Wednesday 24 August 2016

74.விண்ணீல மேலாப்பு விரித்தாற்போல் மேகங்காள்

74.விண்ணீல மேலாப்பு விரித்தாற்போல் மேகங்காள்

தலைவனைப் பிரிந்து வாடுகையில்,குயிலைத் தூது விடுவது ,மானைத் தூது விடுவது என எதையேனும் தூது விடுவது தலைவியரின் வழக்கம்..நாம் கடவுளிடம் புலம்புவது போலத்தான் ..நம் இரகசியங்களை வெளியிட மாட்டார்..நம் உணர்வுகளை எள்ளி நகையாட மாட்டார் அதனாலேயே நம் மனத்தை அப்படியே ஒப்புவிக்க இயலும்..ஏதேனும் நல்லது நடந்துடாதா என்ற நப்பாசை..அது போலத்தான் இது போன்ற தூதுகளும்..கண்ணன் ஆழிமழைக் கண்ணன் கார்மேக வண்ணன் அல்லவா..அதனால் மேகத்திடம் தூது சொல்வதும் முறைதானே..நாலு இடம் போகும் வரும் மேகத்திடம் சொல்வது மூலமாக அந்த கண்ணனை எங்கேனும் பார்க்க வாய்ப்புள்ள மேகத்திடம் தன் தவிப்பைச் சொல்வது தானே முறை..அதுதான் நாச்சியார்திருமொழி எட்டாம் பத்து "மேகம் விடு தூது "
பாடல் :74

விண்ணீல மேலாப்பு விரித்தாற்போல் மேகங்காள்
தெண்ணீர்பாய் வேங்கடத்தென் திருமாலும் போந்தானே
கண்ணீர்கள் முலைக்குவட்டில் துளிசோரச் சோர்வேனை
பெண்ணீர்மை யீடழிக்கும் இதுதமக்கோர் பெருமையே?

விளக்கம் :
விண் நீல மேலாப்பு விரித்தாற் போல மேகங்காள் - நீல வானத்தில் போர்வை விரித்தது போன்று தோற்றமளிக்கும் மேகங்களே
தெண்ணீர் பாய் வேங்கடத்து என் திருமாலும் போந்தானே- தெளிந்த நீர் பாயும் வேங்கடத்துக்கு  என் திருமாலும் வந்தாரோ ?
கண்ணீர்கள் முலைக் குவட்டில் துளி சோரச் சோர்வேனை - நான் சிந்தும் என் கண்ணீர்கள்  என் முலை எனும் மலையிலே விழும் சிறு துளி கூட ஆவியாகி விடும் அளவுக்கு   வேதனை கொள்கிறேன்
பெண்ணீர்மை ஈடு அழிக்கும் இது தமக்கோர் பெருமையே ? - என் பெண்மையை சிதைக்கும் இச்செயல் அவருக்குப் பெருமையோ ?


இந்த நீல வானத்தில் ,போர்த்திக் கொள்ளும் போர்வை போலத் தோற்றமளிக்கும் மேகங்களே !

தெளிந்த நீர் பாயும் வேங்கடத்தில் வாழும் என் திருமாலும் வந்தாரோ ?
அவர் அருகில் இல்லாத வேதனையில் நான் சிந்தும் கண்ணீரானது ,என் முலை எனும் மலையில் ( குவடு -மலை ) வெந்து பொழிகின்றன..சோர - உடனே ஆவியாகுதல் ) சில நேரங்களில் கண்ணீர் சுடச்சுட விழுவதை உணர்ந்ததுண்டா.. ?அப்படி விழுந்த மாத்திரத்திலேயே ஆவி ஆகி விடுகிறதாம்..அவ்வளவு தகித்துக் கிடக்கிறது உடல் ..



எனை இவ்வளவு வேதனைக்குள்ளாக்கி ,என் பெண்மையை அழிப்பது அவருக்கொரு பெருமையா ? இது தகுமா அவரின் சிறப்புக்கு இது தகுதி அல்லவே !

கண்ணா ! நீ அணைத்து ,  இவள் காமத் தீ அணைத்து , இவள்தம் உடலினைக் குளிர்விப்பாயாக !

No comments:

Post a Comment

மறுமொழி இடுக!