Monday 19 September 2016

77.மின்னாகத் தெழுகின்ற மேகங்காள் வேங்கடத்துத்


77.மின்னாகத் தெழுகின்ற மேகங்காள் வேங்கடத்துத்
பாடல் :77
மின்னாகத் தெழுகின்ற மேகங்காள் வேங்கடத்துத்
தன்னாகத் திருமங்கை தங்கியசீர் மார்வற்கு
என்னாகத் திளங்கொங்கை விரும்பித்தாம் நாடோறும்
பொன்னாகம் புல்குதற்கென் புரிவுடைமை செப்புமினே

விளக்கம் :

மின்னாகத்து எழுகின்ற மேகங்காள் - உடம்பில் மின்னல் தோன்ற எழும் மேகங்களே
வேங்கடத்துத் தன் ஆகத் திருமங்கை தங்கிய சீர் மார்வற்கு - வேங்கடத்தான் தன் உடம்பில் திருவாகிய தேவியை தங்க வைத்திருக்கும் அந்த  சீர்  திரு வாழ்மார்பனானவனிடம்
என்னாகத்து இளம் கொங்கை விரும்பித் தாம் நாள்தோறும் - என் உடம்பில்உள்ள இளம் மார்பை நானே விரும்பி  நாள்தோறும்
பொன்னாகம் புல்குதற்கு என் புரிவுடைமை செப்புமினே ! -  அவனது பொன் உடம்பினை அணைத்துக் கொள்ள ஆசைப்பட்டதாகச் சொல்லுங்கள்

ஆகம் என்றால் உடல் /மார்பு என்று பொருள் உண்டு. இங்கே எப்படி எடுத்தாலும் பாடல் பொருள் அழகாகவே வருகின்றது :) தங்கள் உடம்பில் /மார்பில் மின்னல் தோன்ற எழும் மேகங்களே ! வேங்கடத்தானின் மார்பில் வாழும் திருமங்கை தங்கிய சீர் மார்பனிடம் போய்ச் சென்று , என் மார்பின் இளம் கொங்கைகளை விரும்பி , நாள் தோறும் அந்தப் பொன் உடம்பை அணைக்க /புணர (புல்கு = புணர்தல்/அணைத்தல் ) என் ஆசை (புரிவு ) உடைமையைச் சொல்லுங்கள் !

இந்தப் பெண்ணுக்குத்தான் எவ்வளவு ஆசை.. தன் உடம்பில் மின்னல் தோன்ற எழும் மேகங்களிடம்

அந்தத்  திருவாழ்மார்பனிடம் சொல்லுங்கள் என்கிறாள்.. இவள் தகப்பனார் பெரியாழ்வாரும் தனது திருப்பல்லாண்டு பாடலில்
வடிவாய் நின் வல மார்பில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு என்கிறார் .

அந்தப் பொன் உடம்பை நாள்தோறும் விரும்பி அணைக்கவே என் மனம் விரும்பிகிறது.. அவர்தம் மார்பை என் இளம் மார்போடு அணைத்தே கிடக்க விரும்புகிறேன் அதுவே என் ஆசை என்று அவனிடம் சென்று சொல்லுங்கள் !


பக்தி புனிதம்  என்பதெல்லாம் பிறகு..இவளுக்கு திருவாழ்மார்பன் மீது பித்து.. அளவற்ற காதல் .இள வயதில் தோன்றிய காதல் பசுமரத்தாணி போல ..மாறவே மாறாது..மனத்தை விட்டு அகலாது.. இளம் வயதில் அவனிடம் கொண்ட காதலும் அதன் பொருட்டு வந்த காமமும் தன் பாடல்களில் அழகாக வடித்திருக்கிறாள் ஆண்டாள்..

திருப்பதி மலை வாழும் வெங்கடேசா 
புதுவையர் கோன் மகள் நாடும் சீனிவாசா..!

No comments:

Post a Comment

மறுமொழி இடுக!