Monday 29 February 2016

26.தடத்தவிழ் தாமரைப் பொய்கை

26. தடத்தவிழ் தாமரைப் பொய்கை
பாடல் :26
தடத்தவிழ் தாமரைப் பொய்கைத்
தாள்களெங் காலைக் கதுவ
விடத்தே ளெறிந்தாலே போல
வேதனை யாற்றவும் பட்டோம்
குடத்தை யெடுத்தேற விட்டுக்
கூத்தாட வல்லஎங் கோவே
படிற்றையெல் லாம்தவிர்ந்
தெங்கள் பட்டைப் பணித்தரு ளாயே

விளக்கம் :
தடத்து அவிழ் தாமரைப் பொய்கைத் தாள்கள் -  பொய்கையில் மலர்ந்த பெரிய  தாமரையின் தண்டுகளானது
எங்கள் காலைக் கதுவ - எங்கள் கால்களைப் பற்ற
விடத்தேள் எறிந்தாலே போல - விஷம் கொண்ட தேள் கொட்டினாற் போல
வேதனை ஆற்றவும் பட்டோம் - மிகுந்த வேதனை அடைந்தோம்
குடத்தை எடுத்தேற விட்டு - குடத்தில் தலையில் எடுத்து ஏற விட்டு (கரகம்)
கூத்தாட வல்ல எங்கள் கோவே - கூத்தாட வல்ல எங்கள் அரசனே
படிற்றை எல்லாம் தவிர்ந்து - உன் குற்றங்கள் எல்லாம் நீ தவிர்த்து
எங்கள் பட்டைப் பணித் தருளாயே - எங்கள் பட்டு ஆடையை கொடுத்தருள் !

பொய்கையில் மலர்ந்திருக்கும் பெரிய தாமரையின் தண்டுகளானது ,வெகு நேரம் நிற்பதால் கோதையின் கால்களைப் பற்றுவது எப்படி இருக்கிறது என்றால், விஷம் கொண்ட தேள் கொட்டினாற்போல மிகவும் வேதனையாக இருக்கின்றதாம்..பொதுவாக தாமரை மலர்ந்த குளத்துக்குள் இறங்கவே கூடாது என்று  சொல்வார்கள் . பார்க்க குளம் ஆழம் இல்லை எனினும் உள்ளிருக்கும் இடியாப்பச் சிக்கல் போன்ற தண்டுகளின் ஊடே கால்கள் சுற்றி விட்டால் வெளியே எடுப்பது கடினம்..

பொய்கைக்கும் குளத்திற்கும் என்ன வித்தியாசம்.பொய்கை, சுனை என்பது தானே இயற்கையாக உருவான நீர்நிலைகள்.எங்கேனும் ஊற்று இருக்கும் அதிலிருந்து நீர் வந்து கொண்டே இருக்கும்.(மதுரை அழகர் கோவிலின் உச்சியில் அப்படி வற்றாத சுனை இருக்கின்றது எங்கிருந்து வருகின்றது என்றே தெரியாது ) குளம் என்பது செயற்கையாக வெட்டி வைத்த பள்ளத்தில் மழை பெய்து நிறைவது. பரக்க விழித்து நோக்கி பாடலில் சுனை என்கிறாள் கோதை.

கண்ணன் உடைகளைத் திருடி எடுத்து வச்சுகிட்டதால நீண்ட நேரம் பொய்கையில் நிற்க நேரிட்டது பெண்களுக்கு.  குடத்தை எடுத்து ஏற விட்டு கூத்தாட வல்ல கோவே என்கிறாள்..கூத்தாடுதல் என்றால் ஆடுதல் என்ன கூத்து ஆடுறாங்க..குடத்தை தலையில் தூக்கி வச்சுட்டு ஆடுறாங்க.
நம் பண்டைய தமிழகத்தில் பல "கூத்துகள்" மக்களை மகிழ்விக்க நடந்திருக்கின்றன .கூத்து,கூத்தாடி  என்பது இப்ப கேலிக்குரிய பொருளில் பயன்படுத்தறாங்க. முன்பு அப்படி அல்ல. கோதை இறைவனையே கூத்தாடி என்கிறாள். கரகம் எடுத்து ஆட வல்ல அரசனே என்கிறாள். அரிமேய விண்ணகரம் கோவிலில் மூலவர் பெயர் குடமாடு கூத்தன் தான்.

படிற்றை..படிறு..வஞ்சகம் ,திருட்டு, பொய் ,அடங்காத்தனம் ,குறும்பு என்ற பொருட்களை அகராதி தருகின்றது. இவ்விடத்தில் வஞ்சகமா திருடிக் குறும்பு செய்தவனா நான் பொருள் எடுத்துக்கறேன். அது குற்றம் தானே. அதனால் அவற்றைத் தவிர் . இதெல்லாம் நல்ல பிள்ளைக்கு அழகல்ல எங்கள், பட்டு உடைகளைக் கொடுத்துடு




Friday 26 February 2016

25.காலைக் கதுவிடு கின்ற

25.காலைக் கதுவிடு கின்ற 
பாடல் : 25
காலைக் கதுவிடு கின்ற
கயலோடு வாளை விரவி
வேலைப் பிடித்தெந்னை மார்கள்
ஓட்டிலென் னவிளை யாட்டோ
கோலச்சிற் றாடை பலவுங்
கொண்டுநீ யேறி யிராதே
கோலங் கரிய பிரானே
குருந்திடைக் கூறை பணியாய்

விளக்கம் : 

காலைக் கதுவிடுகின்ற - கால்களைப் பற்றுகின்ற
கயலோடு வாளை விரவி - கயல் மீன்களோடு வாளை மீனும் ஒன்று கூடி
வேலைப் பிடித்து எந்தென் ஐ  மார்கள் - வேல் பிடித்துக்கொண்டு என் தந்தை /தலைவன்/அண்ணன்  மார்
ஓட்டில் என்ன விளையாட்டோ ? - உன்னை ஓட விட்டுத் துரத்தினா என்ன பண்றது? இது என்ன விளையாட்டோ ?
கோலச் சிற்றாடை பலவுங் கொண்டு - அழகிய சிற்றாடைகள் பலவற்றையும் எடுத்துக் கொண்டு
நீ ஏறி இராதே - நீ மரத்தின் மீது ஏறி உட்கார்ந்துக்காதே
கோலங் கரிய பிரானே - கரிய திருமேனி கொண்ட அழகிய பிரானே
குருந்திடைக் கூறை பணியாய் - குருந்த மரத்தின் இடையில் வைத்திருக்கும் எங்கள் ஆடையைத் தந்து விடு

கதுவுதல் -  பற்றுதல்/ பிளத்தல்  ஆடை இல்லாமல் நீரிலேயே வெகு நேரம் நின்றதால் மீன்களானது கால்களை வந்து பற்றுதாம்..நிமிண்டுதாம் :) கயல் மீன்களோடு ,வாளை மீனும் ஒன்றாக் கூடி காலை வந்து பிடிக்குதாம்
எந்தன் ஐ மார்கள் - ஐ என்றால் தலைவன் /தந்தை/ மூத்தவன்/அரசன் .பொம்பளைப் பிள்ளைங்க குளிக்கிற இடத்தில இப்படி வந்து சேட்டை பண்றதை பெண் வீட்டு தந்தை/அக்குடும்பத் தலைவன் /அண்ணன் மார்கள் பார்த்துட்டா வேலை எடுத்துகிட்டு அடிக்க வருவாங்க. அதைப் பார்த்துட்டு நீ ஓடணும் அவங்க விரட்டினா நல்லாவா இருக்கும். இது என்ன விளையாட்டு? (என் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்மகன்கள் வந்துருவாங்க என்ற மிரட்டலும் , வந்துட்டா கண்ணனுக்கு என்னவாகுமோ என்ற பதட்டமும் ஒரு சேரச் சொல்றாங்க பாருங்க அதான் காதல் )



அழகிய எங்கள் சிறிய ஆடைகள் பலவற்றையும் நீ எடுத்துக் கொண்டு, மரத்தின் மீது ஏறி அமர்ந்து கொள்ளாதே.
கோலம் என்பது நாம் மணல் கொண்டு போடும் கோலத்தையும் குறிக்கும். நமது வெளித்தோற்றத்தையும் (உருவத்தையும் குறிக்கும் ) அழகு எனவும் பொருள் படும். கோலங்கரிய பிரானே என்றால் அழகிய /கருப்பான திருமேனி கொண்ட பிரானே என்றும் பொருள்.


குருந்த மரத்தின் கிளைகளின் இடையே வைத்திருக்கும் எங்கள் துணியைத் தந்துவிடு ! 

Wednesday 24 February 2016

24.பரக்க விழித்தெங்கும் நோக்கி

24.பரக்க விழித்தெங்கும் நோக்கி
பாடல் :24
பரக்க விழித்தெங்கும் நோக்கிப்
பலர்குடைந் தாடும் சுனையில்
அரக்கநில் லாகண்ணநீர்கள்
அலமரு கின்றவா பாராய்
இரக்கமே லொன்று மிலாதாய்
இலங்கை யழித்த பிரானே
குரக்கர சாவதறிந்தோம்
குருந்திடைக் கூறை பணியாய்

விளக்கம் :
பரக்க விழித்து எங்கும் நோக்கி -  நால் திசையெங்கும் திருதிருவென விழித்து நோக்கி
பலர் குடைந்தாடும் சுனையில் - பலர் குடைந்து நீராடும் சுனையில்
அரக்க நில்லா கண்ண நீர்கள் - அடக்கியும் நில்லாமல் கண்ணீர்கள்
அலமருகின்றவா பாராய்- தளும்புகின்றன பாராய்
இரக்கமேல் ஒன்றும் இலாதாய் - கொஞ்சம்கூட இரக்கம் இல்லாதவனே!
இலங்கை அழித்த பிரானே - இலங்கை அழித்த எம்பிரானே
குரக்கு அரசாவது அறிந்தோம் - குரங்கை வைத்து இலங்கையை வென்றவனே ,குரங்குகளின் தலைவனே !
குருந்து இடைக் கூறை பணியாய் - குருந்து மரத்தின் இடையே நீ வைத்திருக்கும் எங்கள் துணிகளைக் கொடு

அரக்கபரக்கத்  திருதிருவென விழித்தல் என்பார்கள்.அதாவது என்ன செய்வது என்றே அறியாது அறியாமையால் விழித்தல்.  அது போல , அரக்கபரக்க நால் திசையெங்கும் விழித்து நோக்கி, பலர் குடைந்தாடும் சுனையில் (சுனை - தானே இயற்கையாகத் தோன்றிய ஊற்று  ) எவ்வளவுதான் அடக்கியும் நிற்காமல் கண்ணீர் தளும்புகின்றனவாம் கண்களில். இப்படி அழும் நிலையில் நிற்கின்றோம் என அறிந்தும் , இரக்கம் ஒன்றும் இல்லாம வேடிக்கை பார்ப்பவனே!

குரங்குகளை வைத்து இலங்கையை அழித்தவனே.குரங்குகளின் அரசனாவது அறிந்தோம்..(மறைமுகமா குரங்கு எனத் திட்டுகிறாள் . மரத்தின் மீது அமர்ந்து இந்தச் சேட்டை செய்து கொண்டிருப்பதால் )

குருந்த மரத்தின் இடையே இருக்கும் எங்கள் துணிகளைத் தந்து விடு !
கண்ணன் இப்படி உடையைப் பிடுங்கி வைத்துக் கொண்டு செய்யும் குறும்புத்தனங்களால் எங்கே பல்லாரும் பார்க்க உடையின்றி தன் மானம் போய் விடுமோ என அஞ்சி கோதைக்கு அழுகை வருகின்றது. இருப்பினும் கண்ணன் முன் அழவும் விருப்பமில்லாமல் அதே நேரம் கண்களில் வருகின்ற கண்ணீரையும் அடக்க முடியாமல் கண்களில் கண்ணீர் தளும்ப தேக்கி நிற்கின்றாள்.

அழ வச்ச கடுப்புல குரங்குன்னு வேற திட்டுகிறாள் :) ஹா ஹா இதெல்லாம் தெய்வ நிந்தனையில் வராது .. காதலனைப் போடா லூசு என்பதை ஒப்ப இது :))


Tuesday 23 February 2016

23.எல்லே யீதென்ன இளமை

23.எல்லே யீதென்ன இளமை 
பாடல் : 23
எல்லே யீதென்ன இளமை
எம்மனை மார்காணி லொட்டார்
பொல்லாங்கீ தென்று கருதாய்
பூங்குருந் தேறி யிருத்தி
வில்லாலி லங்கை யழித்தாய்நீ
வேண்டிய தெல்லாம் தருவோம்
பல்லாரும் காணாமே போவோம்
பட்டைப் பணித்தரு ளாயே

விளக்கம் : 
 எல்லே !இது என்ன இளமை- ஏலே ! இது என்ன சிறுபிள்ளைத் தனம்
எம் மனைமார் காணில் ஒட்டார் - எங்கள்  வீட்டு மக்கள் இதைப் பார்த்தா இனி இங்க விட மாட்டாங்க
பொல்லாங்கு இதுவென்று கருதாய் - இது போக்கிரித்தனம் என்று ஏன் கருத மறுக்கிறாய்
பூங்குருந்து ஏறி இருத்தி -  குருந்த மரம் ஏறி உட்கார்ந்து இருப்பவனே
வில்லால் இலங்கை அழித்தாய் - வில்லால் இலங்கையை அழித்தாய்
நீ வேண்டியது எல்லாம் தருவோம் - நீ கேட்டது எல்லாம் தருவோம்
பல்லாரும் காணாமே போவோம் - யாரும் பார்க்கும் முன்னம் வீட்டுக்குப் போவோம்
பட்டைப் பணித்தருளாயே ! - எங்கள் பட்டாடையைத் தந்தருளாயே !

ஏலே!அழகான நெல்லைத் தமிழ் (வில்லிபுத்தூர் அதை ஒட்டியது தானே ) இதே மாதிரி திருப்பாவையிலும் எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோன்னுவரும் :)  ஏலே இதென்ன சின்னப்புள்ளத்தனம் !
எம் மனை மார் - மனை = வீடு எங்க வீட்டில் உள்ளவங்க மட்டும் இதைப் பார்த்தா எங்கள இங்கிட்டு விடவே மாட்டாங்க.. எங்கள வீட்ல சேர்க்கவே மாட்டாங்க (அம்மா திட்டும் வீட்டுக்குப் போகணும்  உடைகளைக் கொடுடா ) இது போக்கிரித்தனம் என்று கருது ..  குருந்த மரத்தில் ஏறி அமர்ந்து இருப்பவனே !


உன் வில்லால் இலங்கையை அழித்தாய் !
Image result for sriram


நீ கேட்டது எல்லாமே தருகிறோம் .யாரும் பார்க்கும் முன்னம் நாங்க போயிடறோம். எங்கள் பட்டாடையைக் கொடுத்துவிடு !

கோதைத் தமிழ் பார்த்தீர்களா? வெகு கடினமாக வலிந்து திணித்த மேதைத்தனம் எல்லாம் இல்லை. வெகு எளிமையாக ஒரு கிராமத்துப் பெண்ணின் பேச்சைப் போன்றே தான் இருக்கின்றது . இதனாலேயே இதை வாசிக்க ஆசையாய் இருக்கின்றது :)

Monday 22 February 2016

22.இதுவென் புகுந்ததிங் கந்தோ !

22. இதுவென் புகுந்ததிங் கந்தோ 
பாடல் : 22
இதுவென் புகுந்ததிங் கந்தோ !
இப்பொய்கைக் கெவ்வாறு வந்தாய்
மதுவின் துழாய்முடி மாலே
மாயனே எங்க ளமுதே
விதியின்மை யாலது மாட்டோம்
வித்தகப் பிள்ளாய் விரையேல்
குதிகொண் டரவில் நடித்தாய்
குருந்திடைக் கூறை பணியாய்

விளக்கம் : 

இது என்ன புகுந்தது இங்கு  - இது என்ன புகுந்தது இங்கு ?
அந்தோ! இப்பொய்கைக்கு எவ்வாறு வந்தாய்-  அந்தோ!இந்தப் பொய்கைக்கு (குளத்துக்கு எவ்வாறு வந்தாய் ?
மதுவின் துழாய்முடி மாலே - தேன் ததும்பும் துளசி மலர்கள் , முடியில் சூடிய மாலே
மாயனே - கருப்பனே , (மாயங்கள் செய்பவனே )
எங்கள் அமுதே - எங்கள் அமுதே
விதி இன்மையால் அது மாட்டோம் - பெண் உடைகள் அணியாமல் ஆண்கள் முன் வருதல் விதி இல்லை அதை நாங்கள் செய்ய மாட்டோம்
வித்தகப் பிள்ளாய் - பல் திறமை பெற்ற வல்லவனே
விரையேல் - உடை இல்லாம இருக்கோம் அவசரப்பட்டு வந்துடாத
குதி கொண்டு அரவில் நடித்தாய் - உன் குதிகால் கொண்டு பாம்பின் மீது நடனம் ஆடியவனே
குருந்து இடைக் கூறை பணியாய் - குருந்த மரத்தின் இடையே வைத்திருக்கும் எம் துணிகளை கொடுத்து விட்டுப் போ.

அதிர்ச்சியா கேட்கறாங்க..அட இது என்ன புகுந்தது இங்கு ?
அந்தோ ! நீ எப்படி இந்தக் குளத்துக்கு  வந்த ? (உணர்ச்சி வாக்கியம் ) தேன் ததும்பும் துளசிகள் சூடிய முடி கொண்ட மாலே ! மாயனே  (கருப்பனே ) மாயங்கள் செய்பவனே !

எங்கள் அமுதே! (நைச்சியமா பேசி துணி வாங்கப் பார்க்கிறார்கள் . என் செல்லம்ல  கன்னுக்குட்டில என்று நம் காரியம் சாதிக்க குழந்தையைக் கொஞ்சுவோமே அது போல ) உடை இன்றிப் பெண்கள் ஆண் முன்னால் வர இயலுமா ? அப்படி எந்த விதியும் இல்லையே. அதனால் அதை நாங்கள் செய்ய மாட்டோம்.
பல் திறமை பெற்ற வல்லவனே ! எங்களிடம் உடை இல்லை அவசரப்பட்டு வந்துடாத!


உன் குதிகால் கொண்டு பாம்பின் மீது நடனம் ஆடினாய் ! குருந்த மரத்தின் இடையேவைத்திருக்கும் எங்கள் துணிகளைக் கொடுத்து விடு.
குருந்த மரம் 
குருந்த மரம் பற்றி அகராதியில் படித்த பொழுது அது காட்டு எலுமிச்சை வகை எனச் சொல்லியது. அது ஒரு சிறுவகை மரம் .இது குளத்தின் அருகே வேர்பிடிச்சு மண் அரிக்காமல் இருக்க இந்த மரம் உதவுமாம் (நல்ல தகவல் இல்ல ?) 

பாருங்க இந்த கண்ணனின் குறும்பை ..பெண்களை எப்படித் தவிக்க விட்டு ரசிக்கிறார்..பெரிய காதல் மன்னன் :) 





Thursday 18 February 2016

21.கோழியழைப்பதன் முன்னம்

21. கன்னியரோடு கண்ணன் விளையாடல் 

நாச்சியார் திருமொழி மூன்றாம் பத்து ஆரம்பம் !

இந்தப் பத்துப் பாடல்களும் கண்ணன் ஆயர் குலப் பெண்களின் துணிகளைத் திருடி அவர்களிடம் குறும்பு  செய்யும் பாவனைகள் கொண்டவை..அதிகாலையில் குளிக்கச் சென்ற பெண்கள் அறியாமல் , அவர்கள் குளிக்கின்ற நேரம் அவர்கள் துணியைத் திருடி வைத்துக் கொண்டு , குறும்பு செய்யும் கண்ணனிடம் பெண்கள் தங்கள் உடைகளை வேண்டிக் கேட்கின்றார்கள் .
பாடல் :21
கோழி யழைப்பதன் முன்னம்
குடைந்துநீ ராடுவான் போந்தோம்
ஆழியஞ் செல்வ னெழுந்தான்
அரவணை மேல்பள்ளி கொண்டாய்
ஏழைமை யாற்றவும் பட்டோம்
இனியென்றும் பொய்கைக்கு வாரோம்
தோழியும் நானும் தொழுதோம்
துகிலைப் பணித்தரு ளாயே

விளக்கம் : 

கோழி அழைப்பதன் முன்னம் - கோழி கூவி விடிந்து விட்டது என அழைக்கும் முன்பே
குடைந்து நீராடுவான் போந்தோம் - வெள்ளென எழுந்து குளத்தில் குடைஞ்சு குடைஞ்சு நீராடலாம் என்று எண்ணி வந்தோம்
ஆழியஞ் செல்வன் எழுந்தான் - கதிரவன் எழுந்தான்
அரவணை மேல் பள்ளி கொண்டாய் - பாம்பின் மீது படுத்திருப்பவனே
ஏழைமை ஆற்றவும் பட்டோம் - இல்லாமையை ஆற்ற கடமைப் பட்டோம் 
இனி என்றும் பொய்கைக்கு வாரோம் - இனி எப்போதும் பொய்கைக்கு (குளத்துக்கு ) வரமாட்டோம்
தோழியும் நானும் தொழுதோம் - ஐயா சாமி நானும் என் தோழியும் உன்னை வேண்டிக் கும்பிட்டு கேட்டுக்கறோம்
துகிலைப் பணித்தருளாயே ! - எங்கள் துணியைத் தந்து விடு

கோழி   கூவினாலே அதிகாலை எனப் பொருள். விடியும் முன்னரே கோழி (சேவல் ) கூவி விடும்.அது கூவுவதற்கு முன்னமே குளத்துக்கு குளிக்க வந்தோம். குளித்தல் என்றால் வெறுமனே அல்ல குடைஞ்சு குடைஞ்சு..நீர்ல அந்தக் குளிரிலும் நன்றாக முங்கி முங்கி குளிக்கலாம்னு வந்தோம். கதிரவனே எழுந்துட்டான் .நீ பாம்பு (அரவணை ) மேல படுத்துக்கிட்ட



எதுவும் இல்ல இப்ப எங்ககிட்ட. துணிகள் இல்லாத ஏழைமை ஆகிடுச்சு. அதைச் சரி செய்ய விரும்பறோம். ஐயா , சாமி நானும் என் தோழிகளும் உன்னைக் கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டுக்கறோம் .தயவுசெய்து எங்கள் துணிகளைத் தந்து விடு 


ஏதாவது சேட்டை செய்பவரிடம் நைச்சியமாகப் பேசி காரியம் சாதித்தல்.  அது போல இங்கயும் கெஞ்சுறாங்க கோதையும் அவள் தோழிகளும் :) ஆழியஞ் செல்வன் என்றால் கதிரவன். ஆழி என்றால் கடல். கடல் மேல் பிறந்தவன் போலக் காட்சி அளிக்கும் சூரியன். ஆமா ஆண்டாள் இருந்த ஊரில்தான் கடலே இல்லையே அப்புறம் எப்படி சூரியன் கடல் மீது பிறந்தவன் போன்ற காட்சியைப் பார்த்திருப்பாள் ? 

இலக்கிய வாசிப்பு. அறிவான தகப்பனால் வளர்க்கப்பட்டவள் எவ்வளவு தூரம் பிற பாடல்களைப் பயின்று இருக்கக்கூடும் ?அதை எங்க பயன்படுத்துகிறாள் பாருங்கள் :) 

Wednesday 17 February 2016

20.சீதைவாயமுதமுண்டாய்!

20.சீதைவாயமுதமுண்டாய்! 
பாடல் :20
சீதைவாயமுதமுண்டாய்! எங்கள்
சிற்றில்நீ சிதை யேல்! என்று
வீதிவாய்விளையாடுமாயர்
சிறுமியர்மழலைச்சொல்லை
வேதவாய்த்தொழிலாளர்கள்வாழ் வில்லி
புத்தூர் மன்விட்டுசித்தன்றன் 
கோதைவாய்த்தமிழ்வல்லவர் குறை
வின்றிவைகுந்தம் சேர்வரே.

விளக்கம் :
சீதை வாய் அமுதம் உண்டாய் - சீதை வாய் முத்தம் எச்சில் உண்டவனே !
எங்கள் சிற்றில் நீ சிதையேல் என்று - எங்கள் சிறு மணல் வீட்டை நீ சிதைக்காதே என்று
வீதி வாய் விளையாடும் ஆயர் - வீதியில் விளையாடும் ஆயர்
சிறுமியர் மழலைச் சொல்லை - சிறுமியர் மழலைச் சொல்லை
வேத வாய்த் தொழிலாளர்கள் வாழ் - வேதம் ஓதும் தொழில் கொண்டவர்கள் வாழும்
வில்லிபுத்தூர் மன் விட்டுச் சித்தன் தன் - வில்லிபுத்தூர் விஷ்ணு சித்தனின்
கோதை வாய்த் தமிழ் வல்லவர் - கோதை சொன்ன தமிழ் பாடுபவர்கள்
குறைவின்றி வைகுந்தம் சேர்வரே - - ஒரு குறையுமின்றி வைகுந்தம் சேர்வார்கள்

சீதையின் வாய் அமுதம்.. இந்தக் கோதை காதல் ரசமிக்கவள் :)
சாப்பிடுவதை அக்காலத்தில் அமுது உண்ணல் என்பார்கள்..சீதையின் வாய் அமுதம் உண்டவன் என்கிறாள்..முத்தம் ஏதோ சும்மா வெறும் ஒற்றுதல் அல்ல..:) இதழ் முத்தம் கொடுத்து அதன் எச்சிலை இங்கே அமுதம் என்கிறாள்:)  அதை உண்டவனாம் இவள் மனம் கொண்ட காதலன் :)


எங்கள் சிறிய மணல் வீட்டை சிதைக்காதே என்று வீதியில் விளையாடும் ஆயர் குல (மாடு மேய்க்கும் சிறுமிகள் ) சிறுமிகள் பேசிய இந்த மழலைச் சொற்களை , வேதத்தைத் தொழிலாகச் செய்யும் தொழிலாளர்கள் (பூசாரி ,சாமி ன்னு லாம் அவ சொல்லல பொற்கொல்லர் ,கொத்தனார் மாதிரி இவங்க வேதம் ஓதும் தொழில் செய்யும் தொழிலாளர்கள் அவ்வளவே ) உள்ள வில்லிபுத்தூரில் உள்ள விஷ்ணு சித்தன் தன் கோதை ,  தன் வாயால் சொன்ன


தமிழ்ப் பாக்களைப் பாடுபவர்கள் , எந்தக் குறையுமின்றி வாழ்ந்து , வைகுந்தத்தில் உள்ள வைகுந்த வாசன் அடி சேர்வார்கள் 

இறைவன் மிகப் பெரியவன் என்பதை உணர்ந்து தன்னைச் சாதாரண மாடு மேய்க்கும் சிறுமியாகக் கருதி , அந்த பால்ய பருவத்தில் மணல் வீடு கட்டி விளையாடும்போது அதிலே கண்ணனையும் சேர்த்துக் கொண்டு கண்ணன் செய்யும் குறும்புத் தனங்களுக்காக இந்தப் பத்துப் பாடல் :) அடுக்குமாடி வீடுகள் வந்த பிறகு இது போன்ற மணல் வீடு கட்டி விளையாடுதல் எல்லாம் இப்படிப் படித்து அறிந்தால்தான் தெரியும் நம் சந்ததிகளுக்கு.. தான் கடவுளைக் காதலிப்பதும் அவனை அடைய நினைப்பதும் மணல் வீடு போல நிலையில்லாத ஆசைதான் எனத் தெரியும் அவளுக்கு..இருப்பினும் அந்தக் கற்பனை  உலகமே அவளுக்குப் போதுமானதாக இருந்திருக்கிறது ..யதார்த்தம் மூச்சை அடைக்கும் போதெல்லாம் கற்பனை உலகில் தான் தஞ்சம் புக வேண்டி இருக்கிறது.. அந்த ஆசை நிராசை என்றே அவளுக்கும் தெரிந்து இருக்கக்கூடும் . இருந்தாலும் அதைக் கலைச்சுடாதே என்கிறாள் . பிள்ளை மனம் கொண்டவள். கண்ணனைத் தன் சக தோழனாக நினைத்து , அவனோடு உருண்டு புரண்டு விளையாடுவது போன்ற பாவனையே இந்தப் பத்துப் பாடல்கள். 

ஆண்டாள் அடி போற்றி ! 
நாச்சியார் திருமொழி இரண்டாம் பத்து நிறைவுற்றது:) 


19.முற்றத்தூடு புகுந்துநின்முகங்

19.முற்றத்தூடு புகுந்துநின்முகங் 
பாடல் :19
முற்றத்தூடு புகுந்துநின்முகங்
காட்டிப்புன்முறு வல்செய்து
சிற்றிலோடெங்கள் சிந்தையும்சிதைக்
கக்கடவையோ கோவிந்தா
முற்றமண்ணிடம் தாவிவிண்ணுற
நீண்டளந்துகொண் டாய்எம்மைப்
பற்றிமெய்ப்பிணக் கிட்டக்காலிந்தப்
பக்கம்நின்றவ ரெஞ்சொல்லார்

விளக்கம் : 
முற்றத்து ஊடு புகுந்து - முற்றத்திலே ஊடாகப் புகுந்து
நின் முகம் காட்டிப் புன்முறுவல் செய்து - உன் முகம் காட்டிப் புன்னகை செய்து
சிற்றிலோடு எங்கள் சிந்தையும் - எங்கள் சிறு மணல் வீட்டோடு எங்கள் சிந்தனையையும்
சிதைக்கக் கடவையோ கோவிந்தா - சிதைக்கும் கோவிந்தா
முற்ற மண்ணிடம் தாவி  - முழுவதுமாக மண் ,இடம் தாவி
விண்ணுற நீண்டு அளந்து கொண்டாய் - வானம் அளந்து கால் நீட்டி மொத்தமும் அளந்தாய்
எம்மைப்பற்றி மெய்ப்பிணக்கு இட்டக் கால் - எங்களைப்பற்றி (பிடித்து) உடல் மீது மல்லுக்கட்டி சண்டை இட்டால்
இந்தப் பக்கம் நின்று அவர் எஞ்சொல்லார் - இதைப் பார்க்கும் என் பக்கத்தார் (என் வீட்டார் ) என்ன சொல்வார்கள்?

முற்றத்தில் ஊடாக (இடையில்) புகுந்து உன் முகம் காட்டிப் புன்னகை செய்து எங்கள் சிறு மணல் வீட்டோடு எங்கள் சிந்தையையும் சிதைப்பாயோ கோவிந்தா ..
மண் முழுவதுமாக அளந்து ,பின் இடம் தாவி வானம் அளந்து கால் நீட்டி அதன் மொத்தமும் அளந்தாய்

நாங்க ஆசைப்பட்டு கட்டின வீட்டை இடிக்க நீ வர , அதை நாங்க தடுக்க முனைய, அதற்காக எங்களைப் பிடிச்சு கட்டி உருண்டு நீ சண்டை இட இச்சண்டையை நின்று வேடிக்கை பார்க்கற என் வீட்டார் (அல்லது சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பவர்கள் என்றும் கொள்ளலாம் ) இதைப் பார்த்தா என்ன சொல்வாங்க ?
Related image


பொதுவா ஆண் பிள்ளையோடு பெண் பிள்ளை சண்டை இட்டாலே ,  அவன் தான் ஆம்பளப் புள்ள நீயும் சரி மல்லுக்கு நிற்கறியே என்று என் அம்மா கூட திட்டுவார்கள்.. :) அது போலத்தான் ஆண்டாள் வீட்டிலும் திட்டினாங்களாம் :))

கண்ணன் காதலன் மட்டுமல்ல அவளோடு  செல்லச் சண்டை இடும் தோழனும் கூட :)


Monday 15 February 2016

18.வட்டவாய்ச்சிறு தூதையோடு

18. வட்டவாய்ச்சிறு தூதையோடு
பாடல் :18
வட்டவாய்ச்சிறு தூதையோடு
சிறுசுளகும்மண லுங்கொண்டு
இட்டமாவிளையாடுவோங்களைச்
சிற்றிலீடழித்தென்பயன்?
தொட்டுதைத்துநலியேல்கண்டாய் சுடர்ச்
சக்கரம் கையிலேந்தினாய்
கட்டியுங்கைத் தாலின்னாமை
அறிதியேகடல்கண்ணனே.

விளக்கம் : 

வட்ட வாய்ச் சிறு தூதையோடு - வட்ட வடிவ வாய் கொண்ட சிறு பொம்மைப்பானையோடு
சிறு சுளகும் மணலும் கொண்டு - சிறிய சுளகும் (நாம் வீட்டில் பயன்படுத்தும் சுளகு ) மணலும் கொண்டு
இட்டமா விளையாடுவோம் எங்களை - இதெல்லாம் வச்சு விளையாடுற எங்களோட
சிற்றில் ஈடழித்து என் பயன் - சின்ன வீட்டை அழிச்சு உனக்கு என்ன பயன் ?
தொட்டு உதைத்து நலியேல் கண்டாய் - இப்படி அதைத் தொட்டு ,உதைத்து  சேதம் செய்கிறாயே
சுடர்ச் சக்கரம் கையிலேந்தினாய் - ஒளிர்கின்ற சக்கரம் கையில் ஏந்தியவனே
கட்டியும் கைத்தால் இன்னாமை அறிதியே கடல் கண்ணனே - கருப்பட்டி கூட கசந்துட்டா  இனிக்காது என்றறியாதவனா நீ கடல் வண்ணன் கொண்ட கண்ணனே !
கைத்தல் - கசந்து போதல்
இந்தப் பாடல் எனக்கு மிக மிகப் பிடித்திருக்கிறது..என்ன அழகான காட்சிப்படுத்துதல்..இது போன்ற விளையாட்டுகளை எல்லாம் நம் குழந்தைகள் இழந்துவிட்டு டிவிகளில் முடங்கிப் போவது நம் சாபக்கேடு .

மண் பானை 
பெண்கள் என்றாலே சொப்புப் பானை ,சமையல் பாத்திரங்கள் வச்சு விளையாடுவது நம் மரபிலேயே உண்டு போல. சிறு வயதில் சின்னஞ்சிறிய மண் பானையில் சோறாக்கி அதை உண்டு மகிழ்ந்தது உண்டு.இன்றளவும் எனக்கு மண் பாத்திரங்கள் மீது தீராக் காதல் உண்டு :) வட்ட வடிவ வாய் கொண்ட சிறு தூதை = பானை

சுளகு 
இந்தச் சுளகை பேச்சு வழக்கில் சொளகு என்போம். எங்கள் வீட்டில் என் அம்மாச்சி பயன்படுத்தியது இருந்தது. புடைக்கப் பயன்படுத்துவாங்க. கசடுகளை புடைத்து கையில் அழகாகப் பிடித்து வெளியேற்றுவதே பார்க்கத் தனி அழகு.. பனையோலையில் செய்யும் சுளகு , கெட்டியாக இருக்க வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து அதைப் பசை போல தடவி விட்டுவிடுவார்கள்.அது நன்கு இறுகி விடும்.  அவ்வப்போது அதிலே சாணியும் தடவி இறுக்கம் செய்வார்கள். இந்தப் பாடலிலும் ஆண்டாள் மண்ணைப் புடைக்கிறாள் . எதற்கு?  கற்கள் நிறைய கலந்த மணலை புடைத்தால் கல் வெளியேறி நைசான நுண் மணல் கிடைக்கும்.அதை வச்சு வீடு கட்டி விளையாட...:)
நன்றி கூகுல் 
வட்ட வடிவான பானை ,சுளகுல புடைச்ச மணல் கொண்டு விளையாடிட்டு இருக்கும் எங்களை ,நாங்கள் செய்யும் இந்தச் சிறு வீட்டை ,நீ அழிச்சு உனக்கு என்ன ஆகப்போகிறது ? இப்படி அதைத் தொட்டு உதைத்து  சேதப்படுத்திவிடுகிறாயே ?
ஒளிர்கின்ற சக்கரம் கையில் ஏந்தியவனே ! கடல் வண்ண கண்ணனே!

இனிக்கின்ற கருப்பட்டி கூட கைத்தல் ஆகிட்டா (கைத்தல் -கசந்து போதல், , கார்ப்பு  ) இனிக்காது .போலவே என்னதான் நீ மனத்திற்கு இனியவனாக இருந்தாலும் , இப்படி எங்கள் சிறிய வீட்டை நீ இடித்தால் எங்க மனசும் கசந்து போயிடும்..நொந்து போயிடும்..இதைக் கூட அறியாதவனா நீ ?

உனக்காகவே உருகிக்கொண்டு இருப்பவளைக் கண்டு இரக்கமுறு இல்லாவிடில் நீ எவ்வளவு இனிமையானவன் எனினும் என் மனம் உன் மீது வருத்தம் கொள்ளும் என்கிறாள் ஆண்டாள் :)


Friday 12 February 2016

17.பேதநன்கறி வார்களோடிவை

17.பேதநன்கறி வார்களோடிவை 
பாடல் 17
பேதநன்கறி வார்களோடிவை
பேசினால்பெரி திஞ்சுவை
யாதுமொன்றறி யாதபிள்ளைக
ளோமைநீநலிந் தென்பயன்
ஓதமாகடல் வண்ணாஉன்மண
வாட்டிமாரொடு சூழறும்
சேதுபந்தம் திருத்தினாயெங்கள்
சிற்றில்வந்து சிதையேலே

விளக்கம் :
பேதம் நன்கு அறிவார்களோடு - பேச்சும் ஒன்றும் செயல் ஒன்றுமான உன் செயல்களுக்கு வித்தியாசம் நன்கு அறிந்தவர்களோடு
இவை பேசினால் பெரிதும் சுவை - இவை பேசினால் பெரிதும் சுவையானதாக இருக்கும்
யாதும் ஒன்று அறியாத - ஆனா இந்தச் சூதுவாது அறியாத
பிள்ளைகளோம் எமை நீ நலிந்து என்ன பயன் - பிள்ளைகளான எங்களை நீ துன்புறுத்தி என்ன பயன்
ஓதமா கடல்வண்ணா - அலை கொண்ட கடல் நிறத்தானே
உன் மணவாட்டிமாரொடு சூழறும் - உன் மனைவிகளின் மீது ஆணை
சேது பந்தம் திருத்தினாய் - அணை கட்டினாய்
எங்கள் சிற்றில் வந்து சிதையலே - எங்கள் சிறு வீட்டை வந்து சிதைக்காதே

உன் பேதம் நன்கு அறிவார்களோடு , உன் பேச்சுக்கும் செயலுக்கும் வித்தியாசம் அறிந்தவர்களோடு ,இதெல்லாம் பேசினா ரொம்பச் சுவையானதாக இருக்கும்..ஆனா எதுவும் ஒன்றும் விபரம் அறியாத  சிறு பிள்ளைகளான எங்களை நீ நலிந்து (மெலிதல் என்றும் பொருள் வரும் ஆனால் இவ்விடத்தில் துன்புறுத்தி ) கோபம் கொண்டு என்ன பயன் ?
நன்றி கூகுல் 
ஓதம் - கடல் அலை.. அலை கொண்ட கடலின் வண்ணா அக்கடலில் சேது - அணை பந்தம் - கட்டுதல் அணை கட்டினாய்..
நன்றி கூகுல்
 உன் மணவாட்டிகள் (மனைவியர் ) மீது ஆணை நீ எங்கள் சின்ன மணல் வீட்டை இடிக்கக் கூடாது..
நன்றி கூகுல் 

மீறி மீறிச் சேட்டை,  செய்கை செய்து கொண்டே இருக்கவும் இயல்பாக நாம் சொல்வோமே நீ மட்டும் ரோஷமுள்ள புள்ளையா இருந்தா இனிமே இதைச் செய்யக் கூடாது..அல்லது அப்பா மேல் ஆணை இதைப் பண்ணக் கூடாது..அது போல ஆண்டாள் ,கண்ணனின் மனைவியர் மீது ஆணை இனிமே சேட்டை பண்ணாதங்கறாங்க :)) தனது தர்ம பத்தினியை நிச்சயம் கண்ணன் மதிக்கக் கூடும் என்று நம்புகிறாள் இப்பேதைப் பெண் கோதை :)

நன்கு கவனித்தீர்களா ? ஆண்டாள் ஒரு அப்பட்டமான கிராமத்துப்பெண் ..பேச்சு வழக்கு இன்றளவும் நாம் பேசுவது போலத்தான் இருக்கு அவள் பாடல்கள்..அவள் இன்னும் மனசுக்கு நெருக்கமாக இதுவும் ஒரு காரணம் :)

Thursday 11 February 2016

16.முற்றிலாத பிள்ளைகளோம்

16.முற்றிலாத பிள்ளைகளோம் 
பாடல் :16
முற்றிலாத பிள்ளைகளோம் முலை 
போந்திலா தோமை நாடொறும்
சிற்றில் மேலிட்டுக் கொண்டு நீசிறி
துண்டு திண்ணென நாமது
கற்றிலோம், கடலையடைத்தரக்
கர் குலங்களை முற்றவும்
செற்று இலங்கையைப் பூசலாக்கிய
வேகா! எம்மை வாதியேல்.
விளக்கம் : 
முற்று இலாத  பிள்ளைகளோம்- முதிர்ச்சி பெறாத இளம் பிள்ளைகள் நாங்கள்
முலை போந்திலாதோமை நாள்தோறும் - முலை கூட சரியாக வளராத எங்களை நாள்தோறும்
சிறிய இல் மேல் இட்டுக்கொண்டு - நாங்கள் கட்டும் சின்ன வீட்டு மேல் ஏறிக் கொண்டு
நீ சிறிது உண்டு - நீ செய்யும் செயல்கள் சில உண்டு
திண்ணென நாம் அது கற்றிலோம் -  அதை முறிக்கும் வல்லமை நாங்கள் கற்க வில்லை
கடலை அடைத்த அரக்கர் குலங்களை முற்றவும் - கடலை அடைத்து (அணை கட்டி ) அரக்கர் குலங்களை முழுமையா அழிக்கவும்
செற்று இலங்கையைப் பூசல் ஆக்கிய வேகா ! - பகையை  இலங்கைக்கே சென்று   சண்டையிட்டு வென்ற வீரமுடையவனே செயலில் வேகம் கொண்டவனே
எம்மை வாதியேல் - எங்களைத் துன்புறுத்தாதே


முற்றிலாத..முற்றுப் பெறாத (முடிவடையாத ) என்றொரு பொருள் உண்டு..ஆனால் அது இங்கு பொருந்தாது.. முற்றிலாத - முற்றாத..பேச்சு வழக்கில் முத்தாத.. முதிராத,  முதிர்ச்சி அடையாத முலைகள் கூட சரியாக வளராத இளம் பிள்ளைகள் நாங்கள்..
ஓவியம் கேஷவ்
அப்படியான எங்களை நாள் தோறும் எங்கள் சிறிய வீட்டை சிதைக்கும் சாக்கில் அதன் மீது ஏறிக்கொண்டு நீ செய்யும் செயல்கள் சில உண்டு. அந்த செயல்களை முறியடிக்கும் அளவுக்கு எங்களுக்கு வல்லமை (திட்பம் -திண்மை ) இல்லை ஐயா..
நன்றி கூகிள் 
கடலை அடைச்சு ..தண்ணி இங்கிட்டு அங்கிட்டுப் போக விடாம அணை கட்டி , அரக்கர் குலங்களை முற்றாக (முழுமையாக ) அழிக்கவும் ,  இலங்கையில் சண்டையிட்டு பகையை  வென்ற வேகா (வீரம் ,செயல் வேகம் உடையவனே ) எங்களைத் துன்புறுத்தாதே !

நன்றி :கூகுல்
இப்பாடலில் வேகா வுக்குப் பதில் சேவகா என்றும் சில பதிப்புகளில் இருக்கு..சேவகன் எனில் சேவை செய்பவன்.. பக்தருக்குச் சேவை செய்பவன் என்று கொள்ளலாம். ஆனால் என் உள் மனம் என்னவோ  " வேகா"வே இவ்விடம் வரும் எனச் சொல்கின்றது :)

15.வெள்ளைநுண்மணல்

15.வெள்ளைநுண்மணல் 

பாடல் :15

வெள்ளைநுண்மணல் கொண்டுசிற்றில்
   விசித்திரப்பட, வீதிவாய்த்
தெள்ளிநாங்க ளிழைத்தகோல
   மழித்தியாகிலும், உன்றன்மேல்
உள்ளமோடி யுருகலல்லால்
   உரோடமொன்று மிலோங்கண்டாய்,
கள்ளமாதவா ! கேசவா! உன்
   முகத்தனகண்க ளல்லவே

விளக்கம் : 
வெள்ளை நுண்மணல் கொண்டு - வெள்ளை நுண்ணிய மணல் (கோலப்பொடி) கொண்டு
சிறிய இல் விசித்திரப் பட - சிறு வீடு அழகாக , பார்த்தாலே தனியாகத் தெரியும்படி
வீதிவாய்த் தெள்ளி - வீதியில் நீர் தெளித்து
நாங்கள் இழைத்த கோலம் அழித்தியாகிலும் - நாங்கள் இட்ட கோலத்தை நீ அழித்து சேட்டை செய்தாலும்
உன்றன் மேல் உள்ளம் ஓடி உருகல் அல்லால் - உன் மேல் எங்கள் சிந்தனை ஓடி உருகவே செய்கின்றதே தவிர
உரோடம் ஒன்றும் இலோம் கண்டாய் - வேறு ரோஷம் உன் மேல கோபம் ஒன்றுமே இல்லை பார்த்துக்கோ
கள்ள மாதவா கேசவா - திருட்டு மாதவா கேசவா
உன் முகத்தன கண்கள் அல்லவே - உன்  கண்களால் அள்ளிக்  கண்டால் எங்கள் வீட்டை அழிக்க மனம் வராது

வெள்ளை நுண்ணிய மணல் (கோலப்பொடி ) கொண்டு கோலம் போட்டு ,  சிறிய வீடு அழகாக  ,வீதியில் நீர் தெளித்து நாங்கள் பார்த்துப் பார்த்து போட்ட கோலத்தை நீ அழிச்சு அழிச்சாட்டியம் செஞ்சாலும் ,
என் கோலம் :)

உன் மீது மட்டுமே உள்ளம் செல்கின்றது..உன்னை நினைச்சு உருகுதே தவிர 
உன் மேல் எந்த ரோஷமும் (மன வருத்தமும் பகையும் ) எங்களுக்கு இல்லை கண்டாய்..
அடக் கள்ள மாதவா (திருட்டுப்பயலே ) கேசவா ! 
நன்றி :கூகிள் 
கள்ள மாதவனாம்..செல்லமா திட்டறாங்க..:) இவுக மட்டும் என்னவாம்..கள்ள கோதை :)

முகத்தன  கண்கள் ..முகத்தல் என்றால் இரண்டு வித பொருள்கள் உண்டு..ஒன்று smell (முகந்து )மோந்து பார்த்தல் ன்னு பேச்சு வழக்குல சொல்லுவோம் .இன்னொன்று அள்ளுதல்..
உதாரணம் : நீர் மோந்துட்டு (முகந்துகிட்டு ) வா..
"கனையிருள் வானங் கடன்முகந்து "
                                                      - கலித்தொகை (145)
கடல் நீரை வானம் முகந்து கொண்டதாம்..

மண் முகந்து  (அள்ளி ) நாங்க வீடு கட்டி இருக்கோம்..
நீ அதைக் கண்களால் அள்ளிப் பார்த்தா உனக்கு இடிக்க மனசு வராது..
கண்களால் எப்படி அள்ளி ன்னு யோசிக்காதீங்க..மனசுக்குப் பிடிச்ச ஒன்னை கண் கொட்டாம ஆசை தீரப் பார்த்தல்..ஒரு வித இரக்கத்தோட பார்த்தா உனக்கு இடிக்க மனசு வராது ..:) 
நன்றி :கூகுல் 
என் மனசுல நான் கட்டி வச்சிருக்க காதலையும் நல்லா முகந்து பாரேன்..மோந்து (smell ) பார்த்தால் ஒருவேளை அப்படியே முகந்துக்க (அள்ளிக்க ) ஆசை வருமோன்னு ஒரு நப்பாசை :) 




Wednesday 10 February 2016

14.பெய்யுமாமுகில் போல்வண்ணா !

14.பெய்யுமாமுகில் போல்வண்ணா ! 
பாடல் : 14
பெய்யுமாமுகில் போல்வண்ணா ! உன்றன்
   பேச்சும்செய்கையும், எங்களை
மையலேற்றி மயக்கவுன்முகம்
   மாயமந்திரந் தான்கொலோ,
நொய்யர்பிள்ளைக ளென்பதற்குன்னை
   நோவநாங்க ளுரைக்கிலோம்,
செய்யதாமரைக் கண்ணினாயெங்கள்
   சிற்றில்வந்து சிதையேலே

விளக்கம் : 

பெய்யுமாமுகில் போல் வண்ணா - மழை பொழிவதற்கு முன் இருக்கும் கருமேகம் போன்ற நிறத்தவனே
உன்தன் பேச்சும் செய்கையும் - உனது பேச்சும் செயலும்
எங்களை மையல் ஏற்றி மயக்க - எங்களைக் காதல் போதை ஏற்றி மயக்க வைக்க
உன் முகம் மாய மந்திரம் தான் கொலோ - உன் முகம் தான் என்ன மாய மந்திரம் செய்ததோ ?
நொய்யர் பிள்ளைகள் என்பதற்கு - உன்னை நொய்நொய் என நொய்க்கும் பிள்ளைகள் அல்ல நாங்கள்.
உன்னை நோவ நாங்கள் உரைக்கிலோம் - உன் மனம் நோகும் படியா நாங்கள் எதுவும் சொல்ல மாட்டோம்.
செய்ய தாமரைக் கண்ணினா - தாமரை போன்ற கண்கள் உடையவனே
எங்கள் சிற்றில் வந்து சிதையலே - எங்கள் சிறு வீட்டை வந்து சிதைக்காதே!

மை - நல்ல கருமை..(அதிகமான இருள் ) மை இருட்டு , கண் மை
மையல் - எப்படி கருமையில் (இருளில் ) வழி தெரியாமல் தடுமாறுவோமோ ,போலவே உணர்ச்சி வழியில் தடுமாறுதல்..

பெய்யுமா முகில்..பெய்து விடுவோமோ என்ற நிலையில் இருக்கும் முகில் போன்ற கரு நிறத்தவனே ! இதையே திருப்பாவையில் ஆண்டாள் ஆழி(கடல்) மழைக் கண்ணா என்றிருப்பாள்.. மழை மேகம் எங்கிருந்து உருவாகிறது என்பதை அப்பொழுதே அறிந்தவள்..
ஓவியம் :கேசவ்
உனது பேச்சும் செய்கையும் எங்களை மையல் ஏற்றி மயக்க வைக்க உன் முகம் தான் என்ன மாயம் மந்திரம் செய்ததோ ?மையல் என்பது ஒருவகை காதல் மயக்கம்..காதல் பித்து..காம மயக்கம்.. உணர்வு வழிச் செல்லுதல்..அதன் போக்கு தெரியாமல் அதிலேயே லயித்தல்..பல தமிழ்த்திரைப் பாடல்களில் இச்சொல் வரும்.
மாலையில் சந்தித்தேன் 
மையலில் சிந்தித்தேன்..
மங்கை நான் கன்னித்தேன் 
காதலன் தீண்டும் போது கைகளை மன்னித்தேன்..இது ஒரு பழைய திரைப்பாடல்.
"மையல் தந்திடும் வார்த்தைகளே மோகமென்னும் நெருப்பினைப் பொழிகிறது.."(இதழில் கதை எழுதும் நேரமிது )
இப்படி பல திரைப்பாடல்களில் மையல் மையம் கொண்டிருக்கிறது :) 

நன்றி :கூகுள்
காதல் வந்தாலே அங்கு அனிச்சையாக மையலும் வந்துவிடும் :) யாராவது ஓயாம பேசுறப்ப நொய்நொய் என்பார்கள்.... நையப்புடைத்து ..நொய்ய ..அது போல..நாங்க ஏதோ உன்கிட்ட நொய்நொய்ன்னு பேசுறதா நினைச்சுடாத ..உன் மனசு நோக நாங்க ஒன்னும் சொல்லிட மாட்டோம்..ஆகவே தாமரை போன்ற கண்ணினை உடையவனே எங்களின் சிறிய மணல் வீட்டை , வந்து சிதைக்காதே..







Tuesday 9 February 2016

13. குண்டு நீருறை கோளரீ

13. குண்டுநீருறை கோளரீ!
குண்டுநீருறை கோளரீ! மத
யானைகோள்விடுத் தாய்,உன்னைக்
கண்டுமாலுறு வோங்களைக்கடைக்
கண்களாலிட்டு வாதியேல்,
வண்டல்நுண்மணல் தெள்ளியாம்வளைக்
கைகளாற்சிர மப்பட்டோம்,
தெண்டிரைக் கடற்பள்ளியாய்! எங்கள்
சிற்றில்வந்து சிதையேலே

குண்டு நீர் உறை  கோள் அரி  ! - நீர் நிறைந்திருக்கும் மழைக் காலத்தில் சிங்கக்குட்டி போல் ஆலிலை மேல் துயின்று இருக்கும் அரியே
மத யானை கோள் விடுத்தாய் - முதலையிடம் சிக்கிய யானையைக் காப்பாற்றியவனே
உன்னைக் கண்டு மால் உறும் எங்களைக் - உன்னைக் கண்டு மயக்கமுறும் எங்களைக்
கடைக் கண்களாலிட்டு வாதியேல் - உன் முழுப் பார்வையும் தரிசனமும் வேண்டி நிற்கும் எங்களைக் கடைக் கண்களால் பார்த்துத் துன்புறுத்தாதே !
வண்டல் நுண்மணல் - வளமையான வழுவழுப்பான வண்டல் நுண் மணல் கொண்டு
தெள்ளியாம் வளைக் கைகளாற் சிரமப்பட்டோம் - அதையும் புடைத்து எமது வளையல் அணிந்த கரங்களால் கட்ட சிரமப் பட்டோம்
தெண்டிரைக்  கடற்பள்ளியாய் ! -அலை பாயும் கடல் மீது பள்ளி கொண்ட பெருமானே!
எங்கள் சிற்றில் வந்து சிதையலே ! - எங்களின் சிறிய வீட்டை வந்து சிதைக்காதே !

குண்டு நீர் உறை..எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு இந்தச் சொல்லாடல் :) மழைக்காலத்தில் அனைத்து நீர் நிலைகளும் தளும்பத் தளும்ப நிறைந்திருக்கும்..வறண்டு போய் இல்லாம , வற்றிச் சப்பிப் போகாம    நிறைந்து இருக்கும் நீர்நிலைகளை குண்டா இருக்கு என்கிறாள்..நிறைந்திருப்பதை :)  அந்த ஆழிக் காலத்தில் நீரில்  ஆல் இலை மேல் சிங்கம் போல் உறைந்துள்ள அரியே ! முதலையிடம் சிக்கிய மத ஆனையை சிங்கத்தின் சீற்றத்தோடு கிளர்ந்தெழுந்து காப்பாற்றியவனே!

நன்றி :கூகுள் 
உன்னைக் கண்டு மயங்கும் எங்களைக் கடைக் கண்களால் துன்புறுத்தாதே !
வண்டல் மண் என்பது ஆத்து மணல் கலந்த செம்மண்..செழுமையாக இருக்கும். நீர் சென்று கற்கள் அடித்துப் போய் வழுவழு என இருக்கும்.
வண்டல்மண் 

இந்த வண்டல் மண் மிக சத்து மிக்கதாம். இன்று வீடு கட்ட , பூச சிமின்ட் பயன்படுத்துவதற்குப் பதிலாக அக்காலத்தில் இந்த மண் கொண்டுதான் பூசுவார்களாம்.மிக உறுதியானதாக இருக்குமாம்.எங்கள் சொந்த வீடு அப்படிக் கட்டியது என்று எங்கள் அம்மா சொன்ன தகவல் இது.
அந்த வண்டல் மண்ணையும் ,அதையும் மிச்சசொச்ச கல் கசடு  நீக்கப் புடைச்சு இன்னும் நுண்ணிய மணலாக்கி எங்கள் வளைக்கரங்களால் சிரமப்பட்டு கட்டிய வீடு இது.


எங்களைக் கடைக் கண்களால் இட்டு வாதியேல்..என்ன இது கடவுளோட கடைக்கண் பார்வையே போதுமே நமக்கு.  இவுக என்னடான்னா  கடைக் கண்களால் இட்டு துன்புறுத்தாதே ன்னு சொல்லுறாக.. இந்த இடத்தில் குமட்டுல இடிச்சுகிட்டு செல்லம் கொஞ்சிச் சொல்றதா ஊடலோடு சொல்வதாக எடுத்துக் கொள்ளலாம்..ஆமா  நீ என்னை முழுசாப் பார்க்கணும் அதுவே என் ஆசை..அப்படி இருக்கிறப்ப எனக்கு இந்த ஓரக் கண் பார்வை வேணாம்ங்கறாங்க :)) எதுக்கு யாரோ ஒருத்தர் மாதிரி சைட்அடிச்சுகிட்டு..உரிமையானவன் நீ ..நின்று நேராகப் பார்..வேணாம்னா சொல்லிடப் போறேன் :))


பாற்கடலில் பள்ளி கொண்ட பெருமானே!எங்களின்இச்சிறு வீட்டைச் சிதைக்காதே !

கண்ணனுடன் உரிமையோடு உறவாடுகிறாள்..ஊடுகிறாள் ..பின் வேண்டுகிறாள் சிறுபிள்ளை கோதை..:) 





Saturday 6 February 2016

12.இன்று முற்றும் முதுகுநோவ

12.இன்று முற்றும் முதுகுநோவ
பாடல் :12
இன்று முற்றும் முதுகுநோவ 
இருந்திழைத்தஇச் சிற்றிலை,
நன்றும்கண்ணுற நோக்கிநாங்கொளும்
ஆர்வந்தன்னைத் தணிகிடாய்,
அன்றுபாலக னாகியாலிலை
மேல்துயின்ற எம்மாதியாய்,
என்றுமுன்றனக் கெங்கள்மேலிரக் 
கம்எழாததெம் பாவமே

விளக்கம் :
இன்று முற்றும் முதுகுநோவ - இன்று முழுவதும் முதுகு வலிக்க
இருந்து இழைத்த இச் சிறிய இல் ஐ - இருந்து பார்த்துப் பார்த்துச் செய்த இந்தச் சிறிய  வீட்டை
நன்று உம் கண்ணுற நோக்கி-  நன்றாக உன் கண்ணால் பார்
 நான் கொள்ளும் ஆர்வம் தன்னைத் தணிகிடாய் -  நான் கொள்ளும் ஆர்வத்தை நிறைவு செய்..(தணித்து விடு )
அன்று பாலகனாகி ஆல் இலை - அன்று குழந்தையாக ஆலிலை
மேல் துயின்ற எம்மாதியாய் - மேல் துயின்ற எம் ஆதியாய்
என்றும் உன்தனக்கு எங்கள் மேல் - என்றும் உனக்கு எங்கள் மேல்
இரக்கம் எழாதது எம் பாவமே - இரக்கம் எழாதது நாங்கள் செய்த பாவமே !

இன்று முழுவதும், முதுகு வலிக்க வலிக்க , பார்த்துப் பார்த்து செஞ்ச மணல் வீடு இது..


நோவ என்ற சொல் நோவுதல் என்பதன் வினையெச்சம் .கிராமத்தில் தான் இன்னமும் பல தமிழ்ச் சொற்கள் வாழ்கின்றன என நினைக்கிறேன்..நாகரீகமாகப் பேசுகிறோம் என்று பல நல்ல தமிழ்ச் சொற்களின் பயன்பாடுகள் அற்றுப் போய்விட்டன..இது போன்றவற்றைப் படிக்கும்போது அவை நினைவுக்கு வருகின்றன..இதைச் செய்ய உனக்கு என்ன நோவு என்று அம்மா திட்டுவதுண்டு..மனசு நோவுது..நோகடிக்காதே..இப்படிப் பயன்படும்..அதே போல இழைத்தல் என்ற சொல்லும்..இழைத்து இழைத்துச் செய்தேன் என்றால் வெறுமனே உழைப்பு மட்டுமல்ல..கண்ணும் கருத்துமாக ஒரு சிறு குறை கூட வராம கவனமாகப் பார்த்துச் செய்தல்..
கட்டுவது மணல் வீடே எனினும் அதையும் அழகாகச் செய்திருக்கிறாள்..
ஆண்டாள் கண்ணனைப் பார்த்துச் சொல்றாங்க..நன்று உம் கண்ணுற நோக்கி ன்னு..நல்லா கண்ணைத் திறந்து பாரு..
நன்றி கூகுள் 

"கண்ணாலே காதல் கவிதை சொன்னாலே உனக்காக 
கண்ணாளன் ஆசை மனதை தந்தானே அதற்காக " 
திரைப்பாடல் நினைவுக்கு வருதே...
நான் கொள்ளும் இந்த ஆர்வம் தன்னைத் தணிகிடாய்..
நீ இப்படி கண்கொண்டு பார்த்தால் நான் கொள்ளும் ஆர்வம் தணியும்..
உனக்கான என் கனவுகள் கற்பனைகள் அனைத்தும் நீ ஏறெடுத்துப் பார்த்துவிட்டால் ,உன் கவனம் பெற்று விட்டால் என் ஆசை தணிந்து விடும்.
உன்னோடு நான் வாழ வேண்டும் என்பதே என் விருப்பம்..அதை நீ கண்டுகொண்டால் நான் விருப்பம் நிறைவேறியவள் ஆவேன்..


நான் வண்ணம் கொடுத்தது :) 
அன்று குழந்தையாக ஆல் (ஆலமரத்து ) இலை மேல் துயின்ற நீயே எம் ஆதியாவாய்..(எங்கள் முதலானவனே )
உனக்கு எங்கள் மேல் இரக்கம் இன்னும் வராமலிருப்பது நான் செய்த பாவமே..

இவ்வளவு தூரம் ஆசை ஆசையாய் மனக் கோட்டை கட்டுகிறாள்..அவளுக்காக இன்னமும் மனம் இறங்காமல் இருக்கலாகுமோ கண்ணா..!



Friday 5 February 2016

11.நாமமாயிரம்

11. நாமமாயிர மேத்த நின்ற 

நாச்சியார் திருமொழி இரண்டாம் பத்து ஆரம்பம்..!

இந்தப் பத்துப் பாடல்களிலும் ,  தான் கட்டும் சிறு மணல் வீட்டை இடிக்காதே என்று குறும்பு செய்யும் கண்ணனிடம் வேண்டுகிறாள் கோதை. கண்ணனைத் தன்னுடைய சக தோழனாக நினைத்து , அவன் செய்யும் குறும்புக்காக செல்லச் சண்டையிட்டுக் கொள்கிறாள் :)

பாடல் :11
நாமமாயிர மேத்த நின்ற 
நாராயணாநர னேஉன்னை,
மாமிதன் மகனாகப்பெற்றா 
லெமக்கு வாதை தவிருமே,
காமன்போதரு காலமென் றுபங்
குனிநாள்கடை பாரித்தோம்,
தீமை செய்யும் சிரீதரா!எங்கள் 
சிற்றில்வந்து சிதையேலே 

விளக்கம் : 
நாமம் ஆயிரம் ஏத்த நின்ற - ஆயிரம் பெயர்களால் அடியார்கள் போற்றுகின்ற
நாராயணா நரனே -நாராயணனே நரனே
 உன்னை மாமி தன் மகனாகப் பெற்றால் - உன்னை மாமி (அத்தை ) தன் மகனாகப் பெற்றால்
எமக்கு வாதை தவிருமே - எங்களுக்குத் துன்பம் நீங்குமே
காமன் போதரு காலமென்று - காமன் வருகின்ற காலமென்று
பங்குனி நாள் கடை பாரித்தோம் -பங்குனி நாள் அவன் வரும் வழியில்
கடை விரித்தோம்..
தீமை செய்யும் சிரீதரா ! - எங்களை வீடு கட்ட விடாமல் இடையூறு செய்யும் ஸ்ரீ தரா
எங்கள் சிறு இல் வந்து சிதையலே - எங்களின் இந்தச் சிறிய வீட்டை நீ வந்து சிதைக்காதே

இல் - இல்லம் -வீடு
ஆயிரம் பெயர்களால் அடியார்கள் போற்ற நிற்கின்ற நாராயணனே நரனே!உன்னை மாமி (அத்தையாமாம்...மாமியாரை மாமின்னு சுருக்கமாச் சொல்றாங்க..விவரம் ) தன் மகனாகப் பெற்றால் எமக்குத் துன்பம் தீருமே !

காமன் காலமான பங்குனி மாதம் அது ஏன் பங்குனி மாதம்.. ? பட்டப் பகலில் பட்டயக் கிளப்பும் வெயில் காலம்..? முன்பு காமவேள் விழா அந்த மாதத்தில் தான் நடைபெற்றது..(ஏற்கனவே இதை வேறொரு பாட்டில் சொல்லி இருக்கு ) பின்னாளில் அது இந்திர விழா எனப் பெயர் மாற்றம்  பெற்றது..ஆகவே நீ வரும் காலத்தில் நீ வரும் வீதியில் கடை விரித்து வைத்தோம்..(ஓர் அழகான சொல் பாரித்தோம்.. பேச்சு வழக்கில் கூடச் சொல்வார்கள் ஏன் இப்படி கடை விரித்து வைத்திருக்கிறீர்கள் என ) காமனை வரவேற்றுக் கொண்டாடுதல்..
எங்களை வீடு கட்ட விடாமல் இடையூறு  செய்யும் சிரீ தரா...ஸ்ரீதரன் என்பதை கிரந்தம் தவிர்த்து எழுதி இருக்கிறார்..ஆண்டாள் வடமொழி பயன்படுத்திய இடங்களில் எல்லாம் கிரந்தம் தவிர்த்து இருக்கிறார்..
அது என்ன தீமை செய்யும் ?
என்னை இன்னும் வந்து சேராமல் என்னை வதைக்கும் ஸ்ரீதரன் என்றும் பொருள் கொள்ளலாம்...அல்லது நாங்கள் கட்டும் எங்கள் சிறிய மணல் வீட்டை சரியாகக் கட்ட விடாமல் இடையூறு செய்யும் குறும்புக்காரச் சிறீதரன் என்றும் கொள்ளலாம் :)



எங்களின் சிறய இல் (வீடு ) வந்து சிதைக்காதே..!


முதற் பத்து முழுவதும் காமனை நோன்பு நோற்றாள் கோதை..பங்குனி மாதம் மன்மத மாதம்..அதனால் அதற்கு முன்பிருந்தே நோன்பு ஆரம்பித்து விட்டாள்...இரண்டாம் பத்தில் நேரிடையாக கண்ணனிடமே பேசுகிறாள்..சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலிலேயே விழு என்றொரு சொலவடை உண்டு..தன் மனத்தில் எழும் ஆசைகள் பற்றி அவளே அறிந்து வைத்திருக்கிறாள்..கடவுளைக் காதலிப்பதும் கைப்பிடிப்பதும் நடக்கின்ற காரியமா..? தன் மனக்கோட்டை மணல் கோட்டை தான் ஆயினும் நான் இந்த கற்பனை உலகத்திலேயே வாழ்ந்துட்டுப் போயிடறேனே..யதார்த்தம் வேண்டாமேன்னு வாழ்ந்துட்டாங்க..இருந்தாலும் என் மணல் வீட்டைச் சிதைக்காதே நான் சிறுபிள்ளை என்று இறைவனிடம் இறைஞ்சுகிறாள் பேதைப்பெண் கோதை..



Thursday 4 February 2016

10.கருப்புவில் மலர்க்கணைக் காமதேவனை

10.கருப்புவில் மலர்க்கணைக் காமதேவனைக் 
பாடல் :10
கருப்புவில் மலர்க்கணைக் காமதேவனைக் 
கழலினை பணிந்தங்கோர் கரியலற, 
மருப்பினை யொசித்துப்புள் வாய்பிளந்த 
மணிவண்ணற் கென்னை வகுத்திடென்று,
பொருப்பன்ன மாடம்பொ லிந்துதோன்றும் 
புதுவையர் கோன்விட்டு சித்தன்கோதை,
விருப்புடை யின்தமிழ் மாலை வல்லார் 
விண்ணவர் கோனடி நண்ணுவரே.

விளக்கம் : 
கருப்புவில் மலர்க்கணைக் காமதேவனை - கரும்பு வில்லும் மலர்க்கணைகளும் கொண்ட காமதேவன் 
கழலினை பணிந்து -   அவன் திருவடி பணிந்து 
அங்கு  ஓர் கரி அலற - அங்கே ஓர் யானை அலற 
மருப்பினை ஒசித்துப் -அதன் தந்தம் ஒடித்து
 புள் வாய்பிளந்த 
  பகாசுரன் என்ற கொக்கு அரக்கன் வாய் பிளந்த
மணிவண்ணனுக்கு என்னை வகுத்திடு  என்று -மணிவண்ணனுக்கு என்றே என்னை உரியவள் ஆக்கி விடு என்று 
பொருப்பு  அன்ன மாடம் பொலிந்து தோன்றும் -  லை போன்ற மாடங்கள் அழகாகத் தோன்றும் 
புதுவையர் கோன் விட்டுசித்தன் கோதை -  வில்லி புத்தூர் சான்றோர்  விஷ்ணு சித்தன்  மகள் கோதை 
விருப்புடையின் தமிழ் மாலை வல்லார் - விருப்பமுடன் பாடிய இந்தத் தமிழ் பாமாலையை பாடல் வல்லார் 
விண்ணவர் கோன் அடி நண்ணுவரே - விண்ணகத்தில் இருக்கும் அந்த பரமனடி நலம் பெறுவரே 

கரும்பு வில்லும் ,மலர்க்கணைகளும் கொண்ட காமதேவனின் திருவடிகள் பணிந்து ஆங்கோர் யானை அலற ,

ஆங்கோர் கரி அலற என்பது கண்ணனைக் கொல்ல கம்சனால் ஏவி விடப்பட்ட குவலய பீடம் என்ற யானை . அதன் தந்தத்தை ஒடித்துக் கொன்றவன் கண்ணன் .



பகாசுரன் என்ற கொக்கு அசுரன்  வாய் பிளந்த மணிவண்ணனுக்கே என்னை உரியவள் ஆக்கி விடு என்று,  மலை போன்ற அழகான மாடங்களை உடைய வில்லிபுத்தூர் சான்றோர்  விஷ்ணு சித்தன் எனும் பெரியாழ்வார் மகள்  கோதை விருப்புடன் சொன்ன இந்தப் பாமாலைகளைப் பாடுவோர் விண்ணகத்தில் இருக்கும் அந்தப் பரமனின் திருவடி சேர்ந்து நலம் பெறுவர்


இந்தப் பாட்டில் நான் மிக ரசித்தது ,விட்டு சித்தன் கோதை என்பது தான்..இதே மாதிரி திருப்பாவை 30வது பாடலிலும் பட்டர்பிரான் கோதை சொன்ன என்று வரும் ..என்னதான் பொண்ணுங்க உருகி உருகி கணவனைக் காதலித்தாலும் தன் பெயரோடு அப்பா பெயரைச் சேர்த்துச் சொல்வதில் அலாதி பெருமை கர்வம் அவர்களுக்கு..அப்பாவுக்கு உரிய மரியாதை செலுத்தும் இன்பம்..அனேகமா அப்பா பெயரை இணைச்சு எழுதின முதல் பெண் இவராகத் தான் இருக்கும்னு நினைக்கிறேன் :)  இப்பொழுது புரிகிறதா..இந்தக் கோதையின் மீது ஏன் இவ்வளவு ஈர்ப்பு எனக்கு வருகிறது என :) தான் கற்ற தமிழை தனக்கே என்றதாக்காமல் ,அவள் தகப்பன் பெயரை ஆங்காங்கே போட்டு விடுகிறாள்..உண்மைதானே..பெரியாழ்வார் மட்டும் ஒரு  இயல்பானவராக  நடந்து கொண்டிருந்தால்,  நமக்கு ஆண்டாள் கிடைத்திருக்க மாட்டாள்..

பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே!

நாச்சியார் திருமொழியில் முதற் பத்து இனிதே  நிறைவுற்றது.. !


Wednesday 3 February 2016

9.தொழுதுமுப் போதுமுன் னடிவணங்கி

9.தொழுதுமுப் போதுமுன் னடிவணங்கி

பாடல் :9
தொழுதுமுப் போதுமுன் னடிவணங்கித் 
தூமலர் தூய்த்தொழு தேத்துகின்றேன்,
பழுதின்றிப் பார்க்கடல் வண்ணனுக்கே 
பணிசெய்து வாழப் பெறாவிடில்நான்,
அழுதழு தலமந்தம் மாவழங்க 
ஆற்றவு மதுவுனக் குறைக்குங்கண்டாய், 
உழுவதோ ரெருந்தினை நுகங்கொடுபாய்ந்து 
ஊட்டமின் றித்துரந் தாலொக்குமே.

விளக்கம் :  தொழுது முப்போதும் - மூன்று வேளைகளும் உன்னைத் தொழுது 
உன்னடி வணங்கித் - உன் திருவடி வணங்கித்  
தூமலர் தூய்த்தொழுது ஏத்துகின்றேன் - தூய்மையான மலர் கொண்டு வேண்டுகின்றேன் 
ழுது  இன்றிப் பார்க்கடல் வண்ணனுக்கே -  எந்தக் குறையுமின்றி பாற்கடல் கண்ணனுக்கே 
பணிசெய்து வாழப் பெறாவிடில்நான் - பணி செய்து வாழும் பேறு பெறாவிடில் நான் 
அழுது அழுது அலமந்தம் அம்மா வழங்க  ஆற்றவும் - அழுது அழுது தடுமாறிப் போய் நான் அம்மா வென அரற்ற 
 அது உனக்கு உறைக்கும் கண்டாய் - மிகவும் அது உனக்கு உறைக்கும் அளவு வலிக்கும் கண்டாய் 
உழுவதோர் எருதினை நுகம் கொடு பாய்ந்து - உழுகின்ற எருதினை ஏர் பிடித்த நுகம் கொண்டே இடித்து அதைத் துடிக்க வைத்து
ஊட்டமின்றித் துரந்தால் ஒக்குமே .- அதற்கு உணவு கொடுக்காம ஒதுக்கினாப் போல பாவம் வரும் 

மூன்று வேளைகளும் உன்னைத் தொழுது ,உன் திருவடி வணங்கி ,தூய்மையான மலர்களை, கள்ளம் கபடம் இல்லா தூய நல் உள்ளத்தோடு ,தூவித் தொழுது நோன்பு நோற்கின்றேன் காமதேவா!


எந்தக் குறையுமின்றி எந்த வித சாக்குபோக்கு இன்றி பார்க்கடல் வண்ணனுக்கே பணி செய்து மகிழ,  மனைவியாகா விடில் (வாழ்க்கைப் படாவிடில்...(என்ன அழகான சொற் பயன்பாடு ..இதைத் தான் கிராமத்துப் பேச்சு வழக்கில் வாக்கப்படுறதுன்னு சொல்றோம்..வாக்கப்பட்டுப் போன இடம் =புகுந்த வீடு )  நான் அழுது அழுது அம்மான்னு அரற்றுவேன்.அடிச்சது அம்மாவே என்றாலும் அம்மா என்றழைத்தே பிள்ளைகள் அழும்.. :)



நான் அப்படி அழுவது உனக்கே வலிக்கும்..உறைக்கும் ...இந்தச் சொல் இப்பவும் எங்கம்மா பயன்படுத்துவாங்க.. எந்த எந்த இடத்தில் எனில்,  காரமான உணவு உறைக்கும் ..அதே போல எவராவது ஒரு விசயத்தை சரியா கவனிக்காட்டி நல்லா உறைக்கிற மாதிரி எடுத்துச் சொல்லு என்பார்கள்..மனசுல ஆழமா பதியற மாதிரி..சுருக்குன்னு இருக்கணும்..ஆண்டாள் இப்படி அழுதா,காமதேவனுக்கே  இதுவரை நாம கவனிக்காம பிழை செய்துட்டோமோ என்று மனசுல குற்ற உணர்வோடு  உறைக்கணும்ங்கறாங்க..

எப்படி ,உழுகின்ற ஓர் எருதினை அந்த ஏர் வச்சு குத்திக் காயப்படுத்தி ,துடிதுடிக்க வைத்து,  அதற்கு உண்ண எதுவும் கொடுக்காம ஒதுக்கி வேதனைப்படுத்துவதோ அதைப் போல நீ என்னையும் வேதனைப்படுத்தின மாதிரி ஆகிடும்..


முதல்ல வேண்டுறாங்க..அப்புறம் கெஞ்சுறாங்க..அப்புறம் மிஞ்சுறாங்க ..மிரட்டுறாங்க..இப்ப என்னை இந்த நிலைக்கு ஆளாக்கிட்டா உனக்கே பாவம் வந்து சேர்ந்துடும்னு முடிச்சுட்டாங்க..நம் தவறுகளுக்கு பாவ புண்ணியம் இருக்கும் எனில் ஆண்டவனுக்கும் அதே தான.. :))

காமதேவன் To ஆண்டாள் : ஏம்மா..என்னம்மா இப்படிப் பண்றீங்களே ம்மா :))
ஆண்டாள் To காமதேவன் : அப்ப அந்த நாராயணனைக் கூப்பிடு உன்னை விட்டுடறேன் :) 

8. மாசுடை யுடம்பொடு தலையுலறி

8. மாசுடை யுடம்பொடு தலையுலறி
பாடல் :8
மாசுடை யுடம்பொடு தலையுலறி
வாய்ப்புறம் வெளுத்தொரு போதுமுண்டு
தேசுடை திறலுடைக் காமதேவா
நோற்கின்ற நோன்பினைக் குறிக்கோள்கண்டாய்
பேசுவ தொன்றுண்டிங் கெம்பெருமான்
பெண்மையைத் தலையுடைத் தாக்கும்வண்ணம்
கேசவ நம்பியைக் கால்பிடிப்பாள்
என்னுமிப் பேறெனக் கருளுகண்டாய்

விளக்கம் : 
மாசுடை உடம்பொடு - அழுக்கேறிய உடம்புடனும் 
தலையுலறி-  எண்ணெய் கூடத் தேய்க்காத சரியாக வாராத தலையுடனும் 
வாய்ப்புறம் வெளுத்து  ஒருபோதும் உண்டு -     ருவேளை  உணவு உண்டு மெலிந்த காரணத்தால்  , சிவந்த இதழ்கள் வெளுத்து  
தேசு உடை திறல்  உடைக் காமதேவா -  ஒளி பொருந்திய, காதலர் தேகம் இணைக்கின்ற திறம்பெற்ற காமதேவா 
நோற்கின்ற நோன்பினைக் குறிக்கோள்கண்டாய் -  உன்னை நோற்கின்றேன்..என் நோன்பின் நோக்கம் கண்டு கொள் 
பேசுவது  ஒன்று உண்டு  இங்கு  எம்பெருமான்  - பேசுவது ஒன்று உண்டு இங்கு என் தலைவன் 
பெண்மையைத் தலையுடைத் தாக்கும்வண்ணம் - என் பெண்மையை தனக்கே முதன்மையாக்கிக் கொள்ளும்  வண்ணம்
கேசவ நம்பியைக் கால்பிடிப்பாள் - கேசவன் நம்பியின் மணவாட்டி ஆகி அவனுக்குச் சேவை செய்வாள் 
என்னும் இப்பேறு எனக்கு  அருளுகண்டாய் - ன்னும் பெரும் பேற்றை எனக்கு அருளுவாயாக !

வேறு சிந்தனையே இன்றி , தலைவனைச் சேர வேண்டும் என்ற ஒரே வேண்டுதலோடு நோன்பு நோற்றதில்,  ஒருவேளை மட்டுமே சாப்பிட்டு உடம்பு மெலிந்து இதழ்கள் வெளுத்துவிட்டன..சரியாக எண்ணெய் வைக்காம ,சரியா தலைவாராம இருந்ததுல தலை அழுக்கேறிப் போச்சு..சில நேரம் தலைக் குளித்து சரியாக் கூட காய வைக்காம அப்படியே தேமேன்னு இருந்துவிடுவதுண்டு..நினைப்பு செயல் யாவும் மாயனே :)
மலர்க்கணைகளால் அம்பு தொடுத்து காதலர்கள் தேகம் இணைக்கின்ற திறம் பெற்ற காமதேவா !என் நோன்பின் நோக்கம் தெரிந்துகொள்...
திருப்பரங்குன்றம் 
இங்கு நான் பேசுவது ஒன்றே உண்டு..அது எம் பெருமான் என் தலைவன் என் பெண்மையை தனக்கே முதன்மையாக்கிக் கொள்ளும் வண்ணம் கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் என்னும் இப்பேற்றை (பெருமையை எனக்கருள் செய்வாயாக !

இரண்டாவது பாடலில் நல்லா குளிச்சு முழுகித் தான காமதேவனுக்குப் பூஜை செய்தாங்க..அப்புறம் எப்படி அழுக்காச்சு..? என்னதான் குளிச்சாலும் தலை வாரிச் சீவணும்ல.தலைக்கு எண்ணெய் வைக்காம , சரியா வாராம இருந்தா தலை அழுக்காகும் அத்தோடு உடம்பும் அழுக்காகும்..ஒருவேளை காமனிடம் அழுது புரண்டு அடம் பிடித்ததில் உடம்பும் அழுக்காகி இருக்கக்கூடும் ..செய்யக்கூடிய பெண் தான் இவள் :)  சரியா சாப்பிடாம ஒருவேளை உணவு மட்டுமே சாப்பிட்டதில் உடல் மாற்றங்கள்  இது ஏற்படும்தானே..அதான் வாய் வெளுத்துப் போச்சாம்..
செக்கச் சிவந்தன விழிகள் 
கொஞ்சம் வெளுத்தன செந்நிற இதழ்கள்..(ஒரு நாள் யாரோ..திரைப் பாடல் ) 
நினைவுக்கு வந்தது..:) இப்படி எல்லாம் சிரமப்பட்டு அவள் நோன்பு நோற்கின்றேன் ..காதலர் தேகத்தை இணைக்கும் திறம் பெற்ற ஒளிபொருந்திய காமதேவா !அன்னிக்கு ஒரு பேச்சு இன்னிக்கு ஒரு பேச்சு இல்ல..என்னிக்கும் ஒரே பேச்சுத்தான் இங்க உண்டு..அது ஒன்னே ஒன்னு..நான் என் தலைவனையேச் சேரனும்..தலைவனை மட்டும்தான் சேரணும் .
அவள் பெண்மையைத்  தனதாக்கும் உரிமை அவன் ஒருவனுக்கே..ஒருத்தரைப் பார்த்ததுமே அப்படியே உயிர் உருவிச் சென்று விடுவார்கள்..இவள் பெண்மையை அப்படி களவாடிச் சென்று விட வேண்டும் என்கிறாள்..
அதென்ன கைப்பிடிப்போம்ன்னு சொல்லாம கால் பிடிப்போம் என்கிறாள் ?

இறைவனைச்சேர்வதில் அவன் பொற்பாதங்களில் சரணம் அடைதல்..அதனால் கால் பிடிக்கிறாள் எனக் கொள்ளலாம்..அல்லது ஓயாது ஒழியாது உலகளக்கும் பெம்மானை சற்றே ஆசுவாசப்படுத்த,  கால் பிடிக்கிறாள் ஆருயிர் மனைவியாக :) அப்படியான பெரும் பேற்றை அவளுக்கு அருள காமனை வேண்டுகிறாள்..