Friday 30 December 2016

118.ஆர்க்குமென் நோயி தறியலாகா

118.ஆர்க்குமென் நோயி தறியலாகா

பாடல் :118

ஆர்க்குமென் நோயி தறியலாகா
தம்மனை மீர்துழ திப்படாதே
கார்க்கடல் வண்ணனென் பானொருவன்
கைகண்ட யோகம் தடவத்தீரும்
நீர்க்கரை நின்ற கடம்பையேறிக்
காளிய னுச்சியில் நட்டம்பாய்ந்து
போர்க்கள மாக நிருத்தஞ்செய்த
பொய்கைக் கரைக்கென்னை யுய்த்திடுமின்

விளக்கம் :
ஆர்க்கும் என் நோய் அறியலாகாது - யாருக்கும் என் நோய் தெரிந்திருக்க நியாயம் இல்லை
அம்மனைமீர் துழதிப்படாதே - தாய்மார்களே !  உங்கள் உடல்வலி /பயணத் துன்பம் பற்றிப் பொருட்படுத்தாது ,
கார்க்கடல் வண்ணன் என்பான் ஒருவன் - கடல் வண்ணன் நிறத்தவன் ஒருவன்
கைகண்ட யோகம் தடவத் தீரும் - என் உடல் அவன்  தொட்ட யோகம் அவன் தடவ இந்த நோய் தீரும்
நீர்க்கரை நின்ற கடம்பை ஏறிக் -  குளக்கரையில் நின்ற கடம்ப மரம் ஏறி
காளியன் உச்சியில் நட்டம் பாய்ந்து - பாய்ந்து  காளியன் என்ற பாம்பின் உச்சந்தலையில் ஏறி   நடனம் ஆடி
போர்க்களமாக நிருத்தஞ் செய்த - போர்க்களமாக்கி  அதனை நொறுங்கச் 
செய்த

கரைக்கே என்னை உய்த்திடுமின் - அந்தக் குளத்தின் கரையிலேயே என்னைக் கொண்டு விட்டு விடுங்கள்


இவளுக்கு என்ன ஆச்சு ஏன் இப்படி இருக்கின்றாள் என்றெல்லாம் ஆளாளுக்குப் பேசுகின்றார்கள்..அவர்கள் யாருக்கும் என் நோய் இன்னதென்று அறியப்போவதில்லை . தாய்மார்களே ! இங்கிருந்து வெகுதூரம் பயணம் செய்வதால் ஏற்படும் உடல் வலி /துன்பங்களைப் பொருட்படுத்தாமல் என்னை அங்கே கூட்டிச் செல்லுங்கள்.. இந்த நோயானது அங்கே  கருநீல வண்ணன் என்பவன் ஒருவன் இருக்கிறான் அவன் என் மேனி தடவ தீரும் ( கைகண்ட யோகம் என்பது அழகான சொல்லாடல் ..இவங்க கை தொட்ட ராசி இப்படி ஆகி இருக்கு என்று நாம் பேச்சு வழக்கில் இன்றும் பயன்படுத்துகின்றோம் அல்லவா..கண்ணனே தொட்டால் யோகம் தானே..அவர் தொட்ட யோகத்துல சட்டுன்னு நோய் விலகிடும்..



ஒரு குளக்கரையில் இருந்த கடம்ப மரத்தின் மீது ஏறி , பாய்ந்து அங்கிருக்கும் காளியன் என்ற பாம்பின் மீது  நடனம் ஆடி  ,பின்பு போர் புரிந்து அதனை நொறுங்கச் செய்த
Image result for krishna dance on snake

அந்தப் பொய்கைக் கரைக்கே என்னைக் கொண்டு சேர்த்திடுங்கள்..
ஆண்டாள் கண்ணன் வளர்ந்து வாழ்ந்ததாகச் சொல்லப்பட்ட ஒவ்வொரு இடங்களையாகப் பார்க்க விரும்புகின்றாள்..கண்ணன் லீலை புரிந்த இடங்கள் என ..

அவன் பாதம் பட்ட மண்ணே அவளுக்கு அருமருந்து !

Thursday 29 December 2016

117.அங்கைத் தலத்திடை

117.அங்கைத் தலத்திடை யாழிகொண்டான்

பாடல் :117
அங்கைத் தலத்திடை யாழிகொண்டான்
அவன்முகத் தன்றி விழியேனென்று
செங்கச்சுக் கொண்டுகண் ணாடையார்த்துச்
சிறுமா னிடவரைக் காணில்நாணும்
கொங்கைத் தலமிவை நோக்கிக்காணீர்
கோவிந்த னுக்கல்லால் வாயில்போகா
இங்குத்தை வாழ்வை யொழியவேபோய்
யமுனைக் கரைக்கென்னை யுய்த்திடுமின்

விளக்கம் :

அம் கைத்தலத்திடை ஆழி கொண்டான் - தமது  அழகிய கைத்தலத்தில் சக்கரம் கொண்டவன்
அவன் முகத்தன்றி விழியேன் என்று - அவன் முகத்தைத் தவிர வேறு எதிலும் விழிக்க மாட்டேன் என்று
செம் கச்சுக் கொண்டு கண்ணாடை ஆர்த்துச் - செந்நிற ஆடையைக் கொண்டு  தம் கண்களைக்   கட்டி கொண்டிருக்கும் (கண்களுக்கு ஆடை அணிந்திருக்கும் )
சிறு மானிடவரைக் காணில் நாணும் - அந்தக் கண்ணனைத் தவிர வேறு மானிடரைப் பார்க்க விரும்பாமல் சிறு மானிடவர்களைக் காணச் சகியாமல் வெட்கும்
கொங்கைத் தலம் இவை நோக்கிக் காணீர் - என் கொங்கைகள் இருக்கும் இடத்தை நன்கு பாருங்கள்
கோவிந்தனுக்கு அல்லால் வாயில் போகா - கோவிந்தனைத் தவிர வேறு எவரும் அதைத் தொட முடியாது அவன் வாயன்றி வேறெவனுக்கும் தன்னை உண்ணக் கொடுக்காது
இங்குத்தை வாழ்வை ஒழியவே போய் - இவ்விடம் வாழ்வதை ஒழித்து  போய்
யமுனைக் கரைக்கு என்னை உய்த்திடுமின் - யமுனைக் கரையில் என்னைச் சேர்த்து விடுங்கள்

கச்சு - மார்புக் கச்சு ஆடை
இங்குத்தை - இவ்விடம்  - இங்குத்து - இங்கிட்டு

Image result for yamuna river
யமுனை ஆறு 
தமது அழகிய கைகளிலே சக்கரத்தை ஏந்தியவன் ,அவன் முகத்தைத் தவிர வேறு எவர் முகத்திலும் விழிக்க மாட்டேன் என்ற உறுதி பூண்டுள்ள காரணத்தினாலேயே என் மார்புக் கச்சைகள் ( உடைகள் ) தங்கள் கண்களை மூடிக் கொண்டுள்ளன . முலைகளை மார்பின் கண்களென உருவகம் செய்து சொல்கின்றாள்..அவை செந்நிற ஆடைகள் கொண்டு கண்களை மூடிக் கொண்டுள்ளனவாம்..எதற்கு ? அந்தக் கடவுள் கண்ணனைத் தவிர வேறு சிறு மானிடவரைக் காண விரும்பாமல் வெட்கிக் குனியும். நன்கு கேட்டுக் கொள்ளுங்கள்..


இவை கோவிந்தனுக்காகப் படைக்கப்பட்டவை.. கடவுளுக்குப் படைக்க வேண்டியதை சிறு நாய் நரி உண்ணுதல் முறை ஆகாது..(ஏற்கனவே ஒரு பாடலில் இதைச் சொல்லியும் இருக்கின்றாள்  தற்பொழுது மீண்டும் நினைவூட்டுகின்றாள் )  இவை கோவிந்தன் ஒருவனைத் தவிர வேறொருவன் வாயில் போகாது.
இந்தத் துன்ப வாழ்வை ஒழித்து , எனை அழைத்துக் கொண்டுபோய் யமுனைக் கரைக்கே என்னைச் சேர்த்திடுங்கள் !


இது போன்றப் பாடல்களால்தான் ஆண்டாள் எழுதிய பாடல்கள் அவள் எழுதியது அல்ல அவள் பெயரில் பெரியாழ்வார் எழுதியது என்றெல்லாம் சொல்கின்றார்கள் போல..ஆனால் என் அடிமனம் தொட்டுச் சொல்கின்றேன் ஆண்டாள் அழுத்தக்காரி பிடிவாதக்காரி.. மிக உறுதியாக இவற்றை அவளேதான் எழுதியிருப்பாள்..அவளின் உறுதியைப் பல பாடல்களில் நாம் காணலாம்.. பெண் பாவனையில் பலர் எழுதலாம் வெற்றியும் பெற்றிருக்கலாம்.. ஆனால் பெண்ணாகவே இருந்து எழுதியதை இல்லை என மறுப்பது ,ஒரு பெண் இப்படித்தான் இருக்க வேண்டும் அவள் தன் உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடாது என்ற ஆதிக்க மனநிலையே . அல்லது இவ்வளவு ஆழமாக ஒரு பெண்ணால் எழுத முடியாது என்ற பிறழ்நிலை காரணமாகவும் இருக்கலாம்.. ஆனால் நான் நம்புகின்றேன் மனதார நம்புகின்றேன்


ஆண்டாள் திருவடிகளே போற்றி !!!



Wednesday 28 December 2016

116.தந்தையும் தாயுமுற் றாரும்நிற்கத்

116.தந்தையும் தாயுமுற் றாரும்நிற்கத்

பாடல் :116
தந்தையும் தாயுமுற் றாரும்நிற்கத்
தனிவழி போயினாள் என்னும்சொல்லு
வந்தபின் னைப்பழி காப்பரிது மாயவன் வந்துருக் காட்டுகின்றான்
கொந்தள மாக்கிப் பரக்கழித்துக்
குறும்புசெய் வானோர் மகனைப்பெற்ற
நந்தகோ பாலன் கடைத்தலைக்கே
நள்ளிருட் கணென்னை யுய்த்திடுமின்

விளக்கம் :
தந்தையும் தாயும் உற்றாரும் நிற்கத் - தந்தையும் தாயும் உற்றாரும் தவித்து நிற்க
தனி வழி போயினாள் என்னும் சொல்லு வந்தபின்னைப் - அவர்கள் பேச்சைச் செவி மடுக்காது தனி வழியே சென்றாள் என்னும் சொல்லும் வந்த பின்னே
பழி காப்பது அரிது மாயவன் வந்துருக் காட்டுகின்றான் - இனியும் பழி வராமல் காப்பது அரிது மாயங்கள் காட்டும் மாயோன் வந்து தன் உருவத்தைக் காட்டுகின்றான்
கொந்தளம் ஆக்கிப் பரக்கழித்துக் - குழப்பம் ஆக்கிப் பெரும்பழி விளைவித்து
குறும்பு செய்வானோர் மகனைப் பெற்ற - குறும்பு செய்கின்ற ஓர் மகனைப் பெற்ற
நந்தகோபாலன் கடைத் தலைக்கே - நந்தகோபாலன் வீட்டிற்கே
நள்ளிருட்கண் என்னை உய்த்திடுமின் - நள்ளிரவில் என்னைக் கொண்டு சேர்த்திடுங்கள்


மானிடர்க்கு வாக்கப்பட மாட்டேன்னு பிடிவாதம் செய்துவிட்டாள் மகள் .வயதும் ஏறிக் கொண்டே போகின்றது.. கட்டினால் கண்ணன் இல்லாவிடில் வாழ மாட்டேன் என்று சொல்கின்றாள்.. ? கடவுளைக் கணவனாக அடைவது அவ்வளவு சாத்தியமா என்ன ? பெற்றோரும் உற்றோரும் கவலை கொள்கின்றார்கள்.. கண்ணனைக் காண முடியாமல் கோதையின் உடல்நிலையும் மனநிலையும் நாளுக்குநாள் மோசமாகப் போகின்றது சிலர் கவலையாகப் பேசுறாங்க..பலர் ஏசுறாங்க.. தாய் தந்தைக்காகக் கூட கோதை மனம் மாற்றிக் கொள்ளவில்லை.. தந்தையும் தாயையும் தவிக்க விட்டு இவள் விருப்பப்படி தனி வழி போகிறாள் என இப்படி ஏச்சும் பேச்சும் வாங்கிய பின்னர் இனியும் பழி வராமல் காப்பது கடினம். (முழுக்க நனைந்த பின்னே முக்காடு எதற்கு என்கிறாள் ) மாயோன் கண்ணன் பல மாயங்களைக் காட்டும் கண்ணன்..மறக்க முயன்றும் முடியாத மாதவன் கண் முன்னே வந்து தன் வடிவைக் காட்டி காட்டிப் போவதில் இன்னமும் பித்தே பிடிக்கின்றது.

Image result for nandhagoba ,yashodha  and krishna

குழப்பம் ஆக்கிப் பெரும்பழியை விளைவித்து விட்டான் அந்தக் குறும்புக்கார கண்ணன்..பின்னே..இத்தனைப் பழியும் இவன் மேல் கொண்ட காதலால் அல்லவா வந்த வினை ? ஆகவே அந்தக் குறும்பன் கண்ணனின் தகப்பனான நந்தகோபனின் வீட்டிற்கே நள்ளிரவில் சென்று சேர்த்திடுங்கள் என்னை..
Image result for arts of shanmugavel

ஆமாம் அது ஏன் நள்ளிரவில்..? ஒரு பெண் வீட்டை விட்டு வெளியே செல்வது இக்காலத்திலேயே பெரும் இன்னலை விளைவிக்கின்ற பொழுது அக்காலத்தில் எப்படி இருந்திருக்கும் எனச் சொல்லிப் புரிய வேண்டியதில்லை. அதனால் நள்ளிரவே அவன் வீட்டிற்குச் சென்றால் பலர் பார்க்க வெட்கிக் குனிய வேண்டியதும் இல்லை. ஒரு பெண் இப்படித் தனியாக வந்திருக்கிறாளே என்று ஆயர்பாடியிலும் எவரும் மேலும் கீழுமாகப் பார்க்க மாட்டார்கள்.. அந்த நள்ளிரவில் அன்றே கண்ணனது மனைவியாகிப் போனால் விடியும் வேளை அவளுக்கு மங்கலமாகவும் இருக்கக்கூடும் . அவன் அணைப்பது ஒன்றே அவளுக்கான மருந்து.. தீர்வு..
Image result for arts of shanmugavel
ஓவியம் சண்முகவேல் 

கண்ணனின் தாயோ தங்கையோ வித்தியாசமாகப் பார்க்கும் முன்னம் மாமனார் முன் சென்று நின்றால் இரக்கம் மேலிட உள்ளே விட்டு விடுவார் என்ற எண்ணமும் இருக்கலாம்...

வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்ய கண்ணன் பெண் கேட்டு பின்னர் அவன் கைப்பிடித்து அவனோடு யானையில் ஊர்வலமாக கம்பீரமாக  வெளியே செல்ல வேண்டும் என ஆசைப்பட்டவள் இப்படி நள்ளிரவிலேனும் கொண்டு சேருங்கள் எனச் சொல்ல வைத்து விட்டாரே இந்தக் கண்ணன் :(


Tuesday 27 December 2016

115.நாணி யினியோர் கருமமில்லை

115.நாணி யினியோர் கருமமில்லை
பாடல் :115

நாணி யினியோர் கருமமில்லை
நாலய லாரும் அறிந்தொழிந்தார்
பாணியா தென்னை மருந்துசெய்து
பண்டுபண் டாக்க வுறுதிராகில்
மாணி யுருவா யுலகளந்த
மாயனைக் காணில் தலைமறியும்
ஆணையால் நீரென்னைக் காக்கவேண்டில்
ஆய்ப்பாடிக் கேயென்னை யுய்த்திடுமின்

விளக்கம் :
நாணி இனியோர் கருமமில்லை - வெட்கப்பட்டு இனி ஒரு செயலில்லை
நால் அயலாரும் அறிந்து ஒழிந்தார் - என் வீட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமே தெரிந்த இந்தச் செய்தி உற்றார் ஊரார் என அனைவருக்கும் தெரிந்து விட்டது
பாணியாது என்னை மருந்து செய்து - காலம் தாழ்த்தாது என் நோய்க்கு நீங்கள் மருத்துவம் பார்த்து
பண்டு பண்டாக்க உறுதிராகில் - முன்பு எப்படி இருந்தேனோ அதேபோல்
பண்டுவம் பார்க்க உறுதி உடையவராக இருப்பீர்கள் எனில்
மாணி யுருவா  உலகளந்த - குள்ள உருவில் வந்து உலகளந்த
மாயனைக் காணில் தலைமறியும் - அந்த மாயனை நான் கண்டால் இந்நோய் குணமடைந்து நான் மீள்வேன்
ஆணையால் நீர் என்னைக் காக்க வேண்டில் - என் மீது ஆணையாக நீங்கள் என்னைக் காக்க வேண்டுமானால்
ஆய்ப்பாடிக்கே என்னை உய்த்திடுமின் - ஆயர்பாடியில் என்னைக் கொண்டு சேர்த்து விடுங்கள்
நால் - தொங்குதல்

பெண் பார்க்க வருதலே நம் வழமை..மாயக்கண்ணன் தேடி வருவான்..இவளை அவள் தகப்பனிடம் முறைப்படி பெண் கேட்டு மணம் முடிப்பான் செல்லலாம் அவனோடு கம்பீரமாக என்று எண்ணியிருந்தேன்..மானிடர்க்கு வாழ்க்கைப் பட மாட்டேன் என்று உறுதியாக இருந்தேன். ஆதலால் ருக்மணியைக் கைப்பிடித்தது போல திடீரென எங்கிருந்தேனும் தோன்றி என்னை அழைத்துச் செல்வான் என்றும் நினைத்திருந்தேன்.. ஆனால் அவன் வரவில்லை.. வரச்சொல்லி மேகம் குயில் பூ என அனைத்தையும் தூது அனுப்பியும் அவன் வரவில்லை.. ஆணிடம் தன் ஆசையைச் சொல்லும் பெண்களை இவ்வுலகம் எப்படிப் பார்க்கும் என நான் அறிவேன்.. ஆனால் இவர்களுக்காக என் விருப்பங்களை அடக்கிக்கொண்டு நான் முடங்கி இருக்க முடியாது..இனியும் வெட்கப்பட்டுக் கொண்டிருந்தால் முதலுக்கே மோசமாகிவிடும் .இனி வெட்கப்பட்டு ஆகப்போவது ஒன்றுமில்லை. இனி என்ன இருக்கு?


வம்புக்கு அலைந்து தொங்கும்  அக்கம்பக்கம் , சுற்றத்தார் ஊரார் அனைவர்க்கும் என்னைப் பற்றியும் நான் இப்படி நீயே கதி என புத்தி பேதலித்து இருப்பது தெரிந்துவிட்டது. உடல் மெலிந்தேன் கை வளை இழந்தேன்.. சரிந்த வளைவுகள் காணாமற் போயின. நடலை நோய் கொண்டேன்.


Related image
ஓவியம் சண்முகவேல் 
பார்ப்பவர்கள் எல்லாம் முன்பிருந்த கோதையைக் காணோமே என்று கேட்கும் அளவுக்கு என் உருவம் மாறிவிட்டது. உங்களுக்கு உண்மையாகவே என் மீது அக்கறை இருந்தால், நான் முன்பிருந்தது போலவே எனக்கு மருத்துவம் பார்த்து (பண்டுவம் -மருத்துவம் )  என்னைப் பழைய உருவுக்கு கொண்டுவர உறுதி கொண்டீர்களேயானால் நொடியும்  காலம் தாழ்த்தாது எனக்கு மருத்துவம் செய்யுங்கள்..குறள் (குள்ள ) உருவில் வந்த உலகளந்த உத்தமன் அந்த மாயனைப் பார்த்துவிட்டேன் என்றால் நான் மீண்டுவிடுவேன்..

என் மீது ஆணையாக நீங்கள் என்னைக் காக்க விரும்பினால் (சத்தியம் கேட்கிறாள் ) ஆயர்பாடிக்கு என்னைக் கொண்டு சேர்த்து விடுங்கள்..

நான் மீள இஃது ஒன்றே வழி.

Monday 26 December 2016

114.மற்றிருந் தீர்கட் கறியலாகா

114 .மற்றிருந் தீர்கட் கறியலாகா

நாச்சியார் திருமொழி பனிரெண்டாம் பத்து இனிதே ஆரம்பம் ! திருமாலின் பல அவதாரங்களை இத்திருமொழிகளில் ஆண்டாள் சொல்லி இருந்தாலும் அவளது காதல் முதன்மையானது கண்ணனிடமே.. வடமதுரை மைந்தனிடமே.. அவளுக்கு முதலும் முடிவும் கண்ணனே ..கண்ணனின் குறும்புக் கதைகள் அவளை பால்யத்திலேயே வெகுவாக ஈர்த்திருக்கக் கூடும்..ஈர்ப்பே பின்னாளில் காதலாகக் கனிந்திருக்கக் கூடும் .அவள் கண்ணனைக் காண வேண்டும் என்ற அடி மன ஆசையை இந்தப் பன்னிரண்டாம் பத்தில் எடுத்துரைக்கிறாள் . அதனால் ஆயர்பாடி செல்ல வேண்டும் என்ற அவளின் விருப்பமே இந்தப் பத்தின் சாராம்சம்

பாடல் :114
மற்றிருந் தீர்கட் கறியலாகா
மாதவ னென்பதோ ரன்புதன்னை
உற்றிருந் தேனுக் குரைப்பதெல்லாம்
ஊமைய ரோடு செவிடர்வார்த்தை
பெற்றிருந் தாளை யொழியவேபோய்ப்
பேர்த்தொரு தாயில் வளர்ந்தநம்பி
மற்பொருந் தாமற் களமடைந்த
மதுரைப் புறத்தென்னை யுய்த்திடுமின்

விளக்கம் : 
மற்று இருந்தீர்கட்கு அறியலாகா - என்னோடு மாற்றுக் கருத்து கொண்டவர்க்கு என் வேதனை உங்களுக்குத் தெரியப் போவதில்லை
மாதவன் என்பதோர் அன்புதன்னை - மாதவன் மீது அன்பு
உற்றிருந்தேனுக்கு உரைப்பது எல்லாம் - கொண்டிருக்கும் எனக்கு நீங்கள் பேசுவது எல்லாம்
ஊமையரோடு செவிடர்வார்த்தை - ஊமைகளும் செவிடர்களும் பேசிக் கொள்வது போன்றது
பெற்றிருந்தாளை ஒழியவே போய்ப் - பெற்ற அன்னையான  வாசுகியைப் பிரிந்து
பேர்த்தொரு தாயில் வளர்ந்தநம்பி - நீங்கிவிட்டு வேறொரு தாய் யசோதையிடம் வளர்ந்த நம்பி
மற் பொருந்தாமல் களம் அடைந்த - மற் போரில் போர் புரிவதற்கு முன்பே களம் அடைந்த கண்ணன்  இருக்குமிடமான
மதுரைப் புறத்து என்னை உய்த்திடுமின் - மதுரையில் என்னைக் கொண்டு சேர்த்து விடுங்கள்

பலருக்கும் நாச்சியார் திருமொழி எழுதியது ஆண்டாள் தானா/ ஒரு பெண் அவளுக்கான கட்டமைப்புகளை மீறி இப்படி எழுத முடியுமா? என்ற ஐயம் உள்ளது..அவர்களுக்காகவே இந்த முதல் வரி.. என்னோடு மாற்றுக்கருத்து கொண்ட  உங்களுக்கு என் உணர்வுகள் புரியாது..இந்தக் காலத்திலேயே அவளைப்பற்றி இப்படி பலர் எண்ணுகையில் அந்தக் காலத்தில் எவ்வளவு தூற்றினார்களோ..? அதுவும் அக்காலத்தில் பால்ய விவாகம் எளிதாக நடந்த ஒன்று.. ஆனால் இந்தப் பெண்ணோ "மானிடர்க்கென்று பேச்சுப்படில் வாழ்கில்லேன் " என்று உறுதிபடக் கூறியவள்.. இவளின் உறுதி பலரை வியப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தி இருந்திருக்கும்..சிலர் அவள்  மேலான அன்பில் கூட ஆண்டாளுக்கு அறிவுரை செய்திருக்கக்கூடும் ..நீ கொண்ட காதல் நிறைவேறாது என.. யார் யார் என்ன சொல்லியும் மாதவன் மீது கொண்ட மையலில் இருந்து அவள் வெளியே வந்தாளில்லை..அவளது அன்பின் தீவிரம் அவளோடு மாற்றுக்கொண்டோருக்குப்  புரிய வாய்ப்பில்லை என்கிறாள்..அதுவே உண்மை.
Related image

அதனால்தான் இராமானுசர் கூட "முலைகள் கொண்டவனுக்கே (அதாவது பெண்தன்மை சிறிதளவேனும் கொண்டவனுக்கே ) ஆண்டாளின் மனம் புரியும் என்கிறார்

யார் என்ன வேண்டுமானாலும் பேசுங்கள் உங்களுக்கு என்னைப்பற்றி புரியப் போவதில்லை..மாதவன்பால் தீராத அன்பு கொண்ட எனக்கு நீங்கள் பேசுவது எல்லாம் என் தலையில் ஏறவில்லை..ஊமையர்களும் செவிடர்களும் உரையாடிக் கொண்டால் எப்படி பொருளற்றதாக இருக்குமோ அதைப் போலவேதான் இருக்கிறது என்னிடம் நீங்கள் சொல்லும் அறிவுரைகள் எல்லாம். போதும் வேண்டுமானால் ஒன்று செய்யுங்கள்.. பெற்ற தாயான வாசுகியிடம் இருந்து போய் அவளை  நீங்கி வேறொரு தாயிடம் வளர்ந்தானே
நம்பி , மற்போரில் மல்லர்கள் வரும் முன்பே  களத்தை அடைந்த ( எதற்காக மல்லர்களுடன் சண்டை போடும் முன்பே இருக்கும் கண்ணன் வேண்டுமாம்.. மற்போர் என்பது ஒருவரை ஒருவர் கட்டி அணைத்தே சண்டை இடுவது.. கண்ணனை யாரும் கட்டிப் பிடிக்கும் முன்னமே எனக்கு வேணும்..இனி பிறிதொருவர் அவனைக் கட்டி அணைப்பதை நான் காணச் சகிய மாட்டேன் என்கிறாள் )  அந்த வடமதுரை மைந்தன் கண்ணன்  இருக்கும் இடத்திற்கே என்னைச் சென்று சேர்த்திடுங்கள்..
அதுவே இந்தத் துன்பத்தில் இருந்து நான் உய்யும் ஒரே  வழி !

Thursday 22 December 2016

113.செம்மை யுடைய திருவரங்கர்

113.செம்மை யுடைய திருவரங்கர்

பாடல் :113

செம்மை யுடைய திருவரங்கர் தாம்பணித்த
மெய்ம்மைப் பெருவார்த்தை விட்டுசித்தர் கேட்டிருப்பர்
தம்மை யுகப்பாரைத் தாமுகப்ப ரென்னும்சொல்
தம்மிடையே பொய்யானால் சாதிப்பா ராரினியே

விளக்கம் :
செம்மை உடைய திருவரங்கர் - சிறப்பை உடைய திருவரங்கர்
தாம் பணித்த மெய்ம்மைப் பெருவார்த்தை விட்டு சித்தர் கேட்டிருப்பர் - கட்டளை இட்ட உண்மைப் பெரும்பொருளை பெரியாழ்வார் விஷ்ணு சித்தர் கேட்டிருப்பார்
தம்மை உகப்பாரைத் தாமும் உகப்பர் என்னும் சொல் - தம்மை விரும்புபவரை தாமும் விரும்புவார் என்னும் சொல்
தம்மிடையே பொய் ஆனால் சாதிப்பார் ஆர்  இனியே - காப்பாற்றப் படாமல் அந்த இறைவனாலேயே பொய் ஆகிப் போனால்  இனி யார்தான் சாதிக்க முடியும் ?

செம்மை உடைய திருவரங்கர் பெருமான் பணித்த உண்மை மறை பொருளை பெரியாழ்வார் கேட்டு அதன்படியே வாழ்ந்திருப்பார் .தான் சிரமேற்றுக் கொண்ட செயல்களை வாழ்வில் முறையாகக் கடைபிடித்தவர் என் தந்தை..
தம்மை விரும்பியவர்களை தானும் விரும்புவார் என்ற சொல் அந்த இறைவனாலேயே  காப்பாற்றப் படாமல் பொய் ஆகிப்  போனால் இனி யார்தான் சாதிப்பார் இங்கே ?
ஓம் நமோ நாராயணாய - ௐ -திரு எட்டெழுத்து
மேல் எழுந்ததோர் வாயுக் கிளர்ந்து 
மேல் மிடற்றினை உள் எழ வாங்கி 
காலும் கையும் விதிர்விதிர்த்து ஏறிக் 
கண்ணுறக்கம தாவதன் முன்னம் 
மூலமாகிய ஒற்றை எழுத்தை 
மூன்று மாத்திரை உள்ளெழ வாங்கி 
வேலை வண்ணனை மேவுதிராகில் 
விண்ணகத்தினில் மேவலுமாமே 
- பெரியாழ்வார் திருமொழி (374)
மூலமாகிய ஒற்றை எழுத்தை -
ஓம் - இங்கே ஒரேழுத்தாகவே கொள்ளப்படுகின்றது . 
ஓம் - அவனுக்கும் எனக்கும் உறவு  ( உயிர்களுக்கும்  இறைவனுக்குமான உறவு )
நமோ - எதுவும் எனதில்லை
நாராயணாய - என் எல்லாமும் நாராயணனுக்கே
தீந்தமிழில் அழகாகச் சொல்ல வேண்டுமானால் அரங்கனால் நான் அரங்கனுக்காக நான் 

இப்படி அடியவருக்கும் அரங்கனுக்குமான உறவைக் குறிக்கும் இந்த மெய்ம்மைப் பெருஞ்சொல்லே  பொய்யாகிப் போனால் இனி நான் பேச என்ன இருக்கிறது..எப்படி சாதிப்பேன்?யார் தான் என்ன செய்ய முடியும் ?

ஓர் அருமையான கதை உண்டு..  கடவுள் இராமர் ஆற்றங்கரையில் இளைப்பாறும் போது அம்பை நிலத்தில் குத்திவிட்டுச் சென்றாராம்..திரும்பி வந்து பார்க்கும்போது அந்த அம்பு ஒரு தவளையின் உடலில் குத்தப்பட்டு இருந்ததாம்..பதறிப் போன இராமர் , "ஒரு வார்த்தை இராமா என்று அழைத்திருக்கக் கூடாதா?" என்று வருத்தமுடன் கேட்டாராம்..
அப்பொழுது தவளை வேதனையுடன் சொன்னதாம்.. "வேறு எவரேனும் என்னைத் துன்புறுத்தினால் இராமா என்று உன் பெயரைச்சொல்லி அழைப்பேன்..துன்பம் தந்தவரே இராமனாகிப் போனால் நான் யார் பெயரைச்சொல்லி அழைப்பது? " என்று
Image result for aandal

இங்கே ஆண்டாளும் இந்தக் கதையின் கருப்பொருளைத்தான்  சொல்ல வருகிறாள் என நினைக்கிறேன்..  பத்து &பதினோராம் திருமொழி இறுதியில் தகப்பனைத் துணைக்கு அழைக்கிறாள் ஆண்டாள்.. வலி வேதனை எப்பொழுது அதிகமோ அப்பொழுது அனிச்சை செயலாக அம்மா என்றழைப்பது வழக்கம்..ஆண்டாளுக்குச் சகலமும் பெரியாழ்வார் என்பதால் அவரை முன்னிறுத்தி இறைவனிடம் இறைஞ்சுகிறாள்.உன்னை விரும்புபவர்களை நீயும் விரும்புவாய் என்றல்லவா நினைத்திருந்தேன்.. என் அப்பா
உண்மைப் பெரும் பொருளைக் கடைப்பிடித்தவர் அவரது
முகத்துக்காகவாவது நீ இறங்கி வந்து எனக்கு  இரக்கம் காட்டலாமே என்று சிறுபிள்ளை போலப் பேசுகிறாள் இந்தக் கோதை எனும் பேதை.. காதல் பெருகப்பெருக மனம் பித்துக் கொண்டு பேதலித்து விடுகிறது..ஆரம்பம் முதல் இப்பொழுது வரையிலான ஆண்டாளின் மனநிலைகள் படிப்படியாக எப்படி தடுமாறி இருக்கிறது என்று இதுவரை வந்த பாடல்கள்  மூலம் அறியலாம்.. .. நீயே அந்த திரு எட்டெழுத்து வாக்கை மீறினால் இனி நான் என்ன சாதிக்க முடியும் யார் தான்சாதிப்பார் இனி..

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி 
நேத்து வரை சேர்த்து வச்ச ஆசைகள் வேகுதடி 
நீ இருந்து நான் அணைச்சா நிம்மதி ஆகுமடி 

காத்திருப்பதன் விளிம்பில் நின்று கொண்டு ஆண்டாள்  மொழிகிறாள் . அரங்கர் வருவார் என்று ஏங்கி  இத்துன்பத்தில் இருந்து மீள்வோம் என்ற எண்ணம்  அடியோடு வற்றி விட்ட மொழி இது.

நாச்சியார் திருமொழி பதினோராம் பத்து நிறைவுற்றது !

Wednesday 21 December 2016

112.கண்ணாலங் கோடித்துக் கன்னிதன்னைக்

112.கண்ணாலங் கோடித்துக் கன்னிதன்னைக் கைப்பிடிப்பான்

பாடல் :112

கண்ணாலங் கோடித்துக் கன்னிதன்னைக் கைப்பிடிப்பான்
திண்ணார்ந் திருந்த சிசுபாலன் தேசழிந்து
அண்ணாந் திருக்கவே யாங்கவளைக் கைப்பிடித்த
பெண்ணாளன் பேணுமூர் பேருமரங்கமே

விளக்கம் :
கண்ணாலம் கோடித்துக் கன்னிதன்னைக் கைப்பிடிப்பான் - புதுத்துணி உடுத்தி ,  திருமணம் செய்து கன்னியைக் கைப்பிடிக்கலாம் என்று
திண் ஆர்ந்திருந்த சிசுபாலன் தேசழிந்து - உறுதியுடன் நினைத்திருந்த சிசுபாலன்  தன் ஒளி அழிந்து
அண்ணாந்து இருக்கவே ஆங்கு அவளைக் கைப்பிடித்த - அவன் அண்ணாந்து பார்த்திருக்க அங்கே அவளைக் கைப்பிடித்த
பெண்ணாளன் பேணும் ஊர் பேரும் அரங்கமே - பெண்ணாளன் போற்றும் ஊர் பெயரும் அரங்கமே

தேசு -ஒளி
விதர்ப்ப நாட்டு அரசன் வீமனுக்கு  (பீஷ்மகன் )  ருக்மி என்ற ஆணும் ருக்மணி என்ற பெண்ணும் இருந்தனர். ருக்மியின் நண்பன் சிசுபாலன் .சிசுபாலனுக்கு ருக்மணியை மணம் முடித்து வைக்கலாம் என ருக்மி முடிவு செய்ய ருக்மணியோ கண்ணனை விரும்புகிறாள்..
சிசுபாலன் புதுத் துணி உடுத்தி ருக்மணியைத் திருமணம் செய்து கைப்பிடிக்கலாம் என்று உறுதியுடன் காத்துக் கிடக்க , அவன் முகத்தில் கரியைப் பூசி அவன் அண்ணாந்து பார்த்திருக்க,  (அவன் பிரமித்து ஆ வென வாய் பிளந்து பார்த்திருக்க  ..அவனைத் திட்டும் பொழுது கூட அவன் பெருமை உரைக்கத் தவறுவதில்லை இப்பெண் )  அவன் கண் முன்னேயே கண்ணன் ருக்மணியைத் தட்டிக் கொண்டு போனார்..

Related image

அப்படி பெண் மனம் அறிந்து நடந்தவன் இன்று என் மனம் அறியாமல் போனதேன்..? இக் கோதையின் மனம் அறியாமல் இருப்பவனைத் தான் பெண்ணாளன் என்கிறது ஒரு ஊர்..அந்த ஊரின் பெயர் திருவரங்கம்
(சற்று அவளது  குமட்டில் , ம்க்கும் என  இடித்துக் கொண்டே இதைச் சொல்வது எண்ணிக் கொள்ளுங்கள் )

கண்ணாலம் - அட பேச்சுத்தமிழ் ..:) 

ருக்மணின்னு பேர் சொல்லல பாருங்க ..பொறாமை.. :) ருக்மணிக்குத் தான் விரும்பிய வாழ்க்கை கிட்டி விட்டது அல்லவா ? அன்று அவள் மனம் புரிந்து மணம் புரிந்தான் அல்லவா..இன்றைக்கு என்ன கேடு வந்ததாம் ?
இதுவரையான  பாடல்களில் திருவரங்கச் செல்வனார் ன்னு மரியாதையா கொஞ்சிட்டு பெண்ணாளனாம் அவனைக் கொண்டாடும் ஓர் ஊரின் பெயர் திருவரங்கமாம் என்கிறாளே..
Related image

கண்ணன் அருகில் இருந்தால் அவன் கையையே பற்றிக் கொண்டிருப்பாள்..இல்லாத கோபத்தில் அவன்மீது  பற்றிக்கொண்டு வருகிறது போல..இதெல்லாம் பெண்களுக்கே உண்டான கோபம்..தொட்டதுக்கெல்லாம் இல்லை தொடாத காரணத்தால் வருவது. :)

என்னதான் அவள் கோபம்  வெளிப்படுத்தினாலும் இந்தக் கோபம் கூட  அணிபின் மற்றுமொரு வெளிப்பாடே..ஒரு கட்டத்துக்கு மேல ஏக்கம் கோபமாக இயலாமை ஆற்றாமையாக வெளிப்படும்.. :)அது போலத்தான் இதுவும்..

இதுக்காக எல்லாம் நீங்க ஆண்டாளைக் கோச்சுக்காதீங்க ..அவளாச்சு அரங்கனாச்சு நாம எதுக்கு ஊடால தலையிட்டுக்கிட்டு..
என்ன நாஞ்சொல்றது ?:) 

Tuesday 20 December 2016

111.பாசிதூர்த் துக்கிடந்த பார்மகட்கு

111.பாசிதூர்த் துக்கிடந்த பார்மகட்கு
பாடல் :111
பாசிதூர்த் துக்கிடந்த பார்மகட்கு பண்டொருநாள்
மாசுடம்பில் நீர்வார மானமிலாப் பன்றியாம்
தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார்
பேசி யிருப்பனகள் பேர்க்கவும் பேராவே
விளக்கம் :
பாசி  தூர்த்துக் கிடந்த பார்மகட்கு பண்டு ஒருநாள் - முன்பு ஒருநாள்  பசுமை நிறைந்து கிடந்த   நிலமகளுக்காக
மாசு உடம்பில் நீர் வார மானமிலாப் பன்றியாம் - அழுக்கேறிய  உடம்பில் நீர் ஒழுக மானம் இல்லாத பன்றியாக வடிவெடுத்த
தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார் - ஒளியுடைய   தேவர் திருவரங்கச் செல்வனார்
பேசி இருப்பனகள் பேர்க்கவும் பேராவே  - என்னிடம் முன்பு  பேசியவற்றை என் மனத்தில் இருந்து நீக்க முயன்றும் நீக்க முடியவில்லை

பெயர்த்தல் /பேர்த்தல் - அகற்றுதல் /நீக்குதல்
தூர் - நிரம்பி /அடைஞ்சு (தூர் வாருதல் -நிறைந்து கிடக்கும் குப்பைகளை வாருதல் )
பாசி - பசுமை

முன்பு ஒருநாள் பசுமை நிறைந்து கிடந்த நிலமகளுக்காக ,அவளின் நலன் பொருட்டு அழுக்கேறிய உடம்பில்,  நீர் ஒழுக மானம் இல்லாத பன்றியாக வடிவெடுத்தவர் ஒளி உடைய திருவரங்கச் செல்வனார்..என்னிடம் என்னவெல்லாம் காதல் மொழி பேசினார் ? ஆனால் மறந்துட்டாரே..அவர் மறந்தாலும் என்னால் மறக்க முடியவில்லையே.. அவர் பேசியவற்றை எல்லாம் என் மனசுல இருந்து முழுசா பெயர்த்துடவே நினைக்கறேன் ஆனாலும் பெயர்க்க முடியலையே என்ன செய்வேன் ?


ஓவியம் - கேசவ் 

இங்கே பெயர்க்க என்ற சொல் இவள் வலிக்கு இன்னும் வலு சேர்க்கிறது.. ஆமாம் வெறுமனே நீக்குதல் விலக்குதல் விட பெயர்க்குதல் இன்னும் அவள் ஆழ் மனத்தில் அவள் காதலன் உரைகள் எந்த அளவுக்கு ஆழமாகப் பதிந்து இருக்கிறது என்பதை நமக்குப் பறை சாற்றுகிறது..ஏதேனும் கனமான பொருளை நகர்த்தவே முடியாத ஒன்றை அகற்ற இந்தப் பெயர்த்தல் என்ற சொல் இதுவரை பேச்சு வழக்கில் பயன்படுகிறது.. இவள் காதலனும் அவன் தந்த நினைவுகளும் அப்படித்தான்...(ஆமா இவ எப்ப கண்ணனோட பேசினாள்ன்னு கேட்கப் பிடாது..அதுவும் இவ்வளவு பாடலுக்கு அப்புறம்..ஏனெனில் அவள் வாழ்வது ஒரு கற்பனை வாழ்க்கை..அதுல கண்ணன் வருகிறான் அவள் போட்ட கோலம் அழிக்கிறான்..அவள் உடையைத் திருடி வைத்து விளையாடுகிறான்..அவள் வளையல் அவனால் கழன்றது..இப்படி வாழ்ந்து கொண்டு இருப்பவளை இப்பப் போய் நாம அவர் எப்ப வந்து உன்கிட்ட பேசினார்ன்னு நாம கேட்கக்கூடாது ..பேசி இருப்பாரா இருக்கும் :)
Related image


அன்று ஒரு பெண்ணுக்காக மானமில்லா பன்றியாகக் கூட வடிவம் எடுத்தாயே..(பன்றியை மானம் இல்லாததுன்னு சொல்றாளே என்று கோபப்பட வேணாம்..  இப்ப அவளுக்கு இருக்கிறது பித்துப் பிடித்த மனது..போன பாட்டில் கூட சீதையை நினைச்சு அலைஞ்ச பித்துப் பிடித்தவனேன்னு தான் இராமனை வசை பாடுகிறாள்..ஆகவே அவள் மனம் உணர்ந்து நாம் புரிந்து கொள்வோமாக போடா பன்னி ன்னு செல்லமா காதலனைத் திட்டுறா..SORRY  வாடா பன்னி ன்னு ..ஏன்னா அவன் வரவை எதிர்நோக்கித் தான் இவ்வளவும் :)  )
இன்று ஒரு பெண் உன்னை நினைத்து ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கிறேன் ஆனால் இப்ப வரை கண்டுகொண்ட மாதிரியே தெரியல..நானும் உன்னோடு பேசி லயித்த நாட்களை மறக்கவே நினைக்கிறேன்..ஞாபகம் ரணமாக வதைக்கிறது.. தொட்டாலே வலிக்கிறது இதிலே எங்கிருந்து நான் பெயர்த்து எடுக்க..

எவ்வளவு முயன்றும் உன் பேச்சுக்களைப் பெயர்த்து எடுக்கவே முடியவில்லை :((

Monday 19 December 2016

110.உண்ணா துறங்கா தொலிகடலை

110.உண்ணா துறங்கா தொலிகடலை
பாடல் :110
உண்ணா துறங்கா தொலிகடலை யூடறுத்து
பெண்ணாக்கை யாப்புண்டு தாமுற்ற பேதெல்லாம்
திண்ணார் மதிள்சூழ் திருவரங்கச் செல்வனார்
எண்ணாதே தம்முடைய நன்மைகளே யெண்ணுவரே

விளக்கம் :
உண்ணாது உறங்காது ஒலி கடலை ஊடு அறுத்து - உணவு உண்ணாமல் தூங்காமல் நாளும் ஒலிக்கின்ற கடலை ஊடே சென்று அறுத்து (பிளந்து )
பெண் ஆக்கை  யாப்புண்டு தாம் உற்ற பேது எல்லாம்  - பெண் உடல்  மீது விருப்பம் கொண்டு அதற்குக் கட்டுப்பட்டு  தாம் உற்ற மயக்கத்தை (பித்து நிலையை ) எல்லாம்
திண் ஆர் மதிள் சூழ் திருவரங்கச் செல்வனார் - உறுதி நிறைந்த மதிள் சூழ் திருவரங்கச் செல்வனார்
எண்ணாதே தம்முடைய நன்மைகளேயே எண்ணுவரே  - மறந்துவிட்டு (நினைக்காமல் ) தம்முடைய நன்மைகளை மட்டுமே நினைக்கிறாரே

ஒலிகடல் - வினைத் தொகை
ஒலித்த கடல்,  ஒலிக்கின்ற கடல்,  ஒலிக்கும் கடல்
யாக்கை/யாப்பு  - கட்டுதல்

அன்று ஒரு பெண்ணைப் பிரிந்தார் . யார் ராமன்..யாரை சீதையை.. பிரிவுத் துயர் தாளாமல் உண்ணல உறங்கல.. கடலைக் கூட இரண்டாகப் பிளந்து சென்று அவளைக் காப்பாற்றத் துணிந்தவர். முப்பொழுதும் அவள் நினைப்பே..அவள் உடம்பின் மீது ஆசை கொண்டு அதிலே கட்டுண்டவர்  அதிலேயே உழன்று அதனால் தாம் அடைந்த பித்து நிலை எல்லாம் இன்று  மறந்தாரோ அந்தத் திண் ஆர்ந்த (உறுதி நிறைந்த ) மதில் சூழ் திருவரங்கச் செல்வனார் ?


அன்று ஒரு பெண்ணைப் பிரிந்து அவள் உடல் மீது ஆசை கொண்டு பித்துடன் திரிந்ததை மறந்துவிட்டு இன்று தன்னுடைய நன்மைகளை மட்டுமே எண்ணுகின்ற சுயநலவாதியாக மாறி விட்டாரே ?
அவர் ஒரு பெண் மீது பித்து கொண்டார்..இன்று அவர் மீது பித்து கொண்ட பெண்ணை எப்படி மறந்தார்? அன்று அவர் இருந்த அதே நிலையில் தானே இன்று நான் இருக்கிறேன்..எப்படி அதை எண்ணாது போனார் என்னவர் ?அன்று ஒரு பெண்ணால் தான் பெற்ற அதே துன்பத்தை எண்ணாது அதையே அவரும் ஒரு பெண்ணுக்குச் செய்யலாமா?

எனக்குச்  செய்கின்றாரே ..என்னை  மறந்தாரே..

Saturday 17 December 2016

109.கைப்பொருள்கள் முன்னமே கைக்கொண்டார்

109.கைப்பொருள்கள் முன்னமே கைக்கொண்டார் 
பாடல் :109

கைப்பொருள்கள் முன்னமே கைக்கொண்டார் காவிரிநீர்
செய்ப்புரள வோடும் திருவரங்கச் செல்வனார்
எப்பொருட்கும் நின்றார்க்கு மெய்தாது நான்மறையின்
சொற்பொருளாய் நின்றாரென் மெய்ப்பொருளும் கொண்டாரே

விளக்கம் :
கைப்பொருள்கள் முன்னமே கைக்கொண்டார் - என் கையிலிருந்த அனைத்துப் பொருட்களையும் முன்னமே தான் கைப்பற்றிக் கொண்டார்
காவிரி நீர் செய்ப் புரள ஓடும் திருவரங்கச் செல்வனார் - காவிரி நீர் நன் செய்  எனப்படும் விளை நிலங்களில் எல்லாம் புரண்டு ஓடும் திருவரங்கச் செல்வனார்
எப்பொருட்கும்நின்ற யாருக்கும் எய்தாது நான் மறையின் - எல்லாப் பொருட்களிலும் உள் நின்று எவருக்கும் கிட்டாது நான்கு மறையின்
சொற்பொருளாய் நின்றார் என் மெய்ப்பொருளும் கொண்டாரே - சொற்பொருளாய் நின்றார் அவரே என் உடலையும் கொள்ளை  கொண்டாரே

ஏற்கனவே ஒன்றுமில்லாத என்னிடம் இருந்த கொஞ்ச நஞ்ச கைப்பொருட்களையும் பிடிங்கிக் கொண்டார் ..
எவர்? வேற யாரு..  காவிரி நீர் அனைத்து நஞ்சை  நிலங்களில் புரள ஓடும் அந்தத் திருவரங்கச் செல்வனார் தான்..
(நன்செய் நிலங்கள் ஆறு முதலிய நீராதாரங்கள் இருப்பது )
அனைத்துப் பொருட்களிலும் உள் நின்று எவருக்கும் எட்டாத உயரத்தில் நிற்பவர் நான்கு மறையின் சொற்பொருளாய் நின்றவர் என் உடலையும் கொள்ளை கொண்டாரே
நான் மறையின் உட்பொருள் ஓம் -ஓம் என்பது அடியவருக்கும் அரங்கனுக்குமான உறவு .இப்படி எனக்கு உறவானவர் மறை மெய்ப்பொருளோடு என் மெய்ப்பொருளும் கொண்டாரே .
Image result for arts of ilayaraja
ஓவியம் இளையராஜா 



பொன்னு விளையுற நிலம் ஐயா உமது நிலம்..பின்ன காவிரி   அனைத்து  நன்செய்நிலங்களிலும் புரண்டு ஓடுதே..எப்பேர்ப்பட்ட பணக்காரன் நீ..ஆனாலும் நீ என்னாங்குற...இந்த எளியவளிடம் இருக்கும் கைப் பொருட்களை  எல்லாம் கைப்பற்றி வச்சுக்கிட்ட..இப்ப என்னடான்னா என் உடலையும் கொள்ளை கொள்வாய் போலவே ..
வருத்தமா சொல்ற மாதிரி இருக்குல்ல ஆனா அவளுக்கும் வேறென்ன ஆசை..அந்த அரங்கன் வந்து ஆசை தீர அணைக்கணும்ன்னு தான..இப்ப எதுக்கு என் உடலைக் கொள்ளை கொண்டார்னு குற்றம்சாட்டுகிறாள் . உடல் பொருள் ஆவி எல்லாம் உமக்குத்தான் ஐயா..அதிலே சிறு மாற்றம் கூட இல்லை..ஆனா தனியா கிடந்து உன் பிரிவால் அது போகக்கூடாது ..நீ அருகிருந்து அனைத்தையும் அணைத்து எடுத்துக் கொள்..நீ என்னக் கேட்பது நானே தருவேன்.. :) இப்படித் தவிக்க விட்டு உன் பிரிவால் உடல் நலிந்து கெடுவது நியாயம் தானா? ஒரு அரசனானவன் அவனையே நம்பி இருக்கும் குடியானவளுக்கு இதைச் செய்யலாமா ? வேற யாராவது என்னைத் துன்புறுத்தினால் நான் உன்னிடம் வந்து முறையிடுவேன்..நீயே என்னைத் துன்புறுத்தினால் அடியேன் எங்கு செல்வேன் ஐயா.. ?

Friday 16 December 2016

108.பொல்லாக் குறளுருவாய்ப் பொற்கையில்

108.பொல்லாக் குறளுருவாய்ப் பொற்கையில்
பாடல் :108
பொல்லாக் குறளுருவாய்ப் பொற்கையில் நீரேற்று
எல்லா வுலகு மளந்துகொண்ட வெம்பெருமான்
நல்லார்கள் வாழும் நளிரரங்க நாகணையான்
இல்லாதோம் கைப்பொருளு மெய்துவா னொத்துளனே

விளக்கம் :
பொல்லாக் குறள் உருவாய்ப் பொற்கையில் நீர் ஏற்று - பொல்லாச் சிறிய உருவாக தன் பொன்னான கையில் நீர் ஏற்று
எல்லா உலகும் அளந்து கொண்ட எம் பெருமான் -   எல்லா உலகங்களையும்  கொண்ட எம் பெருமான்
நல்லார்கள் வாழும் நளிர் அரங்க நாகணையான் - நல்லவர்கள் வாழும் குளிர்/ பெருமை மிக்க  அரங்க நாகணையான்
இல்லாதோம் கைப்பொருளும் எய்துவான் ஒத்து உளனே - இல்லாதவங்களிடம் இருந்து அவர்களின் கைப்பொருட்களையும்  கவருவான் போல இருக்கிறான்
 குறள் உரு..குறள் - குறுகிய உருவம்


ஏன் பொல்லாக் குறள் உரு..? பார்க்கச் சின்னப் பையனாட்டம் வந்துட்டு பெரிய பெரிய விசயங்களைச் செய்தது.. (மூர்த்தி சிறிது எனினும் கீர்த்தி பெரிது ) என்ன செய்தாராம் ? மாவலியிடம் மூவுலகங்களையும் கேட்டு அவனால் நீர் வார்க்கப்பட்டு அதை ஏற்றுக் கொண்டவன் .ஒரு விதத்தில் அதுவும் ஓர் அபகரிப்பு தானே.. அதனால் தான் இந்தப் பொல்லாதவன் பட்டம் .
நல்லவர்கள் வாழும் பெருமைமிகு  திருவரங்கத்தில் நாகத்தை அணைத்துப் படுத்திருப்பவனைப் பார்த்தால் இல்லாதவர்களிடம் இருந்து அவங்க  கைப்பொருட்களை எல்லாம் தனதாக்கிக் கொள்பவனைப் போல இருக்கிறான் (எளிமையா கொள்ளைக் காரன் என்கிறாள் ) ஏற்கனவே  எல்லா உலகங்களையும்  மாவலியிடம் இருந்து பிடுங்கியவன் தானே..  அதே போல என்னிடமும்
உள்ள கைப் பொருட்களையும்  கொள்ளை கொண்டு விடுவான் போலத் தெரியுதே ..(தட் உன்னைப் பார்த்தா அவ்வளவு நல்லவனாத் தெரியலையே மொமென்ட் for  திருவரங்கன் )

பார்க்கத்தான் குள்ளன் ஆனால் செய்த காரியமோ ஏமாற்றுவேலை..மாவலியையே ஏமாற்றி எல்லா உலகங்களையும் அளந்து பெற்றுக் கொண்டவனாயிற்றே.. அப்பேர்ப்பட்டவன் என்னை மட்டும் விட்டுடுவானா ? எவ்வளவு செல்வம் இருக்கு அவனிடம்.. எப்பேர்ப்பட்ட அரசன் அந்தத் திருவரங்கத்தான்..ஆனால் அவனைப் பார்த்தால் எதுவுமே இல்லாதவர்களிடம் வறியவர்களிடம் இருக்கின்ற கைப்பொருட்கள் அனைத்தையும் பிடுங்குபவனைப் போல இருக்கிறான்..
Related image

ஏதும் உடைமை என ஒன்று   இல்லாதவர்களிடம் இருக்கின்ற சின்னச்சின்ன கைப் பொருட்களைக் கூடப் பிடுங்குதல் நியாயமா ?
(பெரிய சொத்துக்களோ வேறு உடைமைகளோ எதுவும் இல்லாதவ நான்..ஏதோ அன்றாடக் கைப்பொருள் மட்டுமே..அதையும் கைக்கொள்ளுதல் நியாயமா ? )
அவனிடம் பறிபோன என் இதயம் அதனால் மெலிந்த என் உடல் , சரிந்து போன அழகான வளைவுகள் , மெலிந்ததில் கழன்று போன என் வளையல்கள் இப்படி ஒவ்வொன்றாகப் பிடுங்கிக் கொண்டிருக்கிறான் இன்னும் இருக்கின்ற அனைத்தையும் பிடுங்கிவிட்டுத் தான் விடுவான் போல


Wednesday 14 December 2016

107.மச்சணி மாட மதிளரங்கர் வாமனனார்

107.மச்சணி மாட மதிளரங்கர் வாமனனார்

பாடல் :107

மச்சணி மாட மதிளரங்கர் வாமனனார்
பச்சைப் பசுந்தேவர் தாம்பண்டு நீரேற்ற
பிச்சைக் குறையாகி யென்னுடைய பெய்வளைமேல்
இச்சை யுடையரே லித்தெருவே போதாரே

விளக்கம் :
மச்சு அணி மாட மதிள் அரங்கர் வாமனனார் - மாடியும் அழகான மாடங்களும் மதில்களும் உடைய திருவரங்கம் அங்கிருக்கும்  அரங்கர் வாமனனார்
பச்சைப் பசுந்தேவர் தாம்பண்டு நீர் ஏற்ற - பச்சை நிறத்துடையவர் தாம் முன்பு நீர் வார்த்து புவி பெற்ற போதிலும்
பிச்சைக் குறையாகி என்னுடைய பெய் வளை மேல் - பிச்சையில் என்ன குறை மிச்சம் இருந்ததோ என்னுடைய பெய் வளை மீது
இச்சை உடையரேல் இத்தெருவை போதாரே - ஆசை உள்ளவர் போல் இத்தெருவிற்கு வருவாரோ ?

மாடிகளும் அழகுநிறை மாடங்களும் மதில்களும் கொண்ட திருவரங்கத்தின் அரங்கனார் பச்சை நிறத்தவர் , தாம்  முன்பு வாமன அவதாரம் எடுத்த பொழுது ஓங்கி உலகம் முழுவதும் அளந்து நீர் பெற்று (மாவலியால் மூவுலகமும் தாரை வார்த்து கொடுக்கப்பட்டது )  புவியைப் பெற்றார் அந்தப் பிச்சையிலும் இன்னும் குறை ஒன்று மிச்சம் இருக்கின்றது போலும் என்னுடைய
பெய்வளை மீது ஆசை கொண்டு அதை அடைய இத்தெருவிற்கு வருவாரோ ?
Related image
ஓவியம் -கேசவ்
வாமன அவதாரம் எடுத்துப் பின்  ஓங்கி உலகம் அளந்த உத்தமன் ஆண்டாளுக்குப் பிடிச்ச அவதாரம் போலும்..அடிக்கடி இவர் தான் பாடல்களில் வந்துவிடுகிறார்.. மச்சு (கிராமத்தில் மாடியுடன் கட்டப்பட்ட வீடுகளை மச்சு வீடு எனச்சொல்லி கேட்டிருக்கிறேன் 90களில் மண் வீடு புழக்கம் அதிகம் உள்ள காலங்கள் அப்பவே மச்சுவீடு மிகப் பெரியது..ஆண்டாள் காலத்தில் இன்னும் எவ்வளவு பெரிதாக இருந்திருக்க வேண்டும் ) வீடுகளும் (மதில் / மதிள் -இலக்கணப் போலி இரண்டும் சரியே பவளம் - பவழம் போல ) சுவர்களும் ,அழகிய மாடங்களும்  பெரிது பெரிதாக உள்ள திருவரங்கத்தின் அரங்கர் வாமன அவதாரம் எடுத்த பொழுது  மாவலியிடம் , நீரைப் பெற்று  இப்புவியையே  தானமாகப் பெற்றும் இன்னும் அவர் மனத்தில் என்ன குறை உளதோ ?


அந்த மாவலியை ஏமாற்றி இந்தப் பூவுலகைத் தானமாகப் பெற்றது போல என்னையும் ஏமாற்றி நான் அணிந்திருக்கும் என்  கைவளைகளை விரும்பிப்  பெற இத்தெருவழியே வருவாரோ ?அப்படியாச்சும் நான் அவரைப் பார்ப்பேனோ ?

கைவளையல்கள் நீ இன்றிப் பிரிவாற்றாமையால் 
கழன்று செல்தல் ஆகா 
நீ எமை நெருக்கி,அவை  உடைந்து போதலே அவற்றின் பிறவிப் பயன் ;-)



Sunday 11 December 2016

106.பொங்கோதம் சூழ்ந்த புவனியும்

106.பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும்
பாடல் :106
பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும்
அங்காதுஞ் சோராமே யாள்கின்ற வெம்பெருமான்
செங்கோ லுடைய திருவரங்கச் செல்வனார்
எங்கோல் வளையா லிடர்தீர்வ ராகாதே

விளக்கம் :
பொங்கு ஓதம்  சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் - பொங்கும் அலைகள் சூழ்ந்த நிலமும் விண் உலகும்
அங்கு யாதும்  சோராமே ஆள்கின்ற எம் பெருமான் - எந்தக் குறையும் இன்றி,  தளர்வின்றி ஆள்கின்ற எம் பெருமான்
செங்கோல் உடைய திருவரங்கச் செல்வனார் - செங்கோல் உடைய திருவரங்கச் செல்வனார்
என் கோல்  வளையால் இடர் தீர்வர் ஆகாதே - என் கை வளையாலா  துன்பம் தீரப் பெறுவார் ? ஆகாதே
பொங்கும் அலைகள் சூழ்ந்த நிலமும் , விண் உலகமும் அங்கு  ஒரு குறைவுமின்றி தளர்வின்றி ஆள்கின்ற எம் பெருமான் செங்கோலை உடைய திருவரங்கச் செல்வனார்  என் கோல் வளைகளால் தானா துன்பம் தீர்வார் ?ஆகாதே

கடல் சூழ்ந்த இந்த நிலத்தையும் அந்த விண்ணுலகையும் ஆள்கின்றார் .. செங்கோல் கொண்டவர் திருவரங்கத்துச் செல்வன்..இத்தகைய அரசன்,செல்வனுக்கு என் கை வளையல் மீது அப்படி என்ன ஆசை? அதைத் திருடிக் கொள்வதால் அவருக்கு இடர் தீர்ந்து விடுமோ ? இப்படி ஒரு அரசனே தன்னை நம்பியுள்ள குடியானவளின் வளையலை வலியப் பெற்றால் நான் எங்கு செல்வது? இதனால் அவருக்கு ஆகப் போறது என்ன ? எவ்வளவோ செல்வம்  வைத்திருக்கும் செல்வன் அவர்..அப்பெருஞ் செல்வனாருக்கு என் கோல் வளை மீது அப்படி என்ன ஈர்ப்பு?
Image result for a girl with cuff braclet

 அவரையே நினைத்துருகி வளை கழன்றதே ..இந்த வளையலா அவர்தம் துயர் தீர்க்கப் போகின்றது..? அப்படி ஆக வாய்ப்பு இல்லையே !
எப்பேர்ப்பட்ட செல்வந்தர் ,அவருக்கு என்னுடைய வளையலா இடர் தீர்க்கப் போகின்றது..என்று தனக்குத்தானே கேள்வி கேட்டுக் கொள்கிறாள்..

ஒரு வகைப் புலம்பலும் கூட..


Thursday 8 December 2016

105.எழிலுடைய வம்மனைமீர்

105.எழிலுடைய வம்மனைமீர் 
பாடல் : 105
எழிலுடைய வம்மனைமீர் என்னரங்கத் தின்னமுதர்
குழலழகர் வாயழகர் கண்ணழகர் கொப்பூழில்
எழுகமலப் பூவழக ரெம்மானார் என்னுடைய
கழல்வளையைத் தாமும் கழல்வளையே யாக்கினரே

விளக்கம் :
எழில் உடைய அம்மனைமீர் என் அரங்கத்தின் இன்அமுதர் - அழகுமிக்க தாய்மார்களே ! என் அரங்கத்தின் இனிமையான  அமுதர்
குழல் அழகர் வாய் அழகர் கண் அழகர் - முடி அழகர் வாய் அழகர் கண் அழகர்
கொப்பூழில்  எழுகமலப் பூவழகர் எம்மானார் - தனது தொப்புளில் இருந்து எழுந்த தாமரைப் பூ கொண்ட  அழகர் எம் தலைவர்
என்னுடைய  கழல்வளையைத் தாமும் கழல் வளையே ஆக்கினரே - என்னுடைய கழல்வளையலைத் தாமும் என் கைகளில் இருந்து கழல்கின்ற வளையல் ஆக்கினரே

அழகுமிக்க தாய்மார்களே !என் அரங்கத்தின் இனிமையான அமுதர் ,முடி அழகர் ,வாய் அழகர் கண் அழகர் தனது தொப்புளில் இருந்து எழும் தாமரைப் பூ கொண்ட  அழகர் அப்படியான என் தலைவர் என்னுடைய கழல்வளையலைத்  (வளையல்களில்  ஒருவகை வளையல்  ) தாமும் என் கைகளில் கழல்கின்ற (கழன்று /நெகிழ்ந்து ) விழுகின்ற வளையல் ஆக்கி விட்டாரே
Image result


பொதுவாகக் குழந்தையைக் கொஞ்சும்போது என் கண்ணு மூக்கு என் வாய் என் தங்கம் என் செல்லம் எனக் கொஞ்சுவோம் இல்லையா..அது போலத்தான் உச்சந்தலையில் இருந்து அவரை ரசிக்கின்றாள்.. பாரேன் அவர் முடி எவ்ளோ அழகு.. வாய் இருக்கே செக்கச் செவேல்ன்னு பவளம் போல இருக்கும் .கண் அன்றலர்ந்த செந்தாமரை போல இருக்கும்.. அவர் இனிமையானவர் ..என் தலைவர் ..என் வளையல்களைத்  தாமாக கழன்று விழும்படி ஆக்கிட்டாரே..
அவர் வந்து சேராத வேதனை இருப்பினும் அவரைத் திட்ட மனம் இன்றி கொஞ்சிக் கொள்கிறாள்..அந்தப் பெண்களிடம் விட்டுக் கொடுக்கவும் மனமில்லாம இனிமையானவர் என்றும் கூறி விட்டாள். அவரே எம் தலைவர் என்று உரைத்து விட்டாள்.. அவரையே நினைத்து வேதனைப்பட்டதில் உடல் மெலிந்து கை வளையல் நெகிழ்ந்து கழன்று விழுந்தோடி விட்டது .. அதற்குக்காரணம் அவரே ..அவரே இப்படிச் செய்துட்டாரே..
அம்மா அவரைப் பிழையா நினைச்சுடக் கூடாது..அதே நேரம் தனது வேதனையையும் சொல்லணும்..

தாயே..பார் இவள் படும் பாடு !

Sunday 4 December 2016

104.தாமுகக்கும் தம்கையில் சங்கமே

104.தாமுகக்கும் தம்கையில் சங்கமே 

பதினோராம் திருமொழி இனிதே ஆரம்பம் :)  இந்தத் திருமொழி முழுவதும் திருவரங்கனுக்கே அர்ப்பணம் .

பாடல் :104
தாமுகக்கும் தம்கையில் சங்கமே போலாவோ
யாமுகக்கு மெங்கையில் சங்கமு மேந்திழையீர்
தீமுகத்து நாகணைமேல் சேரும் திருவரங்கர்
ஆமுகத்தை நோக்காரால் அம்மனே அம்மனே

விளக்கம் :

தாம் உகக்கும் தம் கையில் சங்கமே போலாவோ - தாம் விரும்பி தனது கையில் கொண்டுள்ள  சங்கு போல் ஆகுமோ
யாம் முகக்கும் என் கையில் சங்கமும் ஏந்திழையீர் - நான் விரும்பி என் கையில் அணிந்துள்ள சங்குவளை ? சொல்லுங்கள் சிறந்த அணிகலன்களை அணிந்த பெண்களே !
தீமுகத்து நாகணை மேல் சேரும் திருவரங்கர் - தீ கக்கும் முகம் கொண்ட நாகத்தினை அணைந்து அதன் மேல் படுத்திருக்கும் திருவரங்கர்
ஆ முகத்தை நோக்காரால் அம்மனே அம்மனே - என் முகத்தைப் பார்க்க மாட்டாரோ ?  ஆ..அம்மா அம்மா

ஏந்திழையீர் - சிறந்த அணிகலன்களை அணிந்த பெண்
உகந்து - விரும்பி

சிறந்த அணிகலன்களை அணிந்திருக்கும் பெண்களே !
தாம் விரும்பி,  தமது கையிலே சங்கு வைத்திருக்கிறாரே அவர் அதைப் போலாகுமோ நான் விரும்பி அணிந்திருக்கும் இந்தச் சங்கு வளையல் ?( இன்னமும் குமரி போன்ற கடற்புற மாவட்டங்களுக்குச் சென்றால் சங்கினால் செய்யப்பட ஆபரணங்களைக் காணலாம் )
Related image

தீயினைக் கக்கும் முகம் கொண்ட நாகத்தினை அணைத்தாற்போல் அதன் மேல் துயிலும் திருவரங்கர் பெருமானார் என் முகத்தைப் பார்க்க மாட்டாரோ ..ஆ !(வேதனையில் சொல்லுவது ) வலி வந்தாலே சட்டுன்னு அனிச்சை செயலாக அம்மாவைத் தானே அழைப்போம்..இந்த ஏந்திழையீரை இவள் தாயாக நினைத்து தன் வேதனையைச் சொல்கிறாள்..ஆ..அம்மா அம்மா..வலிக்கிறதே எனக்குப் பாராமுகமாய் இருக்கின்றாரே
Image result

சங்கு வளை அணிந்த பெண்ணின் கையைப் பிடிப்பதை விட்டுவிட்டு வெறும் சங்கைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்..க்கும் ..ஏற்கனவே கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ திருப்பவள வாய் தான் தித்தித்து இருக்குமோ விருப்புற்றுக் கேட்கிறேன் சொல்லாழி வெண் சங்கே ன்னு கேட்டவள் தானே இவள்..நீ ஒருத்தனா அவரது வாயமுதம் பருகுகிறாய் என்று பொறாமையில் புகைந்தவள் தானே..இன்று தோழியிடம் கேட்கிறாள்..அந்த சங்கு போல இருக்குதா என் சங்கு வளையல்..(ஒருவேளை ஒரே மாதிரி இருந்தா பிடிக்கத் தோதா இருக்கும்ல அப்புறம் அதற்குப் பதில் இதைப் பிடிச்சா என்னன்னு கேட்கலாம்ல அதுக்குத்தான் இந்தக் கேள்விலாம் வருது இவளுக்கு :)
அது ஏன் சிறந்த அணிகலன்கள் அணிஞ்சவங்களக் கேட்கணும்..அவங்கதான் சரியா தீர்ப்புச் சொல்வாங்க  (அதாவது அவளுக்குச் சாதகமா வந்தா அது சரி :)) )
நானும்தான் சங்கு வளையல் போட்டிருக்கேன்..அந்தச் சங்கை விட்டுட்டு இதைப் பிடிக்கலாமே மாமு  :))






Friday 2 December 2016

103. நல்லஎன் தோழி நாக

103.நல்லஎன் தோழி நாக
பாடல் :103
நல்லஎன் தோழி நாக ணைமிசை நம்பரர்
செல்வர் பெரியர் சிறுமா னிடவர்நாம் செய்வதென்
வில்லி புதுவை விட்டுசித்தர்தங்கள் தேவரை
வல்லி பரிசு வருவிப்ப ரேலது காண்டுமே

விளக்கம் :
நல்ல என் தோழி நாகம் அணை மிசை நம்பரர்  - நல்ல என் தோழி ! நாகம் அணைத்து இருப்பவர் நம் பெருமான்
செல்வர் பெரியார் சிறு மானிடவர் நாம் செய்வது என்  - செல்வந்தர் பெரியவர் ஆனால்  நாமோ சிறு மானிடர் நாம் என்ன செய்வது ?
வில்லி புதுவை விட்டு சித்தர் தங்கள் தேவரை  - வில்லிபுத்தூர் விஷ்ணு சித்தர் பெரியாழ்வார் தங்கள் தேவரை
வல்லி பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே - தங்களால் முடிந்த அளவு (தங்கள் வல்லமைக்குத் தக்க ) வழிகளிலே அழைப்பாராகில் அப்பொழுது நாமும்அவரைக் காணலாம்
பரிசு - அன்பளிப்பு / வழி/செய்முறை /மானம் (இங்கே வழி என்ற பொருளில் வருகின்றது )


நல்ல என் தோழியே !
நாகம் அணைத்து இருப்பவர் நம் பெருமான் பெரியவர் ,செல்வந்தர் ஆனால் நாமோ சிறு மனிதர்கள் நாம் என் செய்வது?
வில்லி புத்தூர் விஷ்ணு சித்தர் என்ற பெரியாழ்வார் தங்கள் தேவரை தங்கள் வல்லமைக்குத் தக்க அழைப்பாராகில் அப்போது நாமளும் அவரைப் பார்க்கலாம்..

நான் அழைச்சேன் வரல சின்னப் பொண்ணு என அந்தப் பெரியார் நம் பெருமான் வரலையோ என்று தாழ்வு மனப்பான்மை வந்துடுச்சு அவளுக்கு..அதனால் அவங்கப்பாவைத் துணைக்கு இழுக்கிறாள்.. அவர்தான் பெரிய பெருமாள் பக்தராச்சே..அவர் விதம் விதமா பல வழிகளில் வணங்குவார் ஒருவேளை அவர் அழைச்சா அவர் வரக் கூடும்..அப்போ நாம அவரைக் காணலாம் என்கிறாள்..
பெரியாழ்வார் 

இதற்கு முன் இல்லாத வகையில் இந்தப் பத்தில் தன்னை மிகவும் தாழ்த்திக் கொள்கிறாள் கோதை..நாள் செல்லச்செல்ல அச்சம் வருவது இயல்பு தானே..இப்படியாக இருக்குமோ அப்படியாக இருக்குமோ என்றெல்லாம் எண்ணம் பலவாகச் செல்கிறது.. தன் தரத்துக்கு சான்றளித்தேனும் அவரை அடையத் தகுதி வந்துடுமா எனப் பார்க்கிறாள்.. பாம்பில்  படுத்திருப்பவன் தானே அவனுக்கும் பாம்பைப் போல இரட்டை நாக்கு என்கிறாள்..அவள் கண்ட கற்பனை வாழ்வில் வந்து என்ன சொன்னானோ ..இப்ப சொன்னபடி வரலை என்கிறாள்..என்னையே தருகிறேன் அதிலே அவனே வெளிவரட்டும் எனத் தன் மனத்தை வெளிப்படுத்துகிறாள்..இதற்கு முன்பு வரை அவள் தானே நமக்கு வழி சொன்னாள் ?


இப்ப என்ன இருந்தாலும் நாம் அவனின் முன் சிறு மனிதர்கள் தானே தோழி..நாம் என்ன செய்வது என்று நம்மிடமே கேட்கிறாள்..
இன்னும் இவள் படும் துயரத்தை அதன் வீரியத்தை இனி வரும் பாடல்களில் சற்று வலியுடனே காண்போம்..

பத்தாம் பத்து   நிறைவுற்றது ! ஆண்டாள் திருவடிகளே போற்றி !!!


Thursday 1 December 2016

102.கடலே கடலே உன்னைக் கடைந்து

102.கடலே கடலே உன்னைக் கடைந்து கலக்குறுத்து
பாடல் :102
கடலே கடலே உன்னைக் கடைந்து கலக்குறுத்து
உடலுள் புகுந்துநின் றூறல் அறுத்தவற்கு என்னையும்
உடலுள் புகுந்துநின் றூறல் அறுக்கின்ற மாயற்குஎன்
நடலைக ளெல்லாம் நாகணைக் கேசென்று ரைத்தியே

விளக்கம் :
கடலே கடலே உன்னைக் கடைந்து கலக்கி உறுத்து - கடலே கடலே உன்னைக் கடைந்து கலக்கி உறுத்தி உன்
உடலுள் புகுந்து நின்று ஊறல் அறுத்தவற்கு உடலில் புகுந்து நின்று உன் செல்வமான அமுதத்தை அறுத்தவருக்கு
என்னையும் உடலுள் புகுந்து நின்று ஊறல் அறுக்கின்ற மாயற்கு - என்னையும் என் உடலில் புகுந்து நின்று என் உயிரை அறுக்கின்ற மாயனுக்கு
என் நடலைகள் எல்லாம் நாக அணைக்கே சென்று உரைத்தியே  - என் கற்பனை வாழ்வும்  /துன்பங்கள் எல்லாம் நாகத்தை அணைத்தவனிடமே   சென்று உரைப்பாயாக!

உயிரை அப்படியே உருவி எடுத்துட்ட என்ற சொல்லாடல் உண்டு..அதைத்தான் இங்கு சொல்கிறாள் ஆண்டாளும் . கடலே கடலே .. தேவர்களுக்காக   உன்னைக் கடைந்து கலக்கி அழுத்தி உன் உடலினுள் புகுந்து நின்று உன் அமுதத்தை அறுத்தவருக்கு ,

Image result

போலவே என்னையும் என் உடலினுள் புகுந்து என் உயிரை அறுத்த அந்த மாயோனுக்கு என் துன்பங்களை எல்லாம் நாகத்தை அணைத்தவனிடமே சென்று உரைப்பாயாக !
Image result
ஓவியம் -சண்முகவேல் 
நடலை என்பதற்குப் பல பொருள்..ஒருவித கற்பனை வாழ்வில் வாழ்வது, துன்பம் (நடலை நோய் ) .இவனே கணவன் என்று ஒரு கற்பனை வாழ்ந்து கொண்டு தீராத் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறாள் ..கடலை உருவி அமுதெடுத்தவன் தன் உடலினுள் புகுந்து உயிர் எடுத்தவன் என்று குற்றம் சாற்றுகிறாள் அவனிடமே போய்ச் சொல்லு அவனால்தான் இத்துன்பம் . இத்துன்பத்துக்கு மருந்தும் அவனே என்று போய்ச் சொல்லு 

Wednesday 30 November 2016

101.மழையே மழையே மண்புறம் பூசியுள் ளாய்



101.மழையே மழையே மண்புறம் பூசியுள் ளாய்நின்ற

பாடல் :101
மழையே மழையே மண்புறம் பூசியுள் ளாய்நின்ற
மெழுகூற்றி னாற்போல் ஊற்றுநல் வேங்கடத் துள்நின்ற
அழகப் பிரானார் தம்மையென் நெஞ்சத் தகப்படத்
தழுவநின்றுஎன்னைத் ததர்த்திக்கொண் டூற்றவும் வல்லையே

விளக்கம் :

மழையே மழையே மண்புறம் பூசி உள்ளாய்  நின்ற - மழையே மழையே வெளியே (புறத்தே ) மண் பூசி  உள்ளே நின்ற
மெழுகு ஊற்றினாற்போல்  ஊற்று  - மெழுகு ஊற்றியது போல்  ஊற்றி
நல் வேங்கடத்துள் நின்ற - நலம் செய்யும் வேங்கடத்தில் நின்ற
அழகப் பிரானார் தம்மை என் நெஞ்சகத்து அகப்படத்  தழுவ நின்று - அழகிய பிரான் தன்னை என் நெஞ்சகத்திலே அவரை முழுவதும் ஆரத் தழுவ நின்று அணைக்கும்படி
என்னைத் ததர்த்திக் கொண்டூற்றவும் வல்லையே ! - என்னை அப்படியே நெருக்கிக் கொண்டு  அவரை  ஊற்றவும் வல்லாயோ ?

ததர் - நெருக்கி

இந்தப்  பாடல் பலச் செய்திகளை உள்ளடக்கியது.. மழையிடம்வேண்டிக் கொள்கிறாள் .எப்படி? இதோ கீழே புகைப்படம் பாருங்கள்.. மழைத்துளி பெற்றதும் மண் எப்படி இருக்குனு..அப்படியே மெழுகு மாதிரி இருக்குல்ல.. :) ஆனால் இதுதானா அவள் சொல்ல வந்தது? இல்லை.. உலோகத்தில் சிலை செய்வது பற்றி அறிந்து வைத்திருக்கிறாள்.. பெருமாளின் உலோகச் சிலை செய்யத் தன்னையே மெழுகாக உருக்கித் தர சித்தமாய் இருக்கிறாள்..


மண்ணோடு இணைந்த மழைத்துளி 
MOLD அதாவது ஓர் உருவத்தை மெழுகில் செய்து அதிலே மண் பூசி இறுக்கி , பின்பு ,சூடான  திரவ உலோகத்தை அதிலே ஊற்றுவார்கள்
மண்ணும் மெழுகும் கலந்த mold இல் உலோகம் ஊற்றுதல்

மெழுகு உருகி உலோகம் உருவம் பெற்றதும் ,மண்ணைத் தட்டிவிடுவார்கள் .
Image result

கற்சிற்பம் போல நேரடியாக உலோகத்தில் செய்ய முடியாத காரணத்தினால் இந்த முறை . இவ்வளவு அறிவுடன் இதை அறிந்து வைத்திருந்த பெண்ணாகிலும் காதலும் பிரிவாற்றாமையும் அவளை ஆழ்ந்த துயரத்தில் விட்டுவிட்ட படியால் , இந்த மோசமான வாழ்வில் இருந்து விடுபட,   தானே மெழுகாகி ,அதிலே பெருமாள் என்னும் உலோகத்தை ,ஓர் இடைவெளி இன்றி அவள் மெழுகு உடலில் எந்த  இடமும் விடாம நெருக்கி நெருக்கி   ஊற்றினால்  ,  அவரை என்ஆசை தீரக் கட்டி அணைத்துக் கொள்கிறேன்..
தகிக்கின்ற காதலின் முன்னால் தகிக்கின்ற உலோகத்தின் சூடு பெரிதில்லை. 

பின்னர் அவர் என்னுள் கெட்டிப்பட்டதும் , அன்பின் மழையே நீ பொழிந்து  இந்த மண்ணை  , அதாவது என்னுடைய இந்தத் துன்பவியலான வாழ்வை விலக்கி விடு.  என்னில் இருந்து நலம் மிகும் வேங்கட மலையில் நின்ற வேங்கடவன் வெளியே வரட்டும் .என் ஆவி முழுதும் வேங்கடவன் பரவி , அவன் மீது நானும் விரவி ,சிலையாகி வெளியே வரட்டும்..என்னில் இருந்து அவனே சிலையாகி வெளிப்படட்டும்..(இராமாயணத்தில் அனுமன் நெஞ்சைப் பிளந்ததும் இராமன் தெரிந்தாராம் அதைப் போல இவள் உடைந்தாலும் மண்ணாகிப் போனாலும் இவளில் இருந்து அந்தப் பரமனே வெளியே வருவான் ) 



அவன் வேறு அவள் வேறாக அல்லாமல் அவனே நின்று ஈருடல் ஓர் உயிர் என்பதன்றி ஓருடல் ஈருயிர் ஆகட்டும் ❤❤❤
என் உடலும் உள்ளமும் அவன் ஒருவனுக்கே என்றாகுக ..

இந்த கோதைக்கு ஆண்டாள் எனப் பெயர் வைத்தது யார் ? தீர்க்கதரிசி..

ஆண்டவனையே ஆண்டவள் ஆண்டாள் திருவடிகளே  போற்றி !!!

Thursday 24 November 2016

100.நடமாடித் தோகை விரிக்கின்ற

100.நடமாடித் தோகை விரிக்கின்ற
பாடல் : 100
நடமாடித் தோகை விரிக்கின்ற
மாமயில் காள்உம்மை
நடமாட்டங் காணப் பாவியேன்
 நானோர் முதலிலேன்
குடமாடு கூத்தன் கோவிந்தன்
கோமிறை செய்துஎம்மை
உடைமாடு கொண்டா னுங்களுக்
கினியொன்று போதுமே

விளக்கம் :

நடமாடித் தோகை விரிக்கின்ற மாமயில் காள் - நடனம் ஆடித் தோகை விரிக்கின்ற பெரு மயில்களே
உம்மை  நடமாட்டங் காணப் பாவியேன் - உங்கள் நடனக் களி ஆட்டங்களைக் காண முடியாத பாவியேன்
நானோர் முதல் இலேன் - நான் ஓர் முதல் இல்லாதவள் (முதல் என்பது இங்கே முதலீடு )
குடமாடு கூத்தன் கோவிந்தன் கோ ம் இறை  செய்து - குடம் கொண்டு கூத்தாடிய கோவிந்தன் (அரசன் ) வல்லடியாகக் கவர்ந்து (அரசனுக்குரிய குணங்களின் ஒன்றான வரி விதித்து மக்களிடம் இருந்து வலியப் பெற்றுக் கொள்ளல் )
எம்மை உடைமாடு கொண்டான் - என் உடைமைகளைத் தன் உடைமைகளாக்கிக் கொண்டான்
உங்களுக்கு இனி ஒன்று போதுமே - உங்களுக்கு இனி இந்தக் காரணம் ஒன்று போதுமே உங்கள் ஆட்டத்தை நிறுத்த..

நடனம் ஆடித் தோகை விரிக்கின்ற மயில்களே ! இவ்வளவு அழகான உங்கள் நடனமாட்டங்களைக்  காண முடியாத பாவியாகிப் போனேன்..(ஏனோ மயிலோ இன்ப நடனம் ஆடுகிறது..நானோ மயில் வண்ணன் வராத சோகத்தில் ஆழ்ந்து இருக்கின்றேன் )
முதல் -முதலீடு (investment ) இன்றளவும் முதல் என்றே சொல்வார்கள்..பேச்சுவழக்கில் பல செந்தமிழ்ச் சொற்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன ) வெறும் கையாக இருக்கிறாள்..முதலும் இல்லை பொருளும் இல்லை..(வாழ்வில் எந்தப் பிடிமானமும் இல்லை ) குடம் கொண்டு ஆடும் (தமிழ்க் கூத்து வகைகளில் ஒன்றான குடக் கூத்து ...கரகாட்டமாக இருக்குமோ என நினைக்கிறேன் )

குடக்கூத்து 

 ஆடும் கோ விந்தன் (கோ - அரசன் ) வலிந்து என்னிடம் இருந்து என் உடைமைகளைப் பிடுங்கிக் கொண்டான் என் செல்வங்கள் எல்லாம் அவனுடையதாகி விட்டன (இவளே அவனுடையவளாகத் தானே இருக்க விழைகின்றாள் என்பது வேறு கதை )
Image result
கரகாட்டம் 
உடை மாடு (உடைமைகள் எனும் செல்வம் ..மாடு - மாடு (விலங்கு ) / இடம் (place ) / செல்வம் (treasure /wealth ) மாடல்ல மற்றையவை (குறள் )  ஒரு சொல் பன்மொழி

இதுக்கு முன்ன ஆட்டத்தை நிறுத்தச் சொன்னப்ப ஏன் என உங்களுக்குத் தோன்றி இருக்கலாம்..ஆனா இனி கேட்க மாட்டீங்க தானே இதோ இந்தக் காரணம் உங்களுக்குப் போதுமே ..இனியாவது உங்களது நடனத்தை நிறுத்துங்கள்..

Image result

கண்கள் ஒளி இழந்து ,கை வளைகள் இழந்து ,சரி வளைவுகள் (சாய்ந்த உடல் வளைவுகள் ) இழந்து அழகிழந்து போய் விட்டாள் ..சிரித்த முல்லைப் பற்கள் மூடிக் கொண்டன.. அழகிய கோலம் அலங்கோலம் ஆனது.. ஏற்கனவே வீட்டுக்குள் வந்து வலிந்து வளை கவர்ந்து சென்றவன் எனக் குற்றம் சாட்டி இருக்கிறாள் அல்லவா..இது அதன் தொடர்ச்சி..அதனால்தான் தான் செல்வம் இழந்ததாகவும் அதன்பொருட்டே மயிலை நடனம் ஆட வேண்டாம் என இறைஞ்சுவதாகவும்..

அவன் நினைவுகளையும் அவளையும் தனியாகப் பிரிக்க முடியவில்லை.அவனோடு கற்பனையாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறாள் . கனவு பொய்த்து அது நனவாக மெய்ப்படத்தான் இத்துணைப் போராட்டங்களும்.. குயில்,மேகம்,பூ ,மயில்..இன்னும் என்னவெல்லாமோ  ?:)  அவற்றிடம் தன் வேதனைகளைப் பிதற்றுகிறாள்.. மனிதர்கள் திரும்ப ஏதேனும் சொல்வார்கள்.. இவை எதுவும் திரும்பிப் பேசா.. அது கூட ஒருவகை ஆறுதல் தான்..

யாரோ தன் உடைமைகளைப் பிடுங்கினால் அரசனிடம் முறையிடலாம்..அரசனே பிடுங்குபவன் ஆனால் யாரிடம் சென்று முறையிட..யார் நியாயம் சொல்வார்கள் அவனை எதிர்த்து ? இழந்து நிற்கிறேன்   கேட்பாரும் இல்லை.தனியளாகத்  தவித்து நிற்பவளை ஏளனம் செய்வது போல் உள்ளது  உங்களது நடனம்..
மயில்களே ! சற்றே நிறுத்துங்கள் !



Wednesday 23 November 2016

99.கணமா மயில்காள்

99.கணமா மயில்காள்
பாடல் :99
கணமா மயில்காள் கண்ணபி
ரான்திருக் கோலம்போன்று
அணிமா நடம்பயின் றாடுகின்
றீர்க்கடி வீழ்கின்றேன்
பணமா டரவணைப் பற்பல
காலமும் பள்ளிகொள்
மணவாளர் நம்மை வைத்த
பரிசிது காண்மினே

விளக்கம் :
கணம் மா மயில்காள் கண்ணபிரான் திருக்கோலம் போன்று - திரண்டு இருக்கும்  பெரும்  மயில்களே ..கண்ணபிரான் திருக்கோலம் போன்று இருக்கின்றீர்கள் (கண்ணனின் நிறம் நீலம் மயிலும் அவ்வண்ணமே )
அணிமா நடம் பயின்று ஆடுகின்றீர்க்கு  அடி வீழ்கின்றேன் - அழகாக நடனம் ஆடுகின்றவர்களுக்கு  பாதத்தில் வீழ்கின்றேன் போதும் நிறுத்துங்கள்
பணமாடு அரவணைப் பற்பல காலமும் பள்ளி கொள் மணவாளர் - படம் எடுத்து ஆடும்  பாம்பினைப் பல காலமாகப் படுக்கையாக்கித் தூங்கும் என் மணவாளர்
நம்மை வைத்த பரிசிது காண்மினே - எனக்குக் கொடுத்த வாழ்வு  இதோ உங்கள் பாதத்தில் வீழ்ந்ததுவே தாம் ..நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்

கணம் - கூட்டம் (கணத்தல் - கூடுதல் ,திரள்தல் ) கூட்டமாய்   உலவும் பெரு மயில்களே ! கண்ணபிரான் திருக்கோலம் போன்று இருக்கின்றீர்கள் அவனை மறந்து இங்கே வந்தால் இங்கேயும் அவன் நிறம் கொண்டு நினைவூட்டி விடுகின்றீர்கள்.. ஆனால் என் மனநிலை உங்களுக்குப் புரியவில்லை.. அழகாக நடம் பயின்று ஆடுபவர்களுக்கு நான் சொல்வது என்னவெனில்  உங்கள் பாதம் வீழ்கின்றேன் போதும் நிறுத்துங்கள்!




பணம் (பாம்பின் படம் )  படம் எடுத்து ஆடும் பாம்பினைப் படுக்கையாக்கித் துயிலும் என் மணவாளர் (மாப்பிள்ளை  ) என்னை இப்படி வைத்திருக்கிறார் பாருங்கள்..அவர் கொடுத்த பரிசு இத்துன்பமே..இத்துன்ப வாழ்க்கையே அவர் எனக்குத் தந்தது..உங்கள் அடியில் வீழ வைத்து விட்டார் பாருங்கள்..அவரை நினைத்ததற்கு நல்ல பரிசு இது..

ஓர் அழகிய இள மயில் மற்றொரு மயிலின் காலில் வீழ்ந்து விட்டது :( இந்தக் காதலினால் இன்னும் என்னென்ன இழிநிலைக்குச் செல்லப் போகிறாளோ  இன்னும் எதை எல்லாம் பார்க்கணுமோ ?

Thursday 17 November 2016

98.பாடும் குயில்காள் ஈதென்ன

98.பாடும் குயில்காள் ஈதென்ன
பாடல் :98
பாடும் குயில்காள் ஈதென்ன
 பாடல்நல் வேங்கட
நாடர் நமக்கொரு வாழ்வுதந்
தால்வந்து பாடுமின்
ஆடும் கருளக் கொடியுடை
யார்வந் தருள்செய்து
கூடுவ ராயிடில் கூவிநும்
பாட்டுகள் கேட்டுமே

விளக்கம் :
பாடும் குயில்காள் இது என்ன பாடல் - பாடும் குயில்களே ..இது என்ன பாட்டு
நல் வேங்கட நாடர் நமக்கு ஒரு வாழ்வு தந்தால் வந்து பாடுமின் - நல்ல எனக்கு  நன்மை செய்யக்கூடிய  திருவேங்கட நாட்டினை உடையவன் நமக்கு ஒரு வாழ்வு தந்த பிறகு வந்து பாடுங்கள்
ஆடும் கருளக் கொடி உடையார் வந்து அருள் செய்து - ஆடும் கருளக்கொடி உடையவர் வந்து எமக்கு அருள் செய்து
கூடுவாராயிடில் கூவி நும் பாட்டுகள் கேட்டுமே - என்னைக் கூடுவார் எனில் அப்பொழுது நான் உங்களைக் கூவி அழைக்கிறேன் அப்போ கூவுங்க  உங்கள்பாட்டுகளைக் கேட்கிறேன்

துணையற்ற பொழுதுகளாக என் பொழுதுகள் போய்க் கொண்டிருக்கின்றன..ஆனால் குயில்களே நீங்கள் இங்கு  என்ன பாடிக் கொண்டிருக்கின்றீர்கள்..? எனக்கு நன்மை செய்யக்கூடிய திரு வேங்கட நாடன் எனக்கு ஒரு வாழ்வு தந்த பிறகு அப்பொழுது வந்து பாடுங்கள்..ஆடும் கருடக் கொடி உடையார் வந்து எனக்கு அருள் செய்து என்னைக் கூடுவாராகில் அப்பொழுது நானே உங்களைக் கூவி அழைக்கிறேன்.அன்று வந்து நீங்கள் பாடுங்கள் .(இப்பக் கேட்கும் மனநிலையில் நான் இல்லை..இசை கூட என் காதுகளுக்குப் பேரிரைச்சலாகவே இருக்கின்றது..என்னைப் புரிந்து கொள்ளுங்கள் )

Image result

ஏற்கனவே குயில் விடு தூது செய்தவள்..முதலில் கெஞ்சி இறுதியில் அவரை வரச்சொல்லி கூவாட்டி காட்டை விட்டேத் துரத்தி விடுவேன் என்று மிரட்டியவள் இன்று பிரிவாற்றாமை தாளாது சற்று உன் கூவலை நிறுத்து எனக் கட்டளை இடுகிறாள் எப்பொழுதும் அவன் நினைவிலேயே வாடுபவளுக்கு குயில் கூவுவது கூட இடைஞ்சலாக இருக்கிறது .
கருளக் கொடி - தமிழில் கருளம் சமஸ்கிருதம் சென்று கருட் ஆகித் திரும்ப  கருடனாக வந்தது..  கலுழன் (வெண்மையும் செம்மையும் கலந்த பருந்தினம்..(தமிழ்அகராதியில் படித்தேன் ) 
கலுழன் மேல் வந்து தோன்றினான் - கம்ப இராமாயணம் ) 
முல்லை நிலக் காட்டில் முன் சென்று பருந்து சென்று,  வேட்டை ஆடுவோருக்கு உதவுமாம்..இது பறப்பதை வைத்தே இருக்கும் பொருள் வழி  அறிந்து செல்வார்களாம் 
அடர்ந்த காட்டுக்குள் ஆள் திரட்ட  ஒலி எழுப்பவே சங்கு (ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள (COMMUNICATION  
அடர்ந்த காட்டுக்குள் வேட்டைப் பொருளைத் தாக்கித் திரும்பி வர ஆழி எனப்படும் சக்கரம் (பூமராங் ) (வளரி )
இவை எல்லாம் முல்லை நிலத்தின் பயன்பாட்டுப் பொருட்கள்..ஆகவே தான் முல்லை நிலக் கடவுளான  திருமாலுக்கு உரியவை ஆகின 
ஆண்டாளின் பாடல்களில் நமக்கு எவ்வளவு செய்தி இருக்கிறது பார்த்தீர்களா?

அவனைக் கூடும் போது மட்டுமே குயில்பாட்டு இன்பப் பாட்டாக ஒலிக்கும் ..அப்படி ஓர் இனிய நாள் வரும்போது நானே உங்களைக் கூவி அழைப்பேன் அன்று வந்து பாடுங்கள் 


Wednesday 16 November 2016

97.முல்லைப் பிராட்டி !

97.முல்லைப் பிராட்டி
பாடல் 97
முல்லைப் பிராட்டி நீயுன்
முறுவல்கள் கொண்டுஎம்மை
அல்லல் விளைவியே லாழிநங்
காய் உன்ன  டைக்கலம்
கொல்லை யரக்கியை மூக்கரிந்
திட்ட குமரனார்
சொல்லும் பொய்யானால்
நானும் பிறந்தமை பொய்யன்றே

விளக்கம் :
முல்லைப் பிராட்டி - முல்லைப் பிராட்டியே!
நீ உன் முறுவல்கள் கொண்டு எம்மை அல்லல் விளைவியே - நீ உன் புன்முறுவல்கள் கொண்டு எமக்குத் துன்பம் விளைவிக்காதே
ஆழி நங்காய் உன் அடைக்கலம்  -   சக்கரப் பொறி கொண்ட நங்கையே  உன்னையே அடைக்கலம் எனப் புகுந்தேன்
கொல்லை அரக்கியை மூக்கரிந்திட்ட  - அரக்கி சூர்ப்பனகையின் மூக்கை அரிந்திட்ட
குமரனார் - குமரனார்
சொல்லும் பொய்யானால் - சொல்லும் பொய்யாகிப் போனால்
நானும் பிறந்தமை பொய் அன்றே  - நானும் பிறந்ததும் பொய் ஆகி விடுமே

முல்லைப் பிராட்டியே !  நீ அழகாகப் பூத்துப் புன்முறுவல் செய்கிறாய்..அந்த முறுவல்களைக் கொண்டு எமக்குத் துன்பம் விளைவிக்காதே..(நானே இங்க வருத்ததுல இருக்கேன் ஆனா நீ சிரிப்பது எனக்கு வேதனையைத் தருகிறது உன்னை ரசிக்க முடியல நீ மகிழ்ந்து இருப்பது போல என்னால் மகிழ்ந்து இருக்க முடியல ..அவரோட சேர்ந்து ரசிக்க வேண்டியவற்றை இப்படித் தனியாகப் பார்ப்பது துன்பத்தையே தருகிறது ) பூத்திருக்கும் முல்லைப் பூக்கள் அழகரின் புன் முறுவலை நினைவூட்டி துன்புறுத்துகின்றன போலும்.
Image result for முல்லைப்   பூ
முல்லைப் பூ 

முல்லை என்பது முல்லை நிலத்திற்கான பூ..முல்லை நிலக் கடவுள் மாயோன்..  (மால் ) ஆழி  நங்கை என்ன என்பது பற்றி விசாரித்து அறிந்ததில் அந்த மாயோன் கோட்டங்களில்  முல்லைப் பூக்களைக் குவிச்சுக் கட்டிக் குறி சொல்வதால் முல்லைக் கட்டுவிச்சி.. (ஆழி என்பது முல்லை நில மக்களையும் குறிக்கும் /ஆயுதத்தையும் )  கையில் சக்கரத்தைப் பச்சை குத்தி இருப்பார்களாம் .  முல்லை நிலத்துக்கு உண்டானது இந்தச் சக்கரம்.. (வளரி ) இந்த  முல்லைக் கட்டுவிச்சிகள் இளம்பெண்களைப் பருவ/உடல் மாற்றத்துக்கு ஆற்றுப்படுத்துவார்களாம் .
Related image

அதனால்தான் கோதை ஆழி நங்கையே  உன்னையே அடைக்கலம் புகுந்தேன்.. என்கிறாள்
 சூர்ப்பனகையின் மூக்கை வெட்டிய குமரனார் (இலக்குவன் தானே சூர்ப்பனகையின் மூக்கை வெட்டியது....எனினும்  இவள் ஏன் இராமன் மீது இந்தப் பழியைப் போடுகின்றாள் ? அறியாமல் செய்தாளா... ? அறிவுப் பெண்ணாகிற்றே.. பிறகு ஏன் எப்படி..? இலக்குவனா வந்து , அவர் உன்னை வந்து சேர்வார் எனச் சொல்லி இருப்பார் ? அது பொய்யாகிடுமோ  என அச்சம் கொள்கிறாளா..? இல்லை   இலக்குவனுக்கு அவ்வாறு செய்யச்சொல்லி  ஆணை இட்டது இராமன் என்பதால் நேரடியாக இராமனையே இங்கு குற்றம் சாட்டுகிறாள்..

 பெண்ணாக இருந்தும் துன்பம் செய்ய வந்ததால் அவள் மூக்கை அரிந்தவன் நீ , ஆனால்    இன்று இப்பெண்ணைத் துன்புறுத்துதல் நியாயமா ?இதற்கு என்ன தண்டனை உனக்குத் தருவது? (ஏற்கனவே இரட்டை நாக்கு படைச்சவன் எனத் திட்டி விட்டாள் வேறு ) 

இதையே வேறு பார்வையாக,   துன்பம் தராமல் அடியவர்க்கு நல்லது செய்யும் குமரனாரே, என் குறை தீர்க்காமல் , அடியவருக்கு நல்லதே என்ற உன் சொல்லும் பொய்யாகிப் போனால் பிழை என்று சொல்வதற்காக , சூர்ப்பனகை மூக்கரிந்த  "பழியை" இராமர்  மீது  பழி சுமத்துவதாகவே எடுத்துக் கொள்வோம் :) அவளும் காதல் கைகூடாத வேதனையில் இப்படிச் சீறி வைத்திருக்கிறாள் .



 என்னை வந்து சேர்வேன் என்று சொல்லி விட்டு வராமல் போனால்   நானும் பிறந்தது பொய் ஆகிடுமே (இப்பிறப்பே நான் அவரைச் சேர எடுத்தது..அதுவே நிகழாவிடில் இப்பிறப்பில் யாதொரு பயனும் இல ..வீண்_

"எனையே தந்தேன் உனக்காக
சென்மமே கொண்டேன் அதற்காக "

"வாய் மொழிந்த வார்த்தை யாவும் காற்றில் போனால் நியாயமா
பாய் விரித்து பாவை பார்த்த காதல் இன்பம் மாயமா ..
தேன் நிலவு நான் வாழ ஏன் இந்த சோதனை
வான் நிலவை நீ கேளு கூறுமென் வேதனை

எனைத் தான் அன்பே மறந்தாயோ.."

Tuesday 15 November 2016

96.கோவை மணாட்டி!

96.கோவை மணாட்டி!
பாடல் :96
கோவை மணாட்டி! நீயுன்
கொழுங்கனி கொண்டுஎம்மை
ஆவி தொலைவியேல் வாயழ
கர்தம்மை யஞ்சுதும்
பாவி யேன்தோன்றிப் பாம்பணை
யார்க்கும்தம் பாம்புபோல்
நாவு மிரண்டுள வாய்த்து
நாணிலி யேனுக்கே

விளக்கம் :

கோவை மணாட்டி நீ உன் கொழுங்கனி கொண்டு - கோவை மணாட்டியே !நீ உன் சிவந்த கொழுங்கனிகளைக் கொண்டு
எம்மை ஆவி தொலைவியேல் - என் ஆவியைத் தொலைக்காதே
வாய் அழகர் தம்மை அஞ்சுதும் பாவியேன் தோன்றிப்  -  வாய் அழகானவரின் சிவந்த அதரங்களை நினைவூட்டுகின்றன ..பாவியான நான் பிறந்து
பாம்பணையார்க்கும் தம் பாம்பு போல் - பாம்பினைப் படுக்கையாகக் கொண்டவனுக்கும் தனது பாம்பினைப் போல
நாவும் இரண்டு உள வாய்த்து - இரட்டை நாக்கு வாய்த்து விட்டது போல
நாண் இலியேனுக்கே - ஆனாலும் நான் இன்னமும் அவரையே நினைத்துக்கொண்டு வெட்கமற்றுப் போனேனே

தாயே கோவைக்கொடியே !   நீ உன் சிவந்த திரண்ட கனிகளைக் கொண்டு என் உயிரை வாங்காதே ..அவை வாய் அழகரின் சிவந்த அதரங்களைப்  (இதழ்களை ) போல் தோன்றி அச்சுறுத்துகின்றன  நான் தான் அவரைச் சேர முடியாத பாவியாகப் பிறந்தேன் ..பாம்பினைப் படுக்கையாக்கிக் கொண்டவனுக்கும் தனது பாம்பினைப் போல இரட்டை நாக்கு வாய்த்து விட்டது போல..இல்லாட்டி என்னைச் சேர்வதாகச் சொல்லிட்டு இவ்ளோ நாள் வராம இருப்பாரா ? ஆனாலும் நான் இன்னமும் அவரையே நினைத்துக்கொண்டு வெட்கமற்றுப் போனேனே
Image result
கோவைப்பழம் 
பார்ப்பதில் எல்லாம் அவனுருவம் தெரிந்தால் அவள்தான் பாவம் என் செய்வாள் ? கோவைப்பழம் வேறு சிவந்த அதரங்களை நினைவூட்டி விட்டது.. காமத்தில் தகித்திருக்கும் மனம் வேறு..அப்படியே ஒவ்வொன்றாகத் தொட்டு எங்கு சென்று நிற்கும் எனத் தெரியாதா ?அந்த அச்சம் வேறு பாடாய்ப்படுத்தும் .. ஏன் என் உயிரை வாங்குற..என்று கோபித்துக் கொள்கிறாள்..பெண்ணின் கோபத்திற்குப் பின் மோகமும் உண்டு :)
அடியவர்க்கு அருள் செய்பவன் ஆபத்பாந்தவன் எனப் போற்றப்படுபவன் அவன் இவள் இவ்வளவு உருகியும் வாராது போனால் அவன் பெயர் கெடுமே என்று ஏற்கனவே மிரட்டி விட்டாள்..

அடியவரை  வந்து காப்பேன் என்பது அவன் வாக்கு..அதைச் செயல்படுத்தாமல் போனால் இரண்டாகாதோ நாக்கு.. ?


பாம்பு மேலப் படுத்தவன் தானே அப்ப ரெண்டு நாக்கு இருக்கும் என்று குற்றம் சாட்டுகிறாள்..சொல்றதையும் சொல்லிட்டு அவன் நிறையையும் பாடிட்டு இப்ப அவனைக் குறையும் சொல்லிட்டு இன்னமும் அவர் வரவுக்காக ஏங்கி நிற்பதால் வெட்கமற்றுப் போனேனே எனத் தன்னைத்தானே நொந்தும் கொள்கிறாள்..தன்னைத்தானே தாழ்த்தியும் கொள்கிறாள்..பாவியாகிப் போனேன் என்று..

நாக்கு அவனுக்கு மட்டுமா இரண்டு..இந்தப் பெண்ணுக்கும் மனசு ரெண்டு..வராதப்ப திட்டும் குமுறும்..வந்துட்டா அவ்வளவையும் மறந்துட்டு அவனோடு இழையும்..வராதப்ப பற்றிக்கொண்டு வரும்..வந்து விட்டாலோ அவனையே பற்றிக்கொண்டு இருக்கச் சொல்லும் :) 

ஏன் என்றால்.... அவள் அப்படித்தான்... !