42.மன்னு பெரும்புகழ் மாதவன்
நாச்சியார் ஐந்தாம்பத்து இனிதே ஆரம்பம் :) மன்மதனை வேண்டியாயிற்று. சிற்றில் சிதைக்காதே என்று கரம் கூப்பி கெஞ்சி ஆயிற்று. ஆய்ச்சியரோடு குருந்த மரத்தின் இடைக் கூறை வைத்து விளையாடாதே என்று கண்டித்தாயிற்று. தான் கண்ணனுடன் சேர்வோமா என்று கூடல் விளையாட்டில் குறி கேட்டாயிற்று..அடுத்து குயில் விடு தூது..ஏதோ மரத்தின் ஊடே தனியே கூவும் குயிலின் குரலில் மென்சோகம் எதுவும் இழையோடக் கண்டாள் போல இந்த கோதை..தன்னைப் போலவே அதற்கும் காதல் நோய் பீடித்து இருக்கக்கூடும் என்று தன் மனம் உணர்ந்து அது தூது சொல்லக் கூடும் என்று குயிலிடம் தூது விடுகிறாள் இப்பேதை..காதல் வியாதி பொல்லாதது..
அது கண்ணும் காதும் இல்லாதது :)
பாடல் :42
மன்னு பெரும்புகழ் மாதவன்
மாமணி வண்ணன் மணிமுடி மைந்தன்
தன்னை உகந்தது காரண மாகஎன்
சங்கிழக் கும்வழக் குண்டே
புன்னை குருக்கத்தி ஞாழல் செருந்திப்
பொதும்பினில் வாழும் குயிலே
பன்னியெப் போது மிருந்து
விரைந்தென் பவளவா யன்வரக் கூவாய்
விளக்கம் :
மன்னு பெரும்புகழ் மாதவன் - நிலைத்த பெரும்புகழுடைய மாதவன்
மாமணி வண்ணன் மணிமுடி மைந்தன் தன்னை - பெருமை கொண்ட மணி வண்ணன் விலைமதிப்பற்ற கற்கள் பதித்த கிரீடம் அணிந்தவனை
உகந்தது காரணமாக - நான் விரும்பியது காரணமாக
என் சங்கிழக்கும் வழக்குண்டே - என் வளையல்களை இழக்கும் வழக்கு உண்டா ?இது நியாயமா ?
புன்னை குருக்கத்தி ஞாழல் செருந்தி -புன்னை ,குருக்கத்தி,கோங்கு ,செருந்தி போன்ற பல மரங்கள் இருக்கும்
பொதும்பினில் வாழும் குயிலே - சோலையினில் வாழும் குயிலே
பன்னி எப்போதும் இருந்து - இரவும் பகலும் விடாமல் இருந்து
விரைந்து என் பவளவாயன் வரக் கூவாய் - பவளத்தைப் போன்ற சிவந்த இதழ்களைக் கொண்ட வாயன் சீக்கிரம் வந்து என்னைச் சேர கூவுவாயாக!
நீடித்து நிற்கும் புகழுடைய மாதவன் , பெரும் பெருமை கொண்ட மணி வண்ணன் , மணிமுடி தரித்த மைந்தன் தன்னை , நான் விரும்பிய ஒரே காரணத்திற்காக என் சங்கு வளையல்களை இழப்பது நியாயமா இது வழக்கில் (நடைமுறையில் எங்கேனும் கண்டதுண்டா ) ( அக்காலத்தில் சங்கிலே செய்த வளையல்களை அணியும் பழக்கம் பெண்களுக்கு இருந்தது..) அடுக்குமா ? (எதனால் வளையல்களை இழக்கிறாளாம் ..பின்னே தன் தலைவனை நினைந்து நினைந்து உருகுகையில் அவன் சேராத வேதனையில் உடல் மெலிகிறது..மெலிந்த மேனியில் இருந்த வளையல்கள் தாமே கழன்று விழுகின்றன ) புன்னை, குருக்கத்தி, கோங்கு , செருந்தி போன்ற பல மரங்கள் இருக்கின்ற சோலையில் வாழும் குயிலே , இரவும் பகலும் விடாமல் எப்போதுமே இருந்து ,எனக்காக , பவளத்தைப் போன்ற சிவந்த இதழ்களை உடையவன் எனை வந்து சேரக் கூவுவாயாக !
வளையல்களை இழப்பதாக கோதை சொன்னதும் நினைவுக்கு வந்த திரைப்பாடல்..இந்த வரிகளும் சங்க இலக்கியங்களில் இருந்து கையாண்டது தான் :)
அன்பு நாதனே அணிந்த மோதிரம் வளையலாகவே துரும்பென இளைத்தேன்
அந்த மோதிரம் ஒட்டியாணமாய் ஆகுமுன்னரே அன்பே அழைத்தேன்..
No comments:
Post a Comment
மறுமொழி இடுக!