Thursday 30 June 2016

57 கதிரொளி தீபம்க லசமு டனேந்தி

57.கதிரொளி தீபம்க லசமு டனேந்தி
பாடல் :57
கதிரொளி தீபம்க லசமு டனேந்தி
சதிரிள மங்கையர் தாம்வந்தெ திர்கொள்ள
மதுரையார் மன்ன னடிநிலை தொட்டுஎங்கும்
அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீநான்

விளக்கம் :
கதிரொளி தீபம் கலசமுடன் ஏந்தி - கதிரவனின் ஒளிபோல ஒளி வீசும் தீபங்களையும்பொ ற் கலசங்களையும் ஏந்தி
சதிர் இள மங்கையர் தாம் வந்து எதிர்கொள்ள - அழகிய இளமையான பெண்கள் தாமே முன் வந்து எதிர்கொள்ள
மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டு எங்கும் - வட மதுரை மன்னன் நடப்பதில் அவன் பாதத்தின் அடியில் இருந்த நிலம் எங்கும்
அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான் - அதிருகின்றன..நிலம்  அதிர அவர் நடந்து வந்து மணப் பந்தல் புகுவது போன்று கனவு கண்டேன் தோழீ நான்.

அழகிய இளம் பெண்கள்,  கதிரவனின் ஒளி போன்ற ஒளி வீசும்  திறன்மிக்க தீபங்களையும் பொன் கலசங்களையும் ஏந்தி மாப்பிள்ளையான வட மதுரை மன்னனான கண்ணன் , நிலம் எங்கும் அதிர,  மணப்பந்தலின் உள்ளே புகுவது போன்று கனவு கண்டேன் தோழீ நான்


மாப்பிள்ளை வந்தா அவர் எதிரே போய் அவரை வரவேற்கறது தானே வழக்கம்..ஆலத்தி எடுக்கணும். அதற்கு இளம் பெண்கள் வேணும்..அதான் பொன் குடங்கள் ஏந்தி தீபம் ஏந்தி அவரை வரவேற்கிறார்கள்.. வட மதுரை மன்னன் கண்ணன் காளை ஆகிற்றே..அதனால் அவர் நடையானது,  அவர் வருவதைப் பறைசாற்றும் வகையில் அதிர அதிர நடக்கிறாராம்..அதிர நடந்து வந்து மணப் பந்தல் புகுவது போலக் கனவு கண்டாளாம் கோதை..

இருந்தாலும் அவள் நாயகனுக்கு அவள் கொடுக்கிற பில்டப் BGM லாம் பக்காவா இருக்கு ..பார்த்தீங்களா... :)) 

Wednesday 29 June 2016

56.நாற்றிசைத் தீர்த்தங்கொ ணர்ந்துந னிநல்கி

56.நாற்றிசைத் தீர்த்தங்கொ ணர்ந்துந னிநல்கி
பாடல் :56
நாற்றிசைத் தீர்த்தங்கொ ணர்ந்துந னிநல்கி
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லாரெ டுத்தேத்தி
பூப்புனை கண்ணிப்பு னிதனோ டென்றன்னை
காப்புநாண் கட்டக்க னாக்கண்டேன் தோழீநான்

விளக்கம் : 
நால் திசை தீர்த்தம் கொணர்ந்து நனிநல்கி - நான்கு திசைகளில் இருந்தும் புனித நீர் கொண்டு வந்து அதை நன்றாகத்  தெளித்து
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லார் எடுத்து ஏத்தி - வேதம் ஓதும் அந்தணர்கள் பலர் மந்திரம் சொல்லி
பூப்புனை கண்ணிப் புனிதனோடு என் தன்னை - பல வித பூக்களை மாலைகளாக அணிந்த புனிதனான கண்ணனோடு என்னை இணைத்து
காப்பு நாண் கட்டக் கனாக் கண்டேன் தோழீ நான் - காப்புக்கயிறு கட்ட கனவு கண்டேன் தோழீ நான்

Image result for நால் திசை தீர்த்தம் கொணர்ந்து

நான்கு திசைகளில் இருந்தும் பல புனித நதிகளில் புனித தலங்களில் இருந்தும்  புனித நீர் (தீர்த்தம் ) கொண்டு வரப்பட்டு ,அதை நன்றாக மணமக்கள் மீது தெளித்து , மணம் முடிப்பதற்காக வேள்வி செய்ய வந்த பார்ப்பனர்கள் பலரும் மந்திரங்கள் ஓதி ,

பல விதமான பூக்களைப் புனைந்து (அணிந்து ) வந்த புனிதனான கண்ணனோடு என்னையும் இணைத்து கையில் கங்கணம் எனும் காப்புக் கயிறு கட்ட கனவு கண்டேன் தோழீ நான்..
இந்து மத சடங்கு சம்பிரதாயங்களை ஒவ்வொன்றாகச் சொல்லிப் பாடுகிறாள் கோதை.. மாப்பிள்ளை வந்து பெண் பார்த்து , இதுதான் மாப்பிள்ளை என ஊர் அறிய அவர் வலம் வர , இதுதான் பெண் என்று வீட்டில் இருக்கும் (பெண் திருமணத்திற்கு முன்பு ஊர்வலம் செல்வதில்லை..மணம் முடிந்தபின் கணவரோடு சேர்ந்தே  தான் ) பெண்ணைப் பேசி முடிக்க முப்பத்து முக்கோடி தேவர்களும் வந்து பேசி முடித்து ,புதுப் புடவை கொடுத்து கட்டச் சொல்லி   நாத்தனார் கையால மண மாலை சூட்டியாச்சு..இப்ப தீர்த்தம் தெளிச்சு மந்திரம் சொல்லி கண்ணனோடு சேர்த்து கங்கணம் கட்டியாச்சு..:) 

55.இந்திர னுள்ளிட்ட தேவர்கு ழாமெல்லாம்

55.இந்திர னுள்ளிட்ட தேவர்கு ழாமெல்லாம்
பாடல் :55
இந்திர னுள்ளிட்ட தேவர்கு ழாமெல்லாம்
வந்திருந் தென்னைம கட்பேசி மந்திரித்து
மந்திரக் கோடியு டுத்திம ணமாலை
அந்தரி சூட்டக்க னாக்கண்டேன் தோழீநான்

விளக்கம் : 
இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம் - இந்திரன் உள்ளிட்ட முப்பத்து முக்கோடி  தேவர் கூட்டம்
வந்திருந்து என்னை மகள் பேசி மந்திரித்து - அனைவரும் வந்து விழாவைச் சிறப்பித்து  இதுதான் பெண் என்று பேசி முடிவு செய்து மந்திரம் சொல்லி
மந்திரக் கோடி உடுத்தி - மணப் பெண்ணுக்கு புதுத் துணி உடுத்தி
மணமாலை  அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீ நான் - மாதவனின் தங்கையான துர்க்கை  மணமாலையைச் சூட்டி விடக் கனாக் கண்டேன் தோழீ நான்



மாப்பிள்ளை பெரிய இடம்..சொந்தபந்தம்லாம் நிறைய..பத்தாததுக்கு பவர்புல் ஆள் வேற.. நட்பு ரீதியாகவும் பழகின ஆளுங்க வேற நிறைய..அவரோட திருமணத்துக்கு அவங்கல்லாம் இல்லாட்டி எப்படி..உலகளந்தான் திருமணத்திற்கு உலகமே அல்லோகல்லப்படாம எப்படி..? அதான் முப்பத்து முக்கோடி தேவர்களும் வந்துட்டாங்க . உறுதி செய்தலுக்கு  வந்து இருவீட்டார் சம்மதத்தின் பெயரில் இதுதான் பொண்ணு இதுதான் மாப்பிள்ளைன்னு பேசி


Image result for இந்திரன் உள்ளிட்ட

அவங்க நல்லபடியா வாழ மந்திரம்லாம் சொல்றாங்க . மாப்பிள்ளை வீட்ல இருந்து பொண்ணுக்கு புதுப் புடைவை எடுத்துக் கொடுக்கணும்ல அதுவும் நாத்தனார் கையால கொடுக்கறது தான முறை..அதான் அந்தரி என்ற துர்க்கை மூலமா அவங்க அண்ணியான கோதைக்குக் கொடுத்து உடுத்தி விடறாங்க..அவங்களே பொண்ணுக்கு மணமாலை சூட்டறாங்க..எல்லாம் முறைப்படி பண்ணியாகணும்..இதுல கோதை ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு ஸ்ட்ரிக்ட்டு  ஸ்ட்ரிக்ட்டு :)) ஆனாலும் இந்தத் திருமணங்களில் மாப்பிள்ளைக்குத் தங்கை நாத்தனார் செய்கின்ற அலப்பறைகள் இருக்கே..:) பொண்ணுக்கு எல்லாம் அவங்க கையால தான் கொடுப்பாங்க..தேங்காய் வெத்தலை பாக்கு வச்சு மடி மாத்தி விடுவாங்க...எவ்ளோ வேலை ஷப்பா... :)


Monday 27 June 2016

54.நாளைவ துவைம ணமென்று நாளிட்டு

நாளைவ துவைம ணமென்று நாளிட்டு
பாடல் :54
நாளைவ துவைம ணமென்று நாளிட்டு
பாளைக முகுப ரிசுடைப் பந்தற்கீழ்
கோளரி மாதவன் கோவிந்த னென்பான்ஓர்
காளைபு குதக்க  னாக்கண்டேன் தோழீநான்

விளக்கம் :
நாளை வதுவை மணம் என்று நாளிட்டு - நாளைக்குத் திருமணம் என்று நாள் குறித்து
பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ் - பாக்கு மரப் பட்டைகளால் அழகுறச்  செய்யப்பட்ட  மணப்பந்தலின் கீழ்
கோள் அரி  மாதவன் கோவிந்தன் என்பான் ஓர் - குறிப்பிட்ட அந்த நன்னாளில்  அழகு பொருந்திய  ஒளிமிக்க சிங்கம் போன்றவன் மாதவன் கோவிந்தன் என்ற பெயர் கொண்ட
காளை புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான் - காளை கம்பீரமாகப் புகுவதைப் போலக் கனாக் கண்டேன் தோழீ நான்

இந்தாங்கப்பா இதான் மாப்பிள்ளை நல்லாப் பார்த்துக்கிடுங்க..ரொம்பப் பெரிய இடம்..அதான் பட்டையக் கிளப்பற மாதிரி பந்தாவா தெருவெல்லாம் சுத்தி ஊரறிய பொண்ணு கேட்டு வந்துட்டாரு...


பெரியவங்க இனி என்ன பண்ணனும் திருமணத்துக்கு நாள் குறிக்கனும் .. அதைத்தான் கோதை சொல்றா..நாளைக்குத் திருமணம் என்று நாள் குறிச்சு ,அந்த நன்னாளிலே , பாக்குமரப் பட்டைகளால் அலங்கரிச்சு ,அழகான மணப் பந்தல் போட்டு அதன் கீழே அழகு பொருந்திய மிடுக்குடன் ,ஒளி பொருந்திய  சிங்கம் மாதிரி நரசிம்மன் ,மாதவன் கோவிந்தன் என்ற பெயர்களை உடைய காளை கம்பீரமாகப் புகுவது போன்று கனாக் கண்டேன் தோழீ என்கிறாள்.. காளைன்னா காளை இது சாதாரணக் காளை இல்ல சல்லிக்கட்டு காளை .. யாரும் அவ்ளோ எளிதாகக் கை வைத்து விட முடியாது :))





தன் மன்னன் மாயக் கண்ணன் மாப்பிள்ளையா வரும் அழகை அவள் மனசாரக் கண்டு அதை நம்மிடம் விவரிக்கிறாள்..தோரணம் கட்டினாப் போதுமா..மணப்பந்தல் தானே கல்யாண வீட்டுக்கான அடையாளம்..இன்னார் வீட்டுல கல்யாணம் என்று பறை சாற்றுவதே பந்தக்கால் தானே..தன்னை மணம் முடிக்க வரும் மணாளன்,  வரும் அழகே தனி..பாருங்கப்பா இந்தப் பொண்ணு எங்கயோ சன்னல்கிட்ட நின்னு மாப்பிள்ளை வாரத சைட் அடிச்சிருக்கு :)) 

Sunday 26 June 2016

53. வாரணமாயிரம்

53.வாரண மாயிரம் சூழவலம்செய்து

நாச்சியார் திருமொழி ஆறாம்பத்து இனிதே ஆரம்பம் :) மன்மதனிடம் வேண்டி , எங்கள் சிற்றில் சிதையாதே என்று இறைவனிடமே வேண்டி, உடைகளைத் திருடியவனிடம் கூறைச் சேலை கேட்டு ,தாம் கண்ணனைச் சேருவோமா என்று கூடல் குறி கேட்டு, குயில் விடு தூது வரை வந்தாச்சு..வந்து சேர்ந்தானோ சேரலையோ ஆசைப்பட்டவனோட சேர நிஜத்தில் வேணா தடை இருக்கலாம்..ஆனா கற்பனைக்கும் கனவுக்கும் தடை போட முடியாதில்லையா ? அதான் கண்ணனோட கல்யாணம் ஆனா எப்படி இருக்கும் என்று கனவு காண்கிறாள்..

பெண் பார்ப்பதில் ஆரம்பித்து , கெட்டி மேளம்கொட்டி ,(தாலி மட்டும் கிடையாது.. ஏனெனில் பண்டைய இந்துத்திருமணத்தில் அது வழக்கில் இல்லை . இது ஓர் வரலாற்றுச் சான்று.இங்கு சொல்லப்படுபவை யாவும் இந்துத் திருமண சடங்கு..தமிழர் வழக்கில் பனையோலைத்  தாலி  உண்டு..பின்னாளில் இந்து மதம் தமிழர் வழக்கை தனதாக்கிக் கொண்டது. ஞே ..நாமெல்லாம் இந்து தானே என்பவர்களுக்கு.. தமிழர்களுக்கு மதம் இல்லை வாழ்வியல் முறை மட்டுமே. அந்த அந்த கால கட்டத்தில் வந்த மதங்களை ஏற்றுக் கொண்டார்கள்..பின்னாளில் இந்து மதம் உள்வாங்கிக் கொண்டது. ஆண்டாள் பெரியாழ்வார் வீட்டில் வளர்ந்தவள். ஆகவே அங்கு பின்பற்றப்படும் சடங்குகளை அறிந்தவள்.  )    அம்மி மிதித்து அருந்ததி பார்த்து இந்து மத சடங்குகளை அடிப்படையாக வைத்து கனா காண்கிறாள்.. திருமணம் ஆகாதவர்கள் இந்தப் பதினோரு பாடல்களைப் பாராயணம் செய்தால் திருமண யோகம் கிட்டும் என்பது நம்பிக்கை..நம்பிக்கை இருக்கோ இல்லையோ அவள் கனாக் காணும் அழகைக் கண்டு ரசிக்கவாவது இதைப் படியுங்களேன் :)

தோழியிடம் தன் கனாக்களைப் பகிர்தல் 
பாடல் :53
53.வாரண மாயிரம் சூழவ லம்செய்து
நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான்

விளக்கம் : 

வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து - ஆயிரம் யானைகள் புடை சூழ தெருக்களைச் சுற்றி வந்து
நாரணன் நம்பி நடக்கின்றான் என்று  எதிர் - அந்த நாராயணன் நம்பி நடக்கின்றான் அவரை எதிர்கொண்டு வரவேற்க
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும் - பூரண கும்பமும் பொற்குடம் வைத்து நாற்புறம் எங்கும்
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான் - தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்
 பெண் கேட்டு வாராராம் நாராயணன்..ஆனா மாப்பிள்ளை பெரிய இடமில்லியோ..அதனால  நாலா பக்கமும் தோரணம் கட்டி சும்மா தெருவே களை கட்டி இருக்க,  ஆயிரம் யானைகள் புடை சூழ அவர் கம்பீரமாக தெருக்களைச் சுற்றி வர (எதற்காக தெருக்களை வலம் வரணும்  ஆமா இவர்தான் மாப்பிள்ளைன்னு ஊர் முழுக்கத் தெரிய வேணாமா அதுக்குத்தான் )

யானையில் வலம் வந்து இறங்கி கம்பீரமாக நடந்து வருகிறார் நாராயணன் .அவரை வரவேற்கும் பொருட்டு , பூரண  கும்பம், பொன்னாலான குடத்தோட அவரை எதிர் கொள்கிறார்கள் .பெண் பார்க்க வர்றதுக்கே தோரணம் எல்லாம் தூள் கிளப்புது .வீட்டுல நல்லது நடக்குது என்பதற்கு அடையாளமாக தோரணம் கட்டுவது வழக்கம்.. கோதைக்குக் கல்யாணம்ல..அப்பக்  கண்டிப்பா தோரணம் கட்டியே ஆகணும் :) நடந்து வரும் மாப்பிள்ளைக்கு ஆலத்தி கரைச்சு குங்குமம் வச்சு வரவேற்பது இன்றளவும் உள்ள வழக்கம்.


இப்பாடலில் சொல்லப்பட்ட காட்சியை கற்பனை பண்ணிப் பாருங்க..நினைக்கவே மனசுல மகிழ்ச்சி ஒட்டிக்குதுல்ல :)

பின்ன கல்யாணம் என்றாலே வீடு களை கட்டிடும்ல..இன்னும் இருக்கு அடுத்தடுத்து பாப்போம் :)


















Thursday 23 June 2016

52.விண்ணுற நீண்டடி தாவிய மைந்தனை

52.விண்ணுற நீண்டடி தாவிய மைந்தனை 

பாடல் :52
விண்ணுற நீண்டடி தாவிய மைந்தனை
வேற்கண் மடந்தை விரும்பி
கண்ணுறவென்கடல் வண்ணனைக் கூவு
கருங்குயி லேஎன்ற மாற்றம்
பண்ணுற நான்மறை யோர்புது வைமன்னன்
பட்டர்பி ரான்கோதை சொன்ன
நண்ணுறு வாசக மாலைவல்லார்நமோ நாராய ணாயவென் பாரே

விளக்கம் : 
விண்ணுற நீண்டு அடி தாவிய மைந்தனை - வானம் அளவு நீண்டு அடி தாவிய மைந்தனை
வேற்கண் மடந்தை விரும்பி - வேல் போன்ற கண்களை உடைய பெண் விரும்பி
கண்ணுற என் கடல் வண்ணனைக் கூவு -   தான் பார்த்து   மகிழ நேரில் வந்து சேர என் கடல் வண்ணனை வரக் கூவு
கருங்குயிலே என்ற மாற்றம் பண்ணுற  - கருங்குயிலே என்று பத்துப் பாடல்களைப் பாடினாள்
 நான்மறையோர் புதுவை மன்னன் - நான்கு மறை ஓதுபவர் வில்லிபுத்தூர் மன்னன்
பட்டர்பிரான் கோதை சொன்ன - பெரியாழ்வார் என்ற பட்டர் பிரான் மகள் கோதை சொன்ன
நண்ணுறு வாசக மாலை வல்லார் நமோ நாராயணாய என்போரே -  நன்மை விளைவிக்கும்  இந்தப் பா மாலையைப் பாடுபவர்கள் ,அவன் திருவடிகளில்  நமோ  நாராயணாய என்று கூறும் வல்லமை பெறுவார்

மடந்தை என்பதற்கு அழகான பொருள் உண்டு.. 14-19 வயது கொண்ட டீனேஜ் பெண்களைக் குறிக்கிறது .இளமை,இளமைக்குரிய அழகு ,இளமைக்குரிய மென்மை, அறியாமை குணம் கொண்டவளாம்..காதல் பித்தும் இந்த வயதில் பிடிப்பதும் இயற்கையே. உலகளந்த பெருமானை ,போர் தொடுக்கும் பலம் வாய்ந்த வேல் கொண்ட கண்ணினாள் இந்த மடந்தை கோதை , தான் கண்ணாரப் பார்த்து மகிழும் வண்ணம் அந்தக் கடல் வண்ணனை வரச் சொல்லி,  குயிலிடம்  தூதுப் பாமாலை பாடினாள் .. கண்ணுற என்பது மிக அழகான சொல்..வெறுமனே பார்ப்பது என்ற சொல்  பெரிதாக உணர்த்தி விடாது .ஆனால் கண்ணுற என்பது மனத்தினால் அகம் மகிழ்ந்து ஆசை ஆசையாய் பார்ப்பது , பார்த்துப் பார்த்தும் தீராத அன்பு  கொண்டது.. பார்ப்பதிலேயே மனம் நிறைவு கொள்வது..இத்தனை நாளும் வாழ்ந்ததே இப்படி உன்னைத் தரிசிக்கத்தான் என்று உணர்த்துவது . பார்வையிலேயே தின்பது ..மனசுக்கு நிறைஞ்சவனை கண்ணாரக் காண்பதும் பெரும் காதலே

வேதம் ஓதும் தொழிலைக் கொண்ட வில்லிபுத்தூர் மன்னன் பெரியாழ்வார் என்ற பட்டர்பிரான் மகள்  கோதை சொன்ன இப்பாமாலையை பாட வல்லார்கள் "நமோ நாராயணாய "என்று கூறி என்றும் அவன் திருவடி கிட்டும் அருள்தனைப் பெறுவார்கள் .



காதலினால் , குயில் விடு தூது சொன்ன கோதையின் நாச்சியார் திருமொழி ஐந்தாம் பத்து இனிதே நிறைவுற்றது.. :) 

அடுத்த பத்து மிகப் பிரபலமான "வாரணம் ஆயிரம் " 

51.அன்றுல கம்மளந் தானையுகந்தடி

51.அன்றுல கம்மளந் தானையுகந்தடி
பாடல் :51
அன்றுல கம்மளந் தானையுகந்தடி
மைக்கண வன்வலி செய்ய
தென்றலுந் திங்களு மூடறுத் தென்னை
நலியும் முறைமை யறியேன்
என்றுமிக் காவி லிருந்திருந் தென்னைத்
தகர்த்தாதே நீயும் குயிலே
இன்றுநா ராயண னைவரக் கூவாயேல்
இங்குத்தை நின்றும் துரப்பன்

விளக்கம் : 
அன்று உலகம் அளந்தானை உகந்து - அன்று உலகம் அளந்தவனை மனத்திற்கு உகந்தவனாகக் கொண்டு விரும்பினேன்
அடிமைக்கண் அவன்  செய்ய -  அவனுக்கு அடிமையாய் இருக்கும் பொருட்டு அவனை  விரும்பினால் அவனோ என்னை வந்து சேராமல் எனக்கு வேதனையையேத் தந்தான்
தென்றலும் திங்களும் ஊடு அறுத்து -  தென்றலும், நிலவும் என் உயிரின் ஊடே பிளந்து
என்னை  நலியும் முறைமை அறியேன் - என்னை வதைப்பது என்ன  முறையோ நான் அறியேன்
என்றும் இக்காவில் இருந்து என்னைத் - எப்பொழுதும் இந்தச் சோலையிலே இருந்து
தகர்த்தாதே நீயும் குயிலே என்னை - நீயும் உயிரை வதைக்காதே குயிலே
இன்று நாராயணனை வரக் கூவாயேல் - இன்றே நாராயணனை என்னோடு வந்து இணைய வர நீ கூவாவிடில்
இங்குத்தை நின்றும் துரப்பன் - இங்க இருந்து உன்னை துரத்திடுவேன்  பார்த்துக்க .

அன்று உலகம் அளந்தவனை விரும்பியது மனத்திற்கு உகந்ததாக இருந்தது..அவனுக்கு அடிமையாய் இருக்கும் பொருட்டு விரும்பினால் அவனோ என்னை வந்து சேராமல் எனக்கு வேதனையைத் தந்தான். அவனைப் பிரிந்திருக்கும் இத்தருணத்தில் , அவன் இல்லாத் தனிமையின் வேதனையை இன்னும் கூட்டும் விதமாக தென்றலும் நிலவும் என் உயிரின் ஊடே பிளந்து என்னை வதைப்பது எந்த வகை நியாயம் என்று எனக்குத் தெரியலையே..


ஏற்கனவே இப்படி ஒரு வேதனையில் நான் வாடிக் கொண்டு இருக்கிறேன் இதுல நீ வேற இந்தச் சோலையில்  இங்கேயே இருந்து  கொண்டு கூவி உன் பேடையோடு கூடி மகிழ்ந்து அதைப் போல் என்னாலும் இருக்க முடியவில்லையே என்று நான் வேதனைப்படும்படி என்னைத் துன்புறுத்தாதே ..இன்றே அந்த நாராயணனை   என்னைச் சேர நீ கூவாவிடில் நான் இந்தச் சோலையில் இருந்து உன்னைத் துரத்திடுவேன் பார்த்துக்க



கோபம் வரப் பல காரணங்கள் உண்டு..அதிலே ஒன்று மோகமும் ,  பிரிவாற்றாமையும் .அதை இறக்கி வைக்கத் தகுந்த தோள் அருகே இல்லாத பொழுதில் பித்து பிடிக்கும்..கோதைக்கும் இங்கே அந்நிலை தான்.. பெண்ணுக்கு தொட்டதுக்கெல்லாம் கோபம் வருகிறது என்றால் ஆங்கே கோபம் தொடாததுக்குத்தான் என்றறிக :) அதனால்தான் குயிலிடம் விதம் விதமாக தன் வேதனையைச் சொன்னவள் இறுதியில் நாராயணன் வந்து தொடாத கடுப்பைக் குயிலிடமே காட்டுகிறாள். இன்றே அவரை வரச் சொல்லு இல்லாட்டி இந்தச் சோலையில் இருந்தே உன்னைத் துரத்திடுவேன் என்று வெகுண்டு மிரட்டுகிறாள்..

பூங்காற்று மெதுவாகத் தொட்டாலும் போதும் 
பொன்மேனி நெருப்பாகக் கொதிக்கின்றது 
நீரூற்றிப் பாயாத நிலம் போல  நாளும் 
என் மேனி தரிசாக இருக்கின்றது 
தனிமையிலும் தனிமை கொடுமையிலும் கொடுமை 
இனிமை இல்லா வாழ்வில் எதற்கு இந்த இளமை 

ஏனோ இந்தத் திரைப் பாடல் வரிகள் யாவுமே கோதைக்கு வெகுவாகப் பொருந்திப் போகின்றது..வாலி பெண்ணின் மனத்தைத் தொட்டு எழுதிய நின் பேர் , பார் இருக்கும்வரை வாழி .
சமீபத்தில் டிவிட்டரில் "நச்" என்று ஒரு கவிதை படித்தேன்.

புணர ஆள் இல்லாதவர்களே 
மழை நேரத்தில்  கவிதை எழுதிக்கொண்டு இருக்கிறார்கள் 

நெற்றிப்பொட்டில் அடித்தாற் போன்ற வரிகள்.. மார்கழிக் காலையும் மழை நேரத்து மாலையும் துணையற்றவர்களுக்கு பெரும் சாபம்.இருப்பவர்களுக்கு வரம் :)
போதும் ஓடிடுவோம்..கோதை ஏற்கனவே கண்ணன் இல்லாத கோபத்தில் குயிலைக் கடிந்து கொண்டிருக்கிறாள்..இதிலே நாம் வேறு வெறுப்பேற்ற வேண்டாம்







Friday 17 June 2016

50.பைங்கிளி வண்ணன் சிரீதர னென்பதோர்

50.பைங்கிளி வண்ணன் சிரீதர னென்பதோர் 
பாடல் :50
பைங்கிளி வண்ணன் சிரீதர னென்பதோர்
பாசத் தகப்பட்டி ருந்தேன்
பொங்கொளி வண்டிரைக் கும்பொழில் வாழ்குயி
லே!குறிக் கொண்டிது நீகேள்
சங்கொடு சக்கரத் தான்வரக் கூவுதல்
பொன்வளை கொண்டு தருதல்
இங்குள்ள காவினில் வாழக் கருதில்
இரண்டத்தொன் றேல்திண்ணம் வேண்டும்.

விளக்கம் :

பைங்கிளி வண்ணன் சிரீ தரன் என்பதோர் பாசத்தில் அகப்பட்டிருந்தேன் - பசுமையான கிளி வண்ணம் கொண்ட சிறீதரன் என்பதோர் பாசத்தில் நான் அகப்பட்டிருந்தேன்..
பொங்கும் ஒளி வண்டு இரைக்கும் பொழில் வாழ் குயிலே ! - ஒளிமிக்க வண்டுகள்  ரீங்காரமிடும்  சோலையில் வாழும் குயிலே
குறிக் கொண்டு இது நீ கேள் - நான் சொல்றதைக் கவனமா கேளு
சங்கொடு சக்கரத்தான் வரக் கூவுதல் - சங்கு கூட சேர்த்து சக்கரமும்  வச்சிருக்கறவனை வரக் கூவு
பொன்வளை கொண்டு தருதல் - அல்லது    என் பொன் வளையல்களைத் திருப்பிக் கொடு
இங்குள்ள காவினில் வாழக் கருத்தில் - இங்கு உள்ள சோலையினில் நீ வாழ வேண்டும் எனில்
இரண்டத் தொன்றேல் திண்ணம் வேண்டும்  - இந்த இரண்டில் ஒன்றை நீ உறுதியாகச் செய்தே தீர வேண்டும்..

பசுங்கிளி போன்ற பச்சை நிறத்தவன் ஸ்ரீ தரன்..அவன் மீது பாசம் வைத்து அதிலேயே அகப்பட்டுக் கொண்டேன்.. ஒளிமிகுந்த வண்டுகள் ரீங்காரமிடும் சோலையில் வாழும் குயிலே !


நான் சொல்வதைக் கவனமாகக் கேள்..  (சொல்றதைக் குறிச்சுக்க note it down ..and DO what I say )
சங்குடன் சக்கரமும் வைத்திருப்பவனை வரச் சொல்லிக் கூவு..இல்லையேல்..அவர் என்னைச் சேராத காரணத்தால் மெலிந்ததில் கழண்டு விழுந்த என் பொன் வளையல்களைத் திருப்பிக் கொடு.. இந்தச் சோலையில் நீ வாழனும் என்றால் , நான் சொன்ன இந்த இரண்டில் ஒன்றை நீ உறுதியாகச் செய்தே தீர வேண்டும்...பார்த்துக்க..!


குயிலைக் கெஞ்சி ,  கொஞ்சிப் பார்த்தாச்சு..அடுத்து அதிரடியா மிரட்டல் தான் .. நீ இங்க இருக்கணும்னா அந்த சக்கரத்தான் என்கிட்டே இருக்கணும்..ஒன்னு அவனை வரச் சொல்லு..அல்லது அவன் மீது காதல் அன்றி பச்சைப் பால்முகத்தோடு நான் திரிஞ்சேனே ஒரு காலத்துல..அதே கோதையை திருப்பிக் கொடு..அப்பத்தான்  என்  பொன் வளையல் திரும்பப் போட முடியும்..
காதலனை அவன் இவன் என விளிக்கும் பண்பை ஆரம்பித்தவளே இந்தப் பெண் தான் போல :) ஏதோ அந்தக் கலாசாரம் இப்ப புதுசா வந்த மாதிரி அங்கலாய்க்கறாங்க :)
(இதற்கு திருப்பாவையிலேயே முன் ஜாமீன் பெற்றுக் கொண்டுவிட்டாள் ..சிறுபிள்ளைகள் உன் பேர் அழைத்தால் சீறி அருளாதே..)


Thursday 16 June 2016

49.சார்ங்கம் வளைய வலிக்கும் தடக்கைச்

49.சார்ங்கம் வளைய வலிக்கும் தடக்கைச் 
பாடல் :49
சார்ங்கம் வளைய வலிக்கும் தடக்கைச்
சதுரன் பொருத்த முடையன்
நாங்களெம் மில்லிருந் தொட்டிய கச்சங்கம்
நானு மவனு மறிதும்
தேங்கனி மாம்பொழில் செந்தளிர் கோதும்
சிறுகுயி லேதிரு மாலை
ஆங்கு விரைந்தொல்லை கூகிற்றி யாகில்
அவனைநான் செய்வன காணே

விளக்கம் :
சாரங்கம் வளைய வலிக்கும் தடக்கைச் சதுரன் பொருத்தம் உடையன் - வில்லை வளைத்து இழுக்கும் பலம் பொருந்திய கைகளை உடையவன்
நாங்கள் எம்மில் இருந்து ஒட்டிய கச்சங்கம் - நாங்கள் இருவரும் எங்களுக்குள் செய்து கொண்ட ரகசிய ஒப்பந்தம்
நானும் அவனும் அறிதும் - நானும் அவனும் மட்டுமே அறிவோம்
தேங்கனி மாம்பொழில் செந்தளிர் கோதும் சிறு குயிலே ! - இனிமையான கனிகள் நிறைந்த மாந்தோப்பிலே செம்மையான (சிவப்பான ) தளிர்களைக் கோதும் சிறிய குயிலே !
திருமாலை ஆங்கு விரைந்து ஒல்லை கூகிற்றி ஆகில் - திருமால் இருக்கும் இடம் சென்று அவரை என்னை விரைந்து   வந்து சேரக்  கூவுவாய் எனில்
அவனை நான் செய்வன காணே - அவனை நான் என்ன செய்யறேன்னு மட்டும் பாரு !

வில்லை இழுத்து வளைக்கும் பலம் பொருந்திய கைகளை உடையவன் ,அவனும் நானும் எங்களுக்குள் செய்து கொண்ட ஒப்பந்தம் நானும் அவனுமே அறிவோம். அது எங்களது அந்தரங்கம்:)   இனிமையான கனிகள் நிறைந்த மாந்தோப்பிலே செம்மையான தளிர்களைக் கோதும் சிறிய குயிலே !
என் திருமாலை நான் இருக்கும் இடத்துக்கு விரைந்து வர சீக்கிரம் சென்று நீ சொல்வாய் எனில் ,அவன் வந்த பிறகு நான் அவரை என்னவெல்லாம் செய்யப் போகின்றேன் என்று மட்டும் பார் !



Image result for lord sriram

என்னவர்,  வில்லை சும்மா வளைச்சுப் பிடிச்சா எப்படி இருக்கும் தெரியுமா..அப்படி நிற்பார்..அந்தக் கைகள் அவ்வளவு பலம் பொருந்தியவை....  எவரும் இல்லாத் தனிமையில் அப்படி என்ன இரகசியம் பேசினாளோ அப்பேர்ப்பட்ட காதலனோடு.. என்னதான் குயிலைத் தூது செல்லச்சொன்னாலும் அந்தரங்கம் சொல்ல மறுக்கிறாள் இவ்விடத்தில் :) திடீர்னு வெட்கம் வந்துடுச்சு போல :) செந்தளிரைத் தலை கோதுதாம் குயில்..   யாராவது சேட்டை செஞ்சா டேய்..என் கையில நீ சிக்கின என்ன பண்றேன் பாரு உன்ன..என்று மொழிவோம்..அது போலவே அழகாகச் சொல்கிறாள் கோதை :)
என் மச்சானைப் பார்த்தீங்களா..தேங்கனி மாந்தோப்புல ..குயிலக்கா கொஞ்சம் நீ பார்த்தா சொல்லு..அவர் வந்தாரா காணலியே அவர் வந்தாரா காணலியே 

Saturday 11 June 2016

48.பொங்கிய பாற்கடல் பள்ளிகொள் வானை

48.பொங்கிய பாற்கடல் பள்ளிகொள் வானைப் 
பாடல் :48
பொங்கிய பாற்கடல் பள்ளிகொள் வானைப்
புணர்வதோ ராசயி னால்என்
கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித்
தாவியை யாகுலஞ் செய்யும்
அங்குயி லே!.உனக் கென்ன மறைந்துறைவு
ஆழியும் சங்குமொண் தண்டும்
தங்கிய கையவ னைவரக் கூவில்நீ
சாலத் தருமம் பெறுதி

விளக்கம் :
பொங்கிய பாற்கடல் பள்ளி கொள்வானைப் - பொங்கி எழுந்த பாற்கடலில் அரவணையில் பள்ளி கொண்டு இருப்பவனைப்
புணர்வதோர் ஆசையினால் - கூடல் செய்கின்ற ஆசையினால்
என் கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித்து  - என் முலைகள்
கிளர்ந்து சூடாகி குதூகலம் கொண்டு
ஆவியை  ஆகுலஞ் செய்யும் - என் உயிரைத் துன்புறுத்தும்
அங்குயிலே ! உனக்கென்ன மறைந்து உறைவு - அழகிய குயிலே ! உனக்கென்ன மறைவு வாழ்க்கை வேண்டிக் கிடக்கு
ஆழியும் சங்கு மொண் தண்டும் - சக்கரமும் சங்கும் கதையும்
தங்கிய கையவனை வரக் கூவில் - கையில் கொண்டவனை வரக் கூவுவாய் எனில்
நீ சாலத் தருமம் பெறுதி - உனக்கு ரொம்பப் புண்ணியம் கிடைக்கும்

பொங்கிய பாற்கடலில் பாம்பின் மீது படுத்துறங்கும் திருமாலைப் புணர்கின்ற ஆசையினால் , என் முலைகள் கிளர்ந்து வெப்பமேறி குதூகலம் கொண்டு என் உயிரைத் துன்பம் செய்யும். .




அழகிய குயிலே ! உனக்கென்ன இந்த மறைவு வாழ்க்கை..சங்கும் சக்கரமும் கதையும் தன் கைகளிலே தாங்கியவனை நீ வரக் கூவுவாய் எனில் உனக்கு ரொம்பப் புண்ணியமா போகும்..

என்ன அழகான பேச்சு வழக்கு..எவரிடமாவது நாம் விரும்பிய காரியம் நடந்தே ஆக வேண்டுமெனில் அதுவும் அது அவர்களால் நடக்கக் கூடும் எனில் யப்பா சாமி இதை நீயே செஞ்சுடேன் உனக்குப் புண்ணியமாப் போகும்ன்னு சொல்லுவோம்..அதை இங்கே அழகாகச் சொல்கிறாள் கோதை.. :)
பெண்களின் வேட்கை,  அப்பொழுது அவர்தம் உடலில் ஏற்படும் மாற்றங்களையும் அழகாக வெளிப்படுத்துகின்றாள்..

இதனால் தானோ என்னவோ இந்த நாச்சியார் திருமொழி பிரபலம் ஆக விடாமல் மறைத்து விட்டார்களோ என்றெண்ணுகிறேன்..இன்றளவும் தன் விருப்பத்தை வெளிப்படுத்தும் வெளிப்படையாகப் பேசும் பெண்களை குடும்பப் பெண்களாக பார்க்கத் தவறுகிறார்கள். அது அநாகரிகம் ,பண்பாடு இல்லை  என காலங்காலமாக மரபணுவிலேயே பதியப்பட்டு வருகின்றது . இதனாலேயே வெளிப்படையாகப் பேசும் பெண்களை பெண்களுக்கே பிடிப்பதில்லை. அதே நேரம் வெளிப்படையாகப் பேசுதல் என்பதைத் தவறாகப் புரிந்து கொண்டு புரட்சி செய்கிறேன் பேர்வழிகளையும் எமக்கு அறவே பிடிப்பதில்லை. உள்ளார்ந்த நிமிர்வுக்கும் , அசட்டுத்தனமான கவன ஈர்ப்புக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள்.

ஆனால்ஆண்டாளைப் பிடித்திருக்கிறது. அவள் தன் உணர்வுகளை அழகாகச் சொல்லும்விதம் பிடித்திருக்கின்றது :) இதனாலேயே என் மனத்திற்கு மிக அருகில் வந்து அமர்ந்துகொண்டு விட்டாள்.

பக்தி என்பதைத் தாண்டி கண்ணன் மீதான காதலும் காமமும் வெகு அழகு :)
அவள் பாடல்களைத்  தொடர்ந்து ரசிப்போம் !

Tuesday 7 June 2016

47.எத்திசை யுமம ரர்பணிந் தேத்தும்

47.எத்திசை யுமம ரர்பணிந் தேத்தும் 
பாடல் :47
எத்திசை யுமம ரர்பணிந் தேத்தும்
இருடீகே சன்வலி செய்ய
முத்தன்ன வெண்முறு வற்செய்ய வாயும்
முலையு மழகழிந் தேன்நான்
கொத்தலர் காவில் மணித்தடம் கண்படை
கொள்ளு மிளங்குயி லேஎன்
தத்துவ னைவரக் கூகிற்றி யாகில்
தலையல்லால் கைம்மாறி லேனே

விளக்கம் : 
எத்திசையும் அமரர் பணிந்து ஏத்தும் - எல்லா திசைகளிலும் வானவர்கள் வணங்கும்
இருடீகேசன் வலி செய்ய - ரிஷிகேஷன்  எனக்குக் காட்சி தராமல் என் மனம் வலிக்கச் செய்கிறான்
முத்தன்ன வெண்முறுவல் செய்ய வாயும் - முத்துப் போன்ற வெண்மையான பற்களோடு அழகாக முறுவல் செய்த என் வாயும்
முலையும் அழகு அழிந்தேன் நான் - என் முலைகளும் அழகு அழிந்தேன் நான்
கொத்து அலர் காவில் மணித்தடம் கண்படை - கொத்துக் கொத்தாக மலர்கள் கொண்ட சோலையிலே அழகிய இடம் தன்னில் உறக்கம்
கொள்ளும் இளங்குயிலே - கொள்ளும் இளங்குயிலே
என் தத்துவனை வரக் கூகிற்றி ஆகில் - என் தத்துவனை வரக் கூவுவாய் எனில்
 தலையல்லால் கைம்மாறிலேனே -  காலமெல்லாம் என் தலையை உன் பாதத்தில் வைத்து வணங்குவேன்..இதைத் தவிர வேறு கைம்மாறு எதுவும் அறிந்திலேன்

எல்லா திசைகளிலும் வானவர்கள் பணிந்து வணங்கும் (ரிஷிகேஷன் )  திருமால் எனக்குக் காட்சி தராமல் எனை வந்து சேராமல் என் மனத்தை வலிக்கச் செய்கிறான்..முத்துப் போன்ற வெண்மையான அழகாக புன்முறுவல் செய்த என் வாயும் , என் மார்புகளும் அவனைக் காணாத ஏக்கத்தினால் வந்த வேதனையில் அழகிழந்து போயின. சிரிப்பை மறந்தாள் இந்தப் பாவை. ஆகவே வாய் அழகு இழந்தது. எவனுக்காகப் படைக்கப்பட்டதோ இந்த முலைகள் அவன் தொடாமல் போனதால் பாழாகிப் போயின


பூங்கொத்துக்கள் நிறைந்த சோலையில் அழகியதோர் இடத்தினில் உறக்கம் கொள்ளும் இளங்குயிலே ..என் இறைவனை,  எனைச் சேர வரக் கூவுவாய் எனில் காலம் முழுதும் உன் பாதங்களில் என் தலை வைத்து நன்றியாய் இருப்பதைத் தவிர வேறு கைம்மாறு நான் அறியேன் ..
கோதையின் பாடல்கள் படிக்கப் படிக்க ,அவளுக்காகவே சில பாடல்கள் திரையில் வந்ததாகவே மனத்திற்குப்படுகிறது .

 ராசாவே உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
பொழுதாகிப் போச்சு விளக்கேத்தியாச்சு பொன் மானே உன்னத் தேடுது
ஸ்ரீராமனோட பூமாலை போட வைதேகி உள்ளம் வாடுது 
மங்கை ஒரு கங்கை என மன்னன் ஒரு கண்ணன் என காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன 
அத்தை மகனோ மாமன் மகனோ சொந்தம் எதுவோ பந்தம் எதுவோ 
சந்தித்ததும் சிந்தித்ததும் தித்திட 
அம்மாடி நீதான் இல்லாத நானும் 
வெண்மேகம் வந்து நீந்தாத வானம் 
தாங்காத ஏக்கம் போதும் போதும்..






Monday 6 June 2016

46.மென்னடை யன்னம் பரந்துவிளையாடும்

46.மென்னடை யன்னம் பரந்துவிளையாடும் 
பாடல் :46
மென்னடை யன்னம் பரந்துவிளையாடும்
வில்லிபுத் தூருறை வான்றன்
பொன்னடி காண்பதோ ராசையி னாலென்
பொருகயற் கண்ணிணை துஞ்சா
இன்னடி சிலோடு பாலமு தூட்டி
எடுத்தவென் கோலக் கிளியை
உன்னொடு தோழமை கொள்வன் குயிலே!
உலகளந் தான்வரக் கூவாய்!

விளக்கம் :
மென் நடை அன்னம் பரந்து விளையாடும் - மெல்ல நடக்கும் அன்னம் எல்லா இடங்களிலும் பரந்து விளையாடும்
வில்லி புத்தூர் உறை வான் தன் - வில்லி புத்தூரில் உறைந்துள்ளவன் தன்
பொன்னடி காண்பதோர் ஆசையினால் - பொற்பாதங்கள் காணும் ஓர் ஆசையினால்
என் பொரு கயல் கண்ணினை துஞ்சா - என் மீன் போன்ற கண்கள் தூங்கவில்லை
இன்னடிசிலோடு பால் அமுதூட்டி - இனிமையான அடிசிலோடு (அக்கார அடிசில் ) பால் அமுதும் ஊட்டி
எடுத்த என் கோலக் கிளியை - வளர்த்த என் கோலக் கிளியை
உன்னொடு தோழமை கொள்வன் குயிலே ! - உன்னோடு நட்பாக ஆக்குகிறேன் குயிலே
உலகளந்தான் வரக் கூவாய் ! - உலகளந்தான் வரக் கூவுவாயாக !

மெல்ல மென்மையாக நடக்கும் அன்னம் எல்லா இடங்களிலும் பரந்து (பரவலாக ) விளையாடும் ,  வில்லிபுத்தூரில் உறைந்து இருப்பவன்தன் பொன் திருவடி காண்பதோர் ஆசையினால் , என் மீனை ஒத்த கண்கள் சண்டையிட்டுக் கொண்டு தூங்கவில்லை..இனிமையான அடிசிலோடு (அக்கார அடிசில் எனும் பதார்த்தம்..நெய்யால் செய்யப்படுவது ) பால் அமுதும் ஊட்டி எடுத்து நான் வளர்த்த என் கோலக் கிளியை உன்னோடு தோழமை ஆக்குகிறேன் குயிலே ! உலகளந்தான் வரக் கூவுவாயாக !


ஓவியம் -கேசவ் 
குயிலிடம் கொஞ்சுகிறாள்..என் கிளியை எல்லாம் உனக்கு தோழி ஆக்குகிறேனே அந்த உலகளந்தான் என் உடலையும்  அளக்க வரக் கூவுவாயாக !
எனக்கு இதைச் செய்தா நான் உனக்கு இதைத் தாரேன் என ஆசை காட்டுவது உலக இயல்பு..கோதையும் அதைத்தான் குயிலிடம் சொல்கிறாள் :) 

Friday 3 June 2016

45.என்புரு கியின வேல்நெடுங் கண்கள்

45.என்புரு கியின வேல்நெடுங் கண்கள் 
பாடல் :45
என்புரு கியின வேல்நெடுங் கண்கள்
இமைபொருந் தாபல நாளும்
துன்பக் கடல்புக்கு வைகுந்த னென்பதோர்
தோணி பெறாதுழல் கின்றேன்
அன்புடை யாரைப் பிரிவுறு நோயது
நீயு மறிதி குயிலே
பொன்புரை மேனிக் கருளக் கொடியுடைப்
புண்ணிய னைவரக் கூவாய்

விளக்கம் : 
என்பு உருகியின - என் எலும்புகள் உருகின
வேல் நெடுங் கண்கள் இமை பொருந்தா பல நாளும் - வேலினை ஒத்த நீண்ட என் கண்கள்  இமை மூடவில்லை.
 பல நாளும் துன்பக் கடல் புக்கு - பல நாட்களாகவே துன்பம் எனும் பெருங்கடலில் மூழ்கிக் கொண்டிருக்கிறேன்
வைகுந்தன் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன் - வைகுந்தன் என்பவனே எனக்கு அந்தக் கடலில் இருந்து மீட்கும் தோணியாக வர முடியும். அந்தத் தோணியைப் பெறமாட்டாமல் உழல்கின்றேன்
அன்புடையாரைப் பிரிவுறும் நோய் அது - அன்புக்கு உரியவர்களைப் பிரிந்து வாடும் நோய் பற்றி
நீயும் அறிதி குயிலே - நீயும் அறிந்திருப்பாய் தானே குயிலே!
பொன்புரை மேனிக் கருளக் கொடியுடைப் - பொன்னை ஒத்த மேனி கொண்ட     , கருடனின் கொடி உடைய


புண்ணியனை வரக் கூவுவாய் ! - புண்ணியனை வரக் கூவுவாயாக !

(தோணி -படகு )
என்னவன் வர மாட்டானா என ஏங்கி ஏங்கிப் பசலை நோய் பீடித்து,  என் எலும்புகள் உருகிப் போயின..வேலினை ஒத்த நீண்ட எனது கண்கள் தன் இமைகளை ஒருக்கணமும் மூடவில்லை தூக்கம் பிடிக்காமல்.. பல நாட்களாகவே துன்பம் என்னும் பெருங்கடலில் மூழ்கிக் கொண்டிருக்கின்றேன். அந்தக் கடலில் இருந்து என்னைக் காப்பாற்றும் சக்தி கொண்ட தோணி வைகுந்தன் என்பவனே..அந்த வைகுந்தனைக் காணாமல் வேதனையில் உழன்று கொண்டிருக்கின்றேன்.. அன்புக்கு உரியவரைப் பிரிந்து வாடும் நோயைப் பற்றி நீயும் அறிந்திருப்பாய் தானே குயிலே !




தங்கம் தேங்கிப் போனது போன்ற மேனியை உடையவன் , கருடனின் கொடி கொண்ட புண்ணியனை எனைத் தேடி வரச்சொல்லி கூவுவாயாக !

கண்ணா உனைத் தேடுகிறேன் வா...
காதல் குயில் பாடுகிறேன் வா..
உன்னோடுதான் வாழ்க்கை
உள்ளே ஒரு வேட்கை..
காதல் என்னும் தீரவில்லை..கண்ணீர் இன்னும் ஓயவில்லை..
ஏன் இந்தக் காதல் என்ற எண்ணம் தடை போடுமா..
என் பாடல் கேட்ட பின்பும் இன்னும் பிடிவாதமா..
என்ன நான் சொல்வது இன்று வந்த சோதனை
மௌனமே கொல்வதால் தாங்கவில்லை வேதனை
உன்னைத் தேடி வந்தேன் உண்மை சொல்ல வேண்டும்..
நான் இந்தச் சோகம் கொள்ள நீ தான் காரணம்
ஆண்டாளுக்காகவே ஜானகி  திரையில்பாடி வச்சிருக்காங்க.. (கடைசி வரி மட்டும் நான் மாத்திட்டேன் :) )
ஆண்டாளுக்காக இந்தப் பாடலை இளையராஜா சார்பாக சமர்ப்பணம் செய்வோம் .எங்க சுத்தினாலும் மனசு இறுதியாக ராஜாவிடமே அடைக்கலம் புகுகின்றது ..நம் எல்லா உணர்வுகளுக்கும் அவர் இசையில் ஆறுதல் இருப்பதால்..

Thursday 2 June 2016

44.மாதலி தேர்முன்பு கோல்கொள்ள மாயன்

44.மாதலி தேர்முன்பு கோல்கொள்ள மாயன்
பாடல் 44
மாதலி தேர்முன்பு கோல்கொள்ள மாயன்
இராவணன் மேல் சரமாரி
தாய்தலை யற்றற்று வீழத் தொடுத்த
தலைவன் வரவெங்குங் காணேன்
போதலர் காவில் புதுமணம் நாறப்
பொறிவண்டின் காமரங் கேட்டுஉன்
காதலி யோடுடன் வாழ்குயி லே!என்
 கருமாணிக் கம்வரக் கூவாய்

விளக்கம் : 
 மாதலி தேர் முன்பு கோல் கொள்ள - மாதலி என்பவன் இராமனுக்காக முன்புறமாகத் தேரோட்ட
மாயன் இராவணன் மேல் சரமாரி - மாயம் செய்யும் இராவணன் மீது சரமாரி (விடாமல் அடிப்பது )
தாய் தலை அற்று அற்று வீழத் தொடுத்த - பத்துத்தலை இராவணன் ஒவ்வொரு தலையாக அறுந்து அறுந்து வீழ விடாமல் தொடுத்த
தலைவன் வர எங்கும் காணேன் - என் தலைவன் வர எங்கும் காணேன்..அவர் வரப் பார்க்கலையே
போது அலர்  காவில் புதுமணம் நாற  -  மலரும் பருவத்தில் உள்ள மலர்கள் உள்ள சோலையிலே புதுமணம் கமழ
பொறி வண்டின் காமரம் கேட்டு - உடம்பில் புள்ளிகள் கொண்ட வண்டின் இசைப்பாடல் கேட்டு
உன் காதலியோடு உடன் வாழ் குயிலே !- உன் காதலியுடன் வாழ்கின்ற குயிலே
என் கருமாணிக்கம் வரக் கூவாய் ! -  என் கருநிற மாணிக்கம் வரக் கூவுவாயாக !

மாதலி என்பவன் இந்திரனின் தேரோட்டி..ஆனால் இந்திரன் போரிட்டதே இல்லை..புறமுதுகிட்டு ஓடுபவன்..ஆனால் மாதலி இராமனுக்காக தேரோட்டியாக வந்த பொழுது பின்பக்கமாக ஓடவில்லை..கம்பீரமாக முன்புறம் தேரோட்டினான்.. அதனால்தான் "முன்பு " என்ற சொல்லைப் பயன்படுத்துகிறாள்.. மாயம் செய்யும் இராவணன் மீது சரமாரியாக (அசராமல் அடிப்பது ) அம்பு மழை பொழிய ,  இராவணனது பத்துத் தலை ஒவ்வொன்றாக அறுந்து அறுந்து வீழ வைத்த என் தலைவன் ,   எனைத் தேடி வர எங்கும் காணேன்..தவிப்போடு சொல்கின்றாள்..அவர் வரக் காங்கலையே..



மலரும் பருவத்தில் உள்ள மலர்கள் புதிதாய்ப் பூத்து மணம் கமழும் சோலையில் , புள்ளி வண்டின் இசைப்பாடல் கேட்டு தன் காதலியோடு மகிழ்வோடு வாழும் குயிலே! நீ உன் துணையோடு இருக்கிறாய் அல்லவா..எனக்கும் துணை வேண்டும் ..என் கருமை நிற மாணிக்கம் எனைத் தேடி வரக் கூவுவாயாக !
Image result for பொறிவண்டு


இந்தப் பேதையின் தவிப்பும் வேதனையும் மனதின் அடி ஆழம் வரை எனைத் தாக்குகிறது ..அன்பின் கோதையே..உனை ஆற்றுப்படுத்த உம் தலைவன் விரைவில் வருவான் !