Wednesday, 21 September 2016

78.வான்கொண்டு கிளர்ந்தெழுந்த மாமுகில்காள் வேங்கடத்துத்

78.வான்கொண்டு கிளர்ந்தெழுந்த மாமுகில்காள் வேங்கடத்துத்
பாடல் :78
வான்கொண்டு கிளர்ந்தெழுந்த மாமுகில்காள் வேங்கடத்துத்
தேன்கொண்ட மலர்ச்சிதறத் திரண்டேறிப் பொழிவீர்காள்
ஊன்கொண்ட வள்ளுகிரால் இரணியனை யுடலிடந்தான்
தான்கொண்ட சரிவளைகள் தருமாகில் சாற்றுமினே.

விளக்கம் :

வான்கொண்டு கிளர்ந்து எழுந்த மாமுகில்காள் - மழை நீரைத்  தன்னகத்தே கொண்டு வானிலே கிளர்ந்து எழுந்த பெரும் முகில்களே !
வேங்கடத்துத் தேன்கொண்ட மலர்ச் சிதறத் திரண்டு ஏறிப் பொழிவீர்காள் - வேங்கடத்து மலையில் உள்ள தேன் கொண்ட மலர் சிதறும் அளவுக்குத் திரண்டு ஏறிப்பொழியும் மேகங்களே !
ஊன்கொண்ட வள்ளுகிரால் இரணியனை உடல் இடந்தான் -   தசையைக் கொண்ட தன் கூரிய நகங்களால்  இரணியனின் உடல் பிளந்தவன்
தான் கொண்ட சரி வளைகள் தருமாகில் சாற்றுமினே -  எடுத்துக் கொண்ட என் சரி வளையைத் திருப்பித் தருமாறு அவரிடம் சொல்லுங்கள் !

கடலில் இருந்து கவர்ந்த மழை நீரை எடுத்துக் கொண்டு வான் சென்று கிளர்ந்து எழுந்த பெரும் மேகங்களே ! வேங்கடத்து மலைதனில் மலரும் மலரில் தேனினைச் சிதறடிக்கும் அளவுக்கு திரண்டு பொழிபவர்களே !

மிகவும் மெல்லியது மலர் ஆனால் இரக்கமில்லாமல் அதனின் தேனினைச் சிதறடிக்கும் உங்களைப் போலவே தான் உங்கள் நிறம் கொண்ட கார்மேக வண்ணனும். மெல்லிய என் உடலின் சரிந்த வளைவுகள் வடிவற்றுப் போயின அவனின் நினைவுகளே உண்டதால்.. இப்படி என் உடலின் ஊன் உண்ட/கொண்ட கூரிய நகத்தால் இரணியனைப் பிளந்தவனிடம் சென்று அவனால் நான் இழந்த என் உடல் நலத்தைத் திருப்பித் தருமாறு சொல்லுங்களேன்

Image result for hiranya vatham
இரணிய வதம் 
இரணிய வதம் செய்த நரசிம்மனை இங்கே குறிப்பிடுகிறாள் ஆண்டாள்.. அந்த இரணியன் உடலைப் பிளந்து எப்படி அவனது ஊனை (உடம்பை ) நோகடித்தானோ அதைப் போலவே , என் உடல் நலத்தையும் பிடுங்கிக் கொண்டவன் என்று குற்றம் சாட்டுகிறாள் .எப்பொழுதுமே அவனையே நினைச்சு அவன் வரவுக்காக ஏங்கியதில் மெலிந்த தன் உடலும் அதனால் சரிந்த தன் வளைவுகளும் அவனே கொண்டான்..அதற்கு அவனே காரணம் அவனைப் பார்த்தால்  அதைத் திருப்பித் தரும்படி சொல்லுங்கள் என்கிறாள்..காதலனைக் கோபமாக  அரக்கன்  எனச் சொல்கிறாள்..


இப்படியா அவளைத் தொடாமலே அவள் ஊன் தின்பது ? என்னாது..  தொட்டால் தானே திங்க முடியுமா? தொடாமலும் திங்கலாம்..காதலில் மட்டும் இலக்கணங்கள் மாறும்.. வல்லினத்தின் முதலில் வலி மிகும். (ஒற்று வரும் ) 
இவள்தன் மெல்லின தேகத்தில் ஒற்றாவிடில் வலி மிகும் :) வலி மிகும் இடங்கள் மிகா இடங்கள் காதலில் இடம் மாறும் :)
இலக்கணம் மாறுதோ..... ;) 

No comments:

Post a Comment

மறுமொழி இடுக!