Sunday 27 March 2016

32.காட்டில் வேங்கடம்


32.காட்டில் வேங்கடம் 
பாடல் :32
காட்டில் வேங்கடம் கண்ண புரநகர்
வாட்ட மின்றி மகிழ்ந்துறை வாமனன்
ஓட்ட ராவந்தென் கைப்பற்றி தன்னோடும்
கூட்டு மாகில்நீ கூடிடு கூடலே!

விளக்கம் : 
காட்டில் வேங்கடம் - காட்டில் உள்ள திருவேங்கட மலையிலும்
கண்ணபுர நகர் -  நகரத்தில் உள்ள கண்ணபுரத்திலும்
வாட்டமின்றி மகிழ்ந்துறை வாமனன் - எந்த வருத்தமுமின்றி மகிழ்ந்து குடி கொண்டுள்ள வாமன அவதாரம் எடுத்த கண்ணன்
ஓட்டரா வந்து என் கைப்பற்றி - ஓடி வந்து என் கைப்பற்றி
தன்னோடும் கூட்டுமாகில் - தன்னோடு என்னை அணைத்துக் கொள்வானாகில்
நீ கூடிடு கூடலே ! - நீ கூடிடு கூடலே !

காட்டில் உள்ள திருவேங்கட (திருப்பதி ) மலையிலும் ,நகரத்தில் உள்ள திருக்கண்ணபுரத்திலும் எந்த வருத்தமுமின்றி மகிழ்ந்து குடி கொண்டுள்ள வாமன அவதாரம் எடுத்த கண்ணன்


ஓடி வந்து என் கைப்பற்றி, தன்னோடு என்னை அணைத்துக் கொள்வார் என்றால்

நீ எனக்காக கூடிடு கூடலே!
காட்டிலும் இருக்கார்  நகரத்திலும் இருக்கார் எம் தலைவன்..என் அருகிலும் அவன் வேண்டும்என்னை அணைத்துக் கொள்ள நற்பொழுது கூட வேண்டும்.அது நடக்குமென்று நீ கூடிடு கூடலே என்று குறி கேட்கிறாள் கோதை :) ..அது ஏன் ஓடி வந்து அணைக்கணும் என்கிறாள் ? ஆமா ஏற்கனவே பருவத்தே பயிர் செய் என்பதை அந்த கண்ணன் இன்னும் உணரல நாளும் கிழமையும் காத்திருந்து காத்திருந்து கண்கள் பூத்துப் போச்சு..ஒருக் கணமும் தாழ்த்தாமல் ,  விரைவாக வந்தென்னை அணைத்தலே தன் காதல் நோய்க்கு மருந்து என்கிறாள்..


நாஞ் சொல்லல..?  இது ஏதோ பக்தி வீடு பேறு என்ற ஆன்மிகம் இல்லை முழுக்க முழுக்க கண்ணன் மீதான கோதையின் மையலும் காதலும் :) 

Saturday 26 March 2016

31.தெள்ளியார் பலர்

31.தெள்ளியார் பலர் கைதொழும் தேவனார் 
நாச்சியார் திருமொழி நான்காம் பத்து தொடக்கம். மனதில் நினைப்பது நடக்குமா இல்லையா என குறி கேட்கும் பழக்கம் மக்களிடையே பரவலாக உண்டு. வட்டமாகக் கோடிட்டு , அதிலே பல சுழிகளைப் போடுவது.அதிலே ஒற்றைப்படை எண்களுடன் வருகிறதா அல்லது இரட்டைப்படை எண்களுடன் வருகிறதா எனப் பார்ப்பார்கள்..ஒற்றை விழுந்தால் நடக்கும் .இரட்டை விழுந்தால் நடக்காது .(பிரபந்தத்தில் இதற்கு நேர் எதிராகப் போட்டிருக்கு..ஆனால் என் அனுபவத்திலும் என் அம்மா உட்பட பலர் செய்வதைப் பார்த்ததையும் வைத்து ஒற்றை நல்லது என்கிறேன்..ஏனெனில் காரியம் வெற்றியாக  ஒற்றை தான் கேட்பார்கள்..நம் வழக்கமே ஏழு வெத்தலை வைப்பது சுழியாக இல்லாமல் ஒன்று சேர்த்து நூற்றி ஒன்று என்று மொய் வைப்பது சீர் தட்டுகளில் கூட ஒற்றைப் படை எண்  வருமாறு தான் வைப்பார்கள் )  .சிலர் பூக்கட்டிப் பார்ப்பார்கள்..சோவி போட்டுப் பார்ப்பது இன்னொரு வகை..கோதை தன் காதலனான கண்ணனுடன் இணைவது நடக்குமா இல்லையா என கூடல் போட்டுப் பார்க்கிறாள்..அதற்கு அவற்றிடம் கூடி விடச் சொல்லிச் சொல்லி பாடுகிற பாடல்கள்தான் இந்த நான்காம் பத்துப்பாடல்கள்..,,மனிதராகப் பிறந்து கடவுளை மணத்தல் என்பது நடக்கக்கூடிய காரியமா என்ன..இருப்பினும் கோதை என்ற பேதைப்பெண் என்னவெல்லாம் செய்கின்றாள்..காதல் படுத்தும்பாடு  :)
பாடல் :31
தெள்ளியார் பலர் கைதொழும் தேவனார்
வள்ளல் மாலிருஞ்சோலை மணாளனார்
பள்ளி கொள்ளும் இடத்து அடி கொட்டிடக்
கொள்ளுமாகில் நீ கூடிடு கூடலே    

விளக்கம் :
தெள்ளியார் பலர் - தெளிந்த மனமுடையோர் பலர்
கை தொழும் தேவனார் - கை தொழும் தேவனார்
வள்ளல் மால் இரும் (இருக்கும் ) சோலை மணாளனார் - பக்தர்களுக்கு வாரி வழங்கும் வள்ளலான மால் இருக்கும் சோலையான அழகர் கோவில் மணாளனார் (மாப்பிள்ளை )
பள்ளி கொள்ளும் இடத்து - அவர் உறங்கும் இடத்தில்
அடி கொட்டிடக் கொள்ளுமாகில் - அவர் திருவடிகளைப் பிடிக்க எனக்கு அவன் அருள் கிடைக்குமாகில்
நீ கூடிடு கூடலே       - நீ கூடிடு கூடலே

தெளிந்த மனமுடையோர் பலர் கை தொழுது வணங்கும் தேவனார் (ஆர் எனும் விகுதி மரியாதையின் பொருட்டு சொல்லப்படும் ..) வள்ளல் (முன்கூட்டியே வள்ளல்னு புகழ்ந்துடனும்..அப்பத்தான் கேட்ட வரம் கொடுப்பார்ன்னு பொடி வச்சுச் சொல்றாங்களோ ?:) அழகர் மலைக்கு திருமாலிருஞ்சோலை என்ற பெயரும் உண்டு..கள்ளழகர் பெயர் பிரபலம் ஆனதால் அழகர் கோவில்,  அழகர் மலை என்றே பெயர் விளங்கலாயிற்று..அங்கே இருக்கும் பெருமாளை கல்யாண சவுந்தரராஜ பெருமாள் என்றே பெயர் பார்த்த நினைவு...கோதை அதனால்தான் மணாளனார் என்றாரோ அல்லது அவள் மனம் கொண்ட மாப்பிள்ளை என்பதால் மணாளன் என்றாலோ அவளுக்கே வெளிச்சம் :)
அவர் தூங்கும் இடத்தில் ,அவர் அடி பற்றிட  அவர் மனத்தில் இவள் கொள்ளுமாகில் (மனம் கொள்வது நடக்குமாயின் ) கூடிடு கூடலே!
அல்லது இன்னொரு பொருள் அவர் உறங்கும் இடத்தில் கட்டிலின் அடியில் கூடல் கிழங்கு கொட்டி அது அங்கே நிறையுமாகில் கூடல் வட்டம் கூடட்டும்..
புளியங்கொட்டையை பாதியாகத் தேய்த்து ,அதையும் தாயம் போல விளையாடப் பயன்படுத்துவார்கள்..

இப்படி குறி பார்த்தல் பல வகை..சோவி (சோழி பிரசன்னம் என்று கூடப் பெயர் உண்டு ) போட்டுப் பார்க்கறது..கூழாங்கல் போட்டு பார்க்கிறது..வட்டம் போட்டு அதிலே கோலப்பொடி கொட்டி எண்ணாமல் சுழியம் போட்டு அது ஒற்றையா இரட்டையா எனப் பார்த்தல் எனப் பல வகை..

கோதையின் அறிவை அவள் காதல் கொண்ட பித்து மனமே வெல்கிறது..அதனால்தான் எப்படி ஆகினும் கடவுளைச் சேர அவள் எல்லா விதத்திலும் முயற்சி செய்கிறாள்..நடக்குமா எனக் குறி கேட்கிறாள்..என்ன நடந்தது என்பது நாச்சியார் திருமொழி இறுதியில் தெரியும் :)



Sunday 20 March 2016

30.கன்னியரோடெங்கள் நம்பி

30.கன்னியரோ டெங்கள் நம்பி 
பாடல் :30
கன்னிய ரோடெங்கள் நம்பி
கரிய பிரான்விளை யாட்டை
பொன்னியல் மாடங்கள் சூழ்ந்த
புதுவையர் கோன்பட்டன் கோதை
இன்னிசை யால்சொன்ன மாலை
ஈரைந்தும் வல்லவர் தாம்போய்
மன்னிய மாதவ னோடு
வைகுந்தம் புக்கிருப் பாரே

விளக்கம் :

கன்னியரோடு எங்கள் நம்பி - கன்னியர்களோடு எங்கள் நம்பி நாராயணன்
கரியபிரான் விளையாட்டை  - கருமை நிறக் கண்ணன் விளையாட்டை
பொன்னியல் மாடங்கள் சூழ்ந்த - பொன்வேய்ந்த மாடங்கள் சூழ்ந்த
புதுவையர் கோன் பட்டன் கோதை - வில்லி புத்தூர் தலைவன் பட்டன் (பெரியாழ்வார் ) கோதை
இன்னிசையால் சொன்ன மாலை - இன்னிசையால் பாடிய இந்தப் பாமாலை
இரு ஐந்தும் வல்லவர் தாம் போய் - பத்தும் பாடும் வல்லவர்கள்
மன்னிய மாதவனோடு - என்றும் நிலைபெற்ற மாதவனோடு
வைகுந்தம் புக்கிருப்பாரே -வைகுந்தம் புகுந்து இருப்பாரே

கன்னிப் பெண்களோடு எங்கள் நம்பி நாராயணன் ,கருமை நிறப் பெருமாள் கண்ணன் விளையாடிய இந்த விளையாட்டை , பொன் வேய்ந்த மாடங்கள் சூழ்ந்த வில்லிபுத்தூர் தலைவன் பட்டன் பெரியாழ்வார் மகள் கோதை ,

இன்னிசையால் சொன்ன இந்தப் பாமாலை பத்தையும் பாடுபவர்கள் ,என்றென்றும் நிலை பெற்ற மாதவனோடு வைகுந்தம் புகுந்து அங்கேயே இருப்பரே
ஏதோ இவர் கடவுள் என்றெல்லாம் கண்ணனை அந்நியப்படுத்தாமல் ,தங்களில் ஒருவனாக பாவித்து ,அவன் குறும்புகளில் செல்லச் சலிப்பும் கொண்டு பாடிய இந்தப் பத்துப் பாடல்கள் படிக்கவே இனிமையானவை..

நாச்சியார் திருமொழி மூன்றாம் பத்து இனிதே நிறைவுற்றது :) 



Friday 18 March 2016

29.கஞ்சன் வலைவைத்த வன்று

29.கஞ்சன் வலைவைத்த வன்று 
பாடல் :29
கஞ்சன் வலைவைத்த வன்று
காரிரு ளெல்லில் பிழைத்து
நெஞ்சுதுக் கம்செய்யப் போந்தாய்
நின்றஇக் கன்னிய ரோமை
அஞ்ச உரப்பாள் அசோதை
ஆணாட விட்டிட் டிருக்கும்
வஞ்சகப் பேய்ச்சிபா லுண்ட
மசிமையி லீ!கூறை தாராய்

விளக்கம் :
கஞ்சன் வலை வைத்த அன்று - கஞ்சன் என்ற உன் மாமன் வைத்த வலையில் அன்று
கார் இருள் எல்லில் பிழைத்து -  அடர்ந்த கருமையான இருளில் தப்பித்து
நின்ற இக்கன்னியரோமை -நீரில் நின்ற இந்தக் கன்னியர்களை
நெஞ்சம் துக்கம் செய்யப் போந்தாய் - எங்கள் நெஞ்சம் துக்கம் கொள்ளச் செய்யவா வந்தாய்
ஆணாட விட்டிட்டு இருக்கும் - ஆண் பிள்ளை தானே என விட்டுவிட்டு
அஞ்ச உரப்பாள் அசோதை - உன்னை பயப்படும்படி அதட்ட மாட்டாள் உன் தாய் அசோதை
வஞ்சகப் பேய்ச்சி பால் உண்ட - உன்னை வஞ்சகமாகக் கொல்ல வந்த அரக்கியிடம் பால் உண்ட
மசிமைஇலீ !கூறை தாராய் - பெருமை இல்லாதவனே   எங்கள் உடையைத் தா

உன் மாமன் கஞ்சன் உன்னைக் கொல்வதற்காக வைத்த வலையில் இருந்து , அடர்ந்த கார் இருளில் நள்ளிரவில் தப்பித்து வந்தியே , அது இப்படி நீரில் நின்ற இந்தக் கன்னியர்களின் நெஞ்சம் துக்கம் கொள்ளச் செய்வதற்காகவா வந்தாய்?
கார் இருள் எல் - எல் என்பது கதிரவன் /கதிரவன் மறைவு /இருள் இரண்டையும் குறிக்கும் எதிர்மறை ஒரு மொழி #தமிழ்டா ன்னு காலரைத் தூக்கி விட்டுக்குவோம்

ஆண்பிள்ளை தானே ,என்ன போச்சு இப்பன்னு உங்கம்மா அசோதையும் நீ பயப்படும்படி எதுவும் சொல்றதில்லை.பேருக்கு எங்க முன்னாடி கண்டிக்கிற மாதிரி இருந்தாலும் அது உண்மை இல்லன்னே தோனுது .நீ அச்சப்படி அவ கண்டிச்சா நீ ஏன் இப்படி இருக்கப் போற ?இதை எல்லாம் சொல்றப்ப கொஞ்சம் குமட்டுல இடிச்சுட்டு சொல்ற மாதிரி கற்பனை பண்ணிப் பாருங்க..ஒரு மாமியார் மருமகள் ஊடல் தெரியும் :)

உன்னை வஞ்சகமாகக் கொல்ல வந்த அரக்கியை இனம் கண்டுகொண்டு அவளிடம் பால் குடித்தே அவளைக் கொன்றவனே !


மசிமை -மஹிமை - பெருமை  இலி - இல்லாத மசிமை இலி -பெருமை இல்லாதவனே ..எங்கள் உடைகளைத் தருவாயாக ! (பெண்களின் உடைகளைத் திருடியவனுக்கு என்ன பெருமை இருக்கப் போகிறது )
கோதையின் பாடல்களில் எல்லாம் ஓர் யதார்த்தம் இருக்கும்.நம்மைப் போன்ற மனிதர்களின் பேச்சுமொழி இருக்கும்.அதனால் அதீத இலக்கியம் என்று அந்நியப்பட்டுப் போகாம இந்தப் பாடல்கள் மனதிற்கு நெருக்கமாகின்றன :)


Friday 4 March 2016

28.மாமிமார் மக்களே யல்லோம்

28.மாமிமார் மக்களே யல்லோம் 
பாடல் :28
மாமிமார் மக்களே யல்லோம்
மற்றுமிங் கெல்லாரும் போந்தார்
தூமலர்க் கண்கள் வளரத்
தொல்லையி ராத்துயில் வானே
சேமமே லன்றிது சாலச்
சிக்கென நாமிது சொன்னோம்
கோமள ஆயர்கொ ழுந்தே
குருந்திடைக் கூறை பணியாய்

விளக்கம் :

மாமிமார் மக்களே யல்லோம் - உனது முறைப்பெண்களான அத்தை பிள்ளைங்க மட்டுமல்ல
மற்றும் இங்கு எல்லாரும் போந்தார் - மற்றும் இங்க எல்லாருமே வந்தாங்க
தூமலர்க் கண்கள் வளர - வண்டு கூட வந்தமராத தூய்மையானமலர்  போன்ற கண்கள் வளர
தொல்லையில் ராத்துயில்வானே - பகல் முழுக்க குறும்புத்தனங்களால் தொல்லை செய்துட்டு இரவில் தூங்குபவனே
சேமம்  மேல்அன்றி இது  -இது உனக்கு சேமம் (நலன்,பாதுகாப்பு ) தருகின்ற செயல் அன்று
சாலச் சிக்கென நாமிது சொன்னோம் -  உன் நலனுக்காக  மிக உறுதியாக நாம் இது சொன்னோம்
கோமள ஆயர் கொழுந்தே - மென்மையான ஆயர் கொழுந்தே
குருந்திடைக் கூறை பணியாய் - குருந்த மரத்தின் இடையே உள்ள , எம் துணிகளைத் தந்தருள்

மாமிமார் - மாமியார் - அத்தையார் பிள்ளைகள் ..உனது முறைப்பெண்களான நாங்கள் மட்டுமல்ல மற்ற பெண்களும் வந்திருக்காங்க. இப்படிச் சொல்வதால் கோதைக்கு மற்ற பெண்களிடமும் விளையாடும் கண்ணனைக் கண்டித்த மாதிரியும் ஆச்சு..என்ன இருந்தாலும் தன்னிடம் விளையாடுவது போல் பிறிதொரு பெண்ணிடம் விளையாடுவதை அறவே விரும்பவில்லை எனப் பொறாமை மேலிட கண்ணனிடம் சூசகமாகச் சொன்னது போலுமாச்சு :எப்பூடி :))


தூமலர் - தூய்மையான மலர்..மலர் எப்பத் தூய்மையானதா இருக்கும்..வண்டு வந்து எச்சில் படுத்தாமல் கன்னியாக இருக்கும் :) அவ்வளவு பரிசுத்தமான மலர் போன்று இருக்காம் கண்ணனின் கண்கள்..தன்னைத் தவிர பிறிதொரு பெண்ணை ரசித்து இராது என்று கண்ணனை நம்புகிறாள் கோதை எனும் பேதை :) கண்கள் வளர -கண் மூடுதல் என்று சொல்லாமல் கண் வளருதல் என்பது மங்கலச் சொற்கள்..மூடுதல் என்றால் நிரந்தரமாக மூடுதல் என்று பொருள் வந்து விடும் என்பதால் உறங்குவதைக் கண் வளருதல் என்கிறாள் கோதை..

பகல் முழுக்க குறும்புகளும் சேட்டைகளும் செய்து பிறருக்குத் தொல்லை கொடுத்துவிட்டு இரவில் கண் வளரத் தூங்குவோனே ,
இப்படிச் செய்வது உனக்கு நல்ல செயல் அன்று. மிகவும் சிக்கலானது..இதை உன் நலத்திற்காக மிக உறுதியாகச் சொன்னோம் நாங்கள் .மென்மையான ஆயர் கொழுந்தே ! குருந்த மரத்தின் இடையே இருக்கும் துணிகளைத் தருவாயாக !

Wednesday 2 March 2016

27.நீரிலே நின்றயர்க்கின்றோம்

27.நீரிலே நின்றயர்க் கின்றோம் 
பாடல் :27
நீரிலே நின்றயர்க் கின்றோம்
நீதியல் லாதன செய்தாய்
ஊரகம் சாலவும் சேய்த்தால்
ஊழியெல் லாமுணர் வானே
ஆர்வ முனக்கே யுடையோம்
அம்மனை மார்காணி லொட்டார்
போர விடாயெங்கள் பட்டைப்
பூங்குருந் தேறியி ராதே

விளக்கம் :
நீரிலே நின்று அயர்க்கின்றோம்தண்ணீரிலேயே நின்றதில் அயர்ந்து விட்டோம்.
நீதி அல்லாதன செய்தாய் - இப்படி உன்னை விரும்புபவர்களை வாட்டியது நீதி அல்லவே அதைச் செய்து விட்டாயே
ஊரகம் சாலவும் சேய்த்தால் - இப்பொய்கையில் இருந்து நாங்கள் இருக்கும் கிராமம் மிகவும் தூரமானது
ஊழி எல்லாமும் உணர்வானே - விதி ,உலகத்தின் அழிவு,அதன் மீள் துவக்கம்  எல்லாம் உணர்ந்தவனே
ஆர்வம் உனக்கே உடையோம் - இது ஏதோ எங்களின் சின்னச் சின்ன ஆசைகள் மற்றபடி எங்கள் ஆர்வம் எல்லாமே உன்னிடம் மட்டுமே
அம்மனைமார் காணில் ஒட்டார் - இதை மட்டும் எங்க அம்மா அப்பா மாருங்க பார்த்தாங்க வீட்டுக்குள்ள எங்கள விடமாட்டாங்க
போர விடா எங்கள் பட்டைப்- மீள விடாய் எங்கள் பட்டை
 பூங்குருந்து ஏறி இராதே - பட்டாடைகளை எடுத்துக் கொண்டு பூங்குருந்த மரம் ஏறி அமர்ந்து கொண்டு இராதே

ஆடையின்றி நீரிலேயே வெகு நேரம் நின்றதால் கால்கள் அயர்ந்து விட்டனவாம்..அயற்சி அல்ல அயர்ச்சி..அசந்து போதல் என்று இன்னமும் (அசதி ) என இன்னமும் பேச்சு வழக்கில் இருக்கு இச்சொல்..getting tired ..
உன்னை விரும்புபவர்களை இப்படி வாட்டியது நீதி அல்லவே அதைச் செய்து விட்டாயே


இப்பொய்கையில் இருந்து எங்கள் கிராமமானது வெகு தூரத்தில் இருக்கின்றது. விதி, உலகத்தின் அழிவு மற்றும் அதன் மீள் துவக்கம் அனைத்தும் அறிந்து அவற்றை உணர்ந்த வல்லவனே (ஊழி முதல்வனே என்று திருப்பாவையிலும் குறிப்பிடுகின்றாள் )



இப்படிக்  குளத்தில் நீராடுவது, மணல் வீடு கட்டுவது எல்லாம் எங்களோட சின்னச் சின்ன ஆசை..இதனால உன்னை மறந்துட்டதா பொருள் கிடையாது..அப்படி நினைச்சு கோபம் கொள்ளாதே. எங்கள் ஆர்வம் எல்லாமே உன் மீதுதான்..
அம்மன் +ஐ மார் = எங்கள் அம்மா அப்பா இதைப் பார்த்தாங்க எங்கள இனி இங்க விடவே மாட்டாங்க.
போர விடாய் எங்கள் பட்டை - மீள விடாய் எங்கள் பட்டை..எங்கள் கைக்கு எட்டுமாறு எங்கள் பட்டை கீழே விடு..பட்டாடைகளை எடுத்துக் கொண்டு பூங்குருந்த மரம் ஏறி அமர்ந்து கொள்ளாதே..