69.போய்த்தீர்த்த மாடாதே நின்றபு ணர்மருதம்
பாடல் : 69போய்த்தீர்த்த மாடாதே நின்றபு ணர்மருதம்
சாய்த்தீர்த்தான் கைத்தலத்தே யேறிக்கு டிகொண்டு
சேய்த்தீர்த்த மாய்நின்ற செங்கண்மால் தன்னுடய
வாய்த்தீர்த்தம் பாய்ந்தாட வல்லாய்வ லம்புரியே
விளக்கம் :
போய்த் தீர்த்தம் ஆடாதே நின்ற புணர்மருதம் - எவ்வளவோ புண்ணிய நதிகள் நாட்டிலே இருக்க அங்கெல்லாம் போய்த் தீர்த்தம் ஆடாமலே , மருத மரமாய் நின்றவர்களைச்
சாய்த் தீர்த்தான் கைத்தலத்தே ஏறிக் குடிகொண்டு - சாய்த்து அவர்களின் சாபம் தீர்த்தவன் கைத் தலத்தில் ஏறிக் குடி கொண்டு
சேய்த் தீர்த்தமாய் நின்ற செங்கண் மால் தன்னுடைய - இளமையான , வேர்க்கும் உடம்புடன் நின்ற செம்மையான திருமாலுடைய
வாய்த் தீர்த்தம் பாய்ந்தாட வல்லாய் வலம்புரியே ! - வாய்த் தீர்த்தம் உன் மீது படும் அளவுக்கு பாய்ந்து ஆட வல்லமை பெற்றாய் வலம்புரியே !
புண்ணிய நதிகளில் தீர்த்தம் ஆட எல்லாரும் எங்கெங்கோ போகும் போது அங்கெல்லாம் போய்த் தீர்த்தம் ஆடாமலே அதற்காக எந்த ஒரு சிரமப்படாமலே மருத மரமாய்ச் சாபம் பெற்றவர்களைச் சாய்த்து அவர்களின் சாபம் நீக்கியவனான
( நள குபாரன் மற்றும் மாணிக்ரீவன் என்ற இரட்டையர்கள் (குபேரனின் பிள்ளைகள் ) ஆற்றிலே நிர்வாணமாக பெண்களுடனே குளித்ததால் மரமாய்ப் போகும்படி சாபம் கிடைக்கப் பெற்றனர். கண்ணன் உரலிலே கட்டப்பட்டு இருந்த பொழுது உருண்டு செல்ல அப்பொழுது இடிக்கப்பட்டு சாப விமோசனம் பெற்றவர்கள் இவர்கள்.. ) கண்ணனின் கைத்தலத்தில் நீ ஏறிக் கொண்டு
கங்கையோ யமுனையோ மட்டுமே புனிதத் தீர்த்தங்கள் அல்ல..கண்ணனின் உடம்பில் வேர்க்கும் வியர்வையும் அவன் திரு வாய் எச்சில் அமுதமும் கூட புனிதத் தீர்த்தங்களே :) அவன் கைத்தலம் புகுந்து அவன் உடல் வியர்வை தீர்த்தம் பெற்றதோடல்லாமல் அவன் வாய்த் தீர்த்தமும் பெற்ற உன் வல்லமை எத்தகு தன்மை வாய்ந்தது :)
இந்தாம்மா கோதை..ஆனாலும் உனக்கு இம்புட்டு..இம்புட்டு இம்புட்டுக் காதல் ஆகாது :)
No comments:
Post a Comment
மறுமொழி இடுக!