96.கோவை மணாட்டி!
பாடல் :96கோவை மணாட்டி! நீயுன்
கொழுங்கனி கொண்டுஎம்மை
ஆவி தொலைவியேல் வாயழ
கர்தம்மை யஞ்சுதும்
பாவி யேன்தோன்றிப் பாம்பணை
யார்க்கும்தம் பாம்புபோல்
நாவு மிரண்டுள வாய்த்து
நாணிலி யேனுக்கே
விளக்கம் :
கோவை மணாட்டி நீ உன் கொழுங்கனி கொண்டு - கோவை மணாட்டியே !நீ உன் சிவந்த கொழுங்கனிகளைக் கொண்டு
எம்மை ஆவி தொலைவியேல் - என் ஆவியைத் தொலைக்காதே
வாய் அழகர் தம்மை அஞ்சுதும் பாவியேன் தோன்றிப் - வாய் அழகானவரின் சிவந்த அதரங்களை நினைவூட்டுகின்றன ..பாவியான நான் பிறந்து
பாம்பணையார்க்கும் தம் பாம்பு போல் - பாம்பினைப் படுக்கையாகக் கொண்டவனுக்கும் தனது பாம்பினைப் போல
நாவும் இரண்டு உள வாய்த்து - இரட்டை நாக்கு வாய்த்து விட்டது போல
நாண் இலியேனுக்கே - ஆனாலும் நான் இன்னமும் அவரையே நினைத்துக்கொண்டு வெட்கமற்றுப் போனேனே
தாயே கோவைக்கொடியே ! நீ உன் சிவந்த திரண்ட கனிகளைக் கொண்டு என் உயிரை வாங்காதே ..அவை வாய் அழகரின் சிவந்த அதரங்களைப் (இதழ்களை ) போல் தோன்றி அச்சுறுத்துகின்றன நான் தான் அவரைச் சேர முடியாத பாவியாகப் பிறந்தேன் ..பாம்பினைப் படுக்கையாக்கிக் கொண்டவனுக்கும் தனது பாம்பினைப் போல இரட்டை நாக்கு வாய்த்து விட்டது போல..இல்லாட்டி என்னைச் சேர்வதாகச் சொல்லிட்டு இவ்ளோ நாள் வராம இருப்பாரா ? ஆனாலும் நான் இன்னமும் அவரையே நினைத்துக்கொண்டு வெட்கமற்றுப் போனேனே
கோவைப்பழம் |
அடியவர்க்கு அருள் செய்பவன் ஆபத்பாந்தவன் எனப் போற்றப்படுபவன் அவன் இவள் இவ்வளவு உருகியும் வாராது போனால் அவன் பெயர் கெடுமே என்று ஏற்கனவே மிரட்டி விட்டாள்..
அடியவரை வந்து காப்பேன் என்பது அவன் வாக்கு..அதைச் செயல்படுத்தாமல் போனால் இரண்டாகாதோ நாக்கு.. ?
பாம்பு மேலப் படுத்தவன் தானே அப்ப ரெண்டு நாக்கு இருக்கும் என்று குற்றம் சாட்டுகிறாள்..சொல்றதையும் சொல்லிட்டு அவன் நிறையையும் பாடிட்டு இப்ப அவனைக் குறையும் சொல்லிட்டு இன்னமும் அவர் வரவுக்காக ஏங்கி நிற்பதால் வெட்கமற்றுப் போனேனே எனத் தன்னைத்தானே நொந்தும் கொள்கிறாள்..தன்னைத்தானே தாழ்த்தியும் கொள்கிறாள்..பாவியாகிப் போனேன் என்று..
நாக்கு அவனுக்கு மட்டுமா இரண்டு..இந்தப் பெண்ணுக்கும் மனசு ரெண்டு..வராதப்ப திட்டும் குமுறும்..வந்துட்டா அவ்வளவையும் மறந்துட்டு அவனோடு இழையும்..வராதப்ப பற்றிக்கொண்டு வரும்..வந்து விட்டாலோ அவனையே பற்றிக்கொண்டு இருக்கச் சொல்லும் :)
ஏன் என்றால்.... அவள் அப்படித்தான்... !
No comments:
Post a Comment
மறுமொழி இடுக!