Tuesday 31 January 2017

138.மாத வன்என் மணியினை

138.மாத வன்என் மணியினை
பாடல் : 138
மாத வன்என் மணியினை
வலையில் பிழைத்த பன்றிபோல்
ஏது மொன்றும் கொளத்தாரா
ஈசன் றன்னைக் கண்டீரே
பீதக வாடை யுடைதாழப்
பெருங்கார் மேகக் கன்றேபோல்
வீதி யார வருவானை
விருந்தா வனத்தே கண்டோமே

விளக்கம் :
மாதவன் என் மணியினை - மாதவன் என் மணியினை
வலையில் பிழைத்த பன்றி போல் - வலையில் இருந்து தப்பிப் பிழைத்த பன்றி போல்
ஏதும் ஒன்றும் கொளத் தாரா - ஏதும் ஒன்றும் நாம்  கொள்ள , கைக்குப் பிடி தாராமல் செல்லும்
ஈசன் தன்னைக் கண்டீரே ? - இறைவனைக் கண்டீர்களா ?
பீதக வாடை உடை தாழப் -தனது மஞ்சள்  பட்டாடை தாழப்
பெரும் கார் மேகக் கன்றே போல் - பெரும் கார் மேகக் கன்று போல
வீதியார வருவானை - வீதியில் நிறைந்து வருவானை
விருந்தா வனத்தே கண்டோமே - விருந்தாவனத்தே கண்டோமே

கேள்வி : 
மாதவன் என் மணியினை (முதலில் கொஞ்சிவிட்டாள்  என் மணி என்று )
வலையில் இருந்து தப்பிப் பிழைத்த பன்றி போல் (ஆகா எப்பேர்ப்பட்ட இறைவன் அவனைப் போய் பன்றி என்கிறாள் இந்தப் பெண். எதற்காக பன்றியுடன் ஒப்பிடுகிறாள் ?  பன்றி என்ன செய்யுமாம்..என்னதான் ஆசை ஆசையாய்  வளர்த்தாலும் சாக்கடையில் சென்றுதான் புரளும்..
 பன்றி எப்படி வளர்ப்பார்கள் அது என்ன செய்யும் என்று   அறிந்து வைத்திருக்கின்றாள் . வலை வைத்தே பிடிப்பார்கள் பன்றியை.. ஆனாலும் அதிலும் தப்பித்து சாக்கடைக்கு ஓடும் அதைப் போலவே இவளின் காதல் வலையில் வீழாமல் அதன் நன்மை புரியாமல் தப்பித்து ஓடுகின்றான் கண்ணன்..
Image result for black krishna images


என்னடா..இவள் எப்படி சாக்கடையில் புரளும்  பன்றியோடு ஒப்பிடப் போச்சு..என்று சண்டைக்கு வராதீர்கள்..  . அவளுக்கு எல்லா உரிமையும் இருக்கு.. பன்றி வளர்க்கும் மனிதர்களை ஒதுக்கி வைக்கும் முன்னர் நாம் வணங்கும் இறைவனும் அந்தப் பன்றி அவதாரம் எடுத்தவர் தான் அந்தக் கண்ணன் என்பதை மனத்தில் வையுங்கள்.. பன்றி வளர்ப்பவர்களுக்கு அது செல்லப்பிராணி தானே..அதுவும் ஒரு வீட்டு விலங்கு தானே ..
பெரியாழ்வார் வீட்டில் வளர்ந்தவளுக்கு பன்றி வளர்ப்பு தெரிந்திருக்கிறது எருமை பற்றித் தெரிந்திருக்கிறது ( எருமைச் சிறு வீடு காண் - திருப்பாவை -8)
ஆமா ஆயர்பாடிச் சிறுமிகள் யாம் என்றும் ஒத்துக் கொள்கிறாள்..அதாவது மாடு மேய்க்கிறவள் தாம் உன்னைப் போலவே என்கிறாள் - திருப்பாவை 28)

சரி பாடலுக்குள் வருவோம்..
இப்படி கோதையின் காதலில் இருந்து தப்பிச் சென்றவன் ,கைக்கு எட்ட மறுக்கிறான் (பிடி கொடுக்க மறுக்கிறான் )  விடாமல் தப்பிச் சென்று கொண்டே இருக்கும் என் இறைவனை நீங்கள் கண்டீர்களா ?
Image result for black krishna images


பதில் : ஆம் !மஞ்சள் பட்டாடை உடை தாழ , பெரும் கருத்த மேகக் கன்று போல் (உருவம் கருமை அதை மேகத்தோடு ஒப்பிடுகிறாள் ) வீதியார...(நாம் சொல்வோமே..மனதார..மனம் முழுக்க நிறைஞ்சு துளி கூட வேறு நினையாமல் ஒப்புக்கொள்வது ) அது போல வீதியில் அவன் வருவது கண் கொள்ளாக் காட்சி வீதியார வந்தான் அந்த விருந்தாவனத்தில்..அங்கே கண்டோம்

Sunday 29 January 2017

137.கார்த்தண் கமலக் கண்ணென்னும்

136.கார்த்தண் கமலக் கண்ணென்னும்

பாடல் : 136
கார்த்தண் கமலக் கண்ணென்னும்
நெடுங்கயி றுபடுத்தி என்னை
ஈர்த்துக் கொண்டு விளையாடும்
ஈசன் றன்னைக் கண்டீரே
போர்த்த முத்தின் குப்பாயப்
புகர்மால் யானைக் கன்றேபோல்
வேர்த்து நின்று விளையாட
விருந்தா வனத்தே கண்டோமே

விளக்கம் : 
கார்த் தண் கமலக் கண்  என்னும் - கருத்த மேகத்திலே குளிர்ந்த தாமரை மலர் போன்ற கண்ணினால்
நெடுங் கயிறு படுத்தி என்னை - நீளமான கயிறைக் கொண்டு என்னைப் படுத்தி
ஈர்த்துக் கொண்டு விளையாடும் - என்னைக் கவர்ந்து கொண்டு என்னோடு விளையாடும்
ஈசன் தன்னைக் கண்டீரே - இறைவன் தன்னைப் பார்த்தீர்களா ?
போர்த்த முத்தின் குப்பாயப் - போர்வை போலப் போர்த்திய முத்துக்களினால் ஆன சட்டை கொண்டு
புகர்மால் யானைக் கன்றே போல் - ஒளிர்கின்ற கரும் யானைக் கன்றினைப் போல்
வேர்த்து நின்று விளையாட - வேர்க்க விறுவிறுக்க நின்று விளையாட
விருந்தாவனத்தே கண்டோமே - விருந்தாவனத்தே கண்டோமே
குப்பாயம் - மேற்சட்டை
புகர்மால் -  புள்ளி / ஒளிரும் கருமை

கேள்வி :   கருத்த மேகத்திலே குளிர்ந்த தாமரைக் கண்கள் போல அவனது கருத்த முகத்திலே உள்ள குளிர்ந்த தாமரை போன்ற கண்கள் நெடுங் கயிறு போல என்னை ஈர்த்து என்னைப் படுத்தி எடுக்கின்றது..என்னைக் கட்டிப் போடுகின்றது..அதற்குக் கட்டுண்டே கிடக்கின்றேன். இப்படித் தன் அழகிய தாமரைக் கண்ணினால் கட்டி என்னை ஈர்த்து விளையாடும் இறைவன் எனை ஆள்பவனைக் கண்டீர்களா ?

பதில் : முத்துக்களாலேயே போர்வை போர்த்தியது போன்ற ஓர் மேற்சட்டை அந்தக் கருத்த மேனியும் ஒளிர்கின்றது .(வேர்க்க விறுவிறுக்க அவன் விளையாடியதில் விளைந்த வியர்வைத் துளிகள் பார்க்க  முத்துக்கள் போல பளபளவென ஒளிர்கின்றதாம் அவன் கருத்த மேனியில் அவையே சட்டை போன்று இருக்கின்றதாம் அந்தக் கண்ணனுக்கு ) அந்த வேர்வை முத்துக்கள்
யானை போன்ற உடம்பில் புள்ளி புள்ளியாக இருந்ததைக் குறிப்பிடுவதாகவும் கொள்ளலாம்.

Related image

யானைக் கன்று ..ஆமாம் யானையை விடக் குட்டி யானை கொள்ளை அழகு..அதன் குறும்புகளையும் கண் கொட்டாமல் ரசிக்கலாம்..அதனால்தான் இங்கே கண்ணனுக்கு குட்டி யானை ஒப்பாக வருகின்றது..ஏனெனில் அவன் குறும்பன் அல்லவா..வேர்க்க விறுவிறுக்க அவன் ஒரு யானைக் கன்றினைப் போல அவன் விளையாட அந்த முத்துக்களே ஒரு சட்டை போல் அவன் மேனியில் ஒளிர (கற்பனை செய்யவே கண் கொள்ளாக் காட்சி ) அவன் விருந்தாவனத்தே விளையாடக் கண்டோமே )
கண்ணனை எந்த அளவுக்கு ரசித்து ருசிக்கிறாள் பாருங்கள்..அணு அணுவாக உச்சி முதல் பாதம் வரை முகர்கின்றாள் ..

காதலும் காமமும் ஒருங்கே இணையப் பெற்றவள் :)

Friday 27 January 2017

136.மாலாய்ப் பிறந்த நம்பியை

136.மாலாய்ப் பிறந்த நம்பியை
பாடல் : 136

மாலாய்ப் பிறந்த நம்பியை
மாலே செய்யும் மணாளனை
ஏலாப் பொய்க ளுரைப்பானை
இங்கே போதக் கண்டீரே
மேலால் பரந்த வெயில்காப்பான்
வினதை சிறுவன் சிறகென்னும்
மேலாப் பின்கீழ் வருவானை
விருந்தா வனத்தே கண்டோமே

விளக்கம் :
மாலாய்ப் பிறந்த நம்பியை - கருமையாய்ப் பிறந்த நம்பியை
மாலே செய்யும் மணாளனை - மயக்கம் செய்யும் என் மணளானை
ஏலாப் பொய்கள் உரைப்பானை - ஏற்றுக் கொள்ள முடியாத பொய்கள் பல உரைப்பவனை
இங்கே போதக் கண்டீரே - இங்கே வரப் பார்த்தீர்களா ?
மேலால் பரந்த வெயில் காப்பான் - மேலே விரவி இருக்கும் வெயில் உடலில் படாமல் காப்பவன்
வினதை சிறுவன் - வினதை என்ற பெண்ணின் மகனான கருடனின்
சிறகு என்னும் மேலாப்பின் கீழ் வருவானை - மேலாக விரித்த சிறகின் அடியின் கீழ் வருவானை
விருந்தானவத்தே கண்டோமே - விருந்தாவனத்தே கண்டோமே
ஏல் - ஏற்றுக் கொள்ளல்..ஏலா - ஏற்றுக்கொள்ள முடியாத
மால் - முல்லை நிலக் கடவுள் மால் / கருமை நிறம்  / மயக்கம்
மால் -மை (மை இருட்டு என்பார்களே..கருமை )
புராணப்படி  வினதை - கருடனின் தாய் ,காசிபர்- கருடனின் தந்தை ..
வினதை சிறுவன் - கருடன்

மாலாய்ப் பிறந்த நம்பி,கருப்பாய்ப் பிறந்த நம்பியை ,என்னை மயக்கமுறச் செய்யும் மணாளனை ,(மணாளன் -மாப்பிள்ளைப் பையன் bridegroom )
ஏற்றுக்கொள்ள முடியாத பொய்கள் உரைப்பவனை (அது ஏன் ஏற்றுக் கொள்ள முடியாத பொய்கள்.. இவ்வளவு தவி தவிக்கிறாள் ஆனால் அவன் அதற்கு வராமல் இருக்க ஒரு உண்மைக் காரணமாவது சொல்லலாம் தானே..இந்த அன்பைப் புரியாமல் சட்டென்று வந்து அணைக்காமல் வராமல் சமாளிப்பு செய்பவன் சொல்லும் உரைகள் எல்லாமே பொய்யே ..எதுவும் ஏற்றுக்கொள்ளத் தக்கது இல்லை ) இங்கே வரப் பார்த்தீர்களா ?

Image result for krishna with garuda

வெயில் மேலாகப் பரந்து கிடக்கின்றது..அந்த வெயில் கண்ணன் திருமேனியில் படாமல் வினதை என்ற பெண்ணின் மகன் கருடன் காக்கின்றான்..எப்படி தனது விரிந்த சிறகின் கீழ் வெயில் படாமல் அணைத்துக் கொண்டு வந்து காக்கின்றான்..அப்படி கருடனின் அணைப்பில் அந்தக் கண்ணன் விருந்தாவனத்தில் வரக் கண்டோமே..
இது ஓர் அழகான கற்பனை..பொதுவாக நீங்கள் பெருமாளை கருட வாகனத்தில் எப்படிப் பார்த்திருப்பீர்கள் என நினைவுகூருங்கள். கருடன் இரு கைகளை விரித்திருக்க அந்தக் கைகளில் தனது திருவடிகளை  வைத்துத் தானே..ஆனால் இங்க ஆண்டாள் என்ன சொல்கிறாள் பாருங்கள்..அப்படி நின்றால் வெயில் மேலே படும் என சிறகுகளில் அடியில் கண்ணனைக் கொண்டு வந்து விட்டாராம் கருடன்.. அழகு இல்லையா ? :)

ஏலாப் பொய்கள் உரைப்பான் எனத் திட்டினாலும் அவன் மேனி துன்புறக் கூடாது என்று அவளது அக்கறையை இங்கே கருடனிடம் சுமத்தி விடுகிறாள் பாருங்கள்

இப்படி ஓர் காதலைப் பெற என்ன தவம் செய்தனை...கண்ணா..நீ என்ன தவம் செய்தனை..:)

Wednesday 25 January 2017

135.அனுங்க வென்னைப் பிரிவுசெய்

135. அனுங்க வென்னைப் பிரிவுசெய்
பாடல் 135
அனுங்க வென்னைப் பிரிவுசெய்
தாயர் பாடி கவர்ந்துண்ணும்
குணுங்கு நாறிக் குட்டேற்றைக்
கோவர்த் தனனைக் கண்டீரே
கணங்க ளோடு மின்மேகம்
கலந்தாற் போல வனமாலை
மினுங்க நின்று விளையாட
விருந்தா வனத்தே கண்டோமே

விளக்கம் :
அனுங்க என்னைப் பிரிவு செய்து - என்னை  வருந்த என்னைப் பிரிவு செய்து
ஆயர் பாடி கவர்ந்துண்ணும் - ஆயர் பாடி மக்களைக் கவர்ந்து  உண்ணும்
குணுங்கு நாறிக் குட்டேற்றைக் கோவர்த்தனனைக் கண்டீரே ? - வெண்ணெய் மணம் கொண்டவன்  குட்டைக் காளை  கோவர்த்தனனைக் கண்டீர்களா ?
கணங்களோடு  - தன் நண்பர் கூட்டத்தோடு
மின் மேகம் கலந்தாற்போல -மின்னலும் மேகமும் கலந்தது போல
வனமாலை மினுங்க நின்று விளையாட  - கருத்த தேகத்தில் பல பூக்கள் கலந்த மாலை  மினுங்க அங்கு நின்று விளையாட
விருந்தாவனத்தே கண்டோமே - விருந்தாவனத்தில் கண்டோமே

கேள்வி :  நான் வருந்தும் அளவுக்கு என்னைப் பிரிந்து , ஆயர் பாடி மக்களைக் கவர்ந்து உண்ணும் , வெண்ணை நாற்றம்(நாற்றம் - என்று மோசமான மணத்தைக் குறிப்பதாக இன்று ஆகிவிட்டது.. நாற்றம் என்றாலே மணம் )   கொண்டவன், குட்டைக் காளை கோவர்த்தனனைக் கண்டீர்களா ?
Image result for krishna with cows


பதில் : 
தனது நண்பர்களோடு , கருத்த மேகமும் அதிலே மின்னலும் கலந்தாற்போல , காட்டிலே பூத்த பல பூக்களைக் கொண்டு மாலை அணிந்து அது கருத்த கண்ணனின் தேகத்தில் மினுமினுங்க அவன் அங்கு நின்று விளையாடக் கண்டோமே ..
குணுங்கு நாறி -குட்டேறு - அவனைக் காணோம் எனக் கேட்கும் போது எப்படிச் செல்ல வசைகளைச் சொல்கிறாள் பாருங்கள்..அடேய் அந்த வெண்ணெய் நாற்றம் பிடிச்ச மேனியன் ,  குட்டைக் காளையைப் பார்த்தீங்களா டா .. :)
காட்டோரமாத் திரிபவன் தானே..அங்கே தென்படும் காட்டுப்பூக்கள் பறித்து மாலை அணிந்து கொள்வான் போல.


Sunday 22 January 2017

134.பட்டி மேய்ந்தோர் காரேறு

134.பட்டி மேய்ந்ததோர் காரேறு
நாச்சியார் திருமொழி பதினான்காம் பத்து  ஆரம்பம். இதுவே நாச்சியார் திருமொழியின் கடைசிப் பத்து. அவள் மனம் கொண்ட கள்வன் கண்ணனே அவளுக்கு எல்லாம். கண்ணனின் பல அவதாரங்களாக சொல்லப்பட்டவற்றை அவள் புகழ்ந்தாலும் எத்தனை திருமாலைப் பாடினாலும் அவள் மனம் கண்ணனிடமே. கண்ணனைச் சென்று சேர்வது அவள் வாழ்ந்த வாழ்வின் பிறவிப்பயன் என எண்ணியவள். தன்னை , அவன் வாழ்ந்ததாகச் சொல்லப்பட்ட பிருந்தாவனத்தில் கொண்டு சேர்க்கச் சொல்லி ஒரு பத்துப் பாடல்கள் பாடியிருந்தாள். அதன் பின் அவள் அழலை நோய் தீர மருந்துகள் என்னவென்று சொல்லி இருந்தாள் . தற்பொழுது விருந்தாவனத்தில் கண்ணனைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறாள்.. .
இப்பத்து ஓர் உரையாடல் பாவனையில் தான் அமைந்திருக்கின்றது போவோர் வருவோர் காண்பவற்றிடம் எல்லாம் கண்ணனைப் பார்த்தீர்களா பார்த்தீர்களா என ஆண்டாள்  விசாரிக்க, அவர்களும் அவனைப் பார்த்ததாகச் சொல்கின்றார்கள் .அவள் கேட்டுக் கொள்கிறாளே தவிர 
 இறுதிவரை அவள் பார்த்ததாக எப்பாடலும் இல்லை. வேண்டுதலில் ஆரம்பித்த அவள் மனம் தவிப்பிலேயே முடிந்துவிட்டது.. ஆனால் காலம் என ஒன்று இருக்கிறது இல்லையா ?
இற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் என ஆண்டாள் வேண்டியதைச் 
 செய்துவிட்டது. ஆம்!  இன்றும் பெருமாளையோ ஆண்டாளையோ தனித் தனியாக பிரித்தறிய முடியவில்லை

பாடல் : 134
பட்டி    மேய்ந்ததோர்  காரேறு
பலதே வற்கோர் கீழ்க்கன்றாய்
இட்டீ றிட்டு விளையாடி
இங்கே போதக் கண்டீரே
இட்ட மான பசுக்களை
இனிது மறித்து நீரூட்டி
விட்டுக் கொண்டு விளையாட
விருந்தா வனத்தே கண்டோமே

விளக்கம் : 
பட்டி மேய்ந்த ஓர் கார் ஏறு -தொழுவத்தில் மேய்ந்த  ஒரு கருங் காளை
பலதேவற்கு ஓர் கீழ்க் கன்றாய் - பலதேவருக்கு ஒரு நல்ல தம்பியாய்
இட்டீறிட்டு விளையாடி -   மிதப்புடன்  விளையாடி
இங்கே போதக் கண்டீரே - இங்கே வரக் கண்டீர்களா ?
இட்டமான பசுக்களை - தனக்கு விருப்பமான பசுக்களை
இனிது மறித்து நீரூட்டி - இனிமையாகப் பேசி அவற்றைத் தடுத்து அவற்றிற்கு நீர் ஊட்டி
விட்டுக் கொண்டு விளையாட - மேய விட்டுக் கொண்டு அவன் விளையாட
விருந்தாவனத்தே கண்டோமே - விருந்தாவனத்திலே நாங்கள் கண்டோமே
இட்டீறு - செருக்கு /மிதப்பு

கேள்வி : தொழுவத்தில் மேய்ந்த ஒரு கருங்காளை ,பல தேவருக்கு ஒரு நல்ல தம்பியாய் , செருக்குடன் (ஒரு வித மிதப்புடன் ) விளையாடி இங்கே வரக் கண்டீர்களா ?

Image result for krishna with cows


பதில் : தனக்கு விருப்பமான பசுக்களை ,மேயச் செல்லும் அவற்றை இடை நிறுத்தி அவற்றிற்கு நீர் ஊட்டி ,பின் மேய விட்டுக் கொண்டு விருந்தாவனத்தில் அவன் விளையாடக் கண்டோமே 

Monday 16 January 2017

133.அல்லல் விளைத்த பெருமானை

133.அல்லல் விளைத்த பெருமானை 
பாடல் : 133
அல்லல் விளைத்த பெருமானை
ஆயர் பாடிக் கணிவிளக்கை
வில்லி புதுவை நகர்நம்பி
விட்டு சித்தன் வியன்கோதை
வில்லைத் தொலைத்த புருவத்தாள்
வேட்கை யுற்று மிகவிரும்பும்
சொல்லைத் துதிக்க வல்லார்கள்
துன்பக் கடலுள் துவளாரே
விளக்கம் : 

அல்லல் விளைத்த பெருமானை - துன்பம் கொடுத்த பெருமானை
ஆயர் பாடிக்கு அணி  விளக்கை - ஆயர்பாடியின் அழகான  விளக்கை
வில்லி புதுவை நகர் நம்பி விட்டு சித்தன் வியன் கோதை - வில்லிபுத்தூர் நகர் நம்பி விஷ்ணு சித்தன் என்ற பெரியாழ்வாரால் பெருமை பெற்ற  கோதை
வில்லைத் தொலைத்த புருவத்தாள் -   தன் வேதனையில் வில் போன்ற புருவ அழகைத் தொலைத்தவள்
வேட்கை உற்று மிக விரும்பும் - வேட்கை கொண்டு மிக விரும்பும்
சொல்லைத் துதிக்க வல்லார்கள் - சொல்லைப் பாட வல்லார்கள்
துன்பக் கடலுள் துவளாரே - துன்பக் கடலின் உள் துவள மாட்டார்கள்



தன்னைச் சேராமல் தனக்குத் துன்பம் தந்த பெருமானை ஆயர்பாடியின் அழகான குல விளக்கு கண்ணனை , வில்லி புத்தூர் நகர் நம்பி விஷ்ணு சித்தன்  என்ற பெரியாழ்வாரால் பெருமை பெற்ற  கோதை, (கணவனை எவ்வளவு விரும்பிய போதிலும் தகப்பனை எங்கேனும் விட்டுக் கொடுக்கிறாளா பாருங்கள்.. அவ்வளவு அன்பு அவர் மீது..தான் இன்னாரின் மகள் என்பதிலே தான் அவளுக்கு எவ்வளவு பெருமை )
வில்லைத் தொலைத்த
புருவத்தாள் ..ஏன் அப்படி..? வில் போன்ற அழகிய புருவம் கொண்டிருந்தவள் ஆனால் கண்ணனைச் சேராமல் வேதனையில் உழன்றதில் தூக்கம் போனது. அதனால் அந்த வில்  அழகு போனது. ஆகவே தான் வில்லைத் தொலைத்த புருவத்தாள் .
 வேட்கை கொண்டு மிக விரும்பிச் சொன்ன இந்தப் பாமாலையைத் துதிக்க வல்லார்கள் துன்பக் கடலினுள் துவள மாட்டார்கள் .அவள் வேட்கையை அவள் இடத்திலிருந்து புரிந்தோமானால் எதுவுமே பிழையாகத் தோன்றாது..

இதுவரை தான் அடைந்த துன்பங்களைச் சொன்னாள் .அந்தத் துயர் தீர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் சொல்லிவிட்டாள் . ஒரு பெண்ணாக , தனது ஆசைகளை எந்த அளவுக்கு வெளிப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு வெளிப்படுத்தி இருக்கின்றாள்..இதனாலேயே இன்று இந்தப் பாடல்கள் எல்லாம் இன்றளவும் பெரும்பான்மையோரால் அறியப்படாமலே இருக்கின்றன. அவள் கோவில் கொண்ட வில்லிபுத்தூரில் கூட இவை பொறிக்கப்படவில்லை என்பது உச்சகட்ட வேதனை. அவள் மனத்தை அவள் உணர்வுகளை அவள் தமிழைப் பலரிடமும் கொண்டு சொல்வோம்..

நாச்சியார் திருமொழி பதிமூன்றாம் பத்து  நிறைவுற்றது !

132.கொம்மை முலைக ளிடர்தீரக்

132.கொம்மை முலைக ளிடர்தீரக் 
பாடல் :132
கொம்மை முலைக ளிடர்தீரக்
கோவிந் தற்கோர் குற்றேவல்
இம்மைப் பிறவி செய்யாதே
இனிப்போய்ச் செய்யும் தவந்தானென்
செம்மை யுடைய திருமார்வில்
சேர்த்தா னேலும் ஒருஞான்று
மெய்ம்மை சொல்லி முகம்நோக்கி
விடைதான் தருமேல் மிகநன்றே

விளக்கம் : 
கொம்மை முலைகள் இடர் தீரக் - திரண்டு பருத்த முலைகள் துன்பம் தீரக்
கோவிந்தற்கு ஓர் குற்று ஏவல் - கோவிந்தனுக்கு ஓர் சிறு தொண்டு
இம்மைப் பிறவி செய்யாதே இனிப் போய்ச் செய்யும் தவந்தான் என் - இந்தப் பிறவியில் செய்யாமல் இனி வேறொரு பிறவியில் செய்யும் தவம் தான் எதற்கு ?
செம்மை உடைய திருமார்வில் சேர்த்தான் ஏலும் - செம்மை உடைய அவனது திருமார்பில் எனை ஏற்றுக் கொண்டான் எனில் நல்லது
ஒரு ஞான்று மெய்ம்மை சொல்லி முகம் நோக்கி  - ஒரு நாளேனும் உண்மை சொல்லி என் முகம் நோக்கி
விடை தான் தருமேல் மிக நன்றே - எனக்கு ஒரு விடை தான் தந்தால் மிக நன்றே

திரண்டு பருத்த முலைகள் துன்பம் தீர கோவிந்தனுக்கு ஓர் சிறு தொண்டு இந்தப் பிறவியில் செய்யாமல் இனி வேறொரு பிறவியில் செய்ய அதுவரை தவம் செய்ய வேண்டுமெனில் அப்படி ஒரு தவம் எதற்கு ?

 அவனுடைய சிவந்த  திருமார்பில் எனைச் சேர்த்து அணைத்து ஏற்றுக் கொண்டால் சரி. அல்லது ஒரு நாளேனும்  உண்மை சொல்லி ,என் முகம் நோக்கி விடை தருவான் எனில் மிக நல்லது..

Image result for arts of shanmugavel
ஓவியம் சண்முகவேல் 

காதலித்தாயிற்று . காதலைச் சொல்லியும் ஆயிற்று. ஆனால் அங்கிருந்து பதில் வரவில்லை. என்ன செய்யணும் அவன்..அந்தத் திருமார்போட சேர்த்துக்கனும். அல்லது மெல்ல தனது விரல்களால் என் முகத்தை அவனை நோக்கி எழுப்பனும். முகத்துக்கு நேராகச் சொல்லிடணும் உண்மையை.. உண்டு /இல்லை .பிடிக்குமா பிடிக்காதா..ஏற்றுக் கொள்வானா மாட்டானா..எதுவாக இருந்தாலும் பளிச்சுன்னு போட்டு உடை. (உண்மையை ஏற்கத் துணிந்தாளோ .. அதையும் அவன் அணைத்துச் சொல்லும் சுகத்தில் கேட்க விழைகிறாளோ ..இல்லைன்னு கூடச் சொல்லு ஆனா அதை என் முகம் பார்த்துச் சொல் பார்ப்போம் ..இவள் முகம் பார்த்து ஒருவேளை மனம் இரங்கி இளகிவிடக் கூடும் என்ற நப்பாசையையும் இதிலே .காண்கிறேன்..நம்பிக்கை..அதானே சார் எல்லாம் 

Sunday 15 January 2017

131.உள்ளே யுருகி நைவேனை

131.உள்ளே யுருகி நைவேனை
பாடல் : 131
உள்ளே யுருகி நைவேனை
உளளோ இலளோ வென்னாத
கொள்ளை கொள்ளிக் குறும்பனைக்
கோவர்த் தனனைக் கண்டக்கால்
கொள்ளும் பயனொன் றில்லாத
கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளிப் பறித்திட் டவன்மார்வில்
எறிந்தென் அழலை தீர்வேனே

விளக்கம் : 
உள்ளே உருகி நைவேனை - இவனுக்காக என் உடல் மட்டுமன்றி உள்ளமும் உருகி உருகி நைந்து போய்க்கொண்டிருக்கிறது அப்படி நொந்து போனவளை
உளளோ இலளோ என்னாத - இவள் உயிரோடு இருக்கின்றாளா அன்றி இல்லாமல் போய்விட்டாளோ என்னவெனக் கேட்காத
கொள்ளை கொள்ளிக் குறும்பனைக் - என்னைக் கொள்ளை கொண்ட குறும்பனைக்
கோவர்த்தனனைக் கண்டக்கால் - அந்த கோவர்த்தன கிரியைத் தூக்கிய கோவர்த்தனனைக் கண்டீர்கள் என்றால்
கொள்ளும் பயன் ஒன்றில்லாத கொங்கை தன்னைக்  - அவனை அடையாமல் எந்தப் பயனற்றும் கிடக்கின்ற என் கொங்கைகளை
கிழங்கோடும் அள்ளிப் பறித்திட்டு - வேரோடு பிடுங்கி அள்ளிப் பறித்து
அவன் மார்பில் எறிந்து என் அழலை தீர்வேனே - அவன் மார்பில் எறிந்து  , காமத்தினால் வந்த வெப்ப நோய் தீர்வேனே

கொள்ளை கொள்ளி - அழகான சொல்லாடல் கொள்ளை கொண்டவன் சில நேரம் குழந்தைகளை உயிர்வாங்கி எனத் திட்டுவோமே அது போல :)
அழலை - உடல் சூட்டினால் வருகின்ற நோய். தீயாய்ச் சுடும் காய்ச்சல் )

கண்ணனை நினைத்து நினைத்து உள்ளம் உருகி உள்ளுக்குள்ளேயே நைந்து போகின்றேன் (நைந்து என்பதும் இங்கே அவள் துன்பத்தை வெளிப்படுத்தும் ஆகச்சிறந்த சொல்..வெறுமனே கிழிவதல்ல.அதற்கும் மேலாக .. நினைத்து வாடி மெலிந்து நொந்து வெந்து போய் விட்டாள் )

Image result for arts of shanmugavel
ஓவியம் சண்முகவேல் 

ஆனால் அதைப்பற்றி அந்தக் கண்ணன் அக்கறை கொண்டானில்லை. (பேச்சு வழக்கில் கேட்போமே..இருக்கேனா செத்தேனான்னு ஒரு வார்த்தை விசாரிச்சியான்னு ..அதைத்தான் சொல்றா ) இருக்காளோ இல்லாமப் போயிட்டாளோன்னு என்னான்னு கூடக் கேட்காத, என்னைக் கொள்ளை கொண்டக் குறும்பன் (சிறு வயது கண்ணனின் குறும்பை வைத்துத்தான் அவளுக்கு கண்ணன் மீது தீராத காதல் வந்திருக்கக்கூடும் என்று ஊகித்து வைத்தேன் மெய்ப்பித்து விட்டாள் ) கோவர்த்தனனைக் கண்டேன் எனில் ( ஏன் இவ்விடத்தில் கோவர்த்தனன் ..பசுக்களும் மக்களும் உயிர் வாழ கொற்றக் குடை ஏந்தி மழையில் இருந்து மலை உயரப் பிடித்துக் காப்பாற்றியவன்.ஒருவேளை இவளையும் காப்பாற்றக் கூடும் )
Image result for krishna hugging radha

எந்தப் பயனும் இல்லாத..ஆம் எந்த ஒரு பொருளும் சேரிடம் சேர்ந்தால் தானே அதற்குப் பெருமை கௌரவம்..வைரம் குப்பையில் கிடக்கலாமா..எவ்வளவு பயன் செய்யத் தக்க பொருளாகினும் அது பயன்படக்கூடிய இடத்தில் இருந்தால்தான் அப்பொருளால் பயன் இல்லாவிடில் அது இருந்தும் பயனற்ற ஒன்றுதான். அது போலத்தான் அவன் தொடாமல் பயனற்றுக் கிடக்கின்றன என் மார்புகள்.அவனை மட்டும் கண்டேன் எனில் பயனற்ற இந்த மார்புகளை வேரோடு பிடுங்கி மொத்தமாக அள்ளி எடுத்து , அவன் மார்பில் எறிந்து , நாள்தோறும் காமத்தினால் வெந்து சூடாகி வந்த என் வெப்ப நோய் தீர்வேனே

அவள் காமத் தீ அவன் அணைக்கவே அணையும் !

Saturday 14 January 2017

130.வெற்றிக் கருள கொடியான்றன்

130.வெற்றிக் கருள கொடியான்றன் 
பாடல் :130
வெற்றிக் கருள கொடியான்றன்
மீமீ தாடா வுலகத்து
வெற்ற வெறிதே பெற்றதாய்
வேம்பே யாக வளர்த்தாளே
குற்ற மற்ற முலைதன்னைக்
குமரன் கோலப் பணைத்தோளோடு
அற்ற குற்ற மவைதீர
அணைய வமுக்கிக் கட்டீரே

விளக்கம் : 
வெற்றிக் கருள கொடியான் தன் மீ  - மேன்மை பொருந்திய  வெற்றிக் கருளக் கொடியான் தன்
மீது ஆடா   உலகத்து - ஆணையை மீறி ஆடாத செல்ல முடியாத உலகத்து
வெற்ற வெறிதே பெற்ற தாய் வேம்பே ஆக வளர்த்தாளே- அவனைப் பெற்ற தாய் யசோதை அவனை ஒருவனுக்கும் சிறிதும் பயனில்லாத கசப்பான வேம்பாக வளர்த்தாளே
குற்றமற்ற  முலை தன்னைக் - அவனைத் தவிர வேறு எவரும் தொட முடியாத வேறு எவரையும் நினையாத என் குற்றமற்ற முலைகளை
குமரன் கோலப் பணைத்தோளோடு - குமரனின் அழகிய பருத்த தோளோடு
அற்ற குற்றம் அவை தீர அணைய அமுக்கிக் கட்டீரே - இதுவரை அவன் தோள் சேராத குற்றம் அவை தீர நன்கு அணைத்து அமுக்கிக் கட்டுங்கள் !

கருளக் கொடி - முல்லை மாலுக்கு உரியது வேட்டைக்குச் செல்லும் பொழுது கருளன் வழி காட்டும் அதுவே பின்னாளில் விஷ்ணுவுக்கும் ஆகி வந்தது )
வெற்ற வெறிதே - துளியும் பயனின்றி

வெற்றி பெற்ற கருளக் கொடியான் மேன்மை பொருந்திய அவன் ஆணையை மீறிச் செல்லாத இந்த உலகத்தில் , அவனைப் பெற்ற தாய் யசோதையோ அவனைத் துளியும் பயனில்லாத வேம்பாக வளர்த்து விட்டாள் (யசோதை பெறவில்லை எனினும் வளர்த்தவள் மனம் குளிர பெற்றவள் ஆக்கிவிட்டாள் அதே நேரம் இப்படி அவனை வளர்த்ததற்கு குற்றமும் சாட்டுகின்றாள் )

Image result for arts of shanmugavel

காதல் கைகூடாத வேதனையில் கண்ணனை என்னவெல்லாம் திட்டுகின்றாள் பாருங்கள். போன பாட்டில் கொடியவன் கடியவன் என்றாள் . இப்பொழுது இவனால் யாதொரு பயனும் இல என்கிறாள் ( இதுவும் ஒருவித அன்பு .எவர் மீது நாம் அதிகம் அன்பு செலுத்துகின்றோமோ அவர்கள் தவறு செய்யும்போது தான் கோபமும் அதிகமாக வரும் அதன் பொருட்டே அவர்களை அதிகமாகக் கடிந்து கொள்வோம்..கோபம் இருக்கும் இடத்தில் தான் குணமும் இருக்கும் என்பது ஆன்றோர் வாக்கு ..நம் ஆண்டாளும் அப்படியே..அவளை யாரும் பிழையாக எண்ண வேண்டா.. )


குற்றம் அற்ற முலைகள்..உன்னைத் தவிர வேறு எவரையும் சேர விரும்பாத , வேறு எவரும் இதுவரை தொடாத உன்னை மட்டுமே சேரக் காத்திருப்பவை உனைச் சேர்வதன்றி ஒரு பாவமும் அறியாத குற்றம் அற்றவை. இதுவரை உன் தோள் சேராத ஒன்றே அவற்றின் குற்றம். அந்தக் குற்றம் அவை தீர , குமரனின் (இதுவரை குமரன் என்ற பெயரை முருகனுக்கு மட்டும் தானே பயன்படுத்திக் கேட்டிருப்போம் . பாருங்கள் இது பொதுப் பெயர் போலும் தன் தலைவனுக்கும் இப்பெயரைப் பயன்படுத்துகின்றாள் ) பெரிய பருத்த தோளோடு அவற்றை நெருக்கி அணைத்து அமுக்கிக் கட்டுங்கள் !அவை இதுவரை பெற்ற துன்பமும் நீங்கட்டும். ஆறுதல் பெறட்டும்.!!


129.நடையொன் றில்லா வுலகத்து

129.நடையொன் றில்லா வுலகத்து
பாடல் :129
நடையொன் றில்லா வுலகத்து
 நந்த கோபன் மகனென்னும்
கொடிய கடிய திருமாலால்
குளப்புக் கூறு கொளப்பட்டு
புடையும் பெயர கில்லேன்நான்
போட்கன் மிதித்த அடிப்பாட்டில்
பொடித்தான் கொணர்ந்து பூசீர்கள்
போகா வுயிரென் னுடம்பையே

விளக்கம் : 

நடை ஒன்று இல்லா உலகத்து - ஓர் ஒழுங்குமுறை எதுவும் இல்லாத இந்த உலகத்தில்
நந்தகோபன் மகன் என்னும் கொடிய கடிய திருமாலால் - நந்தகோபன் மகன் என்னும் கொடூரமான இரக்கமற்ற கல் போன்ற கடினமான திருமாலால்
குளப்புப் கூறு கொளப்பட்டு - பெருந் துன்புறுத்துதலுக்கு ஆளாகி
புடையும் பெயரகில்லேன் நான் -அசையவும் முடியாமல் இருக்கின்றேன் நான்
போட்கன் மிதித்த அடிப்பாட்டில் - அந்தப் பொய்யன் மிதித்த அவன்  கால் அடியில் கிடக்கும்
பொடித்தான் கொணர்ந்து - பொடியினை கொண்டு வந்து
பூசீர்கள்  போகா உயிர் என் உடம்பையே -  போக மறுக்கும் உயிர் கொண்ட என் உடம்பில் பூசுங்கள்

இந்த உலகனில் எதுதான் ஒழுங்காக நடக்கின்றது ? (அப்பொழுதேவா ..) எந்த ஒழுங்கிமில்லாத உலகில் ( ஒரு சலிப்போடு சொல்கின்றாள் ..நம் மனநிலையைப் பொறுத்தே தான் வெளிக் காட்சிகளும் அமையும்..எதைப் பார்த்தாலும் வெறுப்பா இருக்கு வேறென்ன செய்ய..)
நந்தகோபன் மகன் இருக்கானே அவன் ரொம்பக் கொடூரமானவன் இரக்கமற்றவன் கல் போன்று மிகக் கடினமானவன் (இப்பவும் எவரையேனும் குறிப்பிடும்போது அவங்க ரொம்பக் கடிசுன்னு பேச்சு வழக்கில் சொல்வதுண்டு..ஆண்டாளின் சிறப்பே பேச்சு வழக்குகளில் வரும் சொல்லாடல்கள் தான்  நான் பெரிய்ய இலக்கியவாதியாக்கும் என்றெல்லாம் சொல்லி நம்மைத் தூர வைக்காமல் நம் அருகிலேயே உட்கார்ந்து கதை சொல்பவள் )

Image result for arts of shanmugavel
ஓவியம் சண்முகவேல் 
கடினமான அந்த திருமாலால் பெரும் துன்புறுத்தலுக்கு ஆளானேன் ..பல வேதனைகள் அடைந்தேன் ஏச்சும் பேச்சுக்களும் வாங்கினேன். நிலைகுலைந்து அசையக் கூட பலமின்றிப் போனேன் நான்.
இருந்தாலும் சொல்கின்றேன் .அந்தப் பொய்யன் ( வருவதாகச் சொல்லிவிட்டு வரவில்லையாம் .இவ்வளவு வேண்டிய அவளிடம் தன் உருக் காட்டவில்லையாம் ) மிதித்த இடத்தில் அவன் கால் பட்ட இடத்தில் இருக்கும் மண்ணை எடுத்துக் கொண்டு வந்தேனும் , போக மறுக்கும் உயிர் கொண்ட உடலின் மீது பூசுங்கள்.
ஓவியம் சண்முகவேல் 

சில நேரங்களில் தொண்டைக்கும் நெஞ்சுக்குழிக்கும் இழுத்துக் கொண்டு இருக்கும் உயிர்..எதையோ மனத்தில் போட்டு அழுத்தி அது நிறைவேறாத காரணத்தினால் போக மனமின்றி உடலிலேயே இருந்து கொண்டிருக்கும். அது நாடிய ஒன்று கிட்டிவிட்டால் உடனே அமைதி பெற்றுக் கிளம்பி விடும் .
அதைத்தான் ஆண்டாள் சொல்கின்றாள். கண்ணனோடு வாழும் ஆசையோடு வலம் வந்தவள். வாழ முடியாமல் போன சோகம் வாட்டுகின்றது. என் உயிர் இன்னும் போகாமல் ஒட்டிக் கொண்டு இருக்கின்றது.அதற்குக்காரணம் அவன்தான். அவன் பாதம் பட்ட மண் இருந்தால் கூடப் போதும் எடுத்து வந்து அதன் மீது பூசுங்களேன்  :(

அநேகமாக இது ஆண்டாள் தன் இறுதிக் காலத்தில் எழுதிய பாடலாக இருக்கக்கூடும் என நினைக்கிறேன்:(

128.அழிலும் தொழிலு முருக்காட்டான்

128.அழிலும் தொழிலு முருக்காட்டான்
பாடல் : 128
அழிலும் தொழிலு முருக்காட்டான்
அஞ்சே லென்னா னவனொருவன்
தழுவி முழுகிப் புகுந்தென்னைச்
சுற்றிச் சுழன்று போகானால்
தழையின் பொழில்வாய் நிரைப்பின்னே
நெடுமா லூதி வருகின்ற
குழலின் தொளைவாய் நீர்கொண்டு
குளிர முகத்துத் தடவீரே

விளக்கம் :
அழிலும் தொழிலும்  உருக்காட்டான் - அழுதாலும் தொழுதாலும் பயனில்லை தன் உருவை என் கண் முன் காட்டாதவன்
அஞ்சேல் என்னான் அவன் ஒருவன் - அச்சம் கொள்ளாதே நான் இருக்கிறேன் என்று ஓர் ஆறுதல் சொல் சொல்லவில்லை அவன்
தழுவி முழுகிப் புகுந்து என்னைச் - அந்த ஒருவன் என்னைச் சுற்றித் தழுவி என்னுள் முழுகிப் புகுந்து என்னைச்
சுற்றிச் சுழன்று போகானால் - சுற்றிச் சுழன்று போகின்றான்
தழையின் பொழில் வாய் நிரைப்பின்னே - சோலையில் மயில் தோகை குடையின்  கீழே பசுக்களின் பின்னே
நெடுமால் ஊதி வருகின்ற - நெடுமால் ஊதி வருகின்ற
குழலின் தொளைவாய் நீர் கொண்டு - புல்லாங்குழலின் துளையின் வழியாக வெளி வரும் நீர் கொண்டு
குளிர முகத்துத் தடவீரே  - என் முகம் குளிரக் குளிரத் தடவுங்கள் !


கண்ணனுக்காக ஏங்கித் தவித்து அழுகின்றேன்..அவனையே நாளும் தொழுகின்றேன். எதற்கும் மசியவில்லை. அவன் உருவம் காட்டவில்லை.
இங்கே ஒரு பெண் அவனுக்காக உருகிக் கொண்டிருக்கிறாளே என்று அவளுக்கு ஆறுதலாக, அஞ்சாதே நான் இருக்கிறேன் என்று ஒரு சொல் கூடச் சொல்லவில்லை.  என்னைத் தழுவி என்னுள் மூழ்கிப் புகுந்து என்னைச் சுற்றிப் போகின்றான் ( virtual Hugging.. ) அவன் நினைவலைகள் இவ்வாறு பாடாய்ப்படுத்துகின்றன


சோலையில் , மயில் தோகைக் குடையின் கீழே , பசுக்களை மேய்த்துக் கொண்டு அதன் பின்னே சென்று கொண்டு நெடுமால் புல்லாங்குழல் ஊதிச் செல்கின்றான்..அவன் ஊதும் பொழுது குழலின் துளையில்  இருந்து வெளிவருகின்ற அவன் வாயமுதம் (உமிழ் நீர் என  எழுதுனா கோச்சுக்குவா  )
கொண்டு அவளின் முகத்தில் குளிரக் குளிர (ஏதோ ஏனோ தானோன்னு தெளிச்சு விட்டுட்டுப் போனா திருப்தி வராதாம்..அதை அப்படியே முகத்தில் அவள் முகம் நன்கு குளிரும் வகையில் நிறையத் தடவணுமாம் ) தடவுங்களேன் .
Image result for krishna kissing radha

மனம் கண்ணனுக்காக எந்த அளவுக்கு ஏங்கித் தவித்திருக்கும் ? அவனோடு இதழ் பொருத்தி மகிழ்ந்து இருக்க எண்ணியவளுக்கு அந்த இதழ் நீரே தீர்த்தம் அதுவே அவளை உயிர்ப்பிக்கும் வழி எனச் சொல்கின்றாள்
கண்ணாமூச்சி ஏனடா...என் கண்ணா 
நான் கண்ணாடி பொருள் போல டா...
அந்த நதியின் கரையை நான் கேட்டேன் 
அந்தக் காற்றை நிறுத்தியும் கேட்டேன் 
வான் வெளியைக் கேட்டேன் விடையே இல்லை 

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா 
எனக்கெனத் தனியாக உணர்ச்சிகள் இல்லையா 
பூவின் கண்ணீர் நீ ரசிப்பாய் ...
நான் என்ன பெண் இல்லையா என் கண்ணா 
அதை நீ காண கண் இல்லையா..உன் கனவுகளில் நான் இல்லையா.. 
தினம் ஊசலாடுது என் மனசு 
ஊமையல்ல என் கொலுசு..
- வைரமுத்து எழுதிய இந்தப் பாடல் ஆண்டாளுக்காகவே எழுதப்பட்டது போல உணர்கின்றேன் :)

Thursday 12 January 2017

127.ஆரே யுலகத் தாற்றுவார்

127.ஆரே யுலகத் தாற்றுவார்
பாடல் :127
ஆரே யுலகத் தாற்றுவார்
ஆயர் பாடி கவர்ந்துண்ணும்
காரே றுழக்க வுழக்குண்டு
தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை
ஆரா வமுத மனையான்றன்
அமுத வாயி லூறிய
நீர்தான் கொணர்ந்து புலராமே
பருக்கி யிளைப்பை நீக்கீரே

விளக்கம் :
ஆரே உலகத்து ஆற்றுவார் -இந்த உலகத்தில்  யார் என்னை ஆற்றுவார்கள் ?

ஆயர் பாடி கவர்ந்து உண்ணும் -ஆயர் பாடி முழுவதும் கவர்ந்து அவர் மனம் கொள்ளை கொண்டிருக்கும்

கார் ஏறு உழக்க உழக்குண்டு - கரிய நிறத்துக் காளை என்னை வருத்த அதனால் வருந்திக்கொண்டு
தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை - தளர்ந்தும் முறிந்தும் கிடப்பவளை
ஆராவமுதன் மனையான் தன் -  என்னவன்ஆராவமுதனின்
அமுத வாயில் ஊறிய நீர்தான் கொணர்ந்து புலராமே - அமுத வாயில் ஊறிய நீர்தான் கொண்டு வந்து,  நான் தெளிய

பருக்கி இளைப்பை நீக்கீரே - அதைப் பருகத்  துணை புரிந்து  எனது இளைப்பை நீக்குங்கள்

ஆயர் பாடி மக்களை முழுவதும் மனம் கவர்ந்த கள்வன் கரிய நிறத்துக் காளை என்னை அலைக்கழிக்கிறான் வருத்துகிறான்..
Image result for arts of shanmugavel
ஓவியம் சண்முகவேல் 
அதிலேயே உழன்று கொண்டு மனம் வருந்திக் கொண்டு தளர்ந்தும் முறிந்தும் கிடக்கிறேன் ..என்னை யார் இந்த உலகத்தில் ஆற்றுப் படுத்துவார்கள் ?


அப்படி எவரேனும் ஆற்ற வேண்டும் எண்ணம் கொண்டவர்கள் இருந்தால் என் மனையான் (இல்லத்து அரசன் - கணவன் ) ஆராவமுதன் வாயில் ஊறிய நீர் (சாமான்யர்கள் வாயில் ஊறினால் தான் அது எச்சில்..அவள் மனம் கொண்டவன் வாயில் ஊறுவது அவளுக்கு அமுதம்..ஏற்கனவே சங்கோடு சண்டையிட்டவள் நீ மட்டும் ஒருத்தனாக அவர் வாயமுதம் பருகுகிறாய் நீயல்லவோ செல்வத்துச் செல்வன் நீ ஒற்றையாய் பருகுதல் நியாயம் ஆகாது..அவன் வாயமுதம் மணம் எப்படி இருக்கும் சொல்லேன் கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ திருப்பவள வாய் தான் தித்தித்து இருக்குமோ என விருப்புற்றுக் கேட்டவள் ஆயிற்றே )

ஆகவே அந்த ஆராவமுதனின் வாயில் ஊறிய நீர் கொண்டு வந்து அவளைப் பருக வைத்து , இந்தக் காதல் நோயினால் பெற்ற இளைப்பை அவளுக்கு நீக்கச்சொல்லி வேண்டுகிறாள் 

Wednesday 11 January 2017

126.கஞ்சைக் காய்ந்த கருவில்லி

126.கஞ்சைக் காய்ந்த கருவில்லி 
பாடல் :126

கஞ்சைக் காய்ந்த கருவில்லி
கடைக்க ணென்னும் சிறைக்கோலால்
நெஞ்சூ டுருவ வேவுண்டு
நிலையும் தளர்ந்து நைவேனை
அஞ்சே லென்னா னவனொருவன்
அவன்மார் வணிந்த வனமாலை
வஞ்சி யாதே தருமாகில்
மார்வில் கொணர்ந்து புரட்டீரே

விளக்கம் : 

கஞ்சைக் காய்ந்த கருவில்லி - கஞ்சன் எனும் கம்சனை வீழ்த்திய கருமை நிற , வில்லினைப் போன்ற புருவம் கொண்ட
கடைக்கண் என்னும் சிறைக்கோலால் - கடைக்கண் பார்வை என்னும்  விழி  அம்பால்
நெஞ்சு ஊடுருவ  - புருவ வில்லில் இருந்து புறப்பட்ட  அந்தப் பார்வை அம்பு என் நெஞ்சை ஊடுருவ
வேவுண்டு நிலையும் தளர்ந்து நைவேனை -  நெஞ்சம் வெந்து என் நிலையும்  தளர்ந்து நொந்து இருப்பவளை
அஞ்சேல் என்னான் அவன்  ஒருவன் - அஞ்சாதே என்று சொல்லாதவன் ஒருவன்
அவன் மார் அணிந்த வனமாலை - அவன் மார்பில் அணிந்த வனமாலை
வஞ்சியாதே - என்னை வஞ்சிக்காமல் தந்தான்எனில்
மார்வில் கொணர்ந்து புரட்டீரே - என் மார்பில் கொண்டு வந்து புரட்டுங்கள் !

கம்சன் என்பவனைக் காய்ந்த ( வறுத்து எடுத்த ன்னு சொல்வோம்ல ..கெத்தா அது போலச் சொல்றா ) கருமை நிற, வில் போன்ற புருவம் கொண்ட
கடைக்கண் என்னும் விழி அம்பால் ( சிறை - சிறை செய்தல் /விழிகளைச் சுழல விடுதல் , சிறகு ..இதுல நான் முதல் இரண்டைக் கையாண்டு இருக்கிறேன் ) கடைக்கண் பார்வையிலேயே கட்டுண்டாள் ..அந்தப் பார்வை அம்பானது நெஞ்சை ஊடுருவித் தைக்க நெஞ்சம் வெந்து (வேவு - வேகுதல் வெந்து போதல் ) நிலை தளர்ந்து நைந்து போனவளை ,இப்படி எல்லாம் எனக்காகச் சிரமப்படுகிறாயே அஞ்சாதே நான் இருக்கிறேன் என்று ஒரு சொல் சொல்லல (ஊம்ங்கல ஆம்ங்கல என்பது பேச்சு வழக்கு  ) அப்படிச் சொல்லாத ஒருவன் (ஆம் நீ சொல்லவில்லை என் காயத்திற்கு மருந்து இடவில்லை எனினும் உன் மீது வைத்த பற்று வைத்தது வைத்தது தான்..அதிலிருந்து ஒரு நாளும் பின் வாங்க மாட்டேன் என்கிறாள் நிலை குலைந்த நிலையிலும் )

Image result for arts of shanmugavel
ஓவியம் சண்முகவேல் 
 அவனுடைய மார்பில் அணிந்த வனமாலை காட்டுப் பூக்களால் ஆன  மாலை பெரும்பாலும் மஞ்சள் பூக்கள் . ) யை என்னை வஞ்சிக்காமல்  தந்தான் எனில் அதை எடுத்து வந்து என் மார்பில் புரட்டுங்கள்..அப்படியாவது என் நெஞ்சம் தான் அடைந்த புண் ஆறட்டும் 

Tuesday 10 January 2017

125.பாலா லிலையில் துயில்கொண்ட

125.பாலா லிலையில் துயில்கொண்ட 
பாடல் :125
பாலா லிலையில் துயில்கொண்ட
பரமன் வலைப்பட் டிருந்தேனை
வேலால் துன்னம் பெய்தாற்போல்
வேண்டிற் றெல்லாம் பேசாதே
கோலால் நிரைமேய்த் தாயனாய்க்
குடந்தைக் கிடந்த குடமாடி
நீலார் தண்ணந் துழாய்கொண்டென்
நெறி மென்  குழல்மேல் சூட்டீரே

விளக்கம் :

பால் ஆல் இலையில் துயில் கொண்ட  - பால் உள்ள ஆல் இலையில் உறக்கம் கொண்ட
பரமன் வலைப்பட்டு இருந்தேனை - பரமனிடம் அன்புற்று அந்த வலையில் இருந்தவளை
வேலால் துன்னம் பெய்தாற்போல் - வேலால் துளை செய்தது போல
வேண்டிற்று எல்லாம் பேசாதே - உங்களுக்கு வேண்டியது (வாய்க்கு வந்தது எல்லாம் ) பேசாமல்
கோலால் நிரை மேய்த் தாயனாய்க் - தடி கொண்டு பசு மேய்த்த  ஆயனாய்
குடந்தைக் கிடந்த குடம் ஆடி - திருக்குடந்தையில் கிடந்த கோலத்தில் குடம் ஆடிய குடக் கூத்தன்
 நீல் ஆர் தண் அம் துழாய் கொண்டு -கருத்த அழகிய குளிர்ந்த துளசி கொண்டு (கருந்துளசி )
நெறி மென்  குழல் மேல் சூட்டீரே - அடர்ந்த மென்மையான என் கூந்தல் மீது சூட்டி விடுங்கள்

பால் உள்ள ஆல் (ஆலமரத்து இலை ) இலை மீது துயின்ற கண்ணன் மீது அன்பு கொண்டு அந்தக் காதல் வலையிலேயே அகப்பட்டு இருந்த என்னை (அந்த வலையில் இருந்து வெளியே வர விரும்பாதவள் என்றும் சொல்லலாம் )

Image result for ஆல் இலை கண்ணன்

புண் உள்ள நெஞ்சில் வேல் கொண்டு துளையிடுவது போல (வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல  ) உங்க வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசாமல்
(பேசத் தான செய்வாங்க ஒரு பெண் பிள்ளை பிடிவாதமாக கண்ணன் ஒருவனை மட்டுமே நினைந்து நினைந்து உருகி வேறு சிந்தையற்றுக் கிடந்தால் :( ) தடி கொண்டு பசுக்கள் மேய்த்த (பசு மேய்க்கும் பொழுது தடி இருக்கும் கையில் ) ஆயனாய் (மாடு மேய்ப்பவன் )
Image result for திருக்குடந்தை   ஆராவமுதன்
திருக்குடந்தை 

திருக்குடந்தையில் கிடந்த கோலத்தில் இருக்கும் குடம் ஆடியவன் (பண்டைய  தமிழகத்தில் மிகப் பிரபலமானது குடக் கூத்து )



கருந்துளசி 
நீல் இதற்கு நீலம் /கருநிறம் என்ற இரண்டு பொருள்கள் உள்ளன..இதைக் கருமை என எடுத்தாண்டு இருக்கின்றேன்..ஏனெனில் கிருஷ்ண துளசி எனப்படும் கருந்துளசி சற்றே கருப்பு நிறம் கொண்டது..
திருக்குடந்தையில் கிடந்த கோலத்தில் உள்ள குடம் ஆடி, அவனின்   கருமை நிற அழகிய குளிர்ந்த துளசி கொண்டு என் அடர்ந்த அதே நேரம் மென்மையான குழல் மீது சூட்டுங்கள்..இதனால் என் வேதனை தீரும் !

Monday 9 January 2017

124.கண்ணனென்னும்கருந்தெய்வம்

124.கண்ண னென்னும் கருந்தெய்வம்

பதிமூன்றாம் பத்து இனிதே ஆரம்பம் ..இனிதே என்று சொல்லக் கூட குற்ற உணர்ச்சியாக இருக்கின்றது..ஏனெனில் கோதை இனிமையான மன நிலையில் இல்லை..துன்பத்தின் விளிம்பில் நின்று கொண்டு பாடிய பாடல்கள் இவை.. :( காதலின் பித்து நிலை முற்றி விட்டது..என்ன செய்தால் தன் துன்பம் தீரும் என்று சொல்கின்றாள்.. போன திருமொழியில் தன்னை வடமதுரை கொண்டு சேர்ப்பதே தன்னை உய்விக்கும் வழி என்று ஆணித்தரமாகச் சொன்னவள் , இதில் தான் படும் துன்பத்தை எவ்விதமாகத் தீர்க்கலாம் என்றும் சொல்கின்றாள்.. வேதனையுடன் கவனிப்போம் !

பாடல் :124
கண்ண னென்னும் கருந்தெய்வம்
காட்சி பழகிக் கிடப்பேனை
புண்ணில் புளிப்பெய் தாற்போலப்
புறநின் றழகு பேசாதே
பெண்ணின் வருத்த மறியாத
பெருமா னரையில் பீதக
வண்ண ஆடை கொண்டுஎன்னை
வாட்டம் தணிய வீசீரே

விளக்கம் :

கண்ணன் என்னும் கருந் தெய்வம் - கண்ணன் எனும் கருமை நிறத் தெய்வம்
காட்சி பழகிக் கிடப்பேனை - அவனையே கண்டு அவனோடு கற்பனையிலேயே வாழ்ந்து அதிலேயே சுகம் பழகிக் கிடப்பவளை
புண்ணில் புளிப்பு எய்தாற்போலப் புற நின்று அழகு பேசாதே - நீங்களோ என் புறம் நின்று புண்ணில்  புளிப்பு எய்தது போலப் புறணி பேசி அழகு காட்டாமல்
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் அரையில் - இந்தப் பெண்ணின் வேதனை வருத்தங்கள் அறியாத அந்தப் பெருமானின் இடையிலே
பீதக வண்ண ஆடை கொண்டு -அணிந்திருக்கும்  மஞ்சள்
 வண்ண பட்டாடையைக் கொண்டு
என்னை வாட்டம் தணிய வீசீரே -  என் வேதனை தீர என் வாட்டம் தீர அதனை என் மீது வீசுவீர்களாக !

கண்ணன் என்னும் கருந் தெய்வத்தையே எண்ணி நினைத்துருகி ,அவனோடு வாழ்வதாக,  கற்பனை கண்டு அந்தக் காட்சியே பழகிக் கிடப்பவளை , ஏற்கனவே மனம் நொந்து புண்ணாக இருக்க அதை மேலும் புண்ணாக்கும் விதமாக புறணி பேசி அழகு காட்டாமல் (அழகு காட்டுவதை வக்கனை காட்டுவதுன்னு சொல்வோமே..ஒரு வேதனையில் இருக்கும் பொழுது பழிப்புக் காட்டுவது இன்னும் கடுப்பை ஏற்றும்..வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சாதே என்போமே..இவங்க புறணி பேசி அழகு காட்டுவது புண்ணில்  புளிப்பு எய்தது போல இருக்காம்..அது என்ன புளிப்பு எய்தல்..தன் தன்மை திரிதல்/ இன்னும் அடர்த்தி ஆகுதல்..புண்ணை இன்னும் புண்ணாக்குதல்
சில நேரம் இதைக் கேட்டுக் கேட்டுப் புளிச்சுப் போச்சு என்பதில்லையா?  )

Image result for krishna
என் புண்ணை மேலும் புண்ணாக்காமல் புறம் நின்று அழகு பேசாதீர்கள் .
 வேண்டுமானால் வேறு ஒன்று செய்யுங்கள்..என் வாட்டம் தணிய ,இங்கு இப்படி ஒரு பெண் வேதனையில் உழல்கிறாள் என்ற எண்ணம் கிஞ்சித்தும் இல்லாத என் வருத்தம் அறியாத அந்தப் பெருமானின் இடையில் உடுத்திய  மஞ்சள்  வண்ணப் பட்டாடையை என் மீது கொண்டு வந்து வீசுங்கள்.. அதனை நுகர்ந்து என் மன வாட்டத்தைச் சற்றே தணித்துக் கொள்கிறேன்.. (தணித்தல் -குளிர வைத்தல் ஆசுவாசப்படுத்துதல் )

Sunday 8 January 2017

123.மன்னு மதுரை தொடக்கமாக

123.மன்னு மதுரை தொடக்கமாக
பாடல் :123
மன்னு மதுரை தொடக்கமாக
வண்துவ ராபதி தன்னளவும்
தன்னைத் தமருய்த்துப் பெய்யவேண்டித்
தாழ்குழ லாள்துணிந் ததுணிவை
பொன்னியல் மாடம்பொ லிந்துதோன்றும்
புதுவையர் கோன்விட்டு சித்தன்கோதை
இன்னிசை யால்சொன்ன செஞ்சொல்மாலை
ஏத்தவல் லார்க்கிடம் வைகுந்தமே

விளக்கம் :
மன்னு மதுரை தொடக்கமாக  - நிலைபெற்ற புகழுடைய மதுரையைத் தொடக்கமாகக் கொண்டு
வண் துவராபதி தன் அளவும் - அழகிய துவராபதி வரையிலும்
தன்னைத் தமர் உய்த்துப் பெய்ய வேண்டித் -  தன்னைத் தனது சுற்றத்தார் /வேண்டியுள்ளோர் கண்ணனிடம் சென்று சேர்க்க வேண்டி
தாழ்குழலாள் துணிந்த துணிவை - நீண்ட கூந்தலைப் பெற்றவள் துணிந்த துணிவை
பொன்னியல் மாடம் பொழிந்து தோன்றும் - பொன் மாடங்கள் அழகுறத் தோன்றும்
புதுவையர் கோன் விட்டு சித்தன் கோதை - வில்லிபுத்தூர்  தலைவன் விஷ்ணு சித்தர் என்ற பெரியாழ்வார் மகள் கோதை
இன்னிசையால் சொன்ன செஞ் சொல் மாலை - இன்னிசையால் சொன்ன செம்மையான சொல் பா மாலையைப்
ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே - பாடிப் புகழ வல்லார்களுக்கு உரிய இடம்   வைகுந்தமே

எந்தப் பெண்ணும் செய்யத் துணிகின்ற துணிவைச் செய்த ஆண்டாள் ..நாணம் விடுத்து , துணிச்சலாக காதலை வெளிப்படுத்தியதும் தன்னை அந்தக் கண்ணனிடம் சென்று சேர்க்கச் சொல்லி வாய் விட்டுக் கேட்டதும் பெரிய துணிவே. வடமதுரையில் கொண்டு சேருங்கள் என ஆரம்பித்து அழகிய துவராபதியில் சென்று சேர்த்து தன்னை உய்விக்கச் சொல்லி (துன்ப வாழ்வில் இருந்து தப்புவிக்கச் சொல்லி ) ,தாழ் குழலாள் (ரொம்ப நீள முடி கொண்டவள் ) பெரியாழ்வார் விஷ்ணு சித்தரின் மகள் கோதை ,இன்னிசையால் சொன்ன அழகிய செம்மையான சொற்பாமாலையை பாடிப் புகழ வல்லார்க்கு உரிய இடம் வைகுந்தமே


கண்ணனைச் சேர்வது ஒன்றே தன் பிறவிப்பயன் தான் உய்ய வழி என்று உரக்கச் சொன்ன துணிச்சல்காரி ஆண்டாள்..தாய் தந்தை உற்றார் உறவினர் அயலார் எவர் பேச்சும் காதல் பித்து கொண்ட பெண்ணின் மனத்தில் ஏறவில்லை அவள் கண்ணன் ஒருவனைத் தவிர வேறெதையும் நினையாள் .
கண்ணன் வளர்ந்த ,திருவிளையாடல் புரிந்த இடங்களுக்கெல்லாம் அழைத்துச் செல்லச் சொல்லி ஆசையாகக் கேட்கின்றாள் ..

உள்ளதை உள்ளபடி சொல்லும் குணத்தாள் சீர் மிகு நாச்சியாரின் பனிரெண்டாம் திருமொழி ,பனிரெண்டாம் பத்து இனிதே நிறைவுற்றது !!!

Friday 6 January 2017

122.கூட்டிலிருந்து கிளியெப்போதும்

122.கூட்டிலிருந்து கிளியெப்போதும்

பாடல் :122
கூட்டிலிருந்து கிளியெப்போதும்
 கோவிந்தாகோவிந்தாவென்றழைக்கும்*
ஊட்டுக்கொடாதுசெறுப்பனாகில்
உலகளந்தானென்றுயரக்கூவும்*
நாட்டிற்றலைப்பழியெய்தி
உங்கள்நன்மையழிந்துதலையிடாதே*
சூட்டுயர்மாடங்கள் சூழ்ந்துதோன்றும் 
துவராபதிக்கென்னையுய்த்திடுமின்

விளக்கம் :
கூட்டில் இருந்து கிளி எப்போதும் - கூட்டில் இருந்து கிளி எப்போதும்
கோவிந்தா கோவிந்தா என்றே அழைக்கும் - கோவிந்தா கோவிந்தா என்றே அழைக்கும்
ஓட்டுக் கொடாது செறுப்பனாகில் - உணவு கொடாமல் நான் வெறுத்து தடுத்தேனெனில்
உலகளந்தான் என்று உயரக் கூவும் - உலகளந்தான் என்று உயரக் கூவும்
நாட்டில்இற்றலைப்பழி எய்தி- நாட்டிலே இப்படிப் பெருத்த பழி அடைந்து
உங்கள் நன்மை அழிந்து தலையிடாதே - உங்கள் நல்ல பெயர் அழிந்து தலை கவிழ நேராமல்
சூட்டுயர் மாடங்கள் சூழ்ந்து தோன்றும் துவராபதிக்கு - உயர்ந்த மாடங்கள் சூழ்ந்து தோன்றும் துவராபதிக்கே
என்னை உய்த்திடுமின் - என்னை அழைத்துச் சென்று காப்பாற்றுங்கள்

நான் கூட்டுக்குள் வைத்திருக்கும் கிளி கோவிந்தா கோவிந்தா எனக் கூவுகின்றது. அதற்கு உணவு கொடுக்காமல் வெறுத்து அதை தடுத்தேன் எனில் அப்பொழுதும்  அது உலகளந்தான் என உயரக் கூவும்..இப்படி இப்பூவுலகில் ஒரு தீராப் பழியை அடைந்து உங்கள் நல்ல பெயர் அழிந்து தலை கவிழ நேராமல் முகப்பு பெரிதாக உயர்ந்த மாடங்கள் சூழ்ந்து தோன்றும் துவராபதிக்கே என்னை அழைத்துச் சென்று காப்பாற்றுங்கள்



எனக்கென்னவோ இந்தப் பெண் இதை மேலோட்டமாகக் கூறவில்லை என்று தோன்றுகின்றது.. அவள் உடற்கூட்டில் ஒட்டிக் கொண்டு இருக்கும் உயிர் என்ற கிளியானது கோவிந்தா கோவிந்தா என்றே அழைக்கின்றது.. அவனைச் சேராத சோகத்தில் இவள் அதற்கு உண்ண உணவு கொடுக்காமல் தன்னைத் தானே வருத்தினாலும் அப்பொழுதும் அந்த உயிர் உலகளந்தானையே கூவி அழைக்கின்றது..(பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்கள் ஆனால் பசியிலும் அது உலகளந்தானைத் தான் எண்ணுகின்றது ..) இவள் இப்படித் தன்னைத்தானே வருத்தி இவளுக்கு ஏதேனும் ஆகிவிட்டால் இவளை கண்ணனிடம் சேர்க்காத பாவம் சுற்றி உள்ளவர்களுக்குத் தானே.. இப்பூவுலகில்அப்படி ஒரு கெட்ட பெயர் எடுத்து பழி வந்து சேருமுன் , அதன் பொருட்டு தலை கவிழாமல் இருக்க வேண்டுமெனில்


துவாரகை 

உயர்ந்த தூண்களும் முகப்புகளும் கொண்ட மாடங்கள் கொண்ட துவராபதிக்கே இவளை அழைத்துச் சென்று அப்படியேனும் தப்புவியுங்கள்..

Thursday 5 January 2017

121.கற்றினம் மேய்க்கிலும் மேய்க்கப்பெற்றான்

121.கற்றினம் மேய்க்கிலும் மேய்க்கப்பெற்றான்

பாடல் :121
கற்றினம் மேய்க்கிலும் மேய்க்கப்பெற்றான்
காடுவாழ் சாதியு மாகப்பெற்றான்
பற்றியுரலிடை யாப்புமுண்டான்
பாவிகாள் உங்களுக் கேச்சுக்கொலோ
கற்றன பேசி வசையுணாதே
 காலிக ளுய்ய மழைதடுத்து
கொற்றக் குடையாக வேந்திநின்ற
கோவர்த் தனத்தென்னை யுய்த்திடுமின்

விளக்கம் :
கற்று இனம் மேய்க்கிலும் மேய்க்கப் பெற்றான்  - கன்றுகள் இனம் மேய்த்து அதையே தொழிலாகப் பெற்றான் (ஆய்ச்சியர் )
காடு வாழ் சாதியுமாகப் பெற்றான் - காட்டிலே வாழ்ந்து இடையர் சாதியுமாகப் பெற்றான்

பற்றி உரல் இடை யாப்பும் உண்டான் - தனது குறும்புத் தனங்களால் ,தனது தாயால் உரல் பற்றி  கட்டும் உண்டான்

பாவிகாள் உங்களுக்கு ஏச்சுக் கொலோ - பாவிகளே ! உங்களது ஏச்சுக்களை நிறுத்தும் நாள் எந்நாளோ ?

கற்றன பேசி வசையுணாதே - அவனை வசைபாடப் கற்றதை வைத்துக் கொண்டு என்னிடம் ஏதேனும் பேசி என்னிடம் திட்டு வாங்காமல்

காலிகள் உய்ய மழை தடுத்து- பசுக்கள் உய்ய மழை தடுத்து

கொற்றக் குடையாக ஏந்தி நின்ற - ஓர் அரசனாக தன்னை நம்பியுள்ளவர்களைக் காப்பாற்ற  குடை ஏந்தி நின்ற
கோவர்த்தனத்து என்னை உய்த்திடுமின் - கோவர்த்தன மலைக்கு என்னைக் கொண்டு சேர்த்திடுங்கள்
காலிகள் - பசுக்கூட்டங்கள்

கன்றுகள் இனம் மேய்ப்பதைத் தொழிலாகக் கொண்டவன் தான்..ஆய்ச்சியர் .
காட்டினில் வாழும் இடையர் சாதியுமாகப் பெற்றான்.. (முல்லை நில மாயோனும் இவ்வாறே.. காடும் காடும் சார்ந்த இடம் முல்லை..பசுக்கள் மேய்ப்பதே தொழில்..அதனால் இடையர் என்ற பெயரும் வந்தது . )
ஆமாம் வெண்ணெய் திருடியவன் தான்..குறும்புத்தனங்கள் செய்து தாயால் உரலில் கட்டப்பட்டுக் கிடந்தவன்தான்..



இதற்காக அவனை நீங்கள் ஏசுவீர்களோ (ஏச்சு - இழிவாகப் பேசுதல் ) பாவிகளே!  அவனைத் திட்ட நீங்க கற்றனவற்றை  பேசி  என்னிடம் திட்டு வாங்காமல் , பசுக்கள் பிழைக்க பெருமழையைத் தடுத்து,ஒரு அரசனைப் போல வெற்றிக் குடையேந்தி நின்ற அந்த கோவர்த்தன மலைக்கு என்னை அழைத்துச் செல்லுங்கள்..


Image result for govardhana

மழை வேண்டி நந்தகோபர் இந்திரனுக்கு யாகம் செய்ய முயற்சி செய்ய, கண்ணனோ , அதைக் காரணங்கள் சொல்லித் தடுக்க இந்திரனுக்குக் கோபம் மூண்டது. இதனால் பெருமழையைத் தருவித்தான்..ஆகவே ஊராரையும் பசுக்கூட்டங்களையும் காப்பாற்றும்  பொருட்டு, கோவர்த்தன மலையையே தூக்கி ஒற்றை விரலில் ஏந்தி நின்றான் கண்ணன்..அந்த கோவர்த்தன மலைக்கு என்னை அழைத்துச் சென்று என்னைக் காப்பாற்றுங்கள். 

Wednesday 4 January 2017

120.வண்ணம் திரிவும் மனங்குழைவும்

120.வண்ணம் திரிவும் மனங்குழைவும்

பாடல் : 120

வண்ணம் திரிவும் மனங்குழைவும்
மானமி லாமையும் வாய்வெளுப்பும்
உண்ண லுறாமையு முள்மெலிவும்
ஓதநீர் வண்ணனென் பானொருவன்
தண்ணந் துழாயென்னும் மாலைகொண்டு
சூட்டத் தணியும் பிலம்பன்றன்னைப்
பண்ணழி யப்பல தேவன்வென்ற
பாண்டி வடத்தென்னை யுய்த்திடுமின்

விளக்கம் :

வண்ணம் திரிவும் மனங்குழைவும் - என் மேனி வண்ணம் மாறியது மனம் குழைந்து குழம்பித்  தளர்வானது
மானம் இல்லாமையும் வாய் வெளுப்பும் - மானம் போனது சிவந்த வாய் வெளுத்துப் போனது
உண்ணல் உறாமையும் உள் மெலிவும் - உணவு பிடிக்காமல் போனது உள்ளத்தோடு உடலும் மெலிந்து போனது
ஓதநீர் வண்ணன் என்பான் ஒருவன் - அலைகள் பொங்கும் கடல் நீரின் வண்ணம் கொண்ட நீலவண்ணன் என்பவன் ஒருவன்
தண் அம்  துழாய் மாலை கொண்டு சூட்டத் தணியும்  - குளிர்ந்த அழகிய  துளசி மாலை கொண்டு எனக்குச் சூட்டத் தணியும் இந்நோய்
பிலம்பன் தன்னை பண் அழியப் பலதேவன் வென்ற பாண்டி வடத்தென்னை உய்த்திடுமின் - பிலம்பன் என்னும் அரக்கனை அழித்து பலதேவன் வென்ற இடமான பாண்டீர வடம் என்னும் இடத்திற்கே என்னை அழைத்துச் செல்லுங்கள்

 ஒருக்கணம் கூட மறவாமல் அந்தக் கண்ணனையே நினைத்து நினைத்து வருந்தியதில் உடல் மெலிந்தது.. பசலை நோய் கண்டது..மேனி நிறம் பொலிவிழந்து நிறம் மாறியது..மனம் குழைந்தது..மனம் பித்து நிலை அடைந்தது.. குழம்பித் தளர்ந்தது.. உற்றார் ஊரார் நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு வம்பு பேசும் அயலார் எல்லாருக்கும் வம்பின் கருப்பொருள் ஆகி மானம் போனது..பருவம் வந்தும் வேறு மானிடவரைத் திருமணம் செய்ய மறுத்து கண்ணன் ஒன்றே என் தவம் என இருந்ததில் கேட்காத பேச்செல்லாம் கேட்க வேண்டிய நிலை. சிவந்த அதரங்கள் வெளுத்தன.. உணவு உண்ணப் பிடிக்கவில்லை.அதனால் உடலும் உள்ளமும் சேர்ந்தே மெலிந்தது.
Image result for arts of ilayaraja
ஓவியம் இளையராஜா 
(ஒரு திரைப்பாடல் வருமே..
செக்கச் சிவந்தன விழிகள்
 கொஞ்சம் வெளுத்தன செந்நிற இதழ்கள் 
இமை பிரிந்தது உறக்கம் 
நெஞ்சில் எத்தனை எத்தனை மயக்கம் 
நில்லடி என்றது நாணம் 
விட்டுச் செல்லடி என்றது ஆசை..)

அலைகள் பொங்கும் .கடலின் நிறத்தவன் நீலவண்ணன் என்பவன் ஒருவன் அணிந்த குளிர்ந்த அழகிய துளசி மாலையை எடுத்து வந்து எனக்குச் சூட்ட என் உடல் வெப்பம் தணியும்..


Image result for lord krishna with thulasi

பிலம்பன் வதம் :
விருந்தாவனத்தின் காட்டில் பலராமரும் கண்ணனும் விளையாடிக் கொண்டிருந்த பொழுது அவர்களைக் கொல்லும் பொருட்டு பிலம்பன் அங்கு வர ,கண்ணன் அதை உணர்ந்து கொண்டு விளையாட்டுக்கு அழைத்து விளையாட்டில் தோற்றவர்கள் வென்றவர்களை முதுகில் தூக்கிச் செல்ல வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். அதைப் போலவே பலதேவர் வெல்ல பிலம்பன் அவரைத் தூக்கிச் சென்றான்..பாண்டீர வடம் (கன்றுகளை மேய்க்கும் மேய்ச்சல் நிலப்பகுதி ) என்னும் இடத்தில் ஓர் ஆலமரத்தின் அருகே பிலம்பனின் சூது புரிந்து கொண்ட பலதேவர் அவனது எலும்பு நொறுங்கும்படி அவனை அழித்தார்.

அன்று கண்ணனோடு பலதேவன் விளையாடி திருவிளையாடல் புரிந்த  இந்த பாண்டீர வடத்துக்குத்தான் ,  தன்னை அழைத்துச் செல்லச் சொல்லி கோதை வேண்டுகோள் விடுக்கிறாள் .

Monday 2 January 2017

119.கார்த்தண் முகிலும் கருவிளையும்

119.கார்த்தண் முகிலும் கருவிளையும்

பாடல் : 119
கார்த்தண் முகிலும் கருவிளையும்
காயா மலரும் கமலப்பூவும்
ஈர்த்திடு கின்றன வென்னைவந்திட்
டிருடீகே சன்பக்கல் போகேயென்று
வேர்த்துப் பசித்து வயிறசைந்து
வேண்டடிசி லுண்ணும் போதுஈதென்று
பார்த்திருந்து நெடுநோக்குக் கொள்ளும்
பத்தவி லோசநத் துய்த்திடுமின்

விளக்கம் :

கார்த்தண் முகிலும் கருவிளையும் காயா மலரும் கமலப் பூவும் -கருமையான குளிர்ந்த முகிலும் , கருவிளைப் பூவும் , காயாம் பூவும் தாமரைப் பூவும்

ஈர்த்திடுகின்றன என்னை  வந்து - ஈர்த்திடுகின்றன  என்னை வந்து
வந்து இருடீகேசன் பக்கம் போகே என்று  - இருடீகேசன் (ரிஷி கேசன் ) பக்கம் போ என்று

வேர்த்துப் பசித்து வயிறு அசைந்து வேண்ட -வேர்த்துப் பசித்து வயிறு அசைந்து உணவினை வேண்ட

அடிசில் உண்ணும்போது - அடிசில் உண்ணும்போது
ஈதென்று பார்த்திருந்து நெடுநோக்குக் கொள்ளும் - உணவு உண்ணும் காலம் இதுவென நெடுநேரம் முனிவர்களின் வரவை எதிர்நோக்கிக்காத்திருக்கும்

பத்தவிலோசநத்து உய்த்திடுமின் - பத்தவிலோசனத்தில் என்னைக் கொண்டு சேர்த்திடுங்கள்

கண்ணனை மறக்க முயன்றும் முடியவில்லை.. கருமைநிற குளிர்ந்த முகிலும், கருவிளை மலரும் , காயா மலரும் , கமலப் பூவும் தங்களின் நிறத்தினால் அந்தக் கண்ணனையே நினைவூட்டுகின்றன.. அந்நிறம் காரணமாகவே ஈர்க்கின்றன என்னை.. அவை எனைப் பார்த்து இருடீகேசன் (ரிஷிகேசன் ) பக்கம் செல்லேன் என்று சொல்வது போன்று உள்ளது .
பத்த விலோசனம் என்பது யமுனை ஆற்றின் கரையே உள்ள தலம் .ஒருநாள் கண்ணன்,பலதேவனுடனும் தங்கள் நண்பர்களுடனும் பசுக்களை மேய்த்துக் கொண்டிருந்தனர்..கண்ணனின் நண்பர்களுக்குக் கடுமையான பசி. அவர்கள் கண்ணனிடம் இதைச் சொல்ல, அதற்குக் கண்ணன் அருகே முனிவர்கள்"ஆங்கிரஸ் "என்ற   வேள்வி செய்து கொண்டிருப்பதாகவும் அவர்களின் மனைவிகளிடம் தங்கள்  பெயரைச்   சொன்னால் அவர்கள் உண்ணுவதற்கு வேண்டிய உணவைத் தருவார்கள் எனச் சொல்லி அனுப்பி வைத்தான்.ஆனால் முனிவர்களோ நம்பாமல் அவர்களைத் திருப்பி அனுப்ப , கண்ணனோ அப்பெண்களிடம் தாங்கள் இவ்விடம் இருப்பதைச் சொல்லி உணவு கேட்கச் சொன்னான் .

Image result for vrindavan bhakt vilochana

அதைப் போலவே அவர்கள் முனிவர்களின் மனைவிகளிடம் தாங்கள் கண்ணன் &பலதேவனால் அனுப்பப் பட்டவர்கள் என்றும் தங்களுக்கு உணவு வேண்டும் என்ற சொல்ல , அப்பெண்கள் அகம் மகிழ்ந்து , முனிவர்களின்
பேச்சைக் கேளாமல் ,  அனைத்து வகை உணவுகளையும் எடுத்துக் கொண்டு கண்ணன் &பலதேவன் இருக்குமிடம் சென்று அவர்கள் இருவரையும் வணங்கி அவர்களுக்கும் ,நண்பர்களுக்கும் அடிசில் உணவைப் படைத்து மகிழ்ந்தனர்.
இதே போல ஒவ்வொரு நாளும் கன்றுகள் மேய்த்துக் களைத்து,  வயிறு பசித்து ,உணவுக்காக அவர்கள் அங்கே காத்திருப்பதும் அவர்களுக்காக அப்பெண்டிர் உணவு அங்கு வந்து வழங்குவதும் வாடிக்கை ஆயிற்று.
பக்தம் - சோறு விலோசனம் - பார்வை - சோறு பார்த்திருக்கும் இடம் என இவ்விடம் வழங்கலாயிற்று..இப்படி கண்ணன் புழங்கிய இடங்களுக்கு எல்லாம் ஆண்டாள் தன்னை அழைத்துச் செல்ல வேண்டுகின்றாள்.. அந்த பத்த விலோசனத்துக்கே என்னை அழைத்துச் செல்லுங்கள் என்கிறாள்..