89.நாறுநறும் பொழில்மா லிருஞ்சோலை நம்பிக்கு
பாடல் :89நாறுநறும் பொழில்மா லிருஞ்சோலை நம்பிக்குநான்
நூறுதடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவிவைத்தேன்
நூறுதடா நிறைந்த அக்கார வடிசில்சொன்னேன்
ஏறுதிருவுடையான் இன்றுவந்திவை கொள்ளுங்கொலோ
விளக்கம் :
நாறு நறும் பொழில் மால் இருஞ்சோலை நம்பிக்கு - நல்ல மணம் வீசும் சோலை கொண்ட திருமால் இருக்கும் சோலை நம்பிக்கு
நான் நூறு தடாவில் வெண்ணெய் வாய் நேர்ந்து பராவி வைத்தேன் - நான் நூறு பானையில் வெண்ணெய் என் வாயால் நேர்ந்து கொண்டு நேர்த்திக் கடனாக வைத்தேன்
நூறு தடா நிறைந்த அக்கார வடிசில் சொன்னேன் - நூறு பானை முழுவதும் நிறைய அக்கார வடிசில் (சர்க்கரைப்பொங்கல் போன்ற இனிப்பு ) சொன்னேன்
ஏறு திருவுடையான் இன்று வந்து இவை கொள்ளுங் கொலோ ? - குறையாத செல்வங்களைக் கொண்டவன் இன்று வந்து இவற்றை ஏற்றுக் கொள்வாரோ ?
நல்ல மணம் வீசும் சோலையில் வாழும் திருமாலிருஞ்சோலை நம்பிக்கு , நான் நூறு சிறிய பானையில் வெண்ணெயை உருக்கி அதில் நெய் செய்து நேர்த்திக்கடன் செலுத்த வேண்டி வழிப்பட்டேன் நூறு பானை நிறைய அக்கார வடிசிலும் சொன்னேன் ..குறையாத செல்வங்களை உடையவன் இன்று வந்து வந்து இவற்றை ஏற்றுக் கொள்வாரோ ?
நிறைய வெண்ணையை உருக்கி நெய் செய்து அக்கார வடிசில் செய்யணுமாம் அதை அழகர் உண்னனுமாம் ..தங்கம் வெள்ளியை விடக் குறையாத மெய் அன்பே செல்வம் என்கிறாள். அந்தச் செல்வம் ஏறிக் கொண்டே தானே செல்லும் .அதுதான் குறையாத செல்வம் உடையவன் என்கிறாள்..எதாவது வேண்டுதல் நிறைவேற இப்படி நேர்த்திக்கடன் வேண்டிக் கொள்வது நம் வழக்கம் அதைத்தான் ஆண்டாளும் செய்கிறாள் அப்படி எதற்காக இந்த வேண்டுதல் என்று சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன ?:)
அக்காரவடிசல் |
மிக முக்கியமான பாடல் இது.. இராமானுஜர் ஆண்டாளுக்கு அண்ணன் ஆன நிகழ்வு :) ஆண்டாளின் உணர்வுகளைப் புரிந்து அவளின் நேர்த்திக் கடனை , , கடனாகவே இருந்து விடக் கூடாது என்று கருதி, அதை நிறைவேற்றி வைத்தவர் இராமானுசர் :) ஓர் தமையனைப் போல ஆண்டாள் வேண்டியதை நிறைவேற்றிய இதன் காரணமாகவே "பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே " என்று பெயர் பெற்றாள் ஆண்டாள்..மற்றபடி ஆண்டாளுக்கு இரண்டு நூற்றாண்டு பிந்தியவர் இராமானுசர் ( பாடல்: திருவாடிப் பூரத்து சகத்துதித்தாள் வாழியே )
ஆண்டாளைப் புரிய முலைகள் உடையவனாக இருக்க வேண்டும் என்றவர்..அதாவது சற்றேனும் பெண் தன்மை இருந்தால் தான் அவள் பெண்மையும் பேதைமையும் புரியும் என்றார் .இதுதான் இதற்கு விளக்கம் என்று எதுவும் எழுதி விடாமல் அவள் மனம் போலே மக்கள் புரிந்து கொள்ளட்டும் அந்த அந்த காலகட்டத்தில் என விட்டுவிட்டார்..என்ன ஒரு அன்பு !என்ன ஒரு வாஞ்சை..!
எட்டாம் நூற்றாண்டு ஆண்டாளுக்காக , பத்தாம் நூற்றாண்டு பிறந்து 11-ம் நூற்றாண்டு வரை வாழ்ந்த மகான் (கிபி 1017-1137) அதை நிறைவேற்றி இருக்கிறார்..
இதுமட்டுமின்றி , ஆண்டாளின் மாலை முதன் முதலில் திருவரங்கம் செல்லக் காரணமானவரும் இவரே. திருப்பதி வரை இன்றும் ஆண்டாள் மாலை வில்லிபுத்தூரில் இருந்து செல்லக் காரணமும் இவரே. திருப்பதியில் திருப்பாவை ஒலிக்கக் காரணமும் இவரே..
ஒருவேளை இவர் இல்லாவிடில் ஆண்டாளை நாம் அறியாமலே கூட போயிருப்போமோ என்ற எண்ணம் கூட எனக்குண்டு..
உடையவர் பெருமானே ! நீர் வாழி ! இன்னுமோர் நூற்றாண்டிரும்..!
No comments:
Post a Comment
மறுமொழி இடுக!