88.துங்க மலர்ப்பொழில்சூழ் திருமாலிருஞ் சோலைநின்ற
பாடல் :88
துங்க மலர்ப்பொழில்சூழ் திருமாலிருஞ் சோலைநின்ற
செங்கட் கருமுகிலின் திருவுருப் போல்மலர்மேல்
தொங்கிய வண்டினங்காள் தொகுபூஞ்சுனை காள்சுனையில்
தங்குசெந் தாமரைகாள் எனக்கோர்சரண் சாற்றுமினே
விளக்கம் :
துங்க மலர்ப் பொழில் சூழ் திருமாலிருஞ்சோலை நின்ற - துங்க மலர்ச் சோலை சூழ்ந்த திருமாலிருஞ்சோலையில் நின்ற
செங்கட் கருமுகிலின் திரு உருப் போல் மலர் மேல் - செம்மையான கண்களும் மழை பொழியும் மேகத்தின் கருமை நிறம் கொண்ட கண்ணனின் திரு உருவத்தைப் போல மலர் மேல்
தொங்கிய வண்டினங் காள் தொகு பூஞ்சுனைகாள் - தொங்கிய வண்டினங்களே , அங்கு மொத்தமாய்க் கூடி இருக்கும் பூஞ்சுனைகளே !,
சுனையில் தங்கு செந்தாமரை காள் எனக்கோர் சரண் சாற்றுமினே - பூஞ்சுனையில் வாழும் செந்தாமரைகளே !அவன் நிறம் கொண்டு அவன் திருவுருவத்தை நினைவூட்டி விட்டீர்கள்..நான் அடைக்கலம் புக வழி சொல்லுங்கள்
துங்க மலர் - கொன்றை மலர் ..கொன்றை மலர்ச் சோலை சூழ்ந்த திருமாலிருஞ்சோலை நின்ற , செம்மையான கண்களும் (செந்தாமரைக் கண்கள் என்றும் பொருள் கொள்ளலாம் ) , மழை பொழியும் மேகத்தின் கருமை நிறம் கொண்ட கண்ணனின் திரு உருவத்தைப் போல உள்ள , மலர் மேல்
கொன்றை மலர் |
அங்கு மொத்தமாய்க் கூடி இருக்கும் பூஞ்சுனைகளே ! பூஞ்சுனையில் பூத்துள்ள செந்தாமரைகளே !
நீங்கள் யாவரும் அவன் நிறம் கொண்டு அவன் நினைவூட்டி விட்டீர்கள் .நான் அடைக்கலம் புக , எனக்கே எனக்கென்று ஓர் சரண் என்னவென்று சொல்லிவிடுங்கள் !
இதற்கு முன்பு வரை கண்ணனை மழை முகில் போன்ற வண்ணன், செந்தாமரை முகத்தான் என்றே தான் உவமை காட்டி வந்தாள் ஆனால் இம்முறை கண்ணன் போன்ற திருமேனி கொண்ட வண்டு, கண்ணன் போலக் கருத்து நின்ற மேகம், கண்ணன் போன்ற நிறம் கொண்ட செந்தாமரை என்று மாற்றி உவமை சொல்கின்றாள்.
உவமேயமும் ,உவமானமும் கூறப்படும் பொருட்களை மாற்றி ஒன்றுகொன்று உவமானமாகச் சொல்வது..
இதற்குப் பெயர் "இதர விதர உவமை "
இது பற்றிப் படித்ததில் இணையத்தில் சுவராசியமாக ஒரு பாடல் கிடைத்தது
களிக்கும் கயல் போல நும் கண் நும் கண் போல்
களிக்கும் கயலும் ;கனிவாய்த் தளிர்க் கொடியீர்
தாமரை மலர் போல் நும்முகம் ; நும்முகம் போல்
தாமரை போல் செவ்வி தரும்
"தளிரோடு கூடிய கொடி போன்ற பெண்களே ! மீன்களைப் போல உங்கள் கண்கள் களிக்கின்றன..உங்கள் கண்களைப் போல மீன்களும் களிக்கின்றன .தாமரை போல உங்கள் முகம் இருக்கின்றது.. உங்கள் முகத்தைப் போல தாமரையும் செம்மையாக மலர்ந்து உள்ளது
இதைப் போலத்தான் திருமால் போல் கருத்த மேனி என்கிறாள் வண்டினங்களைப் பார்த்து :)
கண்ல தட்டுப்படுவது எல்லாம் அவன் நினைவை ஊட்டும் அளவுக்குக் காதல் பித்து முற்றிப் போனது..கண்ணில் தட்டுப்படுபவற்றிடம் எல்லாம் நியாயமும் கேட்கிறாள். வண்டே ,பூஞ்சுனையே பூஞ்சுனையில் தங்கி இருக்கும் செந்தாமரையே ..சொல்லுங்க எனக்கு ஓர் சரண் சொல்லுங்க..\
பொதுவாக ஓர் என்று வந்தால் அடுத்து ஆரம்பிக்கும் சொல் உயிரெழுத்தில் ஆரம்பிக்கும் ஓர் உயிர் இப்படி. உயிர்மெய் எழுத்து போன்றவற்றிற்கு ஒரு.. ஆனால் பல பாடல்களில் இந்த விதி இளகி இருக்கின்றது..அப்பாடலின் பொருளுக்கு ஏற்ப ..
பொதுவாக ஓர் என்று வந்தால் அடுத்து ஆரம்பிக்கும் சொல் உயிரெழுத்தில் ஆரம்பிக்கும் ஓர் உயிர் இப்படி. உயிர்மெய் எழுத்து போன்றவற்றிற்கு ஒரு.. ஆனால் பல பாடல்களில் இந்த விதி இளகி இருக்கின்றது..அப்பாடலின் பொருளுக்கு ஏற்ப ..
எத்தனைக் கடவுளர்கள் இருந்தாலும் அவர்கள் யாரும் தனக்கு வேண்டாம்..ஒரே ஒருவன் அந்த ஒரே ஒருவன் தனக்குப் போதும் அந்த ஒருவனே நமக்குச் சரண் என்கிறாள்.
( திருப்பாவையில் இற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான் , வாரணம் ஆயிரத்தில் இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான் நம்மை உடையவன் நாராயணன் நம்பி என்கிறாள் இப்படிப் பல பாடல்களில் அவள் சரண் எனச் சொல்வது திருமால் ஒருவனைத் தான் (ஒருமையில் எழுத ஏதோ தடுக்கிறது :) இவ மட்டும் திருமாலை அவன் இவன் எனலாமாம் .அவள் சொன்னதை நான் அப்படியேச் சொன்னால் அவளுக்கு என்னவாம் :) )
No comments:
Post a Comment
மறுமொழி இடுக!