44.மாதலி தேர்முன்பு கோல்கொள்ள மாயன்
பாடல் 44மாதலி தேர்முன்பு கோல்கொள்ள மாயன்
இராவணன் மேல் சரமாரி
தாய்தலை யற்றற்று வீழத் தொடுத்த
தலைவன் வரவெங்குங் காணேன்
போதலர் காவில் புதுமணம் நாறப்
பொறிவண்டின் காமரங் கேட்டுஉன்
காதலி யோடுடன் வாழ்குயி லே!என்
கருமாணிக் கம்வரக் கூவாய்
விளக்கம் :
மாதலி தேர் முன்பு கோல் கொள்ள - மாதலி என்பவன் இராமனுக்காக முன்புறமாகத் தேரோட்ட
மாயன் இராவணன் மேல் சரமாரி - மாயம் செய்யும் இராவணன் மீது சரமாரி (விடாமல் அடிப்பது )
தாய் தலை அற்று அற்று வீழத் தொடுத்த - பத்துத்தலை இராவணன் ஒவ்வொரு தலையாக அறுந்து அறுந்து வீழ விடாமல் தொடுத்த
தலைவன் வர எங்கும் காணேன் - என் தலைவன் வர எங்கும் காணேன்..அவர் வரப் பார்க்கலையே
போது அலர் காவில் புதுமணம் நாற - மலரும் பருவத்தில் உள்ள மலர்கள் உள்ள சோலையிலே புதுமணம் கமழ
பொறி வண்டின் காமரம் கேட்டு - உடம்பில் புள்ளிகள் கொண்ட வண்டின் இசைப்பாடல் கேட்டு
உன் காதலியோடு உடன் வாழ் குயிலே !- உன் காதலியுடன் வாழ்கின்ற குயிலே
என் கருமாணிக்கம் வரக் கூவாய் ! - என் கருநிற மாணிக்கம் வரக் கூவுவாயாக !
மாதலி என்பவன் இந்திரனின் தேரோட்டி..ஆனால் இந்திரன் போரிட்டதே இல்லை..புறமுதுகிட்டு ஓடுபவன்..ஆனால் மாதலி இராமனுக்காக தேரோட்டியாக வந்த பொழுது பின்பக்கமாக ஓடவில்லை..கம்பீரமாக முன்புறம் தேரோட்டினான்.. அதனால்தான் "முன்பு " என்ற சொல்லைப் பயன்படுத்துகிறாள்.. மாயம் செய்யும் இராவணன் மீது சரமாரியாக (அசராமல் அடிப்பது ) அம்பு மழை பொழிய , இராவணனது பத்துத் தலை ஒவ்வொன்றாக அறுந்து அறுந்து வீழ வைத்த என் தலைவன் , எனைத் தேடி வர எங்கும் காணேன்..தவிப்போடு சொல்கின்றாள்..அவர் வரக் காங்கலையே..
மலரும் பருவத்தில் உள்ள மலர்கள் புதிதாய்ப் பூத்து மணம் கமழும் சோலையில் , புள்ளி வண்டின் இசைப்பாடல் கேட்டு தன் காதலியோடு மகிழ்வோடு வாழும் குயிலே! நீ உன் துணையோடு இருக்கிறாய் அல்லவா..எனக்கும் துணை வேண்டும் ..என் கருமை நிற மாணிக்கம் எனைத் தேடி வரக் கூவுவாயாக !
இந்தப் பேதையின் தவிப்பும் வேதனையும் மனதின் அடி ஆழம் வரை எனைத் தாக்குகிறது ..அன்பின் கோதையே..உனை ஆற்றுப்படுத்த உம் தலைவன் விரைவில் வருவான் !
No comments:
Post a Comment
மறுமொழி இடுக!