Thursday 29 September 2016

80.சங்கமா கடல்கடைந்தான் தண்முகில்காள் வேங்கடத்துச்

80.சங்கமா கடல்கடைந்தான் தண்முகில்காள் வேங்கடத்துச்
பாடல் :80
சங்கமா கடல்கடைந்தான் தண்முகில்காள் வேங்கடத்துச்
செங்கண்மால் சேவடிக்கீழ் அடிவீழ்ச்சி விண்ணப்பம்
கொங்கைமேல் குங்குமத்தின் குழம்பழியப் புகுந்துஒருநாள்
தங்குமே லென்னாவி தங்குமென் றுரையீரே

விளக்கம் :

சங்கமா கடல் கடைந்தான் தண் முகில்காள் - சங்குகள் நிறைந்த கடலைக் கடைந்தவன் வாழும் வேங்கடத்தில் இருக்கும் குளிர்ந்த மேகங்களே !
வேங்கடத்துச் செங்கண்மால் சேவடிக் கீழ் அடி வீழ்ச்சி விண்ணப்பம் - செம்மையான கண்களுடைய திருமாலின் திருவடி வீழ்ந்து என் விண்ணப்பம் வையுங்கள்
கொங்கைமேல் குங்குமத்தின் குழம்பழியப் புகுந்து ஒருநாள் - என் மார்பின் மீது குங்குமக் குழம்பு அழிய அவன் அணைத்து என்னைச் சேர்கின்ற நாளில்தான்
தங்குமேல் என் ஆவி தங்கும் என்று உரையீரே - என் உயிர் தங்கும் என்று அவனிடம் உரைத்து விடுங்கள்

சங்குகள் நிறைந்த பெருங்கடலைக் கடைந்தவன் வாழும் வேங்கடத்தில் இருக்கும் குளிர்ந்த மேகங்களே !

செம்மையான கண்களுடைய வேங்கடத்துத் திருமாலின் திருவடியின் கீழ் என் விண்ணப்பம் ஒன்றை வையுங்கள்


என் கொங்கைகளின் மீது குங்குமக் குழம்பு அழிய மார்பில் புகுந்து  எனை அணைத்து ஒருநாளாவது அவன் அங்கு தங்கினான் எனில் என் உயிரும் என் உடலிலேயே தங்கி விடும் என்று அவனிடம் உரைத்து விடுங்கள் !
Image result


தன் காதலனின் மீதான காதலையும் தாபத்தையும் ஒரு சேர வெளிப்படுத்தி இருக்கிறாள்.  அவளை மார்போடு இறுக்கி அணைக்கனுமாம்..குங்குமக் குழம்பு அழியணுமாம்..குங்குமம் நெற்றியில் தானே பூசுவோம்..மார்பில் எப்படி.. அதுவும் குழம்பாக ( எக்கசக்க குங்குமம் கூழ்மக் கலவையாக ) ? 
அதான் ஏற்கனவே வாரணம் ஆயிரம் பாடலில் சொன்னாளே ..
குங்குமம் அப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து என்று ...மணப்பொண்ணுக்கு நலங்கு வைக்கிறப்ப குங்குமமும் சந்தனமும்  உடல் முழுக்க பூசுவாங்க .. உடல் நறுமணம் பெற.. அந்தக் குங்குமம் எல்லாம் அழியனுமாம்..இறுக்கி அணைத்த வியர்வையில் குழம்பாக மாறிய குங்குமம் அழிய அழிய அவன் என்னைச் சேரனும்..ஒருநாளாவது ஒரேயொரு நாளாச்சும் அவன் என்னுள் தங்கினால் , அந்த ஆசுவாசத்திலே என் ஆவியும் என் உடல் தங்கும் என்று அவனைப் பார்த்தால் உரையுங்கள் 
இந்தப் பாடலைப் படிக்கவும் எனக்கு S ஜானகி அம்மா பாடிய நெஞ்சினிலே நெஞ்சினிலே பாடல் நினைவுக்கு வந்தது.. 
குங்குமம் ஏன் சூடினேன் 
கோல முத்தத்தில் கலையத்தான் 
கூறைப்பட்டு ஏன் உடுத்தினேன் 
கூடல் பொழுதில் கசங்கத்தான் 
மங்கை கூந்தல் மலர்கள் எதற்கு கட்டில் மேலே நசுங்கத்தான் 
தீபங்கள் அணைப்பதே புதிய பொருள் நாம் தேடத்தான்.. 
பெண்ணின்   தாப உணர்வுகளைச் சொல்லும் பாடல்கள் வெகு குறைவு..அரிதாக இது போல :) 

Saturday 24 September 2016

79.சலங்கொண்டு கிளர்ந்தெழுந்த தண்முகில்காள் மாவலியை

79.சலங்கொண்டு கிளர்ந்தெழுந்த தண்முகில்காள்  

பாடல் :79
சலங்கொண்டு கிளர்ந்தெழுந்த தண்முகில்காள் மாவலியை
நிலங்கொண்டான் வேங்கடத்தே நிரந்தேறிப் பொழிவீர்காள்
உலங்குண்ட விளங்கனிபோல் உள்மெலியப் புகுந்துஎன்னை
நலங்கொண்ட நாரணற்கென் நடலைநோய் செப்புமினே.

விளக்கம் :

சலம் கொண்டு கிளர்ந்து எழுந்த தண் முகில்காள் - நீர் கொண்டு கிளர்ந்து எழுந்த குளிர்ந்த மேகங்களே !
மாவலியை நிலங் கொண்டான் வேங்கடத்தே நிரந்து ஏறிப் பொழிவீர் காள்  - மன்னன் மாவலியினை மூன்றாம் அடியில் நிலத்தில் வைத்து அவனைக் கொண்டவனின் வேங்கடத்திலே வரிசையாக மேலேறிப்  பரவி பொழியும்  மேகங்களே !
உலங்கு உண்ட விளங்கனி போல் உள் மெலியப் புகுந்து என்னை -  கொசு உண்ட விளாம்பழம் போல் என் உள்ளே புகுந்து என்னை மெலிய வைத்து
நலம் கொண்ட நாரணனுக்கு என் நடலை நோய் செப்புமினே ! - என் நலத்தைக் கொள்ளை கொண்ட நாரணனுக்கு என்  துன்ப  நோய் சொல்லுங்களேன் !


சலம் - நீர்.. (not ஜலம் ) கடலில் இருக்கும் நீரை எடுத்துக் கொண்டு கிளர்ந்து எழுந்து ( சாதாரணமாக எழுவதல்ல பார்க்கவே பிரம்மிப்பைத் தருமளவுக்கு எழுதல் ) தண் ( குளிர்ந்த ..தண்ணீர் என்பது குளிர்ந்த நீர் வெந்நீர் என்பது சூடான நீர் ஆனா நம்ம பேச்சு வழக்கில் சுடு தண்ணீர்ன்னு சொல்றோம் சுடு நீர் அல்லது வெந்நீர் என்றுதான் சொல்லணும் ) குளிர்ந்த மேகங்களே !

ஓரடியில் மண்ணையும்  ஈரடியில் விண்ணையும் மூன்றாவது அடிக்கு மாவலியின் தலையையும் கொண்டவனின் வேங்கட மலையிலே

Image result

வரிசையாக மேலேறிப் பரவி மழை பொழியும் மேகங்களே !

Image result

உலங்கு உண்ட விளாம்பழம் போல.. விளாம்பழத்தைக் கொசு மொய்த்து உள்ளிருக்கும் சாற்றை எடுத்து விட்டால் எப்படி வெறும் கூடு மட்டும் இருக்குமோ அது போல , நான் அந்த நாரணனின் மீது வைத்த காதலானது என் உடம்பில்  உட்புகுந்து என்னை மெலிய வைத்து , எனக்குத் துன்பத்தைக் கொடுத்தது..இப்படி என் நலம் அவன்பால் சென்றதால் எனது இந்நிலைக்கு அவனே பொறுப்பு .அவனைப் பார்த்தால் நான் எப்பேர்ப்பட்ட துன்ப நோயால் வாடுகிறேன் என்று சொல்லுங்களேன் !
\
உழைச்சு ஓடாப் போயிட்டேன் என்று ஒரு சொலவடை உண்டு.. இவள் காதலிச்சு வெறும்  கூடா போயிட்டா..உள்ளே வந்து உயிர் கொடுப்பதும் அல்லது மிச்சம் எடுப்பதும் அவன்பாடு..

Wednesday 21 September 2016

78.வான்கொண்டு கிளர்ந்தெழுந்த மாமுகில்காள் வேங்கடத்துத்

78.வான்கொண்டு கிளர்ந்தெழுந்த மாமுகில்காள் வேங்கடத்துத்
பாடல் :78
வான்கொண்டு கிளர்ந்தெழுந்த மாமுகில்காள் வேங்கடத்துத்
தேன்கொண்ட மலர்ச்சிதறத் திரண்டேறிப் பொழிவீர்காள்
ஊன்கொண்ட வள்ளுகிரால் இரணியனை யுடலிடந்தான்
தான்கொண்ட சரிவளைகள் தருமாகில் சாற்றுமினே.

விளக்கம் :

வான்கொண்டு கிளர்ந்து எழுந்த மாமுகில்காள் - மழை நீரைத்  தன்னகத்தே கொண்டு வானிலே கிளர்ந்து எழுந்த பெரும் முகில்களே !
வேங்கடத்துத் தேன்கொண்ட மலர்ச் சிதறத் திரண்டு ஏறிப் பொழிவீர்காள் - வேங்கடத்து மலையில் உள்ள தேன் கொண்ட மலர் சிதறும் அளவுக்குத் திரண்டு ஏறிப்பொழியும் மேகங்களே !
ஊன்கொண்ட வள்ளுகிரால் இரணியனை உடல் இடந்தான் -   தசையைக் கொண்ட தன் கூரிய நகங்களால்  இரணியனின் உடல் பிளந்தவன்
தான் கொண்ட சரி வளைகள் தருமாகில் சாற்றுமினே -  எடுத்துக் கொண்ட என் சரி வளையைத் திருப்பித் தருமாறு அவரிடம் சொல்லுங்கள் !

கடலில் இருந்து கவர்ந்த மழை நீரை எடுத்துக் கொண்டு வான் சென்று கிளர்ந்து எழுந்த பெரும் மேகங்களே ! வேங்கடத்து மலைதனில் மலரும் மலரில் தேனினைச் சிதறடிக்கும் அளவுக்கு திரண்டு பொழிபவர்களே !

மிகவும் மெல்லியது மலர் ஆனால் இரக்கமில்லாமல் அதனின் தேனினைச் சிதறடிக்கும் உங்களைப் போலவே தான் உங்கள் நிறம் கொண்ட கார்மேக வண்ணனும். மெல்லிய என் உடலின் சரிந்த வளைவுகள் வடிவற்றுப் போயின அவனின் நினைவுகளே உண்டதால்.. இப்படி என் உடலின் ஊன் உண்ட/கொண்ட கூரிய நகத்தால் இரணியனைப் பிளந்தவனிடம் சென்று அவனால் நான் இழந்த என் உடல் நலத்தைத் திருப்பித் தருமாறு சொல்லுங்களேன்

Image result for hiranya vatham
இரணிய வதம் 
இரணிய வதம் செய்த நரசிம்மனை இங்கே குறிப்பிடுகிறாள் ஆண்டாள்.. அந்த இரணியன் உடலைப் பிளந்து எப்படி அவனது ஊனை (உடம்பை ) நோகடித்தானோ அதைப் போலவே , என் உடல் நலத்தையும் பிடுங்கிக் கொண்டவன் என்று குற்றம் சாட்டுகிறாள் .எப்பொழுதுமே அவனையே நினைச்சு அவன் வரவுக்காக ஏங்கியதில் மெலிந்த தன் உடலும் அதனால் சரிந்த தன் வளைவுகளும் அவனே கொண்டான்..அதற்கு அவனே காரணம் அவனைப் பார்த்தால்  அதைத் திருப்பித் தரும்படி சொல்லுங்கள் என்கிறாள்..காதலனைக் கோபமாக  அரக்கன்  எனச் சொல்கிறாள்..


இப்படியா அவளைத் தொடாமலே அவள் ஊன் தின்பது ? என்னாது..  தொட்டால் தானே திங்க முடியுமா? தொடாமலும் திங்கலாம்..காதலில் மட்டும் இலக்கணங்கள் மாறும்.. வல்லினத்தின் முதலில் வலி மிகும். (ஒற்று வரும் ) 
இவள்தன் மெல்லின தேகத்தில் ஒற்றாவிடில் வலி மிகும் :) வலி மிகும் இடங்கள் மிகா இடங்கள் காதலில் இடம் மாறும் :)
இலக்கணம் மாறுதோ..... ;) 

Monday 19 September 2016

77.மின்னாகத் தெழுகின்ற மேகங்காள் வேங்கடத்துத்


77.மின்னாகத் தெழுகின்ற மேகங்காள் வேங்கடத்துத்
பாடல் :77
மின்னாகத் தெழுகின்ற மேகங்காள் வேங்கடத்துத்
தன்னாகத் திருமங்கை தங்கியசீர் மார்வற்கு
என்னாகத் திளங்கொங்கை விரும்பித்தாம் நாடோறும்
பொன்னாகம் புல்குதற்கென் புரிவுடைமை செப்புமினே

விளக்கம் :

மின்னாகத்து எழுகின்ற மேகங்காள் - உடம்பில் மின்னல் தோன்ற எழும் மேகங்களே
வேங்கடத்துத் தன் ஆகத் திருமங்கை தங்கிய சீர் மார்வற்கு - வேங்கடத்தான் தன் உடம்பில் திருவாகிய தேவியை தங்க வைத்திருக்கும் அந்த  சீர்  திரு வாழ்மார்பனானவனிடம்
என்னாகத்து இளம் கொங்கை விரும்பித் தாம் நாள்தோறும் - என் உடம்பில்உள்ள இளம் மார்பை நானே விரும்பி  நாள்தோறும்
பொன்னாகம் புல்குதற்கு என் புரிவுடைமை செப்புமினே ! -  அவனது பொன் உடம்பினை அணைத்துக் கொள்ள ஆசைப்பட்டதாகச் சொல்லுங்கள்

ஆகம் என்றால் உடல் /மார்பு என்று பொருள் உண்டு. இங்கே எப்படி எடுத்தாலும் பாடல் பொருள் அழகாகவே வருகின்றது :) தங்கள் உடம்பில் /மார்பில் மின்னல் தோன்ற எழும் மேகங்களே ! வேங்கடத்தானின் மார்பில் வாழும் திருமங்கை தங்கிய சீர் மார்பனிடம் போய்ச் சென்று , என் மார்பின் இளம் கொங்கைகளை விரும்பி , நாள் தோறும் அந்தப் பொன் உடம்பை அணைக்க /புணர (புல்கு = புணர்தல்/அணைத்தல் ) என் ஆசை (புரிவு ) உடைமையைச் சொல்லுங்கள் !

இந்தப் பெண்ணுக்குத்தான் எவ்வளவு ஆசை.. தன் உடம்பில் மின்னல் தோன்ற எழும் மேகங்களிடம்

அந்தத்  திருவாழ்மார்பனிடம் சொல்லுங்கள் என்கிறாள்.. இவள் தகப்பனார் பெரியாழ்வாரும் தனது திருப்பல்லாண்டு பாடலில்
வடிவாய் நின் வல மார்பில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு என்கிறார் .

அந்தப் பொன் உடம்பை நாள்தோறும் விரும்பி அணைக்கவே என் மனம் விரும்பிகிறது.. அவர்தம் மார்பை என் இளம் மார்போடு அணைத்தே கிடக்க விரும்புகிறேன் அதுவே என் ஆசை என்று அவனிடம் சென்று சொல்லுங்கள் !


பக்தி புனிதம்  என்பதெல்லாம் பிறகு..இவளுக்கு திருவாழ்மார்பன் மீது பித்து.. அளவற்ற காதல் .இள வயதில் தோன்றிய காதல் பசுமரத்தாணி போல ..மாறவே மாறாது..மனத்தை விட்டு அகலாது.. இளம் வயதில் அவனிடம் கொண்ட காதலும் அதன் பொருட்டு வந்த காமமும் தன் பாடல்களில் அழகாக வடித்திருக்கிறாள் ஆண்டாள்..

திருப்பதி மலை வாழும் வெங்கடேசா 
புதுவையர் கோன் மகள் நாடும் சீனிவாசா..!

Monday 5 September 2016

76.ஒளிவண்ணம் வளைசிந்தை உறக்கத்தோ டிவையெல்லாம்

76.ஒளிவண்ணம் வளைசிந்தை உறக்கத்தோ டிவையெல்லாம்

பாடல் :76
ஒளிவண்ணம் வளைசிந்தை உறக்கத்தோ டிவையெல்லாம்
எளிமையா லிட்டென்னை ஈடழியப் போயினவால்
குளிரருவி வேங்கடத்தென் கோவிந்தன் குணம்பாடி
அளியத்த மேகங்காள் ஆவிகாத் திருப்பேனே

விளக்கம் : 
ஒளிவண்ணம் வளை சிந்தை உறக்கத்தோடு இவையெல்லாம் - மிகுந்த ஒளியும், வளையல்களும்,சிந்தனைகளும் உறக்கமும் இவை எல்லாம்
எளிமையால் இட்டு என்னை ஈடழியப் போயினவால் - நான் எளிமையானதில்  என்னை விட்டு நீங்கின
குளிர் அருவி வேங்கடத்து என் கோவிந்தன் குணம் பாடி - குளிர்ந்த நீர் கொண்ட அருவி வேங்கட மலை என் கோவிந்தன் குணம் பாடி
அளியத்த மேகங்காள் ஆவி காத்து இருப்பேனே ! - அருள் செய்யும் மேகங்களே என் உயிர் காத்து இருப்பேனே !

ஒளிமிகுந்த என் தேகம் ஒளி இழந்து விட்டது.. நல்ல நிறத்தில் இருந்த என் உடலில் கவலையால் வாடியதில் பசலை நிறம் பாய்ந்தது..ஊன் உறக்கம் இன்றி கவலைப்பட்டதால் ,  உடல்  மெலிந்ததில் வளையல்கள் கழண்டு விழுந்துவிட்டன.. (அன்பு நாதனே அணிந்த மோதிரம்வளையலாகவே துரும்பென இளைத்தேன் அந்த மோதிரம் ஒட்டியாணமாய் மாறும் முன்னமே அன்பே அழைத்தேன் )   எந்நேரமும் கண்ணனைத் தவிர வேறு சிந்தனை இல்லை அவனைச் சேராத துயரத்தில் வேறு சிந்திக்க மூளை மறுத்து/மரத்துப் போனது ..இமைகள் மூட மறுத்தன உறக்கம் கண் விட்டுச் சென்றது..ஏன் இவை எல்லாம் என்னை விட்டு நீங்கின? எப்பொழுதும் உன்னையே நினைத்து நினைத்து உருகியதன் விளைவு இவை.  கோதை எளிமையானதில் விட்டு நீங்கின.. அலங்காரம் செய்து கொள்ளாமல் வேறு எவற்றிலும் கலந்து கொள்ளாமல் ஒரு தலைக் காதலால் தவிக்கிறாள் .இந்தத் திரைப்பாடல் நினைவுக்கு வந்தது .
"விழாக்களில் இவள் தனித்திருக்கிறாள்
 கனாக்களில் தினம் விழித்திருக்கிறாள்.. 
எங்கிருந்து வந்தாயடா...எனைப் பாடு படுத்த..நீ எனைப் பாடுபடுத்த..
 என்னை என்ன செய்தாயடா..எனைத் தேடி எடுக்க நான் எனைத் தேடி எடுக்க..."



குளிர்ந்த அருவி கொண்ட வேங்கடத்தில் உள்ள என் கோவிந்தனின் நற்குணங்களைப் பாடி , தகித்திருந்த என் உடலும் அதன் வெளிப்பாடான என் கண்ணீரையும் குளிர்விக்கும் கருணை  மிக்க மேகங்களே என் உயிரை அவருக்காக இறுக்கிப்பிடித்து இருப்பேனே !


சமீபத்தில் நான் மிகவும் ரசித்த கவிதை ஒன்று இப்பாடலுக்கு மிகப் பொருந்துவதாக உணர்கின்றேன் அது

மலர்தான் கருகியிருக்கிறது
இலைகள் தான் உதிர்ந்திருக்கின்றன
உன் அன்பின் ஒரு துளியில்
மீண்டும் துளிர்க்க
வேரில் ஜீவனைத் தேக்கி வைத்திருக்கிறேன்




ஒரு பெண்ணுக்கு எது அழகோ அவை என்னை விட்டு நீங்கின.. இருப்பினும் என் வேர் நனைந்தால் நான் மீண்டும் துளிர்ப்பேன்..இந்த வேரை இன்னமும் விட்டு வைத்திருப்பதே நீ வந்து தொட்டுப் பூக்க வைப்பாய் என்ற நப்பாசையில் தான்


Friday 2 September 2016

75.மாமுத்த நிதிசொரியும் மாமுகில்காள் வேங்கடத்துச்

75.மாமுத்த நிதிசொரியும் மாமுகில்காள் வேங்கடத்துச்

பாடல் :75

மாமுத்த நிதிசொரியும் மாமுகில்காள் வேங்கடத்துச்
சாமத்தின் நிறங்கொண்ட தாடாளன் வார்த்தையென்னே
காமத்தீ யுள்புகுந்து கதுவப்பட்டு இடைக்கங்குல்
ஏமத்தோர் தென்றலுக்கிங் கிலக்காய்நா னிருப்பேனே

விளக்கம் :

மாமுத்த நிதி சொரியும் மாமுகில் காள் - பெரும் முத்துக்களைப் போன்று   வெண் துளிகள்  பொழியும் பெரும் மேகங்களே
வேங்கடத்துச் சாமத்தின் நிறம் கொண்ட தாடாளன் வார்த்தை என்னே ? -  திரு வேங்கட மலையின் சாமத்தின் (நடு இரவு கருமை நிறம் ) கொண்ட தாடாளனிடம் இருந்து சேதி எதுவும் எனக்கு உண்டா ?
காமத்தீ உள் புகுந்து கதுவப்பட்டு இடைக் கங்குல் - காமத் தீ என் உள் புகுந்து எனைக் கவ்வி இழுக்க முன் இரவுக்கும் நடு இரவுக்கும் இடையில்
ஏமத்தோர் தென்றலுக்கு இங்கு இலக்காய் நான் இருப்பேனே  -வீசும்இன்பம் தரும் தென்றலுக்கு இங்கு இலக்காய் நான் இருப்பேனே

பெரும் முத்துக்களைப் போன்று வெண் துளிகளைப் பொழியும் பெரும் முகில்களே !
வேங்கடத்து மலையில் நடுநிசி நேரத்தின் நிறம் கொண்ட தாடாளன் சொன்ன வார்த்தை என்ன?(தாடாளன் - பெருமை/முதன்மை மிக்கவன்  .திருக்காழிச் சீராம விண்ணகரம் தாடாளன் (சீர்காழியில் உள்ள 108 வைணவ தளங்களில் ஒன்று திரி விக்கிரமன் ..உலகளந்த பெருமாள் கோலம் )

அவரிடம் இருந்து எனக்கு சேதி எதுவும் உண்டா ? காமத் தீ என் உள் புகுந்து என்னைக் கவ்வி இழுக்க கங்குல் - முன் இரவு  சாமம் - நடு இரவு இவ்விரண்டுக்கும் இடையில் வீசும் இந்த இன்பம் தரும்தென்றலுக்கு  நான் இலக்காய்  ஆகி விட்டேனே ..இன்பம் தர வேண்டிய தென்றலோ  என்னை மிகவும் துயரம் செய்கின்றதே !
Related image
தாடாளன்



முன்பே ஒரு பாடலில் சொல்லி இருக்கிறேன்..மார்கழிக் காலையும் மழை மாலையும் தனித்திருப்போருக்கு சாபம் என.. போலவே ஏகாந்தம் தரும் தென்றல் காற்று , நடுச் சாமத்தின் தனிமை தன் துணையின்றி  இருப்பவர்களுக்கு வேதனை தரும் வல்லமை படைத்தவை .. பகலின் பேரிரைச்சல் கூட ஏதோ பேரமைதியைத் தந்து விட்டுச் செல்லும் . ஆனால் துணையற்ற சாமத்தின் அமைதி பேரிரைச்சலாகத் துன்புறுத்தும்..

மோகத்தில் தவித்து  இருக்கும் பெண்ணின் தனிமை  எத்தகு துன்பம் வாய்ந்தது என்று ஆண்டாளின் பாடல் வாயிலாக நாம் உணரலாம் .
அது ஏன் காமத் தீ கவ்வுகிறது என்கிறாள் ? விழுங்கினால் கூட ஒரே வாயில் அமுங்கிடும்..ஆனா கவ்விக் கவ்வி உண்பது உடனே நிகழாது சிறிது சிறிதாக உயிரைப் பறித்தல் அது இன்னும் ஆழமாகத் தாக்கும் .மிகவும் வேதனையளிக்கும் செயல் கவ்வுதல் .. காமத்தீ  அப்படிக் கவ்வுகிறதாம் அவளை..
சாமம் ஏமம் என்ற சொல்லாடல் கிராமத்தில் இன்னமும் புழங்கப் படுகிறது.
நான் கவனித்தவரையில் ஆண்டாளுக்கு உலகளந்த உத்தமன் என்ற அவதாரத்தின்  மீது அலாதிப்ரியம் இருக்கிறது :)
அடிக்கடி அவரைத்தான் அழைக்கிறாள்..