Sunday 6 November 2016

93.சந்தொடு காரகிலும் சுமந்துதடங் கள்பொருது

93.சந்தொடு காரகிலும் சுமந்துதடங் கள்பொருது
பாடல் :93
சந்தொடு காரகிலும் சுமந்துதடங் கள்பொருது
வந்திழி யும்சிலம்பா றுடைமாலிருஞ் சோலைநின்ற
சுந்தரனை சுரும்பார் குழல்கோதை தொகுத்துரைத்த
செந்தமிழ் பத்தும்வல்லார் திருமாலடி சேர்வர்களே

விளக்கம் :
 சந்தொடு கார் அகிலும் சுமந்து தடங்கள் பொருது - சந்தன மரங்களோடு காரகில் மரங்களும் சுமந்து
வந்திழியும் சிலம்பாறு உடைய மால் இருஞ்சோலை நின்ற - வந்து வழிகளை அழித்துக் கொண்டு பாயும் சிலம்பாறு உடைய , மால் இருஞ்சோலை நின்ற
சுந்தரனை சுரும்பு ஆர்   குழல் கோதை தொகுத்துரைத்த - சுந்தரப் பெருமானை வண்டுகள்  ஆர்க்கும் (மலர்களைச் சூடிய )   கூந்தலை உடைய கோதை தொகுத்து உரைத்த
செந்தமிழ் பத்தும் வல்லார் திருமாலடி சேர்வர்களே - செந்தமிழ்ப் பாடல்கள் பத்தும் பாட வல்லவர்கள் திருமால் அடி சேர்வார்களே

சந்தன மரக் கட்டைகளோடு கார் அகில் மரக்  கட்டைகளையும் சுமந்து வந்து , வழித் தடங்களை  (இதுதான் வழி எனக் கண்டுணர முடியாத அளவுக்கு வரும் வழியையே )     அழித்துக் கொண்டு பாயும் சிலம்பாறு உடைய ,திருமால் இருஞ்சோலை நின்ற சுந்தரனை ,வண்டுகள்  ரீங்காரமிடும் (அவள் தலையில்  வைத்த பூக்களைச் சூழ்கிறதாம் :) ) கூந்தலைக் கொண்ட கோதை தொகுத்து உரைத்த இந்தப் பத்து செந்தமிழ்ப் பாமாலைகளைப் பாட வல்லவர்கள் திருமால் அடி சேர்வார்களே !

அழகர் மலையில் உள்ள திருமாலின் பெயர் சுந்தர ராஜப் பெருமாள்..அதனால்தான் மால் இருஞ்சோலை நின்ற சுந்தரன் என்கிறாள்..ஆண்டு தோறும் வற்றாமல் நீர் விழும்..இப்பாடலின் மூலமே அறிந்தேன் அதன் பெயர் சிலம்பாறு என்று.(இப்ப நூபுர கங்கை எனப் பெயர் மாற்றம் பெற்றுள்ளது ) எப்படிக் கம்பீரமா விழுந்ததோ இந்தக் காட்டாறு..இப்பவும் தண்ணி இருக்கு..ஆனா அடிச்சுக்கிட்டுலாம் பாயல..)
பூக்கள் அவன் நிறங்களை நினைவூட்டுவதாகக் குற்றம் சாட்டி அழகர் மலையில் அழகினை அதன் ஊடேச் சொல்லி , அவற்றைத் தூது விட்டு, புலம்பித் தவித்து விட்டாள் கோதை..

என் வருத்தம் எல்லாம் அழகர் கோயிலில் ஆண்டாள் சன்னதியில் நூறு தடா வேண்டிய பாடல் மட்டுமே இடம் பெற்றுள்ளது..அழகர் மலையானுக்கு என்றே பாடிய பத்து பாடல்களை மட்டுமாவது பொறித்து வைப்பதில் தடை ஏதும் உளதோ ? :(

தற்பொழுது அவளுக்கு என் மனத்தில் மட்டுமே கோயில் கட்டி வைத்திருக்கிறேன்..அவளுக்கு மெய்யாகவும் கோவில் கட்டும் பாக்கியம் கிட்டுமெனில் இந்த 143 பாடல்களையும் சேர்த்தே பொறித்து வைப்பேன் அவள் விரும்பிய பிருந்தாவனம் சூழ..

நாச்சியார் திருமொழி ஒன்பதாம் பத்து இனிதே நிறைவுற்றது :-) 

No comments:

Post a Comment

மறுமொழி இடுக!