Monday 30 May 2016

43.வெள்ளை விளிசங் கிடங்கையிற்

43.வெள்ளை விளிசங் கிடங்கையிற்
பாடல் :43
வெள்ளை விளிசங் கிடங்கையிற்
கொண்ட விமல னெனக்குருக் காட்டான்
உள்ளம் புகுந்தென்னை நைவித்து நாளும்
உயிர்பெய்து கூத்தாட்டுக் காணும்
கள்ளவிழ் செண்பகப் பூமலர் கோதிக்
களித்திசை பாடுங் குயிலே
மெள்ள விருந்து மிழற்றி
மிழற்றாதென் வேங்கட வன்வரக் கூவாய்

விளக்கம் : 
வெள்ளை விளி சங்கு இடக்கையில் கொண்ட -வெண்மையான சங்கை இடக்கையில் கொண்ட
விமலன் எனக்கு உருக் காட்டான் - விமலன் எனக்கு அவன் உருவத்தைக் காட்ட மாட்டான்
உள்ளம் புகுந்து என்னை நைவித்து நாளும் - என் உள்ளத்தில் புகுந்து என்னை வருத்தி நாள்தோறும்
உயிர் பெய்து கூட்டாட்டுக் காணும் - என்  உயிர் வதைத்து கூத்தாடுவதைக் காண்பான்
கள் அவிழ் செண்பகப்பூ மலர் கோதிக் - கள் (தேன் ) சுரக்கும் செண்பகப்பூ மலர் கோதி
களித்து இசை பாடும் குயிலே - இன்புற்று இசை பாடும் குயிலே
மெள்ள விருந்து மிழற்றி - மெதுவாக இருந்து மழலை மொழி பேசி என் அருகே இருந்து எனை வதைக்காமல்
மிழற்றாது என் வேங்கடவன் வரக் கூவாய் - என் வேங்கடவன் வரக் கூவுவாயாக!
வெள்ளை விளி சங்கு.. விளி என்பது அழைத்தல்..சங்கின் மூலமாக அழைப்பது..விளிக்கப் பயன்படும் சங்கு..வெண்மையான விளி சங்கை இடக்கையில் ஏந்தியவன் விமலன் (பெருமாள் ) எனக்கு அவன் உருவத்தைக் காட்ட மாட்டான்.. இவள் படும் துயரம் கண்டு நேரிலே தோன்றி அவள் காதல் நோய் போக்க மாட்டான். என் மனத்தினுள் புகுந்து , என்னை வருத்தி நாள்தோறும் (EVERYDAY) என் உயிர் இதனால் வதைபடுவதை இப்படிக் கூத்தாடுவதை ரசித்துக் கொண்டிருக்கின்றான்..



கள் சுரக்கும்..பொதுவாக பூக்களில் தேன் சுரக்கும்..அதைத்தான் கோதை குறிப்பிடுகிறாள்..கள் சுரக்கும் செண்பகப்பூ மலர் கோதி ..கோதுதல் என்பது ஓர் அழகான சொல்..வலிக்காமல் தொடுவது சுகமாய்த் தொடுவது..தொட்டு அளைவது :) அப்படி கோதி அதிலே இன்புற்று இசை பாடும் குயிலே!



மெள்ள ..மெல்ல இவ்விரண்டுக்கும் என்ன பொருள்..?
மெல்ல - மென்மையாக..(soft ) மெள்ள - மெதுவாக (slow )
மிழற்றுதல் - குயில் பேசும் மொழி
அதன் ஓசை இப்படி இருக்கிறதாம்..இப்படி மெதுவாக இங்கே மிழற்றிக் கொண்டிருக்கிறாய்..இங்கே மிழற்றாது (இங்க என்ன பேச்சு? என் வேங்கடவனிடம் செல் ) என் வேங்கடவன் முன் சென்று என்னை வந்து சேரச் சொல்லிக் கூவுவாயாக !
கண்ணன் மீதான காதலால் தன் உயிர்படும் வேதனையைக் குயிலிடம் சொல்லி ஆற்றுப்படுத்திக் கொள்கிறாள் கோதை :) 

Thursday 26 May 2016

42.மன்னு பெரும்புகழ் மாதவன்

42.மன்னு பெரும்புகழ் மாதவன்

நாச்சியார் ஐந்தாம்பத்து இனிதே ஆரம்பம் :) மன்மதனை வேண்டியாயிற்று. சிற்றில் சிதைக்காதே என்று கரம் கூப்பி கெஞ்சி ஆயிற்று. ஆய்ச்சியரோடு குருந்த மரத்தின் இடைக் கூறை வைத்து விளையாடாதே என்று கண்டித்தாயிற்று. தான் கண்ணனுடன் சேர்வோமா என்று கூடல் விளையாட்டில் குறி கேட்டாயிற்று..அடுத்து குயில் விடு தூது..ஏதோ மரத்தின் ஊடே தனியே கூவும் குயிலின் குரலில் மென்சோகம் எதுவும் இழையோடக் கண்டாள் போல இந்த கோதை..தன்னைப் போலவே அதற்கும் காதல் நோய் பீடித்து இருக்கக்கூடும் என்று தன் மனம் உணர்ந்து அது தூது சொல்லக் கூடும் என்று குயிலிடம் தூது விடுகிறாள் இப்பேதை..
காதல் வியாதி பொல்லாதது..
அது கண்ணும் காதும் இல்லாதது :)

பாடல் :42
மன்னு பெரும்புகழ் மாதவன் 
மாமணி வண்ணன் மணிமுடி மைந்தன்
தன்னை உகந்தது காரண மாகஎன் 
சங்கிழக் கும்வழக் குண்டே
புன்னை குருக்கத்தி ஞாழல் செருந்திப் 
பொதும்பினில் வாழும் குயிலே
பன்னியெப் போது மிருந்து 
விரைந்தென் பவளவா யன்வரக் கூவாய்

விளக்கம் :
மன்னு பெரும்புகழ் மாதவன்  - நிலைத்த பெரும்புகழுடைய மாதவன் 

மாமணி வண்ணன் மணிமுடி மைந்தன்  தன்னை -  பெருமை கொண்ட மணி வண்ணன் விலைமதிப்பற்ற கற்கள் பதித்த கிரீடம் அணிந்தவனை 
உகந்தது காரணமாக - நான் விரும்பியது காரணமாக
என் சங்கிழக்கும் வழக்குண்டே - என் வளையல்களை இழக்கும் வழக்கு உண்டா ?இது நியாயமா ?
புன்னை குருக்கத்தி ஞாழல் செருந்தி -புன்னை ,குருக்கத்தி,கோங்கு ,செருந்தி போன்ற பல மரங்கள் இருக்கும்
பொதும்பினில் வாழும் குயிலே  - சோலையினில் வாழும் குயிலே
பன்னி எப்போதும் இருந்து - இரவும் பகலும் விடாமல் இருந்து
விரைந்து என் பவளவாயன் வரக் கூவாய் - பவளத்தைப் போன்ற சிவந்த இதழ்களைக் கொண்ட வாயன் சீக்கிரம் வந்து என்னைச் சேர கூவுவாயாக!

நீடித்து நிற்கும் புகழுடைய மாதவன் , பெரும் பெருமை கொண்ட மணி வண்ணன் , மணிமுடி தரித்த மைந்தன் தன்னை , நான் விரும்பிய ஒரே காரணத்திற்காக என் சங்கு வளையல்களை இழப்பது நியாயமா இது வழக்கில் (நடைமுறையில் எங்கேனும் கண்டதுண்டா ) ( அக்காலத்தில் சங்கிலே செய்த வளையல்களை அணியும் பழக்கம் பெண்களுக்கு இருந்தது..) அடுக்குமா ? (எதனால் வளையல்களை இழக்கிறாளாம் ..பின்னே தன் தலைவனை நினைந்து நினைந்து உருகுகையில் அவன் சேராத வேதனையில் உடல் மெலிகிறது..மெலிந்த மேனியில் இருந்த வளையல்கள் தாமே கழன்று விழுகின்றன ) புன்னை,  குருக்கத்தி,  கோங்கு , செருந்தி போன்ற பல மரங்கள் இருக்கின்ற சோலையில் வாழும் குயிலே , இரவும் பகலும் விடாமல் எப்போதுமே இருந்து ,எனக்காக , பவளத்தைப் போன்ற சிவந்த இதழ்களை உடையவன் எனை வந்து சேரக் கூவுவாயாக !

வளையல்களை இழப்பதாக கோதை சொன்னதும் நினைவுக்கு வந்த திரைப்பாடல்..இந்த வரிகளும் சங்க இலக்கியங்களில் இருந்து கையாண்டது தான் :)


அன்பு நாதனே அணிந்த மோதிரம் வளையலாகவே துரும்பென இளைத்தேன் 
அந்த மோதிரம் ஒட்டியாணமாய் ஆகுமுன்னரே அன்பே அழைத்தேன்..

Tuesday 17 May 2016

41.ஊடல் கூடலுணர்தல் புணர்தலை

ஊடல் கூட லுணர்தல் புணர்தலை
பாடல் :41
ஊடல் கூட லுணர்தல் புணர்தலை
நீடு நின்ற நிறைபுக ழாய்ச்சியர்
கூட லைக்குழற் கோதைமுன் கூறிய
பாடல் பத்தும்வல் லார்க்கில்லை பாவமே

விளக்கம் :

ஊடல் கூடல் உணர்தல் -கண்ணனுடனான ஊடலும் அதன்பின்னான கூடலும் ஊடல் கூடல் இன்பத்தை  உணர்தலும்
புணர்தலை -  இவை யாவற்றையும் உணர்ந்தபின்  புணர்தலும்
நீடு நின்ற நிறைபுகழ் ஆய்ச்சியர் - நெடுங்காலம் நிலைத்து நின்ற நிறைந்த புகழுடைய ஆய்ச்சியர்
கூடலைக் குழற் கோதை முன் கூறிய -  சோழி உருட்டி ஆடும் கூடல் விளையாட்டை  அழகிய குழல் (கூந்தல் ) உடைய கோதை கூறிய
பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை பாவமே -  இந்த பத்துப் பாடல்களையும் பாடும் வல்லவர்க்கு இல்லை பாவமே

முதலில் ஊடல் (செல்லச் சண்டைகள் ) பிறகு சமாதானமாகி கூடல்..இவ்விரண்டு இன்பத்தையும் உணர்தல்..உணர்ந்த பின் புணர்தல்
பிரியாமல் , நெடுங்காலம் நிலைத்து,  கண்ணனோடு நின்ற ஆய்ச்சியர்
சோழி உருட்டி விளையாடும் இந்தக் கூடல் விளையாட்டை , அழகிய கூந்தல் கொண்ட கோதை முன் கூறியவர்கள்  .. ,  கூடல் விளையாட்டை வைத்து கோதை பாடிய இந்த பத்துப் பாடல்களையும் பாடும் வல்லமை பெற்றவர்களுக்கு இல்லை பாவமே..

தான் நினைத்த காதலனை கை கூடுவோமா என்று குறி கேட்டலும் கூடல் விளையாட்டு விளையாடும் போது தன் மனம் கொண்ட மணாளன் வருவானா எனச் சொல்லிச் சொல்லிக் கேட்டதும் கோதையின் மன வேட்கையைத் தெரிவிக்கின்றது.. அவர் வருவாரா ..அவர் வருவாரா.. என்று சோழியிடம் கேட்கிறாள் கோதை..

நாச்சியார் திருமொழி நான்காம் பத்து இனிதே நிறைவுற்றது :) 

Monday 16 May 2016

40.பழகு நான்மறை யின்பொரு ளாய்மதம்

பழகு நான்மறை யின்பொரு ளாய்மதம்
பாடல் : 40
பழகு நான்மறை யின்பொரு ளாய்மதம்
ஒழுகு வாரண முய்ய வளித்தஎம்
அழக னாரணி யாய்ச்சியர் சிந்தையுள்
குழக னார்வரில் கூடிடு கூடலே
விளக்கம் :
 பழகு நான்மறையின் பொருளாய் - எல்லாருடைய பழக்கத்திலும் இருக்கும்  நான்கு வேதங்களின் உட்பொருளானவன்
மதம் ஒழுகு வாரணம் உய்ய அளித்த எம் அழகனார்  - மத நீர் ஒழுகும் யானையை வேதனையில் இருந்து உய்வித்தவன் (துன்பம் நீக்கியவன் ) எம் அழகனார்
 அணி ஆய்ச்சியர் சிந்தையுள் -  அழகு மிக்க ஆய்ச்சியர் சிந்தனையுள்
குழகனார் வரில் கூடிடு கூடலே ! - கலந்து குழைந்தவன் வருவார் எனில் கூடிடு கூடலே !

எல்லாருடைய பழக்கத்திலும் இருக்கும் நான்கு வேதங்களின் ஓம் என்ற பிரணவத்தின் உட்பொருளானவன் , மத நீர் ஒழுகிய யானையை அதன் வேதனையில் இருந்து துன்பம் நீக்கியவன்


எம் அழகனார் , அழகு மிக்க ஆய்ச்சியர் சிந்தனையுள் கலந்து குழைந்து இரங்குபவன் (இரங்குதல் - இரக்கம் கொண்டு அருளுதல் ) இளமையானவன் அழகானவன் எனைத் தேடி வருவார் எனில் கூடிடு கூடலே !



கொஞ்சம் செல்லமா அழகனார் குழகனார் என்பது அழகாக இருக்குல்ல :)

Saturday 7 May 2016

39.கொண்ட கோலக் குறளுரு வாய்ச்சென்று

கொண்ட கோலக் குறளுரு வாய்ச்சென்று
பாடல் :39
கொண்ட கோலக் குறளுரு வாய்ச்சென்று
பண்டு மாவலி தன்பெரு வேள்வியில்
அண்ட மும்நில னும்அடி யொன்றினால்
கொண்ட வன்வரில் கூடிடு கூடலே

விளக்கம் :

கொண்ட கோலக் குறள் உருவாய்ச் சென்று  -  சிறியவனாக குள்ளனாக  உருவெடுத்து
பண்டு மாவலி தன்  பெரு வேள்வியில்- பண்டைய காலத்தில்  மாவலியின் பெரு வேள்வியில்
அண்டமும் நிலனும் அடி ஒன்றினால் கொண்டவன் - இந்த அண்டம் முழுவதும் ,நிலத்தையும் ஒன்றச் செய்து  தனதாக்கிக் கொண்டவன்
 வரில் கூடிடு கூடலே ! - வருவார் எனில் கூடிடு கூடலே !

உயரத்தில் சிறியவனாக குள்ளனாக உருவெடுத்துச் சென்று ,பண்டைய (முந்தைய ) காலத்தில் மாவலி என்ற மன்னனின் பெரு வேள்வியில் , இந்த அண்டமும் நிலனும் அடி ஒன்றினால் (எண் ஒன்று அல்ல இரண்டையும் ஒன்றச் செய்தல் ) ஒன்றச் செய்து தனதாக்கிக் கொண்டவன் என்னைக் கூட வருவார் எனில் நீ கூடிடு கூடலே !
Add caption

மாவலியின் அகங்காரத்தை அடக்கிய உலகளந்த பெருமாள் என்னைக் கூட வருவார் எனில் நீ கூடிடு கூடலே எனக் குறி கேட்கிறாள் கோதை.எம்பெருமான் ஓங்கி மிதிச்சா ஒன்றரை  டன் வெயிட்டுடா என்கிறாள் கோதை :)