Wednesday 30 November 2016

101.மழையே மழையே மண்புறம் பூசியுள் ளாய்



101.மழையே மழையே மண்புறம் பூசியுள் ளாய்நின்ற

பாடல் :101
மழையே மழையே மண்புறம் பூசியுள் ளாய்நின்ற
மெழுகூற்றி னாற்போல் ஊற்றுநல் வேங்கடத் துள்நின்ற
அழகப் பிரானார் தம்மையென் நெஞ்சத் தகப்படத்
தழுவநின்றுஎன்னைத் ததர்த்திக்கொண் டூற்றவும் வல்லையே

விளக்கம் :

மழையே மழையே மண்புறம் பூசி உள்ளாய்  நின்ற - மழையே மழையே வெளியே (புறத்தே ) மண் பூசி  உள்ளே நின்ற
மெழுகு ஊற்றினாற்போல்  ஊற்று  - மெழுகு ஊற்றியது போல்  ஊற்றி
நல் வேங்கடத்துள் நின்ற - நலம் செய்யும் வேங்கடத்தில் நின்ற
அழகப் பிரானார் தம்மை என் நெஞ்சகத்து அகப்படத்  தழுவ நின்று - அழகிய பிரான் தன்னை என் நெஞ்சகத்திலே அவரை முழுவதும் ஆரத் தழுவ நின்று அணைக்கும்படி
என்னைத் ததர்த்திக் கொண்டூற்றவும் வல்லையே ! - என்னை அப்படியே நெருக்கிக் கொண்டு  அவரை  ஊற்றவும் வல்லாயோ ?

ததர் - நெருக்கி

இந்தப்  பாடல் பலச் செய்திகளை உள்ளடக்கியது.. மழையிடம்வேண்டிக் கொள்கிறாள் .எப்படி? இதோ கீழே புகைப்படம் பாருங்கள்.. மழைத்துளி பெற்றதும் மண் எப்படி இருக்குனு..அப்படியே மெழுகு மாதிரி இருக்குல்ல.. :) ஆனால் இதுதானா அவள் சொல்ல வந்தது? இல்லை.. உலோகத்தில் சிலை செய்வது பற்றி அறிந்து வைத்திருக்கிறாள்.. பெருமாளின் உலோகச் சிலை செய்யத் தன்னையே மெழுகாக உருக்கித் தர சித்தமாய் இருக்கிறாள்..


மண்ணோடு இணைந்த மழைத்துளி 
MOLD அதாவது ஓர் உருவத்தை மெழுகில் செய்து அதிலே மண் பூசி இறுக்கி , பின்பு ,சூடான  திரவ உலோகத்தை அதிலே ஊற்றுவார்கள்
மண்ணும் மெழுகும் கலந்த mold இல் உலோகம் ஊற்றுதல்

மெழுகு உருகி உலோகம் உருவம் பெற்றதும் ,மண்ணைத் தட்டிவிடுவார்கள் .
Image result

கற்சிற்பம் போல நேரடியாக உலோகத்தில் செய்ய முடியாத காரணத்தினால் இந்த முறை . இவ்வளவு அறிவுடன் இதை அறிந்து வைத்திருந்த பெண்ணாகிலும் காதலும் பிரிவாற்றாமையும் அவளை ஆழ்ந்த துயரத்தில் விட்டுவிட்ட படியால் , இந்த மோசமான வாழ்வில் இருந்து விடுபட,   தானே மெழுகாகி ,அதிலே பெருமாள் என்னும் உலோகத்தை ,ஓர் இடைவெளி இன்றி அவள் மெழுகு உடலில் எந்த  இடமும் விடாம நெருக்கி நெருக்கி   ஊற்றினால்  ,  அவரை என்ஆசை தீரக் கட்டி அணைத்துக் கொள்கிறேன்..
தகிக்கின்ற காதலின் முன்னால் தகிக்கின்ற உலோகத்தின் சூடு பெரிதில்லை. 

பின்னர் அவர் என்னுள் கெட்டிப்பட்டதும் , அன்பின் மழையே நீ பொழிந்து  இந்த மண்ணை  , அதாவது என்னுடைய இந்தத் துன்பவியலான வாழ்வை விலக்கி விடு.  என்னில் இருந்து நலம் மிகும் வேங்கட மலையில் நின்ற வேங்கடவன் வெளியே வரட்டும் .என் ஆவி முழுதும் வேங்கடவன் பரவி , அவன் மீது நானும் விரவி ,சிலையாகி வெளியே வரட்டும்..என்னில் இருந்து அவனே சிலையாகி வெளிப்படட்டும்..(இராமாயணத்தில் அனுமன் நெஞ்சைப் பிளந்ததும் இராமன் தெரிந்தாராம் அதைப் போல இவள் உடைந்தாலும் மண்ணாகிப் போனாலும் இவளில் இருந்து அந்தப் பரமனே வெளியே வருவான் ) 



அவன் வேறு அவள் வேறாக அல்லாமல் அவனே நின்று ஈருடல் ஓர் உயிர் என்பதன்றி ஓருடல் ஈருயிர் ஆகட்டும் ❤❤❤
என் உடலும் உள்ளமும் அவன் ஒருவனுக்கே என்றாகுக ..

இந்த கோதைக்கு ஆண்டாள் எனப் பெயர் வைத்தது யார் ? தீர்க்கதரிசி..

ஆண்டவனையே ஆண்டவள் ஆண்டாள் திருவடிகளே  போற்றி !!!

Thursday 24 November 2016

100.நடமாடித் தோகை விரிக்கின்ற

100.நடமாடித் தோகை விரிக்கின்ற
பாடல் : 100
நடமாடித் தோகை விரிக்கின்ற
மாமயில் காள்உம்மை
நடமாட்டங் காணப் பாவியேன்
 நானோர் முதலிலேன்
குடமாடு கூத்தன் கோவிந்தன்
கோமிறை செய்துஎம்மை
உடைமாடு கொண்டா னுங்களுக்
கினியொன்று போதுமே

விளக்கம் :

நடமாடித் தோகை விரிக்கின்ற மாமயில் காள் - நடனம் ஆடித் தோகை விரிக்கின்ற பெரு மயில்களே
உம்மை  நடமாட்டங் காணப் பாவியேன் - உங்கள் நடனக் களி ஆட்டங்களைக் காண முடியாத பாவியேன்
நானோர் முதல் இலேன் - நான் ஓர் முதல் இல்லாதவள் (முதல் என்பது இங்கே முதலீடு )
குடமாடு கூத்தன் கோவிந்தன் கோ ம் இறை  செய்து - குடம் கொண்டு கூத்தாடிய கோவிந்தன் (அரசன் ) வல்லடியாகக் கவர்ந்து (அரசனுக்குரிய குணங்களின் ஒன்றான வரி விதித்து மக்களிடம் இருந்து வலியப் பெற்றுக் கொள்ளல் )
எம்மை உடைமாடு கொண்டான் - என் உடைமைகளைத் தன் உடைமைகளாக்கிக் கொண்டான்
உங்களுக்கு இனி ஒன்று போதுமே - உங்களுக்கு இனி இந்தக் காரணம் ஒன்று போதுமே உங்கள் ஆட்டத்தை நிறுத்த..

நடனம் ஆடித் தோகை விரிக்கின்ற மயில்களே ! இவ்வளவு அழகான உங்கள் நடனமாட்டங்களைக்  காண முடியாத பாவியாகிப் போனேன்..(ஏனோ மயிலோ இன்ப நடனம் ஆடுகிறது..நானோ மயில் வண்ணன் வராத சோகத்தில் ஆழ்ந்து இருக்கின்றேன் )
முதல் -முதலீடு (investment ) இன்றளவும் முதல் என்றே சொல்வார்கள்..பேச்சுவழக்கில் பல செந்தமிழ்ச் சொற்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன ) வெறும் கையாக இருக்கிறாள்..முதலும் இல்லை பொருளும் இல்லை..(வாழ்வில் எந்தப் பிடிமானமும் இல்லை ) குடம் கொண்டு ஆடும் (தமிழ்க் கூத்து வகைகளில் ஒன்றான குடக் கூத்து ...கரகாட்டமாக இருக்குமோ என நினைக்கிறேன் )

குடக்கூத்து 

 ஆடும் கோ விந்தன் (கோ - அரசன் ) வலிந்து என்னிடம் இருந்து என் உடைமைகளைப் பிடுங்கிக் கொண்டான் என் செல்வங்கள் எல்லாம் அவனுடையதாகி விட்டன (இவளே அவனுடையவளாகத் தானே இருக்க விழைகின்றாள் என்பது வேறு கதை )
Image result
கரகாட்டம் 
உடை மாடு (உடைமைகள் எனும் செல்வம் ..மாடு - மாடு (விலங்கு ) / இடம் (place ) / செல்வம் (treasure /wealth ) மாடல்ல மற்றையவை (குறள் )  ஒரு சொல் பன்மொழி

இதுக்கு முன்ன ஆட்டத்தை நிறுத்தச் சொன்னப்ப ஏன் என உங்களுக்குத் தோன்றி இருக்கலாம்..ஆனா இனி கேட்க மாட்டீங்க தானே இதோ இந்தக் காரணம் உங்களுக்குப் போதுமே ..இனியாவது உங்களது நடனத்தை நிறுத்துங்கள்..

Image result

கண்கள் ஒளி இழந்து ,கை வளைகள் இழந்து ,சரி வளைவுகள் (சாய்ந்த உடல் வளைவுகள் ) இழந்து அழகிழந்து போய் விட்டாள் ..சிரித்த முல்லைப் பற்கள் மூடிக் கொண்டன.. அழகிய கோலம் அலங்கோலம் ஆனது.. ஏற்கனவே வீட்டுக்குள் வந்து வலிந்து வளை கவர்ந்து சென்றவன் எனக் குற்றம் சாட்டி இருக்கிறாள் அல்லவா..இது அதன் தொடர்ச்சி..அதனால்தான் தான் செல்வம் இழந்ததாகவும் அதன்பொருட்டே மயிலை நடனம் ஆட வேண்டாம் என இறைஞ்சுவதாகவும்..

அவன் நினைவுகளையும் அவளையும் தனியாகப் பிரிக்க முடியவில்லை.அவனோடு கற்பனையாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறாள் . கனவு பொய்த்து அது நனவாக மெய்ப்படத்தான் இத்துணைப் போராட்டங்களும்.. குயில்,மேகம்,பூ ,மயில்..இன்னும் என்னவெல்லாமோ  ?:)  அவற்றிடம் தன் வேதனைகளைப் பிதற்றுகிறாள்.. மனிதர்கள் திரும்ப ஏதேனும் சொல்வார்கள்.. இவை எதுவும் திரும்பிப் பேசா.. அது கூட ஒருவகை ஆறுதல் தான்..

யாரோ தன் உடைமைகளைப் பிடுங்கினால் அரசனிடம் முறையிடலாம்..அரசனே பிடுங்குபவன் ஆனால் யாரிடம் சென்று முறையிட..யார் நியாயம் சொல்வார்கள் அவனை எதிர்த்து ? இழந்து நிற்கிறேன்   கேட்பாரும் இல்லை.தனியளாகத்  தவித்து நிற்பவளை ஏளனம் செய்வது போல் உள்ளது  உங்களது நடனம்..
மயில்களே ! சற்றே நிறுத்துங்கள் !



Wednesday 23 November 2016

99.கணமா மயில்காள்

99.கணமா மயில்காள்
பாடல் :99
கணமா மயில்காள் கண்ணபி
ரான்திருக் கோலம்போன்று
அணிமா நடம்பயின் றாடுகின்
றீர்க்கடி வீழ்கின்றேன்
பணமா டரவணைப் பற்பல
காலமும் பள்ளிகொள்
மணவாளர் நம்மை வைத்த
பரிசிது காண்மினே

விளக்கம் :
கணம் மா மயில்காள் கண்ணபிரான் திருக்கோலம் போன்று - திரண்டு இருக்கும்  பெரும்  மயில்களே ..கண்ணபிரான் திருக்கோலம் போன்று இருக்கின்றீர்கள் (கண்ணனின் நிறம் நீலம் மயிலும் அவ்வண்ணமே )
அணிமா நடம் பயின்று ஆடுகின்றீர்க்கு  அடி வீழ்கின்றேன் - அழகாக நடனம் ஆடுகின்றவர்களுக்கு  பாதத்தில் வீழ்கின்றேன் போதும் நிறுத்துங்கள்
பணமாடு அரவணைப் பற்பல காலமும் பள்ளி கொள் மணவாளர் - படம் எடுத்து ஆடும்  பாம்பினைப் பல காலமாகப் படுக்கையாக்கித் தூங்கும் என் மணவாளர்
நம்மை வைத்த பரிசிது காண்மினே - எனக்குக் கொடுத்த வாழ்வு  இதோ உங்கள் பாதத்தில் வீழ்ந்ததுவே தாம் ..நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்

கணம் - கூட்டம் (கணத்தல் - கூடுதல் ,திரள்தல் ) கூட்டமாய்   உலவும் பெரு மயில்களே ! கண்ணபிரான் திருக்கோலம் போன்று இருக்கின்றீர்கள் அவனை மறந்து இங்கே வந்தால் இங்கேயும் அவன் நிறம் கொண்டு நினைவூட்டி விடுகின்றீர்கள்.. ஆனால் என் மனநிலை உங்களுக்குப் புரியவில்லை.. அழகாக நடம் பயின்று ஆடுபவர்களுக்கு நான் சொல்வது என்னவெனில்  உங்கள் பாதம் வீழ்கின்றேன் போதும் நிறுத்துங்கள்!




பணம் (பாம்பின் படம் )  படம் எடுத்து ஆடும் பாம்பினைப் படுக்கையாக்கித் துயிலும் என் மணவாளர் (மாப்பிள்ளை  ) என்னை இப்படி வைத்திருக்கிறார் பாருங்கள்..அவர் கொடுத்த பரிசு இத்துன்பமே..இத்துன்ப வாழ்க்கையே அவர் எனக்குத் தந்தது..உங்கள் அடியில் வீழ வைத்து விட்டார் பாருங்கள்..அவரை நினைத்ததற்கு நல்ல பரிசு இது..

ஓர் அழகிய இள மயில் மற்றொரு மயிலின் காலில் வீழ்ந்து விட்டது :( இந்தக் காதலினால் இன்னும் என்னென்ன இழிநிலைக்குச் செல்லப் போகிறாளோ  இன்னும் எதை எல்லாம் பார்க்கணுமோ ?

Thursday 17 November 2016

98.பாடும் குயில்காள் ஈதென்ன

98.பாடும் குயில்காள் ஈதென்ன
பாடல் :98
பாடும் குயில்காள் ஈதென்ன
 பாடல்நல் வேங்கட
நாடர் நமக்கொரு வாழ்வுதந்
தால்வந்து பாடுமின்
ஆடும் கருளக் கொடியுடை
யார்வந் தருள்செய்து
கூடுவ ராயிடில் கூவிநும்
பாட்டுகள் கேட்டுமே

விளக்கம் :
பாடும் குயில்காள் இது என்ன பாடல் - பாடும் குயில்களே ..இது என்ன பாட்டு
நல் வேங்கட நாடர் நமக்கு ஒரு வாழ்வு தந்தால் வந்து பாடுமின் - நல்ல எனக்கு  நன்மை செய்யக்கூடிய  திருவேங்கட நாட்டினை உடையவன் நமக்கு ஒரு வாழ்வு தந்த பிறகு வந்து பாடுங்கள்
ஆடும் கருளக் கொடி உடையார் வந்து அருள் செய்து - ஆடும் கருளக்கொடி உடையவர் வந்து எமக்கு அருள் செய்து
கூடுவாராயிடில் கூவி நும் பாட்டுகள் கேட்டுமே - என்னைக் கூடுவார் எனில் அப்பொழுது நான் உங்களைக் கூவி அழைக்கிறேன் அப்போ கூவுங்க  உங்கள்பாட்டுகளைக் கேட்கிறேன்

துணையற்ற பொழுதுகளாக என் பொழுதுகள் போய்க் கொண்டிருக்கின்றன..ஆனால் குயில்களே நீங்கள் இங்கு  என்ன பாடிக் கொண்டிருக்கின்றீர்கள்..? எனக்கு நன்மை செய்யக்கூடிய திரு வேங்கட நாடன் எனக்கு ஒரு வாழ்வு தந்த பிறகு அப்பொழுது வந்து பாடுங்கள்..ஆடும் கருடக் கொடி உடையார் வந்து எனக்கு அருள் செய்து என்னைக் கூடுவாராகில் அப்பொழுது நானே உங்களைக் கூவி அழைக்கிறேன்.அன்று வந்து நீங்கள் பாடுங்கள் .(இப்பக் கேட்கும் மனநிலையில் நான் இல்லை..இசை கூட என் காதுகளுக்குப் பேரிரைச்சலாகவே இருக்கின்றது..என்னைப் புரிந்து கொள்ளுங்கள் )

Image result

ஏற்கனவே குயில் விடு தூது செய்தவள்..முதலில் கெஞ்சி இறுதியில் அவரை வரச்சொல்லி கூவாட்டி காட்டை விட்டேத் துரத்தி விடுவேன் என்று மிரட்டியவள் இன்று பிரிவாற்றாமை தாளாது சற்று உன் கூவலை நிறுத்து எனக் கட்டளை இடுகிறாள் எப்பொழுதும் அவன் நினைவிலேயே வாடுபவளுக்கு குயில் கூவுவது கூட இடைஞ்சலாக இருக்கிறது .
கருளக் கொடி - தமிழில் கருளம் சமஸ்கிருதம் சென்று கருட் ஆகித் திரும்ப  கருடனாக வந்தது..  கலுழன் (வெண்மையும் செம்மையும் கலந்த பருந்தினம்..(தமிழ்அகராதியில் படித்தேன் ) 
கலுழன் மேல் வந்து தோன்றினான் - கம்ப இராமாயணம் ) 
முல்லை நிலக் காட்டில் முன் சென்று பருந்து சென்று,  வேட்டை ஆடுவோருக்கு உதவுமாம்..இது பறப்பதை வைத்தே இருக்கும் பொருள் வழி  அறிந்து செல்வார்களாம் 
அடர்ந்த காட்டுக்குள் ஆள் திரட்ட  ஒலி எழுப்பவே சங்கு (ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள (COMMUNICATION  
அடர்ந்த காட்டுக்குள் வேட்டைப் பொருளைத் தாக்கித் திரும்பி வர ஆழி எனப்படும் சக்கரம் (பூமராங் ) (வளரி )
இவை எல்லாம் முல்லை நிலத்தின் பயன்பாட்டுப் பொருட்கள்..ஆகவே தான் முல்லை நிலக் கடவுளான  திருமாலுக்கு உரியவை ஆகின 
ஆண்டாளின் பாடல்களில் நமக்கு எவ்வளவு செய்தி இருக்கிறது பார்த்தீர்களா?

அவனைக் கூடும் போது மட்டுமே குயில்பாட்டு இன்பப் பாட்டாக ஒலிக்கும் ..அப்படி ஓர் இனிய நாள் வரும்போது நானே உங்களைக் கூவி அழைப்பேன் அன்று வந்து பாடுங்கள் 


Wednesday 16 November 2016

97.முல்லைப் பிராட்டி !

97.முல்லைப் பிராட்டி
பாடல் 97
முல்லைப் பிராட்டி நீயுன்
முறுவல்கள் கொண்டுஎம்மை
அல்லல் விளைவியே லாழிநங்
காய் உன்ன  டைக்கலம்
கொல்லை யரக்கியை மூக்கரிந்
திட்ட குமரனார்
சொல்லும் பொய்யானால்
நானும் பிறந்தமை பொய்யன்றே

விளக்கம் :
முல்லைப் பிராட்டி - முல்லைப் பிராட்டியே!
நீ உன் முறுவல்கள் கொண்டு எம்மை அல்லல் விளைவியே - நீ உன் புன்முறுவல்கள் கொண்டு எமக்குத் துன்பம் விளைவிக்காதே
ஆழி நங்காய் உன் அடைக்கலம்  -   சக்கரப் பொறி கொண்ட நங்கையே  உன்னையே அடைக்கலம் எனப் புகுந்தேன்
கொல்லை அரக்கியை மூக்கரிந்திட்ட  - அரக்கி சூர்ப்பனகையின் மூக்கை அரிந்திட்ட
குமரனார் - குமரனார்
சொல்லும் பொய்யானால் - சொல்லும் பொய்யாகிப் போனால்
நானும் பிறந்தமை பொய் அன்றே  - நானும் பிறந்ததும் பொய் ஆகி விடுமே

முல்லைப் பிராட்டியே !  நீ அழகாகப் பூத்துப் புன்முறுவல் செய்கிறாய்..அந்த முறுவல்களைக் கொண்டு எமக்குத் துன்பம் விளைவிக்காதே..(நானே இங்க வருத்ததுல இருக்கேன் ஆனா நீ சிரிப்பது எனக்கு வேதனையைத் தருகிறது உன்னை ரசிக்க முடியல நீ மகிழ்ந்து இருப்பது போல என்னால் மகிழ்ந்து இருக்க முடியல ..அவரோட சேர்ந்து ரசிக்க வேண்டியவற்றை இப்படித் தனியாகப் பார்ப்பது துன்பத்தையே தருகிறது ) பூத்திருக்கும் முல்லைப் பூக்கள் அழகரின் புன் முறுவலை நினைவூட்டி துன்புறுத்துகின்றன போலும்.
Image result for முல்லைப்   பூ
முல்லைப் பூ 

முல்லை என்பது முல்லை நிலத்திற்கான பூ..முல்லை நிலக் கடவுள் மாயோன்..  (மால் ) ஆழி  நங்கை என்ன என்பது பற்றி விசாரித்து அறிந்ததில் அந்த மாயோன் கோட்டங்களில்  முல்லைப் பூக்களைக் குவிச்சுக் கட்டிக் குறி சொல்வதால் முல்லைக் கட்டுவிச்சி.. (ஆழி என்பது முல்லை நில மக்களையும் குறிக்கும் /ஆயுதத்தையும் )  கையில் சக்கரத்தைப் பச்சை குத்தி இருப்பார்களாம் .  முல்லை நிலத்துக்கு உண்டானது இந்தச் சக்கரம்.. (வளரி ) இந்த  முல்லைக் கட்டுவிச்சிகள் இளம்பெண்களைப் பருவ/உடல் மாற்றத்துக்கு ஆற்றுப்படுத்துவார்களாம் .
Related image

அதனால்தான் கோதை ஆழி நங்கையே  உன்னையே அடைக்கலம் புகுந்தேன்.. என்கிறாள்
 சூர்ப்பனகையின் மூக்கை வெட்டிய குமரனார் (இலக்குவன் தானே சூர்ப்பனகையின் மூக்கை வெட்டியது....எனினும்  இவள் ஏன் இராமன் மீது இந்தப் பழியைப் போடுகின்றாள் ? அறியாமல் செய்தாளா... ? அறிவுப் பெண்ணாகிற்றே.. பிறகு ஏன் எப்படி..? இலக்குவனா வந்து , அவர் உன்னை வந்து சேர்வார் எனச் சொல்லி இருப்பார் ? அது பொய்யாகிடுமோ  என அச்சம் கொள்கிறாளா..? இல்லை   இலக்குவனுக்கு அவ்வாறு செய்யச்சொல்லி  ஆணை இட்டது இராமன் என்பதால் நேரடியாக இராமனையே இங்கு குற்றம் சாட்டுகிறாள்..

 பெண்ணாக இருந்தும் துன்பம் செய்ய வந்ததால் அவள் மூக்கை அரிந்தவன் நீ , ஆனால்    இன்று இப்பெண்ணைத் துன்புறுத்துதல் நியாயமா ?இதற்கு என்ன தண்டனை உனக்குத் தருவது? (ஏற்கனவே இரட்டை நாக்கு படைச்சவன் எனத் திட்டி விட்டாள் வேறு ) 

இதையே வேறு பார்வையாக,   துன்பம் தராமல் அடியவர்க்கு நல்லது செய்யும் குமரனாரே, என் குறை தீர்க்காமல் , அடியவருக்கு நல்லதே என்ற உன் சொல்லும் பொய்யாகிப் போனால் பிழை என்று சொல்வதற்காக , சூர்ப்பனகை மூக்கரிந்த  "பழியை" இராமர்  மீது  பழி சுமத்துவதாகவே எடுத்துக் கொள்வோம் :) அவளும் காதல் கைகூடாத வேதனையில் இப்படிச் சீறி வைத்திருக்கிறாள் .



 என்னை வந்து சேர்வேன் என்று சொல்லி விட்டு வராமல் போனால்   நானும் பிறந்தது பொய் ஆகிடுமே (இப்பிறப்பே நான் அவரைச் சேர எடுத்தது..அதுவே நிகழாவிடில் இப்பிறப்பில் யாதொரு பயனும் இல ..வீண்_

"எனையே தந்தேன் உனக்காக
சென்மமே கொண்டேன் அதற்காக "

"வாய் மொழிந்த வார்த்தை யாவும் காற்றில் போனால் நியாயமா
பாய் விரித்து பாவை பார்த்த காதல் இன்பம் மாயமா ..
தேன் நிலவு நான் வாழ ஏன் இந்த சோதனை
வான் நிலவை நீ கேளு கூறுமென் வேதனை

எனைத் தான் அன்பே மறந்தாயோ.."

Tuesday 15 November 2016

96.கோவை மணாட்டி!

96.கோவை மணாட்டி!
பாடல் :96
கோவை மணாட்டி! நீயுன்
கொழுங்கனி கொண்டுஎம்மை
ஆவி தொலைவியேல் வாயழ
கர்தம்மை யஞ்சுதும்
பாவி யேன்தோன்றிப் பாம்பணை
யார்க்கும்தம் பாம்புபோல்
நாவு மிரண்டுள வாய்த்து
நாணிலி யேனுக்கே

விளக்கம் :

கோவை மணாட்டி நீ உன் கொழுங்கனி கொண்டு - கோவை மணாட்டியே !நீ உன் சிவந்த கொழுங்கனிகளைக் கொண்டு
எம்மை ஆவி தொலைவியேல் - என் ஆவியைத் தொலைக்காதே
வாய் அழகர் தம்மை அஞ்சுதும் பாவியேன் தோன்றிப்  -  வாய் அழகானவரின் சிவந்த அதரங்களை நினைவூட்டுகின்றன ..பாவியான நான் பிறந்து
பாம்பணையார்க்கும் தம் பாம்பு போல் - பாம்பினைப் படுக்கையாகக் கொண்டவனுக்கும் தனது பாம்பினைப் போல
நாவும் இரண்டு உள வாய்த்து - இரட்டை நாக்கு வாய்த்து விட்டது போல
நாண் இலியேனுக்கே - ஆனாலும் நான் இன்னமும் அவரையே நினைத்துக்கொண்டு வெட்கமற்றுப் போனேனே

தாயே கோவைக்கொடியே !   நீ உன் சிவந்த திரண்ட கனிகளைக் கொண்டு என் உயிரை வாங்காதே ..அவை வாய் அழகரின் சிவந்த அதரங்களைப்  (இதழ்களை ) போல் தோன்றி அச்சுறுத்துகின்றன  நான் தான் அவரைச் சேர முடியாத பாவியாகப் பிறந்தேன் ..பாம்பினைப் படுக்கையாக்கிக் கொண்டவனுக்கும் தனது பாம்பினைப் போல இரட்டை நாக்கு வாய்த்து விட்டது போல..இல்லாட்டி என்னைச் சேர்வதாகச் சொல்லிட்டு இவ்ளோ நாள் வராம இருப்பாரா ? ஆனாலும் நான் இன்னமும் அவரையே நினைத்துக்கொண்டு வெட்கமற்றுப் போனேனே
Image result
கோவைப்பழம் 
பார்ப்பதில் எல்லாம் அவனுருவம் தெரிந்தால் அவள்தான் பாவம் என் செய்வாள் ? கோவைப்பழம் வேறு சிவந்த அதரங்களை நினைவூட்டி விட்டது.. காமத்தில் தகித்திருக்கும் மனம் வேறு..அப்படியே ஒவ்வொன்றாகத் தொட்டு எங்கு சென்று நிற்கும் எனத் தெரியாதா ?அந்த அச்சம் வேறு பாடாய்ப்படுத்தும் .. ஏன் என் உயிரை வாங்குற..என்று கோபித்துக் கொள்கிறாள்..பெண்ணின் கோபத்திற்குப் பின் மோகமும் உண்டு :)
அடியவர்க்கு அருள் செய்பவன் ஆபத்பாந்தவன் எனப் போற்றப்படுபவன் அவன் இவள் இவ்வளவு உருகியும் வாராது போனால் அவன் பெயர் கெடுமே என்று ஏற்கனவே மிரட்டி விட்டாள்..

அடியவரை  வந்து காப்பேன் என்பது அவன் வாக்கு..அதைச் செயல்படுத்தாமல் போனால் இரண்டாகாதோ நாக்கு.. ?


பாம்பு மேலப் படுத்தவன் தானே அப்ப ரெண்டு நாக்கு இருக்கும் என்று குற்றம் சாட்டுகிறாள்..சொல்றதையும் சொல்லிட்டு அவன் நிறையையும் பாடிட்டு இப்ப அவனைக் குறையும் சொல்லிட்டு இன்னமும் அவர் வரவுக்காக ஏங்கி நிற்பதால் வெட்கமற்றுப் போனேனே எனத் தன்னைத்தானே நொந்தும் கொள்கிறாள்..தன்னைத்தானே தாழ்த்தியும் கொள்கிறாள்..பாவியாகிப் போனேன் என்று..

நாக்கு அவனுக்கு மட்டுமா இரண்டு..இந்தப் பெண்ணுக்கும் மனசு ரெண்டு..வராதப்ப திட்டும் குமுறும்..வந்துட்டா அவ்வளவையும் மறந்துட்டு அவனோடு இழையும்..வராதப்ப பற்றிக்கொண்டு வரும்..வந்து விட்டாலோ அவனையே பற்றிக்கொண்டு இருக்கச் சொல்லும் :) 

ஏன் என்றால்.... அவள் அப்படித்தான்... !

Sunday 13 November 2016

95.மேற்றோன்றிப் பூக்காள்!

95.மேற்றோன்றிப் பூக்காள்
பாடல் : 95
மேற்றோன்றிப் பூக்காள் மேலுல
கங்களின் மீதுபோய்
மேற்றோன்றும் சோதி வேத
முதல்வர் வலங்கையில்
மேற்றோன்று மாழியின் வெஞ்சுடர்
போலச் சுடாது எம்மை
மாற்றோலைப் பட்டவர் கூட்டத்து
வைத்துக்கொள் கிற்றிரே

விளக்கம் :
மேல் தோன்றிப்  பூக்காள் - மரத்திலே    பூத்திருக்கும் மருதாணிப்  பூக்களே !
மேல் உலகங்களின் மீது போய்  - மேல் உலகங்களின் மீது கடந்து  சென்று
மேல் தோன்றும் சோதி வேத முதல்வர் வலது கையில் - அதற்கும் மேலாகத் தோன்றும் ஒளி வடிவமான வேதங்களின் முதல்வர் வலக்கையில்
மேல் தோன்றும் ஆழியின் வெஞ் சுடர் போலச் சுடாது - மீது இருக்கும் சக்கரத்தின் கோபச்சுடர் போல என்னைச் சுடாமல்
எம்மை மாற்று ஓலைப்பட்டவர் -என்னை அவனுக்கு மாற்றோலை எழுதி
கூட்டத்து வைத்துக் கொள் கிற்றிரே  -  என் தலைவனின் கூட்டத்தில் என்னை   வைத்து விடுகிறீர்களா ?

தோன்றிப் பூ - மருத்தோன்றி /மருதாணிப் பூ ..மருதாணி மரங்களின் மேலே பூத்திருக்கும் மருதாணிப் பூக்களே ! (மருதாணிப் பூக்கள் பஞ்சு போன்ற மென்மையானவை..அதனால் அவை மேலே பறப்பது எளிது என்பதால்தான் மேலோகம் போகச் சொன்னாளோ என்னவோ?)

Image result for மருதாணிப்  பூ
மருதாணிப் பூ 
நீங்கள் அப்படியே பறந்து மேல் உலகங்களுக்குப் போய் ,அவற்றையும் கடந்து அதற்கும் மேலாக உள்ள வைகுண்டத்தில் உறைந்துள்ள ஒளி வடிவமான வேதங்களின் முதல்வனின் வலக்கையில் உள்ள சக்கரத்தின் வெஞ்சுடர் (வெஞ்சினம் - கடும் கோபம் ) (தீயவர்களை அழிக்கும் ) போலச் சுடாமல் ,
Image result for chakra of vishnu

எம்மை  மாற்றோலை - ஒரு பொருளின் தரத்துக்கு மாற்றாக எழுதிக் கொடுக்கப்படும் ஓலை (அந்தக்கால ISI -ISO தரச் சான்றிதழ் ) என் தரத்திற்குச் சான்றளித்து ,என் தலைவனின் கூட்டத்தில் என்னையும் கொண்டு வையுங்களேன்
பெருமாளின் கையில் வளரி எனப்படும் ஆழி

இந்த ஆழிச் சக்கரம் பற்றிச் சிறு குறிப்பு :
முல்லை நில மக்களின் ஆயுதம் இந்தச் சக்கரம்..வளரி எனப்படும் .உண்மையில் அரை வட்டமாக இருக்கும்


பூமராங் என்று இன்று அறியப்படும் இந்தச் சக்கரம் எறிந்தால் இலக்கை எட்டி விட்டு  மீள நம் கைக்கே வரும்.. (இதை வைத்துத்தான் புராணப் படங்களில் சக்கரம் எதிரிகளை வீழ்த்திவிட்டு பெருமாளிடமே திரும்பி வருமாறு காட்சி அமைத்திருப்பார்கள் போலும் ) முல்லைநிலம் காடும் காடு சார்ந்த இடங்கள்..அங்கே மரங்கள் அடர்த்தியாக இருக்கும் போது விலக்கிக் கொண்டு போக முடியாது..அதனால் இலக்கைத் தாக்கியப் பின் திரும்ப வரும் ஆயுதம்.. பின்னர் வேட்டை நாய் சென்று வேட்டையாடப் பட்ட பொருளை எடுத்து வருமாம்..ஆகவே இது முல்லை நிலத்துக் கடவுளான மாயோன் கையில் இருக்கும்.

காத்திருக்கும் நாள் அதிகரிக்க அதிகரிக்க இந்தப் பெண்ணுக்குப் பித்துப் பிடித்து விடுகிறது ..இது காரணமோ அது காரணமோ என்ன காரணமோ என என்னவெல்லாமோ யோசிக்க ஆரம்பித்து விடுகிறாள்..நாம் அவருக்குத் தகுதியானவள் தான் என்று தரச் சான்றிதழ் கேட்கிறாள் பூக்களிடம்.. அப்படியேனும் அவர் அடி சென்று சேரத் தடைகள் இராது என எண்ணுகிறாளோ என்னவோ..சரியான தோள்களைச் சென்றடையக் கோதைக்குத் தான் எவ்வளவு தடைகள் ..அந்தக் காலத்தில் பத்தர மாற்றுத் தங்கம் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்..  அப்படியாப்பட்ட பொண்ணுப்பா இது .. ஆனால் பூக்களிடம் இப்படிக் கேட்கும் நிலை கொடிது :(
அவன் தரத்துக்கு தான் சமன் இல்லை என்று எவரும் சொல்லித் திருமணத்தை நிறுத்தி விடக் கூடாது இல்லையா ?

சொல்லுங்கள் மணந்தால் மகாதேவன் இல்லையே மரண தேவன் என்றிருக்கும் இந்தப் பெண்ணின் உறுதி பற்றிச் சொல்லுங்கள் என் தரம் என்னவென அங்கே உணர வையுங்கள் என்கிறாள் கோதை


Thursday 10 November 2016

94.கார்க்கோடல் பூக்காள் !

94.கார்க்கோடல் பூக்காள் !

நாச்சியார் திருமொழி பத்தாம் பத்து இனிதே ஆரம்பம் :) இந்தப் பூவை பூக்களிடம் நியாயம் கேட்கிறாள்

பாடல் : 94
கார்க்கோடல் பூக்காள் ! -
கார்க்கடல் வண்ணனென் மேல்உம்மைப்
போர்க்கோலம் செய்து போர
விடுத்தவ னெங்குற்றான்
ஆர்க்கோ இனிநாம் பூச லிடுவது
 அணிதுழாய்த் தார்க்கோடும் நெஞ்சந்
தன்னைப் படைக்கவல் லேனந்தோ.

விளக்கம் :
கார்க்கோடல் பூக்காள் ! -கருங்காந்தள்  பூக்களே
கார்க்கடல் வண்ணன் என் மேல் உம்மைப் - கருமையான கடலின் வண்ணன்  என்மேல் உங்களைப்
போர்க்கோலம் செய்து போர விடுத்தவன் எங்குற்றான் ? - போர்க்கோலம் செய்து ஏவியவன் எங்கு சென்றான் ?
ஆர்க்கோ இனி நாம் பூசலிடுவது - முறையோ இனி நாம் வழக்காடுவது ?
அணி துழாய்த் தார்க்கு ஓடும்  - அழகிய துளசி  மாலைக்கு ஓடும்
நெஞ்சத் தன்னைப் படைக்க வல்லேன் அந்தோ ? -  நெஞ்சத்தைத் தடுக்க முடியாதவள் ஆகிப் போனேனே அந்தோ..

கருங்காந்தள் பூக்களே ! கருமை நிற கடல் வண்ணன் என் மேல் உங்களைப் போர்க்கோலம் செய்து ஏவியவன் எங்க போனான் ?
Image result

இனி முறையோ நாம் சண்டையிட்டுக் கொள்வது ? அழகிய துளசி மாலைக்காக ஏங்கிச் செல்லும் மனசைக் கட்டுப்படுத்த முடியாத ,அந்த மனசை மாற்றிப் படைக்க வல்லவள் அற்றவளாகப் போனேனே அந்தோ.. ?
Image result

அந்தோ என்பது பரிதாபத்துக்குச் சொல்லப்படும் சொல்..இங்கே சுய கழிவிரக்கம் கொண்டவளாய் ஆனாள் ஆண்டாள்..துளசி மாலை இருக்கும் சுந்தரனின் தோள்களுக்கு ஏங்கியவள் ஆனாள் அதைக் கட்டுப்படுத்த முடியாம,அதை அடக்க வழி தெரியாம ,(அடக்க விருப்பமும் இருக்காது என்பது வேறு விஷயம் :) ) மனசை மாற்றிப் படைக்க வல்லமை இல்லாமப் போனதுக்கு தன்னைத்தானே நொந்து கொள்கின்றாள்..

கருங்காந்தள் பூ..அட..பூவிலும் கருப்பு இருந்திருக்கும் போல..நானும் தேடிப் பார்த்தேன்..செங்காந்தள் இருக்கு..ஏன் வெண்மை நிறம் கூட இருக்கு..ஆண்டாள் பொய் சொல்ல மாட்டாள்..கருங்காந்தளும் இருந்திருக்கக்கூடும்

எதாவது ஒரு கோபத்தில் சலிப்பில் எங்க போய்த் தொலைஞ்ச என்போம்..அது மாதிரித்தான் அந்தப் பூக்களிடம் சொல்கிறாள்..உன்னை என் மேல ஏவி விட்டுப்புட்டு அவன் எங்க போய்த் தொலைஞ்சான்..? எதற்கு இந்த ஒளிஞ்சு விளையாட்டு? இனி நாம வாதிட்டு வழக்காடுவது  முறை ஆகாது (அதாவது என்னாங்குறா..இனிமே டீலிங் எல்லாம் நேரா அவன்கிட்டயே வச்சுக்கறது தான் சரி ங்கறா :))

இவ்வளவு துன்பத்தை எனக்குத் தருகிறானே என மனம் அவனை நினைக்காமலாவது இருக்குதா..அவன்  (துழாய் -துளசி ) துளசி மாலையைப் பார்த்தாப் போதும்..உடனே அத்தனையும் மறந்துட்டு ஈஈஈ ன்னு அங்க போய் உட்கார்ந்துக்குது இந்த மனசு..(கொஞ்சம் கூட வெட்கமில்லை அதுக்கு )அப்படி அலைபாயுற மனசக் கட்டுப்படுத்தற ,மாற்றும் வல்லமையாச்சும் இருக்குதா அதுவும் இல்ல..நான் என்ன செய்வேன் (தலையிலஅடிச்சுக்கறசுமைலி )

நெஞ்சே என் நெஞ்சே செல்லாயோ அவனோடு
சென்றால் வர மாட்டாய் அது தானே பெரும்பாடு..  தன்ன னானன ..தன்ன னானன ..

என்னமோ போடா மாதவா ... !

Sunday 6 November 2016

93.சந்தொடு காரகிலும் சுமந்துதடங் கள்பொருது

93.சந்தொடு காரகிலும் சுமந்துதடங் கள்பொருது
பாடல் :93
சந்தொடு காரகிலும் சுமந்துதடங் கள்பொருது
வந்திழி யும்சிலம்பா றுடைமாலிருஞ் சோலைநின்ற
சுந்தரனை சுரும்பார் குழல்கோதை தொகுத்துரைத்த
செந்தமிழ் பத்தும்வல்லார் திருமாலடி சேர்வர்களே

விளக்கம் :
 சந்தொடு கார் அகிலும் சுமந்து தடங்கள் பொருது - சந்தன மரங்களோடு காரகில் மரங்களும் சுமந்து
வந்திழியும் சிலம்பாறு உடைய மால் இருஞ்சோலை நின்ற - வந்து வழிகளை அழித்துக் கொண்டு பாயும் சிலம்பாறு உடைய , மால் இருஞ்சோலை நின்ற
சுந்தரனை சுரும்பு ஆர்   குழல் கோதை தொகுத்துரைத்த - சுந்தரப் பெருமானை வண்டுகள்  ஆர்க்கும் (மலர்களைச் சூடிய )   கூந்தலை உடைய கோதை தொகுத்து உரைத்த
செந்தமிழ் பத்தும் வல்லார் திருமாலடி சேர்வர்களே - செந்தமிழ்ப் பாடல்கள் பத்தும் பாட வல்லவர்கள் திருமால் அடி சேர்வார்களே

சந்தன மரக் கட்டைகளோடு கார் அகில் மரக்  கட்டைகளையும் சுமந்து வந்து , வழித் தடங்களை  (இதுதான் வழி எனக் கண்டுணர முடியாத அளவுக்கு வரும் வழியையே )     அழித்துக் கொண்டு பாயும் சிலம்பாறு உடைய ,திருமால் இருஞ்சோலை நின்ற சுந்தரனை ,வண்டுகள்  ரீங்காரமிடும் (அவள் தலையில்  வைத்த பூக்களைச் சூழ்கிறதாம் :) ) கூந்தலைக் கொண்ட கோதை தொகுத்து உரைத்த இந்தப் பத்து செந்தமிழ்ப் பாமாலைகளைப் பாட வல்லவர்கள் திருமால் அடி சேர்வார்களே !

அழகர் மலையில் உள்ள திருமாலின் பெயர் சுந்தர ராஜப் பெருமாள்..அதனால்தான் மால் இருஞ்சோலை நின்ற சுந்தரன் என்கிறாள்..ஆண்டு தோறும் வற்றாமல் நீர் விழும்..இப்பாடலின் மூலமே அறிந்தேன் அதன் பெயர் சிலம்பாறு என்று.(இப்ப நூபுர கங்கை எனப் பெயர் மாற்றம் பெற்றுள்ளது ) எப்படிக் கம்பீரமா விழுந்ததோ இந்தக் காட்டாறு..இப்பவும் தண்ணி இருக்கு..ஆனா அடிச்சுக்கிட்டுலாம் பாயல..)
பூக்கள் அவன் நிறங்களை நினைவூட்டுவதாகக் குற்றம் சாட்டி அழகர் மலையில் அழகினை அதன் ஊடேச் சொல்லி , அவற்றைத் தூது விட்டு, புலம்பித் தவித்து விட்டாள் கோதை..

என் வருத்தம் எல்லாம் அழகர் கோயிலில் ஆண்டாள் சன்னதியில் நூறு தடா வேண்டிய பாடல் மட்டுமே இடம் பெற்றுள்ளது..அழகர் மலையானுக்கு என்றே பாடிய பத்து பாடல்களை மட்டுமாவது பொறித்து வைப்பதில் தடை ஏதும் உளதோ ? :(

தற்பொழுது அவளுக்கு என் மனத்தில் மட்டுமே கோயில் கட்டி வைத்திருக்கிறேன்..அவளுக்கு மெய்யாகவும் கோவில் கட்டும் பாக்கியம் கிட்டுமெனில் இந்த 143 பாடல்களையும் சேர்த்தே பொறித்து வைப்பேன் அவள் விரும்பிய பிருந்தாவனம் சூழ..

நாச்சியார் திருமொழி ஒன்பதாம் பத்து இனிதே நிறைவுற்றது :-) 

Thursday 3 November 2016

92.கோங்கல ரும்பொழில்மா லிருஞ்சோலயில்

92.கோங்கல ரும்பொழில்மா லிருஞ்சோலயில்
பாடல் :92
கோங்கல ரும்பொழில்மா லிருஞ்சோலயில் கொன்றைகள்மேல்
தூங்குபொன் மாலைகளோ டுடனாய்நின்று தூங்குகின்றேன்
பூங்கொள் திருமுகத்து மடுத்தூதிய சங்கொலியும் சார்ங்கவில்
நாணொலியும் தலைப்பெய்வதெஞ் ஞான்றுகொலோ

விளக்கம் :
கோங்கு அலரும் பொழில் மால் இருஞ்சோலையில் - கோங்கு மரங்களின் பூக்கள் மலரும்  திருமால் இருக்கும் சோலையில்
கொன்றைகள் மேல் தூங்கு பொன் மாலைகளோடு உடனாய் நின்று தூங்குகின்றேன் -கொன்றை மரங்கள் மேல் தூங்கும் பொன் நிறத்தை ஒத்த மஞ்சள் நிற  மாலைகளோடு சேர்ந்து நின்று நானும் உறங்குகின்றேன்
பூங்கொள் திருமுகத்து மடுத்து ஊதிய சங்கு ஒலியும் சார்ங்கவில் - பூப் போன்று மலர்ந்த  திருமுகத்தில் உள்ள பவள வாயில் ஊதிய சங்கு ஒலியும் சாரங்க வில்லின்
நாண் ஒலியும் தலைப் பெய்வது எஞ்ஞான்று கொலோ - நாண் ஒலியும் நான் கேட்பது எந்நாளோ ?

கோங்கு மரங்கள் பூத்து நிற்கும் திருமால் இருக்கும் சோலையில்
Image result for கோங்கு மரம்
கோங்கு மரப் பூ 


கொன்றை மரங்களின் மேல் சரம் சரமாகத் தொங்கும் பொன் நிறத்தை ஒத்த மஞ்சள் நிற மாலைகளோடு , மாலைகளாகச்  சேர்ந்து நானும் தூங்குகிறேன்.. பூப் போன்ற மலர்ந்தத் திருமுகத்தில் உள்ள பவள வாயில் அமிழ்த்தி ஊதிய சங்கு ஒலியும் சாரங்க வில்லின் நாண் ஒலியும் நான் கேட்கும் நாள்  எந்நாளோ ?

Image result
சரக்கொன்றை 
பார்க்கும் பொருட்களில் எல்லாம் திருமாலையே காண்பவள் , திருமாலின் மஞ்சள் உடை போன்ற   கொன்றை நிறப் பூமாலைகளும் ,கோங்கு மரப் பூக்களும் சூழ , தானும் தூங்குகின்றாள்..

எதற்காக அப்படி? சில நேரம் தலையணையைத் தலைவனாக நினைத்துக் கட்டிக் கொள்வதில்லையா ?
போலவே தலைவனின் உடையை நினைவூட்டும் இப்பூக்களை அருகில் வைத்துக் கொண்டு உறங்குவது அவனையே அணைத்து உறங்கும் ஆறுதலைத் தருகின்றது போலும்..


பூப்போன்று மலர்ந்த திருமுகத்தில் உள்ள பவள வாயில் ,  அமிழ்த்து ஊதிய சங்கொலியும் சாரங்க வில்லில் இருந்து எழும்பும் நாண் ஒலியும்,  தான் கேட்பது எந்நாளோ ?
சங்கொலியும் வில்லின் ஒலியும் கேட்டா அவன் வருவதாகப் பொருள்..அப்படி அவை அவன் வரவை ஒலிக்கும் நாள் எந்நாளோ ?