140.பொருத்த முடைய நம்பியைப்
பாடல் : 140
பொருத்த முடைய நம்பியைப்
புறம்போ லுள்ளும் கரியானை
கருத்தைப் பிழைத்து நின்றஅக்
கருமா முகிலைக் கண்டீரே
அருத்தித் தாரா கணங்களால்
ஆரப் பெருகு வானம்போல்
விருத்தம் பெரிதாய் வருவானை
விருந்தா வனத்தே கண்டோமே
விளக்கம் :
பொருத்தம் உடைய நம்பியைப் புறம் போல் உள்ளும் கரியானை - உள்ளும் புறமும் ஒன்றாய்ப் பொருந்திய நம்பியை, உடல் போலவே உள்ளமும் கருப்பானவனை
கருத்தைப் பிழைத்து நின்ற அக் கருமா முகிலைக் கண்டீரே? - தான் சொன்ன வாக்கை நிறைவேற்றாத அந்தக் கரிய நிற முகில் நிறத்தவனைக் கண்டீர்களா ?
அருத்தித் தாரா கணங்களால் - அருந்ததி முதலான விண்மீன் கூட்டங்களால்
ஆரப் பெருகு வானம் போல் - நிறைந்து வழியும் வானம் போல்
விருத்தம் பெரிதாய் வருவானை - கூட்டம் பெரிதாக வருவானை
விருந்தாவனத்தே கண்டோமே - விருந்தாவனத்தே கண்டோமே
கேள்வி : பொருத்தம் இலி என்று சொன்ன வாயாலேயே அடுத்த பாட்டில் பொருத்தம் உடைய நம்பி என்கிறாள் எனில் தன் கருத்தை மாற்றிக் கொண்டாளா என்ன ? ;) அல்ல.. நன்கு கவனியுங்கள்..சென்ற பாட்டில் அவள் சொன்னது இரக்கமற்ற அவன் கண்களுக்கு அழகுப் புருவங்கள் பொருத்தமற்றது என ..கண்களுக்கு அழகு இரக்கம் கருணை..அது அற்ற கண்களுக்கு அழகிய புருவம் எப்படிப் பொருந்தும் ?
சரி இந்தப் பாட்டில் ஏன் பொருத்தம் உடையவன் என்கிறாள்..ஆமாம் கருநிற வண்ணன் அகமும் புறமும் ஒன்றே போல இருக்கின்றான்..உடல் தான் கருப்பு என்றால் அவன் உள்ளமும் கருப்பு..இரக்கமற்றது..இவளைப் பற்றிச் சிந்திக்க மறுக்கிறது. நல்ல மனசு இல்ல..அந்த மனசுல இவள் இல்லை. இருந்திருந்தால் இப்படித் தவிக்க விட மாட்டான் . அதனால்தான் உள்ளும் புறமும் ஒன்றானவன் எனச் சாடுகிறாள். என்றேனும் இவன் வருவான் நமக்கு விடிவுகாலம் பிறக்கும் என்றெண்ணி இருந்தவள்..தன் காதலில் கற்பனையில் வந்து இவன் காப்பாற்றுவதாகச் சொல்லி இருந்த வாக்கைக் காப்பாற்றவில்லை. கற்பனையில் இவள் கண்டால் அதுக்கு அவன் என்ன பண்ண முடியும் எனக் கேட்காதீர்..
அடியவர் துயர் நீக்க ஓடோடி வருவான் எனக் காலங்காலமாக சொல்லப்பட்டதே..அதுவாவது நிறைவேற்றி இருக்க வேண்டாமா ?
சொன்ன சொல் தவறியவன் அந்தக் கருவாப் பய கண்ணனைக் கண்டீர்களா ?
அதைத் தானே அவள் கேட்கின்றாள்.. :)
பதில் :
அருந்ததி முதலான விண்மீன் கூட்டங்கள் நிறைந்து வழியும் வானம் போல , பெருங்கூட்டத்தில் தனியாகத் தெரிகின்றான்..தனது நண்பர்களோடு அவன் வருகின்றான்..அவனைப் பார்த்தோமே விருந்தாவனத்தில்.. அருந்ததி எப்படித் தனித்துத் தெரியுமோ அது போல அவ்வளவு பெருங் கூட்டத்திலும் அவன் தனியாகத் தெரிந்தான் ஆகா..அவன் அழகே அழகு.. !
No comments:
Post a Comment
மறுமொழி இடுக!