Tuesday 12 July 2016

61.வரிசிலை வாள்முகத் தென்னைமார் தாம்வந்திட்டு

61.வரிசிலை வாள்முகத் தென்னைமார் தாம்வந்திட்டு
பாடல் :61
வரிசிலை வாள்முகத் தென்னைமார் தாம்வந்திட்டு
எரிமுகம் பாரித்தென் னைமுன்னே நிறுத்தி
அரிமுக னச்சுதன் கைம்மேலென் கைவைத்து
பொரிமுகந் தட்டக்க னாக்கண்டேன் தோழீநான்

விளக்கம் :
வரி சிலை வாள் முகத்து என் ஐ மார்தாம் வந்திட்டு - அழகிய வில் போன்ற புருவமும் ஒளிமிகுந்த முகத்தையும் கொண்ட என் தந்தை/அண்ணன் மார்கள் வந்து
எரிமுகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி - தீக்குண்டத்தை நன்றாக வளர்த்து அதன் முன்னே என்னை நிறுத்தி
அரிமுகன் அச்சுதன் கைம்மேல் என் கை வைத்து - சிங்கமுகன் கொண்டவன் அச்சுதன் கையின் மேல் என் கையையும் வைத்து
பொரி முகம் தட்டக் கனாக் கண்டேன் தோழீ நான் - அந்தத் தீயில் பொரியைத் தூவுவதாகக் கனவு கண்டேன் தோழீ நான்

அழகிய வில் போன்ற புருவமும் , ஒளிமிகுந்த முகத்தையும் கொண்ட என் தந்தை /அண்ணன்மார்கள் வந்து  அமர்ந்து , தீக்குண்டத்தை நன்கு வளர்த்து , அதன் முன்னே என்னை நிறுத்தி , சிங்க முகன் அச்சுதன் கையின்மேல் என் கை வைத்து அந்தத் தீயில் பொரியைத் தூவுவதாகக் கனவு கண்டேன் தோழீ .




அப்பா கைப்பிடிச்சு தாரை வார்த்துக் கொடுத்தார்..அடுத்து அண்ணன்கள் எங்கள் வீட்டில் நாங்கள் இதுவரை நெல்லில் உள்ள அரிசியைப் போன்று காத்த பெண்ணை ,அவள் பொரிந்து திருமணத்திற்குத்  தயாராகி விட்டாள் இனி அவளை உங்களுக்குக் கட்டிக் கொடுக்கறோம்  என்கிறார்கள்..என் ஐ மார்..ஐ என்றால் தலைவன், தகப்பன் ,தகப்பனுக்கு அடுத்தவனான தமையன் . கோதையின் உடன்பிறந்தோர் இருந்தார்களா அல்லது பெரியப்பா/சித்தப்பா மக்களோ.. தெரியல.. ஆனால் முறைமை செய்கிறார்கள்..:)
சிங்க முகன் அச்சுதன் கையின் மேல் கை வைத்து பொரியைத்  தீயில் தட்டி முறைமை செய்கின்றனர் :) 

வெளி நாடுகளில் எல்லாம் திருமணம் என்பது இருவர் ஒன்று சேர்வது..நம் நாட்டில் மட்டும்தான் திருமணம் என்பது இரு குடும்பம் ஒன்று சேர்வதற்கான விழா..உறவுகள் பலப்படுத்தப்படுகிறது..மச்சினன் (பெண்ணுக்கு அண்ணன்/தம்பி ) இல்லாத வீட்டில் பெண் எடுக்காதே என்று கூட ஒரு சொலவடை உண்டு..அண்ணனோ தம்பியோ இருந்தால்தான் பெண்ணுக்குத் தேவையானதை தகப்பனுக்குப் பிறகு செய்வானாம்..(நான் அறிய இந்த நடைமுறை இன்னமும் மதுரைப்பக்கம் உண்டு..)

No comments:

Post a Comment

மறுமொழி இடுக!