Thursday 24 November 2016

100.நடமாடித் தோகை விரிக்கின்ற

100.நடமாடித் தோகை விரிக்கின்ற
பாடல் : 100
நடமாடித் தோகை விரிக்கின்ற
மாமயில் காள்உம்மை
நடமாட்டங் காணப் பாவியேன்
 நானோர் முதலிலேன்
குடமாடு கூத்தன் கோவிந்தன்
கோமிறை செய்துஎம்மை
உடைமாடு கொண்டா னுங்களுக்
கினியொன்று போதுமே

விளக்கம் :

நடமாடித் தோகை விரிக்கின்ற மாமயில் காள் - நடனம் ஆடித் தோகை விரிக்கின்ற பெரு மயில்களே
உம்மை  நடமாட்டங் காணப் பாவியேன் - உங்கள் நடனக் களி ஆட்டங்களைக் காண முடியாத பாவியேன்
நானோர் முதல் இலேன் - நான் ஓர் முதல் இல்லாதவள் (முதல் என்பது இங்கே முதலீடு )
குடமாடு கூத்தன் கோவிந்தன் கோ ம் இறை  செய்து - குடம் கொண்டு கூத்தாடிய கோவிந்தன் (அரசன் ) வல்லடியாகக் கவர்ந்து (அரசனுக்குரிய குணங்களின் ஒன்றான வரி விதித்து மக்களிடம் இருந்து வலியப் பெற்றுக் கொள்ளல் )
எம்மை உடைமாடு கொண்டான் - என் உடைமைகளைத் தன் உடைமைகளாக்கிக் கொண்டான்
உங்களுக்கு இனி ஒன்று போதுமே - உங்களுக்கு இனி இந்தக் காரணம் ஒன்று போதுமே உங்கள் ஆட்டத்தை நிறுத்த..

நடனம் ஆடித் தோகை விரிக்கின்ற மயில்களே ! இவ்வளவு அழகான உங்கள் நடனமாட்டங்களைக்  காண முடியாத பாவியாகிப் போனேன்..(ஏனோ மயிலோ இன்ப நடனம் ஆடுகிறது..நானோ மயில் வண்ணன் வராத சோகத்தில் ஆழ்ந்து இருக்கின்றேன் )
முதல் -முதலீடு (investment ) இன்றளவும் முதல் என்றே சொல்வார்கள்..பேச்சுவழக்கில் பல செந்தமிழ்ச் சொற்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன ) வெறும் கையாக இருக்கிறாள்..முதலும் இல்லை பொருளும் இல்லை..(வாழ்வில் எந்தப் பிடிமானமும் இல்லை ) குடம் கொண்டு ஆடும் (தமிழ்க் கூத்து வகைகளில் ஒன்றான குடக் கூத்து ...கரகாட்டமாக இருக்குமோ என நினைக்கிறேன் )

குடக்கூத்து 

 ஆடும் கோ விந்தன் (கோ - அரசன் ) வலிந்து என்னிடம் இருந்து என் உடைமைகளைப் பிடுங்கிக் கொண்டான் என் செல்வங்கள் எல்லாம் அவனுடையதாகி விட்டன (இவளே அவனுடையவளாகத் தானே இருக்க விழைகின்றாள் என்பது வேறு கதை )
Image result
கரகாட்டம் 
உடை மாடு (உடைமைகள் எனும் செல்வம் ..மாடு - மாடு (விலங்கு ) / இடம் (place ) / செல்வம் (treasure /wealth ) மாடல்ல மற்றையவை (குறள் )  ஒரு சொல் பன்மொழி

இதுக்கு முன்ன ஆட்டத்தை நிறுத்தச் சொன்னப்ப ஏன் என உங்களுக்குத் தோன்றி இருக்கலாம்..ஆனா இனி கேட்க மாட்டீங்க தானே இதோ இந்தக் காரணம் உங்களுக்குப் போதுமே ..இனியாவது உங்களது நடனத்தை நிறுத்துங்கள்..

Image result

கண்கள் ஒளி இழந்து ,கை வளைகள் இழந்து ,சரி வளைவுகள் (சாய்ந்த உடல் வளைவுகள் ) இழந்து அழகிழந்து போய் விட்டாள் ..சிரித்த முல்லைப் பற்கள் மூடிக் கொண்டன.. அழகிய கோலம் அலங்கோலம் ஆனது.. ஏற்கனவே வீட்டுக்குள் வந்து வலிந்து வளை கவர்ந்து சென்றவன் எனக் குற்றம் சாட்டி இருக்கிறாள் அல்லவா..இது அதன் தொடர்ச்சி..அதனால்தான் தான் செல்வம் இழந்ததாகவும் அதன்பொருட்டே மயிலை நடனம் ஆட வேண்டாம் என இறைஞ்சுவதாகவும்..

அவன் நினைவுகளையும் அவளையும் தனியாகப் பிரிக்க முடியவில்லை.அவனோடு கற்பனையாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறாள் . கனவு பொய்த்து அது நனவாக மெய்ப்படத்தான் இத்துணைப் போராட்டங்களும்.. குயில்,மேகம்,பூ ,மயில்..இன்னும் என்னவெல்லாமோ  ?:)  அவற்றிடம் தன் வேதனைகளைப் பிதற்றுகிறாள்.. மனிதர்கள் திரும்ப ஏதேனும் சொல்வார்கள்.. இவை எதுவும் திரும்பிப் பேசா.. அது கூட ஒருவகை ஆறுதல் தான்..

யாரோ தன் உடைமைகளைப் பிடுங்கினால் அரசனிடம் முறையிடலாம்..அரசனே பிடுங்குபவன் ஆனால் யாரிடம் சென்று முறையிட..யார் நியாயம் சொல்வார்கள் அவனை எதிர்த்து ? இழந்து நிற்கிறேன்   கேட்பாரும் இல்லை.தனியளாகத்  தவித்து நிற்பவளை ஏளனம் செய்வது போல் உள்ளது  உங்களது நடனம்..
மயில்களே ! சற்றே நிறுத்துங்கள் !



1 comment:

  1. நாச்சியார் திருமொழி நூறு வந்தாச்சா ? நேற்றுதான் ஆரம்பித்தது போல் உள்ளது. பலவற்றில் சிலவற்றை மட்டுமே என்னால் படிக்க முடிந்தது. வாழ்த்துகள். எனக்கு சிறு வயது முதலே பக்தி பாடல்கள், கட்டுரைகள், கதைகள், கதாகாலட்சேபம், etc சலிக்க சலிக்க அனுபவித்து சலித்துப்போய்விட்டது. மேலும் எனக்கு நேரமின்மையே காரணம். 140 உள்ள கீச்சுகலையே முழுவதையும் என்னால் இருந்து படிக்க முடியவில்லை :( ஒரு பக்கத்திற்கு மிகாமல் இருக்கும் பிளாக் பதிவுகளை, டுவிட்லாங்கர்களைத்தான் மார்க் பண்ணி அப்புறமா படித்துவிடுவேன். அல்லது எனக்கு மென்சன் பண்ணிட்டாங்கலேன்னு படித்துவிடுவேன். நான் வாழ்கையின் எல்லா படிகளையும் கடந்துவிட்டவன். ஒரு பொழுது போக்கிற்காக டுவிட்டற்கு வந்தவன். அதனால் எனக்கு கிடைக்கும் சொற்ப நேரத்தில் நீண்ட பதிவுகளை படிக்க இயலாது போய்விடுகிறது. மன்னிச்சு :(
    மற்றபடி இந்த நாச்சியார் திருமொழி பதிவை நூறு நிறைவு செய்ததற்கு உங்களை பாராட்டுகிறேன். நிறைய மெனக்கெட்டு இருப்பீர்கள் அதை நான் உணருகிறேன் :)
    உங்களின் திரைபடபாடலகளின் பதிவுகளை கண்டும் அதிசியத்திருக்கிறேன் :)) நன்றி வாழ்த்துகள் மேலும் நீங்கள் சிறக்க :))

    ReplyDelete

மறுமொழி இடுக!