142.நாட்டைப் படையென்று அயன்முதலாத்
பாடல் :142நாட்டைப் படையென்று அயன்முதலாத்
தந்த நளிர்மா மலருந்தி
வீட்டைப் பண்ணி விளையாடும்
விமலன் றன்னைக் கண்டீரே
காட்டை நாடித் தேனுகனும்
களிறும் புள்ளு முடன்மடிய
வேட்டை யாடி வருவானை
விருந்தா வனத்தே கண்டோமே
விளக்கம் :
நாட்டைப் படை என்று அயன் முதலாத் தந்த - நாட்டைப் படைக்கச் சொல்லி பிரம்மனை
நளிர் மாமலர் உந்தி - குளிர்ந்த தாமரையில் தொப்புள் கொடியிலே உந்தி படைத்து அந்த பிரம்மன் மூலமாக பல் உயிர்களைப் பிறப்பித்து
வீட்டைப் பண்ணி விளையாடும் - பிறப்பு முதல் வீடு பேறு வரை ஒருவரின்
வாழ்வில் விளையாடும்
விமலன் தன்னைக் கண்டீரே - விமலன் தன்னைக் கண்டீர்களா ?
காட்டை நாடித் தேனுகனும் - காட்டிலே சென்று தேனுகன் என்னும் அசுரனையும்
களிறும் புள்ளும் உடன் மடிய - குவலயபீடம் என்னும் யானையையும் பகாசுரன் என்ற பறவை வடிவ அசுரனையும்
வேட்டையாடி வருவானை - வேட்டையாடி வருவானை
விருந்தாவனத்தே கண்டோமே - விருந்தாவனத்தே கண்டோமே
உந்தி -பிறப்பு
வீடு - வீடு பேறு (முக்தி /மோட்சம் )
கேள்வி :
குளிர்ந்த தாமரையில் இருந்து வந்த தனது தொப்புள் கொடியிலே பிரம்மனைப் படைத்து , அவனிடம் நாட்டைப்படைக்கச் சொல்லி , அந்த பிரம்மன் பல உயிர்களைப் படைத்தார். இவ்வாறு ஓர் உயிரின் பிறப்புக்கும் காரணமாகி இறந்து வைகுந்தம் அடையும் வீடு பேறு வரை எல்லாவற்றுக்கும் காரணமாகி நம் வாழ்வோடு விளையாடும் விமலன் தன்னைக் கண்டீர்களா ?
பதில் :
காட்டிற்கே சென்று , தேனுகன் எனும் கழுதை வடிவ அரக்கனையும் (பலதேவன் கொல்ல ), குவலய பீடம் எனும் யானையையும் , பறவை வடிவம் கொண்ட பகாசுரனின் வாய் பிளந்து கொன்று ஒழிய வேட்டையாடி வருவானை விருந்தாவனத்தே கண்டோமே
இது நாச்சியார் திருமொழி இறுதிப் பாடலுக்கு முந்தைய பாடல்.. இத்தனை பாடல்களில் கண்ணனுக்காக உருகி வேதனை கொண்டவள் அதற்குக் காரணமும் கண்ணன் என்றே பழி சொல்கிறாள்..
எப்படி..?
உயிர்களைப் படைக்கும் பிரம்மனைப் படைத்ததே அந்தப் பெருமான் தான். அவருடைய தொப்புள் கோடியில் இருந்து வந்தவர் பிரம்மா..(அயன்முதலா ) அவர் பல உயிர்களைப் படைத்தார்..உயிர்களின் முடிவு வைகுந்தம் அடைவது..வீடு பேறு ..இப்படி ஓர் மனிதனின் ஆதி முதல் இறுதி வரை எல்லாவற்றிலும் தொடர்புடையவன் இவள் வாழ்க்கையிலும் உட்புகுந்து காரணமும் ஆகி செயலும் ஆகியவன் அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்ற பழமொழிக்கு ஏற்ப தனது இந்த நிலைக்குக் காரணமே இவனது விளையாட்டு தான் என்கிறாள்..அவனுக்குத் தெரியாமல் எதுவும் நடக்கவில்லை. அவன் அறிந்தே தான் இங்கு அனைத்தும்..யாவுமானவன் யாதொன்றும் அறியாதவன் அல்லன். என் பிறப்பும் அவனுக்கானது என் முடிவும் அவனுள் அடங்குவதே . அவனே முதலும் அவனே முடிவும். வாழ்வும் அவனே வைகுந்தமும் அவனே..
கண்ணனால் நான் கண்ணனுக்காகவே நான் என்பதை மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறாள் .இதில் ஒளிந்திருக்கும் உறுதியும் இவனைக் காதலித்த காரணத்தினால் பட்ட வேதனையின் வெளிப்பாடும் அறியலாம்..விளையாடுகிறான் விமலன் என்று சொல்லிவிட்டாளே
வாழ்வின் இறுதி நிலையில் நின்று அவனைக் காணாமல் தேடி உறைந்து நிற்கும் அவளின் மனச் சுமையை அறிய முடிகிறதா.?.:(
No comments:
Post a Comment
மறுமொழி இடுக!