Friday 29 April 2016

38.ஆவ லன்புட யார்தம் மனத்தன்றி

ஆவ லன்புட யார்தம் மனத்தன்றி
பாடல் : 38
ஆவ லன்புட யார்தம் மனத்தன்றி
மேவ லன்விரை சூழ்துவ ராபதிக்
காவ லன்கன்று மேய்த்து விளையாடும்
கோவ லன்வரில் கூடிடு கூடலே

விளக்கம் :
ஆவலும் அன்பும் உடையார்தம் மனத்தன்றி - ஆவலும் அன்பும் உடையவர்களின் மனத்திலன்றி
மேவலன் - மேவு செய்யாதவன் (வேறெங்கும் இல்லாதவன்)
விரை சூழ் துவராபதிக் காவலன் - நறுமணம் சூழ்ந்த துவரா பதிக்  காவலன்
கன்று மேய்த்து விளையாடும் கோவலன் - கன்று மேய்த்து விளையாடும் ஆயர் குலத் தலைவன்
வரில் கூடிடு கூடலே ! - வருவார் எனில் கூடிடு கூடலே

தன் மீது ஆவலும் அன்பும் உடையவர்களின் மனத்தில் அன்றி மேவு அலன் .. அடியவர் மனமே கடவுளின் இருப்பிடம் என்கிறாள் கோதை. அங்கு தவிர வேறெங்கும் இருக்க மாட்டாராம்..மனமே முருகனின் மயில் வாகனம் என்ற பாடல் ஏனோ நினைவுக்கு வருகின்றது :) தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்றான் பிரகலாதன்..கோதையோ மனமார  நேசிக்கும் மனத்தில் (மனதில் என்பதில்லை மனத்தில் என்றுதான் சொல்கிறாள்..மனத்திற்கு இனியான் என்று திருப்பாவையிலும் குறிப்பிடுவாள் ) தான் கடவுள் இருக்கிறார். நறுமணம் சூழ்ந்த துவாரகையின் தலைவன் ,காவலன் ,கன்று மேய்த்து விளையாடும் கோவலன் (மாட்டுச் சந்தையின் தலைவன் )



என்னைத் தேடி வந்து கூடி விடுவார் எனில்,  நீ கூடிடு கூடலே என்கிறாள் கோதை..

Thursday 21 April 2016

37.அன்றின் னாதன செய்சிசு பாலனும்

37.அன்றின் னாதன செய்சிசு பாலனும்
பாடல் :37
அன்றின் னாதன செய்சிசு பாலனும்
நின்ற நீள்மரு தும்மெரு தும்புள்ளும்
வென்றி வேல்விறற் கஞ்சனும் வீழமுன்
கொன்ற வன்வரில் கூடிடு கூடலே
விளக்கம் :
அன்று இன்னாதன செய்த சிசுபாலனும் - அன்று செய்யத் தகாத செயல்களைச் செய்த சிசுபாலனும்
நின்ற நீள் மருதும் எருதும் புள்ளும் -  மருத மர வடிவில்  வழிமறித்து நின்ற நளகுபாரன் மாணிக்ரீவனும் எருது வடிவில் நின்ற அரிஷ்டாசுரனும்  கொக்கு வடிவ பகாசுரனும்
வென்றி வேல் கஞ்சனும் வீழ -  கண்ணனின் , வெற்றி தரும் வேலால்  கஞ்சனும் வீழ
முன் கொன்றவன் - இவர்கள் யாவரையும் முற்காலத்தில் கொன்றவன்
வரில் கூடிடு கூடலே ! - வருவார் எனில் நீ கூடிடு கூடலே!

மாபெரும் அவையில்  கிருஷ்ணரை  சாதிப் பெயர் சொல்லித் திட்டியவன் சிசுபாலன்.. தன்னை இகழ்ந்த சிசுபாலனை நூறு பிழைகள் பொறுத்துப் பின் வதம் செய்தார்  கிருஷ்ணர் .

அடுத்து வரும் நீள் மருது முந்தைய 36 வது பாடலில் சொல்லப்பட்ட நளகுபாரன் &மாணிக்ரீவன் .. மருத மரங்களாக சாபம் பெற்றவர்கள் ,  கிருஷ்ணரால் முறிக்கப்பட்டு சாப விமோசனம் அடைந்தனர்.

 அடுத்து கோதை சொல்லும் எருது வடிவில் வந்த அரிஷ்டாசுரன் .ஒரு கிராமத்தை வெகுவாகத் துன்புருத்திய அரிஷ்டாசுரனை கிருஷ்ணர் வதம் செய்தார்.


அடுத்தது கொக்கு வடிவில் வந்த பகாசுரன்..(புள்ளின் வாய் கீண்டானை என்று திருப்பாவையில் சொல்லுவாள் )


வெற்றி வேலால் கஞ்சனையும் வீழ வைத்தவன் இந்த கண்ணன். இவர்கள் அனைவரையும் முற்காலத்திலே கொன்றவன்,  என்னைக் கூட வருவார் எனில் கூடிடு கூடலே எனக் குறி கேட்கிறாள் கோதை










Friday 15 April 2016

36.அற்றவன்மருதம் முறியநடை

36.அற்ற வன்மரு தம்முறி யநடை

பாடல் :36
அற்ற வன்மரு தம்முறி யநடை
கற்ற வன்கஞ் சனைவஞ் சனையினால்
செற்ற வன்திக ழும்மது ரைப்பதி
கொற்ற வன்வரில் கூடிடு கூடலே

விளக்கம் :
அற்றவன் மருதம் - அற்ற வன்மருதம் (மென் பட்டைகள் அற்ற வல்லமை மிக்க மருத
முறிய நடை கற்றவன் - ரங்கள் முறிய நடை கற்றவன்
கஞ்சனை வஞ்சனையினால் செற்றவன் - தன் மாமன் கம்சனை வஞ்சனையினால் திறமையுடன் வென்றவன்
திகழும் மதுரைப் பதி கொற்றவன் -   திகழும் வட மதுரை அரசன்
வரில் கூடிடு கூடலே!- எனை வந்து சேருவார் எனில் கூடிடு கூடலே !


அற்றவன்...என்ன அற்றவனோ என யோசித்தேன் :) ஆடைகளைத் திருடியவன் என்பதால் மூன்றாம் திருமொழியில் 29ஆம் பாடலில் மசிமையீலி ன்னு சொல்றாளே அது போலவோ ?:) இல்லை இதற்குப் பின்னால் வேறு கதை இருக்கிறதாம் விசாரித்து அறிந்தேன் . அற்றவன் எனச் சொல்லாமல் அற்ற ,வன்மருதம் அதாவது மென்மையான மரப்பட்டைகள் இல்லாமல் வலிமைமிக்க கடினமான மரப்பட்டைகள் கொண்டது மருத மரம்.


குபேரனுடைய பிள்ளைகளான நளகுபாரன், மாணிக்ரீவன் என்ற இரட்டையர்கள் ,பெண்களோடு நிர்வாணமாக மென் வெட்கம் கூட இன்றி  ஆற்றில் குளித்ததால் ,வன்மை பெற்ற மருத மரங்களாக மாறட்டும் என்ற சாபம் பெற்றனர். கண்ணன் குழந்தையாக உரலில் கட்டப்பட்டு இருக்கும்போது உருண்டு அம்மரத்தை இடிக்கவும் சாப விமோசனம் பெற்றனர் . வன் மருத மரத்தை முறித்து நடை பயின்றவன் இந்த கண்ணன். தன் மாமனாகிய கஞ்சனை (கோதை கம்சன் என்பதில்லை கஞ்சன் என்கிறாள் வடமொழி என்பதால் ) வஞ்சகத்தால் வென்றவன் .பல பெருமைகள் பெற்றுத் திகழும் மதுரா நகர்ப்பதி அரசன் என்னை வந்து சேர்வார் எனில் நீ கூடிடு கூடலே எனக் குறி கேட்கிறாள் கோதை. 

Sunday 10 April 2016

35.மாட மாளிகை சூழ்

35.மாட மாளிகை சூழ்
பாடல் :35
மாட மாளிகை சூழ்மது ரைப்பதி
நாடி நந்தெரு வின்நடு வேவந்திட்டு
ஓடை மாமத யானை யுதைத்தவன்
கூடு மாகில்நீ கூடிடு கூடலே!
விளக்கம் :
 மாட மாளிகை சூழ் மதுரைப் பதி - மாட மாளிகைகள் சூழ்ந்த மதுரா நகர் வேந்தன்
நாடி நம் தெருவின் நடுவே வந்திட்டு - நமை நாடி நம் தெருவின் நடுவே வந்திட்டு
ஓடை மா மத யானை உதைத்தவன் - மதம் பிடித்து ஓடி வந்த பெரிய குவலய பீடம் என்ற யானையை உதைத்தவன்
கூடுமாகில்- என்னை வந்து கூடுவான் எனில்
நீ கூடிடு கூடலே !- நீ கூடிடு  கூடலே !

மாட மாளிகைகள் சூழ்ந்த மதுரை நகர் (வடக்கிலுள்ள மதுரா எனும் நகரம் ) வேந்தன் ,நம்மை நாடி நம் தெருவின் நடுவே வந்திட்டு ,மதம் பிடித்து ஓடி வந்த பெரிய,குவலயபீடம் என்ற யானையை எட்டி உதைத்து அடக்கியவன் என்னை வந்து கூடுவான் எனில் நீ கூடி விடு கூடலே !

என்னடா வடக்கே ஒரு மதுரை தெற்கே ஒரு மதுரைன்னு குழம்பாதீங்க..நம்ம மதுரை திரிந்த பெயர்..உண்மைப் பெயர் மருதை..மருத மரங்கள் சூழ்ந்தது மருத நிலம்..வயலும் வயல் சார்ந்த நிலமும் .வடக்கே இருக்கும் மதுரை மதுரா கிருஷ்ணன் பிறந்த ஊராகக் கருதப்படுவது..அந்த மதுரையின் அதிபதி  நம்மை நாடி தெருவின் நடுவே வருகின்றாராம்..எதற்கு?  மத யானையிடம் இருந்து நமைக் காப்பாற்ற..அந்த மதுரைப் பதி எனை வந்து சேர்வார் எனில் நீ கூடிடு கூடலே என்று குறி கேட்கிறாள் கோதை
 மத யானை துரத்துவது போல , அவனைச் சேரா பெருந்துயரம் அவளைத் துரத்துகிறது..அதிலிருந்து மீட்ட அவன் வருவானா சொல்லிடு கூடலே !

Thursday 7 April 2016

34.ஆய்ச்சிமார்களு மாயரு மஞ்சிட

34.ஆய்ச்சி மார்களு மாயரு மஞ்சிட
பாடல் :34
ஆய்ச்சி மார்களு மாயரு மஞ்சிட
பூத்த நீள்கடம் பேறிப் புகப்பாய்ந்து
வாய்த்த காளியன் மேல்நட மாடிய
கூத்த னார்வரில் கூடிடு கூடலே!

விளக்கம் : 

ஆய்ச்சி மார்களும் - ஆயர் குலத்தைச் சேர்ந்த பெண்களும்
ஆயரும் அஞ்சிட -  ஆயர் குலத்தைச் சேர்ந்த ஆண்களும் அஞ்சும்படி
பூத்த நீள் கடம்பு ஏறி - பூக்கள் நிறைந்து உயர்ந்த கடம்ப மரம் ஏறி
புகப் பாய்ந்து  - நீரில் உட்புகப் பாய்ந்து குதித்து
வாய்த்த காளியன் மேல் நடமாடிய - காளியன் என்ற நாகத்தின் மீது நடனம் ஆடிய
கூத்தனார் வரில் - கூத்தாடிய கூத்தனார் வரில்
கூடிடு கூடலே ! - நீ கூடிடு கூடலே!

ஆயர் குலப் பெண்களும் ஆண்களும் அஞ்சும்படி , பூக்கள் நிறைந்து, உயர்ந்த கடம்ப மரம் ஏறி , நீரில் தாவி அதன் உட்புகப் பாய்ந்து குதித்து காளிங்கன் என்ற நாகத்தின் மீது நடனம் ஆடிய கூத்தனார் (கூத்தாடுபவன் ) என்னைக் கூட வருவார் எனில் நீ கூடிடு கூடலே!
காளிங்க நடனம் 

யாரோ ஒருவரை குளத்தில் இருந்த பாம்பு பிடிக்க, அதை ஓடிச் சென்று கண்ணனிடம் யாரோ சொல்ல உடனே அவன் பூக்கள் நிறைந்த மிக உயரமான கடம்ப மரத்தின் மீதேறி அங்கிருந்து குளத்தின் மீது பாய்ந்து குதித்து ,  அந்தப் பாம்பினை அடக்கி அதன் மீது நடனம் ஆடினான். அப்படி ஆடுபவனைக் கூத்தன் என்கிறாள் கோதை..அந்தக் கூத்தன் தன்னைச் சேர  வருவான் எனில் நீ கூடிடு கூடலே ! பெருமாள் திருவடி தன் மீது  பட பாக்கியம் வாய்க்கப் பெற்றவன் என்பதால் வாய்த்த காளியன் என்கிறாள் கோதை ..

Sunday 3 April 2016

33.பூம கன்புகழ் வானவர்

33.பூம கன்புகழ் வானவர்
பாடல் 33 :
பூம கன்புகழ் வானவர் போற்றுதற்
காம கன்அணி வாணுதல் தேவகி
மாம கன்மிகு சீர்வசு தேவர்தம்
கோம கன்வரில் கூடிடு கூடலே!

விளக்கம் :
பூமகன் புகழ் - பூவில் பிறந்த பிரம்மா புகழும்
வானவர் போற்றுதற் காமகன் - வானவர் போற்றுதற்கும் உரிய கா- மகன்  (காட்டு தெய்வமான திரு -மாலே (முல்லைத் தெய்வம்  )
அணி வாள் நுதல் -   ஒளிரும் அழகான  நெற்றி கொண்ட
தேவகி மாமகன் - தேவகியின் சிறந்த  மகன்
மிகு சீர் வசு தேவர்தம்  - மிகுந்த சீரும் சிறப்புமிக்க வசு தேவர் உடைய
கோ மகன் - தலைவன் (கோ -அரசன் )
வரில் - வருவார் எனில்
கூடிடு கூடலே - நீ கூடி விடு கூடலே !

பூவிலே பிறந்த பிரம்மாவும் புகழும் , வானவர் போற்றுதற்கும் உரிய காட்டிலுள்ள முல்லைத் தெய்வமான திருமாலும் , மிகவும் அழகான,   ஒளிரும்  நெற்றி கொண்ட தேவகியின்  சிறந்த மகன் , மிகுந்த சீரும் சிறப்புமிக்க புகழுடைய  வசுதேவரின் மகன்

 தலைவனான அந்தக் கண்ணன் வருவார் எனில் கூடிடு கூடலே!