Friday, 29 July 2016

64.கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ

64.கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ

நாச்சியார் திருமொழி ஏழாம்பத்து ஆரம்பம்..கடலில் பிறந்து கண்ணனின் கைகளிலே தவழும் வெண்சங்கைப் பார்த்துப் பொறாமையோடு ஆண்டாள் பாடும் பத்துப் பாடல்கள்..கண்ணனின் திருவாய் முத்தம் வேண்டி , அவன் வாயமுதம் எப்படி இருக்கும் என்று வெண் சங்கினைப் பார்த்துக் கேட்கின்றாள் .  தான் அனுபவிக்க வேண்டிய இன்பத்தை , அனுபவிக்கும் வெண் சங்கினைப் பார்க்கப் பார்க்க ஆற்றாமையாக இருக்கிறது ஆண்டாளுக்கு.. இனி அந்தப் பத்துப் பாடல்கள் :)

பாடல் :64
கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்தி ருக்கும்மோ
மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே

விளக்கம் :
கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ - பச்சைக் கருப்பூரம் மணக்குமோ அல்லது தாமரைப்பூ மணம் வருமோ
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்து இருக்குமோ - கண்ணனின் பவளம் போன்ற சிவந்த வாய் மிக இனித்துக் கிடக்குமோ
மருப்பு ஒசித்த மாதவன்தன் வாய்ச்சுவையும் நாற்றமும் - குவலய பீடம் என்னும் யானையின் கொம்பை உடைத்த மாதவனின் வாயின் சுவையும் அதன் மணமும் எப்படி இருக்கும் என
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல் ஆழி  வெண்சங்கே - வேண்டி விரும்பிக் கேட்கின்றேன் அதைச் சொல்லேன் கடல் வெண்சங்கே

கருப்பூரம் என்பது இப்பொழுது கோவிலில் ஏற்றும் கற்பூரம் (சூடம் ) அல்ல . ஆண்டாள் சொல்வது பச்சைக் கருப்பூரம் இன்று விலை அதிகம்.. ஒருகாலத்தில் தமிழகத்தில் இருந்த மரம் இன்று வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது..இதனாலேயே விலை அதிகம்..நம்ம பணக்காரக் கடவுளான திருப்பதி ஏழுமலையான் மட்டும் இப்ப இந்தக் கருப்பூர மணத்தை அனுபவிக்கிறார்..


ஆண்டாள் கடலில் பிறந்து கண்ணனின் கையில் உள்ள வெண் சங்கினைப் பார்த்துக் கேட்கின்றாள்..கண்ணனின் பவளம் போன்ற சிவந்த வாய் தொட்டு ரசிக்கும் பாக்கியம் பெற்றது வெண் சங்கு ஆதலால் அதனிடம் தானே கண்ணனின் திருவாயமுதம் எப்படி இருக்கும் என்று கேட்டு அறிந்து கொள்ள முடியும்..


 கண்ணனின் பவள வாய் எப்படி மணக்கும் ? பச்சைக் கருப்பூர மணம் போல மணக்குமா ?தாமரைப் பூவின் மணம் மணக்குமோ ?பவளம் போன்ற அந்த செவ்வாய் மிக இனிப்பாக இருக்குமோ ? குவலய பீடம் என்னும் யானையின் தந்தத்தை முறித்த மாதவனின் வாயின் சுவையும் அதன் மணமும் எப்படி இருக்கும் என்று விருப்பம் உற்றுக் கேட்கின்றேன்  என்னிடம் சொல்லேன் கடல் வெண் சங்கே !
வாவ்! வெறுமனே முத்தம் அல்ல வாயின் சுவை என்கிறாள்..இதழ்களைச் சுவைத்திருப்பாய் தானே வெண் சங்கே என்று ஆசையுடன் கேட்கிறாள்..


கண்ணன் மீதான மோகம் ஆண்டாளை எப்படி எல்லாம் யோசிக்க வைத்திருக்கிறது.. கண்ணன் இதழ் எப்படி மணக்கும் அதன் சுவை எப்படி இருக்கும் என்று சங்கிடம் குசலம் விசாரிக்கிறாள் :)

No comments:

Post a Comment

மறுமொழி இடுக!