றாவான்
பாடல் 60:
இம்மைக்கு மேழேழ்பி றவிக்கும் பற்றாவான்
நம்மையு டையவன் நாராய ணன்நம்பி
செம்மை யுடையதி ருக்கையால் தாள்பற்றி
அம்மிமி திக்கக்க னாக்கண்டேன் தோழீநான்

விளக்கம் : 
இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான் - இந்தப் பிறவிக்கும் இன்னும் ஏழு ஏழு பிறவிக்கும் இவனே நமக்குப் புகலிடம் இவன் திருவடிகளே அடைக்கலம்
நம்மை உடையவன் நாராயணன் நம்பி - என்றும் நமக்கானவன் நாராயணன் நம்பி
செம்மை உடைய திருக்கையால் தாள் பற்றி - சிவந்த அவர்தம் திருக் கையால் என் கால்களைப்பற்றி
அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழீ நான் - அம்மி மீது வைத்து அந்த அம்மியை மிதிக்கக் கனாக் கண்டேன் தோழீ நான்

இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும்...இதை எங்கையோ கேட்ட மாதிரி இல்ல..ஆங்...திருப்பாவையில் 29வது பாடல்
சிற்றம் சிறுகாலே சென்றுன்னைச் சேவித்து
உன் பொற்றாமை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக்  கொள்ளாமல் போகாது
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்
உன் தன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட் செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோ எம் பாவாய்
எனக்கு இந்தப் பாடல் மொட்டை மனப்பாடம்..ஏனெனில் மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் நிதம் மார்கழிக் காலை பூஜையில் இதைப் பாடுவார்கள் .அதைக்  கேட்டுக் கேட்டு எப்பொழுது எங்கே பெருமாளைப் பார்த்தாலும் திருப்பாவையின் கடைசி இரண்டு பாடல்களைச் சொல்லிக் கொள்வேன் மனத்திற்குள்..

இப்பாடலின் கருப்பொருள் இந்தப் பிறவியில் மட்டுமல்ல இன்னும் ஏழேழு பிறவிகளுக்கும் நாராயணனே நமக்குப் புகலிடம்..அவனிடமே நம் மனம் சரண் புகும்..நாராயணா உனக்கே உனக்கென்று என் மனத்தினை எழுதி வைத்து விட்டேன்.(யார் யார் என்ன என்ன உயில் எழுதறாங்க ஆண்டாள் என்ன எழுதி வச்சிருக்கா பாருங்க..:) ) எப்பவுமே நான் உனக்குத்தான் ..உன் திருவடிகள் மட்டுமே எனக்குத் தஞ்சம்..இது மட்டுமே என் விருப்பம்..இதைத் தாண்டி மற்ற விருப்பம் ஏதாவது வந்துட்டா அதை நீ திரும்பவும் மாத்திடு :)

 கோதையின் இந்தப் பிடிவாதமும் அழுத்தமும் தான் என்னைக் கவர்ந்தது..தகுதியான ஒன்றின் மீது பற்று வைத்து அதை அடையும் உறுதியும் கொண்டாள்..அவள் கிடைத்தற்கு அரிய கடவுளின் மீது பற்று கொண்டது சரியா தவறா என்ற வாதத்திற்குள் எல்லாம் நாம் போக வேண்டாம்..அவள் காதல் உன்னதமானது..அவள் உறுதி உயர்ந்தது..கண்ணன் கள்வனே ஆனால்  ஒருவனுக்கு மட்டுமே முந்தானை விரிப்பேன் அது கண்ணன் மட்டுமே என்ற உயரிய பண்பாட்டை உலகுக்கு உணர்த்தியவள்..காலம் காலமாக நம் தமிழ்ப் பெண்களின் பிரதிநிதி..

வாங்க இந்தப் பாடலில் என்ன சொல்கிறாள் என்று பார்ப்போம்.. திருப்பாவையில் கொடுத்த அதே உறுதியே இப்பாடலிலும் . இந்தப் பிறவியில் மட்டுமல்லாது இன்னும் ஏழேழு பிறவிக்கும் இந்த நாராயணனே தனக்குத் தஞ்சம் என்கிறாள்..அவள் சொன்னது இன்று உண்மையாகவே ஆகிவிட்டது பாருங்கள் :) எத்தனை பேர் அவளை ஏளனம் செய்திருக்கக்கூடும் கடவுளைக் காதலிக்கிறாள் பித்து பிடித்தவள் நடக்குமா இது அடுக்குமா என்று.. ஆனால் எட்டாம் நூற்றாண்டில் பிறந்த ஆண்டாள் இன்று எத்தனை நூற்றாண்டு கடந்தும் பெருமாளோடு உற்றவளாக உரிமையுடன் நிற்கின்றாள்..அவள் சொன்னது போன்றே ஆகிவிட்டது தானே..உண்மைக் காதலின் வலிமை எத்தகு தன்மை வாய்ந்தது பாருங்கள் :)



நமக்கே உடையவன் என்று உரிமை கொள்கிறாள்..அடியார்க்கு அடியவன் .. சிவந்த தன் திருக் கரங்களால் ஆண்டாளோட காலைப் பிடித்து அம்மி மீது வைக்கின்றாராம்..ஆண்டவனே ஆனாலும் பொண்டாட்டி காலைப் பிடிச்சுத் தான் ஆகணும் பார்த்துக்கிடுங்க :)

அது என்ன செம்மையான திருக்கை..சரண் என்று புகுந்த அடியவருக்கு அருள்  கொடுத்துக் கொடுத்துச் சிவந்த கரங்கள்..ஆகவே அது திருக்கரங்கள்..

ஆமா அம்மி மிதிக்கிற சம்பிரதாயம் எதுக்காம்..? அம்மி போல உறுதியாக இருக்க வேண்டும் வாழ்க்கையில் எந்தப் பிரச்னை வந்தாலும் மன உறுதியுடன் நிதானமாக எதிர்கொள்ள வேண்டும் அதற்காக..

Thursday 7 July 2016

59.வாய்நல்லார் நல்லம றையோதி மந்திரத்தால்

59.வாய்நல்லார் நல்லம றையோதி மந்திரத்தால்
பாடல் :59
வாய்நல்லார் நல்லம றையோதி மந்திரத்தால்
பாசிலை நாணல்ப டுத்துப்ப ரிதிவைத்து
காய்சின மாகளி றன்னானென் கைப்பற்றி
தீவலம் செய்யக்க னாக்கண்டேன் தோழீநான்

விளக்கம் :
வாய் நல்லார் நல்ல மறையோதி மந்திரத்தால் - நன்கு கற்றறிந்த வேதம் ஓதுவதைத் தொழிலாகக் கொண்டவர்கள் நல்ல மறை ஓதி மந்திரத்தால்
பாசு இலை நாணல் படுத்துப் பரிதி வைத்து - தீக்குண்டதைச் சுற்றி பசுமையான நாணலைப் பரப்பி சின்னச்சின்ன மரக் குச்சிகளை அதில் இட்டு
காய் சின மா களிறு அன்னான் என் கைப்பற்றி - கடுங்கோபம் கொண்ட பெரிய யானையைப் போன்ற கண்ணன் என் கையைப் பற்றி
தீவலம் செய்யக் கனாக் கண்டேன் தோழீ நான் - அந்த தீக்குண்டதைச் சுற்றி வர கனவு கண்டேன் நான்

நன்கு கற்றறிந்த மறை ( வேதம் ) ஓதுவது,  வேள்வி செய்வதையே தொழிலாகக் கொண்டவர்கள் , நல்ல மறையோத ,  அந்தச் சடங்குகளுக்குரிய மந்திரங்களைச் சொல்ல , தீ வளர்த்து அந்த தீக்குண்டதைச் சுற்றிப் பசுமையான நாணலைப் பரப்பி , சின்னச்சின்ன மரக் குச்சிகளை அந்தத் தீயிலே இட்டு ,  கடுங்கோபம் கொண்ட யானையைப் போன்ற கம்பீரம் மிக்க  கண்ணன் என் கையைப் பற்றி ,அவர்கள் வளர்த்த அந்தத் தீயைச் சுற்றி வரக் கனவு கண்டேன் நான்..



தந்தை கையால் கண்ணனுக்குத் தாரை வார்க்கப்பட்டு , கண்ணனின் மனைவியானாள் ஆண்டாள்.. திருமணம் முடிந்த கையோட தீவலம் மூன்று முறை வந்தால்தான் அத்திருமணம் முழுமையடைவதாக இந்துத் திருமண சடங்கு உண்டு.. ஆகவேதான் நெருப்பின் சாட்சியாக இவள் தான் என் மனைவி, இவனே தன் கணவன் என்று ஒருவருக்கொருவர் ஒப்பந்தமிட்டுக் கொள்கின்றனர்.. கணவரின் துண்டோடு பெண்ணின் முந்தானையை முடிந்து ஒருவருக்கொருவர் கைப்பிடித்துச் சுற்ற வேண்டும் :)
அது என்ன கடுங்கோபம் கொண்ட யானை ..யானையே கம்பீரம் தான்..ஆனா அமைதியான யானை எனில் யாரும் சீக்கிரம் நெருங்கிரலாம் போலன்னு நீங்க நினைச்சுடக் கூடாது..மதம் பிடித்த கோபம் மிக்க யானையை தூரத்தில் பார்த்தாலே இன்னும் நாலடி தள்ளி நிற்போம்..ஏனெனில் அதன் கெத்து அப்படி..இனிமே இந்தக் கோதைப் பொண்ணு கண்ணனுக்கு உரியவள்..அவளை வேற யாரும் ஏறெடுத்துப் பார்க்கப்பிடாது..அவளை யாரும் கணவன் அற்றவள் என நினைத்து நீங்க சீண்டப்பிடாது.. ஏன் இவளை சைட் கூட அடிக்கப்பிடாது..அவளைப்பற்றி தவறா மனசுல நினைச்சுக் கூடப் பார்க்கப்பிடாது..அப்படி நினைச்சா கோபம் கொண்ட பெரிய யானையைப் போன்றவன் அருகில் இருப்பதை ஒருமுறை பார்த்தாலே போதும்..உங்க தவறான எண்ணங்கள் தவிடுபொடி ஆகிடும்..அவ்ளோ எளிதாக அவளையும் தவறான எண்ணத்தோடு  நீங்க நெருங்கிட முடியாது..காப்பதற்கு காவலன் வந்து விட்டானே..அதான் கணவனைப் புகழ்வது போல , be careful ன்னு மறைமுக எச்சரிக்கை விடுக்கிறாள் ஆண்டாள் :)
எத்தனை பேர் இவள் புலம்புவது வீண் எப்படி அந்தக் கடவுளை அடைய முடியும் என்றெல்லாம் ஏளனம் பேசி இருப்பார்கள்..நல்லாப் பார்த்துக்கிடுங்க..சினம் கொண்ட பெரிய யானையைப் போன்றவன் அவள்  அருகே தான் இருக்கின்றான் :)

Wednesday 6 July 2016

58 மத்தளம் கொட்டவ ரிசங்கம் நின்றூத

58.மத்தளம் கொட்டவ ரிசங்கம் நின்றூத
பாடல் : 58
மத்தளம் கொட்டவ ரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமநி ரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பிம துசூதன் வந்துஎன்னைக்
கைத்தலம் பற்றக்க னாக்கண்டேன் தோழீநான்

விளக்கம் : 
மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத - மத்தளம் கொட்ட வரிகள் நிறைந்த சங்கு நெடுநேரம் ஊத
முத்துடைத் தாம நிரை தாழ்ந்த பந்தல் கீழ் - முத்துக்களை உடைய மாலைகள் வரிசையாய் தொங்க அந்தப் பந்தலின் கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து என்னைக் - என் மச்சான்  நம்பி மதுசூதனன் என்னை வந்து
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான் - என் கைகளைப் பற்ற கனவு கண்டேன் தோழீ நான்

மத்தளம் கொட்ட...கெட்டி மேளம் கெட்டி மேளம் ..வரிசங்கம் நின்றூத..(அந்தக் காலத்தில் சங்கொலி என்பது அனைத்து காரியங்களுக்கும் பயன்பட்டிருக்கின்றது..இன்றுதான் அது கருமாதிக்கு என்றாகி ஒரு குலத்தை தாழ்த்தப் பயன்படுவது வேதனை  ) முத்துக்களை உடைய மாலைகள் வரிசையாய்த் தாழத்தொங்க,  அந்தப் பந்தலின் கீழ் ,அவளின் ஆசை மச்சான் நம்பி மதுசூதனன் கைத்தலம் பற்றக் கனவு கண்டாளாம் கோதை..கல்யாணம் ஆகிடுச்சு :)
Image result for நால் திசை தீர்த்தம் கொணர்ந்து
ஆசைக் கணவன் கைகளைப் பற்றுகையில் வரும் இன்பமே அலாதி..அதை அழகுற இப்பாடலில் சொல்லி இருக்கிறாள் கோதை :)  கற்பனையே எவ்வளவு மங்கலகரமா இருக்கு :) நமது பாரபம்பரியத் தவில், மேளம் நாதஸ்வரம் விடுத்து , செண்ட மேளம் வைத்து பகட்டுக் காட்டுவது இப்ப பரவிகிட்டு வருவது வருத்தம்.. பாரம்பரியம் மிக்க நம் இசை வாத்தியங்களை இசைத்து அங்கே வாரணம் ஆயிரம் பாடல் சொல்லி திருமணம் செய்யுங்களேன்..அதனால் பெறும் மனநிறைவு கோடி பெறும் :)
இந்த மச்சான் என்ற சொல் இப்ப கணவரின் அண்ணன் என்பவரைக் குறிக்க மட்டுமே சொல்லப்படுகிறது.. ஆனா முன்பு கணவரைத் தான் மச்சான் என்று சொல்வார்கள்..அதனால்தான் கோதை மைத்துனன் நம்பி மதுசூதனன் என்கிறாள்..


தகப்பன் பெரியாழ்வார் பெண்ணைத் தாரை வார்த்துக் கொடுக்க அதைப் பெற்றுக் கொண்டு கைப்பிடிக்கிறார் நம்பி எம்பெருமான் மதுசூதனன்.. :) திருமணம் ஆகும்வரை தானப்பா என் பொறுப்பு,  இனி நீதான் என் மகளைப் பார்த்துக் கொள்ள வேணும் என்று மருமகளிடம் இந்தப் பிடிவாத கோதையை ஒப்படைத்து விடுகிறார் பெரியாழ்வார் :)) பின்ன..கட்டுனா கண்ணன் இல்லாட்டி இப்படியே இருந்துடறேன்னு பிடிவாதம் பிடித்த பெண்ணாயிற்றே :)
எனக்கு இந்தப் பாடலில் தீராச் சந்தேகம் ஒன்று நெடுநாளாக இருந்தது.. ஏன் மங்கல நாண் சூட்டுதலைக் கோதை சொல்லவில்லை என.. அடுத்து வரும் குங்குமம் அப்பி பாடலில் மஞ்சனம் ஆட்ட என்பதைத் தான் மங்கல நாண் எனத் தவறாகப் புரிந்து வைத்திருந்தேன்..ஆனால் அதன் பொருள் பின்னாளில் தான் புரிந்தது.. இவ்வளவு சடங்குகளைச் சொல்பவள் ஏன் மங்கல நாண் பூட்டலைப் பற்றிப் பேசவில்லை என்று யோசித்தேன்..ஒருவேளை அந்தக் காலத்தில் மங்கல நாண்  பூட்டும்  வழக்கம் இல்லையா என்ன ?
பனை ஓலைத் தாலி இருந்ததாக சங்கத் தமிழ் சொல்கின்றதே பின்னர் ஏன்?
இங்கு ஒன்று நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது , கோதை சொல்வது முழுக்க இந்துத் திருமணச் சடங்கு.. அதாவது அக்காலத்தில் பிராமணர்களின் சடங்கு.. தமிழர் வழக்கத்தில் தான் தாலி இருந்ததே தவிர , பிராமண வழக்கத்தில் அப்போதைக்கு இல்லை. ஆகவேதான் கோதை இங்கே தாலி பற்றி எதுவும் சொல்லவில்லை. (கோதை பெரியாழ்வார் வீட்டில் வளர்ந்த பெண் என்பதால் இந்துத் திருமணச் சடங்குகள் பற்றித் தெளிந்தவள் )
பின்னாளில் தான் ,அடையாளப் பனை ஓலைத் தாலி பொன் தாலி ஆனது ..

ஆகவே , அவள்  கைத்தலம் பற்றியதாகச் சொல்லியதையே மணம் முடிந்ததாக எடுத்துக் கொள்வோம் :)
மனம் கொண்ட மணாளனைக் கைப்பிடித்தாள் கோதை.. இனி அவள் ஆண்டவனையே ஆண்ட  , ஆளுகின்ற ஆண்டாள்..:)