பெரியாழ்வார் மூன்றாம் திருமொழியில் எட்டாவது பகுதியில் முதல் பாடல். இதுவும் மகளுக்கானதே.. இனிதே ஆரம்பம் !
பாடல் : 01
நல்லதோர் தாமரைப் பொய்கை
நாண்மலர் மேல்பனி சோர
அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு
அழகழிந் தாலொத்த தாலோ
இல்லம் வெறியோடிற் றாலோ
என்மக ளைஎங்கும் காணேன்
மல்லரை யட்டவன் பின்போய்
மதுரைப்பு றம்புக்காள் கொலோ.
விளக்கம் :
நல்லதோர் தாமரைப் பொய்கை - அழகிய நல்ல ஓர் தாமரைக் குளத்தில்
நாண் மலர்மேல் பனி சோர - அன்று பூத்த மலர் மீது பனி பொழிய
அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு - அதன் அல்லியும் தாதும் உதிர்ந்து
அழகு அழிந்தால் ஒத்ததாலோ - அழகு அழிந்தால் எப்படி இருக்குமோ அதைப் போல
இல்லம் வெறியோடிற்றாலோ - என் இல்லமானது வெறிச் என்று கிடக்கின்றது
என் மகளை எங்கும் காணேன் - என் மகளை எங்கும் பார்க்க முடியவில்லையே
மல்லரை அட்டவன் பின்போய் - மல்லர்களை அழித்த அந்தக் கண்ணன் பின்போய்
மதுரைப்புறம் புக்காள் கொலோ - மதுரைப்புறம் புகுந்திருப்பாளோ ?
அழகிய நல்லதோர் தாமரைப் பொய்கையில் உள்ள அன்றலர்ந்த (fresh ) மலர்
மீது பனி பொழிந்து அதன் பூவின் உள் தாளும் , மகரந்தமும் உதிர்ந்து அழகு அழிந்தால் எப்படி இருக்குமோ , அதைப் போலவே என் மகளற்ற இல்லமும் வெறிச்சோடிக் கிடக்கின்றது. அவளை எங்கும் காணமுடியல . மல்லர்களை அழித்த அந்தக் கண்ணனின் பின்னே போய் வடமதுரைப் புறம் புகுந்திருப்பாளோ ?
என் மகள் கோதை அன்று பூத்த மலர் போல இருப்பாள். பூவின் மகரந்தத்தை எப்படி அல்லிதழும் ,தாதும் உள்ளனவோ அது போல நான் பாதுகாத்தேன்.பனி கோட்டியில் பூ அழகிழந்து போனது. அது போலத்தான் அவளைக் கண்ணார நான் ரசிக்கும் முன்பே அவள் அந்தக் கண்ணனின் வீட்டுக்குப் போய்விட்டாள் போல. அவளன்றி வீடே வெறிச் என்று இருக்கிறது. அவள் நிறைந்து இருந்த இல்லத்தில் இன்று அவளை எங்கும் காணவில்லை.
(பெரியாழ்வார் குலத் தொழில் வேள்வியே.ஆனாலும் அதை அவர் செய்ய விரும்பாமல் பூத் தொடுத்து பண்டாரமாக வாழ்ந்தார். வாழ்நாள் முழுவதும் பூத் தொடுத்து வாழ்ந்தவர் என்பதால் அவர் பாடல்களிலும் பூ மணக்கின்றது !
No comments:
Post a Comment
மறுமொழி இடுக!