75.மாமுத்த நிதிசொரியும் மாமுகில்காள் வேங்கடத்துச்
பாடல் :75
மாமுத்த நிதிசொரியும் மாமுகில்காள் வேங்கடத்துச்
சாமத்தின் நிறங்கொண்ட தாடாளன் வார்த்தையென்னே
காமத்தீ யுள்புகுந்து கதுவப்பட்டு இடைக்கங்குல்
ஏமத்தோர் தென்றலுக்கிங் கிலக்காய்நா னிருப்பேனே
விளக்கம் :
மாமுத்த நிதி சொரியும் மாமுகில் காள் - பெரும் முத்துக்களைப் போன்று வெண் துளிகள் பொழியும் பெரும் மேகங்களே
வேங்கடத்துச் சாமத்தின் நிறம் கொண்ட தாடாளன் வார்த்தை என்னே ? - திரு வேங்கட மலையின் சாமத்தின் (நடு இரவு கருமை நிறம் ) கொண்ட தாடாளனிடம் இருந்து சேதி எதுவும் எனக்கு உண்டா ?
காமத்தீ உள் புகுந்து கதுவப்பட்டு இடைக் கங்குல் - காமத் தீ என் உள் புகுந்து எனைக் கவ்வி இழுக்க முன் இரவுக்கும் நடு இரவுக்கும் இடையில்
ஏமத்தோர் தென்றலுக்கு இங்கு இலக்காய் நான் இருப்பேனே -வீசும்இன்பம் தரும் தென்றலுக்கு இங்கு இலக்காய் நான் இருப்பேனே
பெரும் முத்துக்களைப் போன்று வெண் துளிகளைப் பொழியும் பெரும் முகில்களே !
வேங்கடத்து மலையில் நடுநிசி நேரத்தின் நிறம் கொண்ட தாடாளன் சொன்ன வார்த்தை என்ன?(தாடாளன் - பெருமை/முதன்மை மிக்கவன் .திருக்காழிச் சீராம விண்ணகரம் தாடாளன் (சீர்காழியில் உள்ள 108 வைணவ தளங்களில் ஒன்று திரி விக்கிரமன் ..உலகளந்த பெருமாள் கோலம் )
தாடாளன் |
முன்பே ஒரு பாடலில் சொல்லி இருக்கிறேன்..மார்கழிக் காலையும் மழை மாலையும் தனித்திருப்போருக்கு சாபம் என.. போலவே ஏகாந்தம் தரும் தென்றல் காற்று , நடுச் சாமத்தின் தனிமை தன் துணையின்றி இருப்பவர்களுக்கு வேதனை தரும் வல்லமை படைத்தவை .. பகலின் பேரிரைச்சல் கூட ஏதோ பேரமைதியைத் தந்து விட்டுச் செல்லும் . ஆனால் துணையற்ற சாமத்தின் அமைதி பேரிரைச்சலாகத் துன்புறுத்தும்..
மோகத்தில் தவித்து இருக்கும் பெண்ணின் தனிமை எத்தகு துன்பம் வாய்ந்தது என்று ஆண்டாளின் பாடல் வாயிலாக நாம் உணரலாம் .
சாமம் ஏமம் என்ற சொல்லாடல் கிராமத்தில் இன்னமும் புழங்கப் படுகிறது.
நான் கவனித்தவரையில் ஆண்டாளுக்கு உலகளந்த உத்தமன் என்ற அவதாரத்தின் மீது அலாதிப்ரியம் இருக்கிறது :)
அடிக்கடி அவரைத்தான் அழைக்கிறாள்..
No comments:
Post a Comment
மறுமொழி இடுக!