Saturday, 23 July 2016

62 குங்கும மப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து

62.குங்கும மப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து
பாடல் 62 :
குங்கும மப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து
மங்கல வீதிவ லம்செய்து மணநீர்
அங்கவ னோடுமு டஞ்சென்றங் கானைமேல்
மஞ்சன மாட்டக்க னாக்கண்டேன் தோழீநான்.

விளக்கம் : 
குங்குமம் அப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து - உடல் முழுவதும் குங்குமம் அப்பிக் குளிர்ச்சியான சந்தனமும் பூசி
மங்கல வீதி வலம் செய்து மணநீர் - தோரணம் கட்டப்பட்ட மங்கலகரமான வீதிகளில் வலம் செய்து,  நறுமணம் கொண்ட வாசனைத் திரவியங்கள் கொண்ட நீரினைக் கொண்டு
அங்கு அவனோடு உடன் சென்று அங்கு ஆனை மேல் - கண்ணனோடு ஆனையின் மீது அமர்ந்து செல்லும்போது
மஞ்சனம் ஆட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்  - எங்களுக்கு மஞ்சனம் ஆட்டக் கனவு கண்டேன் தோழீ நான்

திருமணத்திற்காக அலங்காரமாக தோரணம் கட்டப்பட்ட வீதிகளில் ,கண்ணனோடு ஆனை மீதேறி (பாருங்க பெண் தனியா ஊர்வலம் வரல..கணவனோடு வருகிறாள்..இவர் தாம் என் கணவர் இவள் தாம் என் மனைவி என்று ஊருக்குப் பறை சாற்ற வலம் வருகின்றனர்.)
தீக்குண்டத்தில் தீ வளர்த்து வலம் செய்து பொரிமுகம் தட்டி முடிச்ச களைப்பு இருக்குமல்லவா..ஆதலால்உடல் முழுவதும் குங்குமம் அப்பி, குளிர்ச்சியான சந்தனமும் பூசி நறுமணம் மிக்க நீரினைக் கொண்டு ,அவள் தன் கணவன் கண்ணனோடு வருகின்ற வேளையிலே ,திருமஞ்சனம் செய்யக் கனவு கண்டாளாம் ஆண்டாள்..


அபிஷேகம் என்பதற்கு சுத்தமான தமிழ்ச் சொல் திருமஞ்சனம்..இச்சொல்லை வைணவத் தலங்களில் மட்டுமே சொல்கின்றனர்..கடவுளுக்கு மட்டுமே செய்யப்படும் திருமஞ்சனத்தை இங்கே கடவுளின் மனைவியாகி விட்டபடியால் ஆண்டாளுக்கும் சேர்த்தே செய்வது போலக் கனவு கண்டதாக சொல்கிறாள் ஆண்டாள் ..இனி அவருக்கு என்ன கௌரவம் கிடைக்கின்றதோ அது அவளுக்கும் கிடைப்பதே முறையானது..அவரின் பாதி அவளானாள் :)
ஒரு சினிமாப் படத்தில் இந்த வரிகளை அழகாகப் பாடலாக்கி இருந்தனர்..














No comments:

Post a Comment

மறுமொழி இடுக!