Thursday 3 August 2017

பெரியாழ்வார் திருமொழி 03.08.10

பாடல் : 10
மாயவன் பின்வழி சென்று
வழியிடை மாற்றங்கள் கேட்டு
ஆயர்கள் சேரியி லும்புக்கு
அங்குத்தை மாற்றமு மெல்லாம்
தாயவள் சொல்லிய சொல்லைத்
தண்புது வைப்பட்டன் சொன்ன
தூய தமிழ்ப்பத்தும் வல்லார்
தூமணி வண்ணற்கா ளாரே.

விளக்கம் : 

மாயவன் பின்வழி சென்று - மாயவன் கண்ணன் உடன் பின்னே சென்று
வழி இடை மாற்றங்கள் கேட்டு - செல்கின்ற  வழி இடையில்  அவன் சொல்கின்ற பேச்சுக்கு மாற்றில்லாமல் சொன்னது எல்லாம் கேட்டு

ஆயர்கள் சேரியிலும் புக்கு - ஆயர்கள் கூடி வாழும் சேரியிலும் புகுந்து
அங்குத்தை மாற்றமும் எல்லாம்  - அங்கிருக்கும்  ஆட்கள் சொல்வதையும் எந்த மறுப்பும் இல்லாமல் கேட்டு
தாயவள் சொல்லிய சொல்லைத் -வாழ்கின்ற மகள் பற்றி ,  தாயவள் சொல்லிய சொல்லைத்
தண் புதுவைப் பட்டன் சொன்ன - குளிர்ந்த வில்லிபுத்தூர் பட்டன் சொன்ன
தூய தமிழ்ப் பத்தும் வல்லார் - தூய தமிழ்ப் பாடல்கள் பத்தும் சொல்ல வல்லவர்கள்
தூமணி வண்ணற்கு ஆளாரே - தூய்மையான மணி வண்ணனுக்கு ஆளாவார்கள்..(அவனுக்கு நெருக்கமாவார்கள் )

மாயவன் கண்ணன் பின் சென்று ,செல்லும் வழியில் எல்லாம் அவன் சொன்ன சொல்லை எந்த மறுப்பும் இன்றி அதற்கு ஒரு மாற்று பேச்சு பேசாமல், ஆயர்கள் சேர்ந்து வாழ்கின்ற சேரிக்கு சென்று (சேர்ந்து வாழ்கின்ற இடம் சேரி..) அங்குள்ளவர்கள் பேச்சுக்களுக்கும் மறுப்பின்றி கேட்டு நடக்கின்றாள் ஆண்டாள். (அவள் பிடிவாதம் அழுத்தம் எல்லாம் கண்ணனைச் சேர்வதற்காக மட்டுமே ஆனால் கண்ணனுக்கு அடங்கிய மனைவி அவன் ஆளுமையை ரசித்து விரும்புகின்ற மனைவியே )
இப்படி திருமணம் செய்தால் என்னவாகுமோ என்றெல்லாம் அம்மாவின் கவலைப் பேச்சுக்களைக் கேளாத மகள் பற்றி, குளிர்ந்த வில்லிபுத்தூர் பட்டர் பிரான் பெரியாழ்வார்  தாயாக தன்னை நினைத்துச் சொன்ன , தூய தமிழ்ப்  பாடல்கள் பத்தையும் பாட வல்லவர்கள் ,தூய்மையான அந்த மணி வண்ணனுக்கு ஆள் ஆவார்கள்..அவனின் அன்பைப் பெற்று நெருக்கமானவர்கள் ஆவார்கள்.

பெரியாழ்வார் திருமொழி மூன்றாம் பத்தில் உள்ள எட்டாம்பகுதி இனிதே நிறைவுற்றது!!!
மகளுக்காக, ஒரு தாயுமானவராக பெரியாழ்வார் எழுதிய இருபது பாடல்களும் இனிதே நிறைவடைந்தன. மகள் மீதான அன்பும் வாஞ்சையும் தோய்ந்த பாசுரங்கள் உங்கள் மனத்தையும் மயக்கி இருக்கும் என நம்புகிறேன்.
படித்தமைக்கு நன்றி !


Wednesday 2 August 2017

பெரியாழ்வார் திருமொழி 03.08.09

பாடல் : 09

வெண்ணிறத் தோய்தயிர் தன்னை
வெள்வரைப் பின்முன் எழுந்து
கண்ணுறங் காதே யிருந்து
கடையவும் தான்வல்லள் கொலோ
ஒண்ணிறத் தாமரைச் செங்கண்
உலகளந் தான்என் மகளை
பண்ணறை யாப்பணி கொண்டு
பரிசற ஆண்டிடுங் கொலோ.

விளக்கம் :

வெண்ணிறத் தோய்தயிர் தன்னை - வெண்மை நிறம் கொண்ட , தோய்த்த  தயிரை
வெள்வரைப் பின் முன் எழுந்து - வெள்ளி முளைத்த பின்  ,    கிழக்கு வெளுக்கும் முன்பதற்கு முன்னாக எழுந்து
கண் உறங்காதே இருந்து - தூங்காமல் இருந்து
கடையவும் தான் வல்லள் கொலோ - கடையவும் தான் வல்லமை பெற்றவளோ ?
ஒண் நிறத்  தாமரைச் செங்கண் உலகளந்தான் -ஒளிரும்   தாமரை போன்ற சிவந்த கண்களை உடைய உலகளந்தான்
என் மகளை பண் அறையாப் பணி கொண்டு - என் மகளைஇது போன்ற தகுதியற்ற வேலைகளைச் செய்யச்சொல்லி
பரிசு அற ஆண்டிடும் கொலோ - பெருமை கெடும் படி ஆள்வானோ ?

வெண்மை நிறம் கொண்ட , தோய்த்த  தயிரை ,(பால் தோய்த்து தயிர் ஆக்கி தயிர் தோய்த்து வெண்ணெய் ஆக்கி என்று வேலை பார்த்துக் கொண்டே இருக்கிறாள் ) வெள்ளி முளைத்த பின்னும் , சூரியன் உதிப்பதற்கு முன்னும் தூங்காமல் இருந்து இதே வேலையாகச் செய்வாளோ ?கடைந்து கொண்டே இருக்கும் வல்லமை பெற்றவளோ ?(என் பெண் அவ்வளவு வேலை செய்து பழக்கம் இல்லையே..வேலை செஞ்சு பழக்கம் இல்லாத பெண்ணை இடுப்பு ஒடிய வேலை வாங்கினா அவள் எப்படிச் செய்வாளோ ? )
ஒளிரும் தாமரை போன்ற சிவந்த கண்களை உடைய உலகளந்தான் , என் மகளை இது போன்ற சீரற்ற வேலை கொண்டு ,அவள் பெருமை கெடும் படி ஆள்வானோ?
 பரிசேலோர் எம் பாவாய் எனப் பாடின பெண் ஆயிற்றே !

Saturday 29 July 2017

பெரியாழ்வார் திருமொழி 03.08.08

பாடல் : 08

குடியில் பிறந்தவர் செய்யும்
குணமொன்றும் செய்திலன் அந்தோ
நடையொன்றும் செய்திலன் நங்காய்
நந்தகோ பன்மகன் கண்ணன்
இடையிரு பாலும்வ ணங்க
இளைத்திளைத்து என்மகள் ஏங்கி
கடைகயி றேபற்றி வாங்கிக்
கைதழும் பேறிடுங் கொலோ.

விளக்கம் :
குடியில் பிறந்தவர் செய்யும் குணம் ஒன்றும் செய்திலன் - நற் குடியில் பிறந்தவர்கள் செய்யும் குணம் ஒன்றும் இல்லை அதற்குத் தக்க செயல்கள் செய்யாதவன்
அந்தோ நடை ஒன்றும் செய்திலன் - அந்தோ..உலகத்து நடைமுறை என ஒன்று உண்டு அதை எதுவும் செய்யாதவன்
நங்காய் நந்தகோபன் மகன் கண்ணன் - நங்கையே ..நந்தகோபன் மகன் கண்ணன்
இடை இருபாலும் வணங்க - இடை இருபக்கமும் வளைய
இளைத்து இளைத்து என்மகள் ஏங்கி கடை கயிறே பற்றி - உடம்பு இளைத்து இளைத்து என் மகள்   ஏங்கி கடைய  கயிற்றைப்பற்றி
வாங்கிக்கை தழும்பு ஏறிடும் கொலோ - இழுத்ததில் கைகளில் தழும்பு ஏறிடுமோ ?

பெரியாழ்வாரோ வேள்வி செய்யும் தொழில் கொண்டவர். ஆனால் கண்ணனோ ஆயர் குலம் . இப்படி சாதி விட்டு சாதி மணம் ஆண்டாளுக்கு. நம்ம சாதி வழக்கப்படி எதுவும் செய்யாம பொண்ணைக் கல்யாணம் செய்து கொண்டான் கண்ணன். நடைமுறைச் சடங்குகள் எதுவும் செய்யல .
நங்கையே..நந்தகோபன் மகன் கண்ணனுக்கு வாக்கப்பட்ட என் மகளானவள் அவங்க வீட்டிலே ,தயிர் கயிறை இழுத்து இழுத்து கடையும் போது , அவளின் இடைகள் வளைந்து துவள, கைகள் கயிறை இழுத்ததில் தழும்பு ஏறி விடுமோ? (வேலை செய்தே பழக்கம் இல்லாதவங்க புதுசா ஒரு வேலையைச் செய்யும்போது கைல காப்பு வந்துடும்..அங்கங்க தழும்பு ஆகிடும்..ஒத்த மகள் என்று பெரியாழ்வார் ரொம்பச் செல்லமா வளர்த்துட்டார். புகுந்த வீட்டில் புதுசா வேலை செய்யப் போய்,  புள்ள என்ன பாடுபடுதோ..இடை இளைக்குமோ , கை தழும்பு ஏறுமோன்னு மனசு விசனப்படுது அவருக்கு.

Friday 28 July 2017

பெரியாழ்வார் திருமொழி 03.08.07

பாடல் : 07

அண்டத் தமரர் பெருமான்
ஆழியான் இன்றுஎன் மகளை
பண்டப் பழிப்புகள் சொல்லிப்
பரிசற ஆண்டிடுங் கொலோ
கொண்டு குடிவாழ்க்கை வாழ்ந்து
கோவலப் பட்டம் கவித்து
பண்டை மணாட்டிமார் முன்னே
பாதுகா வல்வைக்குங் கொலோ.

விளக்கம் :

அண்டத்து அமரர் பெருமான் - இப்பேரண்டத்தின் பெருமான் ,  அமரர்களுக்கு எல்லாம் தலைவனான எம்பெருமான்
ஆழியான் இன்று என் மகளை - ஆழியைக் கொண்ட ஆழியான் இன்று என் மகளை
பண்டப் பழிப்புகள் சொல்லிப் - பண்டங்களைக் குறை சொல்லி
பரிசு அற ஆண்டிடும் கொலோ - பரிசுகள் கெடும்படி ஆள்வானோ ?
கொண்டு குடி வாழ்க்கை வாழ்ந்து - அவளை அவன் இடத்திற்கு கொண்டு சென்று குடும்பம் நடத்தி
கோவலப் பட்டம் கவித்து - அவளுக்கு  கோவலர் தலைவி  என்ற பட்டம் கொடுத்து நல்லபடியாக நடத்துவானோ
பண்டை மணாட்டிமார் முன்னே - அன்றி ,  அவன் அவளுக்கு முன்னால் கட்டிய மனைவிமார் முன்னே
பாதுகாவல் வைக்கும் கொலோ - பத்தோடு பதினொன்று என்று பேசி  அவளை வெறுமனே பாதுகாவல் வைத்து விடுவானோ ?

இப்பேரண்டத்தின் பெருமான் ,அமரர் தலைவன் ,ஆழிச் சக்கரம் கொண்ட திருமால் ,இன்று என் மகளை எப்படி வைத்திருப்பானோ? பண்டம் (உணவு ) .அவள் சமைக்கும் உணவுகளைக் குறை சொல்லி அவன் திட்டுவானோ? (வீட்டில் செல்லமாக வளர்ந்த ஒரே பெண் .சமையல் முன்னப்பின்ன இருக்கும். அதுக்கு எவ்ளோ திட்டு வாங்குகிறாளோ பாவம் )
அவளைச் சிறப்புடன் நடத்தாமல் வெறும் பெண்டாட்டியாக மட்டுமே நடத்துவானோ ?
கொண்டு செலுத்துதல் என்ற சொல்லாடல் இன்றும் என் அம்மா சொல்வதுண்டு. ஓர் செயலை நல்லபடியாக நடத்துதலை அப்படி,கொண்டு செலுத்துதல் என்பார்கள். அது போல ஆண்டாளைக் கட்டிக்கொண்டு போய் நன்கு கொண்டு செலுத்துவானோ?குடி வாழ்ந்து அவளுக்கு கோவலர் தலைவி என்ற பட்டம் கொடுத்து கௌரவித்து அவளை நடத்துவானோ அன்றி அவனுக்கு இதற்கு முன் உள்ள மற்ற மனைவிமார்கள் முன்னே , இவளும் அவர்களோடு பத்தோடு பதினொன்றாக நடத்தி ,அவளைக் காவலாக வைப்பானோ ?
(எவரேனும் வீட்டில் தேவை இல்லாமல் இருந்தால் இது எதுக்கு எனும் கேள்வி எழும் போது ஆங்..காவலுக்கு என்று நக்கலாக இன்றும் பதில் அளிப்போரைக் காணலாம்..அது போல இப்பெண்ணைத் திருமணம் செய்து முறையாக குடும்பம் நடத்துகிறானோ அல்லது அங்கே சிறுமைப்படுத்துகிறானோ என்று மருமகன் மீது அச்சம் கொள்கிறார் )


Thursday 27 July 2017

பெரியாழ்வார் திருமொழி 03.08.06

பாடல் : 06
வேடர் மறக்குலம் போலே
வேண்டிற்றுச் செய்துஎன் மகளை
கூடிய கூட்டமே யாகக் கொண்டு
குடிவாழுங் கொலோ
நாடும் நகரும் அறிய நல்லதோர்
கண்ணாலம் செய்து சாடிறப்
பாய்ந்த பெருமான் தக்கவா
கைப்பற்றுங் கொலோ.

விளக்கம் :
வேடர் மறக் குலம் போலே - வேட்டை ஆடும் வேடர் வீரக் குலம் போல
வேண்டிற்றுச் செய்து என் மகளை - விரும்பியபடி  எல்லாம் செய்து என் மகளை
கூடிய கூட்டமே ஆகக் கொண்டு குடி வாழும் கொலோ - கூட்டமாக கூடி அழைத்து அத்தோடு மட்டுமே குடி வைத்துக் கொண்டு வாழ்க்கை  வாழ்வானோ ?
நாடும் நகரும் அறிய நல்லதோர் கண்ணாலம் செய்து  - இந்த நாடும் அதிலுள்ள மக்களும் அறிய நல்லபடியாக திருமணம் செய்து
சாடி இறப்  பாய்ந்த பெருமான் -  எதிரிகளைச் சாடி வெல்லும் பெருமான்
தக்கவா கைப்பற்றும் கொலோ - அவளைத் தக்கவாறு கைப்பற்றுவானோ ?

மாடு மேய்ப்பவன் எப்படி மறவன் ஆனான் என்ற குழப்பம் வேண்டாம்..அக்காலத்தில் ஆநிரை காப்போர் என்று உண்டு.எதிரிகளிடம் இருந்து தங்கள் மாடுகளைக் காப்பவர்கள்.அப்படியான  வீர மறவர் குலத்தில் , திருமணம் என்பது எப்படி நடக்குமோ..தாங்கள் விரும்பியபடி , கூட்டமாக கூடி நின்று வரவேற்று ஏதேனும் ஓர் இடத்தில் குடி வைத்தாலே முடிந்தது என்று முடித்து விடுவார்களோ ?
ஆனா நம்ம வழக்கம் அப்படி இல்லையே..(ஆண்டாள் தன்னை மாடு மேயப்பவள் எனச் சொல்லிக் கொண்டாலும் வளர்த்தவர் பெரியாழ்வார் இல்லையா..ஆகவே அவர் தன் குடும்ப வழக்கப்படி திருமணம் செய்து வைக்க ஆசைப்படுகிறார்..ஆண்டாள் வாரணம் ஆயிரம் பாடலில் ஆசைப்படுவாளே அது போல..)
ஊரறிய நாடறிய வந்து, முறைப்படி  பெண் கேட்டு இப்படி நல்லதோர் கல்யாணம் செய்ய வேண்டுமே..எதிரிகளைச் சாடி ,அவர்கள் இற வெல்லும் பெருமான் அவளைத் தக்கவாறு (அவளின் பெண்மையைப் பெருமைப்படுத்தும் விதமாக )  அவளைக் கைப்பிடிப்பாரோ ?
ஆண்டாள் சொல்வாளே..
மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்று ஊத 
முத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ்
மைத்துனன் நம்பி மது சூதனன் வந்து என்னைக் 
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்..

அப்படியாக என் மகளை எங்கள் சம்பிரதாய சடங்கு வழக்கப்படி அந்தப் பெருமான் திருமணம் செய்வானோ? என்று ஏங்குகிறார்..


Tuesday 25 July 2017

பெரியாழ்வார் திருமொழி 03.08.05

பாடல் : 05

தம்மாமன் நந்தகோ பாலன்
தழீஇக்கொண்டு என்மகள் தன்னை
செம்மாந் திரேயென்று சொல்லிச்
செழுங்கயற் கண்ணும்செவ் வாயும்
கொம்மை முலையும் இடையும்
கொழும்பணைத் தோள்களும் கண்டிட்டு
இம்மக ளைப்பெற்ற தாயர்
இனித்தரி யாரென்னுங் கொலோ.

விளக்கம் :
தம்மாமன் நந்தகோபாலன் - யசோதை ,  தம் மாமனான நந்தகோபாலனுடன்  இணைந்து வரவேற்று
தழீஇக் கொண்டு என் மகள் தன்னை - கோதையை  அன்போடு  ஆரத் தழுவிக்கொண்டு,  என் மகள் தன்னை
செம்மாந்து இரு என்று சொல்லிச் -   மன தைரியத்தோடு இரு எனச் சொல்லி
செழுங்கயர் கண்ணும் செவ்வாயும் - அழகிய மீன் போன்ற கண்ணும் சிவந்த இதழ்களும்
கொம்மை முலையும் இடையும் - திரண்ட முலையும் அழகிய இடையும்
கொழும்பணைத் தோள்களும் கண்டிட்டு - பரந்த மூங்கிலைப் போன்ற தோள்களையும் கண்டுவிட்டு
இம்மகளைப் பெற்ற தாயர் - இப்பேர்ப்பட்ட மகளைப் பெற்ற தாய்
இனித் தரியார் என்னும் கொலோ - இனி இவளைப் பிரிந்து உயிர் தாங்கி இருக்க மாட்டாள் என்று சொல்வார்களோ ?

முந்தைய பாடலின் தொடர்ச்சியாக இப்பாடல் வருகின்றது.. யசோதை தன் மகளிடம் எப்படி நடந்தால் நன்றாக இருக்கும் என பெரியாழ்வார் நினைத்தாரோ அதை இப்பாடலில் யசோதை செய்தது போன்ற எண்ணத்தில் வருகிறது இப்பாசுரம்.
கணவரை மாமா என்றழைக்கும் பழக்கம் உண்டு (என் அம்மா இவ்வழியே :) )
ஆகவே யசோதை ,தம் மாமனான நந்தகோபாலனோடு ,மருமகள் கோதையை வரவேற்கும் விதமாக , அவளை ஆரத் தழுவிக் கொண்டு, புது இடத்தில் அச்சத்துடனும் மிரட்சியுடனும் தலை குனிந்து நின்றிருக்கும் கோதையை செம்மாந்து இரு எனச் சொல்லி (அச்சம் தவிர் நிமிர்ந்து நில் என்று சொல்லி )
(புது இடத்தில் அன்னியமாக உணரும் பெண்ணை இது உன் வீடு இயல்பாக இருக்க வைக்க ஆசுவாசம் செய்தல் ) அவளை நன்கு உற்று நோக்குகிறார் யசோதை. தன் மகனுக்குப் பொருத்தமான பெண்ணாக அவள் இருக்கிறாளா (சோடிப் பொருத்தம் பார்ப்பாங்களே...) அழகில் எப்படி இருக்கிறாள் ?
அழகிய மீன் போன்ற கண்கள் ,சிவந்த இதழ்கள், திரண்ட முலைகள் ,குறுகிய இடை என்று அழகில் ஓர் குறை சொல்ல முடியாத படி இருக்கும் மருமகளைக் கண்டு, இப்பேர்ப்பட்ட பெண்ணைப் பிரிந்து அவளின் தாயார் அங்கு எங்ஙனம் உயிர் தரித்து இருக்கிறாளோ, பிரிவாற்றாமை கொண்டு வாழ்வாளோ மாட்டாளோ என்று தன் சம்பந்தி பற்றிக் கவலை கொள்கின்றாள்..







Saturday 15 July 2017

பெரியாழ்வார் திருமொழி 03.08.04

பாடல் : 04

ஒருமகள் தன்னை யுடையேன்
உலகம் நிறைந்த புகழால்
திருமகள் போல வளர்த்தேன்
செங்கண்மால் தான்கொண்டு போனான்
பெருமக ளாய்க்குடி வாழ்ந்து
பெரும்பிள்ளை பெற்ற அசோதை
மருமக ளைக்கண்டு கந்து
மணாட்டுப்பு றம்செய்யுங் கொலோ.

விளக்கம் :

ஒருமகள் தன்னை உடையேன் - ஒருமகள் எனக்கு இருக்கிறாள்
உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல வளர்த்தேன் - உலகம் நிறைந்த புகழ்பெற்ற திருமகளைப் போல அவளை வளர்த்தேன்
செங்கண்மால்  தான் கொண்டு போனான் - அவளை செம்மையான கண்களை உடைய மாலவன் தன்னோடு கொண்டு போனான்
பெருமகளாய் ஆய்க்குடி வாழ்ந்து பெரும்பிள்ளை பெற்ற அசோதை - ஆயர் குடிக்கே பெருமகளாக வாழ்ந்து பெருமை மிக்க பிள்ளையைப் பெற்ற அசோதை
மருமகளைக் கண்டு உகந்து மணாட்டுப் புறம் செய்யும் கொலோ - மருமகளான என் மகளைக் கண்டு விரும்பி மகிழ்ந்து ,மருமகளாக ஏற்று குடித்தனம் வைப்பாளோ ?

அழகான பாசுரம் இது. முந்தைய பத்துப் பாடல்களில் காறை  பூணும் பாடலும், இந்த ஒரு மகளை உடையேன் பாடலும் தான் மிக ஈர்த்து, இந்த இருபது பாடல்களை எழுதத் தூண்டியவை. மகளுக்காக தாய் உரை செய்தது போல அவர் எழுதி இருந்தாலும் அந்தத் தகப்பன்சாமியின் அன்பு நிறைவாகத் தெரிந்தது எனக்கு .
ஒரு மகளை உடையவன் நான். அவளே என் உடைமை. (தட் ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு மொமென்ட் )  திருமகள் என்றால் அறியாதோர் இலர். அப்பேர்ப்பட்ட திருமகளைப் போல அவளை நான் வளர்த்தேன். (என் வீட்டு மகாலட்சுமி ஐயா கோதை )
செம்மையான கண்களை உடைய திருமால் என் வீட்டுத் திருமகளை, தான் கொண்டு போனான்.
அவனுடைய அம்மா ஆயர் குடிக்கே பெருமகள் . பெரும் பிள்ளை பெற்றவள் பின்னே அந்த கண்ணனுக்கே அம்மா என்றால் சும்மாவா..ரொம்பப் பெரிய்ய்ய்ய ஆளு. (வளர்த்தவள் என்று சொல்லி யசோதையை சிறுமைப்படுத்திட முடியாது .ஏன்னா பெத்த பாசத்த விட வளர்த்த பாசம் அதிகம். அதனால் அவளைப் பிரிச்சுப் பார்க்க முடியாது )
என் பொண்ணுக்கு மாமியார். மணாட்டுப் பெண் -மருமகளை நல்லபடியா பார்த்துக்குவாளா ..அவளை விரும்பி ஏற்று கண்ணன் கூட குடித்தனம் நடத்த விடுவாளா?(சம்பந்தகாரம்மா மேல பயம் +மரியாதை .
அதனால் வலிய இந்தப் பாசுரத்தில் யசோதையை கொலுவீற்றுகிறார் பெரியாழ்வார்.

Wednesday 12 July 2017

பெரியாழ்வார் திருமொழி 03.08.03

பாடல் : 03
குமரி மணம்செய்து கொண்டு
கோலம்செய்து இல்லத் திருத்தி
தமரும் பிறரும் அறியத்
தாமோத ரற்கென்று சாற்றி
அமரர் பதியுடைத் தேவி
அரசாணி யைவழி பட்டு
துமில மெழப்பறை கொட்டித்
தோரணம் நாட்டிடுங் கொலோ.

விளக்கம் : 

குமரி மணம் செய்து கொண்டு -
இவள் தான் பெண் என்ற மண உறுதி செய்து கொண்டு
கோலம் செய்து இல்லத்து இருத்தி - அழகாக அலங்கரித்து நற் கோலத்தில் இல்லத்தில் அமர வைத்து
தமரும் பிறரும் அறியத் தாமோதரருக்கு என்று சாற்றி - உற்றோரும் மற்றோரும் அறிய இவள் அந்தக் கண்ணபிரானுக்கே தாமோதரனுக்கே என்று அறிவித்து
அமரர் பதி உடைத் தேவி அரசாணியை வழிபட்டு - அப்பேர்ப்பட்டவனைக் கணவனாகக் கொள்ளப் போகும்  எம் தேவி அரசாணியை வழிபட்டு
துமிலம் எழப் பறை கொட்டித் - பேரொலி (பெரிய ஆரவாரத்தோடு ) பறை கொட்டி
தோரணம் நாட்டிடும் கொலோ - தோரணம் நாட்டி அனைத்தும் செய்வார்களோ ?
துமிலம் - பெரிய ஆரவாரம்..பேரொலி முழங்க

குமரி மணம் - வெகு அழகான சொல்லாடல் ..மணத்திலே இளைய நிகழ்வு அதாவது மண உறுதி (நிச்சயதார்த்தம் )

இதான் பொண்ணு இதான் மாப்பிள்ளை என்று உறுதி செய்து , உற்றார் உறவினருக்கு அறிவித்தல் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வு .
பொண்ணை நன்கு அலங்கரித்து வீட்டில் அமர வைத்து , உற்றாரும் ஊராரும் அறிய ,இவளை அந்தக் கண்ணபிரான் தாமோதரனுக்கே என அறிவித்து , அமரர் பதி என்ற பெருமானைக் கணவனாக அடையப் போகும் என் மகள், அரசாணியை  (அரச மரக் கிளை ..அனைத்து மங்கல காரியங்களிலும் இது உண்டு. அரசாணிப் பானை கூட உண்டு ) வழிபாட்டு , பேரொலி முழங்க பறை கொட்டி (பறையும் மங்கல வாத்தியமே..அதைச் சாவு மேளம் ஆக்கியது பிற்கால சதியே ) தோரணம் நாட்டிடுவார்களோ..

மகளைப் பற்றி என்ன ஓர் அழகிய கற்பனை. எல்லா தாய்க்கும் வேறென்ன வேண்டும். கண் நிறைய இவற்றை ரசிப்பதைத் தவிர :) 

Saturday 8 July 2017

பெரியாழ்வார் திருமொழி 03.08.02

பாடல் : 02
ஒன்று மறிவொன்றில் லாத
உருவறைக் கோபாலர் தங்கள்
கன்றுகால் மாறுமா போலே
கன்னி யிருந்தாளைக் கொண்டு
நன்றும் கிறிசெய்து போனான்
நாராய ணன்செய்த தீமை
என்றும் எமர்கள் குடிக்குஓ
ரேச்சுக்சொ லாயிடுங் கொலோ.
விளக்கம் :
ஒன்றும் அறிவு ஒன்றில்லாத -  சேரும் அறிவு ஒன்று இல்லாத
உரு அறைக்  கோபாலர் - உருவம் அழகற்ற  கோபாலர்( மாடு மேய்ப்பவர்கள் )
தங்கள் கன்று கால் மாறுமா போலே - தங்கள்   கன்று தாங்களே அறியாமல் தன் அம்மாவிடம் இருந்து பிரித்து வைக்கப்படுவது போலே
கன்னி இருந்தாளைக் கொண்டு நன்றும் கிறி செய்து போனான் - என் வீட்டில் இருந்த கன்னியை , நல்லவன் போல நடித்துக்  கொள்ளை கொண்டு போனான்
நாராயணன் செய்த தீமை என்றும் எமர்கள் குடிக்கு - நாராயணன் செய்த தீமை என்றும் எங்கள் குடும்பத்துக்கு
ஓர்ஏச்சுச் சொல் ஆயிடுங் கொலோ - ஒரு பழி சொல்லுக்கு இடம் கொடுத்திடுமோ ?
ஒன்றும் - ஒன்றுதல் /சேருதல்
கிறி - உபாயம்

தாயும் கன்றும் இணைந்து இருத்தல் பற்றிய அறிவே இல்லாமல் உருவம் அழகற்ற கோபாலர்கள், தங்கள் கன்றை , அதுவே அறியாமல் அதன் அம்மாவிடம் இருந்து பிரித்து  வைப்பது போலே , என் வீட்டில் இருந்த கன்னியை ,  நல்ல வழி கண்டுபிடித்து,   அவளைக் கொள்ளை கொண்டு போனான். இப்படி கன்னியைக் கவர்ந்து சென்றதால் , நாராயணன் செய்த தீமை , வாழ்நாள் முழுவதும் எங்களின் குடும்பத்துக்கு தீராதப் பழி சொல்லைத் தந்து விடுமோ என்று அச்சமாக இருக்கிறது.



Monday 26 June 2017

பெரியாழ்வார் திருமொழி 03.08.01


பெரியாழ்வார் மூன்றாம் திருமொழியில் எட்டாவது பகுதியில் முதல் பாடல். இதுவும் மகளுக்கானதே.. இனிதே ஆரம்பம் !
பாடல் : 01
நல்லதோர் தாமரைப் பொய்கை
நாண்மலர் மேல்பனி சோர
அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு
அழகழிந் தாலொத்த தாலோ
இல்லம் வெறியோடிற் றாலோ
என்மக ளைஎங்கும் காணேன்
மல்லரை யட்டவன் பின்போய்
மதுரைப்பு றம்புக்காள் கொலோ.

விளக்கம் : 

நல்லதோர் தாமரைப் பொய்கை - அழகிய நல்ல ஓர் தாமரைக் குளத்தில்
நாண் மலர்மேல் பனி சோர - அன்று பூத்த மலர் மீது பனி பொழிய
அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு - அதன் அல்லியும் தாதும் உதிர்ந்து
அழகு அழிந்தால் ஒத்ததாலோ - அழகு அழிந்தால் எப்படி இருக்குமோ அதைப் போல
இல்லம் வெறியோடிற்றாலோ - என் இல்லமானது வெறிச் என்று கிடக்கின்றது
என் மகளை எங்கும் காணேன்  - என் மகளை எங்கும் பார்க்க முடியவில்லையே
மல்லரை அட்டவன் பின்போய்  - மல்லர்களை அழித்த அந்தக் கண்ணன் பின்போய்
மதுரைப்புறம் புக்காள் கொலோ - மதுரைப்புறம் புகுந்திருப்பாளோ ?

அழகிய நல்லதோர் தாமரைப் பொய்கையில் உள்ள அன்றலர்ந்த (fresh )  மலர்
மீது பனி பொழிந்து அதன் பூவின் உள் தாளும் , மகரந்தமும் உதிர்ந்து அழகு அழிந்தால் எப்படி இருக்குமோ , அதைப் போலவே என் மகளற்ற இல்லமும் வெறிச்சோடிக் கிடக்கின்றது. அவளை எங்கும் காணமுடியல . மல்லர்களை அழித்த அந்தக் கண்ணனின் பின்னே போய் வடமதுரைப் புறம் புகுந்திருப்பாளோ ?

என் மகள் கோதை அன்று பூத்த மலர் போல இருப்பாள்.  பூவின் மகரந்தத்தை எப்படி அல்லிதழும் ,தாதும் உள்ளனவோ அது போல நான் பாதுகாத்தேன்.பனி கோட்டியில் பூ அழகிழந்து போனது. அது போலத்தான் அவளைக் கண்ணார நான் ரசிக்கும் முன்பே அவள் அந்தக் கண்ணனின் வீட்டுக்குப் போய்விட்டாள் போல. அவளன்றி வீடே வெறிச் என்று இருக்கிறது. அவள் நிறைந்து இருந்த இல்லத்தில் இன்று அவளை எங்கும் காணவில்லை.
(பெரியாழ்வார் குலத் தொழில் வேள்வியே.ஆனாலும் அதை அவர் செய்ய விரும்பாமல் பூத் தொடுத்து பண்டாரமாக வாழ்ந்தார். வாழ்நாள் முழுவதும் பூத் தொடுத்து வாழ்ந்தவர் என்பதால் அவர் பாடல்களிலும் பூ மணக்கின்றது !

Saturday 24 June 2017

பெரியாழ்வார் திருமொழி 03.07.10

பாடல் : 10
ஞால முற்றும்உண்டு ஆலி
லைத்துயில் நாரா யணனுக்குஇவள்
மால தாகி மகிழ்ந்தன
ளென்று தாயுரை செய்ததனை
கோல மார்பொழில் சூழ்புது
வையர்கோன் விட்டுசித்தன்சொன்ன
மாலை பத்தும் வல்ல
வர்கட்கு இல்லை வருதுயரே.

விளக்கம் : 

ஞாலம் முற்றும் உண்டு - உலகம் முழுவதையும் உண்டு
ஆல் இலைத் துயில்  நாராயணனுக்கு இவள் - ஆல் இலையில் உறங்கிய நாராயணனுக்கு இவள்
மால் அது ஆகி மகிழ்ந்தனள் என்று தாயுரை செய்ததனை - மயக்கமுற்று காதலாகி மகிழ்ந்தனள் என்று தாய் உரை செய்ததனை
கோலமார் பொழில் சூழ் - அழகிய சோலை சூழ்ந்த
புதுவையர் கோன் விட்டு சித்தன் சொன்னமாலை பத்தும் - புதுவையர்   சான்றோன் விட்டு சித்தன் சொன்ன இத் தமிழ்ப் பாமாலை பத்தும் பாட
வல்லவர்கட்கு இல்லை வருதுயரே - வல்லவர்களுக்கு வரக்கூடிய துயர் ஒன்றும்  இல்லை
வரு துயர் - வந்த/வருகின்ற /வரக்கூடிய துயர்

உலகம் முழுவதையும் உண்டு ஆல மர இலையில் உறங்கிய நாராயணனுக்கு இவள் மயங்கிக் காதலாகி மகிழ்ந்தாள் என்பதைத் தாய் உரை செய்ததனை , அழகிய சோலை சூழ்ந்த ,வில்லிபுத்தூர் சான்றோன் விட்டு சித்தன் சொன்ன தமிழ் மாலை பத்தும் பாட வல்லவர்களுக்கு ,வருகின்ற துயர் என ஒன்றும் இல்லை.
மூன்றாம் திருமொழியில் உள்ள  ஆண்டாளுக்காக பெரியாழ்வார் எழுதிய  ஏழாம் பத்து இனிதே நிறைவுற்றது !!!

Friday 23 June 2017

பெரியாழ்வார் திருமொழி 03.07.09

பாடல் : 09
பெருப்பெ ருத்தகண் ணாலங்கள்செய்து 
பேணிநம் மில்லத் துள்ளே
இருத்துவா னெண்ணி நாமிருக்க
இவளும்ஒன் றெண்ணு கின்றாள்
மருத்து வப்பதம் நீங்கினா
ளென்னும் வார்த்தை படுவதன்முன்
ஒருப்ப டுத்திடு மின்இவளை
உலகளந் தானி டைக்கே.

விளக்கம் : 
 பெருப் பெருத்த கண்ணாலங்கள் செய்து - பெரிய  பெரிய மங்கல நலன்கள் இவளுக்குச் செய்து
பேணி நம் இல்லத்து உள்ளே இருத்துவான் என எண்ணி நாம் இருக்க - பாதுகாத்து நம் வீட்டில் உள்ளேயே வைத்துக் கொள்ளலாம் என நாம் எண்ணி இருக்க
இவளும் ஒன்று எண்ணுகின்றாள் - இவளோ வேறொன்று நினைக்கின்றாள்
மருத்துவப் பதம் நீங்கினாள் என்னும் வார்த்தை படுவதன் முன் - மருந்து செய்யும் பதம் தவறி விட்டால்  அதன் நலன் முழுவதும் போய் விடுவது போல, இவளைக் கொஞ்சம் கவனிக்காமல் விட்டு தவறு    நிகழ்ந்து விடும் அந்த ஒரு பழி சொல் வருவதற்கு முன்
ஒருப்படுத்திடுமின் இவளை உலகளந்தான் இடைக்கே - இவளை உலகளந்தான் இடத்தில் ஒன்று சேர்த்து விடுங்கள்..

கல்யாணங்கள் - மங்கல நிகழ்வுகள்
கல்யாணம் என்பது திருமணம் மட்டுமே அல்ல.பல மங்கல நிகழ்வுகளும் கல்யாணம் என்ற பொருளே . ஆகவே ஒரு தகப்பனாக மகளுக்கு பல மங்கலங்கள் செய்து பார்க்க விரும்புகிறார் பெரியாழ்வார்.  இதை நாம் பேச்சு வழக்கில் ,என் கண்ணுக்கு முன்னாலேயே உனக்கு ஒரு நல்லது பண்ணிப் பார்த்துப்புடனும் என்போம். அதைத்தான் அவரும் சொல்கின்றார். அவளுக்குப் பல நல்லது செய்ய வேண்டும்  ,அவளைப் பேணி பாதுகாத்து ,நம் வீட்டின் உள்ளேயே அவளை இருக்க வைக்கலாம் என நாம் எண்ணி இருக்க ,
இவளோ வேறொன்று எண்ணுகின்றாள் . மருந்தானது சரியான அளவில் இருக்க வேண்டும். மீறினால் துன்பம். அது போலவேதான் இவளைச் சரியாக கவனித்து வர வேண்டும். கொஞ்சம் நாம் தவறினாலும் துன்பம் ஆகிவிடும் (இதைத்தான் பெண்ணைப் பெற்று வயிற்றிலேயே நெருப்பைக் கட்டிக் கொண்டு இருக்கிறேன் எனச் சொல்வார்கள் )
அப்படி ஒரு பழி சொல்லுக்கு இவள் கோதை ஆளாகும் முன்னம் , அவளை உலகளந்தானிடம் ஒன்றிணைத்து விட வேண்டும். அதற்குப்பின் அவள் பாடு அவள் கணவன் பாடு. 

Thursday 8 June 2017

பெரியாழ்வார் திருமொழி 03.07.08

பாடல் : 08
கைத்தலத் துள்ள மாடழியக் 
கண்ணா லங்கள் செய்துஇவளை
வைத்து வைத்துக் கொண்டுஎன்ன 
வாணிபம் நம்மை வடுப்படுத்தும்
செய்த்த லையெழு நாற்றுப் 
போல்அவன் செய்வன செய்துகொள்ள
மைத்த டமுகில் வண்ணன் 
பக்கல் வளர விடுமின்களே.

விளக்கம் : 

கைத்தலத்தில் உள்ள மாடு அழியக் - என் கைகளிலே உள்ள செல்வங்கள் அழியக்
கண்ணாலங்கள் செய்து - கண்ணாலங்கள் செய்து
இவளை வைத்து வைத்துக் கொண்டு என்ன வாணிபம் நம்மை வடுப்படுத்தும் - வைத்து ,இவளை என் வீட்டின் பெருமை என வைத்துக் கொண்டு  ,என் மகளாக வைத்து வாழ்கிறேன். ஆயினும்  என்ன வாணிபம் செய்து என்ன ஆகப் போகிறது..அது நமக்கு பழியை ஏற்படுத்தும்
செய்த்தலை எழு நாற்றுப் போல் அவன் செய்வன செய்துகொள்ள - நாற்று வயலில் விளைந்த நாற்றினை விளைத்தவன் விருப்பம்போல் நடவு  வயலில் நடுவது போல , அவன் செய்வன செய்து கொள்ள
மைத்தடம் முகில் வண்ணன் பக்கல் வளர விடுமின்களே ! - இவளை மைத்தடம் (மை போன்ற கரிய நிறம் கொண்ட மேகத்தின் வண்ணன் பக்கமாக வாழும்படி கொண்டு விட்டுவிடுங்கள்

ஒரே பெண் அவளுக்குக் கல்யாணம் செய்யணும்..அதைச் சீரும் சிறப்புமாகச் செய்யணும். கையில் இருக்கின்ற செல்வங்கள் எல்லாம் கரைந்தாலும் பரவாயில்லை. அவளை நல்ல இடத்தில் கட்டிக் கொடுக்கணும்.  இவளே என் குலப்பெருமையாக வைத்து ,மகளாக வைத்துக்கொண்டு வாழ்கிறேன். ஆனால் அப்படி வைத்துக்கொண்டு வாழ்வதில் ஒரு பயனும் இல்லையே .
வயலில் நடும் நாற்றானது நாற்று வயலில் இருந்து நடவு வயலில் நட்டால் தான் பயன்பெறும்..( நாற்றாங்காலை இப்படி நாற்று வயலில் இருந்து நடவு வயலில் நடுவதே வழக்கம். போலவே பெண்ணும் பிறந்த வீட்டில் இருந்து புகுந்த வீட்டுக்குச் செல்லுவதே இயல்பு )
மை இட்ட தடம் தெரியும் அந்த மேகத்தின் நிறம் கொண்டவன் அவன் விருப்பப்படி இவளை என்னவோ செய்து கொள்ளட்டும் அவன் பக்கம் இவளைக் கொண்டு சேர்த்து விடுங்களேன் ! (கோதை என் மகள் என்பது பெருமை ஆயினும் அவள் என்வீட்டிலேயே இருப்பதால் யாதொரு பயனும் இல்லை ஆகவே அவள் சேரிடம் சேர வேண்டும் அந்தக் கண்ணனோடு சேருவதே அவளுக்கும் பெருமை அவளைப் பெற்ற தனக்கும் பெருமை என்கிறார் ) 

Monday 5 June 2017

பெரியாழ்வார் திருமொழி 03.07.07

பாடல் : 08
காறை பூணும் கண்ணாடி
காணும்தன் கையில் வளைகுலுக்கும்
கூறை யுடுக்கும் அயர்க்கும்தங்
கொவ்வைச் செவ்வாய் திருத்தும்
தேறித் தேறிநின்று ஆயிரம்பேர்த்
தேவன் திறம்பி தற்றும்
மாறில் மாமணி வண்ணன்
மேல்இவள் மாலுறு கின்றாளே.

விளக்கம் : 
காறை பூணும் கண்ணாடி காணும் - கழுத்திலே அணியக் கூடிய அணிகலனை அணிந்து கொள்ளும் ,அடிக்கடி கண்ணாடி பார்த்துக் கொண்டும்
தன் கையில் வளைகுலுக்கும் - தன் கையில் உள்ள வளையல்களைத் தானே குலுக்கிக் கொள்ளுவாள்
கூறை உடுக்கும் அயர்க்கும் - உடை உடுப்பாள் .பின் ஏதோ நினைத்து அயர்ந்து கொள்வாள்
தன் கொவ்வைச் செவ்வாய் திருத்தும் - அடிக்கடி தன் கொவ்வைப் பழம் போன்ற சிவந்த இதழ்களை ஒழுங்குபடுத்திக் கொள்வாள்
தேறித் தேறி நின்று ஆயிரம் பேர்த் தேவன் திறம் பிதற்றும்  - தனக்குத்தானே தேற்றிக் கொண்டு நின்று ஆயிரம் பெயர்களை உடையவன் திறனைப் பிதற்றுவாள்
மாறு இல்  மாமணிவண்ணன் மேல் இவள் மால் உறுகின்றாளே - வேறு மாற்று இல்லாத ஒப்பற்றவனான மாமணி வண்ணன் மேல் இவள் மயக்கம் கொள்கின்றாளே
இது ஒரு மிக அழகிய பாடல். காதல் கொண்ட பெண்ணின் நடவடிக்கைகளை உளவறிந்து ,தாய்மையோடு வருந்திச் சொல்லும் பாடல். இப்பாடலைப் படிக்கும் போதே கோதை என்ற பெண்ணைக் கற்பனை செய்யுங்கள் அவர் சொல்லிய வண்ணமே.. ஒரு சிறுபிள்ளைத்தனம் தெரியும்.. :)
பெரியாழ்வாரின் இந்தத் திருமொழிகளை எழுத எனக்கு உந்துதல் அளித்ததே இந்தப் பாடல்தான்..
காறை என்பது கழுத்தை இறுக்கி மூடிய நகை..காறை பூணும் (அணிதல் ) கண்ணாடி காணும்.. ஆமாம் ஏன் நகை அணிய வேண்டும் அதை ஏன் கண்ணாடியில் பார்க்க வேண்டும்..சில பெண்கள் இயல்பாகவே தன்னை அழகுபடுத்திக் கொள்ள விரும்புவர். ஆனால் சில பெண்களோ பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டார்கள்.. ஆனால் அத்தகு பெண்கள் கூட காதல் என வந்துவிட்டால் தோற்றத்தில் கவனம் செலுத்துவார்கள்.. தான் விரும்புபவன் தன்னைப் பார்க்கும்போது அழகாகத் தெரிய வேண்டும் என்ற எண்ணமே காரணம்.  அதற்காகத் தான் தனக்கு அழகூட்டும் நகையை அணிந்து பார்த்தலும் அது எப்படி இருக்கு என கண்ணாடியில் அழகு பார்த்தலுமாகத் திரிகிறாள்..தன் வளையலைத் தானே குலுக்கிப் பார்க்கிறாள்.. சின்னச்சின்ன செயல்களில் கூட செய்து பார்த்து ரசிக்கத் தோன்றும் காதல் கொண்ட பெண் மனது.. அத்தோடு..அத்தோடு.. என்ன அத்தோடு..அதுதான்  இந்த வளையல் அவன் கையில் சிக்கினால் என்னவாகும் என்ற எண்ணமும் வந்து போயிருக்கும் வேறென்ன :)
உடை அணிந்து கொள்வாளாம் அயர்ந்தும் கொள்வாளாம்..ஏனாம் ? புத்தாடை அணிந்தால் உற்சாகம் தானே வரும்..ஆமாம் உற்சாகம் தான் அடுத்த நொடியே அவன் நினைவு வந்துவிடுகிறது.. இதை எல்லாம் ரசிக்க வேண்டியவன் அவனாகிற்றே.. எந்த ஒரு பொருளும் அதைக் கொள்ள வேண்டியவனிடம் போய்ச் சேர்ந்தால் தானே அது தன் பிறவிப்பயனை அடையும்.. இவனைத் தான் காணலையே ..பிறகு மனம் சோர்வடையாமல் என்ன செய்யுமாம் ?

அடிக்கடி தன் சிவந்த இதழ்களைத் திருத்திக் கொள்வாளாம்.. என்றேனும் ஒரு நாள் வருவான் என்று தன்னைத்தானே தேற்றிக் கொள்வாள். ஆயிரம் பெயர்கள் கொண்ட அந்தத் தேவன் திறமையைச் சொல்லிப் பிதற்றுவாள் .. (ஏதேதோ உளறுதல் )
வேறு மாற்று இல்லாத ஒப்பற்றவனான அந்த மணி வண்ணன் மேல் இவள் மயக்கம் கொள்கின்றாளே.. இவளை என்ன செய்ய ?




Saturday 3 June 2017

பெரியாழ்வார் திருமொழி 03.07.06

பாடல் : 07
பேச வும்தெரி யாத பெண்மையின்
பேதையேன் பேதைஇவள்
கூச மின்றிநின் றார்கள் தம்மெதிர்
கோல்கழிந் தான்மூழையாய்
கேசவா வென்றும் கேடிலீ
யென்றும் கிஞ்சுக வாய்மொழியாள்
வாச வார்குழல் மங்கை
மீர்இவள் மாலுறு கின்றாளே.

விளக்கம் : 

பேசவும் தெரியாத பெண்மையின் பேதையேன்  பேதை இவள் - பேசவும் தெரியாத பெண்மையின் பேதை என் பேதை இவள்
கூச மின்றி நின்றார்கள் தம் எதிர் கோல் கழிந்தான் மூழையாய் - கூச்சமில்லாமல்  தம் எதிர்  மற்றவர்கள்  நிற்கின்றார்கள் என்ற எண்ணமின்றி  கோல் அற்ற அகப்பையாய் வெட்கம் விடுத்தவளாக
கேசவா என்றும் கேடு இலி என்றும் கிஞ்சுக வாய்மொழியாள் - கேசவா என்றும் கேடு அற்றவனே என்றும் சொல்லும் கிளி போன்று பேசும் வாய்மொழியாள்
வாசவார் குழல் மங்கை மீர் இவள் மால் உறுகின்றாளே - நறுமணம் கொண்ட நீண்ட குழல் மங்கையரே இவள் மயக்கம் கொள்கின்றாளே

இடம் பொருள் ஏவல் தெரியாமல் பேசத் தெரியாத பெண் ஆகிவிட்டாள் கோதை. யானே ஓர் பேதை இந்தப் பேதை பெற்ற மகள் இவளும் ஓர் பேதையாகிப் போனாள் . தம் எதிரே மற்றவர்கள் நிற்கின்றார்கள் என்ற எண்ணம் இன்றி கூச்சமற்றவளாக கோல் அற்ற அகப்பை போல ( அகப்பையில் கோல் நீங்கி விட்டால் அது வீண்தான். தக்க தருணத்தில் கோல் நீங்கி அச் சமையல் நிறைவுறாமல்  அரைகுறை ஆகி விடுவது போல )  பெண்ணானவள் வெட்கம் நீங்கி விட்டால் எப்படி ? ) பலர் முன்னிலையில்,கேசவா, கேடு இல்லாதவனே என்றும் பிதற்றுகிறாள் கிளி எப்படி சொன்னதையே திருப்பிச் சொல்லுமோ அது போன்றுள்ளது அவள் பேச்சு..
நறுமணம் கொண்ட நீண்ட முடி கொண்ட மங்கையரே ! இவள் இப்படி மால் மேல் மால் (மயக்கம் ) உறுகின்றாளே .. 

Thursday 1 June 2017

பெரியாழ்வார் திருமொழி 03.07.05

பாடல் :05
நாடும் ஊரும் அறிய
வேபோய் நல்ல துழாயலங்கல்
சூடி நாரணன் போமிட
மெல்லாம் சோதித் துழிதருகின்றாள்
கேடு வேண்டு கின்றார்
பலருளர் கேசவ னோடுஇவளை
பாடு காவ லிடுமி
னென்றென்று பார்தடு மாறினதே.

விளக்கம் : 

நாடும் ஊரும் அறியவே போய் - இந்த  நாடும் ஊரும் அறியவே போய்
நல்ல துழாய் அலங்கல் சூடி - நல்ல துளசி மாலையைச் சூடி
நாரணன் போம் இடம் எல்லாம் சோதித்து உழி தருகின்றாள் - நாரணன் செல்லும் இடம் எல்லாம் தேடி  அதைத் தன் இடமாகக் கொள்ளுகின்றாள்
கேடு வேண்டுகிறார் பலர் உளர் - இவளுக்கு கேடு நினைப்பவர்கள் பலர் உள்ளனர்
கேசவனோடு இவளை பாடு காவலில் இடுமின் என்றென்று - கேசவனோடு இவளை இணைக்க வேண்டும் ,  இவளை வெளியில் செல்லாதவாறு பாதுகாவலில் வைக்க  வேண்டும் என   என்னிடம் இவ்வுலகம்  சொல்லியதில்
பார் தடுமாறினதே - மனம் தடுமாறியதே

நாடும் ஊரும் , (தென்பாண்டி நாடு முழுவதும், இந்த வில்லிபுத்தூரும் ) அறியவே போகின்றாள். நல்ல துளசி மாலையை அணிந்து கொள்கின்றாள்.  நாரணன் எங்கெல்லாம் சென்றான் என விசாரித்து  பலரும் பல இடம் சொல்ல,இவளும் அந்த இடங்களை எல்லாம் தன் இடமாகக் கொள்ளுகிறாள் (இராமன் வாழும் இடமே சீதைக்கு அயோத்தி என்பார்களே அது போல நாரணன் இருக்கும் இடமெல்லாம் தன் இடமாக எண்ணிக் கொள்கின்றாள் )
அக்கம்பக்கம் எல்லாம் இவளை அந்தக் கேசவனோடு இணைத்துக் கிசுகிசுக்கின்றார்கள் . இவளுக்குக் கேடு வேண்டுபவர்களும் பலர் உள்ளனர்.
பொம்பளைப் புள்ள அங்க இங்க அவ காதலனைத் தேடி அலைஞ்சா நல்லாவா இருக்கும்..அவ வீட்டை விட்டு வெளியே போகாதபடி பாதுகாவலில் வைக்கச்சொல்லி என்னிடமே பலர் சொல்கின்றார்கள்..இவ்வுலகம்  இதைச் சொல்லக்  கேட்டு பெற்ற மனம் தடுமாறியதே..

Friday 19 May 2017

பெரியாழ்வார் திருமொழி 03.07.04

பாடல் : 04
ஏழை பேதைஓர் பாலகன்
வந்துஎன் பெண்மக ளையெள்கி
தோழி மார்பலர் கொண்டு போய்ச்செய்த
சூழ்ச்சியை யார்க்குரைக்கேன்
ஆழியா னென்னு மாழ
மோழையில் பாய்ச்சி அகப்படுத்தி
மூழை யுப்பறி யாத
தென்னும் மூதுரையு மிலளே.

விளக்கம் :
ஏழை பேதை ஓர் பாலகன் வந்து - ஏழையானவள் பேதையானவள்
என்று  ஆராய்ந்து யோசித்து , பாலகன் வந்து
என்  பெண்மகளை எள்கி - என் பெண்மகளை ஏய்த்து
தோழிமார்  பலர் கொண்டு போய்ச் செய்த சூழ்ச்சியை யார்க்கு உரைக்கேன் - தோழிமார் பலர் இருந்தும்,  கொண்டு போய்ச் செய்த சூழ்ச்சியை நான் யாருக்கு உரைப்பது ?
ஆழியான் என்னும் ஆழ மோழையில் பாய்ச்சி அகப்படுத்தி - ஆழியான் என்னும் ஆழ மோழையில் (மதுவின் அடியில் ஓடும் ஆழமான அடி நீர் ) பாய்ச்சி அகப்படுத்தி
மூழை உப்பு அறியாதது என்னும் - உணவை அள்ளும் அகப்பை உப்பு அறியாதது
மூதுரையும் இலளே -என்னும் முதியோர் வாக்கும் அறியாதவளே
மூழை - அகப்பை
மோழை -மடுவின் /ஆற்றின்  அடியில் ஓடும் ஆழமான  அடிநீர்
ஓர் - ( இவ்விடம் வினைத்தொகை ) ஓர்தல் -ஆராய்தல் /யோசித்தல்
ஆழியான் -திருமால்

என் மகள் ஏழை, பேதை என்று நன்கு ஆய்ந்து அறிந்து கொண்டு , தோழிமார் பலர் சூழ அவள் இருந்தும் அவளை ஏய்த்து ஏமாற்றி இருக்கிறான்..இந்த சூழ்ச்சியை நான் யாரிடம் சென்று சொல்வேன் ?
திருமால் என்னும் ஆழமான அடிநீரில் அகப்பட்டுக் கொண்டாளே (ஆற்றின் /மடுவின் ஆழத்தில் இருக்கும் அடி நீர் )
கரண்டிக்கு கறிச்சுவை தான் தெரியுமா ,அகப்பைக்கு உப்புச் சுவை தான் தெரியுமா என்பது நாட்டார் தமிழ்ப் பழமொழி

அதாவது அள்ளுகின்ற கரண்டிக்கு உணவின் ருசி தெரியாதாம்..உண்மை தானே
ஆனா இங்க அவர் கரண்டி என்பது யாரை ?உலகளந்த உத்தமனை :)
மகளின் அருமை தெரியாதவனாம்..அவளின் அருமை பெருமை தெரியாதவனிடம் போய் மயங்கிக் கிடக்கின்றாளே :(


Thursday 18 May 2017

பெரியாழ்வார் திருமொழி 03.07.03

பாடல் : 03
பொங்கு வெண்மணல் கொண்டு
சிற்றிலும் முற்றத் திழைக்கலுறில்
சங்கு சக்கரம் தண்டு வாள்வில்லு
மல்லது இழைக்க லுறாள்
கொங்கை இன்னம் குவிந்தெ ழுந்தில
கோவிந்த னோடு இவளை
சங்கை யாகிஎன் னுள்ளம்
நாள்தொறும் தட்டுளுப் பாகின்றதே.

விளக்கம் :
பொங்கு வெண்மணல் கொண்டு - நிறைய  வெண்ணிற நுண் மணல் கொண்டு
சிற்றிலும் முற்றத் திழைக்கல் உறில் - சிறிய வீட்டினை முற்றத்தில் கட்டுகின்ற போதிலும்
சங்கு சக்கரம் தண்டு வாள் வில்லும் அல்லது இழைக்கல் உறாள் - சங்கு சக்கரம் தண்டு உடைய வாள் வில்லும் தவிர வேறு  இன்னபிறவற்றை வரைவதில்லை
கொங்கை இன்னம் குவிந்து எழுந்தில - அவள் கொங்கைகள் கூட திரண்டு இன்னமும் எழவில்லை..வளரவில்லை
கோவிந்தனோடு இவளை - கோவிந்தனோடு இவளை
சங்கையாகி என் உள்ளம் -   ஐயத்தினால் அச்சமாகி  என் உள்ளம்
நாள்தோறும் தட்டுளுப்பாகின்றதே - நாள்தோறும் தடுமாற்றம் ஆகின்றதே

நிறைய ,வெண்ணிற நுண்மணல் கொண்டு சிறிய வீட்டினை முற்றத்தில் கட்டுகின்ற போதிலுமே கூட, மாலுக்கு உரிய சங்கு ,சக்கரம் , தண்டு ,(கதை ) ,வாள் ,வில் என்ற ஐம்படைத் தாலிகள் தவிர வேறு ஒன்றை வரைய மாட்டேன் என்கிறாள்.. அவளின் கொங்கைகள் கூட இன்னமும் சரியாக வளரவில்லை. இப்படியாப்பட்ட பெண்ணை கோவிந்தனோடு நினைத்துப் பார்க்கவே நடுங்குகிறது உள்ளம். அவனே கதி எனக் கிடக்கின்றாள்.. அதை நினைத்து எப்படி இவளை இதிலிருந்து மீட்டப் போகின்றேனோ என்ற ஐயத்தில் அச்சம் கொண்டு மனம் நாள்தோறும் தடுமாற்றம் ஆகின்றதே

முல்லை நிலத்தின் கடவுள் மாயோன் - காடும் காடு சார்ந்த இடத்தில் வேட்டையைத் தொழிலாகக் கொண்டவர்களுக்கு ஐம்படை ஆயுதங்கள் சங்கு,சக்கரம் ,தண்டு ,(கதை ) வாள் ,வில்..(இதுதான் பின்னாளில் விஷ்ணுவுக்கு ஆகி வந்தது  )


Wednesday 17 May 2017

பெரியாழ்வார் திருமொழி 03.07.02

பாடல் : 02
வாயில் பல்லும் எழுந்தில 
மயிரும் முடிகூ டிற்றில
சாய்வி லாத குறுந்தலைச் 
சிலபிள் ளைகளோ டிணங்கி
தீயி ணக்கிணங் காடிவந்துஇவள் 
தன்னன்ன செம்மை சொல்லி
மாயன் மாமணி வண்ணன் 
மேல்இவள் மாலுறு கின்றாளே.

விளக்கம் : 
வாயில் பல்லும் எழுந்தில - வாயில் பல்  போட்டுப் பேசும் அளவுக்கு பேச்சு வரல காதலில் வீழ்ந்த பின்
மயிரும் முடி கூடிற்று இல - நன்கு  தலை சீவிக் கொண்டிருந்தவள் இப்பொழுது ஒழுங்காகத் தலையும் வாருவதில்லை
சாய்வு இலாத குறுந்தலைச் - (சாய்வு இல்லாத -குனியாத தலை )  தலை வணங்காத (நிமிர்ந்து நடக்கின்ற
சில பிள்ளைகளோடு இணங்கி - சில பிள்ளைகளோடு இணங்கி
தீ இணக்கு இணங்கி ஆடி வந்து - தீய இணக்கு இணங்கி (சேர்க்கை சரியில்லை சேரக் கூடாத பிள்ளைகளோடு சேர்ந்து விளையாடிட்டு வந்து )
இவள் தன் அன்ன செம்மை சொல்லி -எங்கே சென்று ஆடிட்டு வந்தீர்கள் எனக் கேட்டால்   இவள் தன்னை ஒத்த (தனக்கு ஏற்றாற்போல் ) பொய்கள் சொல்லி மழுப்புகிறாள்
மாயன் மாமணி வண்ணன் மேல் - மாயன் மாமணி வண்ணன் மேல்
இவள் மால் உறுகின்றாளே - இவள் மயக்கம் கொள்கின்றாளே


எவரேனும் ஒரு சுடு சொல் சொல்லிட்டா என் அம்மா சொல்வார்கள் எவ்வளவு திண்ணக்கம் நாக்கு மேல பல்லைப் போட்டு இப்படி ஒரு சொல்லு சொல்லிட்டானே என்று..கிராமத்து வழக்கு இது.  அப்படி அடுத்தவரை பாதிக்கும் வண்ணம் பேசுவதற்கு பல்லுப் போட்டுப் பேசுதல் என்பார்கள்.. அது போல வெடுக்கென்று எல்லாரிடமும் பேசிக்கொண்டு இருந்த பெண் தான் கோதை. ஆனால் பாருங்கள் திடீரென பேச்சு வரல..என்ன ஆச்சு இவளுக்கு ?

பெண்ணாகச் சீவி அலங்கரிப்பவள் இப்ப தலை கூட ஒழுங்காகச் சீவாமல் போட்டு தலை மயிர் ஆனது கண்டேத்தமாகக் கிடக்கு.

குனிந்த தலை நிமிராம நடப்பது நம் பெண்கள் பண்பு. ஆனால் நிமிர்ந்து நடக்கும் பெண்களோடு சேர்ந்து கொண்டு வெளியே போய் ஆடிட்டு வருகிறாள் கோதை. தீ இணக்கு ..சேர்க்கை சரியில்லை என்பார்களே நம் அம்மா . சேரக் கூடாத நட்புடன் சேர்வதாகக் குற்றம் சாட்டுகிறார் .

(இதுதான் தாய்மை..என்னதான் நம்மபுள்ள தப்பு செய்தாலும் சேர்க்கை சரியில்லை என்று அடுத்த பிள்ளையால் தான் தன் பிள்ளை கெடுவது போலப் பேசுவது )
பொல்லாத பிள்ளைகளோடு சேர்ந்து அவர்களுடன் விளையாடி விட்டு வந்து  ,
எங்கே சென்று வருகிறாய்  என இவளிடம் கேட்டால் ,தனக்குத் தகுந்தாற்போல் ஏதேதோ பொய் சொல்லி மழுப்புகிறாள்

அந்த மாயன் மணிவண்ணன் மேல் இப்படி மயங்கிக் கிடக்கிறாளே..(மகளின் தடுமாற்றங்கள் காதலால் வந்தவை எனக் குறிப்பால் உணர்த்துகிறார் 

Monday 15 May 2017

பெரியாழ்வார் திருமொழி -03.07.01

பெரியாழ்வார் பல பாடல்கள் எழுதியுள்ளார்..ஆனால் நான் இவற்றை மட்டும் தேர்ந்தெடுக்கக் காரணம் இதிலே மகளைப் பற்றி அவர் எழுதியதுதான். மகளின் காதல் பித்தும் ஒரு தாயுமானவராக  அதைப் பற்றிய கவலை ஆட்கொண்டு எழுதியவை. வெகு அழகு. அதை ஆண்டாளின் நாச்சியார் திருமொழியோடு இணைந்து எழுதுவதே பொருத்தமாக இருக்கும் :)
பெரியாழ்வார் மூன்றாம் பத்தில் வரும் ஏழாம் திருமொழி இது.

பாடல் :01
ஐய புழுதி உடம்ப
ளைந்துஇவள் பேச்சு மலந்த லையாய்
செய்ய நூலின் சிற்றாடை
செப்பி னுடுக்கவும் வல்ல ளல்லள்
கையி னில்சிறு தூதை
யோடு இவள் முற்றில் பிரிந்துமிலள்
பைய ரவணைப் பள்ளி
யானோடு கைவைத்து இவள்வருமே.

விளக்கம் :
ஐய புழுதி உடம்பு அளைந்து -  ஐயோ புழுதியை உடம்பு முழுக்கப் பூசி
இவள் பேச்சும்  அலந்தலையாய்  - இவள் பேச்சும் கலங்கி குழம்பிப்போய்
செய்ய நூலின் சிற்றாடை  - சிவந்த நூலில் செய்த சின்ன ஆடையைக் கூட
செப்பின் உடுக்கவும் வல்லள் அல்லள்  - செம்மையாக உடுக்கவும் வல்லவளாக இல்லை
கையினில் சிறு தூதையோடு  - கையினில் சிறு மண் பானையோடு இருக்கிறாள்
இவள் முற்றில் பிரிந்தும் இலள் - அதை  இவள் முறத்தைப்  பிரியவும் இல்லை
பை அரவணைப் பள்ளியானோடு  - பாம்பினை அணைத்து பள்ளி கொண்டவனோடு
கை வைத்து இவள் வருமே - கை வைத்து இவள்  வருகிறாளே இவளை என்ன செய்வது ?

எத்தனை பெரிய பிள்ளைகள் ஆயினும் பெற்றவருக்குப் பிள்ளைகள் குழந்தைகள் தான். மண்ணில் விளையாடி புழுதியுடன் இருக்கும் மகளைப் பார்த்து அரற்றுகிறார்.
 ஐயோ , புழுதியை உடம்பு முழுக்கப் பூசி , பேச்சும் மலங்க மலங்க கால் எது தலை எது என அறியாமல்  குழம்பிப்போய் , சிவந்த நூலில் செய்யப்பட்ட சிற்றாடையை (மார்பினில் கட்டும் சிற்றாடையைக் கூடச் செம்மையாக  உடுக்கவும் மாட்டாதவளாக , கையில் மண்ணால் செய்யப்பட்ட   பானையைக்  கொண்டு விளையாடிக்கொண்டு  முறத்தையும் கையில் வைத்துக்கொண்டு இருக்கிறாள்  இவள்.. முறம் பாம்பணையானை நினைவூட்டியதோ என்னவோ ? ஏதோ அவனையையே கையில் பிடித்தது போல வருகிறாளே இவள் இது சரியாக வருமோ ?
இன்னமும் மண்ணில் விளையாடுகிறாள். ஐயோ  அந்தப் புழுதி முழுக்க உடம்புல இருக்கு. ஒழுங்கா ஓர் உடை கூட உடுக்க மாட்டாள்..  குதலைகால் புரியல மயங்கிக் கிடக்கிறா .. பானையையும் சுளகையும் கையில் வைத்துக்கொண்டு திரிகிறாள்.  இவள் போய் அந்த பாம்பணையானைக் கைப்பிடிக்கும்  ஆசையோடு இருக்கின்றாளே இது சரியாகுமோ ?


Friday 10 February 2017

143.பருந்தாட் களிற்றுக் கருள்செய்த

143.பருந்தாட் களிற்றுக் கருள்செய்த
பாடல் :143
பருந்தாட் களிற்றுக் கருள்செய்த
பரமன் றன்னை பாரின்மேல்
விருந்தா வனத்தே கண்டமை
விட்டு சித்தன் கோதைசொல்
மருந்தா மென்று தம்மனத்தே
வைத்துக் கொண்டு வாழ்வார்கள்
பெருந்தா ளுடைய பிரானடிக்கீழ்ப்
பிரியா தென்று மிருப்பாரே
விளக்கம் :
பருந்தாட்  களிற்றுக்கு அருள் செய்த - பருத்த கால்களை உடைய யானைக்கு அருள் செய்த
பரமன் தன்னை பாரின் மேல் - பரமன் தன்னை உலகினில்
விருந்தாவனத்தே கண்டமை - விருந்தாவனத்தே கண்டு அமைந்தது பற்றி
விட்டு சித்தன் கோதை சொல் மருந்தாம் என்று தம்மனத்தே - விட்டு சித்தன் எனும் பெரியாழ்வார் மகள் கோதை சொல் மருந்து  என்றே கொண்டு தம் மனத்தே
வைத்துக் கொண்டு வாழ்வார்கள் - வைத்துக் கொண்டு வாழ்பவர்கள்
பெரும் தாள் உடைய பிரானடிக் கீழ்ப் - பெரிய திருவடிகள் கொண்ட பிரான் அடிக் கீழ்ப்
பிரியாது என்றும் இருப்பாரே - பிரியாது என்றும் இருப்பாரே

பருத்த கால்களை உடைய யானைக்கு அருள் செய்த ( முதலையின் பிடியில் மாட்டிக்கொண்ட யானை , வெகு நேரம் போராடி இறுதி நேரத்தில் திருமாலை அழைக்கின்றது.. உடனே  யானைக்கு அருள புவி வருகிறார் திருமால்..அதனைத் துன்பத்தில் இருந்து விடுவித்து   காப்பாற்றி அருள்கிறார்..வைகுந்தம் புகுன்றது திருமாலின் அருள் பெற்ற யானை.. உலகத் துன்பங்களில் எல்லாம் உழன்றாலும் அவன் திருவடிகளை அடைக்கலம் புகும் பொழுது அவன் வந்து காத்து அருள்வான் என்ற நம்பிக்கையை மகள் கோதைக்குக் கொடுத்தவர் பெரியாழ்வார்..
எப்படி..
துப்புடையாரை அடைவதெல்லாம்
சோர்விடத்து துணை ஆவர் என்றே!
ஒப்பிலேன் ஆகிலும் நின்னடைந்தேன்!
ஆனைக்கு நீ அருள் செய்தமையால்!
எய்ப்பு என்னை வந்து நலியும்போது
அங்கு ஏதும் நான் உன்னை நினைக்கமாட்டேன்!
அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன்
அரங்கத்து அரவணைப் பள்ளியானே! -  பெரியாழ்வார் திருமொழி 4,10,1

பெரியாழ்வார் 

அடியவர்களைக் காப்பதில் வல்லவர் ஆகிய  உம்மை அடைக்கலம் புகுவது நான் சோர்வடையும் காலத்தில் துணை ஆவாய் என்றே..நான் ஒன்றும் பெரிய தகுதி உடையவன் அல்லன்.ஆனாலும் நின் திருப்பாதம் அடைந்தேன்.அதற்குக் காரணம் ஆனைக்கு நீ அருள் செய்தமையால்.
மரண காலத்தில் இளைப்பு  வந்து இழுத்துக் கொண்டு  கிடக்கும்போது உன்னை நினைக்க மாட்டேன்..(நினைக்க முடியாத அளவுக்கு சுய நினைவு அற்றுப் போய் இருக்கும் சித்தம் கலங்கி இருக்கும் இல்லையா..) ஆகவே அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கனே  என்கிறார் பெரியாழ்வார்..எத்துணை அன்பு.. இப்படித் தன் தந்தை சொல்லித் தந்தது துன்பம் நேர்கையில் ஆனைக்கு அருளாளனை நினைத்துக் கொள் அம்மா..


Image result for vishnu saves elephant

இறுதிவரை துன்பத்தில் உழன்ற கோதை , அதன் விளிம்பில் நின்று இந்தக் கதையை நினைவு கூர்கிறாள்..எப்படி யானையைத் துன்பத்தில் இருந்து விடுவித்தானோ அந்தத் திருமால் அதைப் போலவே தன்னையும் விடுவிப்பான் என்ற நம்பிக்கையையும் வைக்கிறாள் .
அந்தப் பரமன் தன்னை விருந்தாவனத்தில் கண்டீர்களா கண்டீர்களா என்று கேட்டு கண்டோம் என  அடியார்கள் சொன்ன பதிலில்  அங்கேயே அமைந்து போனாள்.. விஷ்ணு சித்தன் எனும் பெரியாழ்வார் மகள் கோதை (வில்லிபுத்தூர் கோன் என்ற சொல்லை இங்கே பயன்படுத்தவில்லை..ஏனெனில் அவள் மனம் வில்லிபுத்தூரில் தற்பொழுது இல்லை.விருந்தாவனத்தில் தேடி அலைந்து  ,  அங்கேயே நிலைத்தும்  விட்டது)  சொன்ன சொல்லை மருந்தாக தம் மனத்தே கொண்டு..பிறவிப் பிணியில் இருந்த நீங்க உதவும் மருந்தாகக் கொண்டு வாழ்பவர்கள் பெருமானடிக் கீழ்ப் பிரியாது இருப்பார்கள்..பெருமான் திருவடிகளை விட பாதுகாப்பு இவ்வுலகத்தில் வேறு கிடையாது. அங்கே  துன்பம் நெருங்காமல் நலத்துடன் இருப்பார்கள்.


அன்று அவள் காதல் கைகூடாமல் இருந்திருக்கலாம். ஆனால் எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உனக்கே நான் உறவாக வேண்டும் உனக்கே ஆட்கொள்ள வேண்டும் என்று அவள் வைத்த வேண்டுகோளை காலம் நிறைவேற்றி வைத்திருக்கிறது.எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவளுக்கு 10 நூற்றாண்டில் இராமானுசர் என்ற "அண்ணன்"கிடைத்தார் அவளது வேண்டுதலை நிறைவேற்றியதன் மூலம். அவளின் மாலையை முதன்முதலாக அரங்கனுக்கு எடுத்துச் சென்றார். இன்றும் திருப்பதிக்கு ஆண்டாள் மாலை தான் செல்கின்றது . இந்த இருபதாம் நூற்றாண்டிலும் அவள் புகழ் ஓங்கி நிற்கின்றது. எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பெருமாளின் பெயரை அவளன்றி ஒலிக்க முடியாது..இங்கு திருமால் இருக்கும் வரை நம் குலத் திருமகளும் நீடித்து நிலைத்து நிற்பாள்


நாச்சியார் திருமொழி பதினான்காம் பத்து இனிதே நிறைவுற்றது..ஆண்டாள் திருவடிகளே போற்றி..!!!

Wednesday 8 February 2017

142.நாட்டைப் படையென்று அயன்முதலாத்

142.நாட்டைப் படையென்று அயன்முதலாத்
பாடல் :142
நாட்டைப் படையென்று அயன்முதலாத்
தந்த நளிர்மா மலருந்தி
வீட்டைப் பண்ணி விளையாடும்
விமலன் றன்னைக் கண்டீரே
காட்டை நாடித் தேனுகனும்
களிறும் புள்ளு முடன்மடிய
வேட்டை யாடி வருவானை
விருந்தா வனத்தே கண்டோமே

விளக்கம் :
நாட்டைப் படை என்று அயன் முதலாத் தந்த - நாட்டைப் படைக்கச் சொல்லி பிரம்மனை
நளிர் மாமலர் உந்தி - குளிர்ந்த தாமரையில் தொப்புள் கொடியிலே  உந்தி படைத்து அந்த பிரம்மன் மூலமாக பல் உயிர்களைப் பிறப்பித்து
வீட்டைப் பண்ணி விளையாடும் - பிறப்பு முதல்   வீடு பேறு  வரை ஒருவரின்
வாழ்வில் விளையாடும்
விமலன் தன்னைக் கண்டீரே - விமலன் தன்னைக் கண்டீர்களா ?
காட்டை நாடித் தேனுகனும் - காட்டிலே சென்று தேனுகன் என்னும் அசுரனையும்
களிறும் புள்ளும் உடன் மடிய - குவலயபீடம் என்னும் யானையையும் பகாசுரன் என்ற பறவை வடிவ அசுரனையும்
வேட்டையாடி வருவானை - வேட்டையாடி வருவானை
விருந்தாவனத்தே கண்டோமே - விருந்தாவனத்தே கண்டோமே

உந்தி -பிறப்பு
வீடு - வீடு பேறு (முக்தி /மோட்சம் )
கேள்வி : 

குளிர்ந்த தாமரையில் இருந்து வந்த  தனது   தொப்புள் கொடியிலே  பிரம்மனைப் படைத்து , அவனிடம் நாட்டைப்படைக்கச் சொல்லி , அந்த பிரம்மன் பல உயிர்களைப்  படைத்தார். இவ்வாறு  ஓர் உயிரின் பிறப்புக்கும் காரணமாகி  இறந்து வைகுந்தம் அடையும் வீடு பேறு  வரை எல்லாவற்றுக்கும் காரணமாகி நம் வாழ்வோடு விளையாடும் விமலன் தன்னைக் கண்டீர்களா ?

Image result for sriranganathar


பதில் :  
காட்டிற்கே சென்று , தேனுகன் எனும் கழுதை வடிவ அரக்கனையும் (பலதேவன் கொல்ல ), குவலய பீடம் எனும் யானையையும் , பறவை வடிவம் கொண்ட பகாசுரனின் வாய் பிளந்து கொன்று ஒழிய வேட்டையாடி வருவானை விருந்தாவனத்தே கண்டோமே

இது நாச்சியார் திருமொழி இறுதிப் பாடலுக்கு முந்தைய பாடல்.. இத்தனை பாடல்களில்  கண்ணனுக்காக உருகி வேதனை கொண்டவள் அதற்குக் காரணமும் கண்ணன் என்றே பழி சொல்கிறாள்..
எப்படி..?
உயிர்களைப் படைக்கும் பிரம்மனைப் படைத்ததே அந்தப் பெருமான் தான். அவருடைய தொப்புள் கோடியில் இருந்து வந்தவர் பிரம்மா..(அயன்முதலா ) அவர் பல உயிர்களைப் படைத்தார்..உயிர்களின் முடிவு வைகுந்தம் அடைவது..வீடு பேறு ..இப்படி ஓர் மனிதனின் ஆதி முதல் இறுதி  வரை எல்லாவற்றிலும் தொடர்புடையவன்  இவள் வாழ்க்கையிலும் உட்புகுந்து  காரணமும் ஆகி செயலும் ஆகியவன் அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்ற பழமொழிக்கு ஏற்ப தனது இந்த நிலைக்குக் காரணமே இவனது விளையாட்டு தான் என்கிறாள்..அவனுக்குத் தெரியாமல் எதுவும் நடக்கவில்லை. அவன் அறிந்தே தான் இங்கு அனைத்தும்..யாவுமானவன் யாதொன்றும் அறியாதவன் அல்லன். என் பிறப்பும் அவனுக்கானது என் முடிவும் அவனுள் அடங்குவதே . அவனே முதலும் அவனே முடிவும்.   வாழ்வும் அவனே வைகுந்தமும் அவனே..
கண்ணனால்  நான் கண்ணனுக்காகவே நான் என்பதை மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறாள் .இதில் ஒளிந்திருக்கும் உறுதியும் இவனைக் காதலித்த காரணத்தினால் பட்ட வேதனையின் வெளிப்பாடும் அறியலாம்..விளையாடுகிறான்  விமலன் என்று  சொல்லிவிட்டாளே

வாழ்வின் இறுதி நிலையில் நின்று அவனைக் காணாமல் தேடி உறைந்து நிற்கும் அவளின் மனச் சுமையை  அறிய முடிகிறதா.?.:(

Sunday 5 February 2017

141.வெளிய சங்கொன் றுடையானைப்

141.வெளிய சங்கொன் றுடையானைப்
பாடல் : 141
வெளிய சங்கொன் றுடையானைப்
பீதக வாடை யுடையானை
அளிநன் குடைய திருமாலை
ஆழி யானைக் கண்டீரே
களிவண் டெங்கும் கலந்தாற்போல்
கழம்பூங் குழல்கள் தடந்தோள்மேல்
மிளிர நின்று விளையாட
விருந்தா வனத்தே கண்டோமே

விளக்கம் : 
வெளிய சங்கு ஒன்று உடையானைப் - வெண்ணிற சங்கு ஒன்று உடையவனை
பீதக ஆடை உடையானை - மஞ்சள் ஆடை உடுத்தியவனை
அளி நன்கு உடைய திருமாலை - இரக்கம் /அன்பு நன்கு கொண்ட திருமாலை
ஆழி யானைக் கண்டீரே ? - சக்கரம் உடையவனைக் கண்டீரே ?
களிவண்டு எங்கும் கலந்தாற்போல் - மகிழ்வுற்று தேனுண்டு திரியும் வண்டுகள் எங்கும் கலந்தது போல
கமழ் பூங்குழல்கள் தடந்தோள் மேல் மிளிர - மணம் கமழும்  பூங்குழல்கள் பெரிய தோள் மேல் மிளிர
நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே  - அவன்  நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே
அளி -  இரக்கம் /அன்பு
பீதகம் - மஞ்சள் ஆடை
கேள்வி :
வெண் சங்கு உடையவனை, மஞ்சள் ஆடை உடுத்தியவனை ,இரக்கமும் அன்பும் நன்றாகவே கொண்ட திருமாலை,  சக்கரம் உடையவனைக் கண்டீர்களா ? (என்னடா..போன பாடல் வரை திட்டிட்டு இருந்தவள் இந்தப் பாடலில் இரக்கம் நன்கு கொண்ட திருமால் என்கிறாளே மனம் திருந்திவிட்டாளா என ஐயம் வேண்டாம்.. எந்த ஒரு சொல்லையும் சொல்கின்ற விதம் என ஒன்று உண்டில்லையா? அளி உடையவன் என்று சொல்லல அளி நன்கு உடையவன் என்கிறாள்..சற்றே எள்ளலாக..வஞ்சப்புகழ்ச்சி அணி என்றே உண்டு தமிழில்..ஒருவரைப் புகழ்வது போல இகழ்வது..இகழ்வது போலப் புகழ்வது..இவள் புகழ்வது போல இகழ்கிறாள்..திருமால் இரக்கமுடையவன் என்று சொன்னால் ஆமாமா நல்ல இரக்கமுடையவன் என்று சற்று ஏளனப் புன்னகையோடு சொன்னால் எப்படி இருக்குமோ அப்படிக் கற்பனை செய்துகொள்ளுங்கள் ..அடையாளம் சொல்கிறாள்.. வெண்சங்கு வச்சிருப்பான்..சக்கரம் வச்சிருப்பான்..மஞ்சள் நிறத்தில் ஆடை உடுத்தி இருப்பான்..அன்பு தான..நல்லா உடையவன் ம்க்கும்.. அவனைப் பார்த்தீங்களா..? )

Image result for vishnu images

பதில் : 
பூக்களில் தேனுண்டு மகிழ்ந்து இருக்கும் வண்டு எங்கும் கலந்தது போல ,மணம் கமழும் பூங்குழல்கள் (முடி ) அவனது பெரிய அகன்ற தோளின் மேல் மிளிர , அவன் நின்று விளையாடக் கண்டோமே
மணம் கமழ்கிறதாம் அவனது குழல்..அந்தக் குழலானது அவனது அகன்ற தோளில் விரும்பிப் படர்ந்திருக்கிறது வண்டுகள் பூக்களில் எ வ்வளவு மகிழ்ந்து தேன் உண்ணுமோ அதைப் போல .ஏனெனில் அந்தத் தோள் பரந்தாமனுடையது அல்லவா..அதற்கு மயங்காதோர் உண்டோ.. அதனால் அந்தக் குழலானது மகிழ்ந்து விளையாடுதாம் பரமனின் தோளில் ..

சற்றே பொறாமை தெரியுதுல்ல :) அந்தப் பேறு தனக்குக் கிடைக்காத ஆற்றாமையும்





Friday 3 February 2017

140.பொருத்த முடைய நம்பியைப்

140.பொருத்த முடைய நம்பியைப்

பாடல் : 140
பொருத்த முடைய நம்பியைப்
புறம்போ லுள்ளும் கரியானை
கருத்தைப் பிழைத்து நின்றஅக்
கருமா முகிலைக் கண்டீரே
அருத்தித் தாரா கணங்களால்
ஆரப் பெருகு வானம்போல்
விருத்தம் பெரிதாய் வருவானை
விருந்தா வனத்தே கண்டோமே

விளக்கம் :

பொருத்தம் உடைய நம்பியைப்  புறம் போல் உள்ளும் கரியானை - உள்ளும் புறமும் ஒன்றாய்ப் பொருந்திய நம்பியை,  உடல் போலவே உள்ளமும் கருப்பானவனை
கருத்தைப் பிழைத்து நின்ற அக் கருமா முகிலைக் கண்டீரே? - தான் சொன்ன வாக்கை நிறைவேற்றாத அந்தக் கரிய நிற முகில் நிறத்தவனைக் கண்டீர்களா ?
அருத்தித் தாரா கணங்களால் - அருந்ததி முதலான  விண்மீன் கூட்டங்களால்
ஆரப் பெருகு வானம் போல்  - நிறைந்து வழியும் வானம் போல்
விருத்தம் பெரிதாய் வருவானை - கூட்டம்  பெரிதாக வருவானை
விருந்தாவனத்தே கண்டோமே - விருந்தாவனத்தே கண்டோமே

கேள்வி :  பொருத்தம் இலி என்று சொன்ன வாயாலேயே அடுத்த பாட்டில் பொருத்தம் உடைய நம்பி என்கிறாள் எனில் தன் கருத்தை மாற்றிக் கொண்டாளா என்ன ? ;) அல்ல.. நன்கு கவனியுங்கள்..சென்ற பாட்டில் அவள் சொன்னது இரக்கமற்ற அவன் கண்களுக்கு அழகுப் புருவங்கள் பொருத்தமற்றது என ..கண்களுக்கு அழகு இரக்கம் கருணை..அது அற்ற கண்களுக்கு அழகிய புருவம் எப்படிப் பொருந்தும் ?

சரி இந்தப் பாட்டில் ஏன் பொருத்தம் உடையவன் என்கிறாள்..ஆமாம் கருநிற வண்ணன் அகமும் புறமும் ஒன்றே போல இருக்கின்றான்..உடல் தான் கருப்பு என்றால் அவன் உள்ளமும் கருப்பு..இரக்கமற்றது..இவளைப் பற்றிச் சிந்திக்க மறுக்கிறது. நல்ல மனசு இல்ல..அந்த மனசுல இவள் இல்லை. இருந்திருந்தால் இப்படித் தவிக்க விட மாட்டான் . அதனால்தான் உள்ளும் புறமும் ஒன்றானவன் எனச் சாடுகிறாள். என்றேனும் இவன் வருவான் நமக்கு விடிவுகாலம் பிறக்கும் என்றெண்ணி இருந்தவள்..தன் காதலில் கற்பனையில் வந்து இவன் காப்பாற்றுவதாகச் சொல்லி இருந்த வாக்கைக் காப்பாற்றவில்லை. கற்பனையில் இவள் கண்டால் அதுக்கு அவன் என்ன பண்ண முடியும் எனக் கேட்காதீர்..
அடியவர் துயர் நீக்க ஓடோடி வருவான் எனக் காலங்காலமாக சொல்லப்பட்டதே..அதுவாவது நிறைவேற்றி இருக்க வேண்டாமா ?

 சொன்ன சொல் தவறியவன் அந்தக் கருவாப் பய கண்ணனைக் கண்டீர்களா ?
Image result for black krishna

பாருங்கள் இந்தப் பத்து முழுக்க வேறெந்தப் பத்திலும் இல்லாத அளவுக்கு அவனைத் திட்டுகிறாள்..வேதனையில் விளிம்பில் இருக்கின்றாள்..காப்பாற்றக் கை கொடுக்கல..கண்ணன் வரல..வேதனையில் மூழ்கிக் கொண்டு இருப்பவள் வேறென்ன செய்வாள்..? நன்கு திட்டுகிறாள்..அடுத்த வரியிலேயே புகழவும் செய்கிறாள்..இப்பேதைப் பெண்ணை என்ன செய்தால் தகும் ?  காதல் செய்தால் தகும்..
அதைத் தானே அவள் கேட்கின்றாள்.. :)
பதில் : 
அருந்ததி முதலான விண்மீன் கூட்டங்கள் நிறைந்து வழியும் வானம் போல , பெருங்கூட்டத்தில் தனியாகத் தெரிகின்றான்..தனது நண்பர்களோடு அவன் வருகின்றான்..அவனைப் பார்த்தோமே விருந்தாவனத்தில்.. அருந்ததி எப்படித் தனித்துத் தெரியுமோ அது போல அவ்வளவு பெருங் கூட்டத்திலும்  அவன் தனியாகத் தெரிந்தான் ஆகா..அவன் அழகே அழகு.. !

Wednesday 1 February 2017

139.தரும மறியாக் குறும்பனைத்

139.தரும மறியாக் குறும்பனைத்
பாடல் : 139
தரும மறியாக் குறும்பனைத்
தங்கைச் சார்ங்க மதுவேபோல்
புருவ வட்ட மழகிய பொருத்த
மிலியைக் கண்டீரே உருவு
கரிதாய் முகம்செய்தாய்
உதயப் பருப்ப தத்தின்மேல்
விரியும் கதிரே போல்வானை
விருந்தா வனத்தே கண்டோமே
விளக்கம் :
தருமம் அறியாக் குறும்பனைத் - நியாயம் என்பது அறியாத குறும்பனைத்
தன் கைச் சார்ங்கம் அதுவே போல் -தனது கையில் உள்ள சாரங்கம் எனும் வில்லைப் போல்
புருவ வட்டம் அழகிய பொருத்தம் இலியைக் கண்டீரே ? - புருவ வட்டம் கொண்ட அழகிய பொருத்தம் இல்லாதவனைக் கண்டீர்களா ?
உருவு கரிதாய் முகம் செய்தாய் - உருவம் கருமையாக முகம் செம்மையாய்
உதயப் பருப் பதத்தின் -மலையின் மீது
மேல் விரியும் கதிரே போல்வானை-   விரிகின்ற கதிரைப் போன்ற முகம் கொண்டவனை
விருந்தாவனத்தே கண்டோமே - விருந்தாவனத்தே கண்டோமே
 பருப்பதம் - பர்வதம் /மலை
சார்ங்கம் -வில்

கேள்வி : 
தருமம் அறியா குறும்பன்..நியாயம் என்பதே இவனிடம் கிடையாது..இரக்கமற்றவன் பயங்கரக் குறும்பன்..ஏன் இவனிடம் நியாயம் இல்லை என்கிறாள்..பின்னே ? ஒரு பெண் இவ்வளவு கதறுகிறாள் அவனுக்காக ..ஆனால் அவன் வரவே இல்லையே..அவள் காதலை ஏற்றுக் கொள்ளாமல் எங்கே சென்றான் அவன் ? நியாயமாக இது போன்ற பெண் கிடைக்க அவனல்லவா கொடுத்து வைத்திருக்க வேண்டும்..எவ்வளவு காதல் எவ்வளவு ஆசை..இப்படி வெளிப்படையாக ஆசையைச் சொல்லி முழு மொத்தமும் அணு அணுவாகக் காதலிப்பவள் கிடைக்க எவ்வளவு புண்ணியம் செய்திருக்க வேண்டும்..ஆனால் அவன் வரவே இல்லையே சேரவே இல்லையே..இவளைப் புரிந்து கொள்ளாதவன் இரக்கமற்றவன் தானே..நியாயம் அற்றவன் என்று அவள் சொல்வதில் என்ன தவறு ?
குறும்புத் தனங்களால் தானே அவள் மனத்தைக் கொள்ளை கொண்டான்.

தனது கையில் உள்ள வில்லைப் போன்ற புருவம் உடையவன்.  அழகிய புருவம் தான். ஆனால் அவன் கண்களுக்கு அவை பொருத்தம் இல்லை..
இல்லையா? ஏனாம் ? அந்தக் கண்கள் அவளைக் காணாமல் திரிகின்றது..அவளை இரக்கமற்றுக் கொல்கின்றது.. பிறகு எப்படி அந்தப் புருவம் இந்தக் கண்களுக்குப் பொருத்தமானதாக இருக்க முடியும்..இரக்கமற்ற கண்கள் அழகுமில்லை அவை அந்த அழகான புருவத்துக்குப் பொருத்தமும் இல்லை. அதுதான் பொருத்தம் இலி என்கிறாள்.
நியாயம் அறியாதவன் ,வில்லைப் போன்ற அழகிய  பொருத்தமற்ற புருவங்களை உடையவனைக் கண்டீர்களா ?

பதில் : ஆமாம்..கருத்த உருவம் ஆனால் முகம் சிவந்தது எப்படிச் சிவந்து இருந்தது தெரியுமா ? மலைகளின் ஊடே பெரிதாக விரியும் கதிரவனின் கதிர்கள் போன்று இருந்தது..அவனை விருந்தாவனத்தில் கண்டோமே .





Tuesday 31 January 2017

138.மாத வன்என் மணியினை

138.மாத வன்என் மணியினை
பாடல் : 138
மாத வன்என் மணியினை
வலையில் பிழைத்த பன்றிபோல்
ஏது மொன்றும் கொளத்தாரா
ஈசன் றன்னைக் கண்டீரே
பீதக வாடை யுடைதாழப்
பெருங்கார் மேகக் கன்றேபோல்
வீதி யார வருவானை
விருந்தா வனத்தே கண்டோமே

விளக்கம் :
மாதவன் என் மணியினை - மாதவன் என் மணியினை
வலையில் பிழைத்த பன்றி போல் - வலையில் இருந்து தப்பிப் பிழைத்த பன்றி போல்
ஏதும் ஒன்றும் கொளத் தாரா - ஏதும் ஒன்றும் நாம்  கொள்ள , கைக்குப் பிடி தாராமல் செல்லும்
ஈசன் தன்னைக் கண்டீரே ? - இறைவனைக் கண்டீர்களா ?
பீதக வாடை உடை தாழப் -தனது மஞ்சள்  பட்டாடை தாழப்
பெரும் கார் மேகக் கன்றே போல் - பெரும் கார் மேகக் கன்று போல
வீதியார வருவானை - வீதியில் நிறைந்து வருவானை
விருந்தா வனத்தே கண்டோமே - விருந்தாவனத்தே கண்டோமே

கேள்வி : 
மாதவன் என் மணியினை (முதலில் கொஞ்சிவிட்டாள்  என் மணி என்று )
வலையில் இருந்து தப்பிப் பிழைத்த பன்றி போல் (ஆகா எப்பேர்ப்பட்ட இறைவன் அவனைப் போய் பன்றி என்கிறாள் இந்தப் பெண். எதற்காக பன்றியுடன் ஒப்பிடுகிறாள் ?  பன்றி என்ன செய்யுமாம்..என்னதான் ஆசை ஆசையாய்  வளர்த்தாலும் சாக்கடையில் சென்றுதான் புரளும்..
 பன்றி எப்படி வளர்ப்பார்கள் அது என்ன செய்யும் என்று   அறிந்து வைத்திருக்கின்றாள் . வலை வைத்தே பிடிப்பார்கள் பன்றியை.. ஆனாலும் அதிலும் தப்பித்து சாக்கடைக்கு ஓடும் அதைப் போலவே இவளின் காதல் வலையில் வீழாமல் அதன் நன்மை புரியாமல் தப்பித்து ஓடுகின்றான் கண்ணன்..
Image result for black krishna images


என்னடா..இவள் எப்படி சாக்கடையில் புரளும்  பன்றியோடு ஒப்பிடப் போச்சு..என்று சண்டைக்கு வராதீர்கள்..  . அவளுக்கு எல்லா உரிமையும் இருக்கு.. பன்றி வளர்க்கும் மனிதர்களை ஒதுக்கி வைக்கும் முன்னர் நாம் வணங்கும் இறைவனும் அந்தப் பன்றி அவதாரம் எடுத்தவர் தான் அந்தக் கண்ணன் என்பதை மனத்தில் வையுங்கள்.. பன்றி வளர்ப்பவர்களுக்கு அது செல்லப்பிராணி தானே..அதுவும் ஒரு வீட்டு விலங்கு தானே ..
பெரியாழ்வார் வீட்டில் வளர்ந்தவளுக்கு பன்றி வளர்ப்பு தெரிந்திருக்கிறது எருமை பற்றித் தெரிந்திருக்கிறது ( எருமைச் சிறு வீடு காண் - திருப்பாவை -8)
ஆமா ஆயர்பாடிச் சிறுமிகள் யாம் என்றும் ஒத்துக் கொள்கிறாள்..அதாவது மாடு மேய்க்கிறவள் தாம் உன்னைப் போலவே என்கிறாள் - திருப்பாவை 28)

சரி பாடலுக்குள் வருவோம்..
இப்படி கோதையின் காதலில் இருந்து தப்பிச் சென்றவன் ,கைக்கு எட்ட மறுக்கிறான் (பிடி கொடுக்க மறுக்கிறான் )  விடாமல் தப்பிச் சென்று கொண்டே இருக்கும் என் இறைவனை நீங்கள் கண்டீர்களா ?
Image result for black krishna images


பதில் : ஆம் !மஞ்சள் பட்டாடை உடை தாழ , பெரும் கருத்த மேகக் கன்று போல் (உருவம் கருமை அதை மேகத்தோடு ஒப்பிடுகிறாள் ) வீதியார...(நாம் சொல்வோமே..மனதார..மனம் முழுக்க நிறைஞ்சு துளி கூட வேறு நினையாமல் ஒப்புக்கொள்வது ) அது போல வீதியில் அவன் வருவது கண் கொள்ளாக் காட்சி வீதியார வந்தான் அந்த விருந்தாவனத்தில்..அங்கே கண்டோம்

Sunday 29 January 2017

137.கார்த்தண் கமலக் கண்ணென்னும்

136.கார்த்தண் கமலக் கண்ணென்னும்

பாடல் : 136
கார்த்தண் கமலக் கண்ணென்னும்
நெடுங்கயி றுபடுத்தி என்னை
ஈர்த்துக் கொண்டு விளையாடும்
ஈசன் றன்னைக் கண்டீரே
போர்த்த முத்தின் குப்பாயப்
புகர்மால் யானைக் கன்றேபோல்
வேர்த்து நின்று விளையாட
விருந்தா வனத்தே கண்டோமே

விளக்கம் : 
கார்த் தண் கமலக் கண்  என்னும் - கருத்த மேகத்திலே குளிர்ந்த தாமரை மலர் போன்ற கண்ணினால்
நெடுங் கயிறு படுத்தி என்னை - நீளமான கயிறைக் கொண்டு என்னைப் படுத்தி
ஈர்த்துக் கொண்டு விளையாடும் - என்னைக் கவர்ந்து கொண்டு என்னோடு விளையாடும்
ஈசன் தன்னைக் கண்டீரே - இறைவன் தன்னைப் பார்த்தீர்களா ?
போர்த்த முத்தின் குப்பாயப் - போர்வை போலப் போர்த்திய முத்துக்களினால் ஆன சட்டை கொண்டு
புகர்மால் யானைக் கன்றே போல் - ஒளிர்கின்ற கரும் யானைக் கன்றினைப் போல்
வேர்த்து நின்று விளையாட - வேர்க்க விறுவிறுக்க நின்று விளையாட
விருந்தாவனத்தே கண்டோமே - விருந்தாவனத்தே கண்டோமே
குப்பாயம் - மேற்சட்டை
புகர்மால் -  புள்ளி / ஒளிரும் கருமை

கேள்வி :   கருத்த மேகத்திலே குளிர்ந்த தாமரைக் கண்கள் போல அவனது கருத்த முகத்திலே உள்ள குளிர்ந்த தாமரை போன்ற கண்கள் நெடுங் கயிறு போல என்னை ஈர்த்து என்னைப் படுத்தி எடுக்கின்றது..என்னைக் கட்டிப் போடுகின்றது..அதற்குக் கட்டுண்டே கிடக்கின்றேன். இப்படித் தன் அழகிய தாமரைக் கண்ணினால் கட்டி என்னை ஈர்த்து விளையாடும் இறைவன் எனை ஆள்பவனைக் கண்டீர்களா ?

பதில் : முத்துக்களாலேயே போர்வை போர்த்தியது போன்ற ஓர் மேற்சட்டை அந்தக் கருத்த மேனியும் ஒளிர்கின்றது .(வேர்க்க விறுவிறுக்க அவன் விளையாடியதில் விளைந்த வியர்வைத் துளிகள் பார்க்க  முத்துக்கள் போல பளபளவென ஒளிர்கின்றதாம் அவன் கருத்த மேனியில் அவையே சட்டை போன்று இருக்கின்றதாம் அந்தக் கண்ணனுக்கு ) அந்த வேர்வை முத்துக்கள்
யானை போன்ற உடம்பில் புள்ளி புள்ளியாக இருந்ததைக் குறிப்பிடுவதாகவும் கொள்ளலாம்.

Related image

யானைக் கன்று ..ஆமாம் யானையை விடக் குட்டி யானை கொள்ளை அழகு..அதன் குறும்புகளையும் கண் கொட்டாமல் ரசிக்கலாம்..அதனால்தான் இங்கே கண்ணனுக்கு குட்டி யானை ஒப்பாக வருகின்றது..ஏனெனில் அவன் குறும்பன் அல்லவா..வேர்க்க விறுவிறுக்க அவன் ஒரு யானைக் கன்றினைப் போல அவன் விளையாட அந்த முத்துக்களே ஒரு சட்டை போல் அவன் மேனியில் ஒளிர (கற்பனை செய்யவே கண் கொள்ளாக் காட்சி ) அவன் விருந்தாவனத்தே விளையாடக் கண்டோமே )
கண்ணனை எந்த அளவுக்கு ரசித்து ருசிக்கிறாள் பாருங்கள்..அணு அணுவாக உச்சி முதல் பாதம் வரை முகர்கின்றாள் ..

காதலும் காமமும் ஒருங்கே இணையப் பெற்றவள் :)

Friday 27 January 2017

136.மாலாய்ப் பிறந்த நம்பியை

136.மாலாய்ப் பிறந்த நம்பியை
பாடல் : 136

மாலாய்ப் பிறந்த நம்பியை
மாலே செய்யும் மணாளனை
ஏலாப் பொய்க ளுரைப்பானை
இங்கே போதக் கண்டீரே
மேலால் பரந்த வெயில்காப்பான்
வினதை சிறுவன் சிறகென்னும்
மேலாப் பின்கீழ் வருவானை
விருந்தா வனத்தே கண்டோமே

விளக்கம் :
மாலாய்ப் பிறந்த நம்பியை - கருமையாய்ப் பிறந்த நம்பியை
மாலே செய்யும் மணாளனை - மயக்கம் செய்யும் என் மணளானை
ஏலாப் பொய்கள் உரைப்பானை - ஏற்றுக் கொள்ள முடியாத பொய்கள் பல உரைப்பவனை
இங்கே போதக் கண்டீரே - இங்கே வரப் பார்த்தீர்களா ?
மேலால் பரந்த வெயில் காப்பான் - மேலே விரவி இருக்கும் வெயில் உடலில் படாமல் காப்பவன்
வினதை சிறுவன் - வினதை என்ற பெண்ணின் மகனான கருடனின்
சிறகு என்னும் மேலாப்பின் கீழ் வருவானை - மேலாக விரித்த சிறகின் அடியின் கீழ் வருவானை
விருந்தானவத்தே கண்டோமே - விருந்தாவனத்தே கண்டோமே
ஏல் - ஏற்றுக் கொள்ளல்..ஏலா - ஏற்றுக்கொள்ள முடியாத
மால் - முல்லை நிலக் கடவுள் மால் / கருமை நிறம்  / மயக்கம்
மால் -மை (மை இருட்டு என்பார்களே..கருமை )
புராணப்படி  வினதை - கருடனின் தாய் ,காசிபர்- கருடனின் தந்தை ..
வினதை சிறுவன் - கருடன்

மாலாய்ப் பிறந்த நம்பி,கருப்பாய்ப் பிறந்த நம்பியை ,என்னை மயக்கமுறச் செய்யும் மணாளனை ,(மணாளன் -மாப்பிள்ளைப் பையன் bridegroom )
ஏற்றுக்கொள்ள முடியாத பொய்கள் உரைப்பவனை (அது ஏன் ஏற்றுக் கொள்ள முடியாத பொய்கள்.. இவ்வளவு தவி தவிக்கிறாள் ஆனால் அவன் அதற்கு வராமல் இருக்க ஒரு உண்மைக் காரணமாவது சொல்லலாம் தானே..இந்த அன்பைப் புரியாமல் சட்டென்று வந்து அணைக்காமல் வராமல் சமாளிப்பு செய்பவன் சொல்லும் உரைகள் எல்லாமே பொய்யே ..எதுவும் ஏற்றுக்கொள்ளத் தக்கது இல்லை ) இங்கே வரப் பார்த்தீர்களா ?

Image result for krishna with garuda

வெயில் மேலாகப் பரந்து கிடக்கின்றது..அந்த வெயில் கண்ணன் திருமேனியில் படாமல் வினதை என்ற பெண்ணின் மகன் கருடன் காக்கின்றான்..எப்படி தனது விரிந்த சிறகின் கீழ் வெயில் படாமல் அணைத்துக் கொண்டு வந்து காக்கின்றான்..அப்படி கருடனின் அணைப்பில் அந்தக் கண்ணன் விருந்தாவனத்தில் வரக் கண்டோமே..
இது ஓர் அழகான கற்பனை..பொதுவாக நீங்கள் பெருமாளை கருட வாகனத்தில் எப்படிப் பார்த்திருப்பீர்கள் என நினைவுகூருங்கள். கருடன் இரு கைகளை விரித்திருக்க அந்தக் கைகளில் தனது திருவடிகளை  வைத்துத் தானே..ஆனால் இங்க ஆண்டாள் என்ன சொல்கிறாள் பாருங்கள்..அப்படி நின்றால் வெயில் மேலே படும் என சிறகுகளில் அடியில் கண்ணனைக் கொண்டு வந்து விட்டாராம் கருடன்.. அழகு இல்லையா ? :)

ஏலாப் பொய்கள் உரைப்பான் எனத் திட்டினாலும் அவன் மேனி துன்புறக் கூடாது என்று அவளது அக்கறையை இங்கே கருடனிடம் சுமத்தி விடுகிறாள் பாருங்கள்

இப்படி ஓர் காதலைப் பெற என்ன தவம் செய்தனை...கண்ணா..நீ என்ன தவம் செய்தனை..:)

Wednesday 25 January 2017

135.அனுங்க வென்னைப் பிரிவுசெய்

135. அனுங்க வென்னைப் பிரிவுசெய்
பாடல் 135
அனுங்க வென்னைப் பிரிவுசெய்
தாயர் பாடி கவர்ந்துண்ணும்
குணுங்கு நாறிக் குட்டேற்றைக்
கோவர்த் தனனைக் கண்டீரே
கணங்க ளோடு மின்மேகம்
கலந்தாற் போல வனமாலை
மினுங்க நின்று விளையாட
விருந்தா வனத்தே கண்டோமே

விளக்கம் :
அனுங்க என்னைப் பிரிவு செய்து - என்னை  வருந்த என்னைப் பிரிவு செய்து
ஆயர் பாடி கவர்ந்துண்ணும் - ஆயர் பாடி மக்களைக் கவர்ந்து  உண்ணும்
குணுங்கு நாறிக் குட்டேற்றைக் கோவர்த்தனனைக் கண்டீரே ? - வெண்ணெய் மணம் கொண்டவன்  குட்டைக் காளை  கோவர்த்தனனைக் கண்டீர்களா ?
கணங்களோடு  - தன் நண்பர் கூட்டத்தோடு
மின் மேகம் கலந்தாற்போல -மின்னலும் மேகமும் கலந்தது போல
வனமாலை மினுங்க நின்று விளையாட  - கருத்த தேகத்தில் பல பூக்கள் கலந்த மாலை  மினுங்க அங்கு நின்று விளையாட
விருந்தாவனத்தே கண்டோமே - விருந்தாவனத்தில் கண்டோமே

கேள்வி :  நான் வருந்தும் அளவுக்கு என்னைப் பிரிந்து , ஆயர் பாடி மக்களைக் கவர்ந்து உண்ணும் , வெண்ணை நாற்றம்(நாற்றம் - என்று மோசமான மணத்தைக் குறிப்பதாக இன்று ஆகிவிட்டது.. நாற்றம் என்றாலே மணம் )   கொண்டவன், குட்டைக் காளை கோவர்த்தனனைக் கண்டீர்களா ?
Image result for krishna with cows


பதில் : 
தனது நண்பர்களோடு , கருத்த மேகமும் அதிலே மின்னலும் கலந்தாற்போல , காட்டிலே பூத்த பல பூக்களைக் கொண்டு மாலை அணிந்து அது கருத்த கண்ணனின் தேகத்தில் மினுமினுங்க அவன் அங்கு நின்று விளையாடக் கண்டோமே ..
குணுங்கு நாறி -குட்டேறு - அவனைக் காணோம் எனக் கேட்கும் போது எப்படிச் செல்ல வசைகளைச் சொல்கிறாள் பாருங்கள்..அடேய் அந்த வெண்ணெய் நாற்றம் பிடிச்ச மேனியன் ,  குட்டைக் காளையைப் பார்த்தீங்களா டா .. :)
காட்டோரமாத் திரிபவன் தானே..அங்கே தென்படும் காட்டுப்பூக்கள் பறித்து மாலை அணிந்து கொள்வான் போல.


Sunday 22 January 2017

134.பட்டி மேய்ந்தோர் காரேறு

134.பட்டி மேய்ந்ததோர் காரேறு
நாச்சியார் திருமொழி பதினான்காம் பத்து  ஆரம்பம். இதுவே நாச்சியார் திருமொழியின் கடைசிப் பத்து. அவள் மனம் கொண்ட கள்வன் கண்ணனே அவளுக்கு எல்லாம். கண்ணனின் பல அவதாரங்களாக சொல்லப்பட்டவற்றை அவள் புகழ்ந்தாலும் எத்தனை திருமாலைப் பாடினாலும் அவள் மனம் கண்ணனிடமே. கண்ணனைச் சென்று சேர்வது அவள் வாழ்ந்த வாழ்வின் பிறவிப்பயன் என எண்ணியவள். தன்னை , அவன் வாழ்ந்ததாகச் சொல்லப்பட்ட பிருந்தாவனத்தில் கொண்டு சேர்க்கச் சொல்லி ஒரு பத்துப் பாடல்கள் பாடியிருந்தாள். அதன் பின் அவள் அழலை நோய் தீர மருந்துகள் என்னவென்று சொல்லி இருந்தாள் . தற்பொழுது விருந்தாவனத்தில் கண்ணனைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறாள்.. .
இப்பத்து ஓர் உரையாடல் பாவனையில் தான் அமைந்திருக்கின்றது போவோர் வருவோர் காண்பவற்றிடம் எல்லாம் கண்ணனைப் பார்த்தீர்களா பார்த்தீர்களா என ஆண்டாள்  விசாரிக்க, அவர்களும் அவனைப் பார்த்ததாகச் சொல்கின்றார்கள் .அவள் கேட்டுக் கொள்கிறாளே தவிர 
 இறுதிவரை அவள் பார்த்ததாக எப்பாடலும் இல்லை. வேண்டுதலில் ஆரம்பித்த அவள் மனம் தவிப்பிலேயே முடிந்துவிட்டது.. ஆனால் காலம் என ஒன்று இருக்கிறது இல்லையா ?
இற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் என ஆண்டாள் வேண்டியதைச் 
 செய்துவிட்டது. ஆம்!  இன்றும் பெருமாளையோ ஆண்டாளையோ தனித் தனியாக பிரித்தறிய முடியவில்லை

பாடல் : 134
பட்டி    மேய்ந்ததோர்  காரேறு
பலதே வற்கோர் கீழ்க்கன்றாய்
இட்டீ றிட்டு விளையாடி
இங்கே போதக் கண்டீரே
இட்ட மான பசுக்களை
இனிது மறித்து நீரூட்டி
விட்டுக் கொண்டு விளையாட
விருந்தா வனத்தே கண்டோமே

விளக்கம் : 
பட்டி மேய்ந்த ஓர் கார் ஏறு -தொழுவத்தில் மேய்ந்த  ஒரு கருங் காளை
பலதேவற்கு ஓர் கீழ்க் கன்றாய் - பலதேவருக்கு ஒரு நல்ல தம்பியாய்
இட்டீறிட்டு விளையாடி -   மிதப்புடன்  விளையாடி
இங்கே போதக் கண்டீரே - இங்கே வரக் கண்டீர்களா ?
இட்டமான பசுக்களை - தனக்கு விருப்பமான பசுக்களை
இனிது மறித்து நீரூட்டி - இனிமையாகப் பேசி அவற்றைத் தடுத்து அவற்றிற்கு நீர் ஊட்டி
விட்டுக் கொண்டு விளையாட - மேய விட்டுக் கொண்டு அவன் விளையாட
விருந்தாவனத்தே கண்டோமே - விருந்தாவனத்திலே நாங்கள் கண்டோமே
இட்டீறு - செருக்கு /மிதப்பு

கேள்வி : தொழுவத்தில் மேய்ந்த ஒரு கருங்காளை ,பல தேவருக்கு ஒரு நல்ல தம்பியாய் , செருக்குடன் (ஒரு வித மிதப்புடன் ) விளையாடி இங்கே வரக் கண்டீர்களா ?

Image result for krishna with cows


பதில் : தனக்கு விருப்பமான பசுக்களை ,மேயச் செல்லும் அவற்றை இடை நிறுத்தி அவற்றிற்கு நீர் ஊட்டி ,பின் மேய விட்டுக் கொண்டு விருந்தாவனத்தில் அவன் விளையாடக் கண்டோமே 

Monday 16 January 2017

133.அல்லல் விளைத்த பெருமானை

133.அல்லல் விளைத்த பெருமானை 
பாடல் : 133
அல்லல் விளைத்த பெருமானை
ஆயர் பாடிக் கணிவிளக்கை
வில்லி புதுவை நகர்நம்பி
விட்டு சித்தன் வியன்கோதை
வில்லைத் தொலைத்த புருவத்தாள்
வேட்கை யுற்று மிகவிரும்பும்
சொல்லைத் துதிக்க வல்லார்கள்
துன்பக் கடலுள் துவளாரே
விளக்கம் : 

அல்லல் விளைத்த பெருமானை - துன்பம் கொடுத்த பெருமானை
ஆயர் பாடிக்கு அணி  விளக்கை - ஆயர்பாடியின் அழகான  விளக்கை
வில்லி புதுவை நகர் நம்பி விட்டு சித்தன் வியன் கோதை - வில்லிபுத்தூர் நகர் நம்பி விஷ்ணு சித்தன் என்ற பெரியாழ்வாரால் பெருமை பெற்ற  கோதை
வில்லைத் தொலைத்த புருவத்தாள் -   தன் வேதனையில் வில் போன்ற புருவ அழகைத் தொலைத்தவள்
வேட்கை உற்று மிக விரும்பும் - வேட்கை கொண்டு மிக விரும்பும்
சொல்லைத் துதிக்க வல்லார்கள் - சொல்லைப் பாட வல்லார்கள்
துன்பக் கடலுள் துவளாரே - துன்பக் கடலின் உள் துவள மாட்டார்கள்



தன்னைச் சேராமல் தனக்குத் துன்பம் தந்த பெருமானை ஆயர்பாடியின் அழகான குல விளக்கு கண்ணனை , வில்லி புத்தூர் நகர் நம்பி விஷ்ணு சித்தன்  என்ற பெரியாழ்வாரால் பெருமை பெற்ற  கோதை, (கணவனை எவ்வளவு விரும்பிய போதிலும் தகப்பனை எங்கேனும் விட்டுக் கொடுக்கிறாளா பாருங்கள்.. அவ்வளவு அன்பு அவர் மீது..தான் இன்னாரின் மகள் என்பதிலே தான் அவளுக்கு எவ்வளவு பெருமை )
வில்லைத் தொலைத்த
புருவத்தாள் ..ஏன் அப்படி..? வில் போன்ற அழகிய புருவம் கொண்டிருந்தவள் ஆனால் கண்ணனைச் சேராமல் வேதனையில் உழன்றதில் தூக்கம் போனது. அதனால் அந்த வில்  அழகு போனது. ஆகவே தான் வில்லைத் தொலைத்த புருவத்தாள் .
 வேட்கை கொண்டு மிக விரும்பிச் சொன்ன இந்தப் பாமாலையைத் துதிக்க வல்லார்கள் துன்பக் கடலினுள் துவள மாட்டார்கள் .அவள் வேட்கையை அவள் இடத்திலிருந்து புரிந்தோமானால் எதுவுமே பிழையாகத் தோன்றாது..

இதுவரை தான் அடைந்த துன்பங்களைச் சொன்னாள் .அந்தத் துயர் தீர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் சொல்லிவிட்டாள் . ஒரு பெண்ணாக , தனது ஆசைகளை எந்த அளவுக்கு வெளிப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு வெளிப்படுத்தி இருக்கின்றாள்..இதனாலேயே இன்று இந்தப் பாடல்கள் எல்லாம் இன்றளவும் பெரும்பான்மையோரால் அறியப்படாமலே இருக்கின்றன. அவள் கோவில் கொண்ட வில்லிபுத்தூரில் கூட இவை பொறிக்கப்படவில்லை என்பது உச்சகட்ட வேதனை. அவள் மனத்தை அவள் உணர்வுகளை அவள் தமிழைப் பலரிடமும் கொண்டு சொல்வோம்..

நாச்சியார் திருமொழி பதிமூன்றாம் பத்து  நிறைவுற்றது !

132.கொம்மை முலைக ளிடர்தீரக்

132.கொம்மை முலைக ளிடர்தீரக் 
பாடல் :132
கொம்மை முலைக ளிடர்தீரக்
கோவிந் தற்கோர் குற்றேவல்
இம்மைப் பிறவி செய்யாதே
இனிப்போய்ச் செய்யும் தவந்தானென்
செம்மை யுடைய திருமார்வில்
சேர்த்தா னேலும் ஒருஞான்று
மெய்ம்மை சொல்லி முகம்நோக்கி
விடைதான் தருமேல் மிகநன்றே

விளக்கம் : 
கொம்மை முலைகள் இடர் தீரக் - திரண்டு பருத்த முலைகள் துன்பம் தீரக்
கோவிந்தற்கு ஓர் குற்று ஏவல் - கோவிந்தனுக்கு ஓர் சிறு தொண்டு
இம்மைப் பிறவி செய்யாதே இனிப் போய்ச் செய்யும் தவந்தான் என் - இந்தப் பிறவியில் செய்யாமல் இனி வேறொரு பிறவியில் செய்யும் தவம் தான் எதற்கு ?
செம்மை உடைய திருமார்வில் சேர்த்தான் ஏலும் - செம்மை உடைய அவனது திருமார்பில் எனை ஏற்றுக் கொண்டான் எனில் நல்லது
ஒரு ஞான்று மெய்ம்மை சொல்லி முகம் நோக்கி  - ஒரு நாளேனும் உண்மை சொல்லி என் முகம் நோக்கி
விடை தான் தருமேல் மிக நன்றே - எனக்கு ஒரு விடை தான் தந்தால் மிக நன்றே

திரண்டு பருத்த முலைகள் துன்பம் தீர கோவிந்தனுக்கு ஓர் சிறு தொண்டு இந்தப் பிறவியில் செய்யாமல் இனி வேறொரு பிறவியில் செய்ய அதுவரை தவம் செய்ய வேண்டுமெனில் அப்படி ஒரு தவம் எதற்கு ?

 அவனுடைய சிவந்த  திருமார்பில் எனைச் சேர்த்து அணைத்து ஏற்றுக் கொண்டால் சரி. அல்லது ஒரு நாளேனும்  உண்மை சொல்லி ,என் முகம் நோக்கி விடை தருவான் எனில் மிக நல்லது..

Image result for arts of shanmugavel
ஓவியம் சண்முகவேல் 

காதலித்தாயிற்று . காதலைச் சொல்லியும் ஆயிற்று. ஆனால் அங்கிருந்து பதில் வரவில்லை. என்ன செய்யணும் அவன்..அந்தத் திருமார்போட சேர்த்துக்கனும். அல்லது மெல்ல தனது விரல்களால் என் முகத்தை அவனை நோக்கி எழுப்பனும். முகத்துக்கு நேராகச் சொல்லிடணும் உண்மையை.. உண்டு /இல்லை .பிடிக்குமா பிடிக்காதா..ஏற்றுக் கொள்வானா மாட்டானா..எதுவாக இருந்தாலும் பளிச்சுன்னு போட்டு உடை. (உண்மையை ஏற்கத் துணிந்தாளோ .. அதையும் அவன் அணைத்துச் சொல்லும் சுகத்தில் கேட்க விழைகிறாளோ ..இல்லைன்னு கூடச் சொல்லு ஆனா அதை என் முகம் பார்த்துச் சொல் பார்ப்போம் ..இவள் முகம் பார்த்து ஒருவேளை மனம் இரங்கி இளகிவிடக் கூடும் என்ற நப்பாசையையும் இதிலே .காண்கிறேன்..நம்பிக்கை..அதானே சார் எல்லாம்