82.மதயானை போலெழுந்த மாமுகில்காள் வேங்கடத்தைப்
பாடல் :82
மதயானை போலெழுந்த மாமுகில்காள் வேங்கடத்தைப்
பதியாக வாழ்வீர்காள் பாம்பணையான் வார்த்தையென்னே
கதியென்றும் தானாவான் கருதாது ஓர் பெண்கொடியை
வதைசெய்தான் என்னும்சொல் வையகத்தார் மதியாரே
விளக்கம் :
மதயானை போல் எழுந்த மாமுகில்காள் - மதம் கொண்ட யானையைப் போல கிளர்ந்து எழுந்த பெரும் மேகங்களே !
வேங்கடத்தைப் பதியாக வாழ்வீர்காள் பாம்பணையான் வார்த்தை என்னே ? - வேங்கடத்தை உறைவிடமாகக் கொண்டு வாழ்பவர்களே ! பாம்பின் மீது படுத்திருப்பவன் வார்த்தை தான் என்ன? அவர் என்னதான் சொல்கின்றார் ?
கதி என்றும் தானாவான் கருதாது ஒரு பெண்கொடியை - அனைவருக்கும் புகலிடம் அவன்தான் அவனே கதி என்று இங்கு ஒருத்தி இருக்கிறாளே அப்பெண் கொடியை
வதை செய்தான் என்னும் சொல் வையகத்தார் மதியாரே - அவளைச் சென்று சேராமல் வதை செய்தான் என்னும் கெட்ட பெயர் அவருக்கு உண்டானால் உலகத்தார் அவனை மதிக்க மாட்டாங்க
மதம் கொண்ட யானை எவ்வளவு பிரம்மிப்பையும் பயத்தையும் ஒரு சேர உண்டாக்குமோ அதைப் போல கிளர்ந்து எழுந்த பெரும் மேகங்களே !
திருவேங்கடத்தை உறைவிடமாகக் கொண்டு வாழ்பவர்களே ! பாம்பு மேல படுத்திருக்கிறவன் ஏதாவது வார்த்தை எனக்குச் சொன்னாரா? (வீட்டில் இந்தா அவ என்னாங்குறா என்று வயதான கிழவிகள் கேட்பார்கள் அதைப் போல கேட்கிறாள்.. இந்தா.. அந்த பாம்பை அணைச்சுக்கிட்டு கிடக்குறானே அந்தக் கிறுக்குப்பய ..அவன் என்னாங்குறான் ?:)) )
அடியவர்களுக்கு என்றும் புகலிடம் , தானே ஆவான் . அப்படிப்பட்டவனையே நினைத்துக் கொண்டு ஒருத்தி இங்க இருக்கிறாளே அந்த நினைப்பு கொஞ்சமாச்சும் அவருக்கு இருக்குதா ? நம்பி வந்தவங்களைக் கை விடுவது அவன் வழக்கம் இல்லையே..அப்படி இருக்க அவனையே நம்பி இருக்கும் இப்பெண் கொடியை , சேராமல் வதை செய்தான் என்ற அவப்பெயர் அவனுக்கு வந்தா உலகம் அவனை மதிக்குமா ? நீயே சொல்லு நியாயத்தை ..
வேண்டாம் வேணு கோபாலா உனக்கிந்த கெட்டப் பெயர்..உனக்கு நல்லத எடுத்துச் சொல்ற உரிமை எங்களுக்கும் உண்டு :))
No comments:
Post a Comment
மறுமொழி இடுக!