Tuesday, 12 July 2016

60. இம்மைக்கு மேழேழ்பி றவிக்கும் பற்றாவான்

60.இம்மைக்கு மேழேழ்பி றவிக்கும் பற்றாவான்
பாடல் 60:
இம்மைக்கு மேழேழ்பி றவிக்கும் பற்றாவான்
நம்மையு டையவன் நாராய ணன்நம்பி
செம்மை யுடையதி ருக்கையால் தாள்பற்றி
அம்மிமி திக்கக்க னாக்கண்டேன் தோழீநான்

விளக்கம் : 
இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான் - இந்தப் பிறவிக்கும் இன்னும் ஏழு ஏழு பிறவிக்கும் இவனே நமக்குப் புகலிடம் இவன் திருவடிகளே அடைக்கலம்
நம்மை உடையவன் நாராயணன் நம்பி - என்றும் நமக்கானவன் நாராயணன் நம்பி
செம்மை உடைய திருக்கையால் தாள் பற்றி - சிவந்த அவர்தம் திருக் கையால் என் கால்களைப்பற்றி
அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழீ நான் - அம்மி மீது வைத்து அந்த அம்மியை மிதிக்கக் கனாக் கண்டேன் தோழீ நான்

இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும்...இதை எங்கையோ கேட்ட மாதிரி இல்ல..ஆங்...திருப்பாவையில் 29வது பாடல்
சிற்றம் சிறுகாலே சென்றுன்னைச் சேவித்து
உன் பொற்றாமை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக்  கொள்ளாமல் போகாது
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்
உன் தன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட் செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோ எம் பாவாய்
எனக்கு இந்தப் பாடல் மொட்டை மனப்பாடம்..ஏனெனில் மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் நிதம் மார்கழிக் காலை பூஜையில் இதைப் பாடுவார்கள் .அதைக்  கேட்டுக் கேட்டு எப்பொழுது எங்கே பெருமாளைப் பார்த்தாலும் திருப்பாவையின் கடைசி இரண்டு பாடல்களைச் சொல்லிக் கொள்வேன் மனத்திற்குள்..

இப்பாடலின் கருப்பொருள் இந்தப் பிறவியில் மட்டுமல்ல இன்னும் ஏழேழு பிறவிகளுக்கும் நாராயணனே நமக்குப் புகலிடம்..அவனிடமே நம் மனம் சரண் புகும்..நாராயணா உனக்கே உனக்கென்று என் மனத்தினை எழுதி வைத்து விட்டேன்.(யார் யார் என்ன என்ன உயில் எழுதறாங்க ஆண்டாள் என்ன எழுதி வச்சிருக்கா பாருங்க..:) ) எப்பவுமே நான் உனக்குத்தான் ..உன் திருவடிகள் மட்டுமே எனக்குத் தஞ்சம்..இது மட்டுமே என் விருப்பம்..இதைத் தாண்டி மற்ற விருப்பம் ஏதாவது வந்துட்டா அதை நீ திரும்பவும் மாத்திடு :)

 கோதையின் இந்தப் பிடிவாதமும் அழுத்தமும் தான் என்னைக் கவர்ந்தது..தகுதியான ஒன்றின் மீது பற்று வைத்து அதை அடையும் உறுதியும் கொண்டாள்..அவள் கிடைத்தற்கு அரிய கடவுளின் மீது பற்று கொண்டது சரியா தவறா என்ற வாதத்திற்குள் எல்லாம் நாம் போக வேண்டாம்..அவள் காதல் உன்னதமானது..அவள் உறுதி உயர்ந்தது..கண்ணன் கள்வனே ஆனால்  ஒருவனுக்கு மட்டுமே முந்தானை விரிப்பேன் அது கண்ணன் மட்டுமே என்ற உயரிய பண்பாட்டை உலகுக்கு உணர்த்தியவள்..காலம் காலமாக நம் தமிழ்ப் பெண்களின் பிரதிநிதி..

வாங்க இந்தப் பாடலில் என்ன சொல்கிறாள் என்று பார்ப்போம்.. திருப்பாவையில் கொடுத்த அதே உறுதியே இப்பாடலிலும் . இந்தப் பிறவியில் மட்டுமல்லாது இன்னும் ஏழேழு பிறவிக்கும் இந்த நாராயணனே தனக்குத் தஞ்சம் என்கிறாள்..அவள் சொன்னது இன்று உண்மையாகவே ஆகிவிட்டது பாருங்கள் :) எத்தனை பேர் அவளை ஏளனம் செய்திருக்கக்கூடும் கடவுளைக் காதலிக்கிறாள் பித்து பிடித்தவள் நடக்குமா இது அடுக்குமா என்று.. ஆனால் எட்டாம் நூற்றாண்டில் பிறந்த ஆண்டாள் இன்று எத்தனை நூற்றாண்டு கடந்தும் பெருமாளோடு உற்றவளாக உரிமையுடன் நிற்கின்றாள்..அவள் சொன்னது போன்றே ஆகிவிட்டது தானே..உண்மைக் காதலின் வலிமை எத்தகு தன்மை வாய்ந்தது பாருங்கள் :)



நமக்கே உடையவன் என்று உரிமை கொள்கிறாள்..அடியார்க்கு அடியவன் .. சிவந்த தன் திருக் கரங்களால் ஆண்டாளோட காலைப் பிடித்து அம்மி மீது வைக்கின்றாராம்..ஆண்டவனே ஆனாலும் பொண்டாட்டி காலைப் பிடிச்சுத் தான் ஆகணும் பார்த்துக்கிடுங்க :)

அது என்ன செம்மையான திருக்கை..சரண் என்று புகுந்த அடியவருக்கு அருள்  கொடுத்துக் கொடுத்துச் சிவந்த கரங்கள்..ஆகவே அது திருக்கரங்கள்..

ஆமா அம்மி மிதிக்கிற சம்பிரதாயம் எதுக்காம்..? அம்மி போல உறுதியாக இருக்க வேண்டும் வாழ்க்கையில் எந்தப் பிரச்னை வந்தாலும் மன உறுதியுடன் நிதானமாக எதிர்கொள்ள வேண்டும் அதற்காக..

No comments:

Post a Comment

மறுமொழி இடுக!