Saturday 26 March 2016

31.தெள்ளியார் பலர்

31.தெள்ளியார் பலர் கைதொழும் தேவனார் 
நாச்சியார் திருமொழி நான்காம் பத்து தொடக்கம். மனதில் நினைப்பது நடக்குமா இல்லையா என குறி கேட்கும் பழக்கம் மக்களிடையே பரவலாக உண்டு. வட்டமாகக் கோடிட்டு , அதிலே பல சுழிகளைப் போடுவது.அதிலே ஒற்றைப்படை எண்களுடன் வருகிறதா அல்லது இரட்டைப்படை எண்களுடன் வருகிறதா எனப் பார்ப்பார்கள்..ஒற்றை விழுந்தால் நடக்கும் .இரட்டை விழுந்தால் நடக்காது .(பிரபந்தத்தில் இதற்கு நேர் எதிராகப் போட்டிருக்கு..ஆனால் என் அனுபவத்திலும் என் அம்மா உட்பட பலர் செய்வதைப் பார்த்ததையும் வைத்து ஒற்றை நல்லது என்கிறேன்..ஏனெனில் காரியம் வெற்றியாக  ஒற்றை தான் கேட்பார்கள்..நம் வழக்கமே ஏழு வெத்தலை வைப்பது சுழியாக இல்லாமல் ஒன்று சேர்த்து நூற்றி ஒன்று என்று மொய் வைப்பது சீர் தட்டுகளில் கூட ஒற்றைப் படை எண்  வருமாறு தான் வைப்பார்கள் )  .சிலர் பூக்கட்டிப் பார்ப்பார்கள்..சோவி போட்டுப் பார்ப்பது இன்னொரு வகை..கோதை தன் காதலனான கண்ணனுடன் இணைவது நடக்குமா இல்லையா என கூடல் போட்டுப் பார்க்கிறாள்..அதற்கு அவற்றிடம் கூடி விடச் சொல்லிச் சொல்லி பாடுகிற பாடல்கள்தான் இந்த நான்காம் பத்துப்பாடல்கள்..,,மனிதராகப் பிறந்து கடவுளை மணத்தல் என்பது நடக்கக்கூடிய காரியமா என்ன..இருப்பினும் கோதை என்ற பேதைப்பெண் என்னவெல்லாம் செய்கின்றாள்..காதல் படுத்தும்பாடு  :)
பாடல் :31
தெள்ளியார் பலர் கைதொழும் தேவனார்
வள்ளல் மாலிருஞ்சோலை மணாளனார்
பள்ளி கொள்ளும் இடத்து அடி கொட்டிடக்
கொள்ளுமாகில் நீ கூடிடு கூடலே    

விளக்கம் :
தெள்ளியார் பலர் - தெளிந்த மனமுடையோர் பலர்
கை தொழும் தேவனார் - கை தொழும் தேவனார்
வள்ளல் மால் இரும் (இருக்கும் ) சோலை மணாளனார் - பக்தர்களுக்கு வாரி வழங்கும் வள்ளலான மால் இருக்கும் சோலையான அழகர் கோவில் மணாளனார் (மாப்பிள்ளை )
பள்ளி கொள்ளும் இடத்து - அவர் உறங்கும் இடத்தில்
அடி கொட்டிடக் கொள்ளுமாகில் - அவர் திருவடிகளைப் பிடிக்க எனக்கு அவன் அருள் கிடைக்குமாகில்
நீ கூடிடு கூடலே       - நீ கூடிடு கூடலே

தெளிந்த மனமுடையோர் பலர் கை தொழுது வணங்கும் தேவனார் (ஆர் எனும் விகுதி மரியாதையின் பொருட்டு சொல்லப்படும் ..) வள்ளல் (முன்கூட்டியே வள்ளல்னு புகழ்ந்துடனும்..அப்பத்தான் கேட்ட வரம் கொடுப்பார்ன்னு பொடி வச்சுச் சொல்றாங்களோ ?:) அழகர் மலைக்கு திருமாலிருஞ்சோலை என்ற பெயரும் உண்டு..கள்ளழகர் பெயர் பிரபலம் ஆனதால் அழகர் கோவில்,  அழகர் மலை என்றே பெயர் விளங்கலாயிற்று..அங்கே இருக்கும் பெருமாளை கல்யாண சவுந்தரராஜ பெருமாள் என்றே பெயர் பார்த்த நினைவு...கோதை அதனால்தான் மணாளனார் என்றாரோ அல்லது அவள் மனம் கொண்ட மாப்பிள்ளை என்பதால் மணாளன் என்றாலோ அவளுக்கே வெளிச்சம் :)
அவர் தூங்கும் இடத்தில் ,அவர் அடி பற்றிட  அவர் மனத்தில் இவள் கொள்ளுமாகில் (மனம் கொள்வது நடக்குமாயின் ) கூடிடு கூடலே!
அல்லது இன்னொரு பொருள் அவர் உறங்கும் இடத்தில் கட்டிலின் அடியில் கூடல் கிழங்கு கொட்டி அது அங்கே நிறையுமாகில் கூடல் வட்டம் கூடட்டும்..
புளியங்கொட்டையை பாதியாகத் தேய்த்து ,அதையும் தாயம் போல விளையாடப் பயன்படுத்துவார்கள்..

இப்படி குறி பார்த்தல் பல வகை..சோவி (சோழி பிரசன்னம் என்று கூடப் பெயர் உண்டு ) போட்டுப் பார்க்கறது..கூழாங்கல் போட்டு பார்க்கிறது..வட்டம் போட்டு அதிலே கோலப்பொடி கொட்டி எண்ணாமல் சுழியம் போட்டு அது ஒற்றையா இரட்டையா எனப் பார்த்தல் எனப் பல வகை..

கோதையின் அறிவை அவள் காதல் கொண்ட பித்து மனமே வெல்கிறது..அதனால்தான் எப்படி ஆகினும் கடவுளைச் சேர அவள் எல்லா விதத்திலும் முயற்சி செய்கிறாள்..நடக்குமா எனக் குறி கேட்கிறாள்..என்ன நடந்தது என்பது நாச்சியார் திருமொழி இறுதியில் தெரியும் :)



No comments:

Post a Comment

மறுமொழி இடுக!