76.ஒளிவண்ணம் வளைசிந்தை உறக்கத்தோ டிவையெல்லாம்
பாடல் :76
ஒளிவண்ணம் வளைசிந்தை உறக்கத்தோ டிவையெல்லாம்
எளிமையா லிட்டென்னை ஈடழியப் போயினவால்
குளிரருவி வேங்கடத்தென் கோவிந்தன் குணம்பாடி
அளியத்த மேகங்காள் ஆவிகாத் திருப்பேனே
விளக்கம் :
ஒளிவண்ணம் வளை சிந்தை உறக்கத்தோடு இவையெல்லாம் - மிகுந்த ஒளியும், வளையல்களும்,சிந்தனைகளும் உறக்கமும் இவை எல்லாம்
எளிமையால் இட்டு என்னை ஈடழியப் போயினவால் - நான் எளிமையானதில் என்னை விட்டு நீங்கின
குளிர் அருவி வேங்கடத்து என் கோவிந்தன் குணம் பாடி - குளிர்ந்த நீர் கொண்ட அருவி வேங்கட மலை என் கோவிந்தன் குணம் பாடி
அளியத்த மேகங்காள் ஆவி காத்து இருப்பேனே ! - அருள் செய்யும் மேகங்களே என் உயிர் காத்து இருப்பேனே !
ஒளிமிகுந்த என் தேகம் ஒளி இழந்து விட்டது.. நல்ல நிறத்தில் இருந்த என் உடலில் கவலையால் வாடியதில் பசலை நிறம் பாய்ந்தது..ஊன் உறக்கம் இன்றி கவலைப்பட்டதால் , உடல் மெலிந்ததில் வளையல்கள் கழண்டு விழுந்துவிட்டன.. (அன்பு நாதனே அணிந்த மோதிரம்வளையலாகவே துரும்பென இளைத்தேன் அந்த மோதிரம் ஒட்டியாணமாய் மாறும் முன்னமே அன்பே அழைத்தேன் ) எந்நேரமும் கண்ணனைத் தவிர வேறு சிந்தனை இல்லை அவனைச் சேராத துயரத்தில் வேறு சிந்திக்க மூளை மறுத்து/மரத்துப் போனது ..இமைகள் மூட மறுத்தன உறக்கம் கண் விட்டுச் சென்றது..ஏன் இவை எல்லாம் என்னை விட்டு நீங்கின? எப்பொழுதும் உன்னையே நினைத்து நினைத்து உருகியதன் விளைவு இவை. கோதை எளிமையானதில் விட்டு நீங்கின.. அலங்காரம் செய்து கொள்ளாமல் வேறு எவற்றிலும் கலந்து கொள்ளாமல் ஒரு தலைக் காதலால் தவிக்கிறாள் .இந்தத் திரைப்பாடல் நினைவுக்கு வந்தது .
"விழாக்களில் இவள் தனித்திருக்கிறாள்
கனாக்களில் தினம் விழித்திருக்கிறாள்..
எங்கிருந்து வந்தாயடா...எனைப் பாடு படுத்த..நீ எனைப் பாடுபடுத்த..
என்னை என்ன செய்தாயடா..எனைத் தேடி எடுக்க நான் எனைத் தேடி எடுக்க..."
சமீபத்தில் நான் மிகவும் ரசித்த கவிதை ஒன்று இப்பாடலுக்கு மிகப் பொருந்துவதாக உணர்கின்றேன் அது
மலர்தான் கருகியிருக்கிறது
இலைகள் தான் உதிர்ந்திருக்கின்றன
உன் அன்பின் ஒரு துளியில்
மீண்டும் துளிர்க்க
வேரில் ஜீவனைத் தேக்கி வைத்திருக்கிறேன்
ஒரு பெண்ணுக்கு எது அழகோ அவை என்னை விட்டு நீங்கின.. இருப்பினும் என் வேர் நனைந்தால் நான் மீண்டும் துளிர்ப்பேன்..இந்த வேரை இன்னமும் விட்டு வைத்திருப்பதே நீ வந்து தொட்டுப் பூக்க வைப்பாய் என்ற நப்பாசையில் தான்
No comments:
Post a Comment
மறுமொழி இடுக!