Thursday, 7 July 2016

59.வாய்நல்லார் நல்லம றையோதி மந்திரத்தால்

59.வாய்நல்லார் நல்லம றையோதி மந்திரத்தால்
பாடல் :59
வாய்நல்லார் நல்லம றையோதி மந்திரத்தால்
பாசிலை நாணல்ப டுத்துப்ப ரிதிவைத்து
காய்சின மாகளி றன்னானென் கைப்பற்றி
தீவலம் செய்யக்க னாக்கண்டேன் தோழீநான்

விளக்கம் :
வாய் நல்லார் நல்ல மறையோதி மந்திரத்தால் - நன்கு கற்றறிந்த வேதம் ஓதுவதைத் தொழிலாகக் கொண்டவர்கள் நல்ல மறை ஓதி மந்திரத்தால்
பாசு இலை நாணல் படுத்துப் பரிதி வைத்து - தீக்குண்டதைச் சுற்றி பசுமையான நாணலைப் பரப்பி சின்னச்சின்ன மரக் குச்சிகளை அதில் இட்டு
காய் சின மா களிறு அன்னான் என் கைப்பற்றி - கடுங்கோபம் கொண்ட பெரிய யானையைப் போன்ற கண்ணன் என் கையைப் பற்றி
தீவலம் செய்யக் கனாக் கண்டேன் தோழீ நான் - அந்த தீக்குண்டதைச் சுற்றி வர கனவு கண்டேன் நான்

நன்கு கற்றறிந்த மறை ( வேதம் ) ஓதுவது,  வேள்வி செய்வதையே தொழிலாகக் கொண்டவர்கள் , நல்ல மறையோத ,  அந்தச் சடங்குகளுக்குரிய மந்திரங்களைச் சொல்ல , தீ வளர்த்து அந்த தீக்குண்டதைச் சுற்றிப் பசுமையான நாணலைப் பரப்பி , சின்னச்சின்ன மரக் குச்சிகளை அந்தத் தீயிலே இட்டு ,  கடுங்கோபம் கொண்ட யானையைப் போன்ற கம்பீரம் மிக்க  கண்ணன் என் கையைப் பற்றி ,அவர்கள் வளர்த்த அந்தத் தீயைச் சுற்றி வரக் கனவு கண்டேன் நான்..



தந்தை கையால் கண்ணனுக்குத் தாரை வார்க்கப்பட்டு , கண்ணனின் மனைவியானாள் ஆண்டாள்.. திருமணம் முடிந்த கையோட தீவலம் மூன்று முறை வந்தால்தான் அத்திருமணம் முழுமையடைவதாக இந்துத் திருமண சடங்கு உண்டு.. ஆகவேதான் நெருப்பின் சாட்சியாக இவள் தான் என் மனைவி, இவனே தன் கணவன் என்று ஒருவருக்கொருவர் ஒப்பந்தமிட்டுக் கொள்கின்றனர்.. கணவரின் துண்டோடு பெண்ணின் முந்தானையை முடிந்து ஒருவருக்கொருவர் கைப்பிடித்துச் சுற்ற வேண்டும் :)
அது என்ன கடுங்கோபம் கொண்ட யானை ..யானையே கம்பீரம் தான்..ஆனா அமைதியான யானை எனில் யாரும் சீக்கிரம் நெருங்கிரலாம் போலன்னு நீங்க நினைச்சுடக் கூடாது..மதம் பிடித்த கோபம் மிக்க யானையை தூரத்தில் பார்த்தாலே இன்னும் நாலடி தள்ளி நிற்போம்..ஏனெனில் அதன் கெத்து அப்படி..இனிமே இந்தக் கோதைப் பொண்ணு கண்ணனுக்கு உரியவள்..அவளை வேற யாரும் ஏறெடுத்துப் பார்க்கப்பிடாது..அவளை யாரும் கணவன் அற்றவள் என நினைத்து நீங்க சீண்டப்பிடாது.. ஏன் இவளை சைட் கூட அடிக்கப்பிடாது..அவளைப்பற்றி தவறா மனசுல நினைச்சுக் கூடப் பார்க்கப்பிடாது..அப்படி நினைச்சா கோபம் கொண்ட பெரிய யானையைப் போன்றவன் அருகில் இருப்பதை ஒருமுறை பார்த்தாலே போதும்..உங்க தவறான எண்ணங்கள் தவிடுபொடி ஆகிடும்..அவ்ளோ எளிதாக அவளையும் தவறான எண்ணத்தோடு  நீங்க நெருங்கிட முடியாது..காப்பதற்கு காவலன் வந்து விட்டானே..அதான் கணவனைப் புகழ்வது போல , be careful ன்னு மறைமுக எச்சரிக்கை விடுக்கிறாள் ஆண்டாள் :)
எத்தனை பேர் இவள் புலம்புவது வீண் எப்படி அந்தக் கடவுளை அடைய முடியும் என்றெல்லாம் ஏளனம் பேசி இருப்பார்கள்..நல்லாப் பார்த்துக்கிடுங்க..சினம் கொண்ட பெரிய யானையைப் போன்றவன் அவள்  அருகே தான் இருக்கின்றான் :)

No comments:

Post a Comment

மறுமொழி இடுக!