Monday 30 May 2016

43.வெள்ளை விளிசங் கிடங்கையிற்

43.வெள்ளை விளிசங் கிடங்கையிற்
பாடல் :43
வெள்ளை விளிசங் கிடங்கையிற்
கொண்ட விமல னெனக்குருக் காட்டான்
உள்ளம் புகுந்தென்னை நைவித்து நாளும்
உயிர்பெய்து கூத்தாட்டுக் காணும்
கள்ளவிழ் செண்பகப் பூமலர் கோதிக்
களித்திசை பாடுங் குயிலே
மெள்ள விருந்து மிழற்றி
மிழற்றாதென் வேங்கட வன்வரக் கூவாய்

விளக்கம் : 
வெள்ளை விளி சங்கு இடக்கையில் கொண்ட -வெண்மையான சங்கை இடக்கையில் கொண்ட
விமலன் எனக்கு உருக் காட்டான் - விமலன் எனக்கு அவன் உருவத்தைக் காட்ட மாட்டான்
உள்ளம் புகுந்து என்னை நைவித்து நாளும் - என் உள்ளத்தில் புகுந்து என்னை வருத்தி நாள்தோறும்
உயிர் பெய்து கூட்டாட்டுக் காணும் - என்  உயிர் வதைத்து கூத்தாடுவதைக் காண்பான்
கள் அவிழ் செண்பகப்பூ மலர் கோதிக் - கள் (தேன் ) சுரக்கும் செண்பகப்பூ மலர் கோதி
களித்து இசை பாடும் குயிலே - இன்புற்று இசை பாடும் குயிலே
மெள்ள விருந்து மிழற்றி - மெதுவாக இருந்து மழலை மொழி பேசி என் அருகே இருந்து எனை வதைக்காமல்
மிழற்றாது என் வேங்கடவன் வரக் கூவாய் - என் வேங்கடவன் வரக் கூவுவாயாக!
வெள்ளை விளி சங்கு.. விளி என்பது அழைத்தல்..சங்கின் மூலமாக அழைப்பது..விளிக்கப் பயன்படும் சங்கு..வெண்மையான விளி சங்கை இடக்கையில் ஏந்தியவன் விமலன் (பெருமாள் ) எனக்கு அவன் உருவத்தைக் காட்ட மாட்டான்.. இவள் படும் துயரம் கண்டு நேரிலே தோன்றி அவள் காதல் நோய் போக்க மாட்டான். என் மனத்தினுள் புகுந்து , என்னை வருத்தி நாள்தோறும் (EVERYDAY) என் உயிர் இதனால் வதைபடுவதை இப்படிக் கூத்தாடுவதை ரசித்துக் கொண்டிருக்கின்றான்..



கள் சுரக்கும்..பொதுவாக பூக்களில் தேன் சுரக்கும்..அதைத்தான் கோதை குறிப்பிடுகிறாள்..கள் சுரக்கும் செண்பகப்பூ மலர் கோதி ..கோதுதல் என்பது ஓர் அழகான சொல்..வலிக்காமல் தொடுவது சுகமாய்த் தொடுவது..தொட்டு அளைவது :) அப்படி கோதி அதிலே இன்புற்று இசை பாடும் குயிலே!



மெள்ள ..மெல்ல இவ்விரண்டுக்கும் என்ன பொருள்..?
மெல்ல - மென்மையாக..(soft ) மெள்ள - மெதுவாக (slow )
மிழற்றுதல் - குயில் பேசும் மொழி
அதன் ஓசை இப்படி இருக்கிறதாம்..இப்படி மெதுவாக இங்கே மிழற்றிக் கொண்டிருக்கிறாய்..இங்கே மிழற்றாது (இங்க என்ன பேச்சு? என் வேங்கடவனிடம் செல் ) என் வேங்கடவன் முன் சென்று என்னை வந்து சேரச் சொல்லிக் கூவுவாயாக !
கண்ணன் மீதான காதலால் தன் உயிர்படும் வேதனையைக் குயிலிடம் சொல்லி ஆற்றுப்படுத்திக் கொள்கிறாள் கோதை :) 

No comments:

Post a Comment

மறுமொழி இடுக!