72.பதினாறா மாயிரவர் தேவிமார் பார்த்திருப்ப
பாடல் :72பதினாறா மாயிரவர் தேவிமார் பார்த்திருப்ப
மதுவாயில் கொண்டாற்போல் மாதவன்றன்
வாயமுதம் பொதுவாக வுண்பதனைப் புக்குநீ யுண்டக்கால்
சிதையாரோ வுன்னோடு செல்வப்பெ ருஞ்சங்கே
விளக்கம் :
பதினாறு ஆயிரவர் தேவிமார் பார்த்திருப்ப - பதினாறு ஆயிரம் தேவிமார்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க
மது வாயில் கொண்டாற்போல் மாதவன் தன் - மதுவினை வாயினில் கொண்டவனைப் போல மாதவனின்
வாய் அமுதம் பொதுவாக உண்பதனைப் புக்கு நீ உண்டக்கால் - வாய் அமுதம் என்ற பொதுச் சொத்தை நீ ஒருவனாக தேனினை உண்பவன் போல நீ உண்டால்
சிதையாரோ உன்னோடு செல்வப் பெரும் சங்கே ! - இதை வேடிக்கை பார்க்கும் பெண்கள் மனம் சிதைந்து போய் நோக மாட்டாரோ ? செல்வம் மிக்க பெரும் சங்கே !
பெரும் செல்வம் கொண்ட சங்கே! பதினாறாயிரம் தேவிமார்களை பார்க்க வச்சுக்கிட்டு தேனினை உண்பவன் போல , பொதுச் சொத்தான மாதவனின் வாயமுதத்தை நீ ஒருவனே எவருக்கும் பகிராமல் உண்டால் இதைப் பார்க்கும் பெண்களின் மனம் சிதைந்து போகாதோ ? ஒருவரைப் பார்க்க வச்சு , பகிர்ந்து உண்ணாமல்தானாகச் சாப்பிட்டா வயிறு வலிக்கும் என்ற சொலவடையை ஆண்டாள்தான் கிளப்பி விட்டிருக்கணும் :)
சங்கின்பால் உண்டாகின்ற பொறாமையும் தனக்குக்கிடைக்கவில்லையே என்ற ஏக்கமும் அப்பட்டமாக இப்பாடல்களில் கண்ணன் மீதான காமத்தை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறாள் ஆண்டாள் :)
No comments:
Post a Comment
மறுமொழி இடுக!