101.மழையே மழையே மண்புறம் பூசியுள் ளாய்நின்ற
மழையே மழையே மண்புறம் பூசியுள் ளாய்நின்ற
மெழுகூற்றி னாற்போல் ஊற்றுநல் வேங்கடத் துள்நின்ற
அழகப் பிரானார் தம்மையென் நெஞ்சத் தகப்படத்
தழுவநின்றுஎன்னைத் ததர்த்திக்கொண் டூற்றவும் வல்லையே
விளக்கம் :
மழையே மழையே மண்புறம் பூசி உள்ளாய் நின்ற - மழையே மழையே வெளியே (புறத்தே ) மண் பூசி உள்ளே நின்ற
மெழுகு ஊற்றினாற்போல் ஊற்று - மெழுகு ஊற்றியது போல் ஊற்றி
நல் வேங்கடத்துள் நின்ற - நலம் செய்யும் வேங்கடத்தில் நின்ற
அழகப் பிரானார் தம்மை என் நெஞ்சகத்து அகப்படத் தழுவ நின்று - அழகிய பிரான் தன்னை என் நெஞ்சகத்திலே அவரை முழுவதும் ஆரத் தழுவ நின்று அணைக்கும்படி
என்னைத் ததர்த்திக் கொண்டூற்றவும் வல்லையே ! - என்னை அப்படியே நெருக்கிக் கொண்டு அவரை ஊற்றவும் வல்லாயோ ?
ததர் - நெருக்கி
இந்தப் பாடல் பலச் செய்திகளை உள்ளடக்கியது.. மழையிடம்வேண்டிக் கொள்கிறாள் .எப்படி? இதோ கீழே புகைப்படம் பாருங்கள்.. மழைத்துளி பெற்றதும் மண் எப்படி இருக்குனு..அப்படியே மெழுகு மாதிரி இருக்குல்ல.. :) ஆனால் இதுதானா அவள் சொல்ல வந்தது? இல்லை.. உலோகத்தில் சிலை செய்வது பற்றி அறிந்து வைத்திருக்கிறாள்.. பெருமாளின் உலோகச் சிலை செய்யத் தன்னையே மெழுகாக உருக்கித் தர சித்தமாய் இருக்கிறாள்..
மண்ணோடு இணைந்த மழைத்துளி |
மண்ணும் மெழுகும் கலந்த mold இல் உலோகம் ஊற்றுதல் |
தகிக்கின்ற காதலின் முன்னால் தகிக்கின்ற உலோகத்தின் சூடு பெரிதில்லை.
பின்னர் அவர் என்னுள் கெட்டிப்பட்டதும் , அன்பின் மழையே நீ பொழிந்து இந்த மண்ணை , அதாவது என்னுடைய இந்தத் துன்பவியலான வாழ்வை விலக்கி விடு. என்னில் இருந்து நலம் மிகும் வேங்கட மலையில் நின்ற வேங்கடவன் வெளியே வரட்டும் .என் ஆவி முழுதும் வேங்கடவன் பரவி , அவன் மீது நானும் விரவி ,சிலையாகி வெளியே வரட்டும்..என்னில் இருந்து அவனே சிலையாகி வெளிப்படட்டும்..(இராமாயணத்தில் அனுமன் நெஞ்சைப் பிளந்ததும் இராமன் தெரிந்தாராம் அதைப் போல இவள் உடைந்தாலும் மண்ணாகிப் போனாலும் இவளில் இருந்து அந்தப் பரமனே வெளியே வருவான் )
No comments:
Post a Comment
மறுமொழி இடுக!