Wednesday 24 August 2016

74.விண்ணீல மேலாப்பு விரித்தாற்போல் மேகங்காள்

74.விண்ணீல மேலாப்பு விரித்தாற்போல் மேகங்காள்

தலைவனைப் பிரிந்து வாடுகையில்,குயிலைத் தூது விடுவது ,மானைத் தூது விடுவது என எதையேனும் தூது விடுவது தலைவியரின் வழக்கம்..நாம் கடவுளிடம் புலம்புவது போலத்தான் ..நம் இரகசியங்களை வெளியிட மாட்டார்..நம் உணர்வுகளை எள்ளி நகையாட மாட்டார் அதனாலேயே நம் மனத்தை அப்படியே ஒப்புவிக்க இயலும்..ஏதேனும் நல்லது நடந்துடாதா என்ற நப்பாசை..அது போலத்தான் இது போன்ற தூதுகளும்..கண்ணன் ஆழிமழைக் கண்ணன் கார்மேக வண்ணன் அல்லவா..அதனால் மேகத்திடம் தூது சொல்வதும் முறைதானே..நாலு இடம் போகும் வரும் மேகத்திடம் சொல்வது மூலமாக அந்த கண்ணனை எங்கேனும் பார்க்க வாய்ப்புள்ள மேகத்திடம் தன் தவிப்பைச் சொல்வது தானே முறை..அதுதான் நாச்சியார்திருமொழி எட்டாம் பத்து "மேகம் விடு தூது "
பாடல் :74

விண்ணீல மேலாப்பு விரித்தாற்போல் மேகங்காள்
தெண்ணீர்பாய் வேங்கடத்தென் திருமாலும் போந்தானே
கண்ணீர்கள் முலைக்குவட்டில் துளிசோரச் சோர்வேனை
பெண்ணீர்மை யீடழிக்கும் இதுதமக்கோர் பெருமையே?

விளக்கம் :
விண் நீல மேலாப்பு விரித்தாற் போல மேகங்காள் - நீல வானத்தில் போர்வை விரித்தது போன்று தோற்றமளிக்கும் மேகங்களே
தெண்ணீர் பாய் வேங்கடத்து என் திருமாலும் போந்தானே- தெளிந்த நீர் பாயும் வேங்கடத்துக்கு  என் திருமாலும் வந்தாரோ ?
கண்ணீர்கள் முலைக் குவட்டில் துளி சோரச் சோர்வேனை - நான் சிந்தும் என் கண்ணீர்கள்  என் முலை எனும் மலையிலே விழும் சிறு துளி கூட ஆவியாகி விடும் அளவுக்கு   வேதனை கொள்கிறேன்
பெண்ணீர்மை ஈடு அழிக்கும் இது தமக்கோர் பெருமையே ? - என் பெண்மையை சிதைக்கும் இச்செயல் அவருக்குப் பெருமையோ ?


இந்த நீல வானத்தில் ,போர்த்திக் கொள்ளும் போர்வை போலத் தோற்றமளிக்கும் மேகங்களே !

தெளிந்த நீர் பாயும் வேங்கடத்தில் வாழும் என் திருமாலும் வந்தாரோ ?
அவர் அருகில் இல்லாத வேதனையில் நான் சிந்தும் கண்ணீரானது ,என் முலை எனும் மலையில் ( குவடு -மலை ) வெந்து பொழிகின்றன..சோர - உடனே ஆவியாகுதல் ) சில நேரங்களில் கண்ணீர் சுடச்சுட விழுவதை உணர்ந்ததுண்டா.. ?அப்படி விழுந்த மாத்திரத்திலேயே ஆவி ஆகி விடுகிறதாம்..அவ்வளவு தகித்துக் கிடக்கிறது உடல் ..



எனை இவ்வளவு வேதனைக்குள்ளாக்கி ,என் பெண்மையை அழிப்பது அவருக்கொரு பெருமையா ? இது தகுமா அவரின் சிறப்புக்கு இது தகுதி அல்லவே !

கண்ணா ! நீ அணைத்து ,  இவள் காமத் தீ அணைத்து , இவள்தம் உடலினைக் குளிர்விப்பாயாக !

Saturday 20 August 2016

73.பாஞ்சசன் னியத்தைப் பற்பநா பனோடும்

73.பாஞ்சசன் னியத்தைப் பற்பநா பனோடும்
பாடல் :73
பாஞ்சசன் னியத்தைப் பற்பநா பனோடும்
வாய்ந்தபெ ருஞ்சுற்ற மாக்கிய வண்புதுவை
ஏய்ந்தபுகழ்ப் பட்டர்பிரான் கோதைதமி ழீரைந்தும்
ஆய்ந்தேத்த வல்லா ரவரும ணுக்கரே

விளக்கம் :
பாஞ்ச சன்னியத்தைபற்ப  நாபனோடும் - பாஞ்ச சன்னியத்தை பத்ம நாபனோடும்
வாய்ந்த பெரும் சுற்றம் ஆக்கிய வண் புதுவை - பெரும் உறவாக்கிய அழகிய வில்லிபுத்தூரில் பிறந்தவளும்
ஏய்ந்த புகழ்ப் பட்டர்பிரான் கோதை தமிழ் ஈரைந்தும் - நிறைந்த புகழ்பெற்ற பட்டர்பிரான் பெரியாழ்வார் மகள் கோதை சொன்ன இந்தப் பத்து தமிழ்ப் பாமாலையை
ஆய்ந்து ஏத்த வல்லார் அவரும் அணுக்கரே - பொருள் புரிந்து பாட வல்லவர்கள் கண்ணனுக்கு நெருக்கமாவார்கள்


எங்கயோ பிறந்த சங்காகினும் ,கண்ணன் கையில் இருக்கின்ற காரணத்தினாலேயே அதன் சிறப்பைச் சொல்லி அதை அந்த பத்ம நாபனுடன் பெரும் உறவாக்கிய ,அழகிய வில்லிபுத்தூரில் பிறந்தவளும் ,



நிறைந்த புகழ்பெற்ற பெரியாழ்வார் பட்டர்பிரானின் மகளுமான கோதை சொன்ன இந்த பத்து தமிழ்ப் பாடல்களையும் ஆய்ந்து பாட வல்லவர்கள் கண்ணனுக்கு நெருக்கமாவார்கள் ..
உயிரற்ற சங்கு..ஆனால் கண்ணனின் கைகளில் இருப்பதாலேயே அதன் மீது விருப்புற்று, அதன் மீது பொறாமை கொண்டு, சண்டை இட்டு எவ்வளவு காதல் இந்தப் பெண்ணுக்கு..:) 

நாச்சியார் திருமொழி ஏழாம் பத்து இனிதே நிறைவுற்றது :) 

Friday 19 August 2016

72.பதினாறா மாயிரவர் தேவிமார் பார்த்திருப்ப

72.பதினாறா மாயிரவர் தேவிமார் பார்த்திருப்ப
பாடல் :72
பதினாறா மாயிரவர் தேவிமார் பார்த்திருப்ப
மதுவாயில் கொண்டாற்போல் மாதவன்றன்
வாயமுதம் பொதுவாக வுண்பதனைப் புக்குநீ யுண்டக்கால்
சிதையாரோ வுன்னோடு செல்வப்பெ ருஞ்சங்கே

விளக்கம் : 
பதினாறு ஆயிரவர் தேவிமார் பார்த்திருப்ப - பதினாறு ஆயிரம் தேவிமார்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க
மது வாயில் கொண்டாற்போல் மாதவன் தன் - மதுவினை வாயினில் கொண்டவனைப் போல மாதவனின்
வாய் அமுதம் பொதுவாக உண்பதனைப் புக்கு நீ உண்டக்கால் - வாய் அமுதம் என்ற பொதுச் சொத்தை நீ ஒருவனாக  தேனினை உண்பவன் போல நீ உண்டால்
சிதையாரோ உன்னோடு செல்வப் பெரும் சங்கே ! - இதை வேடிக்கை பார்க்கும் பெண்கள் மனம் சிதைந்து போய் நோக மாட்டாரோ ? செல்வம் மிக்க பெரும் சங்கே !

பெரும் செல்வம் கொண்ட சங்கே! பதினாறாயிரம் தேவிமார்களை பார்க்க வச்சுக்கிட்டு தேனினை உண்பவன் போல  , பொதுச் சொத்தான மாதவனின் வாயமுதத்தை நீ ஒருவனே எவருக்கும் பகிராமல் உண்டால் இதைப் பார்க்கும் பெண்களின் மனம் சிதைந்து போகாதோ ? ஒருவரைப் பார்க்க வச்சு , பகிர்ந்து உண்ணாமல்தானாகச் சாப்பிட்டா  வயிறு வலிக்கும் என்ற சொலவடையை ஆண்டாள்தான் கிளப்பி விட்டிருக்கணும் :)


அடேங்கப்பா...! சங்குகிட்ட கண்ணனின் வாய் அமுதம் என்ன மணம் மணக்கும் சொல்லேன் ஆசையாக் கேட்கறேன் என்று நல்லபிள்ளை மாதிரி சமர்த்தாக ஆரம்பித்து , சங்கிற்கு அது இருக்கும் இடம் எவ்வளவு உயர்ந்து எனச் சொல்லி ,அதன் மேன்மையை அதற்கே விளக்கி, அது எவ்வளவு பெரிய செல்வம் பெற்றிருக்கின்றது என்பதை உணர்த்தி ,அதனோடு பிறந்த யாருக்கும் இந்த பாக்கியம் கிடைக்கவில்லை என்பதையும் சொல்லி ,சங்கு மட்டும் எப்பேர்ப்பட்ட புனித தீர்த்தத்தை ஆடுகின்றது என்று மெலிதாகப் பொறாமையை வெளிப்படுத்தி, பிறகு வெளிப்படையாகவே தனக்குக் கிடைக்காத ஒன்றை சங்கு பெற்று மாதவன் கைத்தலத்தில்  வீற்றிருப்பதற்கு சண்டை இட்டு இறுதியில் அந்த மாதவன் வாய் அமுதம் சங்கு உண்பதைப் பார்த்து தன் மனம் சிதைவது வரை அழகாகச் சொல்லி இருக்கின்றாள் ஆண்டாள்..அந்த மாதவனின் வாய் அமுதத்திற்கு எவ்வளவு ஏங்கி இருந்தால் இப்படி அதற்காகவே பத்துப் பாடல்கள் மனதில் உதித்து இருக்கும் ?

சங்கின்பால் உண்டாகின்ற பொறாமையும் தனக்குக்கிடைக்கவில்லையே என்ற ஏக்கமும் அப்பட்டமாக இப்பாடல்களில்  கண்ணன் மீதான காமத்தை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறாள் ஆண்டாள் :)


Tuesday 16 August 2016

71.உண்பது சொல்லிலு லகளந்தான் வாயமுதம்

71.உண்பது சொல்லிலு லகளந்தான் வாயமுதம்
பாடல் :71
உண்பது சொல்லிலு லகளந்தான் வாயமுதம்
கண்படை கொள்ளில்க டல்வண்ணன் கைத்தலத்தே
பெண்படை யாருன்மேல் பெரும்பூசல் சாற்றுகின்றார்
பண்பல செய்கின்றாய் பாஞ்சசன் னியமே

விளக்கம் :
உண்பது சொல்லில் உலகளந்தான் வாய் அமுதம் - நீ உண்பது பற்றிச் சொல்ல வேண்டுமானால் அது உலகளந்தான் வாய் அமுதம்
கண்படை கொள்ளில் கடல் வண்ணன் கைத்தலத்தே - நீ உறங்குவது பற்றிச் சொல்வதென்றால் அது கடல் வண்ணம் கொண்டவன் கைத்தலத்திலே
பெண்படையார் உன்மேல் பெரும்பூசல் சாற்றுகின்றார் - இவ்வாறு நீ செய்வதனால் பெண்கள் கூட்டம் உன் மீது பெரும் குற்றம் சாற்றுகின்றனர் சண்டை போடுகின்றனர்
பண்பு அல செய்கின்றாய் பாஞ்சசன்னியமே ! - இப்பெண்கள் அனுபவிக்க வேண்டியவற்றை நீ ஒருவனே அனுபவிப்பது பண்பு அல்லவே நியாயமற்றதைச் செய்கின்றாய் பாஞ்சசன்னியமே !

பாஞ்சசன்னியமே ! நீ உண்பது பற்றிச் சொல்வதெனில் அது உலகளந்தான் வாயமுதம் ..நீ படுத்துறங்கிக் கொள்ளும் இடம் எதுவெனில் கடல்வண்ணம் கொண்டவன் கைத்தலத்திலே /இதனால் மாதவன் மீது மையல் கொண்ட பெண்கள் கூட்டம் தங்களுக்குக்  கிடைக்கவிடாமல் நீ ஒருவனே இவை யாவையும் அனுபவிப்பதால் உன்மேல் பெரும் குற்றம் சாற்றுகிறார்கள்..சண்டை இடுகிறார்கள் ..இது பண்பற்ற செயல்..இது நியாயமா அடுக்குமா ?


மனசு முழுக்க மாதவன் வாயமுதம் பருகும் சங்கின் மீது இவள் பொறாமை கொண்டுவிட்டு ,தான் ஒரு ஆள் இப்படி நினைப்பதாகச் சொன்னால் ஏதோ சிறுபெண் என்று சங்கு கருதாமல் விட்டுவிடக் கூடும்..அதனால் கூட்டமாக ஆளைச் சேர்த்துக் கொண்டு கவன ஈர்ப்புப் போராட்டம் நடத்துகிறாள் ஆண்டாள் :)
தனக்கு விட்டுக் கொடுக்காமல் , இந்த பாஞ்சசன்னியம் ஒருவனாக எல்லாவற்றையும் அனுபவிப்பது குறித்து உள்ளூர ஏக்கமும் பொறாமையும் கொண்டு குற்றம் சாற்றுகிறாள்.. :)

சொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது :) 


Monday 15 August 2016

70.செங்கமல நாண்மலர்மேல் தேனுகருமன்னம்போல்

70.செங்கமல நாண்மலர்மேல் தேனுகருமன்னம்போல்
பாடல் : 70

செங்கமல நாண்மலர்மேல் தேனுகருமன்னம்போல்
செங்கட்க ருமேனி வாசுதே வனுடய
அங்கைத்த லமேறி அன்னவ சஞ்செய்யும்
சங்கரையா உஞ்செல்வம் சாலவ ழகியதே

விளக்கம் :
செங்கமல நாண்மலர் மேல் தேன்நுகரும்  அன்னம் போல் -  அன்று மலர்ந்த சிவந்த தாமரை மலர் மேல் தேன் நுகரும் அன்னம் போல
செங்கட் கருமேனி வாசுதேவனுடைய - சிவந்த கண்களும் கருத்த மேனியும் கொண்ட வாசுதேவனுடைய
அங்கைத்தலம் ஏறி அன்னவசம்  செய்யும் - அழகிய கைத்தலம் ஏறி அங்கே கண் வளரும்
சங்கு அரையா ! உன் செல்வம் சாலவும் அழகியதே ! - சங்குகளின் தலைவா ! உன் செல்வம் மிகவும் அழகியதே !

புதுசா அன்னிக்குப் பூத்த சிவந்த தாமரை மலர் மேல் தேன் நுகரும் அன்னப்பறவையைப் போல சிவந்த கண்களும் கருத்த மேனியும் கொண்ட


வாசுதேவனுடைய ,அழகிய கைத்தலம் ஏறி ,  சிவந்த இதழ்களில் உள்ள வாய் அமுதத்தைப் பருகி ,அமுதம் உண்ட களைப்பில் அங்கே கண் வளரும் (உறங்குவதை இலக்கியங்கள் பெரும்பாலும் கண் வளர்தல் என்றே கூறுகின்றன கண் மூடுதல் என்பதன் பொருள் எதிர்மறையானது என்பதால் ) சங்குகளின் அரசனே !உனது இந்தச் செல்வம் மிகவும் அழகியதே !


கண்ணனின் சிவந்த இதழ்களை புதிதாய்ப் பூத்த தாமரைப்பூவிற்கு ஒப்பாகவும்,  பளிச்சென்று வெண்மையாக இருக்கும் சங்கை அன்னத்திற்கு  ஒப்பாகவும் கூறுகிறாள் ஆண்டாள் :) கண்ணனின் வாயமுதம் பெரும் போதையாம் ஆதலால்தான் அதை உண்ட மயக்கத்தில் உறக்கம் வருகின்றதாம் :) 
திஸ்ஆண்டாள் இஸ் ட்டூ ரொமாண்டிக் யூ நோ ?:) 

Sunday 14 August 2016

69.போய்த்தீர்த்த மாடாதே நின்றபு ணர்மருதம்

69.போய்த்தீர்த்த மாடாதே நின்றபு ணர்மருதம்
பாடல் : 69
போய்த்தீர்த்த மாடாதே நின்றபு ணர்மருதம்
சாய்த்தீர்த்தான் கைத்தலத்தே யேறிக்கு டிகொண்டு
சேய்த்தீர்த்த  மாய்நின்ற செங்கண்மால் தன்னுடய
வாய்த்தீர்த்தம் பாய்ந்தாட வல்லாய்வ லம்புரியே

விளக்கம் : 
போய்த் தீர்த்தம் ஆடாதே நின்ற புணர்மருதம் - எவ்வளவோ புண்ணிய நதிகள் நாட்டிலே இருக்க அங்கெல்லாம் போய்த் தீர்த்தம் ஆடாமலே , மருத மரமாய் நின்றவர்களைச்
சாய்த் தீர்த்தான் கைத்தலத்தே ஏறிக் குடிகொண்டு - சாய்த்து அவர்களின் சாபம் தீர்த்தவன் கைத் தலத்தில் ஏறிக் குடி கொண்டு
சேய்த் தீர்த்தமாய் நின்ற செங்கண் மால் தன்னுடைய -  இளமையான ,  வேர்க்கும் உடம்புடன்  நின்ற செம்மையான திருமாலுடைய
வாய்த் தீர்த்தம் பாய்ந்தாட வல்லாய் வலம்புரியே ! - வாய்த் தீர்த்தம் உன் மீது படும் அளவுக்கு பாய்ந்து ஆட வல்லமை பெற்றாய் வலம்புரியே !


புண்ணிய நதிகளில் தீர்த்தம் ஆட எல்லாரும் எங்கெங்கோ போகும் போது அங்கெல்லாம் போய்த் தீர்த்தம் ஆடாமலே அதற்காக எந்த ஒரு  சிரமப்படாமலே மருத மரமாய்ச் சாபம் பெற்றவர்களைச் சாய்த்து அவர்களின் சாபம் நீக்கியவனான
( நள குபாரன் மற்றும் மாணிக்ரீவன் என்ற இரட்டையர்கள் (குபேரனின் பிள்ளைகள் ) ஆற்றிலே நிர்வாணமாக பெண்களுடனே குளித்ததால் மரமாய்ப் போகும்படி சாபம் கிடைக்கப் பெற்றனர். கண்ணன் உரலிலே கட்டப்பட்டு இருந்த பொழுது உருண்டு செல்ல அப்பொழுது இடிக்கப்பட்டு சாப விமோசனம் பெற்றவர்கள் இவர்கள்.. ) கண்ணனின் கைத்தலத்தில் நீ ஏறிக் கொண்டு

சேய்மை - இளமை/செம்மை ..கண்ணனின் உடம்பில் துளிர்க்கும் வியர்வை கூட தீர்த்தம் தான்..இளமை கொண்ட , வேர்க்கும் உடம்புடன்  நின்று கொண்டிருந்த அந்தத்  திருமாலின் செம்மையான வாயின்  தீர்த்தம் பெறும் வல்லமை பெற்றாய் வலம்புரியே !
கங்கையோ யமுனையோ மட்டுமே புனிதத் தீர்த்தங்கள் அல்ல..கண்ணனின் உடம்பில் வேர்க்கும் வியர்வையும் அவன் திரு வாய் எச்சில் அமுதமும் கூட புனிதத் தீர்த்தங்களே :) அவன் கைத்தலம் புகுந்து அவன் உடல் வியர்வை தீர்த்தம் பெற்றதோடல்லாமல் அவன் வாய்த் தீர்த்தமும் பெற்ற உன் வல்லமை எத்தகு தன்மை வாய்ந்தது :)
இந்தாம்மா கோதை..ஆனாலும்  உனக்கு இம்புட்டு..இம்புட்டு  இம்புட்டுக் காதல் ஆகாது :) 

Saturday 13 August 2016

68.உன்னோடு டனேயொ ருகடலில் வாழ்வாரை

68.உன்னோடு டனேயொ ருகடலில் வாழ்வாரை
பாடல் :68
உன்னோடு டனேயொ ருகடலில் வாழ்வாரை
இன்னாரி னையாரென் றெண்ணுவா ரில்லைகாண்
மன்னாகி நின்றம துசூதன் வாயமுதம் பன்னாளு
முண்கின்றாய் பாஞ்சசன் னியமே!

விளக்கம் :
உன்னோடு உடனே ஒரு கடலில் வாழ்வாரை - உன்னோடு கூடவே பிறந்த ஒரே கடலில் வாழ்பவர்களை
இன்னார் இனையார் என்று எண்ணுவாரில்லை காண் - இன்னார் என அடையாளம் கண்டு மதிக்க எவரும் நினைப்பதில்லை என்பதைப் பார்
மன்னாகி நின்ற மதுசூதன் வாய் அமுதம் பன்னாளும் - எந்நாளும் நிலைத்து நின்ற மதுசூதனன் வாய் எச்சில் எப்பொழுதும்
உண்கின்றாய் பாஞ்ச சன்னியமே ! - நீ ஒருவன் மட்டுமே உண்கின்றாய் பாஞ்சசன்னியமே !

கடலில் சங்கு மட்டுமா இருக்கு..இன்னும் எத்தனை எத்தனையோ உயிர்கள் வாழ்கின்றன.. ஆனால் அன்பின் பாஞ்சசன்னியமே !உனக்கு மட்டும் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என்பதை அறிவாயா? உன்னோடு பிறந்த உயிர்கள் எவற்றையும் எவரும் இது இன்னார் என்று கண்டு உணர,  சிந்திப்பதில்லை என்பதைக் கண்டாயா ?


ஏனெனில் நீதான் ,என்றும் நிலைத்தப் புகழ்பெற்ற மதுசூதனனின் திருவாய் அமுதம் உண்கின்றாய் அந்தப் பேறு பெற்றவன் . அதனால்தான் உனக்கு மட்டும் இந்தக் கவுரவம் !
ஆண்டாளில் possessiveness ( தன்னுடைமை ) இப்பாடல்களில் அழகாக வெளிப்படுகின்றது.. தான் எதற்காக ஏங்கிக் கிடக்கின்றோமோ அதை வேறொருவர் உரிமையுடன் அனுபவிப்பதை ,  சற்றே பொறாமையுடன் கூறுவது :)

67.சந்திர மண்டலம்போல் தாமோத ரன்கையில்

67.சந்திர மண்டலம்போல் தாமோத ரன்கையில்
பாடல் : 67
சந்திர மண்டலம்போல் தாமோத ரன்கையில்
அந்தர மொன்றின்றி யேறிய வஞ்செவியில்
மந்திரம் கொள்வாயே போலும்வ லம்புரியே
இந்திரனு முன்னோடு செல்வத்துக் கேலானே

விளக்கம் : 
சந்திர மண்டலம் போல் தாமோதரன் கையில் - சந்திர மண்டலம் போல் தாமோதரன் கையில்
அந்தரம் ஒன்று இன்றி ஏறி அவன் செவியில்  - எப்போதும்  அங்கே இருந்து கொண்டு அவனோட காதில்
மந்திரம் கொள்வாயே போலும் வலம் புரியே -  ஏதோ இரகசியம் பேசுவாய் போல  சங்கே
இந்திரனும் உன்னோடு செல்வத்துக்கு ஏலானே  - அந்த இந்திரன் கூட உன்னோட இந்த செல்வத்துக்கு ஈடாக மாட்டான்

வலம்புரிச் சங்கே ! அந்த சந்திர மண்டலம் போல் தாமோதரன் கையில் எப்போதும் அங்கேயே இருந்து கொண்டு ,  அவனது செவியில் ஏதோ அந்தரங்கம்  பேசுவாய் போல .இப்பேர்ப்பட்ட   பாக்கியம் உனக்கு.   செல்வச் சீமானான இந்திரனும் கூட  உன்னுடைய இந்தச் செல்வத்துக்கு  ஈடாக மாட்டான்


கடவுளின் காதருகே வாய்க்கப்பெற்ற பாக்கியம் வேறு எவருக்கும் கிடைக்காது..எப்பேர்ப்பட்ட செல்வந்தனும் வலம்புரிச் சங்கின் இச்செல்வத்துக்கு ஈடாக மாட்டான் என்கிறாள் ஆண்டாள் :) 

Sunday 7 August 2016

66.தடவரை யின்மீதே சரற்கால சந்திரன்

66.தடவரை யின்மீதே சரற்கால சந்திரன்
பாடல் :66
தடவரை யின்மீதே சரற்கால சந்திரன்
இடையுவா வில்வந்தெ ழுந்தாலே போல்நீயும்
வடமதுரை யார்மன்னன் வாசுதே வன்கையில்
குடியேறி வீற்றிருந்தாய் கோலப்பெ ருஞ்சங்கே

விளக்கம் :
தடவரையின் மீதே சரற்கால சந்திரன் - பெரிதாக நின்ற மலையின் மீதே இலையுதிர் கால சந்திரன்
இடை உவாவில் வந்து எழுந்தாலே போல் நீயும் - அந்தப் பெரு மலைகளுக்கு இடையில் வந்து எழுந்தாற் போல நீயும்
வடமதுரையார் மன்னன் வாசுதேவன் கையில் - வடமதுரை மன்னன் வாசுதேவன் கையில்
குடியேறி வீற்றிருந்தாய் கோலப் பெரும் சங்கே ! - குடியேறி வீற்றிருந்தாய் அழகிய  பெரும் சங்கே !

அழகிய பெரும் சங்கே ! பெரியதாக நின்ற மலைகளின் இடையே இலையுதிர் கால சந்திரன்  வந்து எழுந்தாற் போல ..ஆமா அது என்ன இலையுதிர் கால சந்திரன் ? பெரிய மரங்கள் தங்கள் இலைகளை உதிர்த்த பின்பு எந்த இடைஞ்சலும் இன்றி முழு நிலவை நாம் முழுமையாக ரசிக்கலாம்.. அப்படியான முழு நிலவு இரு மலைகளின் இடையே எழுந்தால் எவ்வளவு அழகாக இருக்கும்..அந்த அழகை ஒத்தது போல இருந்ததாம் வடமதுரை மன்னன் கண்ணனின் கைகளில் குடியேறி வீற்றிருந்த சங்கு..



அது என்ன வீற்றிருந்த ? ஏன் அமர்ந்து என்று சொன்னாலே போதாதா? அமர்ந்து என்றால் ரொம்பச் சாதாரணமாக இருக்கும்..ஆனால் வீற்றிருந்து என்ற சொல்லாடல் கம்பீரத்தைக் குறிக்கின்றது..ஒரு இடத்தில் பெருமையுடன் அமர்ந்திருப்பதைக் குறிக்கிறது..அம்மன் கொலு வீற்றிருந்தாள் என்றே தான் சொல்வார்கள்..அதைப் போல இந்த அழகிய சங்கானது அந்தக் கண்ணனின் கைத்தலத்தில் குடியேறி கம்பீரமாக வீற்றிருக்கின்றது :)





Friday 5 August 2016

65.கடலில்பி றந்துக ருதாது பஞ்சசனன்

65.கடலில்பி றந்துகருதாது பஞ்சசனன்
பாடல் :65
கடலில்பி றந்துக ருதாது பஞ்சசனன்
உடலில்வ ளர்ந்துபோ யூழியான் கைத்தலத்
திடரில்கு டியேறித் தீயவ சுரர் நடலைப்ப
டமுழங்கும் தோற்றத்தாய் நற்சங்கே

விளக்கம் : 
கடலில் பிறந்து கருதாது- சங்கே!நீ கடலில் பிறந்தாய் அந்தப் பிறந்த இடத்தையும் மறந்தாய்
 பஞ்சசனன்  உடலில் வளர்ந்து போய் ஊழியான் கைத்தலத்து - பஞ்சசனன் உடலிலே வளர்ந்தாய் இறுதியில் ஊழியான் கைத்தலத்தில்
இடரில் குடியேறித் தீய அசுரர் நடலைப்பட குடியேறி தீமை செய்யும் அசுரர் நடுநடுங்க துன்பப்படும்படி
முழங்கும் தோற்றத்தாய் நற்சங்கே - முழங்கும் தோற்றமுடையவன் ஆனாய் நல்ல சங்கே !

அன்பின் நற்சங்கே !நீ பிறந்ததோ கடலில்..வளர்ந்ததோ பஞ்சசனன் எனும் அரக்கனின் உடம்பில்..ஆனால் இப்படி பிறந்த,வளர்ந்த இடத்தை மறந்துவிட்டு ஆழிமழைக் கண்ணன் அந்த ஊழியானின் கைத்தலத்தில் குடியேறிக் கொண்டு தீமை செய்யும் அசுரர் நடுநடுங்கத்  துன்பப்படும் படி .. இறைவன் வருகிறான் சென்று விடுங்கள் என்று எச்சரிக்கை செய்யும்படி முழங்கும் மேன்மை பெற்ற தோற்றத்தான் ஆனாய்..
எப்பேர்ப்பட்ட மேன்மை இந்தச் சங்குக்கு :)


ஊழி - ஓர் அருமையான தமிழ்ச் சொல்.
சகாப்தம் (ERA )  என்பதற்குப் பதிலாக ஊழிச் சான்றோன் என்று சொல்லவும்.
திருப்பாவையிலும் ஊழி முதல்வன் போல் மெய் கருத்து "என்பாள் ஆண்டாள்.