Saturday 24 September 2016

79.சலங்கொண்டு கிளர்ந்தெழுந்த தண்முகில்காள் மாவலியை

79.சலங்கொண்டு கிளர்ந்தெழுந்த தண்முகில்காள்  

பாடல் :79
சலங்கொண்டு கிளர்ந்தெழுந்த தண்முகில்காள் மாவலியை
நிலங்கொண்டான் வேங்கடத்தே நிரந்தேறிப் பொழிவீர்காள்
உலங்குண்ட விளங்கனிபோல் உள்மெலியப் புகுந்துஎன்னை
நலங்கொண்ட நாரணற்கென் நடலைநோய் செப்புமினே.

விளக்கம் :

சலம் கொண்டு கிளர்ந்து எழுந்த தண் முகில்காள் - நீர் கொண்டு கிளர்ந்து எழுந்த குளிர்ந்த மேகங்களே !
மாவலியை நிலங் கொண்டான் வேங்கடத்தே நிரந்து ஏறிப் பொழிவீர் காள்  - மன்னன் மாவலியினை மூன்றாம் அடியில் நிலத்தில் வைத்து அவனைக் கொண்டவனின் வேங்கடத்திலே வரிசையாக மேலேறிப்  பரவி பொழியும்  மேகங்களே !
உலங்கு உண்ட விளங்கனி போல் உள் மெலியப் புகுந்து என்னை -  கொசு உண்ட விளாம்பழம் போல் என் உள்ளே புகுந்து என்னை மெலிய வைத்து
நலம் கொண்ட நாரணனுக்கு என் நடலை நோய் செப்புமினே ! - என் நலத்தைக் கொள்ளை கொண்ட நாரணனுக்கு என்  துன்ப  நோய் சொல்லுங்களேன் !


சலம் - நீர்.. (not ஜலம் ) கடலில் இருக்கும் நீரை எடுத்துக் கொண்டு கிளர்ந்து எழுந்து ( சாதாரணமாக எழுவதல்ல பார்க்கவே பிரம்மிப்பைத் தருமளவுக்கு எழுதல் ) தண் ( குளிர்ந்த ..தண்ணீர் என்பது குளிர்ந்த நீர் வெந்நீர் என்பது சூடான நீர் ஆனா நம்ம பேச்சு வழக்கில் சுடு தண்ணீர்ன்னு சொல்றோம் சுடு நீர் அல்லது வெந்நீர் என்றுதான் சொல்லணும் ) குளிர்ந்த மேகங்களே !

ஓரடியில் மண்ணையும்  ஈரடியில் விண்ணையும் மூன்றாவது அடிக்கு மாவலியின் தலையையும் கொண்டவனின் வேங்கட மலையிலே

Image result

வரிசையாக மேலேறிப் பரவி மழை பொழியும் மேகங்களே !

Image result

உலங்கு உண்ட விளாம்பழம் போல.. விளாம்பழத்தைக் கொசு மொய்த்து உள்ளிருக்கும் சாற்றை எடுத்து விட்டால் எப்படி வெறும் கூடு மட்டும் இருக்குமோ அது போல , நான் அந்த நாரணனின் மீது வைத்த காதலானது என் உடம்பில்  உட்புகுந்து என்னை மெலிய வைத்து , எனக்குத் துன்பத்தைக் கொடுத்தது..இப்படி என் நலம் அவன்பால் சென்றதால் எனது இந்நிலைக்கு அவனே பொறுப்பு .அவனைப் பார்த்தால் நான் எப்பேர்ப்பட்ட துன்ப நோயால் வாடுகிறேன் என்று சொல்லுங்களேன் !
\
உழைச்சு ஓடாப் போயிட்டேன் என்று ஒரு சொலவடை உண்டு.. இவள் காதலிச்சு வெறும்  கூடா போயிட்டா..உள்ளே வந்து உயிர் கொடுப்பதும் அல்லது மிச்சம் எடுப்பதும் அவன்பாடு..

No comments:

Post a Comment

மறுமொழி இடுக!